காமரூபிணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 5,266 
 
 

[1]

ரப்பர்மரக்காட்டில் ஒரு சாணியுருளை கிடந்தது. இன்னும் ஒருவாரம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் தக்கையாக இருக்கும். உலர்ந்த சாணியின் ஓட்டுக்குள் ரப்பர்மரத்தின் வேர்நரம்புச்சுருள்கள் உருண்டு சுருண்டு சொம்மியிருக்கும். அதை மண்ணுடன் இணைப்பது ஒரு சிறிய வேர்ச்சரடுதான். கடைசித்துளிவரை உறிஞ்சப்பட்டக்கூடு.”லே மக்கா, ரப்பர்ணாக்க நீ என்னண்ணுலே நெனைக்கே மயிரே? அவ யச்சியில்லா? முண்டும்முலக்கச்சயும் இட்ட நம்ம ஊரு யச்சியில்லலே. சட்டையும் காதோலையும் இட்ட கிறிஸ்தியானி யச்சியாக்கும் அவ!” என்றார் நாராயணன் அண்ணன்.

பொதுவாக தெற்குதிருவிதாங்கூர் முழுக்க யட்சிகளும் நீலிகளும் அதிகம். தூயதமிழில் இயக்கி. நாஞ்சில்தமிழில் ஏக்கி. ‘கருங்கண் இயக்கி’ என்று சிலப்பதிகாரம் சொல்லும்.ஆயர்குலமூதாட்டி மாதரி அவளுக்கு பாலுடன் சேர்த்த அன்னம் கொடையாகக் கொடுத்து வழிபட்டாள். சங்ககாலத்தில் நெய்தீபம் ஏற்றி ஊன்பலி கொடுத்து வணங்கிய குடைவரை எழுதிய தொல்தமிழ்ப்பாவை இயக்கியாக இருக்கலாம்.மதுரையில் மாதரி வழிபட்ட இயக்கி இருந்தது கோட்டைக்கு வெளியே. கோட்டைக்குள் அரன் அமர்ந்தும் மால் நின்றும் அணிசெய்து பூசனை கொண்டிருப்பார்கள். அவர்கள் பெருந்தெய்வங்கள். சொல்லால் வழிபட்டால் அருள்பவர்கள். உலகளந்தாயே, ஆயிரம் கண்ணனே என்றழைத்தால் குளிர்பவர்கள். யட்சிகள் நம் பாட்டியரைப்போல அத்தனை லௌகீகமானவர்கள். குளத்துக்குள் இருக்கும் பாறைபோல குளிர்ந்தவர்கள்.

தென்திருவிதாங்கூரில் யட்சிகளுக்கு நாள்பூசைகளில்லை. செய்ய ஆரம்பித்தால் அதன்பின் வேறுவேலைக்கு நேரமிருக்காது. நெடுநாள் நின்றமரத்தடியில் எல்லாம் யட்சியர் துறுபல்லும் உறுவிழிகளுமாக இருந்தருளினர். வருடம் ஒருமுறை கொடைபெறுவர் துடியான தேவியர். அதுவும் கிடைக்காமல் கல்லில் எழுதிய கண்மட்டுமேயாக காட்டில் காத்திருப்பவர்களும் உண்டு. கொடை என்றால் கொடுக்கபப்டவேண்டியது . பண்டு கொடுக்கப்பட்டிருந்தது குருதி மட்டுமே. ஆகவே பலி என்றசொல்லே குருதி என்ற சொல்லாக இடமாற்றம் செய்யபப்ட்டது. ஆடு, கோழி, எருமை… அபூர்வமாக பன்றி. இன்று மஞ்சள்பொங்கலும் மஞ்சணைக்குழம்பும் கொடுத்து ‘குருதி’ கழிக்கிறார்கள். படையலிட்டு விடப்பட்ட யட்சிபீடங்கள் மங்கலம்கலைந்த அழகுள்ளவை, களைத்த மணப்பெண்போல. சிதறிய மஞ்சள்தூள் காய்ந்த தெச்சிப்பூ அரளிப்பூ எச்சில்இலைகள். எண்ணைக்கறை வழிந்த கருங்கற்கள்.

ஆனால் ஒருதுளியேனும் ரத்தமில்லாமல் அடங்காத யட்சியர் உண்டு. விறகுக்கட்டின்மீது தென்னங்கொதும்பு மட்டையுடன் சேர்த்துக் கட்டி தலைமேல் கொண்டுசெல்லப்படும் செஞ்சேவல் காந்தாரிமிளகு பிளந்தன்ன வாய்திறந்து கீழ்த்தாடை பதைபதைக்க மணிக்கண்களால் திரும்பித் திரும்பி ஊரைப் பார்த்தபடி காடு செல்லும். ஈரத்துணிசுற்றி இடுப்பில்வைத்து ரகசியமாகக் கொண்டு செல்வதும் உண்டு.கழுத்து வளைய கோழித்தலையை திருப்பி வளைவுமுனையை சிறு பேனாக்கத்தியால் சற்றே அறுத்து சொட்டும் வெங்குருதியை ஒவ்வொரு தேவிக்கும் ஒரு சொட்டு என விடுவார்கள். மழைபட்டு கறுத்த கல்பரப்புகளில் ரத்தம் சிறு குமிழிகளுடன் உப்புவீச்சமுள்ள சுடுமணம் எழ பரந்து, நுனிகளில் வந்து முத்துவிட்டு, மண்ணில் உதிரும். மண்ணுக்கு ரத்தம் எப்போதுமே பிரியமானது. அக்கணமே உறிஞ்சி அமையும். மண்ணில் விழும் ரத்தமெல்லாம் பாதாள உலகில் இருளுக்குள் கண்கள் ஒளிர அலையும் எண்ணிலா மூர்த்திகளால் உண்ணப்படுகிறது. மண்ணுக்கு அடியிலிருந்தபடி அவர்கள் தாகமான வாய் திறந்து ரத்தம் ரத்தம் என்கிறார்கள். கனவுகளில் வந்து ரத்தம் கேட்டு மன்றாடுகிறார்கள். மண் என்பது பாதாளம் தன் மீது போர்த்தியிருக்கும் மெல்லிய ஆடை.

உடையவர் குலத்திலிருந்தே ஒரு துளி ரத்தம் கிட்டாமல் பீடத்திலமராத யட்சிகள் சிலர் உண்டு. இரிட்டிமூலையில் யட்சியின் பிரதிஷ்டை கிடைக்கல்லின்மேல் அமர்ந்த நீளக்கல் என்ற புராதன சிற்பவடிவம் கொண்டது. மேலே தெற்குமலைக்காற்று பெருநதியென எந்நேரமும் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் மரக்கூட்டங்களின் பசுநீலநிழலிருளுக்குள் சருகுகள் குவிந்துமூடிய காஞ்சிரமத்தடியில் இரிட்டிக்காரி ஓணானோடும் சலசலப்பில் திடுக்கிடும் பூச்சிகளின் மௌனத்துக்குள் அமர்ந்திருப்பாள். குடும்பத்தாரும் குலத்தாரும் அவ்வழிச்செல்வதிலலை. அவர்கள் செல்லக்கூடாத வழிகளே அதிகம். ஆனால் அருகேயுள்ள முட்டன்வயல்வெளிக்கு நடவுக்கும் களைபறிப்புக்கும் வரும் புலயத்திப் பெண்கள் அங்கே கூடியமர்ந்து பச்சை மாங்காயை உடைத்து உப்புவைத்து தின்றும், பசும்புளி பறித்து தோடு உடைத்து சப்பியும், கின்னாரமும் களியாட்டும் பேசி வெண்பல் ஒளிரச் சிரித்து கூடியிருப்பார்கள்.

எட்டானுடன் நான் முதன்முதலில் இரிட்டிக்காரியைக் கண்டபோது அதிர்ந்தே போனேன். இருளுக்குள் இரு கண்கள். கண்கள் கூட அல்ல. வெறும் பார்வை. பார்வை கூட அல்ல, வெறும் வெறுப்பு. உக்கிரமான ஒரு பகைமை. விஷப்பூ போல காட்டில் மலர்ந்து நின்றது அது. யார் மீதோ யாருக்கோ எப்போதோ உருவான வெறுப்பு காலங்களை தாண்டி கருங்கல்லில் செதுக்கிய ராஜநாகம்போல பத்திவிரித்து நின்றது. அத்தனை உக்கிரமான ஒன்று ஒருபோதும் அணையமுடியது. ஜடத்தை உண்டு எரியும் நெருப்புக்கு எல்லை உண்டு, முடிவிலா நினைவுகளை தின்று எரியும் அக்னி அணையவே அணையாது.

ஆடிமாதம் தெற்குக் காடுகள் பேய்பிடித்த பெண்களைப்போல அலறிக்கூவி தலைமுடி சுழற்றி நடுங்கியாடும் பருவம். வானில் சாம்பல்நிற மேகங்கள் கொடுங்கனவிலென குளிந்துறைந்து நிற்கும் காலம். மேகங்களிலிருந்து குளிர்ந்த காற்றி சுழன்றிறங்கி குன்றுச் சரிவுகளில் செம்மண்சுழலியாக உருண்டெழுந்து சருகுகளையும் குப்பைகளையும் துதிக்கை நீட்டி அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டு சமவெளிகளை அடைகிறது. கீழ்க்கிராமங்களிலும் சூழ்ந்த குறுங்காடுகளிலும் களபசெந்தூரம் காய்ந்து சருகுமாலையணிந்து தவமிருக்கும் நாட்டுதெய்வங்களையெல்லாம் கண்விழித்தெழச் செய்கிறது. அவர்களின் புராதனமான உதிரதாகம் கனல்கொள்கிறது. அவர்களின் வரலாறு தகிக்கும் விழித்த கண்களுக்கு முன் அவர்கள் அறியாத புதிய உலகின் இளம்குருதி அலையடிக்கிறது. அதில் ஒரு மிடறு. ஒரு மிடறு அமுதம்.ஒரு மிடறு உயிர். ஒரு மிடறு வெறுப்பு. ஒருமிடறு பகை…

இருட்டிக்காரிக்கு ரத்தம் கொடுக்கவேண்டிய கடமை தெங்கும்மூட்டு வீட்டின் வாரிசுகளுக்குண்டு. நிலத்தில் விழுந்த நீர்த்துளியென அவர்கள் சிதறிப்பரந்து நெடுங்காலமாகிறது. திருவனந்தபுரம், நாகர்கோயில், பம்பாய், டெல்லி, அமெரிக்கா, துபாய் என உலகமெங்கிலுமிருந்து வருடத்திலொருநாள் சிலர் வந்துசேர்கிறார்கள். குடும்பங்கள் அறிமுகங்களை புதுப்பிக்கின்றன, மனத்தாங்கல்களையும் உரசிக்கொள்கின்றன. நீளக்குடுமி வைத்து தொப்பைமேல் அழுக்குப்பூணூல் நெளிய, இடுப்பில் செம்பட்டு சுற்றிய வைராகி கையில் பூஜைப்பொருட்களுடன் முன்னால் நடக்க சவரப்பச்சைக் கன்னங்களும் வெயில்படாது வெளுத்த குழைந்த வெற்றுத்தோள்களும் பழக்கமில்லா வேட்டிகளுமாக உயர்தர கைக்கடிகாரங்கள் பளபளக்க தங்கச்சங்கிலிகள் நரைமயிர்மார்புகளில் புரள மெல்ல பேசியபடி தெங்குமூட்டுவீட்டார் நடப்பார்கள். இருளில் எரிந்து நிற்கும் குரோதத்தைக் கண்டதுமே பேச்சு அவிந்து அவர்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்பார்கள்.

களபசெந்தூரப்பொடி குழைத்துப் பூசி, உறை பிளந்து கமுகப்பூக்குலை பிரித்துச் சாற்றி ,அரளிமலர்மாலை சூட்டி, தெச்சிமலர் குவித்து, சீவிய செவ்விளநீரும் உருளியில் ஆவி தயங்கும் மஞ்சள்ச்சோறும் அரிசிப்பொரியும் படைத்து, கொம்பூதி, ஒற்றைச்செண்டை கொட்டி, தாலமணி அடித்து ஆராசனை நடத்தும்போது மெல்லமெல்ல இரிட்டிக்காரியின் கண்கள் இரைமுன் நிற்கும் பெண் சிங்கத்தின் கண்களாக மாறுகின்றன. வைராகியின் உதடுகள் இறுகி, கழுத்து நரம்புகள் உடுக்குவார்களென முறுகி ,கால்கட்டைவிரலில் நடுக்கமேறி தொடைகள் துடித்து, தோள்கள் அதிர்ந்து, அடிவயிறு எக்கி ஒரு அலறலாக அவள் வெளிப்படுகிறாள். ”ய்ய்ய்யே…”

கோலுரசும் முழவின் உறுமலென குரல் ”வந்தீயளாலே எம் மக்கா…. ஏலே எனக்க காடு சவிட்ட வந்திய இல்லியாலே…? ஏலே… எங்கலே போவீய? ஏலே என்னைய விட்டுட்டு எங்கலே போவிய? விடமாட்டேம்பிலே… நானுண்டுலே இங்க… இருந்தகாளி நின்ன காளி நெறைஞ்ச காளி நானுண்டுலே இங்க…ஏலே எங்கலே போவீய? ஏலே மக்கா என்னைய விட்டுட்டு எங்கலே போவிய?…விடுவேனா…விடுவேனாலே…ம்ம்ம்?’ பாறைகள் உருளும் நகைப்பு. பின் பனையோலை மண்ணில் உரசுவதுபோல் சீறும் அழுகை” என்னைய கொண்ணு போட்டானுகளே…ஏலே என்னைய கொண்டு போட்டானுகளே…அறுகொலை செஞ்சானுகளே…எனக்கு அன்னமும் தண்ணியயும் இல்லியே…இந்தக் காட்டில எனக்கொரு நாதியில்லியே…” பின்னர் சொல்திரளாத ஏதோ காட்டுமொழியில் பெயர்களைச் சொல்லி கூவி அலறுகிறாள். ”மச்சீ, தாகீ, சூரீ, மாடா…”நெஞ்சுடைய ஓங்கி ஓங்கி அறைந்து கதறுகிறாள்.

எண்ணைபட்ட தீயென மீண்டும் குரோதம் எழுகிறது. ”ரெத்தம் கொண்டாலே…ஏலே சூடுரெத்தம் கொண்டாலே எனக்கு…என் சங்கு குளிர குருதி கொண்டாலே… என் சங்குத்தீ அணைய நிணம் கொண்டாலே…ஏலே….ய்ய்ய்யே…” துள்ளி துளி சுழன்று சட்டென்று கால்வாரப்பட்டதுபோல வைராகி தெறித்து விழுகிறார். அவரை தொட்டுத்தூக்க அஞ்சி , புல்லரித்து மயிர்ப்புள்ளிகல் பரவிய கழுத்தும் தோள்களுமாக குடும்பத்தவர் கைகட்டி நடுங்கி நிற்கிறார்கள். அவரே எச்சில்வழிய ஒருக்களித்து பின்பு மெல்ல எழுந்து அமர்ந்து செம்பு நிறைய ஓடைநீர் குடித்து இளைப்பாறுகிறார். தெங்குமூட்டாரின் உடைந்த கூரைமேல் காட்டுவள்ளிகள் படர்ந்தழிந்த பழைய வீட்டின் தெர்குப்புரையில் பூட்டிவைத்திருக்கபப்டும் துருப்பிடித்த பள்ளிவாள் மஞ்சள் துணியில் பொதிந்து அவரால் கொண்டுவரபப்ட்டு மாமரத்தடியில் காத்திருக்கும். அதை எடுத்து பிரித்து அம்மைமுன் வைத்து கிண்டி நீரில் தெச்சிமலர் தொட்டு வணங்கி அதன் மேல் இட்டு பூசைசெய்து எடுத்து கையிலேந்தி நிற்கிறார்

சென்றவருடம் குஞ்ஞன்பிள்ளை. இந்தவருடம் வேலப்பன் பிள்ளை வரட்டும். ஆனால் அவருக்கு சர்க்கரை நோய் உண்டல்லவா? அப்படிச்சொன்னால் முடியுமா? எல்லாருக்கும்தான் நோய்நொடிகள் இருக்கிறது. எல்லாருக்கும் பங்குள்ள விஷயமல்லவா? மேலும் இது ஒரு வாதைஒழித்தலும் கூட. அகம் நிறைந்து நொதித்துக் கிடக்கும் பலவற்றை அன்னை உறிஞ்சி எடுத்துவிடுவாள். குடும்பத்தில் உள்ள நோயும் நோவுகளும் நீங்கும். அம்மைக்கு அர்ப்பித்தபின் உடலில் ஒரு புதிய வலிமை ஏறும்.எடைகுறைந்ததுபோல் உணர்வீர்கள். வாருங்கள். தன் தாய்தந்தை மூத்தாரிடமிருந்து யாரால் தப்பிச் செல்லமுடியும். பாவபுண்ணியங்கள் இரண்டும் தந்தைதாய்வழிச் சொத்துக்கள் அல்லவா? வேலப்பன்பிள்ளை சார் வரட்டும்…வாருங்கள் சார்…என்ன பயம்…

வேலப்பன்பிள்ளை மெல்ல முன்வந்து நடுங்கும் வலதுகையை நீட்டுகிறார். வாட்சை கழற்றுங்கள். பயப்படவேண்டாம். வேறுபக்கம் பார்த்து நில்லுங்கள். எத்தனைமுறை ஆஸ்பத்திரியில் ஊசி போட்டிருப்பீர்கள். வாள் விரலை நெருங்குவதை முகம் திருப்பியிருக்கும் நிலையிலேயே அவர் உணர்கிறார். சட்டென்று அவர் கை பின்னுக்கிழுக்கமுயல்கையில் இருவர் அவரை பிடிக்கிறார்கள். வெட்டியாகிவிட்டதா…ஆமாம். ரத்தம் சொட்டுகிறது. அவரது விரலை இறுகப்பற்றி வைராகி அவரை கொண்டுசென்று இரிட்டிக்காரியின் பீடத்தின் மேல் ஊமைக்கல்லில் அந்த நாளுக்கென களபத்தால் வரைந்த செக்கச்சிவந்த வாயில் சொட்டுகிறார். உள்ளிருந்து தழல்நுனிபோல் நாக்கு ஒன்று வந்து நக்கிச்சென்றதா என்ன? ஒரு பெரிய ரணம் அந்த வாய். எரிந்தெரிந்து காத்திருக்கும் வாய். மனித உடலில் வாய் என்பது ஒருபோதும் ஆறாத ஒரு ரணமல்லவா?

[ 2 ]

”நீக்கம்பு நக்கி நாசமாட்டு போறதுக்கு, இஞ்சயுள்ள ஏக்கிமாரு குடிச்ச ரெத்தம் போராதுண்ணுல்லா எனக்க அப்போ, இந்நா மாப்பிள்ளமாரு அவனுகளுக்க ஏக்கிய கொண்டுவந்து வச்சிருக்கானுக…. ஒண்ணும் காணாம கேக்காம எனக்க கண்ணடஞ்சாபோரும் எனக்க கோரோயில் முருகா…”என்றாள் கோலம்மை ஆசாரிச்சி அகப்பை விற்க வந்தபோது. ”இம்பிடு கஞ்சிவெள்ளத்தில நாலுமுத்து உப்பிட்டு கொண்டுவரணும் அம்மிணியே. சங்கடச்சுல்லாபோச்சு…மேலேத்தேரி கேறும்பம் இந்நா எனக்க சூத்திலோட சீவன் போச்சுண்ணாக்கும் நெனைச்சேன்…”

யட்சிவிளையாட்டம் போலத்தான் ரப்பர் எங்களூரில் பரந்து படர்ந்தது. யாரும் சீண்டாமல் பிறுத்தி படர்ந்து கிடந்த மலைப்பொற்றைகளை எல்லாம் மாப்பிள்ளைமார் பத்மநாபனின் புத்தன் சக்கரத்தை எண்ணிக்கொடுத்து வாங்கினார்கள்.பாண்டிநாட்டிலிருந்து வேலையாட்களைக் கொண்டுவந்து குடில்கட்டி தங்கவைத்து காடும்புதரும் வெட்டி நீக்கி குழி தோண்டி ரப்பர் நட்டார்கள் தளிரெழும் ரப்பர் யட்சி பெற்ற குழந்தைபோல அழகானதுதான். காட்டுக்குள் மரத்தடிகளில் குடியிருந்த யட்சிகள், நீலிகள், போத்திகள், மாடன்கள், வாதைகள் எல்லாரும் பெயர்த்தெடுக்கப்பட்டு பீடத்தோடு கொண்டுவந்து முச்சந்திகளில் குவிக்கப்பட்டார்கள். திர்ப்பரப்பில் கதகளி கண்டு திரும்பும்போது நெஞ்சிடிப்பை காதில் கேட்கவைத்த அயனிக்கரை யட்சி சுக்கான் ராவுத்தரின் சாயாக்கடையருகே சரிந்துகிடப்பதைக் கண்டேன். ”ராவுத்தன்மாருக்கு ஊதிக்கெட்டு உண்டுல்லா…யச்சி தொடமாட்டா…”. அவரது கடையில் முகமெல்லாம் அம்மைத்தழும்புடன் மாவாட்டும் தடித்தபெண் அயனிக்கரை யட்சிதான் என்றான் ராதாகிருஷ்ணன். அவளுடைய நட்டுச்சியில் ஆணியடித்த தடத்தை அம்மிணியம்மா கண்டாளாம். நான் அவளை ஓரக்கண்ணால் பார்த்து ”ஒரு பருப்பு வட”என்றேன். மாவாட்டுகையில் முலைமேடுகளில் கரிய சுழிகள் எழுந்தன.

ரப்பர் தழைத்தபோது கிராமமே இருண்டது. பறவைச்சத்தம் குறைந்தது.பின்னர் பச்சைப்படப்புமேல் காற்று பெருகிச்செல்லும் இரைச்சலாக ஆயிற்று கிராமத்தின் ஒலி. இருண்ட இரவின் ஆழத்தில் ஊரைமூழ்கடிக்க மலையிறங்கிவரும் பேரருவி ஒன்றின் ஒலியெனக் கேட்டது அது. மண்ணுக்கு அடியில் ரப்பர்வேர்களின் வலை மெல்லமெல்ல நான்குபக்கமும் விரிந்தது. யாருமறியாமல் அது மாமரங்கள் பலாமரங்களின் உதிரத்தை உறிஞ்சிக்குடித்தது. அவை நின்ற இடத்தில் வெளிறி இலைகுறைந்து சோர்ந்தன. பக்கக் கிளை காய்ந்து அடுப்பட்டை காய்ந்து பட்டு நின்றன. சாணிக்குழியில் உரம் அள்ளும்போது குழியின் விளிம்புகளெங்கும் வெண்ணிற மண்புழுக்களின் குவியல்கள் போல முட்டிமோதி இறங்கியிருக்கும் ரப்பர்வேர்களைக் கண்டோம். அடுக்களைப்புறத்து அம்மியை சற்றே விலக்கியபோது அடியில் ரப்பர் வேர்களின் நரம்புப் பின்னல் நெளிந்தது. தோட்டத்தில் பசு இட்ட சாணிக்குள் மூன்றாம் நாள் முழுக்க ரப்பர்வேர்கள். ”இக்கணக்கில போனா இந்த ரப்பர் பசுவுக்க சூத்தில கேறி உள்ள இருக்கப்பட்ட சாணியயும் திண்ணுபோடுமே மக்கா” என்றார் நாராயணன் அண்ணன்.

”அந்த வளிக்கு நல்லதுண்ணு வைடே…பண்டு இந்தக் காடு முழுக்க நிண்ண எடம் நெறைச்சு யச்சியும் வாதையுமாக்குமே. இப்பம் எல்லாம் போச்சு ஒத்த ஒரு யச்சிமட்டும் எண்ணாச்சு…இனி அதப்பத்தி கவலபப்ட்டாப்போருமே…” மலைக்கெழங்கு மாதவன் அண்ணன் சொன்னார். முன்பு மலைக்குப்போய் மரச்சீனிக்கிழங்கு வாங்கி சைக்கிளில் கொண்டுவந்து ஊர்தோறும் விற்கும் வேலை செய்திருந்தார். மலைக்கிழங்குக்கு மலைத்தெய்வங்களின் ருசி உண்டு. மலைச்சுனைகளில் ஊறிய ருசி. மதியத்துக்கு முன் கிழங்குடன் வரவேண்டுமென்றால் பின்னிரவில் மலையேறவேண்டும். பத்து வருடம் முன்பு மாதவண்ணன் களியல் ஏற்றமேறும்போது சாலையோரத்து வாகைமரத்தடியில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். குலஸ்த்ரீ என தோற்றம். ஆனால் அச்சமில்லாமல் அக்காட்டுபபதையில் நிற்பவள் யட்சியன்றி வேரு யார்? அண்ணனின் அகம் நடுங்கியது

என்றாலும் மெல்ல நெருங்கிச் சென்றார். அவளுடைய கால்கள் மண்ணில் ஊன்றித்தான் இருந்தன. அருகே ஓடிய சிற்றாறில் நீராடி ஈரத்துடன் ஏறி அமர்ந்திருந்தாள். விரித்த கருங்கூந்தல் பின்பக்கம் நீர்சொட்டிக் கொண்டிருந்தது. மார்பின் நேரியதுகட்டுக்குள் நிறைந்து பிதுங்கிய முலைகள். பலாத்தடி கடைந்து செய்தது போல மஞ்சள் மினுங்கும் விரிந்த தோள்கள்.அண்ணன் இடையில் கட்டிய மந்திரத்தாயத்தை தொட்டு மண்டைக்காட்டம்மையை மனதில் கும்பிட்டு இடையிலிருந்து சூரிக்கத்தி எடுத்து விரித்து சைக்கிளின் பலத்தில் மெல்ல மெல்ல அவளை நெருங்கினார். அவள் அவரை கவனிக்கவேயில்லை. அப்படியே அவர் கடந்துசென்றிருக்க முடியும். ஆனால் அவள் பின்னால் வந்தால் என்ன செய்வது?

அண்ணன் மெல்ல கனைத்து அவளிடம் ”யாரு?”என்றார். அவள் திரும்பிப்பார்த்து எந்த தொடர்பும் இல்லாமல் ஏதோ சொன்னாள். ”யாரு நீ? ஏன் இங்க இருக்கே? இந்நேரத்துல?” அதற்கும் பொருளில்லா பதில். கண்கள் நிலைபதற பலவிதமான முகபாவனைகள். அண்ணன் தன் சூரிக்கத்தியை நீட்டி அவள் உடலை மெல்ல தொட்டார். அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியானால் யட்சி இல்லை. மெதுவாக அள் உடலைத்தொட்டார். அப்போதும் அவளுக்கு எந்த மாறுபாடும் இல்லை. மீன்போல் குளிர்ந்த விரல். நீராடிய ஈரம். அண்ணனுக்கு விஷயம் மெல்ல தெளிந்தது, அவள் சித்த சுவாதீனமில்லாத பெண். ஏதோ நல்ல வீட்டுப்பெண், கட்டறுத்து வந்துவிட்டிருக்கிறாள்.

அவளிடம் நைச்சியமாக பேசி அவள் வீடிருக்கும் இடமும் குடிப்பெயரும் கேட்க முயன்றார். அவளால் எதையுமே சொல்ல முடியவில்லை. மீண்டும் மீண்டும் விட்டெங்கே என்று கேட்டபோது கிழக்காக கைநீட்டி அங்கே என்றாள். ”சரி வா…நான் உன்னைய வீட்டில கொண்டு போய் விடுகேன்” என்று சொல்லி கைப்பிடித்து இழுத்தும் மெல்ல உந்தியும் நடக்க வைத்தார். அவள் புத்திநிலைக்காத குழந்தைபோலிருந்தாள். சட்டென்று ஒரு இலையை பறிக்க திரும்புவாள், ஒரு பூவை நோக்கி ஓடி மலைச்சரிவிலிறங்குவாள். காற்றடித்தால் இருகைகளையும் விரிப்பாள். உருண்ட முலைகள் நடக்கும்போது மாவிலைச்சுட்டிப் புடவைக்குள் குலுங்கின. இறுகிய தொடைகள் குதிரைச்சதைபோல அசைந்து அதிர்ந்தன. அண்ணன் மெதுவாக காமவயப்பட்டார். பின்னர் அவளிலிருந்து கண்களை விலக்கவே அவரால் முடியவில்லை.

ஆனைக்குன்று ஏறி மறுபக்கம் மலைச்சரிவில் இறங்கும்போது அவள் கைநீட்டிச் சொன்னாள்,அங்குதான் தன் வீடு என்று. காமம் உரசும் கனத்த கார்வை கொண்ட இனிய குரல். அக்குரலையே கட்டிப்பிடித்து முத்தமிடத்தோன்றியது. சுட்டிய விரலில் முத்தமிடத்தோன்றியது. அவள் மிதித்துச் செல்ல குழிந்த மண்ணில் முத்தமிடத்தோன்றியது. எங்கே செல்கிறோமென்ற சிந்தனையே இல்லை. அக்காட்டில் எங்கும் வீடுகள் இல்லையே என்ற எண்ணமே இல்லை. குன்றிறங்கும்போது இலவங்காய் உலர்ந்து வெடித்த பஞ்சுபோல மெல்ல மிகமெல்ல காற்றில் தவழ்ந்திறங்குவதாகப் பட்டது.

பன்றிமுக்கு திரும்பியபோதுதான் கண் நிறைத்து, திசை தழுவி, நிலம் மூடி, வானம் ததும்பி, பரந்துகிடந்த காடு தென்பட்டது. நிலவில் காடு என்பது கடவுளின் பித்து. தாழம்பூவின் மணம். நறுமணங்களுக்கே ஒரு தன்மை உண்டு, மெல்லிதாகும்தோறும் அவற்றின் வலிமை அதிகரிக்கிறது. தொலைவிலாகும்தோறும் இசையில் கனவு கலப்பதுபோல. காடு அசைவற்றிருந்தது. தூங்கவில்லை, கனவுகண்டுகொண்டிருந்தது. சட்டென்று அண்ணன் அவரது பாட்டனின் சொற்களை நினைவுகூர்ந்தார். ”மனுசன்ண்ணாக்க ஒரு செறிய ஜீவியாக்குமெடே மக்கா.. பெரிய ஒண்னையும் அவனால தின்ன முடியாது பாத்துக்கோ” அன்றுதான் அதன் பொருள் கைக்குச் சிக்கியது. தொண்டையில் தூண்டில்முள் மாட்டியாயிற்று. ஆனாலும் உதறி விடுபட முடிந்தது பாட்டன் செய்த புண்ணியம். மனதை வல்லமையாக மாற்றி கால்களை திருப்பி மெல்ல பின்னால் நகர்ந்தார். அப்போது அவளுடைய முகம் மாறியது. காற்றுபட்ட தீ போல எரியும் கண்களுடன் அவள் ”எந்தா?”என்றாள். ”நான் போறேன்…நான் பாவமாக்கும்”என்றார் அண்ணன்.

‘எந்தினு பயக்குந்நு?” என்று அவள் கேட்டபோது உதடுகளில் மழலைச்சிரிப்பு. ஆனால் அண்ணன் அவள் கால்களை குனிந்து நோக்கினார். எருமைக்குளம்புகள் கொண்ட பாதங்கள். கனவிலென இரும்புக்குண்டுகளாக கனத்த கால்களுடன் மூச்சுவாங்க ஓடி ஓடி ஓடி பாதைக்குவந்து குப்புறவிழுந்து மயக்கமானார். மறுநாள் புல்லரியச்செல்லும் பெண்களால் கண்டெடுக்கப்பட்டார். இரண்டுசெந்நாய்கள் சற்று அப்பால் புதருக்குள் இருந்தன, மரணம் காத்து. இருபத்தைந்துநாள் காய்ச்சலடித்தது. எழுந்தபோது இடுப்பு தளர்ந்து கிடந்தது. ”நீ சுகுருதம் உள்ளவனாக்குமெடே மாதவா…எனக்க சீவிதத்திலே மாட்டுயச்சிக்க பிடி தப்பி வந்த ஒருத்தன நான் கண்டதில்ல…பண்டெல்லாம் மாசம் மூணு சவமுல்லா விளும்..அங்கிண குழிச்சு மூடிட்டு வந்துபோடுவோம்…”என்றார் அச்சுதனாசான்

”அவனுக்க சுகுருதம் மூப்பிலான்மாருக்க சொல்லிலயாக்கும்…”என்றார் போத்தி. ”காமமும் அகங்காரமும் ஆக்கும் யட்சிமாருக்க தூண்டிலிலே சாடிப்போய் கொத்துதது…” வெற்றிலையை துப்பியபின் ” ஒண்ணு சிந்திச்சா தல தெளியும். இந்த அழகூண்ணு சொல்லுகதே ஒரு பொறியாக்கும் கேட்டையா? அழகுக்க உள்ள என்னமோ இருக்குலே மக்கா. அது மனுச ஜீவிக்கு எண்ணைக்குமே மனசிலாவக்கூடிய காரியம் இல்ல… அழகுக்கு உள்ள ஒரு விளி இருக்குல்லா அது என்னத்துக்க விளியாக்கும்லே? சொல்லப்போனா இங்க வா வாண்ணுள்ள அந்த விளியையாக்கும் நாம் அழகுண்ணு சொல்லுகது… மீனைக்கேட்டா தூண்டில்புழுவாக்கும் அழகுண்ணு சொல்லும்ணு நெனைக்கேன். லே மக்கா, மாதவா, பத்தாளை முக்கிக் கொண்ண ஆழமுள்ள கொளத்துக்கு அப்பிடி ஒரு அழகுக்க விளி உண்டு கண்டிருக்கியாலே? ஆழமுள்ள மலைப்பள்ளத்துக்கு அந்தமாதிரி ஒரு விளி உண்டு. ஞாறலிக்காய் கண்டிருக்கியா, என்ன அழகு. எடுத்து வாயில வைச்சா அப்பம் கத தீந்துது. நல்லபாம்புக்கு இல்லாத அழகாடே? முன்ன நம்ம செறயன்வீட்டில தீப்பிடிச்சப்ப வலியநாயரு நிண்ணு பாத்து ரசிச்சு சிரிக்காரு. ‘தீ கண்டோ போற்றி? எந்து ஒரு அழகாணு அல்லே? பொன்னாணே, பொன்னு!’ ண்ணு சொல்லி சொல்லி டான்சு களிக்காரு. தல மறிஞ்சு போச்சு. பிறவு நேரே ஆவல்ல…அதுகொண்டாக்கும் நம்ம பாட்டன்மாரு அழகுள்ள எதைக் கண்டாலும் நேரா கொண்டுவந்து தெய்வத்துக்க காலில வச்சு கும்பிட்டுட்டு போனாங்க. அது தெய்வத்துக்கு நாம சொல்லுத ஒரு பதிலாக்கும் கேட்டையா? அந்த சோலியே நம்ம கிட்ட வேண்டாம், சாதனத்த நீயே வச்சுக்கோண்ணு சொல்லுகது மாதிரி. பின்ன என்ன மயித்துக்குடே மார்த்தாண்ட வர்மா மகாராஜாவு முத்தும் மணியும் கொண்டுவந்து ஆதிகேசவனுக்கு படைச்சாரு? தலை உண்டானா போராது, சிந்திச்சுப் பாக்கணும்…”

தெங்குமூட்டு வீட்டைச்சுற்றி இருட்டெல்லாம் யட்சிகள் நின்றிருப்பார்கள் என்றார் போற்றி. கொஞ்சநாள் பூட்டியிட்டிருக்கும் அறையை திறந்தால் உள்ளே தூசும் ஒட்டடையும் மணப்பதன் ஊடாக செண்பகப்பூவின் வாசனையும் இருக்கும். கொஞ்சநேரம் அந்த மணத்தை உள்ளிழுத்து நின்றுவிட்டால் அது அழுகிய சதையின் அல்லது புழுத்த மலத்தின் நாற்றமாக மாறும். இருட்டுக்குள் கண்களின் மினுக்கம் தெரியும். அவற்றில் குரோதம் விறகிலாதெரியும் நெருப்பு போல உடலிலாது மின்னுவதைக் காணலாம். அக்கண்களைக் கண்டு நின்றால் கண்களைச்சுற்றி ஒரு உடல்வரிவடிவம் உருவாகிவரும். அதைக் கண்டபலரும் சித்தமிழந்து விட்டிருக்கிறார்கள். ஆகவே எல்லா கதவுகளிலும் மணி கட்டியிருபபர்கள். மும்முறை அதை ஒலித்தபின்னரே எக்கதவையும் திறப்பார்கள். தெங்கும்மூட்டுவீட்டில் சந்ததிகள் தொடர்ந்து செத்துக் கொண்டிருந்தார்கள். வெளிறி உதிரமிழந்து கண்கள் மீன்விழிகள் போல விரைத்து குழந்தைகள் காலையில் படுக்கைகளில் கிடந்தன. துட்டி குளிப்பாட்டும்போது மூட்டிப்பிடித்த சிறு கைகளுக்குள் இருந்து அம்பட்டத்தி காயாத புதிய செண்பக மலர்களை எடுத்துபோட்டபோது கதறியபடி பெண்கள் எழுந்தோடி விழுந்தனர். குனிந்த உடல் மேல் முன்நெற்றி புடைத்த கனத்த பெரிய தலைகளும், பிதுங்கிய கண்களும், மன்னிப்பு கோரி மார்போடு சேர்த்து வணங்கிய கைகளுமாக சாபிள்ளைகள் உதிரமற்ற கருநீர் வழியாக வழுக்கிறங்கி பாளையில் விழுந்து கிடந்தன. அவற்றின் உடலை கிள்ளிப்பார்த்த வயற்றாட்டி அவை மாவுப்பொம்மைகள் போல குருதியிலாதிருந்தன என்றாள்

தெங்குமூட்டுவீட்டில் தினமும் மந்திரவாதம்தான். வடக்கன் நம்பூதிரிகள், தெற்கு மலைக்காணிகள், கிழக்கன் தமிழ் மந்ந்திரவாதிகள் என வந்தபடியே இருந்தார்கள். பூஜைகள் பலிகள் நோன்புகள். பெரிய எஜமானன் குளிப்பதற்காக இளங்காலை இருளில் இல்லக்குளத்திற்குச் சென்றவர் குளித்து கல்படி ஏறி வரும்வழியில் எதையோ கண்டு அஞ்சி ஓடிவந்து குப்புற விழுந்து இறந்துகிடந்தார். அவரை புரட்டிப்போட்டபோது தன் முழங்கையையே அவர் கடித்து இறுக்கி சதைபிய்ந்து வாய்க்குள் நிறைந்திருக்கக் கண்டார்கள். அதன் பின் வீட்டை பூட்டிவிட்டு வாரிசுகள் குழித்துறையில் குடியேறினார்கள். அங்கிருந்து பாறசாலைக்கும் திருவனந்தபுரத்துக்கும் சென்றார்கள். வீடு இருண்டு அமைதி கொண்டது. அமைதி கொண்டவீடு மட்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள். அதன் மீது கொடிகள் படந்தன. சருகுகள் பெய்து மூடின.

பிறகு நாகர்கோயிலில் கூடிய வாரிசுகள் பேசி சொத்துக்களை பங்கிட்டுக் கொண்டார்கள். எட்டுபேருக்கு பொதுவான சொத்தாக வந்தது குடும்பவீடும் இருபதேக்கர் நிலமும். குஞ்šமாத்தன் முதலாளி அனைவரையும் இரு கார்களிலாக ஏற்றி அருமனை பதிவாளர் அலுவலகத்துக்குக் கொண்டுசென்று ஆதாரம் எழுதி கைச்சாத்திட்டு சொத்தை வாங்கினார். மா,பலா,நுணா,கோங்கு,அயனி,மஞ்சணம், இலந்தை,நாவல் என கொழித்திருந்த தோட்டத்தை வெட்டி வெளிச்சமாக்கி குழி எடுத்து ரப்பர் நட்டார்.வீடும் தெற்குமூலை பகவதி கோவிலும் மட்டும் குடும்பசொத்தாக எஞ்சின. நூற்றாண்டு எரு கலந்த மண்ணில் ரப்பர் அடர்ந்து சூழ்ந்தது. அதன் வேர்கள் வீட்டுக்குள் நுழைந்து உள்ளறைகளில் எங்கும் பரவிப்பின்னி உறிஞ்சின. சுவர்கள் வெடித்துச் சரிந்து கூரை குடைசாய்ந்து கொம்பு நிலத்தில் குத்தி விழும் காட்டானைபோல வீடு விழுந்தது. கூடு மிஞ்சி மழையில் நனைந்து காளான்பூத்தது. பின் மெல்லமெல்ல வெட்டுகல்லால் ஆன சுவர்களும் கருங்கல் அஸ்திவாரமுமாக எஞ்சியது.

நான் முதன்முறையாகப் பார்க்கும்போது ரப்பர் இலைதழைத்த பருவம். சருகுக்குவியல்கள் மட்கும் மேட்டுக்குள் வீட்டின் கற்குவியல்கள் பரவியிருந்தன. இலைகளை ஊடுருவி வந்த இளவெயிலுக்கும் பச்சை நிறமிருந்தது. சரிந்துகிடந்த தீபலட்சுமியின் உடைந்த சிலைமேல் இருந்த பச்சோந்தி சாம்பல்நிற பிடரிச் செதில்களை விரித்து வாயைத்திறந்து அந்த சூழலை விழுங்கி உடலுக்குள் நிறைத்துக் கொண்டிருந்தது. அதன் தலை கல் நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறியது. வாலில் நுனி மட்டும் கல்நிறமாக எஞ்சி எழுந்து விரைத்து ஆடியது. என் காலடியோசையில் திடுக்கிட்டு சருகுமேல் ஓடிப் பாய்ந்து ரப்பரிலை மேல் அமர்ந்து இன்னுமிருமுறை தலையாட்டியபோது வாலும் பச்சை நிறமாக ஆயிற்று

[3]

முன்பெல்லாம் வீடுகள் இருண்டிருக்கும். திண்ணைகளிலேயே தளிரிருள் துடிக்கும். முற்றத்தில் நின்று பார்த்தால் வீட்டுகளின் அகம் நிழல் பரவிக்குடக்கும் குளிர்ந்த காட்டுப்பொய்கைபோலிருக்கும். உள்ளே அசைவுகள், உடையொளிர்வுகள், சுவரில் நிழல்கள், மெல்லிய குரல்கள். ‘அக்கா!” என்றோ ”மாமீ” என்றோ அழைத்து காத்து நின்றால் நீராழத்திலிருந்து சிறகசையாமல் எழுந்துவரும் ஒற்றைப்பரல்மீன்போல ஒரு வெண்ணிற வேட்டி தோன்றி நெருங்கிவரும்போது முகம் தெரியும். பெரும்பாலும் நடுவயது மாமிகள். ஒரு அசையாத கனவிலிருந்து உசுப்பப்பட்டமையின் எரிச்சல் தெரியும் முகபாவனை. உள்ளே இருட்டு கூழ்போல தேங்கிய சிறு சிறு அறைகளுக்குள் கண்கள் ஒளிரும் அக்காக்கள். தேன்கூட்டின் அறுகோண அறைகளுக்குள் இருக்கும் சிறகுமுளைக்காத தேனீக்குஞ்சுகள் போல. அன்னியக்குரல் என்றால் அத்தனை தலைகளும் விரல்தொட்ட குளத்துப் பரல்குஞ்சுகள் போல நொடியில் மறையும். பின்னர் தடாகமெங்கும் இமைக்காத கண்களாகும். தடாகமே ஒரு பதைக்கும் விழியாகும்.

முற்றத்துவெயில் முகத்தில் விழாமல் வளர்பவர்கள் குடிப்பெண்டிர். வெளிச்சத்தில் அவர்களுக்கு கண்கள் கூசும். இமைசரித்து தலைகுனிந்து நிலம்நோக்கி நடப்பார்கள். சூழலின் ஒலியையெல்லாம் அதிர்வாக வாங்கும் தவுலின் தோல்பரப்புபோல அவர்களின் சருமம் சிலிர்த்து அதிரும். பதற்றம் கழுத்துக்குழியில் பறவைநெஞ்சுபோல துடிக்கும். யார் எது கேட்டாலும் மூச்சுதிணறி உடல் குழையும். சொற்களெல்லாம் உள்ளே செறிந்த கற்பாறைகளில் முட்டி மோதி நுரை மட்டும் வெளியே வரும். அவர்கள் மிரண்டபசுபோல காலெடுத்துவைத்து கோயிலுக்கு பிரதோஷம் தொழுவதற்குச் செல்லும்போது இருபக்கமும் நிறையும் கண்கள் நடுவே முலைகளையும் தொடைகளையும் கனத்துச் சுமந்துசெல்வார்கள்.

ஆனால் அறையிருளில் அவர்களுக்கு மெல்லமெல்ல வல்லமை அதிகரிக்கிறது. குரல்களுக்கு வெப்பமும் கண்களில் கூர்மையும் உருவாகிறது.வேலைக்காரி செல்லம்மையை தண்டிப்பதற்காக தலைமுடியை பற்றி இழுத்துச்செல்லும் பங்கஜாட்சி அத்தையைக் கண்டு நான் கால்சட்டையில் சிறுநீர் கழித்திருக்கிறேன். ஏதோ பூசலில் தாட்சாயணிமாமிக்குப் பதில் சொல்ல கலைந்து சரிந்த நீள்கருங்குழலும், விழித்த கண்களும், சீறும் பற்களுமாக அறையிலிருந்து அங்கணத்துக்கு வந்த லட்சுமியக்காவின் கண்கள் என் கனவில் வருவதுண்டு. அவர்களின் வலிமையே இருட்டில்தான். இருள் அடரும்தோறும் அவர்கள் வெல்லமுடியாதவர்களாக ஆகிறார்கள். நீரில் முதலைகள் போல அங்கே அவர்களுக்கு கண்ணுக்குத்தெரியாத நூறுகைகள் முளைக்கின்றன. வீட்டிருளிலிருந்து வெறிமூத்து அவர்கள் காட்டிருளுக்குச் சென்றுவிடுவதுமுண்டு. காட்டுக்குள் எப்போதும் இருள். நூற்றாண்டுகள் யுகங்கள் பழமையுள்ள இருள். அங்கே ஒளியென்பதே இருட்டு உண்டுமகிழ்வதற்கான இளம்பச்சை நிறமுள்ள உணவுமட்டும்தான்.

லட்சுமியக்காவின் இரு கணவர்கள் விட்டுப்போனார்கள். கடைசிவரை இருந்தவர் மூன்றாவது கணவனான கேசவன் போற்றி. வயோதிகர். ”கெளவனுக்கு மந்திரம் தெரியும்லே அண்ணா…இல்லாம அடங்குமா யட்சி?” என்றார் நாராயணன் அண்ணன். இரண்டாவது கணவரான பாறசாலையைச்சேர்ந்த திவாகரண்ணன் எட்டுமாதம் வட்டுமே இருந்தார். அங்கேஅவருக்கு நிலங்களும் ஒரு கடையும் இருந்தது. வந்துபோனவர் வருகை குறைந்து முற்றிலும் நிறுத்திக் கொண்டார். ஆள்தேடிச் சென்றால் பணம் கொடுத்து, சோப்பு பவுடர் துணிகள் என வாங்கித்தந்து இதோ வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுவார். கடைசியாகப் பார்த்துவந்த கோலம்மை சொன்னாள் ”அது இனி பாக்காண்டாம் அம்மிணியே…அந்த ஜீவன் ரெச்சப்பட்டு போச்சு…பாவம் பய்யனில்லா..விடுங்க…சூடுள்ள வல்லதும் உண்டா கும்பி நனைக்கியதுக்கு?” குளப்படியில் பேச்சை நான் கவனித்தேன். ”ஒராள் ரெண்டாளாவுததும் ரெண்டாள் நாலாளாவுததும் கண்டா ஆருடே நிமுந்து நிப்பான்…ஆணுக்கு ஒரு கணக்குண்டுடே…” புரியாத சிரிப்புகள் குறிப்பேச்சுகள். ”பூநாகத்துக்க வெசமிருக்கே அது அஞ்சு ராஜநாகத்துக்க வெசத்துக்குச் சமானமாக்கும் பாத்துக்கோ…”

நாகம் எப்போதும் தாழைமரப் படர்ப்புக்குள்தான் முட்டையிடும் என்பார்கள். அங்குதான் எப்போதும் ஈரமுலராத சதுப்பும் தாழைமடல்சருகுகுவிந்த செத்தைகளின் மெதுப்பும் இருக்கும்.சின்னஞ்சிறு சோழிமுத்துக்கள் போன்ற முட்டைகள் விரியும்போது உளுந்துப்பப்படத்தை தேங்காயெண்ணையில் பொரிக்கும் வாசனை வரும். விரியன் என்றால் வசூரி முத்துக்கள் உடைந்து சீழ் வரும் வாசனை. கருக்குழந்தையின் கைவிரல்கள் போன்ற நாகக்குஞ்சுகள் துடித்து நெளிந்து சதுப்புச்செத்தைகளுக்குள் ஒளிந்துகொள்ளும். அங்கே பெருகிவளரும் புழுக்களையும் மின்மினிகளையும் உண்டு வளரும். வளரும் அவசரத்தில் அவை உறங்குவதேயில்லை. இரண்டுவாரங்களில் அவை நீண்டு தடித்து பெரிய சர்ப்பங்களாக ஆகி தங்கள் பாதைகளை தாங்களே கண்டுகொள்கின்றன. பசியே நாக்காகி நெளிவதுபோன்ற சர்ப்பக்குஞ்சுகளுக்கு எப்போதும் கோபம். தீண்டுமெதையும் அக்கணமே அவை கொத்தும். கொத்தப்பட்ட உயிருக்குப் பின்னர் நேரமில்லை. யாரும் மிதித்து அரைத்துவிடக்கூடிய புழுக்களானதனால்தான் இந்த விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது போலும். பாக்டீரியாக்களுக்கு இன்னும் விஷம். வைரஸ¤க்கு மேலும் பலமடங்கு விஷம்.

தாழம்பூவின் மணமென்பது சர்ப்பக்குஞ்சுகளின் மணமும்கூட என்று பாட்டி சொல்வாள். தாழம்பூ விடிகாலையிலேயே விரியும் . பின்னிரவில் தாழம்பூ மணம் குளிர்காற்றிலேறி வந்தால் ”சிவ சிவ” என்று அவள் செவிமூடுவாள். ”ஒருத்தனுக்க கணக்கு எழுதியாச்சு…போகட்டும்..அவனுக்கு கைலாசம்…” ஒரு பாம்பு போட்ட முட்டைகள் பொரித்துவரும் சர்ப்பங்களில் ஒன்று ஒருவரை பலிகொள்ளும் என்பது நம்பிக்கை. பாம்பு தீண்டி செத்தவன் அரன் உறையும் கைலாசமேகுவான் என்றும். முட்டையிலிருந்து எழும் சர்ப்பக்குஞ்சுகள் சின்னஞ்சிறு தீச்சுவாலைகள் போல நெளிந்து நெளிந்து இலையடிகள் தேடி ஓடும். தாழம்பூ மணம் அவற்றுக்கு பித்தேற்றுகிறது. ஆனால் அவற்றால் அதிக உயரத்துக்கு ஏற முடியாது. ஆனால் முடியாதவற்றைச் செய்யும் ஒருவன் எங்குமிருப்பான். அவன் ஏறி விரியாத தாழம்பூக்குலைக்குள் இடம் பிடிப்பான். ஒவ்வொரு இதழ் விரிகையிலும் பொன்னிற தோணி போன்ற அம்மடலின் விரிந்த அடிநுனியில் செம்பரத்தி அரும்புபோன்ற சிறு செந்தலையை நீட்டி, செந்நரம்பு நாக்கு தீப்பொறியென பறக்க காத்திருப்பான். கருவறைக்குள் மீண்டும் நுழைந்தவன். அதனால் மூன்றுமடங்கு விஷமேறியவன். நறுமணத்தில் மயங்கி முடிவிலாத கனவே இருப்பாக ஆனவன். அவனுக்கு யானையைக் கொல்லும் விஷம் உண்டு- பாட்டி சொன்னாள். அவனுடைய ஆனந்தநித்திரை கலைந்தால் பின்னர் அவன் காடெரிக்கும் நெருப்பின் முதல் துளி போல. உதிரம் கொள்ள சீறிவரும் யட்சியின் நாநுனி போல.

தெங்குமூட்டுவிட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்கு போன ஸ்ரீகண்டன் பிள்ளையும் அவரது மூத்தமகளும் மட்டும் இருபத்துமூன்று வருடம் கழித்து மீண்டும் ஊருக்கே திரும்பிவந்து நாகர்கோயிலுக்கு இடம்பெயர்ந்த நேசமாணிக்கம் பெருவட்டரின் பெரிய வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்கள்.வீட்டைச்சுற்றி தலைக்குமேல் உயர்ந்து நிற்கும் பெருங்கல்மதில். இரும்பு வாசல்கதவு. உள்ளே நான்கு பெரிய சீமைநாய்கள். அவற்றின் நாக்கு வெளியே நீண்டு மழைக்கால வாழையிலை போல நீர் சொட்டியது. நடக்கும்போது அவற்றின் குறிகள் இருபக்கமும் அசைந்து குலுங்கின. அவற்றின் கண்களில் உள்ள மிருகத்தை எங்களூர் நாய்களில் காணமுடியாது. எங்கள் நாய்களெல்லாம் இதோ பேசப்போகின்றன, எல்லாவற்றையும் சொல்லிப்புலம்பப்போகின்றன என்ற பாவனையிலேயே எப்போதும் இருக்கும். ”அது சிங்கத்துக்க வித்தெடுத்து உண்டாக்கின நாயாக்குமே”என்றார் நாராயணன் அண்ணன்.

ஸ்ரீகண்டன்பிள்ளை ஏதோபெரிய வேலையில் இருந்து ஓய்வுபெற்றவர். யாருடனும் அவர் பேசுவதில்லை. அவருடன் நட்புகொள்ள விழைந்துசென்ற ஊர்பெரியவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தி அப்பால் நின்றுபேசி அனுப்பிவிட்டார்.”அவனுக்கு அந்த நாயிகள் பேசினாத்தானே மனசிலாவும்…எளவு கொரைக்கல்லாவே செய்யுதான்?”என்றார் தங்கராஜ் டீக்கனார். மலையாள இதழ்கள் அனைத்தும் அங்கு வாங்குவார்கள். தினமும் போஸ்ட்மேன் வரக்கூடிய ஒரே வீடு அது. கடிதங்களையெல்லாம் வாசலில் வாய்திறந்து பின்பக்கத் துளையை உள்ளே வைத்து நிற்கும் சிவப்புப் பெட்டியில் போடுவார்கள். அதில் நாங்கள் தாள்களை மடித்துப்போட்டால் நாராயணன் அண்ணன் திட்டுவார் ”லே லே…மக்கா அங்கிண யச்சி உண்டுலே…ராத்திரி உனக்கெல்லாம் பைப்பில ரெத்தம் வந்து செத்துபோவே பாத்துக்கோ…பிறவு காலம்பற பாத்தா ஐஸிலிட்ட சாளை கணக்கா, இஞ்சபாரு இப்பிடி, மலர்ந்து கெடப்பே….”

ஸ்ரீகண்டன்பிள்ளையின் மகள் கேசினி பேரழகி. ராஜாரவிமர்மா ஓவியங்களில் உள்ள நாயர் முகமுள்ள தேவகன்னிகைகளின் சாயல்.பருத்து புஜங்களை அழுத்தும் உருண்ட முலைகள், தொடைகள், இருபக்கமும் விரிந்து நடுவே உருண்டு செழித்த புட்டம், இளம்பாளைபோல் உயிர்பளக்கும் சருமம், யானைத்தந்தம்போல் உருண்ட கைககள், முலைகள், தொடைகள், புட்டம், ஒரு கணம் மட்டும் கண்களைச் சந்தித்து சற்றே அழுத்தி சில்லிட வைத்து அலட்சியமாக திரும்பும் பார்வை,சற்றே தூக்கம் எஞ்சியிருக்கும் தடித்துச் சரிந்த இமைகள், வனமுலைகள், பெருந்தொடைகள், பல்லாப்பப் புட்டம், நடுவே சற்று வெடித்ததுபோல இரண்டாகப் பகுந்து சிவந்து மலர்ந்த பெரிய கீழுதடு, உப்புப்பரல்போன்ற பற்களுக்கு மேல் செம்பளிங்கு வாசல் வளைவுபோல குவிந்த மேலுதடு, முலைகள், தொடைகள், புட்டம், நெற்றியின் இருபக்கமும் சுருண்டு நின்று கொடித்தளிர் சுருள்கள் போல காற்றிலாடும் குழல்பிசிறுகள், இணைக்காளைகளை மெல்லத்தட்டும் சாட்டைகுச்சம்போல பிருஷ்டத்தில் மாறி மாறி தடவி உலையும் நீண்ட கருங்கூந்தல், முலைகள், தொடைகள், புட்டம், இடுப்பின் சதைச்சரிவில் வியர்வையின் மெல்லிய கோடு, முத்துக்கம்மலின் ஒளிவிழுந்திருக்கும் பூனைமயிர் பரவிய கன்னம் முலைகள், தொடைகள், புட்டம்…

கேசினி அதிகமாக வெளியே வருவதில்லை. அவளைப்பார்ப்பது எளிய விஷயமல்ல. மிக அபூர்வமாக அவள் யாரையாவது அழைக்கவோ நாயை பிடிக்கவோ வெளிவாசலை திறந்து வந்தால் அவள் வீட்டுமுன்புள்ள முச்சந்தியில் அமைதி பரவும். கண்கள் சிலைவிழிகளாக ஆகும். வாசல்மூடி அவள் சென்ற அக்கணமே நாராயணன் அண்ணனின் குரல்தான் எழும். ”பெண்ணாகி வந்தது ஒரு மாயப்பிசாசம் பிடித்தே எனை மண்ணாக்கி நீறாக்கி சுடுகின்றதய்யோ…” ”நாராயணா லே எரப்பே அடிவாங்கி சாவுகதுக்காக்கும்லே உனக்கு விதி” சாயாக்கடை கேசவனின் குரல் கேட்டு நாராயணன் அண்ணன் ஓணான் போல கழுத்தை நீட்டி சிரிப்பார். துடைப்பத்தால் அடித்து தூக்கி போடப்பட்ட சிலந்தி போல சுள்ளிக் கைகால்களை கண்டபடி பரப்பி தன் வெற்றிலைபாக்குக் கடையின் பலகைமேல் அமர்ந்து ”அதுக்காச்சுட்டி செத்தாலும் இந்த நரக ஜீவிதத்துக்கு ஒரு பொருளுண்டு அண்ணோ”என்பார். ”வெளங்கமாட்டே மவனே… மாமா கேட்டுதா…இவனுக்கு மத்த உருப்படி இல்ல. காரணம் இவன் அப்பனுக்கு பெறக்கல்லை. இவனுக்க அம்மை சூடுதாங்காம கையிட்டு களிச்சதினால உண்டான பயலாக்கும்….”என்றார் பார்பர் தங்கப்பன்.

கேசினியின் வீட்டில் என்றும் வேலைக்கு ஆள் தேவை. அதிகாலையிலேயே குளித்து ஈரம் உலராத கரிய உடலில் எருமைப்பளபளப்புடன் கையில் மண்வெட்டியுமாக ஆட்கள் வாசலில் காத்து நிற்பார்கள். ”ஏசுவடியானே, லே மயிரே, கேற்று சாடுத காளைக்கு கோலொடிஞ்சு மரணம்ணு ஒரு சொல்லுண்டுலே…” என்று நாராயணன் அண்ணன் கூவுவார். ஏசுவடியான் சிரித்து வேறுபக்கம் திரும்ப ”பயலுக்கச் சிரிப்ப பாத்தேரா? லே மக்கா இனி வழிச்சுவிட்ட தோசைக்கும் மாவு திகையாம ஆவும்லே…பாத்து வச்சுகிட்டா உனக்க சந்ததிக்கு கொள்ளாம்” ”நாராயணா, லே மயிராண்டி ..உனக்கு என்னத்துக்க தீனம்லே? உன்னால நாங்களுமில்லா அடிவேங்கப்போறம்?” நாராயணன் அண்ணனுக்கு அல்லும்பகலும் கேசினி நினைப்புதான் ”திற்பரப்பு மகாலிங்கம் அக்கினி ஸ்வரூபனாக்குமே….தினமும் அஞ்சுநேரம் பாலும் பஞ்சாமிர்தமும் கொண்டு அபிஷேகம் செய்து சாந்தி செய்யல்லேண்ணா நாடெரிஞ்சு சாம்பலாயிடுமே எனக்க அண்ணோ”

கேசினி மாதத்தில் ஒருநால் பிரதோஷம் கும்பிட கோயிலுக்கு வரும்போது அவளைக் காண்பதற்காகவே பெண்கள் கூடியிருப்பார்கள். அவள் யாரையும் பார்க்காமல் நிமிர்ந்த நோக்குடன் சென்று, அரைமண்டபத்தில் ஏறி, எண்ணைத்தூக்கையும் பூக்கூடையையும் போற்றியிடம் கொடுத்துவிட்டு, கைகட்டி தூண்சாய்ந்து சிற்பம்போல நிற்பாள். அப்பால் பெண்கள் முட்டி மோதி அவளைப்பார்ப்பார்கள். ஒருவருக்கொருவர் கிள்ளிச் சீண்டியும் கிசுகிசுபேசியும் வாய்பொத்திச் சிரித்தும் ததும்புவார்கள். சின்னஞ்சிறு பெண்களுக்குக் கூட தெரியும் என்பது கண்களில் தெரியும். ”சீ நிந்நு முட்டாம போயி சோலியபபருங்கட்டி சவங்களே”என்பாள் கழகக்காரி பாக்கியம்மை. ”வாறாளுக. கெட்டியவனை தீர்த்தக்குளத்தில குளிக்கவிடுகது மாதிரி அங்க சொல்லிவிடுகது. பின்ன அவனிட்ட கதைகேட்டு ரெசிக்குதது…உனக்கெல்லாம் எந்த நாட்டு நீக்கம்புடீ?” ஆனால் பெண்களுக்கு அதுவும் சிரிப்புதான். பூஜைமுடிந்து கேசினி சென்றபின் பாக்கியம்மை மடப்பள்ளி ஒட்டுமூலையில் குந்தி அமர்ந்து சுருள் புகையிலையை பிய்த்து பல்லிடுக்குகளுக்குள் இறுகச்செருகியபடி ”போன சென்மத்தில மழகாணாபூமியாக்கும். அதனால இப்பம் இந்நா பிடீண்ணு திருவந்தரம் கெழக்கக்கோட்டைய தெறந்திட்ட கணக்காட்டு வச்சு குடுத்திருக்கு. மூடாக்கதவும் மேலே வெங்கலமணியும் எல்லாமாட்டு….இருந்து திண்ணு ஆறட்டும்…மேலே உள்ளவனுக்கு இதெல்லாம் ஓரோ தமாசுல்லா…ஏட்டி அங்கிண நிண்ணு குணுங்காம வீட்டுக்குப்போயி அவளுகளுக்க நெலவாசலை தெறந்து வச்சு கெடங்கட்டீ எளக்கக்காரிச் சவங்களே . வேணுமானா போயி ஓரோ செம்பகப்பூவெடுத்து முடி தோறும் வச்சுகிடுங்க… செம்பகம் நல்லதாக்கும். மற்றவன்மாருக்க அடைப்பு எளகும்…கலிகால வைபவம்…இல்லாம என்னத்த சொல்லுகதுக்கு…மகாதேவா ராமா நாராயணா..”

செண்பகக்காடு ஆற்றுக்கு அப்பால் செந்தேரியின் மறுசரிவில். இப்போது அங்கே நாலைந்து செண்பக மரங்கள் மட்டும்தான். முன்பு செண்பகம் செறிந்த காடாக இருந்தது. அதன் நடுவே இருந்தது செண்பக யட்சியின் பிரதிஷ்டை.பெரியதோர் மண்குவியல் நடுவே கல்பீடத்தில் மழைபட்டு முலையும் மூக்கும் தேய்ந்துபோன கற்சிற்பம் நின்றிருக்கும். நட்டுவைத்த கலைமான் கொம்புகள் போல செண்பகமரங்கள். மான்செவி போல அவற்றின் இலைகள். நீலவிழிகள் போல் உதிர்ந்துகிடக்கும் மலர்கள். அங்கே நின்றால் செண்பகம் நாறி குமட்டலெழும். ஆனால் இரவில் இளம்காற்று ஆற்றைத்தாண்டிக் கொண்டுவரும் செண்பக மணம் மனதை மயக்குவது.

இரவில்செண்பக மணத்தை அறிந்தால் தேவியை எண்ணி துதி சொல்லி கண்மூடி படுத்துவிடவேண்டும் என்று எல்லா பையன்களுக்கும் சொல்லிவைபபர்கள். எக்காரணத்தாலும் வாசல் திறக்கக் கூடாது. வேண்டாத சிந்தனைகள் கூடாது. வேண்டாத எதையும் செய்யவும் கூடாது. செண்பக மணம் ஏன் வேண்டாதவற்றை மட்டுமே நினைக்கச்செய்கிறது? செண்பகப்பூவின் இதழ்களின் கீழ் விளிம்பில் மலர்ச்சுழிக்குள் ஒரு சிறு விரல் உண்டு. செண்பகப்பூ பூவே அல்ல. வாசல்திறக்கும் தைரியம் யாருக்கும் வருவதில்லை.கேட்ட கதைகள் பல. எழுந்துசென்று கதவின் குளிர்ந்த பித்தளைத் தாழில் கைவைத்து நெடுநேரம் நின்றதுண்டு. கதவுக்கு அப்பால் யாரோ நிற்கிறார்கள். மூச்சொலி இல்லை, உடல் மணமும் இல்லை, அசைவொ நிழலோ இல்லை. ஒன்றுமில்லை. ஆனால் மனம் அரிகிறது அங்கே நிற்கும் ஒருவரை. தூய எண்ணம் மட்டுமேயான ஒருவரை. தாழை சற்றே விலக்கவேண்டியதுதான், வெளியே நிலவும் செண்பக மணமும் சேர்ந்து உருவாக்கிய இன்னொரு உலகம். தாழை அசைக்க முடியும். சற்றே நீக்கினால் போதும். ஆனால் அது பலமடங்கு எடைகொண்டிருக்கும். குளிர்ந்து இறுகி நின்றிருக்கும்.

என்றோ ஒருநாள் ஒருவர் தாழ்நீக்கி வெளியே சென்றுவிடுகிறார். பிறகு அவர் திரும்புவதில்லை. கண்களில் எப்போதும் காய்ச்சலிருக்கும். எவரையும் முகமறிவதில்லை. எப்போது ஒரே பாவனை. திருவட்டார் கோயிலில் சிலைத்த யட்சனின் பாவம். அன்னத்தை தூதனுப்பும் நளனாக நட்டாலம் திரிலோசனன்நாயர் ஆடும் கதகளி சிருங்கார பாவம். எங்கே எப்படி மூடியிட்டாலும் காலையில் செண்பகக் காட்டில் குப்புறக்கிடக்கக் காணலாம். தொடைகளில் விந்து கஞ்சிப்படலமாக படிந்துலர்ந்திருக்கும். கருணன் அண்ணனை சங்கிலியில் கட்டிப்போட்டார்கள். கனத்த உலோகக் கண்ணிகள் ஒலிக்க அவர் நிலவுநாளில் எழுந்து நின்று மார்பை அறைந்து மயிரை அள்ளிப்பிடுங்கி அலறி திமிறினார். எழுந்து விடைத்து நின்ற ஆண்குறி புதர் விலக்கி வரும் சர்ப்பம்போல் வேட்டியை மீறி நீலமோடிய சிவப்புத் தலை நீட்டி நின்றது. அலறும் தொண்டைபோல் அதில் நரம்புகள் புடைத்திருந்தன. நிறைசந்திரிகைநாளில் செத்து மல்லாந்து கிடந்தபோதும் இறுகிய முஷ்டிபோல நின்றிருந்தது அது. கண்கள் விழித்து முகத்தில் பரவசம்.

”அவளுக்கு நெறையாது மக்கா. ஆகாசத்தில உள்ள அக்கினிக்கு மண்ணில நெய்யூத்தி சாந்தி செய்யுகது நடக்கப்பட்ட காரியமா?” போற்றி சொன்னார். ”பின்ன அதாக்கும் மனுசப்பயலுக்க சீவிதம். குதிரைக்கு உள்ள இருக்க குதிரைக்கு குதிரைக்கால் சின்னதாக்கும் கேட்டியா? கண்ணுகெட்டை அவுத்துவிட்டா குதிரை ஓடியோடி நுரைதள்ளி செத்துப்போயிடும்ணாக்கும் கணக்கு…” அச்சுமூப்பர் ”மேலேகாவில யட்சிய தளைச்சது மாதிரி இதையும் தளைக்கல்லேண்ணா மாம்பூவும் பிஞ்சுமாட்டு கொண்டு போயிட்டேதான் இருப்பா” என்றார். ”பொத்திவச்ச கருப்பட்டியிலயும் புளுவருதுடே அச்சு….” என்று போற்றி நீட்டி துப்பி நாவால் பாக்குத்தூள் நெரட ஆரம்பித்தார்.மேலேக்காவில் யட்சி இப்போது ஆண்டுக்கொருமுறை ஆடிமாதத்தில் சாந்திபலியுடன் மறக்கப்படுபவள். கொள்ளை நோய்போல உயிர்குடித்து அலைந்த அவளை அடக்கியது வடக்கன் நம்பூதிரி ஒருவர். மாமந்திரவாதியான மூத்த நம்பூதிரியைக் கூட்டிவரச்சென்றார்கள். அவர் மரணப்படுக்கையிலிருந்தார். காலில் விழுந்து அழுத கிராமத்து மூப்பர்களைக் கண்டு மனம் கனிந்து முதிராவயதான தன் கடைசி மகனை கல்மோதிரமும் மந்திரம் உருவிட்டு முடிச்சிட்ட மஞ்சள் நூலும் கொடுத்து ஆசியளித்து அனுப்பிவைத்தார்.

இளையநம்பூதிரி திருவட்டாறு வழியாக நடந்து வந்து ஊருக்குள் நுழையாமல் வயல் வழியாகச் சென்று மேலேக்காட்டுக்குள் புகுந்தார். நிலவொளியில் சர்ப்பம்போல் ஒளிர்ந்து நெளிந்தோடும் சிற்றாறின் கரையில் நாணத்தால் குனிந்த முகமும் நாணமில்லா உடலுமாக அவரை எதிர்கொண்டாள் யட்சி.தன் தோட்டத்துக்கு அவரை அவள் அழைத்துச் சென்றாள். கொடுவேனிலில் தளர்ந்து நின்றிருந்த மரங்களெல்லாம் அவள் வந்ததும் பூத்து குலுங்கி மணம் நிறைத்தன. பொய்கைகளில் எல்லாம் பூர்ணசந்திரன் சுடர்ந்தது. கண்கள் கலந்து ,விரல் நுனிகள் தொட்டு, நகைபரிமாறி, ஆலிங்கனம் கொண்டு, இடை வளைத்து, முலைதழுவி, இதழ் சுவைத்து அவளை இட்டுச்சென்றார். அவள் அவரது மந்திரச்சரடை தூக்கி எறிய வைக்க தன் சொற்களையெல்லாம் செலவழித்தாள். ஊடினாள். பின் முயங்கிக் கொஞ்சினாள். பின் முத்தமிட்டு உடல்சுவையளித்து கெஞ்சினாள். அவர் அதை புன்னகையுடன் தவிர்த்தார்.

காமவிளையாட்டின் நடுவே அறியாதது போல் அவர் கைமோதிரம் நழுவி அருகே இருந்த பாழ்கிணற்றின் விழுந்தது. என் மோதிரத்தை எடுத்துவா என்றார் அவர். எடுத்துவந்தால் அந்த சரடை விலக்குவீர்களா என்றாள் அவள். ஆமென்று அவர் வாக்களித்தார். அவள் கிணற்றில் இறங்கியதும் தன் இடுப்பிலிருந்த மந்திர மஞ்சள் நூலை எடுத்து கிணற்றின் மேல் கட்டி அவளை உள்ளே சிறையிட்டுவிட்டார். அவர் குரல்கேட்டு ஊரார் கூடினர். அப்போதே கற்பாளங்களை தூக்கி வைத்து கிணற்றை மூடி மேலே பீடமெழுப்பி அவளை கருங்கல்லில் பிரதிஷ்டையாக்கினர். நம்பூதிரி தட்சிணை பெற்று திரும்பும்போது யட்சியின் பின்விளி கேட்டது. ”விமோசனமிலா சாபம் என்பதில்லை. எனக்கு விடுதலை எப்போது?”என்றாள். ”காத்திருக்க எனக்கொரு நாள் வேண்டும்…எண்ணிக்கொண்டிருக்க ஒரு வழி வேண்டும்…”

நம்பூதிரி ”நானோ என் சந்ததிகளோ இங்கே மறுபடியும் கால்வைத்தால் உனக்கு விடுதலை. அதன் பின் நீ கட்டுப்படமாட்டாய்”என்றார். ”நான் பேசியிருக்க துணை யார்?”என்றாள் அவள். அவள் மேடையருகே ஒரு அரசமரத்தை நட்டு நம்பூதிரி சொன்னார். ”உன்னுடன் உரையாட இதோ ஆயிரமாயிரம் துடிக்கும் நாக்குகள்” செல்லும் வழியில் ஒரு ஆசாரிக்குடியிலிருந்து உளியை வாங்கி தன் ஆண்குறியை வெட்டி ஆற்றில் எறிந்தார் நம்பூதிரி.

மேலேகாவில் யட்சியருகே நான் சென்றிருந்து மேலே வான் நிறைத்து துடிக்கும் நாக்குகளின் பேச்சைக் கேட்டிருப்பதுண்டு. மழுங்கிய கருஞ்சிலையை அருகே சென்று நோக்கி அந்த யட்சியை அகக்கண்ணால் காண முனைவேன். அறிந்த பெண்களின் முகங்களும் உடல்களும் அதன் வழியாகப் பாய்ந்தோடிச் செல்லும். பா¨றைமீது வழியும் காட்டாறுபோல
படசித்ரம்

[ 4 ]

கண்டெடுத்த முத்தை கையில் ஏந்தி நோக்கும் காட்டாளத்தியைப்போல அன்றெல்லாம் காட்டின் கையிலிருந்தது எங்கள் கிராமம். நூறு வீடுகள்,நடுவே ஒரு சிவன்கோயில். அப்பால் ஒரு தேவாலயம். ஆற்றுக்கு அப்பால் நின்றபெருமாள் கோயில். மகாதேவன் உக்ரமூர்த்தி. மார்த்தாண்டவர்மா மகாராஜா அரண்மனையை புதுப்பித்தபோது அடிபருத்த அம்மச்சிப்பலாவுக்காக காடுதோறும் ஆளனுப்பினார். அன்று கொடுங்காடாகக்கிடந்த இப்பகுதியில் எட்டாள் தழுவினாலும் அடங்காத பலா ஒன்று நின்றது. மூத்தாசாரி வந்து பார்த்து இந்த ஊற்றம் யட்சிகுடியிருப்பதனால் மட்டுமே வரக்கூடியதென ஊகித்தார். ஆனால் மரத்தைக் கண்டபின் விட்டுப்போவது முறையல்ல என்று பிரதான சர்வாதிக்காரர் அய்யப்பன் மார்த்தாண்டன் சொன்னார்.

பாண்டிநாட்டிலிருந்து புகழ்பெற்ற மந்திரவாதினான தீப்பாஞ்சானை பிள்ளையை வரவழைத்து களம் எழுதி யந்திர மையத்தில் உடைவாள் நட்டு அதில் நூற்றியொரு ஆட்டுக்கடாகக்ளை குத்திச்செலுத்தி உக்கிரபலி கொடுத்தார். யட்சியை அடக்கி ஒரு மரக்கிளையில் ஏற்றி கொண்டுசென்று திருவட்டாற்றில் ஆற்றங்கரையில் நட்டார். பலாவை முறித்தபோது வானத்தில் பறவைகள் கலகல ஒலியெழுப்பிப் பறந்து அலைமோதின. அடிமரத்தை வெட்டியபோது ஓணான்களும் பாம்புகளும் பதறியோடி பச்சையடுக்குகளுக்குள் செருகிக் கொண்டன. உருட்டி ஆற்றிலிட்டு நீர்வழியாகக் கொண்டுசென்றபோது குரங்குகள் தலைக்குமேல் அழுதபடி தாவித்தாவி கேசவபுரம் விலக்கு வரை சென்றன. மரத்திற்குள் அடங்கியிருந்த தேவன் மெல்ல வெளிவந்து கண் திறந்து தன்னைச் சுற்றி கிடந்த மஞ்சள் மரச்சிம்புகளை திகைப்புடன் பார்த்தார். மரம் வெட்டிய வெளியில் வானத்து வெயிலின் வெள்ளிப்பேரருவி கண்கூசக் கொட்டியது. அங்கே கீழ்த்தடத்து மனைக்கல் நம்பூதிரி வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டைசெய்தார்.

சிவலிங்கம் ஒரு விதை. மரம் வடக்கே கங்கைரையில் காசியில் உள்ளது. அங்கிருந்து பரந்து நதியோடும் நிலமெல்லாம் லிங்கம் முளைக்கிறது. கிராமங்கள் முளைக்கின்றன. மாநகர்கள் எழுகின்றன. கீழ்த்தடம் நம்பூதிரிக்கு குலச்சொத்தாக அந்த கோயிலும் சுற்றியுள்ள காடும் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதற்கு காரியக்காரர்களாக தங்கள் மடத்தில் ஊழியம்செய்த கொச்சுமார்த்தாண்டன் பிள்ளையை நியமித்தார்கள்.உருவிய வாளும் தோளில் மழுவுமாக கொச்சுமார்த்தாண்டன் பிள்ளை வந்தார். காட்டுமிருகங்களையும் காட்டாளர்களையும் காட்டாளத்திகளையும் அடிமைகளாகப் பிடித்து சங்கிலியில் பிணைத்து வேலைசெய்ய வைத்தார். காட்டு வகிடெடுத்து பாதை தெருவாகியது. தெரு கிளைவிரித்து ஊராகியது. ரத்தம் நனைத்து நிணம் உரமிட்டு வளர்த்தவை தெங்குமூட்டுவீட்டின் மரங்கள் என்பது வாய்மொழிக்கதை. தெங்குமூட்டுவீட்டின் முதல் காரணவர் கொச்சுமார்த்தாண்டன் பிள்ளை கட்டியதுதான் அங்கே எழுந்த முதல் அதிகாரிமனை.

எழுநாழியரிசி பொங்கி தேங்காய்ப்பால் சேர்த்து உருட்டி உண்ணும் தெங்குமூட்டுப்பிள்ளைமார் ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டிருந்தார்கள். ஊருக்கு அவர்களே வரிசெலுத்தினார்கள். கண் எட்டும் தொலைவுவரை குன்றெல்லாம், குன்றுநடுக்காடெல்லாம், காட்டுநடு ஊரெல்லாம் தெங்குமூட்டுக் குடும்பசொத்தென்பது பத்மநபபுரம் கொட்டார நீட்டு. ஊரில் அவர்களை போத்தன்பிள்ளைமார் என்று சொல்வார்கள். எருமை நடை, எருமைப்பார்வை, எருமைத்திமிர். தெங்குமூடு வீட்டின் நிலவறைகளில் பொன்நாணயங்கள் பெருகின. வீடு வளர்ந்து வளர்ந்து கோட்டையாக ஆகியது. அதன் விரிந்த கல்முற்றத்தில் தீபோல செம்பட்டுத்திரைச்சீலைகள் நெளியும் பல்லக்குகள் நின்றன. மாந்தளிர் மின்னும் குதிரைகள் குனிந்து பிடரி சிலிர்ந்த்து கால்மாற்றின. ஆயுதப்புரைகளில் வாள்களும் ஈட்டிகளும் குவிந்து கிடந்தன.

தெங்கும்மூட்டு நாராயணபிள்ளைதான் இரிட்டிக்காரியை கழுவிலேற்றினார் என்று கதை. குதிரைமீதேறி ஈட்டியுடன் அவர் காடுகாணச் சென்றபோதுதான் மலைமேட்டில் குடில்முன்னால் அமர்ந்து குழந்தைக்குப் பால்கொடுத்துக் கொண்டிருந்த கறுத்த காட்டாளத்தியைக் கண்டார். கருங்கல்முலைகண்டு நாராயணபிள்ளைக்கு காமம் எழுந்தது. அவர் அவளைப்பிடிக்கச்சென்றபோது அவள் திமிறிவிலகி காட்டில் ஓடி ஒளிந்துகொண்டாள். மீனுக்குக் நீர்போல அவளுக்கு புதர். தெங்குமூட்டுப்பிள்ளை கல்லெறிந்து காட்டுதேனீக்கூடுகளைக் கலைத்தார். தேனீ கொட்டிய கைக்குழந்தை கதறியபோது அவளை கண்டுபிடித்து பிடித்து இழுத்துவந்தார். இணங்க மறுத்த அவளை இழுத்து பாறையிலிட்டார். அவள் குழந்தையை தூக்கி பாறைமீது வீசிக் கொன்று அவளை எருமையிறங்கிய காட்டுபொய்கையைப்போல அழித்தார். தன் ஈட்டியை நட்டு அதில் அவளை கழுவேற்றி அமரச்செய்துவிட்டு திரும்பி நடந்தார்.

கழுமரத்திலிருந்து உதிரம் ஒழுக அவள் அவரை உற்று நோக்கினாள். வலியால் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருந்த முகத்தில் மெல்ல மெல்ல ஒரு அமைதி கூடியது. பின் அவள் உதடுகளில் ஒரு மெல்லியசிரிப்பு வருவதைக் கண்டு அவர் நம்பமுடியாமல் கைவாளை நழுவவிட்டார். சிரிப்பு அவள் முகமெங்கும் பரவி உக்கிரமான இளிப்பாக மாறியது. கண்கள் மட்டும் ரத்தம்கண்ட ஓநாயின் நோக்கு கொண்டிருந்தன. ”எனக்க பசி மண்ணுக்க பசிபோலே அணையாம நிக்கட்டே” என்று ஆழ்ந்த அடிக்குரலில் காட்டாளத்தி சொன்னாள்.

காட்டில் நடக்கும்போது மலைதெய்வங்களைக் கண்டு முடிவதேயில்லை. மரமெல்லாம் வாதைகள். கல்லெல்லாம் மூப்பன்கள். தினமொரு தெய்வம் முளைத்தகாலமொன்று இருந்திருக்கிறது. கல்லில் மீதொரு கல் ஏறி அமர்ந்தால் கடவுளாகிறது. கற்களெல்லாம் அப்படி ஏறியமரத்துடிக்கின்றனவா என்ன? ஆணும் பெண்ணும் போல? கல்லெடுத்து கடவுள் செய்பவன் அக்கணத்திலறியும் உக்கிரமென்ன? மண்ணில் ஒரு தெய்வத்தையாவது விட்டுச்செல்லவேண்டுமென்பது என்னுடைய ஆசையும்கூட. ஆனால் மனிதர் வழியாக வெளிப்படும் தருணத்தை தெய்வங்களே தீர்மானிக்கின்றன. திரைக்கு அப்பால் அவர்கள் காத்துநின்றுகொண்டிருக்கிறார்கள்.

இப்போது ஊரில் எல்லா யட்சிகளும் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். மேலாங்கோட்டு யட்சியின் கோயிலை சிமிண்டால் கட்டி எழுப்பி ஏஷியன் பெயின்ட் அடித்து வெயிலில் கண்கூச நிறுத்தியிருக்கிறார்கள். ‘அருள்மிகு நடுக்காட்டு இசக்கியம்மன்’ நாகர்கோயில் நகரத்தின் நடுவே உறைகிறாள்.நகரெங்கும் யட்சிகள் நிற்கிறார்கள். வாகையடி யட்சி, இலந்தயடி ஏக்கியம்மை,தேரடி இசக்கி…. துணிக்கடைக்காரனாக இருந்த காக்கும்பெருமாளுக்குச் சொந்தமான பன்னிரு வாடகைவீடுகள் கொண்ட காக்கும்பெருமாள் காம்பவுண்டுக்குள் வள்ளியம்மை இசக்கியுண்டு. சுண்ணத்தால் கட்டப்பட்ட பழைய கோயிலுக்குள் மயிலாடிக் கல்லில் செதுக்கப்பட்ட கருஞ்சிற்பம் வெள்ளிக்கண்களும் வெள்ளிமூக்குத்தியுமாக கருகிய அரளிமாலையணிந்து செம்பட்டு சுற்றி உண்டியல் காத்து நிற்கிறது. வள்ளியம்மை இசக்கிக்கு அமாவாசை தோறும் படுக்கை உண்டு. ஆடிமாதம் அமாவாசையன்று கொடை. காம்பவுண்டில் வசிக்கும் நாகசாமிக்கோனார் அவளை நேரில் கண்டிருக்கிறார். உயிருடன்.

வடசேரி கனகமூலம் சந்தையின் புகழ்பெற்ற வேசியாக இருந்தாள் வள்ளியம்மை. ஏதோ பனங்காட்டிலிருந்து பிழைப்புக்காக வந்தவள். காய்கறி வியாபாரமும் உண்டு. நான்குபேரை கட்டியபின் கணவனெல்லாம் ஒத்துவராது என தனியாக நின்றாள். குழந்தைகள் இல்லை. கரும்பனைபோல ஆறடி உயர தேகம். அகன்ற கரிய முகத்தில் எருமைக்கண்கள். கருங்கலயம் கவிழ்த்த பெருமுலைகள். குடக்கழுத்துபோல இடுப்பு. மதயானைத்துதிக்கை போல தொடைகள். யாருக்கும் அஞ்சாதவள். அத்துமீறிய சண்டியர் கண்ணுமூத்தானை ஒரே அடியில் வீழ்த்தி சந்தைமுகப்பில் போட்டுவிட்டு அவன் சிங்கிடிகளிடம் ”இனியாரும் உண்டாலே?” என்று கேட்டு நிலமதிர நடந்து சென்றவள். ”ஆயிரம் பேரு முங்கி நீந்திக் கரையேறினாலும் வைரவன்கொளம் கலங்குமாலே? இந்நாண்ணுல்லா கெடக்கும், திரையும் தணுப்புமாட்டு? அதாக்கும் கத!”என்றார் நாகசாமிக்கோனார். கருணையுள்ளவள் வள்ளியம்மை. அரைகாசு கொடுத்தாலும் கனிந்து கெட்டியவளைக்காட்டிலும் சினேகிப்பவள். காசில்லை காமம் உண்டு என்று ஒருவன் வந்து நின்றாலும் திருப்பியனுப்பமாட்டாள். ”லே மக்கா மனுச சென்மத்துக்கு ரெண்டுபசியில்லாடே? அன்னமிட்ட புண்ணியம் அவளுக்கும் உண்டுண்ணு வையி…”

வள்ளியம்மையின் அழகைக்கண்டு பெரிய பெரிய முதலாளிகளும் தம்புரான்களும் வந்து அழைத்திருக்கிறார்கள். வடசேரிச் சந்தையை விட்டு அவளால் போகமுடியாது. பகலெல்லாம் பெரிய குங்குமப்பொட்டுபோட்டு சுங்கிடிப்புடவையை பாண்டிச்சுற்று சுற்றிக் கட்டி, வாய் நிறைய வெற்றிலையுடன் காய்கறிக்கூடை முன் அமர்ந்து போகிறவர்களையெல்லாம் முறைசொல்லிக் கூவியழைத்து, பகடிபேசி, தொண்டை அதிரச் சிரித்து, நீட்டித்துப்பி ,சாயா குடித்து, பசித்தவர்களுக்கெல்லாம் தோசைக்கும் சாயாவுக்கும் பணம் கொடுத்து, வெயிலில் திளைத்தால்தான் அவளுக்கு வாழ்க்கை. எந்நேரமும் அவளிடம் வாங்கித்தின்ன சந்தைப்பையன்களின் கூட்டம் ஒன்று பின்னாலிருக்கும், எருமைக்குமேல் உண்ணிபொறுக்கும் காக்காக்கூட்டம் போல.கடைசியில் பறங்கிப்புண் வந்து தொடை அழுகி பாதங்களில் சொட்டியபோதும் இளம்வேசிகளின் பிரியத்துக்குரிய ‘வள்ளியக்கா’ ஆக அங்கேயே இருந்தாள். மற்ற வேசிகளைப்போல அவள் யாரையும் திட்டுவதில்லை, சபிப்பதும் இல்லை. அவள் பேசினாலே சுற்றியிருப்பவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.”…செட்டி தேடுகான் தேடுகான் அப்பிடி தேடுகான் எனக்க கோலம்மையே…..” ”என்னக்கா தேடினான்? பைசாவயா?”. ”இல்ல குட்டி, பண்டத்த” சிரிப்பொலி கேட்டு அருமைநாயகம் நாடார் திரும்பி ”ச்சீ தேவடியாளுகளா? என்ன மயித்துக்குட்டீ பகலில வந்து இருக்கிய? போங்கட்டீ” என்றார் செல்லமாக. ”ஏன் ராத்திரியில இனிக்கபட்டது பகலில கசக்குமோ?”. ”ஆமாட்டி பண்டமும் பாத்திரமும் எல்லாருக்கும் உள்ளதுதான்…அதக் கொண்டுவந்து உச்ச வெயிலில ஊரறிய காய வைப்பாவளாட்டீ? வாறாளுக பேச…போங்கட்டீ”

காக்கும்பெருமாளின் அப்பா சிவனணைஞ்சபெருமாள் நாடார் வீக்கம் வந்து உப்பி மரணப்படுக்கையில் கிடந்தபோது சுரவேகத்தில் ”வள்ளி வள்ளீ ”என்று புலம்பினார். பன்னிரண்டுநாளாக இழுத்துக்கொண்டிருந்தும் மூச்சு அடங்கவில்லை. பதினான்குநாள் இழுத்தவனுக்கு மாதேவனே வந்து சொன்னாலும் யமதர்மன் சொற்கம்கொடுக்க மறுத்துவிடுவான். வைத்தியர் குண்டுவய்யர் சொன்னார், ”இது மத்தவளைத்தான் மக்கா” ஆனால் சிவனணைஞ்சபெருமாள் பரம யோக்கியர்.சிவப்பழம். சித்தாந்த ஞானி. அவருக்கு எப்படி வள்ளியமையைத் தெரியும்? ஒருவேளை முருகனின் குறமகள் வள்ளியைச் சொல்கிறாரா? ஏதாவது சித்தாந்த ரகஸியம் இருக்குமோ? ”போலே மயிரே. வாறான் வள்ளி தெய்வானைண்ணுட்டு. லே மக்கா, மனபோகம்ணு ஒண்ணு உண்டுடே… மனுச சென்மத்துக்கு லிங்கபோகம் ஆயிரம்ணா கைபோகம் லெச்சம், மனபோகம் கோடீண்ணாக்கும் மேலே உள்ளவன் கணக்கு… போயி கூட்டிட்டுவாடே அவள” வள்ளியம்மையை கூட்டிவர காக்கும்பெருமாளே சென்றார். அவள் மறுபேச்சு பேசாமல் வந்தாள். மூத்தநாடாரின் தலையை எடுத்து தன் முலைகள்மேல் அழுத்தி அணைத்து வாயிலிட்ட தாம்பூலத்தை அவருக்கு கொடுத்தபோது அவர் சிரித்தபடி அப்படியே கண்மூடி சாந்தமானார். காக்கும்பெருமாள் நீட்டிய நோட்டுகட்டிலிருந்து ஒரு இதழைக்கூட உருவாமல் ,தாம்பூலம் மட்டும் எடுத்துக்கொண்டு சொல்லிக்கொண்டு வள்ளியம்மை படியிறங்கினாள்.

வள்ளியம்மை நோய்மூத்து நடமாட்டமில்லாமல் ஆனபோது காக்கும்பெருமாள் அவரே காரில்சென்று கிழவியை தூக்கிவந்து தன் காம்பவுண்டில் ஓரத்துவீட்டில் குடியேற்றி உதவிக்கு ஒரு வேலைக்காரியையும் நியமித்தார். ”ஒரு கணக்கில அவ நம்ம அம்மையில்லா?”என்றார். எண்பத்தி ஒன்றாம் வயதில் நல்ல நிறைந்த ஆடியமாவாசையில் பிரம்ம முகூர்த்தத்தில் தன் வீட்டுமுற்றத்தில் இருந்து ”எக்க அம்மோ”என்று ஏங்கி நெஞ்சைப்பிடித்தவள் அப்படியே இடப்பக்கம்சரிந்து விழுந்து இறந்தாள். அங்கேயே காக்கும்பெருமாள் அவளுக்கொரு கோயில் கட்டினார். இன்று அது இன்னும்பெரிய கோயிலாக ஆகிவிட்டிருக்கிறது. தகரக்கூரை இறக்கி தாழ்வாரம் கட்டியிருக்கிறார்கள். குமாரசாமி வைராவி வந்து நித்ய பூஜைசெய்கிறார். குழந்தைகளுக்கு வரும் நோய்களுக்கு வள்ளியம்மை இசக்கியின் பிரசாதம் கைகண்ட மருந்து என்று தேடிவருகிறார்கள்.

கையில் குழந்தையுடன் நின்று பஞ்சவன்காட்டு நீலி வண்டியில்செல்பவர்களிடம் ”இம்பிடு சுண்ணாம்பு இருக்கா அண்ணா?”என்று கேட்டபாதைவழியாக நான் தினமும் பேருந்தில் அலுவலகம்செல்கிறேன். வணிகனாக வந்து அவளை மணந்து வேற்றூர் கூட்டிச்சென்ற திருடன் அங்கு வைத்துத்தான் அவளுடைய தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். கணவனுடன் வந்த தன்னை கொன்று சென்ற திருடர்களை வழிதவறி அவ்விடத்துக்கே வரச்செய்து கள்ளிமரம்போல ஒரு உடலில் பத்து கிளையுடல்களுடன் பேருருவம் காட்டி நின்ற கள்ளியங்காட்டு யட்சியின் இடத்தில் வீடுகட்டி வாழ்கிறேன். ‘சதுரகிரி மலையோரம் சாய்ஞ்சிருக்கும் திருகுகள்ளி ! திருகுகள்ளி பாலெடுக்க திரிஞ்சனடி சிலகாலம்…’ இதோ பேருந்திலேறும் பெண்களில் ஒருத்தியாக கள்ளியங்காட்டு நீலியும் இருக்கக் கூடுமோ? உச்சியில் மந்திர ஆணியடித்து யட்சிகளை அடக்கி சாதாரணப்பெண்களாக ஆக்கிவிடமுடியும். வில்லுக்குறி மந்திரவாதி இடலக்காட்டு நீலியை மந்திரத்தால் அடக்கி உச்ச்சியில் ஆணியடித்து கொண்டுசென்று தன் மனைவிக்கு பணிப்பெண்ணாக்கினான். நிறைசூலியான அவளிடம் பேன் பார்க்கச் சொன்னாள் நீலி. உச்சியிலென்ன ஆணி என்று கேட்டபோது அதை எடுத்துவிடு என்றாள். ஆணி பிடுங்கபப்ட்டபோது வான்முட்ட எழுந்து நின்று சூலி வயிறு பிளந்து பிள்ளையுடன் கள்ளிமுள் காட்டுக்குள் ஆயிரம் நரிபோல ஊளையிட்டபடிபோடிச்சென்றாள்.

அணைக்கும்வரை தெரிவதில்லை யட்சியை. மருந்துக்கோட்டை நீலியை அய்யப்பன் செண்பகராமன் ஏழுநிலை மாளிகையாக மாறிய அவளுடைய கரும்பனை உச்சிக்குப்போய் மேகங்கள் கூரையிட்ட பனங்குருத்துப்படுக்கைமீது படுத்து கட்டியணைத்து முயங்கியபோது தோணிபோல அவள் முதுகு குழிந்து உள்ளீடில்லாமலிருப்பதைக் கண்டார். யட்சியர் ஒருபோதும் மானுடரைக் கூட முடிவதில்லை. காமம் மூத்து மெய்கலக்கும்போதே அவன் யட்சியை அறிந்து விடுகிறான். மரண வெறியில் விறைத்த அவன் உடல்மேது பச்சை விறகு மேல் புகையும் நெருப்பு போல நின்று அவள் தகிக்கிறாள். நான் கேசினியை எண்ணிக் கொண்டேன். மார்கழி மாதம் குளிரில்கூட வீட்டுக்குளத்தில் அதிகாலையில் நீராடுகிறவள். ”காந்தாரி மொளகாக்குமே அரைச்சு தேய்க்கியது…மகா சாபம்…வேற என்னத்தச் சொல்ல?” வேலைக்காரி செல்லம்மை சொன்னாள். அதிகாலையில் கையையும் காலையும் துணியால் கட்டிக்கொண்டு அந்தக்குளத்தில் குதித்து செத்தாள். செல்லம்மை குளிக்கச் சென்றபோது தெளிநீல நீருக்குள் கடைசிப்படியருகே செங்கதலி வாழையின் அடிமரம்போல மூழ்கி அலைகளில் ஆடினாள். நீர்ப்பாசி போல கருங்கூந்தல் நெளிந்தது.

செல்லம்மையின் அலறல் கேட்டு வேலைக்காரர்கள் ஓடிவந்தார்கள். சமையற்காரி பாறுவம்மை ”நாயிடமக்களே ஒற்ற ஒருத்தன் அவள தொடப்பிடாது…தொட்டவனை வெட்டிப்போடுவேன்….மாறுங்கலே”என்று அரிவாள்மணையுடன் வந்து அலறினாள். ”மீசகுருத்தவன் ஒருத்தன் இங்க நிக்கப்பிடாது…பொலிபோட்டிருவேன் ….போங்கலே தடிதூக்கி நாயிகளே…” அத்தனை ஆண்களையும் துரத்திவிட்டு செல்லம்மையும் பாறுவம்மையும் சேர்ந்து அவளை மேலே தூக்கி எடுத்தார்கள். கிணற்றில்ருந்து மீட்கபப்ட்ட வெண்கலக்கும்பா போல நீர்ப்பாசி படிந்த இளம்பாளை உடல். அடிவயிற்று மென்மயிர் பரவல். இமைகளில் நீலநரம்பு வலை. ”அல்லிப்பூவுக்க எதளு போலுள்ள எமையாக்குமே அம்மிணியே…கைய இப்பிடி இறுக்கிப் பிடிச்சிருந்தது. கையில என்னமோ இருக்குண்ணு பிடிச்சு வெலக்கி பாத்தம்…ஒண்ணுமில்ல. வெறும் கையாக்கும் கேட்டுதா?” .”பின்ன? அவள்க்கு வேற எந்து கிட்டும்?”என்றாள் அம்மா.

கையில் குழந்தையுடன் வந்து ”சொல்பம் அந்தால போயி இருங்க சார்” என்று நிற்கும் இந்த ஊதாநிறச் சேலைகட்டிய மெலிந்த பெண் பஞ்சவன்காட்டு நீலியாக இருக்கக் கூடாதா என்ன? ஆனால் யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.

நன்றி உயிர்மை. ஆகஸ்ட் 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *