கலையிரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 3,893 
 
 

ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் இரவில் எங்கள் வீட்டிற்கு ஆட்கள் வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த மாதம் 16 பேர் வந்திருந்தனர். அவர்களுள் நால்வர் குழந்தைகள். ‘இந்த மாதம் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்’ என்றுதான் நினைக்கிறேன்.

எங்கள் வீட்டில் மாதத்துக்கு ஒருநாளாவது இப்படி ஆட்கள் வருவதும் தங்குவதும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. மற்ற நாட்கள் முழுவதும் நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருப்போம். நான் வேலைக்குச் செல்வதால் அம்மா பெரும்பாலும் தனிமையில்தான் இருப்பார். அவரின் நடமாட்டம் முற்றத்துக்கும் சமையற்கட்டுக்கும் அவரின் தனித்த சிறிய அறைக்கும் எனச் சுருங்கிவிடுவதால், இந்த வீட்டில் உள்ள பெரிய ஹாலும் நான்கு படுக்கையறைகளும் பெரிய மொட்டைமாடியும் மனிதர்களின் காலடிகள் தம் மீது படுவதற்காகவே ஏங்கியிருந்தன.

மாலையில் நான் வீடு திரும்பினேன். இன்று மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால், அம்மா காலையிலேயே சந்தைக்குச் சென்று வேண்டிய பொருட்களை வேண்டுமளவைவிட மிகுதியாகவே வாங்கி வந்திருந்தார். இவற்றை வாங்கியதற்கான செலவு எங்களின் ஒருமாத உணவுப் பொருட்களுக்கான செலவுக்குச் சமமானது. அதனால் என்ன? ஒருமாதம் முழுவதும் எங்களுக்குக் கிடைக்காத மனநிறைவை இந்த ஒருநாள் தந்துவிடுகிறதே!

இரவு நெருங்கத் தொடங்கியதும் முதலில் வந்தது கலாராணியும் அவரின் குழந்தைகள் இருவரும்தான். கலாராணி தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவரின் குழந்தைகளுள் மூத்த மகள் பவித்ரா ஆறாம் வகுப்பும் இளைய மகள் பார்கவி நான்காம் வகுப்பும் பயில்கின்றனர். அவர்களை நான் வரவேற்றேன்.

கலாராணி தான் கொண்டுவந்த பெரிய பையை எங்கள் வீட்டின் ஓர் அறையில் வைத்தார். அதில்தான் அவர்களின் குடும்பத்தினருக்குரிய இரவு உடைகள் இருந்தன. அவரின் கணவர் சதீஷ் மின்சாரவாரியத்தில் பணிபுரிகிறார். அவர் இரவு ஏழு மணிக்கு மேல் இங்கு வந்து எங்களோடு இணைந்துகொள்வார்.

அடுத்து அஞ்சலகத்தில் பணியாற்றும் சுதர்சன ராஜாவும் அவரின் மனைவி யாழினியும் வந்தனர். அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். அவர்களின் வண்டிக்குப் பின்னால் இரண்டு இளைஞர்கள் ஓர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் இந்த மாதத்தின் புதுவரவு போல என நினைத்து, அவர்களையும் வரவேற்றேன்.

சுதர்சன ராஜா அந்த இளைஞர்களை எனக்கும் என் அம்மாவுக்கும் கலாராணிக்கும் அறிமுகம் செய்துவைத்தார். ஒருவர் பெயர் பத்ரிநாத். மற்றவர் பெயர் யோகேஷ். இருவரும் கல்லூரி மாணவர்கள். அவர்கள் சுதர்சன ராஜாவின் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரியின் மகன்கள். இலக்கியத்துறையில் தற்போதுதான் ஆர்வத்துடன் நுழைந்துள்ளனர்.

பவித்ரா தன்னுடைய வீட்டுப் பாடத்தை எழுதத் தொடங்கியிருந்தாள். இரவு உணவுக்கு இன்னும் நேரமாகும் என்பதால், என் அம்மா பவித்ராவுக்கும் பார்கவிக்கும் பசும்பாலில் மஞ்சள், மிளகு கலந்து கொதிக்க வைத்துக் கொடுத்தார்.

நாங்கள் ஐவரும் ஹாலில் அமர்ந்திருந்தோம். பொதுவாக அவரவர்களின் பணிச்சுமை குறித்துப் பேசத் தொடங்கினோம். பத்ரிநாத்துக்கும் யோகேஷூக்கும் இது முதல்கூட்டம் என்பதால், சற்றுத் தயக்கத்துடனும் அமைதியிழந்தும் இருந்தனர்.

அடுத்தடுத்து சோமு, பாண்டியன், சிவரஞ்சனி, மாலதி, ப்ரியா என ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருக்கு உரிய இரவு உடைகளைப் பெரிய பையில் இட்டு எடுத்துவந்திருந்தனர். இறுதியாக சதீஷ் வந்ததும் எங்கள் வீட்டு ஹால் நிறைந்துவிட்டது. அந்தப் புதிய இரண்டு இளைஞர்களையும் கலாராணி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

வழக்கம் போலவே நாங்கள் வீட்டிலிருந்த நாற்காலிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி முற்றத்தில் வைத்துவிட்டு, தரையைக் கூட்டி, சுத்தம் செய்தோம். பெண்கள் தங்களின் நைட்டியையும் ஆண்கள் கைலியையும் உடுத்திக்கொண்டனர்.

எல்லோரும் இருக்கும் பொது இடத்தில் யாரும் இப்படி உடையை அணியத் தயங்குவார்கள்தான். ஆனால், இது பொது இடம் அல்லவே. இன்றைய இரவு முதல் நாளைய பகல்வரை இது எங்கள் அனைவருக்குமான தனிப்பட்ட இடம். எங்களிடம். அனைவருமே தரையில் அமர்ந்து, கால்களை நீட்டி, சுவரில் தங்களின் முதுகைச் சாய்த்துக் கொண்டனர்.

அம்மா சமையற்கட்டுக்குள் சமைத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் அவர் தனியாகச் சமைக்கவே விரும்புவார். எத்தனை பேருக்குச் சமைக்க வேண்டும் என்றாலும் அவர் பிறரிடமிருந்து உதவி பெறத் தயங்குவார். அதனால், ‘அவரே சமைக்கட்டும்’ என்று நாங்கள் விட்டு விடுவோம். இன்று எங்கள் வீட்டில் எங்களையும் சேர்த்து மொத்தம் 21பேர் இருந்தோம். இதில் ஆறுபேர் குழந்தைகள். இன்று மாலதி தன் மகனை அழைத்து வந்திருந்தார்.

பேச்சு மெல்ல மெல்ல இலக்கியத்தை நோக்கி நகரத் தொடங்கியது. குறிப்பாக நாவல் இலக்கியம். ‘இதுதான் தருணம்’ என்று உறுதிப்படுத்திக்கொண்ட என் அம்மா எல்லோருக்கும் காய்கறி சூப் கொண்டு வந்தார். ‘சூடாக சூப் குடித்தால் சுட சுட இலக்கியம் பேசலாம்’ என்று நினைப்பவர் என் அம்மா. எனக்கு விடுமுறை நாட்களில் நானும் அம்மாவும் சூப் குடித்துக்கொண்டே இலக்கியம் பேசுவோம்.

அம்மாவின் கவனம் சமையலில் இருந்தாலும் எங்களின் கூட்டத்தின் பேச்சின் ஒட்டுமொத்த சாரத்தை உய்த்தறிந்தவாறே இருப்பார். கூட்டம் முடிந்து எல்லோரும் சென்ற பின்னர் முதல் அடுத்த கூட்டம் தொடங்கும்வரை இந்தக் கூட்டம் பற்றிய தமது கருத்துகளை என்னிடம் கூறியவாறே இருப்பார்.

