காட்டிலிருந்து வந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 6,744 
 

கேட்டுக்கேள்வியில்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அப்போது நான் வீட்டு முன் விறாந்தையிலிருந்தேன். மதியச் சாப்பாட்டின் பின்னர் சற்று ஓய்வாக சாய்வுக் கதிரையில் அமர்வது வழக்கம். அதை ஓய்வு என்றும் சொல்ல முடியாது. யோசனை… கவிழ்ந்துகொண்டிருக்கும் கப்பலை எப்படி மீட்டெடுப்பது என்ற யோசனை..!

யோசனை தடைப்பட.. வருபவன் யாராக இருக்கும் என்று எண்ணம் ஓடியது. முன்பின் அறிமுகமானவன் போலத் தெரியவில்லை. மெலிந்த தேகம். கறுப்பு லோங்சும் வெள்ளை சேர்ட்டும் அணிந்திருந்தான். யாராவது சலுகை விலையில் பொருட்களை விற்பவர்களாக இருக்குமோ? ஆனால் அவனது கையில் ஏதும் பொருட்களுமில்லை.. களுத்துப்பட்டியுமில்லை! நடையில் ஒரு அவசரம் தெரிந்தது.. விறுவிறு என வந்தான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீட்டுக்குள்ளும் நுளைந்தான்.

நானுண்டு என் பாடுண்டு என்றிருந்த என்னைப் பார்த்து உறுக்குவதுபோலக் கேட்டான்…

“நீங்கதானே சுந்தரபாண்டியன்?” (அதுதான் எனது பெயர்)

ஒருவேளை ஊரிலிருந்து வருகிற யாராகவோ இருக்கலாம். இப்படி வருகிற யாரிடமாவது அம்மா கடிதமோ கற்கண்டோ கொடுத்துவிடுவாள். ஒரே ஒரு கடிதத்தைத் தருவதற்காக இவ்வளவு தூரம் வந்தவனுக்கு ஆத்திரம் ஏற்படுவது இயல்புதான். பயணக் களைப்பாயிருக்கும்.. அதுதான் எரிந்து விழுகிறான். நான் அவனைச் சமாதானப்படுத்தினேன்..

“அவசரப்படாமல் இதிலை இருங்கோ..தம்பி..! (கதிரையைக் காட்டியவாறே..) மத்தியானம் சாப்பிட்டிட்டீங்களோ..?”

ஆளுக்குப் பசிபோலிருக்கிறது.. எரிச்சலுக்கு அதுவும் ஒரு காரணம்தான். அவனது முகத்தோற்றமே அதைக் காட்டியது. எனினும் அவனுக்குச் சாப்பாடு போடும் உத்தேசம் எனக்கு இல்லை! சும்மா அப்படிக் கேட்டு அவனது சூட்டைக் கொஞ்சம் குறைக்கலாமே என்ற நோக்கம்தான்.

“நான் இங்க சாப்பிட வரயில்ல..” – வெடித்துப் பேசினான்.

“தம்பி.. நீங்கள்.. ஆர்..? எனக்குத் தெரியயில்ல.. எங்கயிருந்து வாறீங்கள்?

“காட்டிலையிருந்து..!”

ஒரு நிலையிலின்றி அந்தச் சுவருக்கும் இந்தச் சுவருக்கும் இடையில் வீச்சாக நடந்தான்.. கைத் தொலைபேசியை எடுத்து அதே விசையில் இலக்கங்களை அழுத்…தி..னான்.

“சரி…ஸ்பொட்டுக்கு வந்தாச்சு..! ஆள் இருக்கிறார்..!”

அந்தப் பதில் என்னைச் சட்டெனக் கதிரையிலிருந்து எழுப்பியது.

பொக்கட்டிலிருந்து ஒரு அட்டையை எடுத்து அதில் இருந்த இலச்சினையைக் காட்டித் தன்னை அடையாளப்படுத்தினான். என்னையும் ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டு.. தொலைபேசியில் இன்னும் சிலரை எடுத்து, ஸ்பொட் அது இது என்று தகவல்கள் சொன்னான். உண்மையில் அப்படி யாருடனும் பேசுகிறானா அல்லது என்னை மிரட்டுகிற முயற்சியா என ஒரு கணம் யோசித்தேன். அந்த யோசனை நீடிக்கமுதலே.. அவனது கையில் ஒரு கையடக்கத் துப்பாக்கி! கண் இமைக்கும் நேரத்தில் தனது பொக்கட்டினுள்ளோ.. சேர்ட் மறைவிலோ இருந்து அதை எப்படி எடுத்தான்?

அது ஒரு மந்திரவித்தை போலிருந்தது. சரியாகத் தெரியமுதலே.. என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனது மறு கைக்கு மாறி மறைவிடத்துக்குப் போனது.

நான் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். எனினும் அதைப் பெரிதுபடுத்தாமல்.. (சிறிய துப்பாக்கிதானே..! என்ன செய்துவிடப்போகிறது என்ற) அசட்டுத்துணிவுடன்..

“தம்பி அவசரப்படாமல் இதிலை இருங்கோ..!”

…கதிரையை அவனுக்கு அண்மையாக இழுத்து வைத்தேன்.

“நான் இங்க இருக்கிறதுக்கு வரயில்ல.. வெளிக்கிடுங்க இப்ப..! வெளியில வான் நிக்குது… உங்களைக் கொண்டுபோக வந்திருக்கிறம்!”

உள்ளே இரத்த ஓட்டம் ஒருமுறை நின்றுவிட்டது போன்ற உணர்வில் அதிர்ந்தேன். எனினும் நிதானிக்க முயன்றேன்.

“என்ன விஷயம்.. சொல்லுங்கோ..!”

“பல தடவை உங்களுக்குக் கடிதம் போட்டிருக்கிறம்.. நீங்கள் வந்து சந்திக்கயில்ல.. அதுதான் கொண்டுபோய் விசாரிக்க வேண்டியிருக்கு…!”

ஒரு சடப்பொருளைத் தூக்கிக்கொண்டுபோக வந்தவன் போன்ற ஸ்டைலில் அவனது பதில் இருந்தது.

“எனக்கு அப்பிடி ஒரு கடிதமும் வரயில்ல.. என்ன காரணம்?.. ஏன் நான் வரவேணும்?”

“அதையெல்லாம் அங்கை போய்ப் பேசலாம்.. இப்ப நீங்க வரப்போறீங்களா.. இல்லையா? இல்லையென்றால் பைஃபோசாகக் கொண்டுபோகவேண்டியிருக்கும்…!”

மீண்டும் ரெலிபோனை எடுத்து புரியும் பாஷையில் புரியாதமாதிரித் தகவல்கள் பேசிக்கொண்டிருந்தான். நான் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தேன். மனைவியோ பிள்ளைகளோ கிட்ட நின்றால் இவன் பேசுவது அவர்கள் காதிலும் பட்டுவிடக்கூடும்… அதனால் அவர்களும் குழம்பிப்போய்விடுவார்களே எனக் கவலையாயிருந்தது.

அப்போது வீட்டுக்குள்ளிருந்து எனது தகப்பனாரின் செருமும் குரலும், நடந்து வரும் காலடிச் சத்தமும் கேட்டது. அவர் வயசானவரென்றாலும் கம்பீரமான மனுசன். இருமுவது செருமுவதுகூட நாலு வீடுகளுக்குக் கேட்கக்கூடியதாயிருக்கும். அதனால் அக்கம் பக்கத்து வீடுகள்கூட கொஞ்சம் அடக்கம்! அப்படிப்பட்டவரின் குரல் அவனையும் அச்சுறுத்தியிருக்கவேண்டும். செருமல் சத்தம் கேட்டதும் அவனது கை சட்டென றிவோல்வரை இழுத்..

“தம்பி..தம்பி.. ! அது என்ர அப்பா..! வயசானவர்.. வருத்தக்காரன்..” (அதனால் அவரை மன்னித்துவிடுங்கோ எனக் கேளாமல் கேட்டுக்கொண்டேன்) அப்பா வயசானவராகவும் வருத்தக்காரனாகவும் இருந்தது நல்லதாகப்போய்விட்டது! அவரை அவன் மன்னித்தருளினான்.
அப்பா இங்கிதம் தெரிந்தவர். வெளியில் காற்றோட்டமாக அமர்வதற்கு வந்தவர்.. நான் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதும் திரும்பவும் உள்ளே போய்விட்டார். வீட்டில் யாரையும் குழப்பமடையச் செய்யாமல் இவனைச் சமாளிக்கவேண்டுமே என்ற கலக்கம் என் மனதை குழப்பிக்கொண்டிருந்தது. இவன் உண்மையில் யாராக இருக்கும் என்று உள்ளே மனம் கணக்குப் போட்டது. ஏதோ ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவனென்று அடையாளம் காட்டினான். அது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது வேறு யாராவது பணம் பறிக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். அப்படியுமில்லாமல் மக்களின் உளவியலைக்; குழப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்படும் குழுக்களைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். எப்படிப்பட்டவனாயிருந்தாலும் துப்பாக்கி வைத்திருக்கும் ஆளைத் தந்திரமாகத்தான் கையாளவேண்டும்.

“தம்பி.. நானும் வருத்தக்காரன்…. நெஞ்சு நோவுக்கு குளிசை எடுக்கிறனான். அங்க.. இஞ்ச ஒரு இடமும் வரேலாது.. உங்களுக்கு என்ன வேணும்.. சொல்லுங்கோ..?” (வருத்தக்காரன் என்று சொன்னால் ஆள் மடங்கிவிடுவான் போலிருக்கு!)

“நாங்கள் கேட்டு எழுதின தொகை காசை நீங்கள் கொண்டுவந்து தரயில்ல.. அதுதான் இப்ப வந்திருக்கிறம்…”

“காசா.., எவ்வளவு..?”

“இருபது லட்சம்..!”

நான் அப்படியே பொத்தெனக் கதிரையில் அமர்ந்தேன். வாய் மூடிக்கொண்டது. மூச்சை அதிகமாக உள்ளிளுத்து மீண்டும் இயல்புநிலைக்கு வர முயன்றேன். நான் ஏதும் பேசாதிருக்க அவன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“உங்களைப்பற்றின எல்லா விபரங்களும் எங்களுக்குத் தெரியும்.. உங்கட வருமானம் எவ்வளவு என்றும் தெரியும்.. புலனாய்வுமூலம் எல்லா விபரங்களும் எடுத்திருக்கிறம்.!”

வங்கியிலிருந்து கடிதம் வந்திருந்தது. அடகு வைத்திருந்த நகை நட்டுக்கள் காலம் கடந்தும் மீட்கப்படாமையால் ஏலம் விடப்போகிறார்களாம். அவற்றை மீட்பதற்கு பணத்தைப் புரட்டும் வழி தெரியாமல், அப்படியே ஏலம்போக விட்டுவிடலாமா.. அந்த முடிவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு மனைவியிடம் சொல்வது என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இவன் வந்தான். இப்போது இவனுக்குத் தேவையான பணத்தை எங்கே புரட்டுவது?

“தம்பி.. நீங்கள் நினைக்கிறமாதிரி நான் காசுக்காரனில்லை.. என்ர பிரச்சனைகள் எனக்குத்தான் தெரியும்..”

“உங்களுக்கு பிள்ளைகள்.. எத்தனைபேர் என்றும் தெரியும்.. அவை படிக்கப் போய் வாற இடங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. சும்மா பேசி நேரத்தை மினக்கெடுத்தாமல் அங்க வந்து உங்கட பிரச்சனையைச் சொல்லுங்க.. அதுதான் உங்கட பிள்ளையளுக்கும்; பாதுகாப்பு..”
அடுத்த அடி! எனக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த மூச்சும் நின்றுவிடும் போலிருந்தது.

என் மனைவி ஓர் அப்பிராணி. என்னை யாராவது காணவோ சந்திக்கவோ வந்தால்.. நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நல்ல வகையில் தேநீர் தயாரித்துக்கொண்டு வந்துவிடுவாள்… விருந்தோம்பல்!

மனைவி அவ்வாறு தேநீர்த் தட்டுடன் வந்ததும் நான் அவசரப்பட்டு எழுந்து அவளிடமிருந்து அதை வாங்கினேன்… “உள்ளுக்குப் போங்கோ.. உள்ளுக்குப் போங்கோ…” என கண் சமிக்ஞையில் தெரிவித்தேன். தேநீர்த்தட்டு உருக் கொண்டதுபோல என் கையில் படபடத்தது.
எனது வித்தியாசத்தை அவள் புரிந்திருக்கவேண்டும்.. “ஆராள்.. வந்திருக்கிறது?” என முகப்பாஷையில் கேட்டாள்.

“தெரிஞ்ச ஆள்த்தான்.. பிறகு சொல்லுறன்.. போங்கோ!” என அதே பாஷையிற் தெரிவித்தேன்.
தேநீரைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினேன்.

“வேண்டாம்.. இப்படிப் போற இடங்களிலை.. நாங்க… ஒன்றும் குடிக்கிற பழக்கமில்ல..!”
“பரவாயில்லை..குடியுங்கோ.. அதிலை நஞ்சு கிஞ்சு ஒன்றும் போடயில்லை..! வீட்டுக்கு வந்திருக்கிறீங்கள்;.. களைச்சுப்போயிருக்கிறீங்கள்;..! முதலிலை ரீயைக் குடியுங்கோ!”
புற்றினுள் இருக்கும் நச்சுப் பாம்பு போல அவனது பொக்கட்டினுள் இருக்கும் கைத்துப்பாக்கி எந்த நேரத்தில் சீறிக்கொண்டு வருமோ என்ற எச்சரிக்கையுணர்வில் மிகவும் மரியாதையாகவே அவனிடத்தில் எனது நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

அவன் தேநீரைத் தன் கையில் வாங்கிக்கொண்டு, நான் சொல்லாமலே கதிரையில் அமர்ந்தான். உண்மையிலேயே பயல் களைத்துப்போயிருக்கிறான்; போற்தான் தெரிகிறது. நானும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தேன். சில கருத்துக்களைக் கூறினேன். சில கேள்விகளைக் கேட்டேன். அவனும் அதற்கேற்றவாறு பேசினான்.

“என்ன… பிரதர்.. இப்பிடி நாங்கள் போற இடங்களிலை பயத்தில மூச்சே விடமாட்டாங்கள்… நீங்க.. என்னென்டால் ஆற அமர்ந்திருந்து பேசிறீங்க?”

“பயந்து என்ன தம்பி செய்யிறது?… வாழும்வரைக்கும் இப்பிடி எத்தினை பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கு! பார்க்கப்போனால்… எல்லாம் உயிர் வாழிறத்துக்கான.. ஒருத்தரை ஒருத்தர் ஈவிரக்கமின்றி அழிக்கிற போராட்டம்தான்..! எப்பவோ ஒருநாள் நானும் சாகத்தான்போறன்… நீங்களும் சாகத்தான்போறீங்கள்.. அது இண்டைக்கு நடந்தாலென்ன?.. பிறகு நடந்தாலென்ன..!”

ஒருவித எரிச்சலுடனும், விரக்தியுணர்வுடனும்தான் இவ்வாறு கூறினேன். என்றாலும் உள்ளே பயம் இருந்தது. கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. இவன் என்னைக் கொண்டுபோய்த் தட்டிவிட்டால்..? என் பிள்ளைகளின் எதிர்காலம் அநாதரவாகப் போய்விடுமே..! நானில்லாத நாட்களை எப்படி எதிர்கொள்;வார்கள்..? ஆகவே எனது உயிரை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளவேண்டும்…! அப்பனே, அப்படி என்னை ஓரக் கண்ணால் பார்க்காதே..!
அவன் தொலைபேசியில் எனக்குக் கேட்காத தொனியிற் பேசிக்கொண்டிருந்தான்.
அவனுடன் சற்று சமாதானமான முறையில் எனது கஷ்ட நஷ்டங்களை எடுத்துச் சொல்லிப் பார்த்தாலென்ன? சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கிறதா… தோல்வியில் முடியுமா என்பது வேறு விடயம். அற்லீஸ்ட் முயன்றாவது பார்க்கலாமே..?

“என்னைப்பற்றின விபரங்களைச் சேகரித்த உங்கட புலனாய்வுக்கு எனக்குத் தொழிலிலை ஏற்பட்ட நஷ்டங்கள்.. கடன் பிரச்சினைகளைப் பற்றித் தெரியவரயில்லையா..?”

எனது இந்த எதிர்பாராத கேள்வியினால் சற்றும் மனம் தளராதிருந்த அவன் கொஞ்சம் தடுமாறினான். என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“சும்மா கதை விடாதையுங்க.. ஐயா..” – ஆழம் பார்த்தான்.

“அப்ப.. உங்கட புலனாய்வுக்கு சரியான தகவல் கிடைக்கயில்ல.. தம்பி..! வெளியில கேட்டால் இந்த ஆளுக்கு என்ன குறை எண்டுதான் சொல்லுவாங்கள்.. என்ர கஷ்டங்களை நான் வெளிக் காட்டிறதில்லை.. ஆனால் கடன் சுமையால நாளும் பொழுதும் நான் படுகிற வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்…!”

ஒரு வேகத்தில் அல்லது கோபத்தில் நான் கூறிய வார்த்தைகள் என்னைக் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்தியது. கண்கள் பனித்தும் விட்டது. அதை அவன் கவனித்திருக்கவேண்டும்.

“இல்ல இல்ல.. அது.. அது.. எங்களுக்கு எல்லாம் தெரியும்… கடனா?.. எவ்வளவு..?”

“தெரிஞ்சுகொண்டும்தானா இவ்வளவு தொகை காசு கேக்கிறீங்கள்?.. எனக்கு ஏற்கனவே அம்பது லச்சத்துக்கு மேல கடன் இருக்கு..!”

இதைக் கூறிவிட்டு அவனது முகத்தைப் பார்த்தேன். அவன் மௌனமாயிருந்தான். சற்று நேரத்தின் பின் கேட்டான், “இவ்வளவு கடன் ஏறும் வரையும் என்ன செய்தனீங்க?”
நான் பதில் பேசாமலிருந்தேன். அதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? பட்ட கடனைக் கட்ட வசதியில்லாவிட்டால் அது தன்பாட்டில் ஏறிக்கொண்டுபோகிறது!

எனது மகள் கையிற் புத்தகத்துடன் வெளியே வந்தாள். ரியூசனுக்குப் போகிறாள். அவளுக்கு இங்கு நடக்கும் கூத்துக்கள் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை! ஒரு பாபமும் அறியாமல்..

“போயிட்டு வாறன் அப்பா..!” என்றவாறே நடந்தாள். அது அவனுக்கும் கேட்டிருக்கும். மகள் வெளியேறும்வரை பேசாமற் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் ரெலிபோனை எடுத்து இலக்கங்களை அழுத்தி காதில் வைத்தான்.

‘ஐயையோ… மகள் வெளியே போகிறாளே..! இவன் வாகனத்துடன் நிற்கும் தனது கூட்டாளிகளுக்கு ஏதாவது தகவல் கொடுக்கிறானோ..?’

அவசரப்பட்டு எழுந்து பிள்ளையை நிறுத்துவதற்கு முற்பட்டேன்.

“பதறாமல் இருங்க.. ஐயா… நான் வேற விஷயம் பேசிறன்..”

மகளும் வெளியேறிப் போய்விட்டாள்.

எனக்கு இருக்கை கொள்ளவில்லை. இவன் சொல்வதை நம்பமுடியாது. எப்படியாவது மகளைப் போகாமற் தடுத்திருக்கவேண்டும். இப்போது பிள்ளைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயம் மேலெழுந்து நெஞ்சை அழுத்தியது.

மேலும் நேரத்தைக் கடத்தக்கூடாது. இவனுக்கு ஏதாவது ஒரு தொகையைத் தருவதாகச் சம்மதித்து பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிவிடுவோம் என முடிவெடுத்தேன். காசை யாரிடமாவது மாறிக் கொடுக்கலாம்.

“தம்பி.. நீங்கள் கேட்ட தொகையைத் தரக்கூடிய நிலமையில.. நான் இல்ல.. ஏதாவது கொஞ்சம் பார்த்துத் தாறன்.. பிரச்சனைப் படுத்தாதையுங்கோ..!”

“கொஞ்சக் காசென்றால் எவ்வளவு?”

“அதை நீங்கள்தான் சொல்லவேணும்… என்ர நிலைமையை நான் சொல்லியிட்டன்…”

அவனது தலை ஒரு பாவனையில் அசைந்தது. யோசிக்கிறான் போலிருக்கிறது.. இறங்கி வருவானோ…?

“..அதைப்பற்றி நான் முடிவெடுக்கேலாது.. மேலிடத்தில கேட்கவேணும்… கொஞ்சம் பொறுங்க…!”

ரெலிபோனில் தொடர்பெடுத்தான்.

என்னுடனும் கதை கொடுத்து விசாரணை செய்துகொண்டு இடையிடையே தொலைபேசித் தொடர்புகளிலும் ஈடுபட்டான். தொழில் விபரங்கள்.. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதற்கான காரண காரியங்கள்.. போன்ற விபரங்களை விடுத்து விடுத்துக் கேட்டான். (ஏற்கனவே புலனாய்வில் எல்லா விபரங்களும் தெரியும் என்று சொன்னானே..!) நானும் இந்தமாதிரி எனது கஷ்ட நஷ்டங்களை யாருக்கும் எடுத்துச் சொன்னதில்லை. ஆனால் அந்த நிலைமையில் என்னையறியாமலேயே சொல்லப்பட்டுவிட்டது.

“சரி.. விஷயத்துக்கு வருவம்.. உங்களாலை எவ்வளவு தரேலும்? பத்து லட்சம்?”

அதைக் கேட்டு ஒரு மௌனச் சிரிப்புத்தான் தோன்றியது என்னிடத்தில்! இவனோடு இனி என்ன பேசுவது?

“என்ன பேசாமலிருக்கிறீங்க…? சொல்லுங்க…!”

“என்னால் தரக்கூடியது அவ்வளவு பெரிய தொகையில்ல..”

இருபது பத்தாகி.. ஐந்தாகி… பேச்சுவார்த்தை எவ்வளவு தொகை என்று பொருந்தி வராமல்.. இழுபட்டு இறுதியில் ஒரு லட்சத்தில் வந்து நின்றது!

பணத்தை யாரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே மனதிற்குள் திட்டமிட்டிருந்தேன். நண்பன் தாண்டவக்கோன்தான் அதற்குச் சரியான ஆள்! கேட்கும்போதெல்லாம் உதவக்கூடிய பசை உள்ளவன். உதவிக்கு வட்டியுமுண்டு! வட்டிக்கு வட்டியுமுண்டு! எவ்வாறாயினும் அவன்தான் இப்போதைக்கு ஆபத்பாந்தவன்!

“கொஞ்சம் இருங்கோ தம்பி.. இன்னொரு ஆளிட்டையிருந்துதான் காசு எடுக்கவேணும்.. கோல் பண்ணி ஒழுங்கு பண்ணியிட்டு வாறன்..”

இருக்கையை விட்டு எழுந்து வீட்டுக்குள் போக முற்பட்டேன்.

“ஏதாவது புத்திசாலித்தனமாய் செய்யலாமென்று நினைச்சு.. வீணாய் வில்லங்கத்தில மாட்டிக் கொள்ளவேண்டாம்…!” – எச்சரித்தான்.

(அப்பனே அந்தக் காரணத்துக்காகத்தான் ஆரம்பத்திலிருந்தே நான் ஏதும் புத்திசாலித்தனமாக செய்ய உத்தேசிக்கவில்லை.!)

அவன் நினைத்துத் தயங்குவதுபோல, உள்ளே போய் போஃனில் பொலிஸிற்கும் முறையிடலாம். முன் வீட்டிலிருக்கும் யசாரிடம் சொன்னால் தனது நண்பர்களுடன் வந்தே ஆளை மடக்கிவிடுவான். ஆனால் தடி எடுத்தவனெல்லாம் இங்கு தண்ட(ல்)காரனாயிருக்கிறான். பின் விளைவுகளையும் யோசித்து இந்தமாதிரி சமயோசிதமாகத்தான் உயிர் வாழவேண்டியிருக்கிறது.

உள்ளே சுவரின் மறுபக்கமாக நின்ற மனைவி எனது கையைப் பிடித்துக்கொணடாள். கண் கலங்கி நடுங்கினாள்.

“என்ன?… என்ன செய்யப்போறாங்கள்?” திரும்ப வெளியே போகவும் விடமாட்டாள் போலிருந்தது.

“பயப்பிடாதையுங்கோ… நான் சமாளிக்கிறன்…” மனைவியை ஆறுதற்படுத்தியவாறு தாண்டவக்கோனுக்குத் தொடர்பை எடுத்தேன். அவசரமாக ஒரு லட்சம் ரூபா தேவைப்படும் விஷயத்தை கூறி, பணம் உடனடியாக வேண்டும் எனக் கேட்டேன். இப்போது தன்னிடம் இல்லையென்றும், இரண்டொரு நாள் பொறுக்கமுடியுமானால் வேறு இடங்களில் எடுத்துத் தரலாமென்றும் வழக்கமான பதில்தான் அவனிடமிருந்து கிடைத்தது.

“காசு இப்பவே வேணும்! இல்லையென்டால்.. என்னைக் கொண்டுபோக வந்து நிக்கிறாங்கள்..”

“ஐயையோ..!” – நண்பனின் குரல் பதறியது.. “கொஞ்ச நேரம் பொறுங்கோ கொண்டுவாறன்..!”
நண்பனின் பதற்றத்திற்கு என்மேற் கொண்டுள்ள பற்று பாசம் மட்டும் காரணமல்ல… என்னைக் கொண்டுபோய்விட்டால், ஏற்கனவே தன்னிடம் பெற்றிருந்த கடன் தொகை அதோ கதியாகப் போய்விடுமே.. என்பதும்தான்! எனவே நான் கேட்ட தொகையை எப்படியாவது தரவேண்டிய நிர்ப்பந்த நிலையிலிருந்தான் நண்பன்.

“வீட்டுக்குள்ள வரவேண்டாம்… கேற்றுக்கு வெளியில.. சந்திக்கலாம்..” என எச்சரிக்கையும் செய்துவைத்தேன்.

மனைவியின் கையை விடுவித்துக்கொண்டு, வெளியே வந்து கதிரையில் பெருமூச்சுடன் அமர்ந்தேன்.

“காசு ஒழுங்கு பண்ணியாச்சு!… இப்ப வந்திடும்.”

இப்போது அவன் இருக்கை கொள்ளாமல், எழுவதும்.. கேற் பக்கமாக எட்டி எட்டிப் பார்ப்பதுமாக நின்றான்.

“யாரிட்டைக் காசு கேட்டிருக்கிறீங்க?.. கேட்டவுடன இவ்வளவு தரக்கூடிய ஆள் ஆர்?”

எனக்குத் தெரியாதா… இந்தக் கேள்வியெல்லாம் எதற்கென்று! (புலனாய்வு!) பிடி கொடுத்து நண்பனை மாட்டிவிடாமல், மிகச் சாதுர்யமாகச் சமாளித்துக்கொண்டிருந்தேன்.

தாண்டவக்கோன் தெருவில் அந்தப் பக்கம் போகிற யாரோ ஒருவரைப் போல… சைக்கிளில் கேற்றைக் கடந்து அசுகை காட்டியதும், எழுந்து கேற்றுக்கு வெளியே போனேன்.

ஒரு என்வலப்பை என் கையிற் தந்தான் நண்பன், “எண்ணிப் பாருங்கோ..!”

‘சரி!’ எனத் தலையசைத்து, தாண்டவக்கோனை அனுப்பிவிட்டுச் சற்றும் தாமதியாமல் உள்ளே வந்தேன்.

எதை எண்ணிப் பார்ப்பது..?

அப்படியே பணத்தை அவனிடம் கொடுத்தேன்.

“எண்ணிப் பாருங்கோ..!”

எண்ணாமல் அதை அப்படியே பொக்கட்டினுள் செலுத்தினான். ஃபோனைக் கையிலெடுத்துத் தகவல் கொடுத்தான்.

பிரச்சனை இந்த அளவிலாவது முடிந்ததே என நான் நினைக்க, அவன் வேறொன்று நினைத்தான், “நீங்கதான் உங்கட காரில… என்னைக் கொண்டு போய் எங்கட வான் நிக்கிற இடத்தில விடவேணும்.”

எனது தயக்கத்தைக் கவனித்து, “வானை அப்பவே போகச்சொல்லியிட்டன்.. ஒரே இடத்தில.. கன நேரம் நின்டால்… நோற்றட் ஆகியிடும்..” என்றான்.

பிரதான வீதிவரை நடந்து செல்வதற்குத் தயங்குகிறான்போலிருக்கிறது. போகவேண்டிய இடத்தைக் கேட்டேன். அவன் கூறிய இடம் பத்துப் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்தது.
என் மனைவி வெளியே வந்து… மீண்டும் என் கையைப் பிடித்தவாறு கலங்கிக்கொண்டு நின்றாள்.

“அவரை நாங்கள் ஒண்டும் செய்யமாட்டம் அம்மா… அழாதையுங்க!” மனைவியை அவன் தேற்றுகிறானா அல்லது கிண்டல் செய்கிறானா..?

மனைவியின் நிலையைப் பார்க்க, எனக்குக் கவலையாயிருந்தது;

“தம்பி குறை நினைக்கவேண்டாம்.. எனக்கு அவ்வளவு தூரம் வரேலாது..”

யோசனை செய்துவிட்டு, இன்னொரு இடத்தைக் குறிப்பிட்டான். ஐந்து கிலோமீட்டர்வரை போகவேண்டியிருக்கும்.

உள்ளே சென்று கைத்தொலைபேசியை எடுத்து ஓஃப் பண்ணி பொக்கட்டினுள் மறைத்து வைத்தேன். எதுவும் நடக்கலாம்.. அப்படி ஏதுமென்றால் யாருக்காவது தகவல் கொடுப்பதற்காவது உதவும். மனைவியிடம், “பயப்பிடாதையுங்கோ… வந்திடுவன்..” எனக் கூறிவிட்டு வெளியே போய்க் காரை எடுத்தேன். எனக்குப் பக்கத்தில் முன் சீற்றில் அவன் அமர்ந்துகொண்டான்.

கார் ஓடிக்கொண்டிருந்தது. அவன் ரெலிஃபோனில் பேசினான்.

ஏற்கனவே அவன் குறிப்பிட்ட இடத்தை அடையமுன்னரே, சன சந்தடி குறைந்த… சற்று வெளியான பாதையிற் போகும்போது.. திடுதிப்பென்று “நிப்பாட்டுங்க.. நிப்பாட்டுங்க..!” என அவசரப்பட்டான்.

தட்டப்போகிறானோ?

இப்படி எத்தனையோ கதைகள் நடந்திருக்கிறது! அவன் கேட்ட தொகையையும் நான் கொடுக்கவில்லை… சந்தேகத்துடன் பார்த்தேன்.

“பின்னுக்கு எங்கட வான் வருகுது..” என்றான்

பாதை ஓரமாகக் காரை நிறுத்தினேன். காரிலிருந்து இறங்கினான்.

‘அப்பாடா.. தொல்லை விட்டது போ..!’

கதவை இழுத்துப் பூட்டியவாறு நான் காரை எடுக்க, சட்டெனக் கதவைத் திறந்தான்.

பொக்கட்டினுள் கை விட்டு.. அதை எடுத்து… முன் இருக்கையில் வைத்துவிட்டுக் கதவைச் சாத்தினான்.

அது, அவனிடம் நான் கொடுத்த என்வலப்.. பணத்துடன்!

ஆச்சரியத்துடன் பார்த்தேன்.. கையசைத்துவிட்டு விறுவிறு என நடந்து போனான்.

– ஞானம் இலக்கிய இதழில் பிரசுரமானது 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *