கலைந்த கருமேகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 962 
 
 

சீனுவுக்கு கொஞ்ச நேரம் தலையைச் சுற்றியது. கண்களுக்குள் பத்தாயிரம் பூச்சிகள் பறப்பது போல் pip திரையிட்டது.

“ஸார்! நிஜம்மாவா? எப்படி ?” தாடையைப் பிளந்து வந்த அழுகை, அவநம்பிக்கையை, அடக்க கைகளைக் குறுக்காகப்பிணைத்துக் கொண்டு, ஆழ்ந்த சோகத்துடன் அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. எதிரில் அமர்ந்து கொண்டிருந்த மானேஜர் பாண்டியனுக்கு எப்படிக் கேட்டிருக்கமுடியும்?

“என்னடா பண்ணலாம்? நானும் ஜி.எம் கிட்ட பேசினப்ப உனக்கு வெய்ட்டிங்க் லிஸ்ட்தான்னு கன்பர்ம் பண்ணிணார். எப்படியும் அடுத்த வேகன்ஸி ரெண்டு மாசத்தில் வருமாம். கவலை இல்லை. அதுவரை இங்கே இருந்துக்கலாமில்ல? தைரியமா வேலையைப் பாருடா!”

இழப்பை விட, இழந்தவனின் மனம்தான் ஆயிரம் பங்கு பாடு படும். காரணம் ஆசை-எதிர்பார்ப்பு-கோட்டைகள்(ஆழ் நிலையில், சுயமாக, மேல் நிலையில், மற்றவர்களின் இரவல் கோட்டைகளுடன்).

கொஞ்சம் ஆசுவாசம் ஆனவனாகத் திரும்பியவனை பாண்டியன் மீண்டும் அழைத்தார்.

“அத்த விடு! சீரங்கன் கிளார்க் போஸ்டிங்க்ல இங்க வரானாம். தெரியுமா?”

சீனு தலையை ஆட்டினான்! மீண்டும் தலை சுற்ற ஆரம்பித்தது-அவனுக்கு.

நாம இப்போ கதைக்கு வருவோமா?

சீனுவும் சீரங்கனும் ஜிக்ரி தோஸ்த்! ஒரே நேரத்தில் ஈஸீபீ வங்கியில் மெஸன்சராக சேர்ந்தனர். திருவல்லிக்கேணியில் பாச்சிலர் அறையைப் பகிர்ந்து கொண்டனர். பாரதியார் வசித்த திருவல்லிக்கேணி என்றும் பெருமை கொண்டனர்.

சீரங்கன், அண்ணா நகர்-திருமங்கலம் SBOA பள்ளி கிளையில் சீனு மாதிரி மெஸன்சராக(பியூன்) இருந்தான். இவன் இருப்பது பெரம்பூர் ICF கிளையில்.

மெட்ரோ பாதி, ஷேர் ஆட்டோ பாதி என்று தொடங்கிய இவர்களின் வாழ்க்கை இரு சக்கரத்தில்தான் கட்டுண்டது. இளம் வயது காரணமாக வேலை நேரம் போக கிடைத்த மீதி நேரங்களில் தங்களைத் தாமே புதுப்பித்துக் கொள்ள ஒரு நாள் பீச், ஒரு வாரக் கடைசியில் மாமல்லபுரம், இன்னொரு வாரம் திருப்பதி, திருத்தணி, திருவண்ணாமலை சென்றதுமுண்டு. அதே நேரத்தில் சில வாரக் கடைசிகளில் பீர் அடித்துவிட்டு, கடலை போட்டுக் கொண்டு கடற்கரையிலும், பின்னர் குஸ்கா, மட்டன், சிக்கன், ஷொவர்மா சாப்பிட்டுவிட்டு தாம்பரம் வரை பறக்கும் டிரெய்னில் படபடத்ததும் உண்டு. நல்ல பையன்களாக சேர்மன் வருகையின் போது, லுக் விடற மாதிரி அசத்தி விடுவதும் உண்டு. சமயத்தில், டிராஃபிக் போலீசில் மாட்டிக் கொண்டு ஈஸீபீ பாங்க் மானேஜர் பெயர் சொல்லித் தப்பித்ததும் உண்டு.

இருவரும் அடுத்த கிளைகளில் சமூக சேவைகளும்(!) அவ்வப்போது செய்து வந்தனர். இளம் வயதில் இதில் உள்ள கிளுகிளுப்பு வேறு எதிலும் கிடையாது எனலாம்.

சரி! இப்போ கதை எப்படிப் போவுது?

ஒண்ணுமில்ல! சீரங்கன் இங்கே வந்து கிளர்க்காக சேர்ந்து விட்டான். சீனுவுக்கு ஒரு உறுத்தல் இருந்தாலும் அவனுடைய நட்பின் காரணம் அவன் சீரங்கனுடன் இணைந்து செயல் பட மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

வந்தாளே லாவண்யா!

புது அப்பாயின்ட்மென்ட்! பார்வைக்கு அப்பப்பா தான்! முசிறிப் பெண். குமாரபாளையத்தில் படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் ஈஸீபீ யில் தேர்ந்தாள். ரொம்ப மாடர்னும் இல்லை! ரொம்ப கிராமமும் இல்லை. ஆனால் கெட்டிக்காரி! எச்சரிக்கையானவள். ஆஸ்டலில் தங்கிப் படித்திருந்ததால் யாரையும் சாராமல் சமாளித்தாள். தேவைக்கு உதவி பொத்தான்களை அழுத்தினாள்-பலரிடம்.

வங்கிகளில், எத்தனை சிறிய கிளையானாலும், அங்கே சிற்சில பணியாளர்கள், அவர்களைத் தவிர வெளியாட்கள் அந்தக் கிளையின் குடும்பத்தில் சேர்ந்தவர்தாம்.

அங்கே இருந்த 8 பேரில் 3 பெண்கள். 2 பேர் பழசு. இவள் இளசு. ஊருக்குப் புதுசு!

இது தவிர அப்ரைஸர், கன்கரண்ட் ஆடிட் பையன்/பெண், ஏடிஎம் காவல் தெய்வம், கம்ப்யூடர் சர்வீஸ், ஏ.ஸீ. சர்வீஸ், CMS Securitas, ஆதார் கார்டு சரி செய்யும் பெண், பிஸினஸ் கரஸ்பாண்டண்ட், மற்றும் (தினசரி)கஸ்டமர்கள் போன்ற நபர்களும் கணக்கில் உண்டு.

மொத்தத்தில், எல்லா ஆண்களுக்கும் இவளைப் பிடித்திருந்தது. நட்பை வாரி வழங்கினார்கள்- வழுக்கியது. லாவண்யா விழுந்தது சீனுவிடமும், சீரங்கனிடமும்தான். இருவரிடமும் அவளுக்குப் பிடித்த கொஞ்சம் அப்பாவித்தனம், நிறைய குறும்பு, கிண்டல், ஆளுமை,

வேலைத்திறன், வாழ்க்கை அனுபவிக்கும் ஸ்டைல் – சொல்லி மாளாது, புராணங்கள் அத்தனை பெரிசு.

இப்போ கதை ஸ்டார்ட்

சீனு, சீரங்கன் இருவரும் லாவண்யாவை ஒரு பொருட்டாக ஆரம்பத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. என்றாலும், நாட்கள் நகர நகர, இருவர் மனதிலும் லாவண்யா- இருவரையும் ஒரே சமயத்தில், ஆக்கிரமிக்கத் தொடங்கினாள்.

தினசரி வங்கிப் பணியில் ஏதாவது ஒரு சாக்கில், வேலைகளை முடிக்க சிலரின் தயவு தேவைப் படும். அந்த வகையில், லாவண்யாவுக்கு உதவி செய்ய ஒரு பட்டாளமே காத்திருந்தது எனலாம். கஸ்டமர்களையும் சேர்த்துத்தான்.

லாவண்யாவுக்கு தங்களில் யாரிடம் செல்வாக்கு அதிகம் என்பது வரையில் சீனுவும், சீரங்கனும் ஒருவருக்கு ஒருவர் போட்டியிடத் தொடங்கினர். அவர்கள் கண்களில் காந்தம் தெரிந்தது. காதல் தெரிந்தது. ஆனால் லாவண்யா?

பார்க்காத ஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்று, அவளின் பார்க்காத இடங்களைப் பார்ப்பதற்காக, சொர்கம் தேடுவதில் இருவருக்கும் WWF போட்டி!

அவளோ கனவுகளில் மிதந்து, இருவரையும் சொர்கத்தின் வாசலில் காக்க வைத்து சந்தோஷத்தில் மட்டும் மூழ்கினாள்.

சீனு, சீரங்கன், இருவரும் அன்பளிப்புக்களை வாரி வழங்கி அன்பு மழையில் குளிப்பாட்டியதின் அளவுகோல், அவரவர்களின் OD கணக்குகளில் தெரிந்தது.

லாவண்யா போதை தலைக்கேற, சீரங்கன் லாவண்யா பி.ஜி பக்கத்திலேயே, திருமழிசையில் ரூம் எடுத்து மாறினான். லாவண்யாவுக்கு ஓலா சிலவு குறைந்தது. பெர்ஸனல் chauffer, பாடி கார்ட் கிடைத்து விட்டான்.

தனித்து விடப்பட்ட சீனு, வெம்பத் தொடங்கினான். வங்கி கசந்தது. வண்டி கசந்தது.லாவண்யா மட்டும் கசக்கவில்லை. அசங்கவுமில்லை; கசங்கவுமில்லை.

இப்போதுதான் நம்ம வங்கிக் கிளையின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக, வெறும் வாய்க்கு பதில், அவல் போட்டு, கடலை போட்டு, லாவண்யாவை மெல்ல மெல்ல, மெல்லத் தொடங்கினார்கள். வலி இல்லாமல் நன்றாக மெல்வதற்காக, சிலர், பல் வைத்தியரிடம் RCT (ரூட் கேனால் ட்ரீட்மென்ட்)எடுத்துக் கொண்டதாகவும் சேதி!

சீரங்கன் ஜீரோதான்! அவனுக்கும் லாவண்யா சொர்கத்தைக் காட்டவில்லை! மாறாக, சீனு பற்றி அவனிடம் போட்டுக் கொடுத்தாள்.

சீனுவிடமும் சீரங்கனைப் பற்றி போட்டுத்தான் கொடுத்தாள். சீனு சீரங்கனிடம் உண்டான பிளவு எல்லாருக்கும் வியப்பளித்தது. எப்படி இந்த சகோதரர்கள் பிரிந்து விட்டார்கள்? இனியும் சேருவார்களா? என்றெல்லாம் வியந்தனர்.

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதைக் கண்கூடாக எல்லாரும் பார்த்து அனுபவித்தனர். ஆமோதித்தனர்.

பாண்டவர் இல்லம் சீரியல் மாதிரி, அடுத்தது என்ன என்று நிறைய ஊகங்களை எல்லாரும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தனர். பேசிக் கொண்டும் இருந்தனர்.

சிலர் மகிழ்ந்தனர். சிலர் நெகிழ்ந்தனர்.

இதற்கிடையில் வங்கிப் பணியும் இனிதே நடைபெற்றது.

இன்னா ஒரு கிளைமாக்ஸும் கிடையாதா?

பூடிச்சு! இன்னா பிரிஞ்சுதா? இன்னாபா நீ! சாவு கிராக்கி! அவ அப்பன் உயிருக்குப் போராடிகிணு கீறான். நீ டமாஸ் பண்ரே!

கதறிக் கொண்டு முசிறி ஓடிய லாவண்யாவை ஒரு மாதம் கழித்துத்தான் பார்க்க முடிந்தது. அவள் அப்பாவுக்கு கோவிட் அட்டாக் ஆகி சுவாசக் கோளாறு வந்ததால் அங்கேயே தங்கி அப்பாவைப் பார்த்துக் கொண்டாளாம். மாற்றல் வாங்கி ஊருக்குப் போக, கும்பகோணத்தில் ஜி.எம் மைப் பார்த்து லெட்டரும் கொடுத்து விட்டாள்.

சீனு வருத்தப் பட்டான்- உதவிக்கு வரவேண்டுமா என்றும் கேட்டான். சீரங்கன் அவளை பஸ்ஸில் ஏற்றி விட்டதுடன் சரி! அவளும் அவனை அழைக்கவில்லை. அவனும் முயலவில்லை.

இன்னாதான் நடக்கப் போவுது இப்ப?

  • ஒண்ணுமில்ல! லாவண்யா அழுது கொண்டே சென்னையை விட்டு ஈஸீபீ திருச்சி டோல்கேட் கிளைக்குக் கிளம்பினாள். அப்பாவுக்காக அழுதாளா, சீனு, சீரங்கனுக்காக அழுதாளா என்பது புலன் விசாரணையில்தான் தெரியவரும்.
  • சீனுவுக்கு வெயிட் லிஸ்ட் முடிந்து, போஸ்டிங்க் வந்தது. அவன் இப்ப ICF பெரம்பூர் கிளைக்கு மாறிப் போகிறான்.
  • சீரங்கன் மீண்டும் திருவல்லிக்கேணியில் சீனுவின் அறையிலேயே தங்க ஆரம்பித்துவிட்டான்.
  • அப்புறம் என்ன?

சீனுவும் சீரங்கனும் எப்பவும் ஜிக்ரி தோஸ்த்!

சீனு, சீரங்கன் பழையபடி தங்களைப் புதுப்பித்துக் கொள்ள தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். லாவண்யா என்ற கருமேகம் அவர்களின் மனங்களில் இருந்தும், வாழ்க்கையில் இருந்தும் கலைந்து எங்கேயோ உயரப் போய் விட்டது. உயரமான வானம் நிரந்தரமாக இருக்கும்வரையில், மேகங்களுக்குப் பஞ்சமில்லை. சீனு, சீரங்கனுக்கு என்ன வஞ்சம்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *