காணவில்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 6,968 
 
 

“கோயிலுக்குத் தங்கச்சி ரெண்டுப் பேரையும் கூட்டிட்டுப் போறேன்.” என்று தன் தாய் வள்ளியிடம் கடம்பன் கூறினான்.

“சரி பத்திரமா கூட்டிட்டுப் போ சின்னப் பிள்ளைங்க கவனமா இரு. நீ வர எவ்வளவு நேரமாகும்?” என்றாள் வள்ளி.

“அம்மா, போயிட்டு வர மூணு மணி நேரமாகும்.” என்றான்.

“ம்ம்… கோயில் கூட்டத்தில் பிள்ளைங்களைக் கவனமா பார்த்துக்கோ. கையில் பிடிச்சிக்கோ தனியா விட்டுடாதே. ராத்திரி பத்து மணிக்குள்ள வந்திரு.” என்றாள் வள்ளி எச்சரிக்கையாக.

“ஏன்மா? இப்படிப் பயப்படுறீங்க. நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரேன்மா.” என்று சொல்லிவிட்டுத் தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

கோயிலுக்குச் சென்றதும் தங்கைகளை உள்ளே அழைத்துச் சென்று சாமியை வணங்கிவிட்டுப் பக்கத்தில் இருந்த கடைகளில் அவர்களுக்குச் சாப்பிட திண்பண்டங்களும் வாங்கிக் கொடுத்துக் கோயில் பிரகாரத்தில் சிறிது நேரம் விளையாட வைத்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

‘ரொம்ப நேரமாச்சே இன்னும் வரலையே.’ என்று வள்ளி வாசலுக்கு வந்து வந்து பார்த்துச் சென்றார். உள்ளே சென்று கடிகாரத்தைப் பார்க்க இரவு மணி காட்டியது. இன்னும் அரை மணி நேரம் கழித்துப் பார்க்கலாம் என்று வீட்டு வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.

அரைமணி நேரம் கழித்துச் சாலைக்கு வந்தார் மோட்டார் சைக்கிள் வருகிறதா என்று ஆனால், வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ‘என்ன? இன்னும் காணும் இன்னேரம் வந்திருக்கனுமே.” என்று தானாகப் புலம்பிக் கொண்டிருந்தார்.

வள்ளி வீட்டுக்கும் வாசலுக்கும் நடப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டுத் துர்கா வந்து, “என்ன? வள்ளி வீட்டுக்கும் தெருவுக்கும் நடந்துகிட்டு இருக்க. யாரை எதிர் பார்த்துகிட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“துர்கா, என் மவன் பிள்ளைங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு கோயிலுக்குப் போனான். இன்னும் வரலை நேரமாயிட்டே இருக்கு. அதான், பயமாயிருக்கு.” என்றார் கவலையாக.

“அட! என்ன? வள்ளி கோயிலுக்குதானே போயிருக்கான். இதுக்கு எதுக்குப் பயப்படுற? வந்திருவாங்க.” என்று தைரியம் சொன்னாள் துர்கா.

“அதில்லை துர்கா ராத்திரி நேரமாச்சே. பகல் நேரம்னா பரவாயில்லை. இரவு நேரமாச்சே. அதான், பயமாயிருக்கு.” பயம் முகத்தில் தெரியச் சொன்னார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. கடம்பன் மட்டுமே வந்தான் பிள்ளைகள் இருவரையும் காணவில்லை. அவனும் முழுப் போதையில் இருந்தான். வண்டியை நிறுத்த கூட முடியாமல் கீழே போட்டான் அவனும் கூடவே சேர்ந்து விழுந்தான்.

வள்ளி வேகமாக ஓடிச் சென்று அவனைத் தூக்கி, “கடம்பா, தங்கச்சிங்க ரெண்டு பேரையும் எங்க?” என்று பதற்றமாகக் கேட்டார்..

“அவளுங்க வரமாட்டேன்னு சொல்லிட்டாளுங்க. கொழுப்பெடுத்தவளுங்க நானும் போங்கனு விட்டுட்டு வந்துட்டேன்.” வார்த்தைகள் சரியாக வராமல் போதையில் உளறினான்.

“ஏன் வரமாட்டேன்னு சொன்னாங்க? நீ எங்க விட்டுட்டு வந்த?” வள்ளி அழுது கொண்டே கேட்டார்.

“அம்மா, என்னை ஏன் கேள்வி கேட்கீங்க? போயி அவளுங்ககிட்ட கேளுங்க.” என்று சொன்னவன் நிற்க முடியாமல் கீழே சரிந்தான். என்ன கேட்டும் அவன் எழவும் இல்லை. அவன் வாயிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

வள்ளி ஓவென்று ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டார், “நான் என்ன செய்ய? எங்கப் போய்த் தேடுவேன்? அய்யோ! என் பிள்ளைங்க என்ன ஆச்சோ தெரியலையே! எங்க தவிக்குதோ தெரியலையே!” என்று கத்தி அழத் தொடங்கினாள்.

துர்கா உடனே சுதாரித்தவள் அருகில் இருந்தவர்களை எல்லாம் கூப்பிட்டு விடயத்தைக் கூற பிள்ளைகளைத் தேட ஆளுக்கொரு பக்கம் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

வீட்டுப் பொம்பளைகள் எல்லாம் கடம்பனை எழுப்பி விபரத்தைக் கேட்க போராடினர். ஆனால், அவன் அசைய கூட இல்லை. அவன் தலையில் தண்ணியைக் கொட்டினர். மோர் குடிக்க வைத்தாள் போதை தெளியும் என்று அதையும் குடிக்க வைத்தனர். இவர்கள் போராடியதுதான் மிச்சம் அவன் போதை இறங்குவேனா என்றது.

“அவன்தான் குடிகாரன்னு தெரியும். தெரிஞ்சும் அவன் கூடப் பிள்ளைங்களை ஏன் அனுப்பினே?” என்று ஒருவர் கேட்டார்

“கோயிலுக்குப் போறானே குடிக்க மாட்டான்னு நினைச்சு அனுப்பினேன். இந்தப் பாவிபய இப்படிப் பண்ணிட்டானே.” என்று மீண்டும் ஒப்பாரி வைத்தார்.

“ஆமா, கோயிலுக்குப் போறப்பதான் குடிக்க மாட்டான். வரப்ப குடிப்பான்னு தெரியாதா?” கூட்டத்தில் இன்னொருவர் சொல்ல ஒவ்வொருத்தராகப் பேசிப் பேசி அவனை எழுப்ப முயற்சித்தனர். நேரம்தான் வீணானது அவன் எழும்புகிற மாதிரியும் தெரியலை பதில் சொல்ற மாதிரியும் தெரியலை.

தேடிப் போனவர்கள் ஒவ்வொருவராக வர பிள்ளைகள் மட்டும் வரவில்லை. மணியும் பன்னிரெண்டை தாண்டியது. கோயில், வரும் வழி கடைகள் என்று எல்லா இடமும் தேடியும் பிள்ளைகள் எங்கேயும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லை காவல் நிலையம் போய்ப் புகார் கொடுக்க வேண்டியதுதான் என்று கூறிவிட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தனர்.

வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து கணவன் மனைவி என இருவர் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து பிள்ளைகள் இருவரும் வந்தனர். பிள்ளைகளைப் பார்த்ததும் வள்ளி அவர்களைக் கட்டிப் பிடித்து ஓவென்று அழுதார். அவர்களைக் கூட்டி வந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை அழுது முடிக்கட்டுமென்றும் காத்திருந்தனர்.

“ஐயா, நீங்க யாரு? இவங்களை எங்கப் பார்த்தீங்க? பிள்ளைகளுக்கு அடிபட்டிருக்கு கட்டு எல்லாம் போட்டிருக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் துர்கா.

“நாங்க இவங்களை ரோட்டில்தான் பார்த்தோம் அழுதுட்டு இருந்தாங்க. சின்னப் பிள்ளைங்களா இருக்காங்களேன்னு காரை நிறுத்தி இவங்க்கிட்ட விசாரிச்சோம். அண்ணன் கூடக் கோயிலுக்கு வந்தோம். வரப்ப அண்ணன் மோட்டார் சைக்கிளை ரோடு ஓரத்தில் கொட்டியிருந்த ஜல்லியின் மேல் ஏத்திட்டாங்க. அதனால், மூணு பேரும் கீழே விழுந்துட்டோம். இவங்களுக்கு அடிப்பட்டிருக்குனு சொன்னாங்க.

அண்ணனை எங்கேன்னு கேட்டோம். அண்ணன் குடிச்சிருந்தாங்க அதான், எங்களைக் கீழே போட்டார். அதனால், நாங்க பயந்து வண்டியில் ஏற மாட்டோம்ன்னு சொல்லிட்டோம். அதனால், அண்ணன் எங்களை விட்டுட்டு போயிட்டார்.

அடி ரொம்ப இருந்துச்சு. அதான், நாங்க ரெண்டு பேரையும் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுச் சிகிச்சை கொடுத்து கூட்டிட்டு வர நேரமாச்சு. பிள்ளைங்களுக்கு உங்க தொலைபேசி எண் எதுவும் தெரியலை. அதனால், உங்களுக்குச் சொல்லவும் முடியலை.” என்றார்.

“அம்மா, நீங்க அவங்களைக் கோயிலுக்கு அனுப்பியது தப்பில்லை. ஆனால், இந்த மாதிரி ஆள்களை நம்பி அனுப்பாதீங்க. இவன் திருந்துவாங்கன்னு நம்புறதைவிட இவன்கிட்ட கவனமா இருப்பதுதான் நல்லது. இவன் திருந்தறது நாம சொல்லி இல்லை. அவனாதான் திருந்தனும். தான் செய்றது தப்புன்னு உணரும் வரை. இந்த மாதிரி ஆட்கள் திருந்த மாட்டாங்க.” என்றார் கோபமாக.

“பொண்ணுங்களுக்கு ஆபத்து எந்த நேரத்தில் எப்படி வரும்ன்னு தெரியாது. அதனால், நாமதான் எச்சரிக்கையா இருக்கனும். இந்தப் பிள்ளைங்க சிக்கக் கூடாதவங்ககிட்டச் சிக்கியிருந்தா என்ன? ஆகியிருக்கும்னு நினைச்சுப் பாருங்க.” என்றார்.

வள்ளி, அருகில் இருந்தவர்கள் எல்லாம் அவர் பேசியதைக் கேட்டு, ‘நீங்க சொல்றது சரிதாங்க. இந்த மாதிரி ஆள்கள் திருந்துவாங்கன்னு எதிர்பார்ப்பதைவிட நாம எச்சரிக்கையோடு இருப்பது மேல்.” என்றனர்.

வள்ளி அவருக்கும், அவர் மனைவிக்கும் இருகைக் கூப்பி நன்றி சொல்லி பிள்ளைகளையும் அவர்களுக்கு நன்றி சொல்லச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *