பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தான் கொளஞ்சிநாதன். அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்த மாதிரி பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. பேருந்தில் ஏறி உட்கார்ந்துகொண்டான். அதிக கூட்டமில்லாமல் இருந்தது. நடத்துநரிடம் “கடலூருக்கு ஒரு டிக்கெட்” என்று சொல்லி பணத்தைக் கொடுத்து பயணச்சீட்டை வாங்கிக்கொண்டான். அவன் வருவதற்கும், பேருந்து புறப்படுவதற்கும் தயாராக இருந்தது. ஏறி உட்கார்ந்த சில நிமிஷங்களிலேயே பேருந்து புறப்பட்டதெல்லாம் நல்ல சகுனமாக தெரிந்தது. போகிற காரியம் ஜெயமாகும் என்று நினைத்தான்.
“இன்னிக்கு ரெண்டு மணிக்கு கடலூர்ல இருக்கிற எஸ்.பி. ஆபிசுக்கு பின்னால இருக்கிற கல்யாண மண்டபத்துக்கு வாங்க” என்று கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திலிருந்து போன் வந்தது. முதல் கேள்வியாக, “எங்கப்பாவப் பத்தி தகவல் தெரிஞ்சிடிச்சா?” என்று கேட்டான். அவனுடைய அவசரத்தையும், பதற்றத்தையும் புரிந்துகொள்ளாத காவலர் “கடலூருக்கு வாங்க பேசிக்கலாம்“ என்று மொட்டையாக சொன்னதும், “தயவு செஞ்சி சொல்லுங்க சார்“ என்று சொல்லி கெஞ்சினான். “கடலூர் போனாத்தான் தெரியும். ஒங்களோட ஐ.டி. புரூஃப், காணாம போனவரோட ஐ.டி. புரூஃப் எடுத்துக்கிட்டு வரணும். கரக்ட்டா ரெண்டு மணிக்கு ஆஜராகணும்” என்று எச்சரிக்கை செய்வதுபோல் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். காவலர் மீது கோபம் வந்தது.
கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு வரச்சொல்லாமல் எதற்காக கடலூருக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள்? காணாமல் போய்விட்ட தன்னுடைய அப்பா கலியமூர்த்தி பற்றி தகவல் தெரிந்துவிட்டதா, உயிருடன் இருக்கிறாரா, எங்கு இருக்கிறார் என்று கேட்க வேண்டும்போல மனது துடித்தது. அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது. “விஷயத்தை சொல்லியாச்சி. அப்புறம் எதுக்கு போன் போட்ட?” என்று கேட்டால் என்ன செய்வது? குழம்பிப் போனான். கலியமூர்த்தி உயிரோடு இருக்கிறார் என்று தெரிந்தால் போதும். அவன் அமைதியாகிவிடுவான். திட்டினால் திட்டட்டும் என்ற எண்ணத்தில் காவலருக்கு போன் போட்டான். போன் எடுக்கப்படவில்லை. மீண்டும் போட்டான், எடுக்கவில்லை. “உசுரோடதான் இருக்கார்னு ஒரு வார்த்த சொல்றதில என்ன நஷ்டம் வந்திடும்? போலீஸ்ங்கிற திமிர்” என்று சொன்னான்.
காவலரிடமிருந்து போன் வந்ததிலிருந்து கொளஞ்சிநாதனால் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. வீட்டிற்கும் வாசலுக்குமாக நடந்தான். வீட்டிற்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தான். “நிதானமா இருங்க“ என்று சொன்ன சுமதியின் மீது எரிந்து விழுந்தான். மணி என்ன, மணி என்ன என்று கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். உடனே கடலூருக்குப் போய்விட வேண்டும் என்று துடித்தான். என்ன செய்வது, யாரிடம் விஷயத்தைச் சொல்வது என தெரியாமல் தவித்தான். தன்னுடைய அக்கா பார்வதிக்கு போன் போட்டு காவலர் கடலூருக்கு வரச்சொன்ன செய்தியைச் சொன்னான். “நானும் வரன்“ என்று சொன்ன பார்வதியிடம், “விஷயம் இப்பிடியா, அப்பிடியான்னு தெரியல. போலீசும் விஷயத்தை ஒடச்சி சொல்லல. நான் போயிப் பாத்திட்டு சொல்றன். நீ அலைய வாணாம்“ என்று சொல்லிவிட்டு அவசரமான காரியத்தை செய்வதுபோல் போனை வைத்தான்.
கலியமூர்த்தி காணாமல் போய்விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டது. நடையாய் நடந்து பார்த்தான். எந்தப் பதிலும் சொல்லவில்லை. இன்று தானாகவே கூப்பிட்டு வரச்சொல்லியிருக்கிறார்கள். காரணம் இல்லாமலா வரச்சொல்வார்கள்? தகவல் தெரிந்திருக்கும். அதனால்தான் வரச்சொல்லி இருக்கிறார்கள் என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டான். அவசர அவசரமாக குளித்தான். பெயருக்கு சாப்பிட்டான். என்ன சாப்பிட்டான் என்றுகூட அவனுக்குத் தெரியவில்லை. பதினோரு மணிக்கு பேருந்தில் ஏறினால் ஒரு மணிக்கு கடலூர் போய்விடலாம். காவலரிடமிருந்து எட்டு மணிக்கு போன் வந்தது. கொளஞ்சிநாதன் ஒன்பது மணிக்கே பேருந்தில் ஏறிவிட்டான். பேருந்தில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் அவனுக்கு நிதானமே வந்தது. அதே நேரத்தில் கடலூரில் என்ன சொல்வார்களோ என்ற கவலையும் இருந்தது. காவலரிடமிருந்து போன் வந்ததிலிருந்து கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கை உண்டாகியிருந்தது. அதே நேரத்தில் கலியமூர்த்தி இறந்துபோய் அதை சொல்லாமல் காவலர் மறைத்தாரோ என்ற எண்ணமும் மனதில் உண்டானது. அப்பிடி நடந்திருக்கக் கூடாது. “உசுரோட இருக்கணும்டா கொளஞ்சியப்பரே“ என்று வேண்டிக்கொண்டான். உயிருடன் கிடைப்பாரா, பிணமாகக் கிடைப்பாரா என்ற இரண்டு கேள்விகளையும் யோசித்துயோசித்து அவனுக்கு மண்டை காய்ந்து போனது.
தீபாவளிக்கு மறுநாள் காலையில் வயலுக்குப் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போன கலியமூர்த்தி காலை சாப்பாட்டுக்கும் வரவில்லை. மதிய சாப்பாட்டுக்கும் வரவில்லை. இரவு சாப்பாட்டுக்கும் ஆள் வரவில்லை என்று தெரிந்த பிறகுதான் அவரைப் பற்றிய சிந்தனையே கொளஞ்சிநாதனுக்கும் அவனுடைய மனைவி சுமதிக்கும் வந்தது. உடனே தன்னுடைய அக்காவுக்கும், இரண்டு தங்கைகளுக்கும் போன் போட்டு விசாரித்தான். வரவில்லை என்று சொன்னதும் உறவினர்களுக்கு வரிசையாக போன்போட்டு கேட்டான். எல்லாருமே ஒரு வாய்போல வரவில்லை என்றுதான் சொன்னார்கள். ஊருக்குள் பலரிடமும் கேட்டபிறகுதான் பயம் உண்டானது. வீடு வீடாக, தெருத் தெருவாக போய் விசாரித்தான். எந்த தகவலும் கிடைக்கவில்லை. “எதனா சொன்னியா?” என்று திரும்பத் திரும்ப சுமதியிடம் கேட்டான். தவறாக ஏதாவது பேசியிருப்பாளோ என்கிற சந்தேகம் அவனுக்கு இருந்தது. இரவு என்று கூட பார்க்காமல் ஊரிலிருந்த ஏரி, குளம், ஓடை, புதர்க்காடு என்று ஒவ்வொரு இடமாகத் தேடிப் பார்த்தான். எங்கு தேடியும் ஆள் கிடைக்கவில்லை. காணாமல் போன முதல் நாள் எங்காவது உறவினர் வீட்டில் இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் கழிந்த பிறகு அந்த எண்ணம் போய்விட்டது. ஊர் ஊராகப் போய்த் தேடினான். கோவில் கோவிலாகப் போய்த் தேடினான். போஸ்டர் அடித்து ஒட்டினான். விளம்பரம் கொடுத்தான். காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தான். காலையில் எழுந்து போனால், இருட்டுகிற வரை ஒவ்வொரு ஊராக, தெருத் தெருவாக தேடி அலைவதுதான் அவனுடைய வேலை. கலியமூர்த்தி காணாமல்போய் இன்றோடு மூன்று மாதம் இருபது நாட்களாகிவிட்டது. மூன்று மாதத்தில் அவனுக்கு நம்பிக்கையான ஒரு வார்த்தைக்கூட கிடைக்கவில்லை. இன்றுதான் முதல் தகவலாக காவல் துறையிலிருந்து வரச்சொல்லி இருக்கிறார்கள்.
சாதாரணமாக கலியமூர்த்தி வெளியூர்களுக்கு அதிகம் போக மாட்டார். உறவினர்களுடைய விசேஷத்திற்கு போனால்கூட போன வேகத்தில் திரும்பி வந்துவிடுவார். மூன்று மகள்கள் இருந்தாலும் தேவையில்லாமல் அவர்களுடைய வீட்டிற்கும் போக மாட்டார். அப்படிப்பட்ட ஆள் எங்குபோய் இருப்பார் என்ற கேள்விக்கான பதில் கொளஞ்சிநாதனுடைய குடும்பத்தாருக்குத்தான் என்றில்லை ஊரார்களுக்கும் தெரியவில்லை. கலியமூர்த்தி காணாமல் போனது புதிராக இருந்தது. அதைவிட பெரிய புதிர் அவரைப் பற்றி எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை என்பது.
மருமகள் மாமனார் சண்டை அதனால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விட்டார் என்றும் சொல்ல முடியாது. கொளஞ்சிநாதனுடைய மனைவி சுமதி, கலியமூர்த்தியின் தங்கை மகள்தான். சுமதி கோபித்துக்கொண்டாலும், சண்டை போட்டாலும் கொளஞ்சிநாதனோடு சரி. அவரிடம் மரியாதையாகத்தான் நடந்துகொள்வாள். அவர்களுக்கிடையே ஒரு நாளும் சண்டை வந்ததில்லை. இரண்டு பிள்ளைகளும் அவரிடம் நன்றாகத்தான் இருப்பார்கள். அவருக்கும் பேரப்பிள்ளைகள் என்றால் உயிர். கொளஞ்சிநாதன் வேலைக்குப் போய்விட்டு வந்தாலும் வெளியூருக்கு போய்விட்டு வந்தாலும் சுமதியிடம் கேட்கிற முதல் கேள்வி “எங்கப்பா சாப்பிட்டாரா?“ என்பதுதான். அவனுக்கு கல்யாணமாகி பதின்மூன்று வருஷமாகிறது. இத்தனை வருஷத்தில் மாமனார் மருமகள் சண்டை, மகனுடன் சண்டை என்று ஒருநாளும் வீட்டில் நடந்ததில்லை. சண்டைப் போட்டுக்கொண்டு மகள்களுடைய வீட்டிற்கென்று ஒரு நாளும் போனதில்லை. வீணாக ஊர் சுற்றுகிற ஆளுமில்லை. அநாவசியமாக டீ கடை, பெட்டிக் கடை, இட்லி கடை, கோவில் திண்ணையில் உட்காருவது என்ற பழக்கமே அவரிடம் இருந்ததில்லை. கூட்டத்திற்குப் போனால் சண்டை சச்சரவு வரும் என்று கூட்டமாக இருக்கிற இடத்திற்குக்கூட போக மாட்டார். காட்டுக்குப் போவார், வீட்டுக்கு வருவார். வேறெங்கேயும் போக மாட்டார். அப்படிப்பட்ட ஆள்தான் காணாமல் போய்விட்டார்.
நரசிங்கமங்கலத்திற்கு அருகிலிருந்த ஊர்கள், சிறு நகரங்கள் என்று எல்லா இடத்திலும் தேடியும் ஆள் கிடைக்கவில்லை என்பதால் ஜோசியம் பார்த்தான். கிளி ஜோசியம் கேட்டான். வைத்தீஸ்வரன்கோவிலுக்குப் போய் காண்டஜோசியம்கூட கேட்டான். எல்லா ஜோசியக்காரர்களுமே “வீட்டுக்குப் போங்க. தேடி அலைய வேணாம். எண்ணி பத்து நாளில தானா வீடுதேடி வந்திடுவார்“ என்று சத்தியம் செய்து சொன்னார்கள். ஜோசியக்காரர்கள் சொன்னது பலிக்கவில்லை. குலதெய்வம் கோவிலுக்குப் போய் “கோழி காவு கொடுக்கிறன். நூறு சிதறு தேங்கா ஒடைக்கிறன். ஆள கொண்டாந்து வீட்டுல விடு“ என்று வேண்டிக்கொண்டான். அந்தப் பிரார்த்தனைக்கும் எதுவும் நடக்கவில்லை. “உண்டியல் காசு போடுறன், மொட்டப் போட்டுக்கிறன்“ என்று திருப்பதிக்கு வேண்டிக்கொண்டான். எந்த வேண்டுதலும் பலன் தரவில்லை என்று நொந்து போயிருந்த நேரத்தில்தான் இன்று காலை கடலூர் வரச்சொல்லி காவலர் போன் செய்தார். இன்றாவது நல்ல பலன் கிடைக்குமா?
கொஞ்சம் சத்தம் அதிகரித்த மாதிரி இருந்ததால் கொளஞ்சிநாதனுடைய கவனம் சிதறியது. அக்கம் பக்கம் பார்த்தான். பேருந்து நெய்வேலி வந்துவிட்டது தெரிந்தது. கருவேப்பிலங்குறிச்சியில் கிளம்பிய பேருந்து வேகமாக வந்ததா?, மெதுவாக வந்ததா? எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. பொதுவாக பேருந்தில் ஏறி உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே தூங்கி விடுவான். எப்படித்தான் தூக்கம் வருமோ தெரியாது. தூங்கக் கூடாது என்றுதான் நினைப்பான். ஆனால் தூங்கிவிடுவான். போய்சேர வேண்டிய ஊர் வரும்வரை தூங்கிக்கொண்டேதான் போவான். ஆனால் இன்று தூங்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் சுத்தமாக கண்கள் மூடவில்லை. அவனுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.
பேருந்திற்குள் பத்துக்கும் அதிகமான ஆட்கள் ஏறினார்கள். ஏழெட்டுப்பேர் இறங்கினார்கள். யார் ஏறுகிறார்கள், யார் இறங்குகிறார்கள் என்று பார்ப்பதற்குக்கூட கொளஞ்சிநாதனுக்கு மனமில்லை. அவனுக்கு பக்கத்தில் ஒரு ஆள் வந்து உட்கார்ந்தார். முதல் பார்வைக்கு அவனுடைய அப்பாவைப்போலவே இருந்தார். கலியமூர்த்தி நல்ல கருப்பு, குள்ளம், வழுக்கை தலையாக இருக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்கு வெள்ளையாக இருந்தாலும் தலை நிறைய முடி இருந்தது.
கொளஞ்சிநாதனுக்கு இப்போதெல்லாம் கொஞ்சம் வயதான ஆட்களைப் பார்த்தாலே தன்னுடைய அப்பாவாக இருக்குமோ என்ற எண்ணம்தான் வரும். தூரத்திலிருந்து பார்க்கும்போது அவரைப்போலவே தோன்றும். பக்கத்தில் போய் பார்க்குபோதுதான் வேறு ஆள் என்று தெரியும். இந்த மூன்று மாதத்தில் நம்பிப்போய் ஏமாந்தது நூறு முறைக்குமேல் இருக்கும்.
பேருந்து நகராமல் நின்றுகொண்டிருந்தது கொளஞ்சிநாதனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அவனுக்கு சீக்கிரத்தில் கடலூருக்குப் போக வேண்டும் போலவும் இருந்தது. போகக் கூடாது என்றும் இருந்தது. போகிற இடத்தில் நல்ல செய்தி கிடைக்குமோ, கெட்ட செய்தி கிடைக்குமோ என்ற கேள்விகளுக்கிடையேதான் அவனுடைய மனம் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்தது. அவனுடைய உடம்பு ஒரே நேரத்தில் சூடாகவும் இருந்தது. குளிர்ச்சியாகவும் இருந்தது. கடலூரில் என்ன சொல்வார்கள் என்று யோசித்துக்கொண்டே பேருந்துக்கு வெளியே பார்த்தான். அவனுக்கு முன் இருக்கையில் உட்கார்ந்துகொண்டிருந்த ஆளிடம் வயதான ஒரு பெண் “ஐயா, சாமி தர்மம் பண்ணுங்க“ என்று சொல்லி இரண்டு கைகளையும் குவித்து கும்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஆள் காசும் கொடுக்கவில்லை. காசு இல்லை என்றும் சொல்லவில்லை. அந்த ஆள் காசு தரவில்லையென்று அந்தப் பெண் நகர்ந்து அடுத்த ஆளிடமும் போகவில்லை. தன்னிடம் வந்து கேட்டால் உடனே காசு தந்துவிட வேண்டும் என்று நினைத்தான். பையில் சில்லறை இருக்கிறதா என்று பார்த்தான். இரண்டு ரூபாய் காசு ஒன்றும், ஐந்து ரூபாய் காசு ஒன்றும் இருந்தது. இரண்டு ரூபாய் போடுவதா, ஐந்து ரூபாய் போடுவதா? இரண்டு ரூபாய் போட்டால் போதும் என்று நினைத்தான். தன்னுடைய அப்பாவும் இப்படி எங்காவது பிச்சை எடுத்துக்கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் வந்ததும் ஐந்து ரூபாயாக போடலாம் என்று நினைத்தான். தானாக கூப்பிட்டுப் போடலாமா? அந்தப் பெண் வரட்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது பேருந்து நகர ஆரம்பித்தது. ஐந்து ரூபாய் காசை எடுத்து அந்தப் பெண்ணின் கையில் வைப்பதற்கு முயன்றான். காசு தவறி கீழே விழுந்துவிட்டது. அந்தக் காசை அந்தப் பெண் எடுத்தாளா, இல்லையா என்று பார்ப்பதற்கு முயன்றான். அதற்குள் பேருந்து வேகமெடுத்துவிட்டது.
கொளஞ்சிநாதனுக்கு லேசாக தூக்கம் வருவதுபோல இருந்தது. கண்களை மூடிக் கொண்டான். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்து இரண்டு மூன்று நிமிஷ நேரம்கூட ஆகியிருக்காது. “ஐயா, சாமி தர்மம் பண்ணுங்க“ என்ற குரல் கேட்டதுபோல் இருந்தது. கண்களை திறந்து பார்த்தான். நெய்வேலி பேருந்து நிலையத்தைவிட்டு பேருந்து வெகு தூரம் வந்துவிட்டது தெரிந்தது. ஆனாலும் “ஐயா, சாமி தர்மம் பண்ணுங்க” என்று கெஞ்சிக் கேட்ட அந்தப் பெண்ணின் குரல் மீண்டும் எப்படி கேட்டது என்பதுதான் அவனுக்கு புரியவில்லை. பிச்சை கேட்ட பெண் பற்றி யோசித்ததும் வயிற்றில் சுரீர் என்று ஏதோ சுட்டதுபோல் வலித்தது. பிச்சை கேட்ட பெண்ணின் முகம் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அடுத்ததாக கலியமூர்த்தியின் முகம்.
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தால்கூட பரவாயில்லை. லாரியில், பேருந்தில், ரயிலில் அடிப்பட்டு சாகாமல் இருந்தால் போதும் என்று கொளஞ்சிநாதன் நினைத்தான். அப்போது தான் போட்ட ஐந்து ரூபாய் காசை அந்தப் பெண் எடுத்திருப்பாளா? தெருவில் நடந்து போனபோது, கோவிலுக்குப் போனபோதெல்லாம் பிச்சை கேட்டவர்களை நினைத்துப் பார்க்க முயன்றான். ஒரு முகம்கூட நினைவுக்கு வரவில்லை. இதுவரை தானாகப்போய் யாருக்கும் பிச்சைப் போட்டதில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. பிச்சை கேட்டதும் போட்டிருக்கிறோமா, இரண்டு மூன்றுமுறை கேட்டபிறகு போட்டிருக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தான். “சில்லர இல்ல எட்டப் போ“ என்று சொன்னது, “இதெல்லாம் ஒரு பொழப்பா“ என்று கேட்டது, “வெளிய போற நேரத்தில வழிய மறிச்சி கேக்கிறது என்ன பழக்கமோ?“ என்று கேட்டு முறைத்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. தனக்குத் தானே “சீ“ என்று சொல்லிக்கொண்டான். “இனிமே யார் வந்து கேட்டாலும் உடனே போட்டுடணும்.“ சாமி கோவிலில் சத்தியம் செய்வதுபோல் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
கொளஞ்சிநாதனுக்கு வலது கைப்பக்கமாக உட்கார்ந்துகொண்டிருந்த ஆள் தூங்கி அவனுடைய தோளில் சாய்ந்தார். சாய்ந்ததோடு அப்படியே தூங்கவும் செய்தார். அந்த ஆள் தோளில் சாய்ந்ததுமே சட்டென்று கோபம் வந்தது. கோபத்துடன் அந்த ஆளைப் பார்த்தான். அந்த ஆளினுடைய கையில் தட்டினான். அந்த ஆள் உடனே விழித்துக்கொண்டு நேராக உட்கார்ந்துகொண்டார். சில நொடிகள்தான். மீண்டும் அந்த ஆள் தூங்கிய நிலையில் அவனுடைய தோளில் சாய்ந்தார். கோபம் வந்தது. திட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த ஆள் தன்னுடைய தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருப்பதை மறப்பதற்காகவும், கோபத்தைக் குறைப்பதற்காகவும் வெளியே பார்த்தான். பேருந்து வடலூரை தாண்டி குறிஞ்சிப்பாடியை நெருங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. “அதுக்குள்ளாரவா வந்துடுச்சி?“ என்று ஆச்சரியப்பட்டான்.
இன்னும் அரைமணி நேரத்தில் கடலூருக்குப் போய் விடுவோம் என்ற எண்ணமே அவனை பதட்டமடைய வைத்தது. உடம்பில் சூட்டை அதிகரித்தது. “நல்ல சேதி கெடைக்கணும்ன்டா கடவுளே“ என்று வேண்டிக்கொண்டான். ஆள் மட்டும் கிடைத்தால் போதும், எங்கிருந்தாலும் எவ்வளவு செலவானாலும் அழைத்துக்கொண்டு வந்துவிட வேண்டும், காட்டிற்குப் போகாமல், வீட்டைவிட்டு வெளியே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பலவாறு திட்டம் போட்டான். அவனுடைய மனது ஓயாமல் யோசித்தபடியும் தனக்குத்தானே பேசியபடியும், இருந்தது. கலியமூர்த்தி திரும்பி வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்பதைத் தவிர அவனுடைய மனதில் வேறு வேண்டுதல் இல்லை. திரும்பி வந்து விடுவார் என்பதற்கு இதுவரை நம்பிக்கையான சிறு விஷயம்கூட நடக்கவில்லை. “அங்க பாத்தன். இங்க இங்க பாத்தன்” என்ற வார்த்தைகூட காதில் விழவில்லை.
குறிஞ்சிப்பாடியில் நின்ற வேகத்தில் பேருந்து புறப்பட்டது. குறிஞ்சிப்பாடியைத் தாண்டினால் குள்ளஞ்சாவடி. அடுத்ததாக தம்பிப் பேட்டை. கடைசியாக கடலூர் வந்துவிடும். நேரத்தில் போவது நல்லதா? கெட்டதா? அவனுக்குத் தெரியவில்லை. நேரத்தில் போக வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. நேரத்தில் போக வேண்டாம் என்ற எண்ணமும் இருந்தது. கலியமூர்த்தி காணாமல் போவதற்கு முன்பு இந்த மாதிரி குழப்பமெல்லாம் அவனுக்கு வந்ததே கிடையாது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் போவதா, நகரப் பேருந்தில் போவதா என்று யோசித்தான். அதற்குக்கூட அவனால் சட்டென்று முடிவெடுக்க முடியவில்லை. “பெரிய தலவலியா இருக்கு“ என்று நினைத்துக்கொண்டே பேருந்திற்கு வெளியே பார்த்தான். குறிஞ்சிப்பாடியை தாண்டிக்கொண்டிருந்தது பேருந்து. ஊரின் கடைசியில் மேற்குப் பக்கமாக இருந்தது மாட்டிறைச்சி கடை கண்ணில் பட்டது. உடனே கலியமூர்த்தி கறி சமைத்துப் போட்டது நினைவுக்கு வந்தது.
கலியமூர்த்தி சாதாரண நாட்களில் கறி எடுக்க மாட்டார். தீபாவளி, பொங்கல், ஆடிப் பதினெட்டுக்குத்தான் கறி வாங்குவார். கறி வாங்குகிற அன்று அவரேதான் சமைப்பார். சமைத்து முடித்ததும், கறி குண்டானையும், சோற்றுக் குண்டானையும் நடுவில் வைத்து, பார்வதி, கொளஞ்சிநாதன், கொளஞ்சியம்மாள், தெய்வநாயகி என்று நான்கு பிள்ளைகளையும் சுற்றி உட்கார வைத்துவிடுவார். ஒவ்வொருவருடைய தட்டிலும் சோறு ஒரு கரண்டி போடுவார். கறியை இரண்டு கரண்டி போடுவார். கறியும் சோறும் சூடாக இருக்கும். சூட்டில் சாப்பிட முடியாது. காரமாகவும் இருக்கும். சூட்டைப் பொறுத்துக்கொண்டாலும் காரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. காரத்தால் கண்களில் கண்ணீர் வரும். “ஒரைக்குது அப்புறம் சாப்புடுறேன்“ என்று சொன்னாலும்விட மாட்டார். “காரத்துக்கு நாக்குப் பழகட்டும்“ என்று சொல்வார். கறியைத் தின்று முடித்த பிறகுதான் எழுந்திருக்கவே விடுவார். கறியை எவ்வளவு காரத்துடன் சமைப்பாரோ அந்த அளவு காரத்துடன்தான் கத்திரிக்காயையும் சமைப்பார்.
நெல்லை விற்பதற்காக விருத்தாசலம் போகும்போதெல்லாம் மூன்று, நான்கு கிலோ என்று கத்திரிக்காயை வாங்கிக்கொண்டு வருவார். காயை வாங்கிக்கொண்டு வந்த அன்று ஒரே நேரத்தில் இரண்டு கிலோ அளவுக்கு வெட்டிப் போட்டு குழம்பு வைக்க மாட்டார். பொரியல் மாதிரி நிறைய பூண்டுகளை சேர்த்து வதக்கி எடுப்பார். கறியை எப்படி சாப்பிட வைப்பாரோ அதே மாதிரிதான் கத்தரிக்காயையும் சாப்பிட வைப்பார். “காரமா இருக்கு வாணாம்“ என்று சொன்னாலும்விட மாட்டார். “ஒடம்பு ஒரமாவனும் தின்னு“ என்று சொல்லி கட்டாயப்படுத்துவார். வெளியூர் போனாலும், உள்ளூரில் வந்து விற்கிற காயாக இருந்தாலும் அவர் வாங்குகிற ஒரே காய் கத்திரிக்காய்தான். அதுதான் விலையும் குறைவாக இருக்கும். நிறையவும் இருக்கும். கத்தரிக்காயைவிட்டால் அவருக்குத் தெரிந்த காய்கள் பூசணி, பரங்கிக்காய் மட்டும்தான். கீரை என்றால் முருங்கை, புளிச்சைக்கீரை.
சுமதி கறியை நன்றாகத்தான் சமைப்பாள். விதவிதமாக பொரியல் வைப்பாள். ஆனாலும் ஒவ்வொருமுறை கறி சாப்பிடும்போதும், கத்தரிக்காய் பொரியல் சாப்பிடும்போதும், கலியமூர்த்தி சமைத்துப் போட்ட கறியும், கத்தரிக்காயும்தான் ஞாபகத்திற்கு வரும். பெரியபெரிய ஹோட்டல்களில் எல்லாம் பலமுறை சாப்பிட்டிருக்கிறான். எங்கு சாப்பிட்டாலும் யார் சமைத்திருந்தாலும் கலியமூர்த்தி சமைத்தது போல் இருக்காது.
கலியமூர்த்தி சமைத்துப் போட்டது, பார்வதி சமைத்துப் போட்டதெல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால் அவனுடைய அம்மா சமைத்துப் போட்டது மட்டும் நினைவில் இல்லை. நல்லம்மாள் சாகும்போது கொளஞ்சிநாதனுக்கு ஏழு வயது. பள்ளிக் கூடத்தில் இருந்தவனை யாரோ ஒரு ஆள் வந்து “ஒங்கம்மா செத்துப் போச்சி வா“ என்று சொல்லி கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. வயலிலிருந்து வரும்போது பாம்பு கடித்து செத்துப் போனாள் என்று ஊர்க்காரர்கள் சொல்லித்தான் அவனுக்கு விஷயமே தெரியும். நல்லம்மாளின் முகம்கூட அவனுக்கு ஞாபகத்தில் இல்லை. பார்வதியும் கொளஞ்சியம்மாளும் நல்ல சிவப்பு. நல்ல உயரம், நல்ல அழகு. அவர்கள் இருவரையும் பார்ப்பவர்கள் எல்லாம் நல்லம்மாள் மாதிரியே இருப்பதாக சொல்வார்கள். கொளஞ்சிநாதனும், தெய்வநாயகியும் கலியமூர்த்தி மாதிரி குள்ளமாக இருப்பார்கள். நல்ல கருப்பு நிறத்தில் இருப்பார்கள். கலியமூர்த்தியின் தலையில் இருப்பது மாதிரியேதான் கொளஞ்சிநாதனின் தலையிலும் கால்வாசி முடிதான் இருக்கும்.
நல்லம்மாள் இறந்தபோது பார்வதிக்கு பத்து வயது. கொளஞ்சியம்மாளுக்கு ஐந்து, தெய்வநாயகிக்கு மூன்று. “அம்மா இல்லாத புள்ளைங்களை எப்பிடி வளத்து ஆளாக்கி இருக்கான் பாரு“ என்று ஊர்க்காரர்கள் சொல்லும் விதமாகத்தான் நான்கு பிள்ளைகளையும் வளர்த்தார். கொளஞ்சிநாதனை மட்டும்தான் படிக்க வைத்தார். வயதுக்கு வரவர ஒவ்வொரு பெண் பிள்ளையையும் கட்டிக் கொடுத்துவிட்டார். “ஒனக்கு வேல வந்த பின்னாலதான் கண்ணாலம்“ என்று சொல்லிவிட்டார். படித்துவிட்டு வந்து வீட்டிலிருந்த மூன்றாண்டுகள் வரையிலும் கலியமூர்த்திதான் சமைத்துப் போட்டார். வேலை கிடைத்த பிறகுதான் அவனுக்கு கல்யாணமே கட்டிவைத்தார்.
கலியமூர்த்தியுடன் எங்கெல்லாம் போனோம் என்று நினைத்துப் பார்த்தான். எந்த ஊருக்கும் அவனை அவர் அழைத்துக்கொண்டு போனதே இல்லை. விருத்தாசலத்தில் நடக்கும் மகம் திருவிழாவிற்கு மட்டும்தான் வருஷா வருஷம் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். அதுகூட திருவிழாவைப் பார்ப்பதற்காக அல்ல. நல்லம்மாளுக்கு திதி கொடுப்பதற்காக. வேலைக்குப் போன பிறகு “செலவுக்கு பணம் வேணுமா?” என்று கேட்டால் “எனக்கு என்னா செலவு இருக்கு” என்று கேட்பார். பணம் கொடுத்தால் வாங்கவே மாட்டார். மீறி கொடுத்தாலும் “அக்காகிட்ட கொடுத்திடு. அத மட்டும் கைவுட்டுடாத. பெத்தவ மாதிரி ஒன்னெ வளத்த புள்ள” என்று சொல்வார். புது வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்தால்கூட “காச எதுக்குக் கரியாக்குற” என்றுதான் கேட்பார். வயலுக்கு வேலைக்குப் போனால் “பேனா புடிக்கிற கையால மம்பட்டிய புடிக்க வாணாம். வீட்டுக்குப் போ“ என்று சொல்லி அனுப்பிவிடுவார்.
சுமதியுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும் பிள்ளைகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதும் கொளஞ்சிநாதன் அடிக்கடி சொல்கிற வார்த்தை “எங்கப்பா எப்பிடி கஷ்டப்பட்டு எங்கள வளத்தாரு தெரியுமா?” என்பதுதான். கலியமூர்த்தி பட்ட கஷ்டங்களையெல்லாம் சொல்வான். அப்படி சொல்லும்போது அவனுக்கு கண்கள் கலங்கிவிடும்.
அவன் பிளஸ் டூ படிக்கும்வரைதான் பெயர் சொல்லி கூப்பிட்டார். காலேஜிற்கு படிக்கப்போனதற்குப் பிறகு தம்பி என்றுகூட சொன்னதில்லை. “வாப்பா, போப்பா“ என்றுதான் சொல்வார். அதிகமாக பேச மாட்டார். கேட்பதற்கு மட்டும்தான் பதில் சொல்வார். “இங்கியே இரு” என்று சொல்லிவிட்டு போனால், போட்ட இடத்திலேயே எப்படி கல் கிடக்குமோ அதே மாதிரிதான் சொன்ன இடத்திலியே இருப்பார். “குண பேதகமான ஆளு மாதிரி ஒரு நாளும் நடந்துக்கிட்டது கெடயாதே. அப்பறம் எப்படி போயிருப்பாரு?” என்று யோசித்தான். வீட்டில் சண்டை ஏற்பட்டு கோபித்துக்கொண்டு போயிருந்தால் கூட பரவாயில்லையே என்று நினைத்தான். அவர் அடிக்கடி சொல்கிற “அச்சாணி இல்லாத தேரு முச்சாண்கூட ஓடாது” என்ற வாக்கியம் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
கலியமூர்த்தியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்த கொளஞ்சிநாதன் “பெத்த அம்மா கூட இப்படி பாத்திருக்காது, வளத்திருக்காது. ஒரு சண்ட இல்லெ. சச்சரவில்லெ. வாய்த்தகராறு கூட இல்லெ. எப்படி காணாம போயிட்டாரு?“ என்று தன்னிடமே கேட்டுக்கொண்டான். அவனுக்கு கண்கள் கலங்கின. கண்ணீரை மறைப்பதற்காக பேருந்திற்கு வெளியே பார்த்தான். பேருந்து கடலூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்துகொண்டிருப்பது தெரிந்தது. அப்போது அவனுடைய செல்போன் மணி அடித்தது. யார் கூப்பிடுவது என்று போனை எடுத்துப் பார்த்தான். அவனுடைய அக்கா பார்வதிதான் என்று தெரிந்ததுமே, “கடலூர் வந்திட்டேன். எஸ்.பி. ஆபிசுக்குப் போயிட்டுப் பேசறேன். நீ பதட்டமில்லாம இரு. விஷயம் தெரிஞ்சதும் ஒடனே கூப்புடுறன். நல்ல சேதி கெடைக்கும்னுதான் நெனைக்கிறன்“ என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
பேருந்தைவிட்டு இறங்கியதுமே கைக் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பனிரெண்டுகூட ஆகவில்லை என்பது தெரிந்தது. டீ குடித்துவிட்டுப் போகலாம் என்று டீ கடையை நோக்கி பத்து தப்படி தூரம்தான் நடந்திருப்பான். என்ன தோன்றியதோ திரும்பி ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
“எஸ்.பி. ஆபிசுக்குப் போகணும் வரீங்களா” என்று முதலில் நின்று கொண்டிருந்த ஆட்டோக்காரரிடம் கேட்டான். “அங்கதான் போவுது. ஏற்கனவே ஒரு ஆள் இருக்காரு. நீங்களும் வரதின்னா வாங்க“ என்று ஆட்டோக்காரர் சொன்னார்.
“சேந்து போறதில எனக்கொன்னுமில்லெ. எஸ்.பி. ஆபிஸ் போகணும் அவ்வளவுதான்.“
“ஏறுங்க“ என்று ஆட்டோக்காரர் சொன்னார். கொளஞ்சிநாதன் ஏறியதும் ஆட்டோ புறப்பட்டது.
தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தவரை பார்த்தான் கொளஞ்சிநாதன். பார்ப்பதற்கு நாகரிகமாக இருந்தார். அதிகாரியாக இருக்கலாம் என்று நினைத்தான். அவருடைய தோற்றம் அப்படித்தான் இருந்தது. “எஸ்.பி. ஆபிசுக்கா சார் போறீங்க?“ என்று கேட்டான். அதற்கு அவர் ஆமாம் என்பதுபோல் தலையை மட்டுமே ஆட்டினார். அடுத்த கேள்வியாக “எஸ்.பி. ஆபிசுக்குப் பின்னால போலீசுக்கான கல்யாண மண்டபம் இருக்காம். தெரியுமா சார்? “ என்று கேட்டான். அதற்கும் அவர் தெரியும் என்பதுபோல் தலையை மட்டுமே ஆட்டினார்.
“நீங்களும் அங்கதான் போறீங்களா?“ என்று கேட்டதற்கு பதில் சொல்வதற்கு பதில் ஆட்டோவுக்கு வெளியே பார்த்தார். அவர் பேசவில்லை என்பதற்காக கொளஞ்சிநாதன் பேசாமல் இருக்கவில்லை.
“எம் பேரு கொளஞ்சிநாதன். கவர்மண்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கன்“ என்று தானாகவே சொன்னான். “அப்படியா?“ என்றுகூட அவர் கேட்கவில்லை. பேசாமலேயே இருந்தார். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்னால் இருக்கிற கல்யாண மண்டபம் தெரியுமா என்று கேட்க நினைத்து “சார்“ என்று சொன்னான். இவன் சார் என்று எதற்காக சொன்னான் என்பதை புரிந்துகொண்டதுபோல் “என் பேரு ராமலிங்கம். என்.எல்.சி. எம்ப்ளாயி“ என்று மட்டும் அவர் சொன்னார். அவர் சொன்ன இரண்டு வார்த்தைகளே போதும் என்பதுபோல், “சார் தப்பா நெனைச்சிக்காதிங்க எங்கப்பா காணாம போயிட்டாரு. அதுக்காக ஸ்டேசனில கம்பளயிண்ட் கொடுத்தன். மூணு மாசம் கழிச்சி இன்னிக்கி வரச்சொல்லியிருக்காங்க. அதுக்குத்தான் போறன். சாரும் மண்டபத்துக்குதான் போறிங்களா?“ என்று கேட்டான். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. அதிகம் பேசாத ஆளாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.
காவலர்களுக்கான கல்யாண மண்டபத்தில் என்ன நடக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஆட்டோ மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன் வந்து நின்றுவிட்டது. முதலில் கொளஞ்சிநாதன் இறங்கினான். இரண்டாவதாக ராமலிங்கம் இறங்கினார். “எப்படி சார் போறது?“ என்று கேட்டதற்கு “வாங்க“ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் ராமலிங்கம். அவரோடு இணைந்து நடக்க ஆரம்பித்த கொளஞ்சிநாதன் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தைப் பார்த்தான். அலுவலகத்திற்குப் பின்னால் பெரிய மைதானம் இருந்தது. மைதானம் சுத்தமாக இருந்தது. முப்பது நாப்பது ஏக்கர் பரப்பில் இருக்கும்போல தெரிந்தது. மைதானத்தின் பிரமாண்டத்தை பார்த்து வியந்துபோனாள். “ஏற்கனவே வந்து இருக்கிங்களா சார்?“ என்று கேட்டான்.
“நாலு வருசமா அலயுறன்“ என்று ராமலிங்கம் சொன்னார். நான்கு வருஷமாக எதற்காக வந்துகொண்டிருக்கிறார் என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது அவனுடைய செல்போன் மணி அடித்தது. போனை எடுத்துப் பேசினான். காலையில் பேசிய காவலர்தான் பேசினார்.
“கடலூர் வந்திட்டிங்களா? சரியா ஒண்ணர மணிக்கெல்லாம் மண்டபத்தில இருக்கணும்“ என்று சொன்ன காவலரிடம் “வந்திட்டன் சார். மண்டபத்துக்குத்தான் போய்க்கிட்டிருக்கன்“ என்று சொன்னான். “அங்கியே இருங்க. வேற எங்கியும் போயிடாதிங்க. நான் அங்க வந்திட்டு கூப்புடுறன்“ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
காவலர் இரண்டாவது முறையாக போன் பேசியது கொளஞ்சிநாதனுக்கு திகிலை உண்டாக்கியது. மோசமான செய்தி கிடைத்து அதை போனில் சொல்ல வேண்டாம் என்று மறைக்கிறார்களோ? “கெட்ட சேதி கெடைக்கக்கூடாதுடா ஆண்டவனே. நல்ல சேதிதான் கெடைக்கணும்“ என்று கொளஞ்சியப்பரிடம் வேண்டிக்கொண்டான்.
“முத தடவயா வரிங்களா? என்று ராமலிங்கம் கேட்டார். “ஆமாம் சார்“ என்று சொன்னான். பிறகு மைதானத்தைப் பார்த்தான். கிழக்கிலிருந்த ஒரு கட்டிடத்தை நோக்கி ஆட்கள் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. தூரத்திலிருக்கிற கட்டிடம்தான் கல்யாண மண்டபமாக இருக்க வேண்டும் என்று யூகித்துக்கொண்டான். திரும்பிப் பார்த்தான், பின்னாலும் ஆட்கள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
“போலீசுக்கு தகவல் தெரிஞ்சிருக்குமா சார்?“
“தெரியல.“
“தீபாவளிக்கு மறு நாளு காட்டுக்குப் போறன்னு போன ஆளு மூணு நாலு மாசமா காணும் சார்“ என்று கொளஞ்சிநாதன் தானாகவே விஷயத்தை சொன்னான். பத்திருபது தப்படி தூரம் வரும்வரை எதுவும் பேசாமல் இருந்த ராமலிங்கம் “வீட்டுல சண்டையா?“ என்று கேட்டார். “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லெ சார். தீபாவளி அன்னிக்கி ராத்திரி நல்லாதான் சாப்புட்டுட்டு படுத்தாரு.“
“பிரச்சன ஏதாவது இருந்துச்சா? ட்ரீட்மண்ட் எதுவும் எடுத்திங்களா? “ என்று ராமலிங்கம் கேட்டார். அவர் எதற்காக அப்படி கேட்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட மாதிரி “மெண்டல் மாதிரியெல்லாம் இல்லெ சார். சரியா காது கேக்காது. சில நேரம் ஒக்காந்த எடத்திலியே ஒக்காந்திருப்பாரு. மத்தப்படி நல்லாத்தான் இருந்தாரு.“
“வயசு? “
“எழுபது சார். “
“அடிக்கடி காணாமப் போவாரா?“
“இதான் பஸ்ட் டைம்“ என்று சொல்லி முடிப்பதற்குள் கொளஞ்சிநாதனுக்கு அழுகை வந்துவிட்டது. “இன்னிக்கி நான் ஒரு வேலயில இருக்குறன்னா, மெத்த வீட்டுல படுக்கிறன்னா, மூணு வேளயும் சாப்புடுறன்னா அதுக்கெல்லாம் காரணம் எங்கப்பாதான் சார். என்னிக்கி அவரு காணாம போயிட்டார்னு தெரிஞ்சிதோ அன்னியிலிருந்து எப்ப சாப்பாட்டு முன்னால ஒக்காந்தாலும் வாந்தி வர மாதிரி இருக்கு. ஒரு கை சோத்த அள்ளி வாயில போட முடியல. எங்கப்பா இல்லாத வீட்டுல படுக்க முடியல. தூங்க முடியல சார். கதவில்லாத வீட்டுல படுத்திருக்கிற மாதிரி இருக்கு. பணமில்லாம, சோத்துக்கு இல்லாம, படிக்க முடியாம, அம்மா இல்லாமன்னு எத்தனயோ கஷ்டத்த அனுபவிச்சி இருக்கன். இந்த மாதிரி கஷ்டத்த அனுபவிச்சதில்ல. ஒரு நாள்கூட பட்டினி போட்டதில்லெ. சோத்துக்காக எங்கள அடுத்தவங்க வீட்டுல நிக்கவிட்டதில்லெ. கடுமையான உழைப்பாளி சார். வீட்டுல நெருப்ப வச்சிட்டு போயிட்டாரு. வந்துடுவாரு வந்துடுவாருன்னு காவ காத்துக்கிட்டே மூணு மாசம் ஓடிப்போச்சி. இடி விழுந்த வீடா ஆயிடிச்சி சார்.“
கொளஞ்சிநாதன் அழுகையை மறைப்பதற்காக சுற்றும்முற்றும் பார்த்தான். தன்னை தாண்டிக்கொண்டு போகிற ஆட்களையும், ஒன்றிரண்டு கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் பார்த்தான். நடக்காமல் அப்படியே நின்றான். ராமலிங்கமும் நின்றுவிட்டார். “அவர் காணாமப் போனதுக்கு செத்துப்போய் இருக்கலாம். அப்படி நடந்திருந்தா அவருக்கும் நல்லதா இருந்திருக்கும். எனக்கும் நல்லதா இருந்திருக்கும். காணாமப் போனதுதான் பெரிய பிரச்சனயாயிடிச்சி. லாரியில, பஸ்ஸில, ரயிலில அடிப்பட்டு செத்திட்டாரு, ஏரியில, குளத்தில, ஆத்தில விழுந்து செத்திட்டார்னு தெரிஞ்சாக்கூட போதும் சார். எந்தத் தகவலும் இல்லாம எப்படி இருக்கிறது? செத்திட்டார்னு எப்பிடி நானா நெனச்சிக்கிறது?“ என்று கேட்டுவிட்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டு அழுதான். முன்பின் தெரியாத ஆளின் முன் அழுதுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம்கூட அவனுடைய மனதில் இல்லை. அடி வாங்கிய குழந்தையைப்போல அழுதுகொண்டிருந்தான். அவன் அழுவதைப் பார்த்து “கவலைப்படாதிங்க ஒங்கப்பா சீக்கிரம் கெடச்சிடுவாரு“ என்று சொல்லாமல் “நாளானா பழகிக்கும்’ என்று ராமலிங்கம் சொன்னார். அவர் என்ன சொன்னார் என்பதைக்கூட கவனிக்காமல் பலமாக இரண்டு மூன்றுமுறை மூக்கை உறிஞ்சினான். பேண்ட் பாக்கெட்டிலிருந்து கர்சிப்பை எடுத்து கண்களையும், முகத்தையும் துடைத்துக்கொண்டான். வழி தெரிந்த மாதிரி தானாக நடக்க ஆரம்பித்தான். அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்த ராமலிங்கம் மிகவும் மெதுவாகக் கேட்டார் “ஒங்கப்பாவுக்கு நீங்க மட்டும்தானா?’.
“மொத்தம் நாலு புள்ளைங்க சார்“ என்று சொன்ன கொளஞ்சிநாதன் ராமலிங்கம் கேட்கிறாரா இல்லையா என்றுகூட பார்க்காமல் தன்னுடைய போக்கில் “எங்கப்பாவுக்கு ஆறு காணி நெலம் இருந்துச்சி சார். ஒரு கூர வீடு. அவ்வளவுதான் சொத்து. எங்க அக்கா வந்து எங்ககூட ரெண்டு நாள் இருன்னு கூப்பிட்டாலும் போவ மாட்டாரு. என்னோட கடசி தங்கச்சி தெய்வநாயகியோட புருசன் கொஞ்சம் தண்ணி போடுற ஆளு. அதனால் சுத்தமா அந்த வீட்டுக்குப் போவ மாட்டாரு. எங்க அக்கா வீட்டுக்கும், முத தங்கச்சி வீட்டுக்குப் போனாலும் ராத்திரி தங்க மாட்டாரு. எங்கப்பா காணாமப் போன நாளிலிருந்து எங்க அக்கா படுற பாடு இருக்கே வாத்தயால சொல்ல முடியாது சார். என்னவிட நாலுமடங்கு அலஞ்சி இருக்கும். எங்க அக்கா எங்கம்மா மாதிரி. பத்து வயசிலியே பெரிய பொம்பள மாதிரி சோறு ஆக்குச்சி. குழம்பு வச்சிச்சி. எங்கம்மா இருந்தாக்கூட எங்க அக்கா மாதிரி பாத்திருக்காது சார்“ என்று சொல்லிவிட்டு அழுதான். தொடர்ந்து நடக்காமல் நின்றான். தொலைந்துபோன பொருளைத் தேடுவதைப்போல மைதானத்தையே பார்த்தான். ராமலிங்கமும் நின்றுவிட்டார்.
“சிலபேரு காணாம போனவங்கள தேடிக்கிட்டு இருக்கம். சில பேரு வயசானவங்கயெல்லாம் வீட்ட விட்டு போவட்டும்னு நெனைக்கிறாங்க“ என்று சொன்னார். அவர் சொன்ன விதம் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதுபோல் இருந்தது. “ஒங்கப்பா தானாதான் காணாமப் போயிட்டாரு. ஆனா எங்கம்மா நெலம வேற“ என்று தானாகவே சொன்னார் ராமலிங்கம். அவர் என்ன சொன்னார் என்று புரிந்துகொள்வதற்கு அவனுக்கு சிறிது நேரமாயிற்று. தன்னுடைய முகத்தையும், கண்களையும் துடைத்துக்கொண்டு ரகசியத்தைக் கேட்பதுபோல “என்ன சார் ஆச்சி?“ என்று கேட்டான். சொல்வதா வேண்டாமா என்று யோசிப்பது போல் நின்றுகொண்டிருந்தார் ராமலிங்கம். அவருடைய முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான் கொளஞ்சிநாதன்.
“வா திருப்பதிக்கிப் போயிட்டு வரலாம்னு என் தம்பி எங்கம்மாவ கூப்பிட்டிக்கிட்டு போயிருக்கான். ஏதோ ஒரு ஸ்டேசனில தண்ணிப் புடிச்சிக்கிட்டு வரன்னு சொல்லிவிட்டு ரயிலவிட்டு எறங்குனவன் திரும்பி ஏறல. ரயிலு போயிடிச்சி. ரயிலோட எங்கம்மாவும் போயிடிச்சி. தமிழ்நாட்டு ரயிலா வடநாட்டு ரயிலான்னுகூட அவன் எங்கிட்ட சொல்லல“ என்று சொன்ன ராமலிங்கத்தின் குரல் எப்போதும்போல்தான் இருந்தது. முகத்தில்கூட மாற்றமில்லை. அவர் சொன்னவிதம்கூட புத்தகத்தில் பிடித்த கதையை சொன்னதுபோல்தான் இருந்தது. கொளஞ்சிநாதனுக்குத்தான் முகம் மாறிவிட்டது. சற்றுமுன் தன்னுடைய அப்பாவுக்காக அழுததைகூட மறந்துவிட்டான். அதிர்ச்சியில் அவனுக்குப் பேசக்கூட வரவில்லை. சிரமப்பட்டுத்தான் “என்ன சார் சொல்றிங்க?“ என்று கேட்டான்.
“விஷத்த வச்சி கொன்னிருக்கலாம். அப்பிடி செஞ்சிருந்தாக்கூட கோவத்தில செஞ்சிட்டான்னு போயிடலாம். ஒலகத்தில நடக்குறதுதான். ஏன்டா இப்பிடி செஞ்சன்னு கேட்டதுக்கு நான் எம் பொண்டாட்டி புள்ளைய பாக்கவாணாமான்னு கேக்கறான். என்ன சொல்றது? எழுபத்தி நாலு வயசு. சுகர் இருக்கு, பிபி இருக்கு. சின்ன வயசா இருந்தாகூட எங்கியாச்சும் வேல செஞ்சி பொழச்சிக்கும்னு இருக்கலாம். அதுக்கும் வழியில்ல. நாலு வருஷமா அலஞ்சிக்கிட்டிருக்கன்“ என்று ராமலிங்கம் சொல்லி முடிப்பதற்குள் அவசரப்பட்ட மாதிரி “இப்பிடியும் இருப்பாங்களா சார்?“ என்று கோபத்துடன் கொளஞ்சிநாதன் கேட்டான்.
“ஒலகத்தில எல்லா விதமாகவும் இருப்பாங்க“ என்று சொன்ன ராமலிங்கம் மெல்ல நடக்க ஆரம்பித்தார். கொளஞ்சிநாதனும் நடக்க ஆரம்பித்தான். “ஒங்கம்மா எதுக்காக அவர்கிட்ட போனாங்க?“ என்று கேட்டான்.
“எங்கிட்டதான் பத்து பதினஞ்சி வருசமா இருந்தாங்க. என் தம்பிக்கு நாலு பசங்க. வேலயில்ல. எங்கம்மா அவன்கிட்ட இருந்தா அத காரணமா வச்சி மாசா மாசம் கொஞ்சம் பணம் தரலாம்னுதான் அனுப்புனன். இப்பிடி செஞ்சிட்டான்.“
“பயங்கரமா இருக்கு சார்.“
“பெத்த அம்மாவ ரயிலில விட்டுட்டு வந்து எப்பிடி அவனால சாப்பிட முடியுதின்னுதான் எனக்குத் தெரியில. திருப்பி எங்கிட்டவே கொண்டாந்து விட்டிருக்கலாம். என்னைவிட எங்கம்மாவுக்கு அவனத்தான் அதிகமா புடிக்கும். கஷ்டப்படுறான்னு சொல்லிக்கிட்டே இருக்கும்“ என்று சொன்னார். அப்போது அவர்களை கடந்து இரண்டு மூன்று கார்கள் சென்றன. காவல்துறையைச் சேர்ந்த காரும் சென்றது. “கொடும சார்“ என்று கொளஞ்சிநாதன் சொன்னான். அவன் சொன்னதற்கு உடனே ராமலிங்கம் எதுவும் பேசவில்லை. இருபது முப்பதடி தூரம் வந்த பிறகு தான் சொல்ல மறந்து போன விஷயத்தை சொல்வதுபோல் சொன்னார்.
“எங்கூட ஒருத்தரு வேல பாக்குறாரு. பேரு செல்வராஜ். அவரோட அம்மா வீட்டுல சண்ட போட்டுக்கிட்டு போயிட்டாங்க. எங்க போனாங்கன்னு தெரியல. மூணு நாலு வருசம் தேடிப் பாத்தாங்க. எங்கயாவது அனாதப் பொணமா செத்துப்போயிருக்காலமின்னு கரும காரியம் பண்ணிட்டாங்க. அம்மாவாச விரதமும் இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. நாலு அஞ்சி மாசத்துக்கு முன்னால அந்தம்மா மெட்ராசில அனாத ஆசிரமத்தில இருக்கிறது தெரிஞ்சிது. போயி கூப்பிட்டாங்க. அந்தம்மா வரலன்னு சொல்லிடிச்சி. அப்பிடி சொன்னதே போதுமின்னு வந்திட்டாங்க. கரும காரியம் செஞ்சிட்டு அம்மாவாச விரதமும் இருந்திட்ட பின்னால எப்பிடி ஆள வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரதுன்னு அப்படியே விட்டுட்டாங்க. மாசாமாசம் பணமும் அனுப்புறதில்ல. அதயே காரணமா வச்சி வீட்டுக்கு வந்திட்டா என்னா செய்யுறதின்னு.“
ராமலிங்கம் சொன்ன விஷயம் கொளஞ்சிநாதனை நடுங்கிப் போக வைத்தது. “எதயும் நம்ப முடியல சார்“ என்று சொன்னான்.
“மொத தடவயா வந்திருக்கிங்க. மண்டபத்துக்குள்ளார போனதும் இது மாதிரி ஆயிரம் கத தெரிய வரும்.“
காவலர்களுக்கான கல்யாண மண்டபத்தின் வாசலுக்கு இருபக்கமும் குறைந்தது இருநூறு முந்நூறு கார்களாக நிறுத்தப்பட்டிருந்தன. நூறுக்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் பார்த்து அசந்துபோய் விட்டான் கொளஞ்சிநாதன். பதற்றத்துடனும், பயத்துடனும் மண்டபத்தின் படிகளில் ஏற ஆரம்பித்தான்.
மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் இருந்த கதவை ஒட்டி டேபிள் போட்டு நான்கு காவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். காவலர்களில் வயதானவராக இருந்தவர் “இங்க வாங்க சார்“ என்று கூப்பிட்டார். “எந்த ஸ்டேசன் லிமிட்டில இருந்து வரீங்க?“ என்று கேட்டார். பதில் சொன்னதும் “காணாம போனவங்க பேரு, வயசு, அட்ரஸ் எழுதுங்க. அப்புறம் ஒங்க பேரு, அட்ரஸ், மொபைல் நெம்பர எழுதி கையெழுத்து போடுங்க“ என்று சொல்லி ஒரு பதிவேட்டைக் கொடுத்தார். முதலில் ராமலிங்கம் விபரங்களை எழுதி கையெழுத்து போட்டார். அடுத்ததாக கொளஞ்சிநாதன் எழுதி கையெழுத்து போட்டான். “நீங்க உள்ளார போகலாம் சார்“ என்று காவலர் சொன்னதும் இருவரும் மண்டபத்திற்குள் வந்தனர். அவர்கள் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்த மாதிரி இரண்டு காவலர்கள் வந்து டீயும், பிஸ்கட்டும் கொடுத்தனர். ஒரே வார்த்தையாக வேண்டாம் என்று கொளஞ்சிநாதன் சொல்லிவிட்டான். “நாம இருக்கிற கவலயில டீயா கேக்குது“ என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ராமலிங்கம் டீயையும், பிஸ்கட்டையும் வாங்கிக்கொண்டார். அதோடு கொளஞ்சிநாதனிடம் “எடுத்துக்குங்க“ என்று சொன்னார். “வேண்டாம் சார்“ என்று மறுத்துவிட்டான்.
கொளஞ்சிநாதன் மண்டபத்தைப் பார்த்தான். இரண்டாயிரம் பேர் உட்காரக்கூடிய அளவுக்கு பெரியதாக இருந்தது. இருநூறு முந்நூறு பேருக்குமேல் ஆட்கள் உட்கார்ந்திருந்தனர். மேடையில் ஐந்தாறு காவலர்கள் தீவிரமாக ஏதோ வேலை செய்துகொண்டிருந்தனர். பத்திருபது காவலர்கள் உட்கார்ந்திருந்த ஆட்களுக்கு டீ, பிஸ்கட் கொடுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. ஒவ்வொன்றாகப் பார்த்த கொளஞ்சிநாதன் “என்ன சார் இவ்வளவு கூட்டம்’ என்று கேட்டான். “இன்னும் வரும் பாருங்க“ என்று ராமலிங்கம் சொன்னார். “இவ்வளவு பேருமா ஆளுவுள காணுமின்னு தேடிக்கிட்டு இருக்காங்க?“ என்று சிறுபையன் மாதிரி கேட்டான். அதற்கு அவர் ஆமாம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டினார்.
மேடையில் நகரும் தன்மையுள்ள ஒரு திரையை தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினார்கள். ஆறு நாற்காலிகளை எடுத்துக்கொண்டு வந்து போட்டார்கள். ஒரு காவலர் ஒலிபெருக்கியை கொண்டுவந்து வைத்தார். இரண்டு காவலர்கள் செல்போனில் பேசியபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தனர். மேடையில் நடந்துகொண்டிருந்த காரியங்களைப் பார்த்தால் மிகவும் முக்கியமான நபர் வருவதற்கான ஏற்பாடுகள்போல் தெரிந்தது.
ஒரு பெண் வந்து ராமலிங்கத்திடம் “எப்படி சார் இருக்கிங்க?“ என்று கேட்டாள்.
“பரவாயில்ல“ என்று பட்டும் படாமல் சொன்னார் ராமலிங்கம்.
“ஒங்களுக்கு தகவல் ஏதும் தெரிஞ்சுதா? “
“இல்லிங்க.“
“எங்களுக்கும் இதுவர ஒண்ணும் தெரியல. இன்னிக்காச்சும் தகவல் தெரிஞ்சா பரவாயில்லெ. ஒவ்வொரு தடைவயும் நம்பிக்கையோட வந்துவந்து அலஞ்சி சாவறதா இருக்கு“ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த பெண்ணுக்கு கண்கள் கலங்கிவிட்டன. இவ்வளவு அழகான பெண் அழுகிறாளே என்று கொளஞ்சிநாதனுக்கு ஆச்சரியமாகவிட்டது. அந்தப் பெண் ஒல்லியாகவும் இல்லை குண்டாகவும் இல்லை. எடுப்பான முகத் தோற்றத்தில் இருந்தாள். நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். கட்டியிருந்த புடவை, போட்டிருந்த சட்டை, கழுத்தில் போட்டிருந்த சங்கிலிகள், கைகளில் போட்டிருந்த வளையல்கள் எல்லாம் நல்ல வசதியான பெண் என்பதை காட்டிக்கொண்டிருந்தன. அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். பார்வையை அகற்ற முடியவில்லை.
“விஷயம் முடிஞ்சிதுன்னு தெரிஞ்சாகூட போதும் சார். கருமகாரியம் செஞ்சிடலாம். அதுக்கும் வழியில்ல“ என்று அந்தப் பெண் சொன்னதற்கு “அவசரப்பட வேணாம்’ என்று ராமலிங்கம் சொன்னார்.
“பின்னால எங்க சார் இருக்கார். வெளியில போவும்போது பாக்கலாம் சார்“ என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பின்னால் போனாள்.
அந்தப் பெண் எங்கே உட்கார்ந்திருக்கிறாள் என்று பார்ப்பதற்குத் திரும்பிப் பார்த்தான். எங்கே உட்கார்ந்திருக்கிறாள் என்று தெரியவில்லை. ஆனால் முன்பைவிட மண்டபத்திற்குள் கூட்டம் சேர்ந்திருப்பது தெரிந்தது.
“யார் சார் அவங்க?“ என்று கொளஞ்சிநாதன் கேட்டான்.
“இங்க வந்தப்பதான் பழக்கம். நாலு வருஷமா பாக்குறன். ஒங்கள மாதிரி“ என்று ராமலிங்கம் சொன்னார்.
“நாலு வருஷமாவா ஆளு கெடைக்கல? “
“ம். “
“யாரு காணாம போனது?“
“அவங்களோட அக்கா.“
“வயசு என்னா இருக்கும்? எப்ப காணாம போனாங்க?“
“தெரியல“ என்று ராமலிங்கம் சொல்லும்போது அவருக்கு வலது கை பக்கமாக இரண்டு பெண்களும் ஒரு ஆணும் வந்து உட்கார்ந்தனர். வாசல் பக்கம் பார்த்தான். கல்யாணத்திற்கு வருவதுபோல் ஆட்கள் உள்ளே வந்துகொண்டிருந்தது தெரியது “என்ன இம்மாம் கூட்டம் வருது“ என்று யோசித்தான். “இவ்வளவு பேரோட சொந்தக்காரங்களுமா காணாமல் போயிருப்பாங்க?“ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். “எப்படியாச்சும் எங்கப்பாவப் பத்தின தகவல கொண்டுவாடா கொளஞ்சியப்பாரே“ என்று கொளஞ்சியப்பரிடம் வேண்டிக்கொண்டான். அப்போது அவனுக்குப் பக்கத்தில் வந்து ஒரு ஆள் உட்கார்ந்தார். மண்டபத்தில் கூட்டம் சேர்ந்திருந்தது. ஆனால் சத்தம் மிகவும் குறைவாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தவர்கள்கூட ரகசியத்தை பேசுவதுபோல்தான் பேசினார்கள்.
மேடையில் காவலர்களின் எண்ணிக்கை கூடியிருந்தது. இரண்டு பெண் காவலர்களும் மேடையில் இருந்தனர். மேடையிலிருந்த காவலர்கள் எல்லாருமே கொஞ்சம் பரபரப்பாக இருப்பது மாதிரி தெரிந்தது. என்ன சொல்லப் போகிறார்களோ என்ற கொந்தளிப்பில் உட்கார்ந்திருந்தான். என்ன செய்வார்கள் என்று ராமலிங்கத்திடம் கேட்கலாமா என்று யோசித்தான். கண்களை மூடி தியானத்தில் உட்கார்ந்திருப்பது மாதிரி அவர் உட்கார்ந்துகொண்டிருந்ததால் எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்தான். எப்போதுவிஷயத்தை சொல்வார்களோ? அவனுக்கு உட்கார்ந்துகொண்டிருப்பதற்கே சிரமமாக இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். இரண்டு என்று காட்டியது. எப்படி நேரம் போனது என்பதே தெரியவில்லை.
மேடையில் இருந்த காவலர்கள் சட்டென்று பரபரப்பானார்கள். ஐந்தாறு காவல்துறை அதிகாரிகள் வந்தனர். வந்த வேகத்தில் ஒருவர் ஒலி பெருக்கியில் பேச ஆரம்பித்தார். “அனைவருக்கும் வணக்கம். இன்று வந்திருப்பவர்களில் பலர் ஏற்கனவே வந்திருக்கலாம். சிலர் புதிதாக வந்திருக்கலாம். புதிதாக வந்திருக்கக் கூடிய நபர்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு பேச்சை நிறுத்தினார். அப்போது அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த காவலர் ஒருவர் வந்து ஒரு ஃபைலை கொடுத்தார். ஃபைலை வாங்கிக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.
“யாரு சார் அவரு“ என்று கொளஞ்சிநாதன் கேட்டான்.
“எஸ்.பி.“ என்று ராமலிங்கம் சொன்னார்.
“நின்னுக்கிட்டிருக்கவங்க?“
“நாலு பேரு டி.எஸ்.பி. ஒருத்தரு ஏ.டி.எஸ்.பி.“ என்று சொன்ன ராமலிங்கம் ரகசியமான குரலில் “அப்புறம் பேசிக்கலாம்“ என்று சொன்னார்.
“இங்கு வைக்கப்பட்டுள்ள திரையில் முதலில் அனாதை இல்லங்களில் இருப்பவர்களைப் பற்றி காட்டப்படும். இரண்டாவதாக பஸ்ஸ்டாண்டுகளில், ரயில் நிலையங்களில் படுத்துக் கொண்டிருப்பவர்கள், மூன்றாவது கோவில் வாசலில், தெருவில், ரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றிக் காட்டப்படும். நான்காவதாக மனநிலை சரியில்லாமல் திரிந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி காட்டப்படும். அடுத்ததாக லாரி, பஸ், ரயில் என்று அடிபட்டு உரிமை கொண்டாடப்படாத பிணங்களின் படம் காட்டப்படும். ஆற்றில் ஏரியில் கடலில் மிதந்த பிணங்கள் காட்டப்படும். வெட்டிக் கொல்லப்பட்ட பிணங்களின் படம் காட்டப்படும். திரையில் காட்டப்படும் படம் உங்களுக்கு சம்பந்தப்பட்டவர் என்றால் உடனே எழுந்து தகவல் சொல்ல வேண்டும்“ என்று சொல்லிவிட்டு சென்று நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர். அவர் உட்கார்ந்த பிறகுதான் டி.எஸ்.பி.கள் நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.
மேடையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த திரையில் வெளிச்சம் படர்ந்தது. முதலில் காட்டப்படும் படமே தன்னுடைய அப்பாவின் படமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டான் கொளஞ்சிநாதன். மனதில் இன்னதென்று சொல்ல முடியாத பயம் நிறைந்தது. லேசாக நடுக்கமும் ஏற்பட்டது. முதலில் வயதான ஒரு பெண்ணின் படத்தைக் காட்டி பெயர் வயது, தங்கி இருக்கும் ஆசிரமத்தின் பெயர், உடல் அடையாளங்கள், எத்தனை ஆண்டுகளாக தங்கி இருக்கிறார். ஆசிரமத்தின் முகவரி என்று ஒவ்வொன்றாக சொன்னார்கள். பிறகு அடுத்தப் படத்தைக் காட்டினார்கள். அதுவும் வயதான ஒரு பெண்ணின் படம்தான். வரிசையாக அடுத்தடுத்துக் காட்டிக்கொண்டிருந்தனர். அனாதை ஆசிரமங்களில் இருந்தவர்கள் முடிந்து அடுத்ததாக சாலையில் திரிந்துகொண்டிருப்பவர்களைக் காட்ட ஆரம்பித்தனர். தன்னுடைய அப்பா ஆசிரமத்தில் இருப்பார் என்ற எண்ணம் பொய்யானதும் கொளஞ்சிநாதனுக்கு மனதை பிசைவது போல் இருந்தது.
கோவிலின் முன் உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களை காட்டியபோது கூட்டத்திலிருந்து ஒரு ஆள் எழுந்து “சூம் பண்ணிக் காட்டுங்க“ என்று சொன்னார். உடனே திரையில் காட்டப்பட்ட படத்தை பெரிதுபடுத்தியும் சிறுசு படுத்தியும் காட்டினார்கள். ஒவ்வொரு படமாக காட்ட காட்ட கொளஞ்சிநாதனுடைய நெஞ்சின் துடிப்பு அதிகரித்தபடியே இருந்தது. பிச்சைக்காரர்களின் பட்டியலிலும் கலியமூர்த்தி இல்லை. அடுத்ததாக மனநிலை சரியில்லாமல் திரிந்து கொண்டிருப்பவர்களை காட்டினார்கள். அதிலாவது கலியமூர்த்தி இருந்தால் போதும் என்று நினைத்தான். அதிலும் இல்லை என்று தெரிந்ததும் அவனுக்கு அழுகைவர ஆரம்பித்தது. பயத்தில் அவனுக்கு சிறுநீர் வந்தவிடும்போல் இருந்தது. “கடவுளே“ என்று சொன்னான். அப்போது ஒரு பெண் எழுந்து மேடையிலிருந்த காவலர்களை நோக்கி ஏதோ சொன்னாள். “மீட்டிங் முடிஞ்சதும் மேடைக்கி வாங்க“ என்று ஒரு காவலர் சொன்னார்.
அனாதைப் பினங்களின் படங்களை காட்ட ஆரம்பித்தார்கள். காட்டப்படும் பிணங்களில் கலியமூர்த்தியின் பிணம் ஒன்றாக இருந்தால்கூட போதும் என்று நினைத்தான். இருபது முப்பது படங்களைக் காட்டினார்கள். கலியமூர்த்தியின் படம் இல்லை என்று தெரிந்ததும் கொளஞ்சிநாதனுக்கு பதற்றம் கூடியது. அடுத்ததாக கடற்கரையில் ஒதுங்கிய பிணங்களை காட்ட ஆரம்பித்தார்கள். அதிலாவது இருக்குமா என்று பார்த்தான். அதிலும் இல்லை. அவனுக்கு உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. எதிலும் இல்லையென்றால் என்னதான் ஆகியிருப்பார் என்ற கவலையில் வியர்க்க ஆரம்பித்தது. உடலின் நடுக்கம் அதிகரித்தது. கவலையில் பயத்தில் திரையில் காட்டப்படும் பிணங்களைப் பற்றி சொல்கிற தகவல்களைக்கூட அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை அவனுடைய நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. தன்னுடைய நம்பிக்கை நாசமாகிவிடும் என்று அவன் நினைக்கவில்லை.
எல்லாப் படங்களையும் காட்டி முடித்த பிறகு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் எழுந்து வந்து ஒலிபெருக்கியின் முன் நின்றுகொண்டு “இதுவரை காட்டப்பட்ட படங்களில் ஆறுபேருக்கு மட்டுமே அடையாளம் தெரிந்துள்ளது. அந்த ஆறு பேரின் குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டவரின் ஆவணங்களுடன் மேடைக்குப் பின்புறம் வரவும்“ என்று சொன்னார். அதுவரை அமைதியாக இருந்த மண்டபத்தில் பேச்சு சத்தம் எழ ஆரம்பித்தது. பத்திருபதுபேர் எழுந்து மேடைக்குப் பின்புறமாக சென்றார்கள். மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் பேச ஆரம்பித்தார். மண்டபம் அமைதியானது.
“நம்முடைய கடலூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்து பதினாறு முதல் இரண்டாயிரத்து இருபதுவரை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை எண்ணூற்று எழுபத்தி ஆறு. காணாமல் போனவர்களில் எழுபத்தி மூன்று சதவிகிதம் பெண்கள். இருபத்தி ஏழு சதவிகிதம் ஆண்கள். காணாமல் போன பெண்களில் ஐம்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை அறுபத்து நாலு சதவிகிதம். முப்பத்தி ஆறு சதவிகிதம் வயதான பெண்கள். கிராமப்புறங்களிலிருந்து காணாமல் போனவர்கள் இருபத்தியொரு சதவிகிதம். நகரத்தில் காணாமல் போனவர்கள் எழுபத்தி ஒன்பது சதவிகிதம்“ என்று சொன்னார். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் என்ன சொல்கிறார் என்று கேட்கக்கூடிய மனநிலையில் கொளஞ்சிநாதன் இல்லை. கூட்டத்தில் இல்லாமல் தனியாக இருந்திருந்தால் வாய்விட்டு கதறி அழுதிருப்பான். அழமுடியாமல் உட்கார்ந்துகொண்டிருப்பதே அவனுக்கு பெரிய கஷ்டமாக இருந்தது. “எதிலயும் எங்கப்பா இல்லெ“ என்று சொன்னான். பெருமூச்சு விட்டான். மூக்கால் மூச்சு விடுவது போதவில்லை என்று வாயாலும் மூச்சுவிட்டான். அழுகை வந்தது. அழுகையை மறைப்பதற்காக தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.
ஊரிலிருந்து கிளம்பும் போதும், மண்டபத்திற்குள் வரும்போதும் தன்னுடைய அப்பா மட்டும்தான் காணாமல் போய்விட்டார் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த கொளஞ்சிநாதனுக்கு எண்ணூற்று எழுபத்தி ஆறுபேர் காணாமல் போய்விட்டார்கள் என்ற தகவல் அவனை ஆடிப்போக வைத்துவிட்டது.
“காணாமல் போனவர்கள் தேடப்படும் நபர்கள் குறித்த விபரங்கள் புகைப்படங்கள் எப்படி இங்கு காட்டப்பட்டதோ அதே மாதிரி ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும் இன்று இதே நேரத்தில் காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. நம்முடைய மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் வேறு மாவட்டத்தில் இருந்தாலும் உடனடியாக நமக்கு தகவல் தரப்படும். தகவல் கிடைத்ததும் அந்தந்த காவல் நிலையத்திற்கு தகவல் தரப்படும்“ என்று காவல்துறை கண்காணிப்பாளர் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. எதையும் கேட்கிற மன நிலையில் அவன் இல்லை. தலையைக் கவிழ்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்த கொளஞ்சிநாதனை லேசாகத் தட்டி “நிமிர்ந்து ஒக்காருங்க“ என்று ராமலிங்கம் சொன்னார். கர்சிப்பால் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு “சர்சர்“ என்று ஏழெட்டு முறை மூக்கை உறிஞ்சிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். அப்போது மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பேசியது கேட்டது.
“காதல், குடும்ப பிரச்சனைன்னு வீட்டவிட்டு வெளியே போறது வேற. பராமரிக்க முடியலன்னு வீட்ட விட்டு துரத்துறது வேற. வீட்டவிட்டு துரத்தறமே அவங்க வேற யாரோ இல்லெ. நம்மோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தைங்கதான். மண்ணு இல்லாம எப்பிடி மரம் செடி கொடி இல்லியோ அதே மாதிரிதான் வயசானவங்க இல்லாம நாம இல்லெ. வயசாகாதவங்கன்னு ஒலகத்திலெ யாரும் இருக்க முடியாது.
தெருவுல பிச்சை எடுக்கிறவங்க, அனாதப் பொணமா கெடக்குறவங்கயெல்லாம் யாரு? பெரும்பாலும் வயசானவங்கதான். பொறக்கும்போதே அவங்கயெல்லாம் பிச்சை எடுத்துக்கிட்டாப் பொறந்தாங்க? ஒவ்வொருத்தருக்கும் வீடு, சொத்து, சொந்தம்னு, குடும்பம்னு இருந்திருக்கும். எல்லாம் இருந்தும் ஒரு ஆள் எப்பிடி பிச்சை எடுக்கப் போறாங்க? பிள்ளைங்க, சொந்தம், வீடு, சொத்து, எதுவும் சோறு போடலன்னுதான போறாங்க? பணத்த, நகைய, வீட்டு பத்தரத்த, சொத்து பத்தரத்த, பீரோவில வச்சி பூட்டி வச்சிருக்கோம். கார, பைக்க ஷெட் போட்டு பாதுகாத்து வச்சிருக்கோம். இது எதுக்கும் உயிரில்ல. உயிருலுள்ள சனங்கள வீட்டவிட்டு துரத்தறம். அதுவும் பெத்தவங்கள. படிச்சவங்க அதிகம் இருக்கிற, பணப்புழக்கம் அதிகம் இருக்கிற, நகரத்திலதான் அதிகமா காணாம போறாங்க.
செத்து சுடுகாட்டுக்குப் போறவங்களுக்கு பிரச்சன இல்ல. வீட்டவிட்டு காணாமப் போறவங்களுக்குத்தான் பிரச்சன. காணாமப் போனவங்களும், காணாமப் போனவங்கள தேடிக்கிட்டு இருக்கிறவங்களும், ஏன் இப்ப உங்க முன்னாடி பேசிக்கிட்டிருக்கிற நானும் ஒரு நாள் சுடுகாட்டுக்குப் போய்தான் தீரணும். இன்னிக்கி அவங்க, நாளைக்கி நாம. நாள்தான் வேற. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாள். அந்த நாள் மட்டும் மாறாது. அதனால ஒவ்வொருத்தரும் சந்தோஷமா வாழப்பாருங்க. கூட இருக்கிறவங்கள சந்தோஷமா வச்சிக்கப் பாருங்க. வீட்டுல இருக்கும்போது தொரத்தி விட்டுட்டு அப்பறம் தேடி அலயுறதில புண்ணியமில்லெ. ஒலகத்தில ரொம்ப கஷ்டமானது பிச்சை எடுக்கிறது. அனாதயா செத்துப்போறது“.
காவல்துறை கண்காணிப்பாளர் பேசி முடித்ததும் பெரிய கைதட்டல் எழும் என்று கொளஞ்சிநாதன் நினைத்தான். ஒரு ஆள்கூட கைதட்டவில்லை. அப்படி ஒரு அமைதி நிலவியது. ஆயிரம் பேருக்குமேல் கூடியிருந்தும் சிறு சலசலப்புகூட எழவில்லை. மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு முப்பது வயதுதான் இருக்கும். நெடுநெடுவென்று நல்ல உயரமாக இருந்தார். பார்ப்பதற்கு முரட்டான ஆள்போல தோன்றியது. ஆனால் அவருடைய பேச்சு கொளஞ்சிநாதனை மட்டுமில்லை மண்டபத்திலிருந்தவர்களை அமைதியில் தள்ளிவிட்டுவிட்டது.
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மீண்டும் பேச ஆரம்பித்தார். “சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை போடாதிங்க. விட்டுக் கொடுத்து போங்க. அதுதான் வாழ்க்கை. பிச்சை போடுறது பெருமை இல்ல. பிச்சை எடுக்க விடாம இருக்கிறதுதான் பெருமை. நாம பிறக்கிறதுக்கு வளரருறதுக்கு, வாழறதுக்கு ஏதோ ஒரு விதத்தில உதவுனவங்களத்தான் நாம அனாதயாக்குறம். பெத்தவங்கள, உறவுக்காரங்கள பிச்சை எடுக்கவிட்டுட்டு சாமி கோவிலுக்குப் போறதில புண்ணியமில்ல. பிச்சைப் போடுறதும் நாமதான். பிச்சைக்காரங்கள அனாதைகளை உருவாக்குறதும் நாமதான். எல்லாக் காலத்திலயும் பிச்சைக்காரங்களும் அனாதைகளும் எப்பிடி உருவாகிக்கிட்டே இருக்காங்க? இதுதான் எனக்குப் புரியல. இந்தமுறை தகவல் கிடைக்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்தமுறை நிச்சயம் தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போங்க.”
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பேசி முடித்ததும் ஆங்காங்கே ஒதுங்கி நின்றுகொண்டிருந்த காவலர்கள் வந்து “சாப்பிட வாங்க“ என்று கூப்பிட்டனர். காவலர்களின் நடவடிக்கை அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. விருந்தாளிகளை அழைப்பதுபோல ஒவ்வொருவரையும் சாப்பிடுவதற்கு அழைத்துக்கொண்டிருந்தனர்.
“கடசிவர அலஞ்சிதான் சாவனும்போல இருக்கு“ என்று சொல்லிக்கொண்டே நாற்காலியைவிட்டு எழுந்த கொளஞ்சிநாதன் “என்ன செய்யுறது சார்?“ என்று கேட்டான். “வாங்க. சாப்பிடாம போனா விட மாட்டாங்க“ என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு கூடத்தை நோக்கி ராமலிங்கம் நடக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.
இருவருக்கும் ஒரே இடத்தில் இடம் கிடைக்கவில்லை. “சாப்பிட்டுட்டு வெளியே வாங்க பார்க்கலாம்“ என்று சொல்லிவிட்டு ராமலிங்கம் ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டார். அவருக்கு இரண்டு வரிசை முன்னால் தள்ளி கொளஞ்சிநாதன் உட்கார்ந்துகொண்டான். பந்தியில் உட்காருவதற்கும். சாப்பிடுவதற்கும் சுத்தமாக அவனுக்கு விருப்பமில்லை. காவலர்களின் கட்டாயத்தினால்தான் வந்து உட்கார்ந்திருந்தான்.
கொளஞ்சிநாதனுக்கு வலது பக்கமாக ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவராகவே “சாருக்கு எந்த ஊரு“ என்று கேட்டார். பெயர், ஊர், கலியமூர்த்தி காணாமல் போனது, தேடிக்கொண்டிருப்பது, இன்று கடலூர் வந்ததுவரை குடத்திலிருக்கும் தண்ணீரை கவிழ்த்துக் கொட்டுவதுபோல தன்னுடைய குடும்பக் கதையை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அந்த ஆள் “நானும் வாத்தியார்தான். பேரு ஏழுமல“ என்று சொன்னார். “சார் வந்தது?“ என்று இழுத்த மாதிரி கேட்டான்.
“ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, அம்மா வீட்டுக்குப் போறன்னு போன என்னோட ஒய்ஃப் திரும்ப வரல. தேடிக்கிட்டிருக்கன்“ என்று சொல்லும்போதே அவருக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையை அடக்குவதற்கு சிறந்த மருந்து தண்ணீர்தான் என்பதுபோல முன்னால் இருந்த பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்தார்.
காவலர்கள் உணவு பொருட்களை பரிமாற ஆரம்பித்தனர். ஏழுமலை சாப்பிட ஆரம்பித்தார். .
“எந்த ஊரு சார்?“
“பண்ருட்டி.“
“இங்க எத்தன தடவ வந்து இருக்கிங்க?“
“இதோட மூணு.“
“மாசாமாசம் நடக்குமா இந்தக் கூட்டம்?“
“ஆறுமாசத்துக் கொண்ணு, வருசத்துக்கொண்ணு நடக்கும்.“
“ரெண்டு வருசமா தகவல் தெரியலியா?“
“தெரிஞ்சா எதுக்கு வரப்போறன்? பணம், நக, பொருள், சொத்து போயிருந்தாக்கூட பரவாயில்ல சார். பொண்டாட்டி போயிட்டா. ரெண்டு புள்ளைங்க வச்சிக்கிட்டு கஷ்டமா இருக்கு சார். எவன் கூடவாவது ஓடிப்போயிருந்தாக்கூட மோசமில்ல. திரும்பி வந்திட்டா போதும்“ என்று சொன்ன ஏழுமலை அரையும் குறையுமாக சாப்பிட்டுவிட்டு எழுந்தார். கொளஞ்சிநாதனும் பெயருக்கு சாப்பிட்டுவிட்டு எழுந்தான். இருவரும் வந்து கைகழுவிக்கொண்டனர்.
“ஒங்க செல் நெம்பர கொடுங்க“ என்று கேட்டு கொளஞ்சிநாதனுடைய செல்போன் எண்களை வாங்கிக்கொண்டார். ஏழுமலையின் செல்போன்களை கொளஞ்சிநாதன் வாங்கிக்கொண்டான். “பாக்கலாம் சார்“ என்று இருவரும் சொல்லிவிட்டு கை குலுக்கிக்கொண்டனர்.
ராமலிங்கத்தை தேடினான் கொளஞ்சிநாதன். சாப்பாட்டுக் கூடத்தில் இல்லை. மண்டபத்தில் இல்லை. வாசலுக்கு வந்து தேடிப்பார்த்தான் அங்குமில்லை. எப்படி காணாமல் போயிருப்பார்? செல்போனின் எண்களை வாங்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட்டான். பேருந்து நிலையத்திற்கு எப்படி போவது என்று யோசித்தான். கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் ஆட்கள் வெளியே போய்க்கொண்டிருந்தனர். செல்போன் மணி அடித்தது. அவனுடைய அக்கா பார்வதிதான் கூப்பிட்டிருந்தாள். போனை எடுத்த வேகத்தில் “ஒண்ணும் பலனில்ல. அலஞ்சதுதான் மிச்சம். மத்தத வீட்டுக்கு வந்திட்டு சொல்றன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக போனை வைத்தான்.
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன் வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆட்டோக்களில் ஆட்கள் ஏறுவதும், ஆட்டோக்கள் புறப்படுவதுமாக இருந்தன. “பஸ் ஸ்டாண்டு“ என்று சொல்லி ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டான். கால்மணி நேரத்திற்குள்ளாகவே ஆட்டோ பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டது. தன்னுடைய ஊருக்குப் போகிற பேருந்து எங்கே நிற்கிறது என்று பார்த்துக்கொண்டே வந்தான். ஒரு பேருந்து நின்றுகொண்டிருந்தது. நடத்துனரிடம் “எப்ப எடுப்பிங்க?” என்று கேட்டுவிட்டு ஏறி உட்கார்ந்துகொண்டான்.
“ஒரு சாமியும் கைக்கொடுக்கலியே“ என்று சொன்னான். கவலையில் கண்களை மூடிக்கொண்டான்.
நடத்துனர் வந்து “டிக்கெட்“ என்று கேட்டார்.
“பெண்ணாடம் ஒரு டிக்கெட்“ என்று சொன்னான்.
“பெண்ணாடமா? இது சிதம்பரம் போற பஸ். இதுல எதுக்கு ஏறுனிங்க“ என்று நடத்துனர் கேட்டதும் கொளஞ்சிநாதனுக்கு குழப்பமாக இருந்தது, வெட்கமாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையிலிருந்து கால்வரை எரிவது போலிருந்தது. “பாத்துதான் ஏறுனன். ஒங்கிட்டகூட கேட்டன்.“
“பஸ்ஸ எப்ப எடுப்பிங்கின்னுதான் கேட்டிங்க, என்னா ஊருக்குப் போகுதின்னு கேக்கல“ என்று முறைப்பதுபோல் நடத்துனர் சொன்னார். அவமானத்தில் எதுவும் பேசாமல் இருந்தான். சட்டென்று கலியமூர்த்தியின்மீது கோபம் வந்தது “என்ன மனுசன்? எப்படியெல்லாம் அசிங்கப்பட வச்சிட்டுப் போயிட்டாரு” என்று பற்களைக் கடித்தான். நேரிலிருந்தால் கெட்ட வார்த்தை சொல்லிக்கூட திட்டியிருப்பான். அந்த அளவுக்கு ஆத்திரம் உண்டாது. “மெண்டல்தான். செத்துத் தொலயட்டும்“ என்று வாய்க்குள்ளாகவே சொல்லிக்கொண்டான்.
“பத்து பதினஞ்சி கிலோ மீட்டர் தூரம் வந்துடுச்சி. அடுத்த ஸ்டேஜ் வண்டிப்பாளையம். அங்க எறங்கி கடலூர் பஸ் புடிச்சிப் போயி மாறிக்குங்க. இல்லன்னா இன்னும் பத்துகிலோ மீட்டர் தாண்டி புவனகிரி வந்துடும். அங்க எறங்கி பஸ் மாறிக்குங்க“ என்று சொன்ன நடத்துனர் அடுத்த ஆளிடம் “டிக்கெட்“ என்று கேட்டார்.
கொளஞ்சிநாதனுக்கு மண்டை வெடித்துப்போகிற அளவுக்கு கோபம் வந்தது. கோபத்தை யாரிடம் காட்டுவது என்பதுதான் தெரியவில்லை. எப்படி மாறி ஏறினோம்? கடலூருக்குப் போய் மாறுவதா, புவனகிரிக்குப் போய் மாறுவதா, எது பக்கம் என்பது தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்பதும் தெரியவில்லை.
“ஏதாச்சும் ஒரு ஊருக்கு டிக்கெட் வாங்குங்க. இது கவர்மண்ட் பஸ். செக்கிங்காரங்க ஏறுனா என்னோட சீட்ட கிழிச்சிடுவாங்க“ என்று சொல்லி கத்தினார் நடத்துனர். எதுவும் பேசாமல் கொளஞ்சிநாதன் நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்தான். பணத்தை வாங்கிக்கொண்ட நடத்துனர் “புவனகிரியா, வண்டிப்பாளையமா“ என்று கேட்டார்.
எந்த ஊர் என்று சொல்லத் தெரியாமல் பித்துப் பிடித்தவன் மாதிரி உட்கார்ந்துகொண்டிருந்தான் கொளஞ்சிநாதன். பேருந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
– நீலம் – ஜூலை 2021