நாங்கள் கூட்டத்தில் முன்வைத்துப் பேசிய கதைகளை அவர் வாசித்து, அவரின் கருத்துகளை என்னிடம் பகிர்ந்துகொள்வார். இப்படித்தான் அவர் வெண்முரசைப் படிக்கத் தொடங்கினார். அவர் சிறுவயதில் மகாபாரதத்தைக் கதாகாலஷேபமாக முற்றிலும் கேட்டவர். திருவிழா இரவுகளில் மகாபாரதத்தைக் கூத்தாகவும் பார்த்துப் பரவசப்பட்டவர். அவர் ஜெயமோகனின் ‘வடக்குமுகம்’ நாடகத்தைப் படித்த பின்னர்தான், அவருக்கு ‘மகாபாரத்தைப் பற்றி இப்படியும் சிந்திக்க முடியுமோ?’ என்று தோன்றியது. பின்னர் பெரிதும் முயன்று வெண்முரசைப் படிக்கத் தொடங்கினார். அவருக்கும் எனக்குமான தனிப்பட்ட உரையாடல்களில் அவ்வப்போது ‘வெண்முரசும்’ எட்டிப் பார்க்கும்.

என் அம்மா இங்கு வந்திருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் சப்பாத்தியும் பருப்புக் குருமாவும் தயாரித்து இருந்தார். குழந்தைகளைச் சமையல் அறைக்கு அழைத்து, உணவு பரிமாறினார். பவித்ரா தன்னுடைய வீட்டுப்பாடத்தை எழுதி முடித்துவிட்டு, சாப்பிடச் சென்றாள். அதற்குள் அனைத்துக் குழந்தைகளும் சாப்பிட்டுவிட்டு, மொட்டைமாடிக்குச் சென்று விளையாடத் தொடங்கினர். அவர்கள் மொட்டைமாடியில் ஓடும் சப்தமும் நடக்கும் சப்தமும் ஹாலில் அமர்ந்திருந்த எங்களின் தலைகளில் மெல்லிய இடியொலிபோல இறங்கின.

இன்றைய பேச்சு சிறு சிறு நாவல்களைப் பற்றித் தொட்டு நகர்ந்து, இறுதியாக ஜெயமோகனின் ‘வெண்முரசு’ தொடர் நாவல்களின் பக்கம் சென்றது. எங்கள் குழுவில் ஐந்துபேர் மட்டும்தான் அந்தத் தொடரின் 26 நாவல்களையும் படித்திருந்தனர். பலர் ‘குருதிச்சாரல்’ வரையும் சிலர் ‘மாமலர்’ வரையிலும் இன்னும் சிலர் ‘இந்திரநீலம்’ வரையிலும் வாசித்து முடித்திருந்தனர். பத்ரிநாத்தும் யோகேஷூம் ஜெயமோகனின் குறுநாவல்களுள் சிலவற்றைப் படித்திருந்தனர். அவர்கள் இன்னும் வெண்முரசுக்குள் நுழையவில்லை.

யாழினி திரௌபதியைப் பற்றி வியந்து வியந்த பேசிக் கொண்டிருந்தார். அவரின் சொற்கள் தீயில் விழுந்து தீயாகவே மாறும் இடுபொருட்கள் போலவே காற்றில் எரிந்து, அரும்பெரும் மொட்டுக்களாக எங்களின் மனத்துக்குள் விழுந்து, மலர்களாக விரியத் தொடங்கின.

எங்கள் குழுவில் ஒருவர் பேசும்போது, மற்றவர் பேச விரும்பினால் உடனே குறுக்கிட்டுப் பேசி விடமாட்டார்கள். மிகவும் பொறுமையாகக் காத்திருந்து, அவர்கள் கூறுவதை முழுமையாகச் செவிமடுத்து, பின்னர் தாம் பேச விரும்புவதைத் தன் கையை உயர்த்தி, மற்றவர்கள் இவரைப் பார்த்துப் ‘பேசுங்கள்’ என்பது போலத் தலையை அசைத்த பின்னர்தான் பேசத் தொடங்குவார்கள். ‘பிறர் பேசுவதைச் செவிமடுக்க விரும்பாதவரின் இலக்கியப் பேச்சில் நேர்த்தியான, ஆரோக்கியமான விவாதப் பொருள் இருக்காது’ என்பது என் கருத்து.

இந்தச் சபை நாகரிகம் முதலிலிருந்தே எங்கள் குழுவில் தானாகவே தொற்றிக்கொண்டது. புதியவர்கள் எங்களின் இந்த நாகரிகத்தை எளிதில் ஏற்றுக்கொண்டனர். நான் இந்த நாகரிகத்தை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ஆண்டுதோறும் நடத்திவரும் ‘ஊட்டி இலக்கியக் கூட்டங்களி’ல் இருந்து கற்றுக்கொண்டேன். அதையே இன்றும் எங்களின் கூட்டத்தில் நாங்கள் பின்பற்றுவது குறித்து எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.

அம்மாவுக்கு நன்றாகவே தெரியும் சூப் குடித்த சில நிமிடங்களுக்குப் பின்னர் நன்றாகப் பசிக்கத் தொடங்கிவிடும் என்று. அதனால், அம்மா எல்லோரையும் பார்த்து, “சரிங்கப்பா! பசிக்கும்ல? சாப்புடலாமா?” என்று கேட்டார். ஆண்கள் அனைவரும் எழுந்தோம். கைகளைக் கழுவிவிட்டு, வரிசையாக அமர்ந்தோம். அம்மா வாழையிலைபோட்டு, சூடாகச் சாப்பாடு பரிமாறினார். எல்லோரும் அமைதியாக, எதுவும் பேசாமல் சாப்பிட்டோம்.

ஒருமுறை மட்டும்தான் அம்மா பரிமாறுவார். இன்னும் இரவில் உண்ண வேண்டியிருப்பதால், நாங்கள் யாரும் மறு உணவு கேட்கவில்லை. இது பற்றிச் சுதர்சன ராஜா அந்தப் புதிய இளைஞர்களுக்கு மெல்லி குரலில் கூறினார். குழந்தைகள் மொட்டைமாடியில் விளையாடி, களைத்து, படியிறங்கி வந்தனர். அவர்களை என் அம்மா மூன்று மூன்று பேராக இரண்டு அறைகளுக்குள் அனுப்பி, தூங்குமாறு கூறினார்.

மணி இரவு ஒன்பதைத் தாண்டிவிட்டது. என் அம்மா சீனிக்கிழங்குகளை அடுப்புக் கனலில் இட்டுச் சுடத் தொடங்கினார். எங்கள் பேச்சு சிறுகதை இலக்கியத்துக்குள் நுழைந்துவிட்டது. நான் எப்போதும் போலவே அ. முத்துலிங்கத்தின் ஒரு சிறுகதையைப் பற்றிப் பேச நினைத்தேன். அதற்குள் சிவரஞ்சனி அ. முத்துலிங்கத்தின் ‘மகாராஜாவின் ரயில்வண்டி’ சிறுகதையைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

சுதர்சன ராஜா எங்களிடம், “இந்தப் புதியவர்களுக்கு அ. முத்துலிங்கம் பற்றித் தெரியாது” என்றார்.

உடனே, சதீஷ், “அதனால என்ன, தெரியப்படுத்திடுவோம். அதுக்குத்தானே இங்க நாம கூடியிருக்கோம்?” என்று கேட்டார்.

அவரின் அந்த வினாவில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட, ப்ரியா அந்தப் புதிய இளைஞர்களுக்கு அ.முத்துலிங்கத்தைப் பற்றிச் சுருக்கமாக விளக்கம் கொடுத்தார்.

அதில் அவரின் பிறப்பு, படிப்பு, புலம்பெயர்வு, பல்வேறு நாடுகளில் அவர் பெற்ற அனுபவங்கள், அவரின் எழுத்துப் பணி எல்லாம் இருந்தன. இறுதியாக அவர் கூறிய தொடர் சிறப்பாக இருந்தது. அந்தத் தொடரில் அவர் அ. முத்துலிங்கத்தின் ஒட்டுமொத்த சிறுகதையையும் குவளையில் அடைக்கப்பட்ட கடல் போல எடுத்துக் காட்டிவிட்டார்.

ப்ரியாவின் இறுதித் தொடர் இப்படித்தான் இருந்தது – “பழைய மீன் குழம்பைச் சுடு சோத்துல ஊத்தி, ருசிச்சு ருசிச்சு சாப்பிட்டுக்கிட்டே இருக்கும்போது ஒரு முள் தொண்டைக் குழிக்குள்ள சிக்கிக்கிட்டா எப்படி இருக்கும்? அதுபோலத்தான் அ. முத்துலிங்கத்தோட எந்தச் சிறுகதையைப் படிச்சாலும் ருசியாத்தான் இருக்கும். ஆனா, கதை முடியுறதுக்குள்ள ஒரு சோகம் நம்மளோட மனசுல மீனு முள்ளு மாதிரி குத்தி நிக்கும்” என்றார்.

அந்த வரிக்காகவே அனைவரும் ப்ரியாவுக்குக் கைகளைத் தட்டிப் பாராட்டினோம். நான் அப்போது நினைத்துக்கொண்டேன், ‘ஒருவேளை இங்கு அ. முத்துலிங்கம் இருந்திருந்தால் என்ன செய்வார்?’ என்று. ‘என்ன செய்வார், இனிப்பு அப்பத்தை விரும்பிச் சாப்பிடுபவர் போல உதடுகளைப் பிதுக்கி, அழகாகப் புன்னகைப்பார். பின்னர், தன்னுடைய அதிநவீன அலைபேசியைப் பயன்படுத்தி, ஆன்லைன் வழியாக எல்லோருக்கும் மீன் சாப்பாடு ஆடர் செய்திருப்பார்’ என்று நினைத்துக்கொண்டேன். அப்போது அம்மா சுட்ட சீனிக்கிழங்கினை எடுத்துவந்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். வெந்த கிழங்கின் மணம் ஹாலில் நிறையத் தொடங்கியது.

சிவரஞ்சனி அ. முத்துலிங்கத்தின் ‘மகாராஜாவின் ரயில்வண்டி’ சிறுகதையைப் பற்றித் தன்னுடைய வாசிப்பனுபவத்தைப் பகிரத் தொடங்கினார். “அந்தக் கதையில ஒரு கிட்டார் வரும். கதை முடிஞ்ச பிறகும் அந்த கிட்டார் இசை எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது” என்றார்.

உடனே, சதீஷ் தன் அலைபேசியால் யாரையோ அழைத்தார். வழக்கமாக எங்கள் கூட்டம் தொடங்கிவிட்டால், யாருமே அலைபேசியைப் பார்க்க மாட்டோம். இலக்கிய பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்போது, யாராவது எழுத்தாளரைப் பற்றி அல்லது ஏதாவது புத்தகத்தை, கதையைப் பற்றி எங்களுக்குக் கூடுதலாகத் தகவல் தேவைப்பட்டால் மட்டுமே அலைப்பேசியில் இணையத்தைப் பயன்படுத்தி, தேடுவோம். அதனால்தான் இப்போது சதீஷின் இந்தச் செயல்பாடு எனக்கு வியப்பூட்டியது.

அவர் கலாராணியிடம் ஏதோ கூறிவிட்டு, தன் இருசக்கர வாகனத்தில் ஏறி, வேகமாகச் சென்றார். அவர் வாகனம் இரண்டு தெருக்களைக் கடக்கும் வரையிலும் அதன் ஒலி எங்களுக்குக் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. ஏறத்தாழ அப்போது ஊர் அடங்கியிருந்தது. இந்தப் பகுதியில் எங்கள் வீட்டில்தான் விளக்கொளியும் பேச்சொலியும் இருந்தன.

சிவரஞ்சனி தொடர்ந்து அந்தச் சிறுகதையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார். அங்குக் கூடியிருந்த ஆண்கள் அனைவரும் அந்தக் கதையில் வரும் நாயகனாகவும் பெண்கள் அனைவரும் அந்தக் கதையில் இடம்பெற்ற ரோஸலினாகவும் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டனர். சிவரஞ்சனியின் சொற்கள் வழியாக கிடாரின் இசை எல்லோருக்கும் நடுவே சுழன்று கொண்டிருந்தது.

அம்மா ‘பிளாக்டீ’யைத் தயாரித்துக் கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்தார். அப்போது சதீஷ் வந்தார். அவரின் கையில் ஒரு கிட்டார் இருந்தது.

அதைப் பார்த்ததும் சிவரஞ்சனி மகிழ்ச்சி நிறைந்த குரலில், “இது ரோஸலினோட கிடாரா?” என்று கேட்டார்.

உடனே, அவர் சிரித்துக்கொண்டே, “ஆமா ஆமாம். இது அவளோடதுதான். யாருக்கிட்டையாவது நீள் சதுர உப்பு பிஸ்கட் இருக்கா? அது இருந்தாத்தான் இந்த கிட்டாரை வாசிக்க முடியும்” என்றார்.

ஏறத்தாழ எல்லோருமே அந்தக் கதைக்குள் நுழைந்துவிட்டோம். மாலதி தன் கைப்பேசியில் அந்தக் கதையைப் பார்த்து, உரத்த குரலில் வாசிக்கத் தொடங்கினார். நாங்கள் அனைவருமே இந்தக் கதையைச் சில முறைகள் படித்திருக்கிறோம்தான். இருந்தாலும் இந்தக் கதையை மீண்டும் கேட்க விரும்பினோம்.

அந்தப் புதிய இளைஞர்களும் ஆர்வத்துடன் அந்தக் கதையைச் செவிமடுப்பதை நான் கவனித்தேன். சதீஷ் என் அம்மாவிடம் தன் பங்குக்குரிய பிளாக்டீயைக் கேட்டுப் பெற்றுப் பருகினார். மாலதி அந்தச் சிறுகதையை வாசிக்கத் தொடங்கினார். என் அம்மா விதவிதமான நொருக்குத் தீனிகளைத் தட்டில் வைத்து அனைவருக்கும் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

மாலதி வாசித்து முடித்ததும் அந்த இரண்டு இளைஞர்களும் ஒருமித்த குரலில், “அருமையான கதை!” என்றனர். என் அம்மா யாழினியின் அருகில் சென்று, மெல்லிய குரலில், “நீ போய் தூங்கு. உனக்கு ரெஸ்ட் வேணும். போ” என்று கூறி, அவரை ஓர் அறைக்குள் அனுப்பி வைத்தார்.

பிளாக்டீயைப் பருகி முடித்த சதீஷ், அந்த கிட்டாரை இசைக்கத் தொடங்கினார். அவருக்குத் தொடர்ந்த பழக்கம் இல்லாததால், இசை அவர் விரல்களின் வழியாக நழுவிக்கொண்டே இருந்தது.

உடனே, பத்ரிநாத் சதீஷைப் பார்த்து, “சார்! நான் வாசிக்கட்டுமா?” என்று கேட்டான்.

அவர் புன்னகைத்துக்கொண்டே, கிட்டாரை அவனிடம் கொடுத்தார்.

அவன் மயிலைத் தன் மடியில் இருத்தி, அதன் முதுகில் தடவிக் கொடுப்பது போல, அந்த கிட்டாரை மென்மையாக மீட்டி மீட்டி இசைக்கத் தொடங்கினான். இளமையின் இசை அதிலிருந்து பிறந்து, தவழ்ந்து அங்கிருந்த ஒவ்வொருவரின் அருகிலும் என்று மௌனமாக நின்றது. அறைகளில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளின் செவிகளுக்கு அருகிலும் தூங்காமல் சும்மா படுத்திருக்கும் யாழினியின் அருகிலும் அந்த இசை சென்று நின்றது.

எங்களின் பேச்சு மீண்டும் வெண்முரசுக்கே திரும்பியது. அம்மா எல்லோருக்கும் சூடாக இட்லி அவித்திருந்தார். தேங்காய்ச் சட்னியும் தக்காளிச் சட்னியும் தயாரித்திருந்தார். இரவு மணி 12யைத் தாண்டியிருந்தது. வெளியே மெல்லிய குளிர் வரத் தொடங்கியிருந்தது. எல்லோரும் இட்லி சாப்பிட்டோம். மீண்டும் பேச்சு வெண்முரசுக்கே திரும்பியது.

‘கிரேட் நாவல்’, ‘மாஸ்டர் ஒர்க்’, ‘மார்டன் கிளாசிக்’ என்று எல்லோரும் தங்களின் அறிவுத் திறத்துக்கும் வாசிப்பு அனுபவத்துக்கும் ஏற்ற வெண்முரசைப் புகழ்ந்து கொண்டிருந்தோம்.

அம்மா மெல்லிய குரலில், “வியாசரால முழு மகாபாரதத்தையும் எழுதிட முடியலை. ஒரு கையளவாவது அவரோட மனசுக்குள்ள எழுத முடியாம மிச்சமாத்தான் இருந்திருக்கும். அதை வெளியேத்த முடியாம அவர் கஷ்டப்பட்டுக்கிட்டே காலம்பூரா இருந்திருப்பார். அதுமாதிரித்தான் இந்த ஜெயமோகனும் தனக்குள்ள மிச்சமிருக்குற அந்த மகாபாரதத்தை எழுதி வெளியேத்த முடியாம காலம்பூரா தவிச்சுக்கிட்டு இருப்பார்” என்றார்.

நாங்கள் அமைதியாக அவரின் முகத்தையே பார்த்தோம். அவரே தொடர்ந்து பேசினார். “குந்திக்கும் திரௌபதிக்கும் அந்தத் தவிப்பு இருந்திருக்கும். எல்லாத் தாய்க்கும் இருக்குறதுதான். பிறக்காமலேயே தனக்குள்ளேயே தங்கிட்ட குழந்தையை வெளியேத்த முடியாம தவிக்குற மனப்போராட்டம் அவங்களோட வாழ்க்கை முழுக்க இருக்கத்தான் செய்யும். ஜெயமோகனுக்கும் இருக்கும். எல்லா எழுத்தாளர்களுமே தாய்தானே!” என்றார் என் அம்மா.

இரவு இரண்டு மணியானதும் என் அம்மா முற்றத்திலிருந்து நாற்காலிகளை ஒவ்வொன்றாக எடுத்து வந்து, ஹாலில் வைத்தார். வெளி விளக்கை அணைத்தார். விரிப்புகளையும் போர்வைகளையும் எடுத்துச் சென்று மொட்டை மாடியில் வைத்தார். ஆண்கள் அனைவரும் மொட்டை மாடிக்குச் சென்றோம். பெண்கள் அனைவரும் வீட்டுக்குள் படுத்துக்கொண்டனர்.

நிலா இருந்தது. நட்சத்திரங்கள் இருந்தன. குளிர் இருந்தது. நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் படுத்துக்கொண்டோம். நாங்கள் விரும்பிய இலக்கியமும் எங்களோடு சேர்ந்து எங்களின் போர்வைகளுக்குள் நுழைந்து, படுத்துக்கொண்டது.

விடிந்ததும் முதலில் புறப்பட்டது சதீஷ் குடும்பத்தினர்தான். அவர் நேற்று தன்னுடைய நண்பர் கார்த்தியிடமிருந்து கிட்டாரை இரவல் வாங்கி வந்திருந்தார். கார்த்தி இசையாசிரியர். இன்று அவருக்குப் பயிற்சி வகுப்பு இருக்கிறது. காலையில் எட்டுமணிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக வாக்களித்துதான் கிட்டாரை வாங்கி வந்திருந்தார். அதனால்தான் சதீஷ் இப்போதே புறப்பட வேண்டியதாயிற்று.

அவரும் அவரின் குடும்பத்தினரும் தங்களின் இரவு உடையை மாற்றிக் கொண்டு, புறப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் குளித்துவிட்டு, இரவு உடையை மாற்றிக் கொண்டனர். காலையிலிருந்தே என் அம்மா சமைக்கத் தொடங்கியிருந்த ஆப்பத்தையும் தேங்காய்ப் பாலையும் அனைவரும் உண்டுவிட்டுப் புறப்பட்டனர். நானும் அம்மாவும் இறுதியாகச் சாப்பிட்டோம்.

எல்லோரும் சென்ற பின்னர் எங்கள் வீட்டில் இலக்கியப் பேச்சுகள் மட்டும் எஞ்சியிருந்தன. என் அம்மா சமையல் அறைக்கு அருகில் திரௌபதி போல கம்பீரமாகவும் மனநிறைவுடனும் அமர்ந்திருந்தார். நான் வீட்டின் முற்றத்தில் ‘மகாராஜாவின் ரயில்வண்டி’ சிறுகதையில் இடம்பெற்றிருந்த நாயகனைப் போலவே சும்மா நின்றிருந்தேன். என் வீட்டு ஹாலில் இரவு முழுக்க ரோஸலின் வாசித்த கிட்டார் இசை கால்களை நீட்டிப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *