காலந்தவறாமை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 12,034 
 

தலையில் ஒலி வாங்கியுடன் இணைந்துள்ள ஒலிப்பானைப் பொருத்திக்கொண்டு சிரித்த முகத்துடன் முகமன் கூறிய ஆண்ட்ரியாவிற்கு ஒரு அவசரச் சிரிப்பை உதிர்த்துவிட்டு அலுவலகக் கணினியை உயிர்ப்பித்தபொழுது மணி 7:58.

“நேற்று போல இன்றும் தாமதமாகி விடுமோ என்று பயந்தே விட்டேன்!” என்று நான் கூறினேன்.

“நான்தான் 7:30 மணிக்கே வருகிறேனே! நீ ஏன் அலட்டிக்கொள்கிறாய்!” என்றாள் ஆண்ட்ரியா.

அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். ஜப்பான் நாட்டுக்காரனை கல்யாணம் செய்ததாலோ என்னவோ அவளுக்கு எல்லா வேலைகளையும் நேர்த்தியுடனும் நேரத்துடனும் செய்வது இயல்பாக இருக்கிறது. நானோ ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டேன் என்றால் அதை முடிக்கும்வரை, நேரத்தைப் பெரிதாக மதிக்க மாட்டேன்.

“உன்னுடைய புண்ணியத்தில் தினமும் காலையில் நெஞ்சு வலியில் இருந்து தப்பிக்கிறேன்! ஒருவராவது 8 மணிக்குள் மேசைக்கு வராவிட்டால் நமக்கு வேலை காலி”

என் வார்த்தையில் இருந்த நன்றியைக் கவனியாதது போல, “ஒரு நாள் என் வேலையையும் சேர்த்து நீ செய்துவிடேன்!” என்று இலகுவாகக் கூறினாள் அவள்.

“நேற்றுக் காலையில் நான் அலுவலகத்திற்குத் தயாராகக் கிளம்பியபிறகு என்னுடைய மகள் எழுந்துவிட்டாள். ஏதாவது ஒரு கதையைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாள். காய்ச்சலில் படுத்திருக்கும் அவளுடைய கெஞ்சலுக்கு முன்னால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அடுத்தப் பேருந்தைப் பிடிக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றியது. அதையும் தவறவிட்டதால் தாமதமாகி விட்டது. என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை”

“உன்னுடைய அன்பு எனக்குப் புரிகிறது. எந்த எல்லைக்கும் உட்படாத அன்பைச் செலுத்த உன்னால் மட்டும்தான் முடியும். அப்படியொரு அன்பை என்னால் யார் மீதும் செலுத்தமுடியுமா என்று தெரியவில்லை” என்று யோசனையுடன் கூறினாள்.

இருவரும் சிரித்துக்கொண்டே வேலையில் ஆழ்ந்துபோனோம்.

திடீரென்று “வேறென்ன வேறென்ன வேண்டும்?” என்ற பாடல் அலறியவுடன் நான் மட்டுமல்ல அந்த அறையில் இருந்த எல்லோரும் துணுக்குற்றனர். இன்றும் அவசரத்தில் என் தொலைபேசியின் அழைப்பு மணியை ஓசையற்றதாகச் செய்ய மறந்திருந்தேன். தொடர்பைத் துண்டித்தேன்.

“அப்புறமாக உனக்கு மேலிடத்தில் நல்ல மரியாதை உண்டு” என்று நக்கலாகக் கூறிக்கொண்டே ஆண்ட்ரியா கணினியை உறங்கச்செய்து எழுந்தாள். நான் கடிகாரத்தைப் பார்க்கத் தேவையில்லை. மணி சரியாக 11:30 ஆகத்தான் இருக்கும். அவள் இருக்கைக்குத் திரும்பினால், என் கடிகாரத்தை 12:25 என்று சரி செய்துகொள்ளலாம்.

மதிய உணவு சாப்பிட்டுத் திரும்பிய அவள், “கீழே மலிவு விலை விற்பனை நடக்கிறது! அழகான பணப்பையை விட மனமில்லை! ஆளுக்கொன்று வாங்கிவிட்டேன்” என்று ஒரு கையடக்க பணப்பையை என்னிடம் கொடுத்தாள்.

வேலையில் ஆழ்ந்திருந்த எனக்கு அவளுடைய அன்பை எண்ணி கண்களில் நீர் கோர்த்தது. சென்ற வாரம் கிழிந்து போன என்னுடைய பணப்பையை அவள் பார்த்தாள். எனக்கு புதிது வாங்க நேரமே கிடைப்பதில்லை என்பதால் மெனக்கெட்டு அவளுக்கும் தேவை போலக் காட்டிக்கொண்டு எனக்காக ஒன்று வாங்கி வந்திருக்கிறாள். நாடு இனம் மொழி தாண்டி உருவாகும் நட்புக்கும் காதலுக்கும் என்றுமே வரையறை கிடையாது.

அன்று மாலை எங்கள் அலுவலகத்தில் வருடாந்திர ‘நடனமும் உணவும்’ நிகழ்ச்சி நடந்தது. எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘குலுக்கல்’ கடைசியில் நடந்தது. நமக்கும் அதிர்ஷ்டத்துக்கும் ரொம்பத் தூரம் என்பதால் நான் அதைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். முதல் பரிசை அறிவிக்கும் பொழுது மட்டும் கவனித்த நான் ஆண்ட்ரியாவின் பெயரைக் கேட்டதும் குதூகலமடைந்தேன். தாய்லாந்தில் உள்ள புக்கெட்டிற்கு குடும்பத்துடன் செல்ல இலவச விடுமுறைத் திட்டம் அவளுக்குப் பரிசாகக் கிடைத்தது.

“வரிசையாகக் குழந்தைகள், குடும்பத்தினரின் உடல்நலக்குறைவு என்று அடிக்கடி தாய்நாட்டிற்குச் சென்றதால், உல்லாசப்பயணம் சென்று நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன. எங்கள் எல்லோருக்கும் இது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்” என்று ஒரு நாள் கூறினாள்.

“கணவனுக்கு அலுவலக வேலை கடந்த 2 வருடங்களாக அழுத்தம் நிறைந்ததாக இருந்ததால் சுற்றுலா செல்லவே முடியவில்லை. அதனால் இந்த விடுமுறையை குழந்தைகள் மட்டுமல்ல, நானும் ரொம்ப ஆவலாக எதிர்நோக்குகிறேன்” என்று கண்கள் பளபளக்க மற்றொரு நாள் பேசினாள்.

உலகச் செய்திகளை விட ஆண்ட்ரியா புக்கெட் போவது அலுவலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சின்னப் பெண்ணுக்கு உடல்நலம் சரியில்லை என்று அவள் 2 முறை தேதியைத் தள்ளி வைத்ததும் அதற்கு ஒரு காரணம்.

அந்தத் திட்டத்தை உபயோகப்படுத்தும் கடைசி நாள் நெருங்கிவிட்டது. இனிமையான ஆண்ட்ரியாவிற்கு நல்லது நடக்கவேண்டும் என எல்லோரும் ஆசைப்பட்டனர். அவள் சுற்றுலா செல்ல முடிவு செய்த தேதியும் வந்தது. அந்த வெள்ளிக்கிழமை அவளுக்கும் அவளுடைய குடும்பத்தினருக்கும் உல்லாசமான பொழுதாக அமைய எல்லோரும் வாழ்த்துக் கூறினார்கள்.

மாலையில் ஒன்றாக வீட்டுக்குத் திரும்பும்பொழுது “இவ்வளவு நாட்கள் தாமதமானதற்கு எப்படித்தான் குழந்தைகளை சமாளித்தாயோ?” என்றேன் நான்.

“ரொம்பத்தான் ஏங்கி விட்டார்கள். அடுத்த ஒரு வாரத்திற்கு அலுத்துப்போகும் வரை கடலில் ஆட்டம் போடப்போகிறோம்” என்று கனவுலகிலேயே பேசினாள்.

எனக்கு சனிக்கிழமை துரித கதியில் ஓடியது. ஞாயிற்றுக்கிழமை நண்பகல் செய்தியை தொலைக்காட்சியில் கேட்டவுடன் நெஞ்சு வலித்தது. கடலில் சுனாமியாம். இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து கடல்கள் கொந்தளிக்கின்றனவாம். இயற்கையின் சீற்றத்தால் சில நிமிடங்களில் தாய்லாந்து கடலோரப் பகுதிகளை கடலலைகள் முழுங்கினவாம். அன்று தேதி டிசெம்பர் 26, 2004.

என் தோழி ஆண்ட்ரியாவிற்கு என்னவாயிற்று? தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு என்னவாயிற்று? ஒன்றுமே புரியவில்லை. அலுவலகத்திற்கும் ஊருக்கும் மாற்றி மாற்றி தொலைபேசியில் அழைத்து விவரம் தெரிந்துகொள்ள முயன்றேன். எந்த உயிர்ச் சேதமும் இருக்கக்கூடாதென்று வேண்டினேன். தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் தொடர்ந்து வந்த செய்திகள் என்னை உலுக்கின.

“அம்மா, சிங்கப்பூருக்கும் சுனாமி வருமா?” என்று கேட்ட 5 வயது மகளை “இல்லை கண்ணம்மா” என்று சமாதானப்படுத்தி அணைத்துக்கொண்டேன். எனக்கும் தெரியாது. மனித மனங்களில் எத்தனை எத்தனை வேறுபாடுகள் கொண்டுள்ளோம். இயற்கைக்கு மட்டும் மனிதர்கள் பாகுபாடில்லை. நல்லதோ தீயதோ ஒன்று போல் கொடுக்கும் அது.

அலைகள் ஓய்ந்தன. எங்கும் தண்ணீர்! எங்கள் கண்களிலும் கண்ணீர்! பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் ஆரம்பாயின. எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்து உதவிக்கரம் நீட்டின. அங்கு மாட்டிய உயிர்களை மட்டும் யாரும் திருப்பித்தர மாட்டார்கள்.

மறுநாள் கடமையை ஒட்டி அலுவலகம் சென்றேன். பொதுவாக 8:15 மணிக்குத்தான் அலுவலகம் செல்லும் நான் அன்று, 7:45 மணிக்கே இருக்கையில் சென்று அமர்ந்தேன். அன்று ஆண்ட்ரியா வரமாட்டாள். அவளுடைய வேலையையும் சேர்த்து நான் பார்த்தேன்.

அவசரக் கூட்டம் நடந்தது. “ஒரு வாரம் விடுமுறையில் புக்கெட் சென்ற ஆண்ட்ரியா பற்றி இன்னமும் ஒரு தகவலும் இல்லை. ஜப்பானிலும் பிலிப்பைன்ஸிலும் உள்ள அவள் குடும்பத்தினரிடம் பேசியுள்ளோம். மேலும் தகவல் தெரிந்தால் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று மேலாளர் எல்லாக் குழுவிற்கும் பொதுவாகக் கூறினார்.

அப்பொழுது என்னுடைய பத்திரிகை நண்பர் கண்ணன் செய்தி சேகரிக்க புக்கெட் சென்றிருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆண்ட்ரியா பற்றிக் கேட்டேன். கடற்கரையில் இருந்த ஒருவர் கூட மிஞ்சவில்லை என்றார். மரங்களிலும் கட்டடங்களிலும் மாட்டிக்கொண்ட உடல்களைப் பார்த்து மனம் பதறுவதாகக் கூறினார். குழந்தைகள், வயதானவர்கள், விருந்தினர்கள் என்று எல்லோரையும் தன் கோரப்பசிக்கு இரையாக்கிய சுனாமியின் கதை என் வாழ்க்கையில் கேட்டறியாத இயற்கைச் சீற்றம்.

குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூயார்க்கில் இரட்டை கோபுரங்கள் சரிந்தன. இந்தச் செய்திகள் அறிவார்ந்த கேள்விகளையும் தேடல்களையும் கொடுத்தன. மனது தடுமாறவில்லை. இந்த சுனாமி ஏன் இப்படி வாட்டுகிறது? எனக்குத் தெரிந்த ஒருவர் இருப்பதால், அறிவிற்கு முன் மனம் பதைக்கிறதே!

தோழியைப் பற்றி செய்தி கிடைத்தால், உடனே தெரிவிக்குமாறு கூறி கண்ணனின் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தேன்.

மதிய உணவு நேரத்தில் கைப்பையை எடுத்தேன். அது ஆண்ட்ரியா வாங்கிக்கொடுத்த கைப்பை. என்னால் சாப்பிடப் போகமுடியவில்லை. உடைந்து அழுதேன்.

மாலை 5:00 மணிக்குத் தனியாக வீடு திரும்பினேன். அவளுடைய குழந்தைகளாவது தப்பித்திருக்க வேண்டும் என்று விரும்னேன்.

மறுநாளும் காலை தாமதமில்லாமல் 7:45 மணிக்கே அலுவலக அறைக்குள் நுழைந்த என்னை சிரித்த முகத்துடன் முகமன் கூறி எதிர்கொண்டாள் ஆண்ட்ரியா. ஆனந்தத்தில் தள்ளாடினேன். என்னை நானே கிள்ளினேன். வலித்தது. கனவல்ல. அது நிஜம்தான்.

ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டு அழுதேன். சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு அவள் எனக்கு நன்றி கூறினாள். நான் புரியாமல் விழித்தேன். “யாராவது ஒருவருடைய மகிழ்ச்சிக்காக, எப்பொழுதாவது நேரம் தவறுவது பரவாயில்லை என்று நீ கூறியது போல் நான் நடக்க நேர்ந்தது. அதனால்தான், இன்று உயிருடன் இருக்கிறேன்” என்றாள்.

“…….?”

“சனிக்கிழமை மதியம் நாங்கள் விமான நிலையத்திற்குக் கிளம்பிச் செல்லும் வழியில் என்னுடைய மகள் தன்னுடைய புத்தகங்கள், பொம்மைகள் கொண்ட முதுகுப்பையை வீட்டிலிருந்து எடுக்க மறந்துவிட்டதைக் கண்டுபிடித்து அழுதாள். எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவள் கேட்கவில்லை”

“அங்கே போய் புதிதாக வாங்கிக்கொள்ளலாமே!”

“சொன்னேன். அன்று ஏனோ அவள் என் பேச்சைக் காதில் கேட்கவில்லை. விமானம் கிளம்புவதற்கு 3 மணி நேரங்களுக்கு மேல் இருந்ததால், பையை எடுக்க வீட்டிற்குத் திரும்பினோம்”

“சரி. சுனாமியில் இருந்து எப்படித் தப்பித்து வந்தாய்?” என்று அவளுடைய தோளைப் பிடித்து உலுக்கினேன்.

“போனால் தானே தப்பிக்க? பான் ஐலேண்ட் விரைவுப்பாதையில் எங்களுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. யாருக்கும் சேதமில்லை என்றாலும் எங்களால் விமான நிலையத்திற்கு சரியான சமயத்தில் செல்ல முடியவில்லை. விடுமுறை ரத்தானது”

காலந்தவறாமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஆண்ட்ரியா அன்று எப்படி காலந்தாழ்த்தி விமான நிலையத்திற்கு செல்ல இசைந்தாள். விதியை அன்பு வென்றதா?

“நேற்று ஏன் அலுவலகம் வரவில்லை?” என்று ஆவேசமாகக் கேட்டேன். எனக்கு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

“குழந்தைகளை ஏமாற்ற வேண்டாம் என்று நாங்கள் அப்படியே 2 நாட்கள் க்ரூஸ் சென்றோம். தொலைதொடர்பு இல்லை. இங்கு அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது. நேற்று இரவு திரும்பிய உடனேயே மேலாளரிடம் நாங்கள் பத்திரமாக இருப்பது பற்றிப் பேசிவிட்டேன். சுனாமியால் நீயும் பயந்து விடுவாய் என்று உன்னை எத்தனை முறை அழைத்தேன் தெரியுமா” என்றாள்.

உடனே என் கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தால், நான் எடுக்காத 8 அழைப்புகள் என்னைப் பார்த்து எள்ளி நகையாடின. அழைப்புமணி ஓசையற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்தது. சரியானதை சரியாகச் செய்யாத திறமைக்கு இலக்கணமாகத் திகழும் என்னை நானே நொந்துகொண்டேன்.

தோழி தப்பித்தது மகிழ்ச்சிதான். இருந்தாலும், மறைந்ததாக செய்திகள் அறிவித்த எண்ணற்ற மற்ற உயிர்களுக்காக வருந்தினோம்.

“நிலையற்ற வாழ்க்கையில் அன்பு செலுத்துவது முக்கியம் என்று அவ்வப்பொழுது இயற்கையும் நமக்கு நினைவுபடுத்தத் தவறுவதில்லை” என்று அவள் கூறியதை நானும் தலையை ஆட்டி அமைதியாக ஆமோதித்தேன்.

இனி அந்த இலவச விடுமுறைத் திட்டத்தை அவள் உபயோகிக்க முடியாது. அதனால் என்ன. உயிர்கள் உயிரோடு இருக்கின்றனவே! ஒன்றைப் பறித்து மற்றொன்றைக் கொடுப்பது உலகின் நியதி.

“சரி என்பதும் தவறு என்பதும் சம காலத்திற்கு ஏற்ப மாறுபடும். கொள்கைகளை சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் விட்டுக்கொடுப்பதால் யாருக்கும் நட்டமில்லையென்றால் மனிதர்கள் ரொம்பவும் கெடுபிடியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இது அனுபவம் சொல்லிக்கொடுத்தது” என்று சொன்னேன்.

அவள் அன்று நேரம் தவறியது ஒரு வகையில் சரிதான் என்று எனக்குத் தோன்றியது.

– தமிழ் முரசு, சிங்கப்பூர் (27.07.2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *