காலண்டர் பாவா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2023
பார்வையிட்டோர்: 3,218 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆனப் பாறை ஊருக்குக் கீழ்ப்புறம் உள்ளது. அதன் உச்சியில் ஏறி நின்று பார்த்தால்தான் நோன்பு பிறையும் பெருநாள் பிறையும் தெரியும். மேகமூட்டம் இல்லையானால் ஒரு நூல் வானத்தில் வளைத்து வைத்தது போல் இருக்கும் பிறை. நோன்பு துவங்கும் நாளை உறுதிப்படுத்திக் கொள்ள ‘பிறை கண்டாச்சோ’ என்று ஒரு கூட்டம் விளித்துக் கூவி ஊரைச் சுற்றி வரும். பெருநாள் பிறை பார்க்கவும், ஆனப்பாறை மீது ஏறி நிற்போம். தோன்றி உடன் மறையும் முதல் பிறையைக் கண்ணால் கண்ணி போட்டுப் பிடிக்கத் தக்கம் பார்த்து நிற்கையில், தெளிவான நீலவானில் ஏதாவது துண்டு மேகம் நொண்டிக்கால் இழைந்து வந்தால் கோபம் பொத்துக் கொண்டு வரும். கண்டமேனிக்கு வாய் பேசுவோம், மேகம் விலகிப்போக, புத்தாடை உடுத்தி, அத்தர் பஞ்சு காதில் வைத்து உறவினர் வீடுகளில் ஏறி இறங்கி ‘பெருநாப்படி’ (பெருநாள் படி) வாங்குவதற்கு ரம்ஜான் பெருநாளை எப்படியும் எட்டிப் பிடிக்க வேண்டுமென்ற பிடிவாதத்தில் நின்று கொண்டிருப்போம். மேற்கு வானச் சரிவில் தோன்றிச் சில நிமிடங்களில் மறையும் வெள்ளைப் பூசாந்திரம் கண்களுக்குத் தெரிந்ததும் ஆனப்பாறையிலிருந்து குதித்து இறங்கி ஒரே ஓட்டம் – ‘பிறை கண்டாச்சோ.’ நாங்கள் பிள்ளைகள் பொய் சொன்னாலோ என்று சாட்சிக்காகப் பெரியவர் ஒருவர் எங்களுடன் எப்பவும் பாறை ஏறுவார். பெரியவர் வேறு யாருமில்லை.

காலண்டர் பாவா.

பொய் சொல்லாதவர். கண்ணால் கண்டதை ஒளிவு மறைவின்றிச் சொல்லக்கூடிய நேர்மையாளர். இவர் பேச்சுக்கு சாட்சிகள் தேவையில்லை.

அவர் சொல்லனும், ‘நான் பார்த்தேன் கேட்டிளா?’

‘பார்த்தீளா?’ தலைவர் உறுதிப்படுத்துவதற்காகக் கேட்பார்.

‘பார்த்தேன். இரண்டு திருட்டியால் பார்த்தேன்.’ ஒவ்வொரு முறையும் இதே கேள்விக்கு இதே பதில்.

உடன் பள்ளிவாசலில் நகரா கொட்டி ஒலிபெருக்கியின் மூலம் பெருநாள் என்று அறிவிப்பு செய்வார்கள். காலண்டரை இங்கு யாரும் நம்புவதில்லை.

பாவாதான் எங்கள் காலண்டர்.

மனைவி மக்கள் இல்லாத தனிக்கட்டையான பாவாவுக்கு ஊர்த் தலைவர் அவர் கணக்கில் ஒரு புத்தாடை – வேட்டியும் துண்டும் பெருநாள்படி தனியாக பள்ளிவாசலைத் தூத்துத் துடைக்க நியமனம் செய்யாமலேயே ஊழியம் செய்வதால் வீடுகளில் உணவு. கோழி கொத்துவது போல் இரண்டு பிடி.

நரைத்த தாடி. தலையில் உள்ள சிவப்பு நிறவட்டத் தொப்பி. கால் மூட்டை தொட்டும் தொடாமலும் உடுத்தியிருக்கும் நாலுமுழ வேஷ்டி. வேஷ்டியை மறைக்கும்படி மூட்டிற்குக் கீழ் இறங்கி நிற்கும் தொள தொளப்பான சட்டை. (ஏதாவது குடவண்டி ஆசாமி இனாம் செய்ததாக இருக்கும்) பாவாலின் அடையாளம்.

அத்றபு, சுல்தான், அமீது எல்லோரும் சேர்ந்துதான் இந்தப் பெரு நாளுக்குப் பிறை பார்க்க பாறை ஏறினோம். வழக்கம் போல் காலண்டர் பாவாவும் வந்தார் சாட்சிக்காக. திருவனந்தபுரத்தில் வாக்கப்பட்டிருக்கும் அக்கா, நாளை அங்கே பெருநாள் என்று போனில் சொன்னதை நம்பி, உம்மா ஒட்டப்பம், பாலாடை, கிண்ணத்தப்பம், இப்படி வகைவகை யான பலகாரங்களுக்கும் பண்டங்களுக்கும் அரிசியைத் தண்ணீரில் கொவுரப் போட்டுவிட்டாள்.

கைமணி சுந்தரம் ‘காட்ச’ (அன்பளிப்பு) கொண்டு வந்த இரண்டு சேவல் கோழிகள் வேலிக் கம்பில் கட்டில் கிடந்து நெல் கொத்திக் கொண்டிருந்தன. அடுக்களைச் சட்டியில் அது நாளை வேகும் வாசம் இன்று மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. தெய்ச்சோறு மணத்தது. பண்டம் பணியாரங்கள்.

அல்லாஹ்! நாளை பெருநாளாக இருக்கணும். கபரடி அப்பாவுக்கு, நாளை கிடைக்கும் பெருநாள் படியிலிருந்து ஒரு ரூபாய் காணிக்கை போடுவதாக நேமிசம்.

சுல்தான் வீட்டில் ஒறட்டிச் சுட அரிசி மாவு பிசைந்து கொண்டிருந் தார்கள். அமீதுவின் வாப்பா கடா பிடித்துக் கட்டியிருந்தார்.

காலண்டர் பாவாவுடன் எல்லோரும் ஆனைப்பாறை உச்சியை அடைந்தோம். மேகம் இழையாத சுத்த நீல ஆகாசம். கழுவித் துடைத்து விட்ட மாதிரி. காலண்டர் பாவாவின் உதட்டின் கீழ் தாடிப் பகுதியி லுள்ள ரோமம் பழுப்பு நிறமாக இருப்பது, பீடிக்கறை படிந்தது.

மூக்குவழியும் புகைவிட்டுக் குழந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.

வாங்கி வைத்திருந்த ஒரு கட்டு குமரி மக்கள் பீடியையும் எலிமார்க் தீப்பெட்டியையும் பாவாவின் ஜேப்பில் திணித்தபோது மார்கழிக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அவருக்கு எங்கும் இல்லாத ஆனந்தம். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அரபிக் கடலிலிருந்து வீசிய அந்திக் காற்றிலும் ஈரமிருந்தது. சூரியன் கடலுக்குள் மூழ்கியதும் எங்கள் பார்வை ஆகாசச் சரிவில்.

‘எதுக்கப்பா ஒரு கட்டு பீடி?’

‘குளிரில்லையா?’

‘பயங்கரக் குளிரு.’

‘பாவா எங்க உம்மா அரிசி எல்லாம் கொவுரப் போட்டுட்டா’ அத்றபு சொன்னான்.

சொன்னதை பாவா காது கொடுத்துக் கேட்கவில்லை.

‘எங்க உம்மா மாவு பிசைஞ்சி வைச்சிருக்கா’ சுல்தான்.

பாவாவின் காலண்டர் பார்வை மேகம் தொடாத நீல ஆகாசத்தின் சரிவிலேயே இருந்தது.

‘பாவா பிறையைப் பாத்தியளா?’

மினாரா உச்சியில் பெருநாளை எதிர்பார்த்துக் கட்டிய ஒலிபெருக்கி விலிருந்து பாங்கு சத்தம் கேட்டதும் பாவா தீப்பெட்டி உரசி ஒரு பீடி பற்ற வைத்து நோன்பு திறந்தார்.

‘அந்நா ஒரு மேகம் வருது. அதைப் பாருங்கோ. ஒரு நூலு போல தெரியுதில்லியா?’

பாவா மவுனமாக நின்றார். ஊன்றிய பார்வையை எடுக்கவே இல்லை. மேகம் இழைவதாக அவர் பார்வையில் படவே இல்லை. பாவாவின் காலண்டர்படி நாளை பெருநாளாக இருக்க வாய்ப்பில்லை. மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

‘நாங்களெல்லாம் பார்த்தோம் பாவா. உங்க கண்ணுக்குத் தெரியலியோ?’

என்ன சொல்வது என்று புரியாமல் பாவா திகைத்தார். ஒருவேளை வயதான நமக்குத்தான் பார்வை மங்கிவிட்டதோ? எல்லாப் பிள்ளை களும் பிறை பார்த்ததாகச் சொல்கிறார்கள். நல்ல பிள்ளைகள், கண்ணி லிருந்து அடிக்கடி. நீர் வடிவது பார்வை மங்குவதன் அறிகுறியாக இருக்கும். பார்க்காத பிறையைப் பார்த்தேன் என்று சொல்லுவதா? இந்தப் பிள்ளைகள் பார்த்ததாக உறுதியாகச் சொல்லும் பிறையைப் பார்க்கவில்லை என்று மறுப்பதா? ஊர்த் தலைவரிடம் என்ன சொல்வது? பாவாவுக்கு ஒரே குழப்பம்.

பொய்யே சொன்னதில்லை. பார்வை மங்கிவிட்டதை ஊர்மக்கள் தெரிந்துவிட்டால் இந்தப் பெருநாளுடன்தன்னை மாட்டிய சுவர் ஆணி யிலிருந்து கழற்றிச் சுருட்டி வீசிவிடுவார்கள். தனக்குள்ள ஒரே மவுசு, தான் ஒரு காலண்டராக இருப்பதுதான். பிள்ளைகள் சொன்ன துண்டு மேகம் பிறையை மறைத்து இருக்கலாம். நீர் வடிந்து கொண்டிருந்த கண்ணைத் துடைத்துக் கொண்டிருக்கையில் பிறை தோன்றி அதை மேகம் வந்து மறைத்திருக்குமோ? சந்தேகங்கள் அவரைச் சூழ்ந்தன. வெள்ளாட்டுக் குட்டிகளின் கண்ணுக்குள் தீட்டிய கத்திகள் தெரிந்ததும் குட்டிகள் நாளை துடிக்கத் துடிக்கப் போகும் 2.யிரை நினைத்துப் போடும் கூப்பாடு. ஆனைப்பாறையின் அடிவாரத்திலுள்ள ஊரின் மேல் பகுதியில் அதிர்வுகளை உண்டாக்கியது.

ஆனைப் பாறையில் நின்று பார்த்தாலே ஊருக்குள் நடக்கும் குதூகலங்கள் சிறுவர்களின் கும்மாளங்கள் எல்லாம் தெரியுது.

இந்தக் குதூகலங்கள்.

இந்த உற்சாகத் திமிர்ப்புகள்.

பிறை என் கண்ணால் பார்க்கவில்லை என்று சொன்னால் கிராம முகமே சோர்ந்து போகும். உற்சாகத் திமிர்ப்பில் ஓடியாடி நின்று வெடிபோடும் சிறார்கள் கீரைத் தண்டு போல் வாடிவிடுவார்கள்.

ஏழ்மையான கிராம மக்களின் கொவுரப்போட்ட அரிசி, பிசைந்த அரிசி மாவு…

கத்தியின் பளபளப்பில் மரணமும் கண்டு நடுங்கி நிற்கும் வெள்ளாட்டுக் குட்டிகள் அதன் குலநடுக்கத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக் கொண்டு போவது வாயில்லாப் பிராணிகளோடு செய்யும் பெரும் கொடூரம். இந்தப் புனித நன்னாளில் அவற்றின் மீது கருணை காட்ட அதன் குலை நடுக்கத்திலிருந்து ஒரு நாளைக் குறைக்க.

‘பிறை கண்டாச்சோ பிறை கண்டாச்சோ.’

அத்றபு சொல்ல, சுல்தானும் அமீதும் ஏற்று உரக்கச் சொன்னார்கள்.

அவர்கள் பின்னால் காலண்டர் பாவா கை பின்னால் கட்டி நடந்தார். பள்ளிவாசல் நடையில் ஊர்த் தலைவர்.

‘பாத்தீயளா?’

பாத்தேன், இரண்டு திருட்டியாலே பாத்தேன் என்று சொல்லவா?

பார்க்கலே என்று சொல்லவா?

தயங்கிய நொடி இடையில் திடீரென அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.

‘என்ன பாவா?’

‘என் பார்வை மங்கிவிட்டது.’

ஒரு பழைய காலண்டராக அவர் சுருட்டிப் போடப்பட்டார்.

சிறார்களின் புதிய காலண்டர்படி ஊர்த் தலைவர் பள்ளிவாசலில் நகரா அடித்து ஒலிபெருக்கியில் பெருநாளை அறிவிப்பதற்கு தக்பீர் சொல்ல உத்தரவிட்டார்.

‘அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பார்
அல்லாஹு அக்பர்’

– நன்றி: https://thoppilmeeran.wordpress.com/2011/08/02/பிறை/

முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997 இல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தனது 74 வயதில் (மே 1, 2019) உடல்நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி மாவட்டம், பேட்டை எனும் இடத்தில் இறந்தார். விருதுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *