உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்… அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக் காற்று கொண்டுபோவதைப் போல நடூ இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்துவிட்டது. சுவர் வைத்தது போலக் கூட்டம்.
நிறைந்த தீப்பெட்டியில் நடுக் குச்சியாக நிற்கிறார் தாத்தா. அவ ருக்கு முன்னால் ஒரு இளவட்டம். கல்லூரி மாணவனாக இருக்கலாம்; தோற்றம் அப்படி. அவனுக்கு முன் னால் குட்டையான ஒரு பெண்மணி. பச்சக் குழந்தையைத் தோள்மீது சாத்தி நின்றுகொண்டு அல்லல் பட்டுக்கொண்டு இருந்தாள்.
வண்டி வேகம் எடுக்கிறது. திடீர் திடீர் என்று பிரேக் போடப்படு கிறது; வளைந்து வளைந்து செல் கிறது; காற்று ஒலிப்பானில் வைத்த கையை எடுக்க மனசில்லை ஓட்டுநருக்கு.
அடுத்த நிறுத்தம் வருகிறதுபோல. அந்தப் பிள்ளைத்தாய் பக்கத்தில் ஒரு ஆள் இறங்க, நின்று ஆயத்தமான அதே வேகத்தில், அந்த இளவட்டம் சக்கென்று உட்கார்ந்துவிட்டான்.
தாத்தா, ‘அட பாவீ’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
பேருந்து வேகம் எடுத்தது. வளைந்து வளைந்து செல்லும்போது மக்களும் காற்றடிக்கும்போது சாய்ந்து கொடுக்கும் பயிர்களைப் போலச் சாய்கிறார்கள். நிறுத்தம்தோறும் சக்கையை உமிழ்வதுபோல மக்களை உமிழ்ந்துகொண்டே போகிறது பேருந்து.
தாத்தாவை யாரோ சுரண்டுவது போலத் தெரிந்ததும் திரும்பிப் பார்க்க, ஒரு கல்லூரி மாணவி! ‘‘தாத்தா! இங்கே வந்திருங்க. நா இறங்கப் போறேன்’’ என்று தெரிவித்தாள். ‘நிக்கட்டும்’ என்பது போல் தலை அசைத்தார் தாத்தா. நிறுத்தம் வருகிறது போல. அந்த பிள்ளைத்தாய் எங்கே நிற்கிறாள் என்று தாத்தா கண் களால் தேடினார்; அந்த இடத்தை இவர் அடைவதற்குள் இன்னொரு தடியாள் அதில் உட்கார்ந்து கொண் டான். ‘அட பாவி!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் தாத்தா!
வேகம் வேகம்… காலம் காலம்!
– 24th ஜனவரி 2007