கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 10,341 
 
 

தமிழக அரசின் இ.ஆ.ப. அதிகாரி உக்கம்சிங், தாடி வைத்த சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ராம் விவேக், பாப் தலை கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், சமூக இயல் விஞ்ஞானி பாப்பம்மா, பென்சில் மீசை வைத்த “மனித உரிமை மகேந்திரன் ஆகியோரைக் கொண்ட அந்தக் குழுவை, லோக்கல் இன்ஸ்பெக்டர், தனத லத்திக் கம்பை வரவேற்பு வளையமாக தாழ்த்தி வைத்துக் கொண்டு, அந்த வீட்டுக்குள் வழிநடத்தினார்.

சின்னப் பூட்டு போடப்பட்ட அந்த ஒலை வீட்டின் கதவை, அவர் லத்திக் கம்பில் இரும்பு பூனால், அடித்து நொறுக்கிய போது, கதவு கொக்கியோடு பின்வாங்கியது. அங்கே கிடந்தவனைப் பார்த்து குழு ஆச்சரியப்பட்டதா, அதிர்ச்சி அடைந்ததா என்று ஒரு பட்டி மண்டபமே நடத்தலாம்.

பன்னிர், அந்த வீ ட்டுக்குள் உலக அதிசயங்களில் எட்டாவதால் ஆனது போல் தரையோடு தரையாய்க் கிடந்தான். அந்த ஒற்றை ஒலைவீட்டின் நடுப்பக்கமாக, ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு படுத்தக் கோலத்தில் கிடப்பதுபோல் கிடந்தான். இரும்புக் காப்புகளுக்குள் திணிக்கப்பட்டு, அவற்றில் சங்கிலியால் கோர்க்கப்பட்ட அவன் இரண்டு கைகளும், இடுப்புக்கு இருபக்கமும் சிறிது இடைவெளி கொடுத்து, குத்தி வைத்த கம்பு முளைகளில் இணைக்கப்பட்டிருந்தன. அந்த முளைகளின் அடிவாரத்தைச் சுற்றியிருந்த குருத்து மண்ணில் எறும்புகள் மொய்த்தன. கால்களும் இதே விகிதாசாரத்தில், இதே வகை இரும்புச் சங்கிலிக் கோர்வையால் பிணைக்கப்பட்டிருந்தன. கை விரல்களிலும், கால் விரல்களிலும், தென்னை ஒலை ஈர்க்குச்சிகள், ஒன்றுமாற்றி ஒன்றாய், டேப் கட்டில் பின்னப்பட்டதுபோல் சொருகப்பட்டிருந்தன. வயிற்றுக்கு மேல் ஒரு ரப்பர் பேண்ட், வளைந்து விலாமுனைகளில் குத்தி வைக்கப்பட்ட ஆணிகளைச் சுற்றி முடிச்சுகளாயின. எல்லாவற்றிற்கும் மேலாக, அவனது வாய்க்குள் கெட்டியான பஞ்சு சொருகப் பட்டிருந்தது. இதனால், அவனுக்கு உதட்டோரங்களிலும் வெள்ளை நாக்குகள் முளைத்திருப்பது போன்ற கண்காட்சி. போதாக்குறைக்கு, முன் கழுத்தை மறைத்த தாடி. பின் கழுத்தை மூடிய பிடரி.

தொளதொளப்பாய்ப் போன லுங்கியும் சட்டையுமாய் கிடந்த பன்னீரின் பார்வை படும் வகையில், குழுவினர் ஒரு பள்ளத்தை எட்டிப் பார்ப்பதுபோல், கண்களைத் தாழ்த்தினார்கள். அப்போது பன்னீரின் கண்கள், ஒன்றை ஒன்று நெருக்கப்போவதுபோல், மூக்குப் பக்கமாய் சுழன்றன. வயிற்றைச் சுற்றிய ரப்பர் பேண்ட் வளைந்து கொடுத்தது. வாய்க்குள் திணித்த பஞ்சுத் துண்டு, மெல்ல அசைந்தது. மற்றபடி எந்த அசைவும் இல்லை.

ஒரு “நல்ல கேஸை கண்டுபிடித்த திருப்தியோடும், இதை எப்படி பரபரப்பான செய்தியாக்கலாம் என்ற பப்ளிசிட்டி சிந்தனையோடும், உறுப்பினர்கள் அவனை போட்டி போட்டு பார்த்தபோது, கூட்டம் கூடிவிட்டது. பட்டப்பகல் என்பதால், வேலைக்கு போகமுடியாத பாட்டிகள், தாத்தாக்கள், அவர்களின் பேர பேத்திகள், நோயாளிகள், பெண்டாட்டிகளின் உழைப்பில் வாழும் குடும்ப தாதாக்கள் என்று கலப்படக் கூட்டம்.

சல்வார் காமீஸ் “சமூக இயல் பாப்பம்மா, கூட்டத்தை ஒரே நோக்காய் பார்த்து, தனது இளவயது துணிச்சலில் ஒரே மூச்சாய் கேட்டாள்.

“என்ன அநியாயம் இது? எந்த சமூகத்துரோகி செய்த வேலை? மயானபுத்திரனுக்கு காவு கொடுக்கிற பிக்கை அதான் பன்றியை கூட இப்படி கிடத்த மாட்டாங்களே! சொல்லுங்கய்யா… சொல்லுங்கம்மா… வாயில புண்ணாக்கா வச்சிருக்கிங்க…? ஏன் ஊமையாயிட்டீங்க?”

பாப்பம்மா, தென்பாண்டித்தமிழில் கேட்டபோது, கூட்டத்தினர் வாய்கள் புண்ணானதுபோல், அவற்றை அசைக்காமல் வைத்திருந்தனர். அவள் மட்டும் என்றால், உப்பு வைத்து ஊற வைத்திருப்பார்கள். கூடவே காக்கி யூனிபாரம் நிற்கிறதே…

இந்த மெளனிகளை தன்னால் மட்டுமே பேசவைக்க முடியும் என்ற பெருமிதத்தில் ‘மனித உரிமை” மகேந்திரன், மனிதாபிமானத்தின் அடிவாரத்திலிருந்து, அதன் உச்சத்தில் ஏறி நின்றுகொண்டு, தான் செய்யாதததை பிறரைச் செய்யச் சொன்னார்.

“மொதல்ல அவனை அவிழ்த்து விடுங்கய்யா…”

அப்படியும் கூட்டம் பேசாமல் நின்றபடியே, சந்தை இரைச்சலாய் முணுமுணுத்தபோது, அரசுக் குழுவின் மெய்க்காவலரான இன்ஸ்பெக்டர், கூட்டத்தினரை துப்பாக்கித் தனமாகப் பார்த்தபடியே மிரட்டினார்.

“அவிழ்த்து விடுறிங்களா? இல்ல… உங்களையும் இந்த கொடுமைக்கு உடந்தைன்னு அரெஸ்ட் செய்யனுமா?”

இப்போது கூட்டத்தினர் போட்டி போட்டபடியே, பன்னீரின் கட்டுக்களை அரும்பாடுபட்டு அகற்றினார்கள். ஒருவர், அவனின் வாயிலிருந்த ஸ்பாஞ்சை எடுக்கும் முயற்சியில், கடிபட்டக் கையோடு, அதை எடுத்து துரே எறிந்தார். இரண்டு சிறுவர்கள், ஈர்க்குச்சிகளை எடுத்து அவற்றை நினைவுச் சின்னம் போல் கையில் வைத்துக்கொண்டார்கள்.

இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதுபோல், இடம் பொருள் ஏவல் புரியாமல் கிடந்த பன்னீரை கூட்ட முகப்பினர் துக்கி நிறுத்தியபோது, இன்ஸ்பெக்டரும் குழு உறுப்பினர்களோடு பயந்து விலகினார். உடனே ஒரு தொள்ளைக் காது பாட்டி, பயப்படாதிக… யாரையும் எதுவும் செய்யமாட்டான். எல்லாத்தையும் தன்மேலேயே செய்துக்குவான். ஏதோ போதாத காலம். நீங்களாவது, இந்த பய மவனுக்கு எதாவது செய்யனும் என்றபோது –

பன்னீர், வாசலை நோக்கி பொடி நடையாய் நடந்தான். அவனைத் தடுத்தாட் கொள்ளப்போன இன்ஸ்பெக்டரிடம், கள ஆராய்ச்சியில் விருப்பமுள்ள மனநல டாக்டர் ராம் விவேக், அவனை, அவன் போக்கிலேயே விடுங்க. நான் பார்த்துக்கிறேன் என்றார்.

லாடம் அடித்து முடிக்கப்பட்ட காளை மாடு, துவக்கத்தில் அசைந்தாடி, அப்புறம் துள்ளிக் குதிப்பதுபோல், பன்னீர், ஓணான் செடிகளும், அவற்றிற்கு இடையே மஞ்சள் பூ பூத்த பூசணிக் கொடிகளும் சுற்றி வளைத்த தனது வீட்டிற்கு முன்னால் நின்றான். பின்னர் சிறிது தொலைவில் நடந்தான். கதிரடித்து, கதிரடித்து வழுக்கையான ஒரு பொட்டலை, ஆடுதளம் போல் அளப்பரிய ஆனந்தத்தோடு பார்த்தான். பின்னர், இந்த பொட்டல் வட்டத்தின் மையத்தில் நின்றுகொண்டு, கூட்டத்தை பன்னீர் ‘சரணமாய்ப் பார்த்தான். ஒரே ஒரு நிமிடம். மறுநிமிடமோ

பன்னீர், தனது இரண்டு கரங்களாலும் தலையை விடாமலேயே அடித்தான். விடு விடென்று அடித்தான். மத்தளத்தை மாறி மாறித் தாக்கும் கம்புகள்போல், கைகளை ஆக்கிக்கொண்டான். பின்னர் வலி பொறுக்க முடியாமலோ என்னவோ, தலைமுடியை தாறுமாறாய்ப் பிய்த்தான். காதுகளை முத்துச் சிப்பிபோல் மூடிக்கொண்டு, பள்ளிக்கூட ஆசிரியர் மாணவர்களை திருகுவதுபோல் திருகினான். இதற்குப் பிறகு, கைகளை கழுத்தின் இருபக்கமும் கொண்டுவந்து, அதை நெறித்தான். கழுத்தை விடுவித்துவிட்டு, கன்னங்களை தடாலடியாய் அடித்துக்கொண்டான். பின்னர், இரண்டு கரங்களையும் தலைக்குமேல் கொண்டுபோய், திப்பாய்ச்சி அரிவாட்களைப்போல லேசாய் வளைத்து, விரல்களை ஒருமுனையாக்கி, ஒன்றை ஒன்றை ஆழம் பார்ப்பதுபோல், முன்னாலும் பின்னாலும் ஆட்டிக்கொண்டான். இந்த ஆட்டம் முடிந்த முப்பது வினாடிகளில், இரண்டு கைகளும் ஒன்றுடன் ஒன்று போரிட்டன. ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டன. வலதுகை, எதிரிக்கையான இடதுகை விரல்களை பின்புறமாய் வளைத்தது. வளைபட்ட இடதுகை விரல்கள், திமிறி வெளிப்பட்டு, வலது கையின் மணிக்கட்டில் ஆழப்பதிந்து, ரத்தக் கசிவை ஏற்படுத்தின. இந்த அடாவடியான அடிதடிக்கு அவன் வாய் தாளலயமாய் இப்படிப் புலம்பியது.

“படுகளத்தில எதுக்குடா ஒப்பாரி…? அத்தை மகன்னாலும், அடுத்த ஊர்க்காரன்தானடா? முகம் பார்த்து பின்வாங்குறதுக்கு வேற ஆளப்பாருடா. எனக்கு உறவை விட ஊர்தாண்டா முக்கியம் பதினாறு பட்டியிலேயும் எங்க வெட்டாம்பட்டிதாண்டா உசத்தி.”

அந்த ஆடுதளத்திற்கு வேலியானது போல், மக்கள் கருவேல மரங்களும் புதர்களும் மண்டியது போல் மண்டி நின்றார்கள். கூட்டத்தில் ஒரு மல்வேட்டிக்கார விவேகி, தன்னைப் பார்த்த குழு உறுப்பினர்களுக்கு, முன்னுரையும் பின்னுரையுமாய் விளக்கமளித்தார்.

“எப்படி இருந்த பயல்… இப்படி ஆயிட்டான். பதிமூணு வயசிலேயே, பொதுக்காரியத்துல இறங்கினவன். அப்போ… எங்க ஊருக்கும் பக்கத்து சட்டாம்பட்டிக்கும் குளத்து தண்ணி தாவா, காவிரி நீர் விவகாரம் மாதிரி ஆயிட்டுது. இன்னும் கூடத் திரலை… இதோட, குளத்து மீனை பங்கு போடுறதலயும் பிரச்சினை. குளத்தங்கரையில, ரெண்டு ஊர்க்காரங்களும் அரிவாளும் கம்புமாய் சந்திச்சோம். அப்போ, எங்களோட வந்த இந்தப் பன்னீரு, சட்டாம்பட்டியைச் சேர்ந்த அப்பா கூட பிறந்த அத்த மகனோட தலையில கருங்கல்ல தூக்கிப்போட்டான். அந்த அளவுக்கு ஊர் அபிமானி. இப்போ என்னடான்னா… அய்யய்யோ… டேய்… டேய்…”

மல்வேட்டிக்காரர், காதலாகி கண்ணிர் மல்கி, பன்னிரைப் பிடிக்க ஒடியபோது, கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்டான எஸ்தர், தன்னை பெண்ணென்றும் பாராமல், அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். இன்ஸ்பெக்டர், “செத்தா போயிடுவான்…? கொஞ்சம் நேரம் சும்மா நில்லுவே…” என்று சொன்னபோதுதான், எஸ்தர் அவர் மீது போட்ட தனது பிடியை விட்டாள். மீண்டும் எல்லோரையும்போல், அவள் பார்வையும் பன்னீர்மேல் பட்டது.

இப்போது, பன்னிரின் ஆட்டமும் பாட்டமும் சுதி மாறின. அவனது இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று உதைத்துக் கொண்டன; மிதித்துக்கொண்டன. குத்துச்சண்டை வீரர்கள் போல், ஒன்றை ஒன்று பின்னிக் கொள்வதும், பின்னர் பிரிந்து, மின்னல் வேகத்தில் உதைத்துக் கொள்வதுமாய் சண்டையிட்டன. இத்தகைய கால்போரில், அவன், ஒற்றைக்கால் முக்கோணமாகத் தோன்றினான். இறுதியில் ஒரு காலை, இன்னொரு கால் ‘நாக்-அவுட் செய்யப்போனபோது, வாய் செயல்படத் துவங்கியதால், போரிடும் கால்களுக்கு ஒரு இடைவேளை கிடைத்தது. அவனது வாய், அந்த நேரத்தை தனதாக்கிக் கொண்டு, தனி ஆவர்த்தனமாகியது. எதிரே ஒரு சூன்ய வெளியை ஒரு மனிதனாய் உருவகப்படுத்திக் கொண்டு பேசியது.

“நீ அப்பாவிதான்… நல்லவன்தான்… இல்லங்கல… ஆனாலும், அடுத்த சாதிப் பயலாச்சே உன்னை வெட்டுனாத்தான், எங்க சாதிக்காரங்கள உங்க சாதிக்காரன் வெட்டுன பத்துபேர் கணக்க சரிசெய்ய முடியுண்டா. அதனால ஒன்ன விடமாட்டேண்டா… விடமாட்டேன். ஒன்ன மட்டுமில்ல, ஒன் சாதியையும் விடப்படாது. சொல்லிட்டார் சொல்லிட்டார். எங்கய்யா சொல்லிட்டார்.”

பன்னீர், சாதிப்பரணி பாடிப் பாடி ஆடியபோது, அதன் கோரம் தாங்கமுடியாது, முகம் திரும்பிய குழு உறுப்பினர்களைப் பார்த்தபடியே, ஒரு வெங்காய டப்பா பழைய நாட்டாண்மை பெருமிதமாகப் பேசியது.

“இவன் ரொம்ப மானஸ்தன். அதனாலேயே, ரொம்ப ரொம்ப சாதி அபிமானி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால, பெருசா சாதிக்கலவரம் வந்தது பாருங்க… அப்போ, அதோ அரண்மனை வீட்டுத் தூக்குத் திண்ணையில நின்னு ஊசாட்டம் பாக்கானே ஈரத்துணி…”

“ஈரத்துணின்னா…?”

“ஈரத்துணியால கழுத்தை அறுக்கிறவன்னு அர்த்தம். அவனோட துண்டுதலுல, இந்த ஊருக்கு அடைக்கலமாய் தட்டு முட்டுச் சாமான் வாங்க வந்த எதிர்ச்சாதி வாலிபப்பையன் ஒருவனை ஒரே போடாய் போட்டவன் இந்தப் பன்னீர். இதனால, கொலை கேஸுல சிக்கி, கோர்ட்டு வழக்குன்னு அலைஞ்சி, அந்தப் புதுப்பணக்கார ஈரத்துணிக்காரன் கிட்டயே, கொஞ்சம் நஞ்சமிருந்த தன்னோட பங்கு நிலத்தை வித்துட்டு, ஒட்டாண்டியானவன். ஆனாலும், அப்போகூட இவனுக்கு புத்தி பிசகல. மூணு மாசத்துக்கு முன்னால வரைக்கும் எங்களை பைத்தியமாக்கிக்கிட்டு இருந்தவன்தான். அப்புறம் என்னடான்னா… விநாயகர் சதுர்த்தியில…”

வாயை மறைத்த புதர் மீசையோடு வார்த்தைகளை வடிகட்டிப் பேசுவதுபோல் பேசிய பழைய நாட்டாண்மைக்கு, குழுவினர் குனிந்து காதுகொடுத்தபோது, கூட்டம் ‘அய்யய்யோ… அச்சச்சோ…’ போட்டபடியே, பன்னிரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பன்னீர், தனது கோரைப்பல் வாயால் தோள்களைக் கடித்தான். உதடுகளை உலக்கைபோல் குத்தினான். விரல்களை வாய்க்கு கொண்டுவந்து, கரும்பை கடிப்பதுபோல் கடித்தான். அவனைப் பிடிக்கப்போன ஊர்வாசிகளை, சமூகயியல் பாப்பம்மா, ஒண்ணும் ஆயிடாது. சும்மா நில்லுங்க..” என்று இரு கரங்களையும் நீட்டித் தடுத்தாள். பழைய நாட்டாண்மையின் வாயருகே காதுகள் படும்படி குதிகாலால் நின்று, விநாயகர் சதுர்த்தியில… சொல்லுங்க… என்று அவள் கிசுகிசுப்பாய் கேட்டபோது, அதைச் சொல்லக்கூடாது என்பதுபோல், ஒரு வேலையில்லா பட்டதாரியும் பட்டைதாரியுமான இளைஞன், விவரக் களத்தை மாற்றினான்.

“இந்த பன்னிரு ஊர்ச்சண்டை, சாதிச்சண்டை இல்லாமல், தெருச்சண்டையிலும் வீராதி வீரர். இவரோட வடக்குத்தெரு கன்னிமாடன் கூட்டத்துக்கும், தெக்குத்தெரு சாயச்சாமி கூட்டத்துக்கும் கல்லெறிச் சண்டை நடந்தப்போ, இவர்தான் நாலுபேரு பல்லை உடைச்சு அதிக கோல் போட்டார். அப்புறம், இவரோட அண்ணன் தம்பிகளுக்கும், இவரோட பெரியப்பா பிள்ளைகளுக்கும் வரப்புத் தகராறு. ரெண்டு பேரை சாய்ச்சார். அப்புறம், இவர் வீட்டுக்குள்ளேயே சண்டை. இவரு பல சண்டையில ஈடுபட்டதால, போலீஸ்காரங்க இவங்க குடும்பம் முழுசையும் பிடித்துட்டுப் போனாங்க. இதனால, அண்ணன் தம்பிகளுக்கு இவர் மேல கோபம். கூடவே குடும்பத்துக்குத் தெரியாம, தன்னோட பங்கு நிலத்தை ஈரத்துணிக்கு வித்துட்டாரு. இதை தெரிஞ்ச அண்ணன் தம்பிங்க, இவரைத் தட்டிக் கேட்டாங்க. தட்டிக் கேட்டவங்களத் தலையில தட்டிட்டு, ஈரத்துணியோட நிலமான இந்த இடத்துல, மண்சுவர் எழுப்பி, மனைவியோட வந்தாரு. அப்புறம் கர்ப்பிணி மனைவியை, காலை ஒடித்து

ஆஸ்பத்திரிக்கு அனுப்பினாரு. அந்தம்மா, ஆஸ்பத்திரியில இருந்தே நிரந்தரமா பிறந்த வீட்டுக்கு போயிட்டாள்.”

“இப்போ இவனை யார் பார்த்துகிறது…?”

“இத்தனைக்குப் பிறகும் யார் பார்ப்பாங்க? பெற்ற தாய் மட்டுந்தான் பார்க்கமுடியும். அந்தம்மா ஒரு ஐடியல் மதர். விவசாயக்கூலி. காலையில இவரைக் கட்டிப்போட்டுட்டு, மாலையில வந்து அவிழ்த்து விடுவாள். அம்மாவைப் பார்த்ததும், இவரும் அடங்கிப் போவார். ஓ மை காட். அதோ பாருங்க…”

பட்டதாரி இளைஞன் சுட்டிக்காட்டிய அந்த ஆடுதளத்தில், பன்னீர் தில்லானாவுக்கு வந்து விட்டான். ஒரே சமயத்தில் வாய் திட்டுவாங்கம் வாசிக்க, அவன் கைகள் ஒன்றோடொன்று மோத, விரல்கள் ஒன்றை ஒன்று கிள்ள, பற்கள் ஒன்றை ஒன்று கடிக்க, உதடுகள் ஒன்றை ஒன்று பிதுக்க, கால்கள் ஒன்றை ஒன்று உதைக்க, மோவாய் கழுத்தில் பலவந்தமாய் மோத, நாக்கு, மகிசாசூரவர்த்தினியின் நாக்குபோல் பற்கடிக்கு இடையே வெளிப்பட, கண்களும் இமைகளும் மோதிக்கொள்ள சுழன்றாடினான். அந்த ஆட்டத்தில், இதயம் நுரையீரலோடும், குடல் இரைப்பையோடும், எலும்புகள் நரம்புகளோடும், முதுகுத்தண்டு கழுத்தோடும், சிறுமூளை, பெருமூளையோடும் மோதியிருக்க வேண்டும். ஆனந்தத் தாண்டவம், ஊழிக்கூத்தானது போன்ற சுழற்சி. இதற்கு தாளலயமாய் வாங்கடா வாங்க. சண்டைக்கு வாங்க என்று மாறி மாறி, ராகத்தோடு கத்தினான்.

அந்தக் குழுவின் தலைவரான இ.ஆ.பெ. உக்கம்சிங் குரங்கு கூட்டத்தின் தலைமை குரங்கு தனித்து நிற்பதுபோல் தொடர்ந்து தனித்துவமாய் நின்றபோது –

இப்போது இதர உறுப்பினர்கள், மனிதாபிமான வயப்பட்டு பன்னீரைப் பிடிப்பதற்காக, உடல் குலுங்க ஒடியபோது, பறட்டைத் தலை மூதாட்டி ஒருத்தி, வயிறு எக்க ஓடிவந்தாள். ‘ஏய் நொறுங்குவான். நூறு சில்லியா போறவனே… உன்னைத் தடுக்கறதுக்கு ஒரு நாதிகூட இல்லியா? என்று வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே ஓடிவந்தாள். அவள் தலையில், எண்ணைக்குப் பதிலாக எள்ளுகளே வியாபித்திருந்தன. லேசாய் கூன்போட்ட உடம்பு… எலும்புகள் மரச்சட்டங்கள் போல் தோற்றம் காட்டின. தனது தலையில் மாறி மாறி அடித்தபடியே, பன்னீரை அவள் கட்டிப்பிடித்தாள். உடனே பன்னீர் சிறிது நேரம் தாயையும் சேர்த்துப் பிடித்து ஆடினான். அப்புறம், அம்மாவின் தோளில் முகம்போட்டு அவள் உடல் வழியாய் தரையில் சரிந்தான். அந்த மூதாட்டி சாபம் போட்டாள்.

‘எந்த நாயி என் மவன் கட்ட அவுத்தது? அவங்க வீட்டுலயும் ஒருத்தர் இவனை மாதிரி ஆகாட்டா, நான் ஒருத்தனுக்கு முந்தானை…” அரசுக் குழுத் தலைவர் உக்கம்சிங், இந்த மண்வாசனைத் தமிழ் புரியாமல் குழம்பியபோது, மனித உரிமை மகேந்திரன், பன்னீரை உற்றுப் பார்த்தார். பிறகு பன்னீரின் உச்சியையும், அந்த அம்மாவையும் மாறிமாறிப் பார்த்தபடியே, கேள்வி மேல் கேள்வியாய் கேட்டார்.

“பெரியம்மா! ஒங்க மகன் உச்சில வெள்ளையா பள்ளமா மூன்று அங்குல ஆழத்துல, கிண்ணம் மாதிரி பள்ளமாய் இருக்குதே… அது எப்படி வந்தது? ஏன்னா, அது மூளைய பாதிச்சிருக்கும். இல்லியா டாக்டர்…?”

டாக்டர். ராம்விவேக், தனது களப்பணியை மனித உரிமை பறித்துக்கொள்வதாக நினைத்து, முகம் சுழித்தபோது, மகனோடு கீழே சரிந்துகிடந்த அந்த மூதாட்டி, அண்ணாந்து பார்த்து அவர்களுக்கு சேதி சொல்லப் போனாள்.

“அதை ஏன் கேக்கப்பா? போன பிள்ளையார் சதுர்த்தியில…”

அந்த மூதாட்டியை நோக்கி முகம் போட்டு உன்னிப்பாகக் கேட்கப்போன குழுவினரை, ஒரு காரசாரமான குரல் திரும்ப வைத்தது.

“யோவ்… உங்களுக்கு பொம்பளகிட்ட என்னையா பேச்சு? எது கேட்கணுமுன்னாலும் என்கிட்ட கேளுங்க.”

ஈரத்துணி, குழுவினரை நெக்கியடித்து நின்றது. பளபளப்பான வயிறு, வெள்ளை சிலுக்கு ஜிப்பாவில் மின்னியது. கண்கள் இடுக்கி இருந்தன. சித்தி தொடரில் உப்புச் சப்பு இல்லாத, அரசாங்க விதிகள் தெரியாத கலெக்டர் அம்மா என்ற கேரக்டர் வருகிறதே, அதன் அப்பா கேரக்டராக நடிப்பவருக்கு கறுப்பு தோல் போர்த்தினால் எப்படியோ அப்படிப்பட்ட தோற்றம்… அதே தோரணை.

கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், ஈரத்துணியை பயபக்தியோடு பார்ப்பதுபோல் பாவலா செய்துகொண்டே, விளக்கமளித்தாள்.

“இவனுக்கு, ஐ அம் ஸாரி… இவருக்கு, உச்சந்தலையில எப்படி… இப்படி ஒரு பள்ளமுன்னு…”

“பள்ளம் கிடக்கட்டும். நீங்கள்லாம் யாரு…?”

“நாங்க அரசாங்கக் குழு. இந்த மாவட்டத்துல, சில தனியார் நிறுவனங்கள், சித்த பிரமை பிடித்தவங்களை சிகிச்சை என்கிற பெயர்ல, சித்திரவதை செய்யுறதா கேள்விப்பட்டு, நிலைமைய நேர்ல கண்டறிய, எங்கள, அரசு, குழுவாய் அனுப்பி இருக்கு. நாங்களும் பல பட்டிகள பார்த்துட்டோம். ஆனா, இந்த வீட்ல இவருக்கு நடந்த கொடுமை மாதிரி வேற எந்த ஊர்லயும் நடக்கல.”

“உங்களுக்கு யார் சொன்னது?”

“சட்டாம்பட்டிக்காரங்க.”

“அடுத்தசாதி ஊர்ப்பயலுவ அப்படியா சொன்னாங்க? அவங்களுக்கு நாளும் கிழமையும் குறிக்கணும் போலிருக்கு.”

“அப்படியெல்லாம் செய்திடாதிங்க… போகட்டும். இவரோட பேக்ரவுண்ட… அதான், பின்னணியை சொல்றீங்களா? நீங்க சொல்றது இந்த ஊரே சொல்றது மாதிரி.”

“என்னை என்ன பேக்ராண்டு… இல்ல கேணையன்னு நினைச்சுங்களா? இந்த பெத்தட்டிப் பயலுககிட்டதான், விலாவாரியாய் விசாரிச்சிகளே?. நீங்க போன பிறகுதான், இவங்களுக்கு இருக்கு சேதி.”

‘உங்களுக்கு அவங்க ஈடா? போகட்டும். இந்த தலைப்பள்ளம்…?

“அதுவா…? பிள்ளையார் ஊர்வலம் சம்பந்தப்பட்ட கலவரத்துல கிடைச்சுது.”

“பிள்ளையார் ஊர்வலத்துக்கு ஆதரவான கலவரமா? எதிரான கலவரமா?”

“அதுதான் பிள்ளையார் ஊர்வலம் சம்பந்தப்பட்டதுன்னு சொல்லீட்டேனே… சும்மா சும்மா நோண்டுனா எப்படி? பிள்ளையார் கிடக்கட்டும்… பூட்டை உடைச்சுட்டு அந்த வீட்டுக்குள்ள நீங்க எப்படிப் போகலாம்? நீங்க களவாளியா இருக்கமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?”

“இதோ இந்த இன்ஸ்பெக்டர்கிட்டேயே கேளுங்க.”

‘அடடே இன் ஸ்பெக்டரா…? நான் பார்க்கவே இல்லையே…”

“தலைவரே! இந்த கிண்டல்தானே வேண்டாம். அப்புறம், இந்தப் பயலைப்பற்றி ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்க. நீங்க என்ன சொன்னாலும், நாங்க நம்புறோம்.”

“இதோ பாருங்க இன்ஸ்பெக்டர்! ஒங்க முகத்துக்காக இவங்கள விட்டு வைக்கேன். எங்க ஊரைப் பத்தியோ, இல்ல இவனப் பத்தியோ ஏதாவது தாறுமாறா சேதி வந்தா, நீங்கதான் பொறுப்பு. எங்களுக்கு சாதிக் கட்டு இருக்கு. பஞ்சாயத்து இருக்கு. விவரமான ஆட்கள் இருக்கு. எதுன்னாலும் நாங்க பார்த்துக்குவோம். எந்தப் பைத்தியத்தையும் எங்களால வைத்தியம் செய்யமுடியும். இத மீறி நீங்க எதாவது செய்தா அது சாதிக் கலவரமா வெடித்து நீங்கதான் சஸ்பெண்டு ஆவிங்க. சரி இன்ஸ்பெக்டர்! வந்ததுக்கு மிச்சமா அவங்கள வீட்டுக்குச் சாப்பிட கூட்டிவாங்க.”

போலீஸ் இன்ஸ்பெக்டர், பெட்டியில் இருந்து வெளிப்பட்ட பாம்புபோல் தொப்பியை கழட்டினார். அவர்கள் வந்துதான் ஆகவேண்டும் என்ற அனுமானத்துடன் ஈரத்துணி, விருந்தோம்பல் முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காக, அருகேயுள்ள தனது வீட்டின் திண்ணைப் படிகளில் ஏறி உள்ளே மறைந்தபோது அரசுக்குழு உறுப்பினர்கள், இன்ஸ்பெக்டர் இருக்கிற தைரியத்தில் அந்த வீட்டை நோக்கி, தங்களுக்குள் விவாதித்தபடியே நடந்தார்கள். டாக்டர். ராம்விவேக், தன்னைக் கேள்வியாய்ப் பார்த்த மனித உரிமை மகேந்திரனுக்கு விளக்கமளித்தார்.

‘இவனை பீடித்திருப்பது ஒரு வித மேனியா. அதாவது அழுங்கு நோய். சாதி, சமயம், ஊரு முதலிய சாக்குப் போக்குகள்ல எல்லாரையும் அடிச்சுப் போட்டிருக்கான். இந்த அடிதடியே, அவன் சிந்தையிலும் செயலிலும் ஊடுருவி, ஒரு அடிக்ஷன்-அதாவது, போதையாகிவிட்டது. சாராயப் போதையைவிட விட பெரிய போதை, இந்த கலவரப்போதை. கூடவே இந்த போதைக்கு சினிமாவுல வருகிற சண்டைக் காட்சிகள் ஒத்தாசை செய்திருக்கும். எல்லோரையும் அடிச்சு முடிச்சுட்டு, இப்போ, இவன், அடிக்கிறதுக்கு ஆளில்லாம, தன்னைத்தானே அடிச்சுக்கிறான். இதுக்கு எம்.டி.வி., அதாவது மேனியாக் டிப்ரஸிசிவ் சைக்கோஸிஸ் என்று பெயர்.”

கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் எஸ்தர், டாக்டர் ராம்விவேக்கை எரிச்சலாக்கினாள்.

“எனக்கென்னமோ டி.எஸ்.எச்., அதாவது வேணுமுன்னே தனக்குத்தானே திங்கு விளைவிக்கிற மேனியான்னு படுது.”

“எந்த மேனியாவாவது இருந்துட்டு போகட்டும். இவனை சிகிச்சை அளித்து நார்மலாக்க முடியுமா?”

“நீ சும்மா இரு எஸ்தர்… நானே சொல்றேன். இவனை மனோவசியத்துல மயக்கி, இவன் அடிமனதுல இருக்கிற ஒவ்வொரு நிகழ்வின் நினைவையும் வாய் வழியாய்ப் பேச வைக்கணும். நடித்துக் காட்டும்படிச் செய்யனும். ஒவ்வொரு நிகழ்வையும்… நிகழ்வு என்ன நிகழ்வு… அமங்கலத்தையும் இவன் சொல்லும் போது, இவனோட உடம்புல மின்சார குப்பியால சூடு போடணும். இந்த அதிர்ச்சி வைத்தியம் ஒண்னு தான் , இவனைக் குணப்படுத்தும்.”

சமூக நலத்துறை உயர் அதிகாரியான உக்கம்சிங், எதற்காக அந்த வீட்டுக்குள் நடத்தப்படுகிறோம் என்பது புரியாமல், முன்நடையாய், பின்நடையாய் இழுபறி நடையாய் அந்தக் குழு உறுப்பினர்களோடு நடந்தார்.

பன்னீரோ, தமிழ்நாட்டு பூகோள வரைபடம் போல், ஒரங்கட்டி நின்றான்.

– தினகரன் – பொங்கல் மலர், 2001- சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *