கழுதைக்கும் கற்பூர வாசனைதெரியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 4,489 
 

எலே, இந்தக் கழுதய ஏமாத்தனும்னு நினைக்கிறானா? பிச்சுப்புடுவேன் பிச்சு!, நீ போய் அவன இழுத்தாம்லே, பணத்தை வாங்கிட்டு இந்தா அந்தா’னுட்டு இழுத்துகிட்டு திரியறான், பேசுன பேச்சு பிரகாரம் நடக்காத பய, அவனையெல்லாம் இழுத்து வெச்சு..கடினமான வார்த்தைகளை வீசினார்.அண்ணாச்சியின் வசவுகள் எனக்கு புதிதல்ல!

நான் அவரிடம் கணக்குபுள்ளையாக வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது,இந்த ஐந்து வருடங்களில் அவருடைய குணநலன்கள் எனக்கு அத்துப்படி, தொழிலில் கறார், ஓப்பந்த தொழில்களின் நெழிவு சுழிவுகளை, விரல் நுனியில் வைத்திருப்பார், யார் யாரை எங்கு பிடித்தால் வேலை நடக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பவர்.இந்தக்கட்டிட வேலைக்கு தரை கடினமாக இருப்பதால் டிரில்லிங் முறையில் துளையிட்டு வேலை செய்ய வேண்டும், இந்த வேலைக்கு நன்குதெரிந்தவர்கள் செய்தால்தான் வேலை வேகமாகவும், விரைவிலும் நடக்கும்.

அதற்காக இவர்களுக்கு மேஸ்திரி போன்று ஒருவன் இருப்பான். அவனிடம் அண்ணாச்சி பதினந்தாயிரம் அட்வான்ஸ் ஆக கொடுத்திருந்தார். நாளையே வேலை தொடங்குவதாக கூறிச்சென்றவன் இரண்டு மூன்று நாட்களாக போக்கு காட்டிக்கொண்டிருக்கிறான்.

பொதுவாக இந்த மாதிரி பெரிய முதலாளிகளிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டால் இழுத்தடிக்கமாட்டார்கள், அதுவும் அண்ணாச்சி போன்றவர்களிடம் இப்படி செய்வது என்பது பெரிய ஆச்சர்யம்தான்.என்னுடைய அனுபவத்தின்படி அவரை விட்டு நாம் தள்ளி சென்று விட வேண்டும், அவரது கோபம் தானாக அடங்கிவிடும்.

எப்படியோ அண்ணாச்சியின் ஆட்கள் அவனை பிடித்து கொண்டு வந்து விட்டார்கள்.எலே கூறு கெட்ட பயலே, ஆளைகூட்டிட்டு வர்றேன்னு பதினைஞ்சாயிரம் வாங்கிட்டு போன!,இந்தக்கழுதைய ஏமாத்தனும்னு நினைச்சுட்டியாடா? இந்தக்கழுதய ஏமாத்திட்டு எங்கடா நீ ஓட முடியும்?நாளைக்காலையில நீ ஆளுகளோட வர்றே, ஏமாத்த நினைச்சியோ உன்னை எங்கிருந்தாலும் புடிச்சி இழுத்துட்டு வந்து மரத்துல கட்டி வச்சு தோலை உறிச்சுடுவேன்,நாளைக்கு கண்டிப்பா வந்துர்றேன், அவன் விட்டால் போதுமென ஓட்டம் பிடித்தான்.

அண்ணாச்சி செய்தாலும் செய்வார், அவரை பொருத்தவரை வேலை செய்பவனுக்கு கூலி தாராளமாகத்தருவார்.ஆனால் ஏமாற்றினான் என்றுதெரிந்தால் முடிந்தவரை அவ்னை விலக்கிவிட முயற்சிப்பார்.சாம்,பேத, தான, தண்ட, என்பது போல கடைசி ஆயுதத்தை,இறுதியில்தான் எடுப்பார்.அதைப்பார்த்த அனுபவமும் எனக்கு உண்டு, ஒருவனை கட்டி வைத்து அடித்ததையும் அதன் பின் அவனுக்கு உடல் நிலை சரியாகும் வரை இவர்தான் சோறு போட்டார் என்பதும் வேறு விசயம். அந்த ஊழியர்களுக்கு அண்ணாச்சி கண்டிப்பான தகப்பன், முதலாளி எல்லாம்.

அவர் தன்னை கழுதை கழுதை என சொல்லிக்கொள்வதற்கு கூட ஒரு கதை உண்டு!. திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் உள்ள பள்ளியில் இவரை படிக்க வைக்க இவர் அப்பா படாத பாடுபட்டுக்கொண்டிருக்க, வாத்தியார் ஒரு நாள் வேடிக்கையாக எலேய்,நீ கழுதயாட்டம்ல,அதுக்குத்தான் கற்பூர வாசனைதெரியாது, ஆனா நல்ல உழைக்கும்டே, நீ உங்கப்பனுக்கு
நல்லா உழைச்சுப்போடத்தான் லாயக்கு, ஆனா படிக்கிற விசயம் உனக்கு கற்பூர வாசம்தான்லே என்று கிண்டலடித்திருக்கிறார்.

அதைக்கேட்டு ரோசப்பட்டு எழுந்த அண்ணாச்சி ஆமா சார், நான் கழுதைதான், எனக்கு படிக்கிற வாசம்னா என்னான்னு தெரியாது, என்று சொல்லிவிட்டு வந்தவர்தான், அதற்குப்பின் அவர் அப்பா எவ்வளவோ சொல்லியும் பள்ளிக்கு போக மறுத்துவிட்டார், கொஞ்சம் பணம் கொடு நான் அசலூர்ல போய் பொழைச்சுக்காட்டறேன் என்று இங்கு வந்தவர் தான் கல்லுடைத்து, மண் சுமந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று பெரிய ஒப்பந்த்க்காரர் ஆகிவிட்டார். இருந்தாலும் அவருக்கு படிப்பு வரவில்லை என்பது ஒரு குறையாகவேதெரிந்ததால் தன்னை கழுதை கழுதை என்று சொல்லி தன் ஆற்றாமையை தீர்த்துக்கொள்வார்.

மறு நாள் வேலை செய்ய ஆட்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள், அண்ணாச்சியும் வந்து உட்கார்ந்திருந்தார்.நான், மேஸ்திரி, இருவரும் இவருடைய மன நிலையை குறித்த பயத்தில் இருந்தோம்,நேரம் ஆக ஆக இவர் முகம் செம்மை படர ஆரம்பித்தது.

தூரத்தில் ஒரு பெண் ஓட்டமும் நடையுமாக வருவதுதெரிந்தது, விரு விருவென வந்தவள் உட்கார்ந்திருந்த அண்ணாச்சியின் கால்களில் விழுந்து ஐயா! என் வீட்டுக்காரரை மன்னிச்சுருங்கயா, இவள் விழுந்ததை கண்ட அண்ணாச்சி சடாரென் எழுந்து தள்ளிப்போய் முகத்தை திருப்பி நின்றுகொண்டார்.

உன் புருசனுக்கு நீ வக்காலத்து வாங்கிட்டு வந்திருக்கியா? அவன் உன்னை விட்டு ஒளிஞ்சிக்கிட்டானா, எச்சக்கலை… என்று கெட்டவார்த்தைகளை வீசினார்.

ஐயா என் வீட்டுக்காரர் செய்தது தப்புத்தாய்யா!எங்களுக்கு வேற வழி தெரியலயா,நீங்க கொடுத்த பணத்தை எங்க பொண்ணுக்கு பா£ட்சைக்கு கடைசி நாளுங்கறதுன்னால அப்படியே கொண்டு போய் கட்டிட்டம்யா, ஒரு வாரம் டைம் கொடுங்கய்யா, அது வரைக்கும் நானும் என் புருசனும் இங்கேயே வேலை செய்யறோம்யா, எங்களை ஓண்ணும் செஞ்சுடாதீங்கய்யா,

இப்ப என் முன்னாடி வந்து நிக்காத போயிடு, அண்ணாச்சியின் குரல் உயரத்தொடங்க, அவ்ர் சுபாவம்தெரிந்த நான் அந்த பெண்ணிடம் இப்ப நீ கிளம்பு என்று கிளப்பிவிட்டேன். அவள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.

ஐந்து நிமிடங்கள் ஓடியது, அண்ணாச்சி மெல்ல மேஸ்திரியிடம் திரும்பி நம்ம சுப்பனையும்,சண்முகத்தையும் டிரில்லிங் வேலைக்கு கூட்டி வர சொல்லிடுங்க, அப்புறம் இந்த பொண்ணையும் அவள் புருசனையும் வேலைக்கு வர வேணாம்னு சொல்லிடுங்க, ஒரு வாரம், இல்ல ஒரு மாசம் ஆனாலும் பணத்தை விரட்டி வாங்கிடுங்க.

ஏன்னா படிப்புக்குத்தான்னாலும் அடுத்தவன் பணத்தை எடுத்து கொடுத்தது தப்புன்னு அப்பத்தான் அவனுக்கு புரியும்.

‘படிப்பு” என்றவுடன் அவர் கோபம் தணிந்திருந்ததையும்,ஆனாலும் படிப்பு என்றாலும் தவறு தவறுதான் என்று அவரின் கருத்து எனக்கு ஒரு பழமொழியை மாற்றி சொல்ல தோன்றியது

“கழுதைக்கும்தெரியும் கற்பூர வாசனை”

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)