இருள் கவியும் மாலை நேரம். முக்கிய வேலையொன்று பாக்கியிருந்தது.
இருளின் அடர் போர்வை மறைப்புக்காகக் காத்திருந்த வேளை. உயிரின் வேர்களை அசைத்துப் பார்க்கும் இம்சை மிகுந்த காத்திருப்பின் வலி மிகுந்த கணங்களின் நகர்வு.
அதன் அசுரப் பிடியிலிருந்து விலகி தப்பித்து ஓடும் பிரயத்தனமாக மனதையும் கண்ணையும் வேறு திசைக்கு திருப்ப எதிர்வீட்டு இரும்பு கேட்டை ஒட்டி வலதுபுறம் நிற்கும் மாமரம். அடர் பச்சையில், மாலை நேர மந்த மஞ்சல் வெயிலின் தொடலைத் துறந்து இருண்டு கிடந்தது அதன் உள் உலகம். அதனுள்ளிருந்து வரும் கீச்சுக் குரல். வெகுநேரமாய் கேட்கும் குரல். உருவமற்ற ஒலி மட்டுமே கொண்ட குரல். அம்மா கொண்டு வரும் இரைக்காய் இறைஞ்சும் குரல் என்பது புரிகிறது.
நிறைய சிட்டுக்கள். பொழுது புலர வந்துவிடும். சுவர்க் கம்பியில் அங்குமிங்கும் தாவி இரைக்கு அலையும். தோட்டத்திலிருந்து கூடவே வந்துவிட்ட பழக்கம். தோட்டத்திலிருந்தவரை பாட்டியின் பொறுப்பு. கூடுகள் அப்பாவின் வேலைப்பாடு. முற்றிய தேங்காய் மட்டைகளை கம்பியினால் பிணைத்துக் கட்டி, நடுவில் ஒரு வட்ட வாசலுடன், வாசல் கூரைச் சட்டங்களிலிருந்து தொங்கும் நாலைந்து குருவிக் கூடுகள். அதில் எப்போதும் கேட்கும் குஞ்சுகளின் கீச்சுக் குரல். பாட்டி, பொழுது புலர, அரிசிக் குவளை சகிதம், வாசல் பிராஞ்சாவில் வந்து உட்கார்ந்து விடுவாள்.
இங்குத் தாமானுக்கு வந்தபின் அம்மா அதைத் தொடர்ந்ததால் இப்போது அப்பா தொடர்கிறார். வாசல் கூரைச் சட்டத்திலிருந்து கூடுகள் ஏதும் அதற்கென தொங்கவில்லை. வீட்டுக் கூரை இடுக்குகள் கூடுகளாகிவிட்டன. ஒன்றிரண்டு பழக்க தோஷத்தில், மரங்களிலும் கூடு கட்டி வாழ்கின்றன. எதிர்வீட்டு மாமரத்தில் இருப்பது போல.
கொஞ்ச நேரத்தில், மாமரத்திலிருந்து வந்த சிட்டுக்களின் குரல் அடங்கிப் போனது. அதே வரிசையில் இருபதடி இடைவெளியில் மேலும் இரண்டு மாமரங்கள். ஒன்று ரொம்பவும் வாளிப்புடன் வளர்ந்துவிட, அதன் வேர்கள் பருத்து, நீர் குழாய்களை பதம் பார்த்துவிட பொதுப்பணி ஊழியர்கள் மரத்தை வெட்டச் சொல்லி போட்ட உத்தரவில் அதன் அடிப்பாகம் மட்டும் சிறிது துளிர்களுடன் நிற்கிறது.
மோட்டார் சைக்கிள் ஒன்று விசுக்கென பறந்து கடந்து போனது.
பின்னிப் பிணைந்து கொஞ்சிச் சிரித்துக் கொண்டு போன இரண்டு இளசுகள் இதே வரிசையில் 10ஆம் நம்பர் வீட்டு கணேச அண்ணனின் மகனும் மருமகளும். திருமணமாகி ஒரே வாரமே கழிந்த இளசுகள் கடந்து போன வேகத்தில், காற்றில் அலைந்து வந்த சிரிப்பொலியில் மிதந்த பரவசமும், மெல்லிய ஒளியினூடே முகங்களில் மினுங்கிய சந்தோஷக் கீற்றும் மனசைத் தொட்டுத் தடவின. அந்தக் கணத்தை நாமும் ஒரு பொழுதில் கடந்து வந்துள்ளோம் என்கிற நினைவு வர, மனம் லேசாகிறது.
இன்னும் கணேச அண்ணன் வீட்டு கல்யாணக் களை மாறவில்லை. வேலியோரம் பிரித்துப் போட்ட பச்சைப் பந்தல் இன்னமும் பசுமை இழக்கவில்லை. வீட்டு வாசலில் சரமாய் தொங்கிய அலங்கார விளக்குகள் எரியத் தொடங்கின. வானவில்லின் வர்ண ஜாலம் கொண்ட வண்ண விளக்குகள். சினிமா பாட்டுச் சத்தம் அதிரடியாய் ஒலிக்கிறது. புதிதாய் வந்த கமலஹாசனின் அவதாரம் தந்த பாடல். கல்யாண வீட்டு குதூகலத்தைப் பறைசாற்றும் கூடுதல் சத்தத்துடன் பின்னிரவு வரையில் தொடரும்.
உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்க்க தடுப்புச் சுவருக்கு அப்பால், கணேச அண்ணனின் முகம் மட்டும் மங்கலாய் தெரிகிறது. யாருடனோ உரத்து பேசி சிரிப்பது கேட்கிறது. அவருக்கேயான, நான்கு வீடுகள் தள்ளி ஸ்பஸ்டமாய் கேட்கும் கீச்சுக் குரல். அதனூடே, புதிதாய் விழுந்த ஏதோவொரு கீறலை உணர முடிகிறது.
முதல் திருமணம். தடபுடலான ஏற்பாடுகள். பையனுக்கு சிங்கப்பூரில் ஏதோ கப்பலில் வேலையாம். வருடம் ஒருமுறை, தீபாவளிக்கு வந்து நான்கு நாள் இருந்து போகுபவன். இனிமே என்ன ஆவுமோ? என்கிற பயம் இருப்பது, பத்து நாட்களுக்கு முன்பு எதேச்சையாய் வீட்டுமுன் நின்று, நலம் விசாரித்து பேச்சுவாக்கில் உதிர்த்த வார்த்தைகள் உறுதிப்படுத்தின. “இந்தப் பையனத்தான் நம்பி இருக்கம்பா. ஒரே ஆம்பள புள்ள. மத்தது மூனும் பொம்பள புள்ளங்க. இன்னும் படிக்க போவுதுங்க. இவந்தான் மாசா மாசம் வூட்டு செலவுக்கு காச அனுப்பறான். வூட்டுக்கும் பேங்க்ல அவந்தான் காச கட்றான். கல்யாணம் ஆனால் எப்படியோ? சுத்துமுத்து நம்ப தாமான்ல நடக்கற கதங்கள கேட்டா இப்பவே தூங்க முடியாம இருக்கு. பயமா இருக்குப்பா.
மேலும் ஒரு சிகரெட் தேவைப்பட்டது. இதற் குள் குறைந்தது பத்து சிகரெட்களாவது தீர்ந்திருக்கும். தேவையற்ற பழக்கம் ஆனாலும், மனம் கனத்து மூச்சு இறுகி நெற்றிப் பொட்டு வலியில் துடிக்கும் தருணங்களில், அதன் தேவை கட்டாயமாகிவிடுகிறது. பத்து நாட்களுக் கும் கூடுதலான மன உளைச்சலின் உச்ச நிலை. பாக்கி இருப்பது ஒரே ஒர சிகரெட் என்பது ஏமாற்றமளித்தது. இன்றைய தேவைக்கு இது போதாது என்பது நிச்சயம். பற்ற வைத்து இழுக்க தலைக்குள் பூச்சி பறந்தது. நரம்புகளில் இலேசான நடுக்கத்துடன் கூடிய தளர்வு.
மெல்ல ஊடுருவிய இருள் முழுமையும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியிருந்தது.
எதிர்வீட்டு வாசலில் வழக்கமான மஞ்சள் ஒளி. வெள்ளை ஒளி மஞ்சலான வித்தை ட்யூப் லைட் மேல் ஒட்டப்பட்டுள்ள மஞ்சள் நெகிழி தாளில் உள்ளது. கண்களுக்குக் குளிர்ச்சியான மெல்லிய ஆரஞ்சு மஞ்சள். வரிசையிலிருந்த அத்தனை வீடுகளிலிருந்தும் அது தனித்திருந்தது. எல்லா வகையிலும் வாசல் முழுக்கவும் நிறைந்திருந்த பழைய கம்பள தரைவிரிப்பு. அதன் மேல் மூலை முடுக்கெங்கும் இரைந்து கிடக்கும் பழைய சாமான்கள். குழந்தைகளின் விளையாட்டுப் பொம் மைகள், குளிர்பான டின்கள், பிளாஸ்டிக் எண்ணெய் பாட்டில்கள், சைக்கிள் ரிம்கள், சங்கிலிகள், கம்யூட்டர் ஸ்கீரின்கள், இரும்பு அலுமினியத் தகடுகள் இன்ன பிற. வெளி வாசலில் தொடங்கி வீட்டுக் கூடம் வரை அதன்ஆக்கிரமிப்பு. குப்பைக் கூளங்கள். உள்ளே கால் வைத்து நடக்க கவனம் தேவை. ஏமாந்தால் துரு ஏறிய ஆணிக்கு கால் பலியாகலாம். அவைகளோடு தனி மனிதனால் குடும்பம் நடத்தும் அந்தச் சீனக் கிழவனின் பெயர் இன்னதென்று இங்கு எவருக்கும் தெரியாது.
சுமாரான உயரம். மெலிந்த தேகம். வயதின் மூப்பைக் காட்டும் சுருக்கம் விழுந்த தோல். அதில் பரந்து கிடக்கும் கரும்புள்ளிகள். நரைத்த ஒட்ட வெட்டிய தலைமுடி. உதட்டுக்கு மேலே, அதிசயமாய் விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலான மீசை முடிகள் குத்திட்ட நிலையில், லலது கண்ணக் கதுப்பில், மூக்கின் விளிம்பில் ஒரு கருமை பரு.
அதில் நீண்டு வளைந்திருக்கும் இரண்டு முடிகள். காதுகளுக்குள்ளிருந்து துருத்தி வெளிவரும் அடர்ந்த முடிக்கற்றை. எதனையும் வெளியில் கொட்டாத அழுத்தமான முகபாவம். சற்றே கூன் விழுந்த நடை.
கூன் விழுந்ததன் காரணம் வாசலில் நிற்கும் பழைய சைக்கிள்தான். சற்றே முன் வளைந்து தம்பிடித்து மிதிக்க மட்டுமே நகரும்படியான உடல் நிலை அதற்கு. ஹாண்டில் பாரில் பல வர்ண அலங்கார ரிப்பன்கள். அதில், புத்தர் சாமி மந்திரித்து தந்த மந்திரக் கயிறுகள் ஒரு கொத்து அதில் பிணைந்திருக்கும் ஒரு புத்தர் சிலை. ரிம் கம்பிகளை அலங்கரிக்கும் துண்டு ரிப்பன் துணிகள். சுழலும் சைக்கிள் சக்கரத்தின் கூடவே சுழன்று வரும் இந்த வர்ண ரிப்பன்கள்.
‘குப்பத்தொட்டி ஆப்பெ’ என்கிற பொதுவான நாமகரணத்தில் இங்கே அறியப்பட்ட இந்தச் சீனக் கிழவனின் வாழ்வாதாரமே அந்தச் சைக்கிள்தான். அங்கே குவிந்து கிடக்கும் பழைய சாமான்களுக்கு அதுவே பொறுப்பு. பகலெல்லாம் சாத்திக் கிடக்கும் அதன் வாசல் கதவு, எப்போதேனும் யாரேனும் ஒருவர் வந்து வெளிக்கேட்டை ஆட்டி ஒலி எழுப்ப திறக்கும். பின் அவர்களோடு ஏதோ பேசுவது தெரியும். வந்தவர்கள் உள் நுழைந்து குப்பைக் கூளங்களில் எதையாவது தேடி எடுத்து, அதற்கான பணத்தைக் கொடுத்து போவதும் நடக்கும். மற்றபடி, பகலெல்லாம் சாத்தியபடியே இருக்கும் அந்த எதிர்வீட்டுக் கதவு.
இரவு எல்லாம் ஓய்ந்து உறங்கச் செல்லும் நேரம் அது விழிப்புக் கொள்ளும். வீட்டினுள் மனித நடமாட்டம் தெரியும். பொருட்கள் அங்குமிங்கும் நகரும் ஒலி கேட்கும். பத்து மணிக்கு மேல் அதுவும் அடங்கிவிடும். நீளக்கை காக்கிச்சட்டை, அதற்கு ஏதுவான காக்கிச் சிலுவார். வெள்ளை நிறத்திலான காலுறை, சப்பாத்து, தலையில் ஒரு துண்டு, ஒரு தொப்பி சகிதம் சைக்கிளின் சுமைதாங்கியில் ஒரு வக்குலோடு அவன் அலுவலகம் கிளம்பும் நேரம் இரவு மணி பதினொன்றை தாண்டிவிடும்.
அவனது அலுவலகம் என்பது நகர குப்பைத் தொட்டிகள். பச்சை நிறத்தில் மஜ்லிஸ் பாண்டாரான் முத்திரை பதித்து சாலையோரங்களின், மேலும் கீழும் குப்பைக் கூளங்கள் சிதறி, அழுகல் நாற்றம் குடலைப் பிடுங்க நிற்குமே அதே குப்பைத் தொட்டிகள்தான். அவனது அன்றாட சம்பாத்தியத்துக்கான முதலீடு அதிலிருந்து வருவதுதான்.
அவனது வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி இருப்பது ஒடம்பாட்டி வேலாயுதம் வீடு. 17ம் நம்பர் வீடு. அது ஏதோ அதிர்ஷ்டமில்லாத எண் என்று யாரோ சொல்ல, 17E என்று ஒரு எழுத்தை சேர்த்துக் கொண்டதன் விபரீதம் மறுநாள் தபால்காரன் வந்து வாசலில் நின்று சத்தம் போட்டபோதுதான் புரிந்தது. அன்றோடு பழைய 17. வீட்டு முன்னாலேயே முனீஸ்வரர் கோயில்; குறி சொல்வதும் உண்டு.
சாமி வருவது அவரது மாணவி கன்னியம்மா மேல்தான். அவர்தான் குறி சொல்வார். சாமி வந்து இறங்கியபின் கன்னியம்மா வேற்று ஆளாக மாறியிருப்பார். வயோதிக கிழவியின் தள்ளாடும் நடை சேர்ந்துவிடும். அப்போது வாயில் சுருட்டு புகையும், கையில் ஊன்றி நடக்க ஒரு கம்பு. அதை ஊன்றி நடந்தபடிதான் குறி சொல்வது வழக்கம். உடல் சற்றே முன் வளைந்து கூன் விழுந்த தோற்றமளிக்கும். கூர்ந்து நோக்க, உதட்டுக்கு மேல் இலேசான மீசை வளர்ச்சியும் தெரியும். அப்போது குரலும் புது வடிவம் எடுத்திருக்கும். கரகரத்த வயோதிக கிழவரின் குரல் போல ஒலிக்கும். அவர் சொல்லும் குறியில் நம்பிக்கை வைத்து தொலைதூரத்திலிருந்தும் கூட்டம் வந்து காத்திருப்பதைப் பார்க்கும் ஒடம்பாட்டிக்கு தாளாத பெருமை உண்டு.
வருடம் ஒருநாள் திருவிழாவும் உண்டு. அதுவே வினையாகிப்போன ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. திருவிழாவுக்கு வசூல் வேட்டை நடந்து கொண்டிருந்த நேரம். ஒருநாள் விடியற்காலை ஐந்து மணிக்கு வீட்டினுள் முகமூடித்திருடர்கள். கையில் அரிவாள். “வசூலான பணத்த எடுரா…” என்கிற அதட்டல். “அது எங்கிட்ட இல்லப்பா..கோயில் பொருளாளரு கோவிந்தன்கிட்ட இருக்கு… அடுத்த லோரோங்லதான் இருக்காரு.. அவருகிட்ட போயி கேளு..எங்களவுட்டுரு…” என்ன சொல்லியும் கேளாமல் கத்தி கன்னியம்மா கழுத்தில் அழுத்தியது. கழுத்தில் கையில் கிடந்ததைக் கழற்றிக் கொடுத்து உயிர் பிழைத்தார்கள்.
இந்தப் பீதி போதாதென்று, ஒருநாள் காலையிலேயே வீட்டு முன் நகராண்மைக் கழக வாகனமொன்று வந்து நின்றது. அப்போது குறி சொல்லும் கன்னியம்மா மட்டுமே வீட்டிலிருந்தாள். காரிலிருந்து இறங்கிய இரண்டு அதிகாரிகள், வேலாயுதத்தை கேட்டுள்ளனர். கன்னியம்மாவுக்கு அரசாங்க அதிகாரிகளைக் கண்டாலே மரண பயம். அதிலும் இவர்கள் போலீஸ் உடை போன்ற பச்சை சீருடையில் வந்திருந்ததைக் கண்டதும் அவளுக்கு நெஞ்சம் படபடத்து மயக்கமே வரும்போல் ஆகிவிட்டதாம். பயத்தில் அவள் ஏதோ உளற, அவர்கள் மிரட்டலான தொனியில், வீட்டு முகப்பிலிருந்த முனீஸ்வரரைச் சுட்டிக் காட்டி, ஏதோ கேட்க, பக்கத்து வீட்டு நடேசன் ஓடிவந்து விசாரிக்க, வீட்டில் கோயில் கட்டி தினமும் மணியடித்து பூசை செய்வதும் பாடுவதும் தொந்தரவாக இருப்பதாக அக்கம்பக்கம் உள்ள யாரோ புகார் கொடுத்திருப்பதாக வந்திருந்த அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு கன்னியம்மா கலங்கிப் போனார்.
பொழுது சாய்வதற்குள் விஷயம் பற்றிக் கொண்டு எரிந்தது. கோயில் முன் கூட்டம் கூடிவிட்டது. நிறைய குரல்கள் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தன. “நீங்க பயப்படாதீங்கண்ணே… எவனோ பொறாம புடிச்ச நாயோட வேலதான் இது…. சீக்கிரமா அவன் யாருன்னா கண்டு பிடிச்சிரலாம்… மஜ்லீஸ் பண்டாரான் ஆபிஸ்ல எனக்கு ஆளு இருக்கண்ணே… கண்டு பிடிச்சு அவன நம்ம லோரோங்கிலயே இல்லாம ஆக்கிடலாம்…”
வேலாயுதத்தின் நேர் எதிர்வீட்டு கோபாலின் குரல்தான் அது. வாலிப முறுக்கு. படிப்பை பாதியில்கைவிட்டு, சீனன் கோழிக் கடையில் கோழிகளை கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளிக் கொண்டிருப் பவன். தினமும் நூற்றுக்கணக்கான கோழிகள். நெடிய கறுத்த உருவம். மூங்கில் கம்பின் விறைப்புடன் கூடிய உடல்வாகு. முகத்தில் நிரந்தமாய் குடிகொண்டுவிட்ட இறுக்கமும் கோபமும். அதனை அதிகப்படுத்தும் சிவந்த கண்கள். ஒட்ட வெட்டிய கிராப்பு. பிடரிக்கு மேலே எலி வால் ஒன்று. அது மட்டிலும் பொன்னிறத்தில். வலது காதில் சிறிய கடுக்கன் ஒன்று.
ஞாயிறு விடுமுறையில், கோழி வாங்க அவன் வேலை பார்க்கும் கடைக்குப் போனதுண்டு. ஒரு சின்ன தலையசைப்பில், ‘என்ன வேணும்?’ என்கிற கேள்வி இருக்கும். இதுவரை எங்குமே சந்தித்திராத மனிதர் களிடம் வந்துவிடும் அந்நியம் போன்றதொரு பாவனை, தெரிந்த மனிதர்களிடமும் அவனுக்கு இயல்பாய் வாய்த்திருந்தது. ‘என்ன தம்பி, என்ன தெரியலியா? ஒங்க லோரோங்லதான் இருக்கேன்’ என்று நேசமாய் ஒருமுறை கேட்கப்போய், எதிர்கொண்டது என்னமோ இறுகிய அதே அந்நியப் பார்வை. ஏன்டா கேட்டோம் என்று அசடு வழிய நின்றிருந்த அன்றோடு, அதுவும் இல்லாமல் ஆனது. ‘முட்ட கோழி ஒன்று’ என்கிற மூன்று வார்த்தை உரையாடலாய் சுருங்கிப் போனது.
கூண்டுக்குள் ஒடுங்கிக் கிடக்கும், முட்டை போட்டு தன் சேவையை முடித்துக் கொண்ட பென்சன் கோழிகள். மூடியைத் திறந்து கையை உள் நுழைத்து கால்களைப் பிடித்து மேலே கொண்டு வர அதன் அலறல் தொடங்கிவிடும். இறக்கைகளை மடக்கிப் பிடித்து, கழுத்தில் கூர்மையான கத்தியை வைத்து இயக்க ரத்தம் பீச்சியடித்து உடல் துடித்து படபடக்கும். அப்போதும் அவன் முகத்தில் சலனமே இருக்காது. ஒரு ஜடப் பொருளை கையாள்வது போன்ற தொரு உடல் மொழி ஒருவகை அருவருப்பைக் கூட ஏற்படுத்திய துண்டு.
அந்த கோபால்தான் அன்று ஐயாவுக்கு பரிந்துகொண்டு சத்தம் போட்டவன். அதன் ரகசியம் நான்கு நாட்களில் வெளிப்பட்ட போது. ‘அட இதானா விஷயம்?’ என்று சிரிக்கச் சொன்னது. ஒரு மாதத்திற்கு முன்புதான் அவனுக்கு நான்கு நம்பரில் நல்ல பணம். நம்பர் கொடுத்தவர் ஐயா.
வீட்டுக்குள்ளிருந்து வருகிறது அப்பாவின் குரல். வழக்கமான அழுத்தம் குறைந்துவிட்ட குரல் பேரனிடம் ஏதோ சொல்லும் சன்னக் குரல். கூடவே வருகிறது. ஏதோ பொருள் உருளும் சத்தம். சிறு அதட்டல்.
அப்பா தோட்டத்தில் பால்மரம் சீவியவர். இப்போது இந்த வீடிருக்கும் பகுதி அவரது நிரையாக இருந்ததை இன்று நினைவுகூர்வார். “அதோ அந்த தொங்க வீடு இருக்கே… நம்ம முனுசாமி தண்டல் வீடுதான்… அங்கதாண்டா என்னோட வாளிக்கடை இருந்துச்சு. பெரிய மரம்… ரெண்டாளு கைய கோத்து பிடிச்சாலும் சிக்காம திமிறும். … பாதி மரத்த சீவி கோப்பி குடிக்க வாளிக் கடக்கி வந்து நிக்கிறப்பவே மூனு மங்கு நெறஞ்சி கீழ ஒழுகும்.. மனசு நெறஞ்சு வழியும்….”
அப்பா எதையும் மறக்கவில்லை. குறிப்பாக அந்த பங்களா.
குன்றின் சரிவில் தெற்கு முகத்தில் இருந்தது ஒரு பெரிய குளம். குளம் நிறைய காம்புகள் ஏந்திப் பிடித்திருக்கும் சிவந்த தாமரைப் பூக்கள். நீரில் மிதக்கும் பசுமை இலைகள். அதனைச் சுற்றிவர நின்று தலை யாட்டி ரசிக்கும் ரப்பர் மரங்கள்.
இன்றும் அங்கே அந்த குளம் உண்டு. ஆனால், தாமரைக் கொடிகளோ பூக்களோ ஏதுமில்லை. புதர் மண்டிக் கிடக்கிறது அதன் கரை நெடுகிலும். ‘மீன் பிடிக்க அனுமதியில்லை’ என்கிற அறிவிப்புப் பலகை சிவந்த எழுத்தில் பாக்கார் வேலிக்குள்ளிருந்து எச்சரிக்கிறது. ஒரு பக்கம், அதன் கரையில் கம்பீரமாய் எழுந்து நிற்கிறது பள்ளிவாசல்.
ஒரு காலத்தில், குளத்தின் கரையிலிருந்து அண்ணாந்து வடக்காய் பார்க்க குன்றின் உச்சியில் பங்களா தெரியும். இப்போது, அதை உயர்ந்த கட்டிடங்கள் மறைத்து நிற்கின்றன. குளக் கரையிலிருந்து பார்க்க பங்களா கண்களுக்குப் புலப்படுவது சிரமமாக உள்ளது. சற்றே கூர்ந்து தேடினால் மட்டுமே அதன் தலை உச்சி தென்படும். மேலேறிச் சென்று அதனை அடைவதற்கான மலைப்பாதையும் தூர்ந்துபோய் நாளாகிறது. மிகவும் சிரமத்தின் ஊடேதான் அந்த வழியில் மேலேற முடியும். வழியை மறைத்துவிட்ட காட்டுச் செடிகளை வெட்டி சரிசெய்து கொண்டுதான் போக வேண்டும். ஒரு வழியாக போய்ப் பார்த்தால், எதிரே அன்றிருந்த அழகான பால் வெள்ளையில் மிளிர்ந்த பங்களா இப்போது இல்லை. சிதையுற்ற ஒரு குட்டிச் சுவர் மட்டுமே கண்களில் படும். அதனூடே, காட்டு மரங்களும் செடிகளும் புதர்களும் கொடிகளும் ஆக்கிரமிப்பு செய்திருக்க பாம்புகளின் வசிப்பிடமாக மாறி விட்டிருந்தது.
அப்பாவோடு ஒருமுறை சின்னப் பையனாக இருந்தபோது அந்தக் குன்று பங்களாவுக்குப் போனதுண்டு. அது ஒரு சாயங்காலப் பொழுது என்பது இன்னும் நினைவிருக்கிறது. அன்று விஷேசமாக வானத்தில் வானவில் பல வண்ணக் கோலங்களில் அடிவானத்தில் பிசுபிசுக்கும் தூறலின் ஊடே தெரிந்ததை ஒரு புகைப்படம் போல மனதில் பதித்து வைத்துள்ளேன். மேலேறிச் சென்ற மாலை வளைவுப் பாதையில் பாதி தூரம் கடந்த நிலையில் சற்றே நின்று சுற்றிவர கண்ணோட்டமிட, தேவாமிர்தம் நாவில்பட்டது போன்ற சுவை. கண்ணுக்கெட்டிய தூரம் மாலைச் சிகரங்களின் அணிவகுப்பு. வடக்கில் நின்றது குனோங் ஜெராய். அதனடிவாரத்தில் மெர்போக் என்னுமிடத்தில் சோழப் பேரரசு காலடி வைத்த சான்றுகள் இன்றும் காட்சிக்கு உண்டு. அது வேறொரு காலம்! மிக நெருக்கத்தில் தெரிந்தது தாமரைக் குளம். மாலைநேர மஞ்சள் வெயிலின் கிரணங்கள் ஊர்ந்து செல்ல தகதகத்தது. மலைச் சரிவில் நிறைந்திருந்தன டுரியான் மரங்கள். நிறைய பூ பிடித்திருந்தன.
வழக்கத்திற்கு மாறாக அப்பா இதில் எதனையும் கண்டு கொள்ளாமல் ஏதோ ஆழ்ந்த யோசனையில் வழியைப் பார்த்து முன்னே நடந்து போனது ஆச்சரியப்படுத்தியது.
பங்களாவை நெருங்க மன தில் பதட்டம். முதல் முறை முதலாளி பங்களாவை பக்கமே நின்று பார்க் கப்போகும் ஆவல். இத்தனை கால மும், அதன் அடிவாரத்தில் நின்று, பையன்களோடு சேர்ந்து, ஒரு விளையாட்டு பொம்மை வீடு போல் தெரிந்ததை, தூர நின்று பார்த்த தோடு சரி.
முதலாளி ஐயா, வாசலி லேயே சாய்வு நாற்காலியில் ஒய்யார மாக சாய்ந்தபடி வரவேற்றார். ‘வா குருசாமி’. இந்தக் கோலத்தில் அவரைப் பார்க்கவே வினோதமாக இருந்தது. கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன். பருமனான உடம்பு. மாநிறம். மேலே அரைக்கை பனியன். அதன்மேல் ஒரு துண்டு. இடுப்பில் தளர்ந்த வேட்டி. பனியனை முட்டித் தள்ளி துரத்தி பிதுங்கி வழியும் பானை வயிறு. நெற்றியில் வழக்கமான அகல திருநீற்று கீற்றும் அதன் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் குங்குமப் பொட்டும் சந்தனப் பொட்டும். அகண்ட முகத்தில் வசதியின் வசீகரமும் பூரிப்பும் கலந்து பூசிய மெல்லிய புன்னகை. “உன்ன எதுக்கு வரச் சொன்னனு தண்டல் சொன்னானா குருசாமி?” என்று அதிகாரம் தொனிக்கும் குரலில் அவர் அப்பாவிடம் கேட்ட விதம், என்னவோ செய்தது. பிறகு, மெதுவாக என் பக்கம் திரும்பி, “இது யாரு? மகனா?” என்று புருவங்களை உயர்த்தி கேட்டார். அப்பா வெறுமனே தலையாட்டினார்.
“அவன் அப்படி கொஞ்சம் தள்ளி நிக்கச் சொல்லு குருசாமி. ஒங்கூட கொஞ்சம் தனியா பேசணும்.”
வீடு திரும்ப, மலைச் சரிவில் இறங்கி வரும்போது, அப்பா எதுவுமே பேசாமல் உம்மென்று தலையைத் தொங்கப்போட்டு வந்தார். வீடு சேர்ந்தும் எவரிடமும் எதுவும் பேசாமல், அஞ்சடி பிராஞ்சாவில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து சுருட்டு பிடித்தபடி, ஏதோ பலத்த யோசனையில் இருந்தார்.
பொழுது இருட்டி விளக்கு வைக்க, குசினியில் அம்மாவோடு ஏதோ ரகசியக் குரலில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. பேச்சு முற்றி, அம்மாவின் குரல் ஓங்கியது. ஏதோ சொல்லி அழுது கொண்டி ருந்தாள். பின் எல்லாம் அடங்கிப்போனது.
அன்று இரவு அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் டார்ச் லைட்டுடன் எங்கோ போய்விட்டு வெகுநேரம் கழித்து வந்ததை இன்னமும் மறக்க முடியவில்லை.
அப்பா இப்போதும், எப்போதேனும் அந்த புதர் மண்டிய பாதையில் மலையின் உச்சிக்குப் போய் வருகிறார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அங்குதான் நிரந்தரமாய் தொலைத்து வந்த ஏதோவொரு விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை மீட்டெடுக்கும் ஒரு பகீரதப் பிரயத்தனத்தின் தொடர் பயணமாகவே அது தோன்றியது. அவரது துயரமிக்க வெறிச்சிட்ட பார்வை தினமும் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது.
அப்பாவுக்கும் அம்மாவுக்குமான உறவில் அன்றைய இரவோடு எதனாலுமே நிவர்த்திக்க இயலா விரிசல் ஒன்று விழுந்து விட்டதை அப்போதே உணர முடிந்திருந்தது. அதன் பின், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையிலான தொடர் சாதனம் என்பது ஒரு தலையசைப்பு, ஆம், இல்லை என்கிற இரு சொற்களுக்குள் தன்னை சுருக்கிக் கொண்டு, காலப் போக்கில் அவையும் வடிந்து வற்றிய நிலையில், இருவரும் தங்களது தனித்த உலகின் மௌன வெளியுள் மூழ்கி கரைந்து காணாமல் போயினர்.
இங்கு இடம்பெயரும் முன்பு கொஞ்சகாலம் ஆத்தோரம் வாழ்ந்ததையும் சொல்லியே ஆக வேண்டும்.
தோட்டம் கைமாறி வெளியேற்ற உத்தரவு கொடுக்கப்பட்டு தோட்டத்து ஜனங்கள் எங்கே போவது என்ன செய்து பிழைப்பது என்று கையைப் பிசைந்து கொண்டு நின்ற நேரம் அது. ஒருநாள் பொழுது விடிய டவுனுக்கு புறப்பட்டுப் போன அப்பா பொழுது சாய வாசலில் வந்து நின்று சொன்னார். “டேய். .. வாடா இங்க… நாம அடுத்த வாரம் டவுனுக்குக் குடி போறோம்டா… ஒங்கம்மா கிட்ட சொல்லிடு… நம்ம புக்கான் லாமால முத்தையா ஒட்டுக்கடக்கி பின்னால கள்ளுக்கட மேட்ட தாண்டி புக்கான அத்தாப்பு இருக்குல்ல…அங்கதான் வீடு… உப்பு தண்ணி ஆத்து ஓரமா… போய் பாத்து இருபது வெள்ளி சேவா பேசி முடிச்சாச்சு…”
அன்றே தோட்டத்து லயத்து வீட்டோடு, அப்பா டவுனில் சேவா பேசி முடித்து வந்திருக்கிற வீட்டை கற்பனையில் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிவிட்டது மனம். தோட்டத்து லயத்து வீடு என்பது ஒரு சிறிய கூடு. 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் ஒரு குடும்பமே அடக்கம். நீண்ட வரிசை வீடுகள். அதில் இடையில் ஒரு துண்டாக ஒட்டிக் கொண்டிருந்தது எங்கள் வீடு. அத்தனை வீடுகளுக்கும் பொதுவான ஒரு அஞ்சடி. அதில் ஒவ்வொரு வீட்டு முன்பும் உட்கார, கதை பேச, மதியம் தலை சாய்க்க ஒரு வாங்கு. அஞ்சடி, ஆடு கோழிகளின் வசிப்பிடமாகவும் பயன்படும்.
வாசலைக் கடந்து உள் நுழைய, வலது வாட்டத்தில் ஒரு தடுப்பு. அதுதான் எங்கள் அத்தனை பேரின் படுக்கையறை. அதன் முழுமையும் அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய வாங்கு. தடுப்பை ஒட்டி ஒரு காலி இடம். வரவேற்பறையாகப் பயன்பட்டது. அதைக் கடக்க வரும் அடுப்பங்கரை. புகை அப்பி கறுத்துக் கிடக்கும். அதன் முனையில் அடுப்பு. தரையோடு பதிந்தசிமிந்தி அடுப்பு. அதற்கு மேல் சுவரில் ஒரு மண்ணெண் ணெய் விளக்கு தொங்கும். அடுப்பை ஒட்டி விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும். இன்னொரு பக்கம் ஆணியில் குவளைகள் தொங்கும். மங்குகள் அடுக்கப்பட்டிருக்கும். குடி தண்ணீருக்கான தக்கர் ஒன்று இடுப்பு உயரத்தில் நிற்கும். இல்லாத விஷயம் கக்கூஸ். பொது கக்கூசுக்கு லயத்து எல்லைக்குப் போக வேண்டும். குளியலறை என்பது வீட்டுக்குப் பின்புறம் அப்பா தகரங்களை வைத்து அமைத்திருந்த தடுப்பு.
இதுபோல் இல்லாத கூடுதலான விஸ்தாரமும் வசதியும் கொண்ட வீடாக கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தது மனம். ஒருநாள் மூட்டை முடிச்சு களோடு போய், அப்பா பார்த்த வீட்டு முன் நின்றபோது, பெரியதொரு ஏமாற்றம் கவ்விக் கொண்டது.
ஆற்றை ஒட்டியிருந்தது வீடு. உடல் முழுக்கவும் கருமை நிறம். அதன் பின்னணியில் ஆறும் கருமை நிறத்தில். பாதி வீட்டுக்கும் கூடுதலான பகுதி ஆற்றுக்கு மேல் காலூன்றி நின்றது. வீட்டு வாசல், தரைக்கு மேல் ஒரு ஆள் உயரத்தில் நின்றது. மேலேறிச் செல்ல ஏணி போன்ற படிக்கட்டு. அண்ணாந்து பார்த்து நின்றேன். அப்பாதான் தைரியம் சொன்னார். “பயப்படாதடா… ஒண்ணும் ஆவாது… தெகிரியமா கால வச்சு ஏறு!” வீட்டின் உட்புறமும் ஏமாற்றமளித்தது. அறையென்று தனியாக ஏதுமில்லை. துணியை கம்பியில் கட்டித் தொங்கவிட்டு இரண்டு தடுப்புகள். ஒன்று, சாமி மேடைக்கென்று அம்மா ஒதுக்கிக் கொண்டார். இன்னுமொரு தடுப்பு கக்கூஸ். பலகைத் தரையில் ஒரு வட்ட ஓடை. அதுதான் கக்கூஸ். அதில்தான் எல்லாம் போக வேண்டும். போவது அத்தனையும் உப்பு ஆற்று நீரில் கலந்து நகர்ந்து போகும். தோட்டத்து பொது கக்கூசுக்கு இது தேவலாம் என்று தோன்றியது.
வீட்டுத் தரைதான் பிரச்சனையாக இருந்தது. ஒவ்வொரு முறை காலடி எடுத்து வைக்கும் போதும், வீடு சற்றே அதிர்ந்து குலுங்குவது போன்று இருக்கும். அதனாலேயே அப்பா, “பாத்து நடங்க…வேகமா நடந்தா வீடு ஆடிப் போயிடும்…!”என்று நினைவுறுத்தியபடியே இருப்பார். அதைவிடவும் மோசமான விஷயம் தரையில் கண்டிருந்த விரிசல்கள். ஏமாந்து வைத்தால் கால் உள்ளே இறங்கிவிடுமோ என்கிற அளவுக்கு இருந்தது. அதன் ஊடே கீழே நகரும் கரிய ஆறு தெரியும்.
ஒருநாள் இரவு நல்ல நீர் ஏற்றம். பகலில் பெய்த கடும் மழையில் நீர் பெருக்கெடுத்திருந்தது. தூக்கம் பிடிக்காமல் புரள கீழிருந்து ஏதேதோ சப்தங்கள். ஒரு சமயத்தில் இதுவரையிலும் கேட்டிராத புத்தம்புது சப்தம். இதுவரை அங்கே கேட்டிராத குரல். அழுத்தமான கரடுமுரடான குரல். பயமெடுக்க, எழுந்து உட்கார்ந்து அம்மாவை எழுப்ப, அவர் கூர்ந்து கேட்டு சொன்னது திடுக்கிட வைத்தது. “அது உப்பு தண்ணி மொதலடா.. அதான் இப்படி கத்தும்… நீ பயப்படாத… அது கீழதான இருக்கு…. தண்ணி வத்தனா அதுவும் போயிரும்.” அன்று முழுக்கவும் தூக்கமில்லாமல் போனது. அதன் பிறகு கக்கூசில் கீழே நகரும் ஆற்றை அச்சத்துடன் பார்த்துக் கொண்டுதான் உட்கார முடிந்தது.
பட்டணத்துக்கு இடமாற்றம் செய்து கொண்ட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிந்திருந்தது இரண்டு முக்கிய வேலைகள்தான். ஒன்று மரத்தை சீவுவது மற்றது வெளிக்காட்டில் மம்மட்டி வெட்டுவது.
இந்த இரண்டுமே பட்டண பிழைப்புக்கு உதவாமல் போயின.
இதோ மழை பிசுபிசுக்கத் தொடங்கிவிட்டது. மழைக்காலம் இல்லை என்றாலும் பெய்கிறது. “எல்லாம் தலகீழா மாறிப் போச்சுடா” என்பது அப்பாவின் வியாக்யானம். உண்மைதான். எதுவும் புரியவில்லை. எல்லாமே குழப்பத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
தொலைதூரம் கனத்த இடியும் அதனைத் தொடரும் மின்னல் வெட்டும்.
அம்மாவுக்கு நினைவு தவறி கொஞ்ச நாளா கிறது. இப்போது அவருக்கு ஏதும் நினைவில் இல்லை. நினைவில் இருக்கக் கூடாது எனகிற வேண்டுதலின் பயனாகவும் இருக்கலாம். தன்னை மறந்த நிலை. ஏதோவொரு நோய் பெயரைச் சொன்னார் டாக்டர். மூளையைச் சிறுகச் சிறுகத் தின்று தீர்த்துவிடுமாம். தன்னுணர்வு என்பதே அறவே அற்றுப்போன பரிதாபநிலை. அப்பாதான் இப்போது அவருக்கு எல்லாம். பீய் மூத்திரம் அள்ளுவது தொடங்கி குளிப்பாட்டி உடுத்துவது வரை.
மேலும் ஒரு சிகரெட் தேவைப்பட்டது. கடைசி சிகரெட்டை உருவி பற்றவைக்க, கைகளில் லேசான நடுக்கம். வீட்டினுள் மயான அமைதி. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
எதிர்வீட்டுக் கதவு திறப்பது தெரிகிறது. அவன் புறப்படத் தயாராகிவிட்டதற்கான ஆயத்த அறிகுறி.
இன்னும் சிறிது நேரத்தில் அவன் எங்கேனும் ஒரு மஜ்லிஸ் பண்டாரான் குப்பைத் தொட்டியை டார்ச் லைட் விளக்கொளியில் கிளறி எதையேனும் தேடலாம். ஏதேனும் சிக்க முகம் மலரலாம். அது பின்னிரவின் நிசப்தம் சூழ்ந்த உலகாக இருக்கலாம்.
வேறு எதனையும் நினைத்துப் பார்க்கும் பொழுதாக அவனுக்கு அது இராது. ஒரு வேளை நாளை காலை அதற்கான சந்தர்ப்பம் அமையலாம்.
நாளை பொழுது விடிய இங்கே வீடு காலியாக இருக்கும்.
ஆள் அரவமற்று, இரைக்கு அலையும் சிட்டுக்களின் குரல் மட்டும் வாசலில் ஒலித்திருக்கும்.
வீடு ஏலம் போவதை அறிவிக்கும் நோட்டிஸை வழங்க வந்து நிற்கும் நில அலுவலக ஊழியர்கள், பூட்டிக் கிடக்கும் வீட்டைப் பார்த்து ஏமாற்றத்துடன் நிற்கலாம்.
“நொண்டி பாலா எங்கியோ குடும்பத்தோட போய்ட்டாருப்பா… வீடு பூட்டிக் கெடக்கு.. .வீடு ஏலத் துல போவப் போவுதாமே…. எங்க போனாரு மனுஷன்?”
வெளியில் குரல் கேட்டு வரும் சீனக் கிழவனுக்கு எங்கள் நினைவு வரலாம். வாசலில் இரைக்காய் அலையும் சிட்டுக்களின் படபடப்பு கவனத்தை ஈர்க்கலாம். விஷயம் அறிந்து யோசனையில் மூழ்கலாம்.
சிட்டுக்கள் அலையும் வெறிச்சிட்ட வாசலில், வழக்கமாய் தேய்ந்த சக்கரங்கள் முக்கி முனக தவிப்புடன் முன்னும் பின்னும் அலைந்தபடி இருக்கும் சக்கர நாற்காலியின் கிரீச்சிடும் ஒலியும், அதனுள் புதைந்து கிடந்து சிகெரெட் புகைத்தபடி சதா யோசனையில் மூழ்கிக் கிடக்கும் மனிதனும் அப்போது அங்கே இல்லாமல் போன வெறுமை மனசைக் கீறிப் பார்க்க பூட்டிக் கிடக்கும் எதிர்வீட்டு வாசலை வெறித்தபடி நிற்கலாம் நீண்ட நேரம்.
இனி, வீடு என்கிற தேவை எங்களுக்கு ஒரு போதும் இருக்கப்போவதில்லை என்பதை உணராமலேயே.