கற்பூர நாயக்கர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 11,277 
 
 

ஜமீன்தார் கற்பூர நாயக்கருக்குச் சாப்பிடத் தெரியும்: வக்கணையாக உணவு ருசி கண்டு உடம்பை ‘மொழு மொழு’ வென்று உடம்பை வைத்திருக்கத் தெரியும்; ஆடையாபரணங்களை அணிந்து மினுக்கத் தெரியும்; செக்கச் செவேலென்ற திருமேனியும் வெள்ளை வெளேலென்ற வஸ்திரமும் பட்டுக்கரை அங்கவஸ்திரமும் முறுக்கு மீசையும் பட்டை நாமமுமாக அவர் கட்டிலில் உட்கார்ந்திருக்கும்போது பார்த்தால் நிச்சயமாகத் திருஷ்டி விழும் என்பதில் சந்தேகமே இல்லை.

நாயக்கர் தோத்திரப் பிரியர். அவருடைய முன்னோருடைய வீரப்பிரதாபங்களையும், அவர் தாமே பத்து வருஷங்களுக்கு முன் புலி வேட்டைக்குப் போய் நரி வேட்டையாடிய சாமர்த்தியத்தையும், அந்த வேட்டையைக் கொண்டாட அவர் அன்னதானம் செய்த விமரிசையையும் பாராட்டிப் பேசி, ஜமீன்தாருடைய திருவுள்ளத்தில் இடம் பெற்றவர்கள் பலர்.

அவருக்கு ஒரு மந்திரி. அநேகமாகப் பணக்காரர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் முன்னடியாராக இத்தகைய மந்திரிகள் இருப்பது எங்கும் வழக்கந்தான். இவரும் முதலில் ஜமீன்தாரருக்கு இங்கிதமாகப் பேசி அவர் பிரியத்துக்கு ஆளானவரே. வாய்ச் சவடால் அடிப்பதிலும் யாரையும் மடக்கிப் பேசுவதிலும் ஆள் மிகவும் கெட்டீக்காரர். தெரியாத விஷயங்களில் எல்லாம் தலையிட்டுக்கொண்டு பேசுவதில் அவருக்கு உள்ள துணிவு வேறு யாரிடமும் இராது. அந்தச் சவடால் ராயரைத் திருப்தி பண்ணினால்தான் ஜமீன்தாரின் திருப்தியைப் பெறலாம் என்பது ஊரறிந்த ரகசியம்.

ஒரு நாள் ஒரு புலவர் கற்பூர நாயக்கரை நாடி வந்தார். அவர் நாடு முழுவதும் சுற்றினவர். முரடர்களுக்கு முரடராகவும் சாதுக்களுக்கச் சாதுவாகவும் இருப்பார். உலகம் அறிந்தவர். இன்னாரிடம் இன்னபடி பேசவேண்டும். இன்ன திசையில் வெட்டினால் இன்ன பக்கம் சாயும் என்ற ரந்திரங்களெல்லாம் தம் அநுபவத்தால் தெரிந்துகொண்டவர் அவர்.

கற்பூர நாயக்கருடைய தரிசனம் அவருக்குக் கிட்டியது. நாயக்கருடைய திருமுக விலாசத்தைக் காணும்போதே அவர் மூளையையும் புலவர் அளவெடுத்துவிட்டார். ‘இந்த இடத்தில் நம்முடைய வெண்பாவும் விருத்தமும் கவைக்கு உதவா. ஆளுக்குத் தகுந்த வருணனையும் பாட்டுமே இப்போது வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டார்.

முதலில் தாம் கொண்டுபோன எலுமிச்சம் பழத்தை ஜமீன்தார் கையில் சமர்ப்பித்தார். சமர்ப்பித்துவிட்டுப் பல்லை இளித்துக்கொண்டு நின்றார். ஜமீன்தார் புலவரைத் தம் கடாட்ச வீட்சண்யத்தால் ஒரு தடவை பார்த்துவிட்டு அருகில் நின்ற தம் அந்தரங்க மந்திரியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் ‘இவரை விசாரிக்க வேண்டும்’ என்ற அர்த்தம் இருப்பது மந்திரிக்குத் தெரியும்.

“நீர் யார்? எந்த ஊர்?” என்று மந்திரி கேட்டார்.

“நான் தமிழ்ப்புலவன். கவிஞன். பாட்டுக்கள் பாடுவேன். சமுகத்தைக் கண்டுவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்று விநயமாகச் சொன்னார் புலவர்.

“ஏதாவது பாடும் பார்ப்போம்” என்று மந்திரியார் உத்தரவிட்டார்.

“நான் எஜமான் விஷயமாகவே ஒரு பாடல் இயற்றி வந்திருக்கின்றேன். விண்ணப்பித்துக் கொள்ள அநுமதி வேண்டும்” என்று புலவர் சொன்னார்.

ஜமீன்தார் தம்முடைய ஹூங்காரத்தால் அநுமதி தந்தார்.

புலவர் கிராமத்துக் கைத்தொழிலாளிகள் பாடும் ராகத்திலே பாட்டைப் பாட ஆரம்பித்தார்.

“கோவைப் பழம்போலே
சிவந்த நாயக்கரே”

என்று தொடங்கினார். பாட்டைச் சொல்லும்போதே உடம்பை நெளித்துக்கொண்டு கையைக் குவித்துக் கோவைப் பழம் என்று தெரியும்படி அபிநயம் பிடித்தார்.

ஜமீன்தாருக்குத் தம் திருமேனியைப் புலவர் வருணிக்கிறார் என்பது தெரிந்தது. அவருக்குத் தெளிவாக விளங்கும் வார்த்தைகளைத்தானே புலவர் சொல்கிறார்?

“கோவைப் பழம்போலே
சிவந்த நாயக்கரே”

என்று புலவர் வலக் கையாலும் இடக் கையாலும் மாறி மாறி அபிநயம் பிடித்துப் பாடினார்.

ஜமீன்தார் ஒரு முறை தம் திருமேனியின் நிறத்தைத் தாமே பார்த்துக்கொண்டார்.

“கோவைப் பழம்போலே
சிவந்த நாயக்கரே
குண்டு மணிபோலே
சிவந்த நாயக்கரே”

என்று பாடிக் குன்றிமணியை அபிநயத்தால் காட்டினார், உலகியல் அறிந்த புலவர். குன்றிமணி என்று சொன்னால் நாயக்கருக்கு விளங்காதென்று ‘குண்டுமணி’ என்றே சொற் பிரயோகம் பண்ணினார்.

ஜமீன்தார் புன்முறுவல் பூத்தார். கறுத்து அடர்ந்த மீசைக்கு அடியில் வெண்பல் வரிசை பளிச்சென்று மின்னியது. புவ்வருக்கு உற்சாகம் மூண்டு விட்டது.

“காவிக் கல்லைப் போலே
சிவந்த நாயக்கரே”

என்று மூன்றாவது அடியைப் பாடும்போது ஜமீன்தார் சொக்கிப் போனார். கோவைப் பழமும் குன்றிமணியும் காவிக்கல்லும் முன்னாலே நின்று உல்லாஸ நடனம் புரிவதாக அவருக்குத் தோன்றியது. அடிக்கடி தம் மந்திரியின் முகத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

“காவிக் கல்லைப்போலே
சிவந்த நாயக்கரே
கற்பூர நாயக்கரே”

என்று ஜமீன்தாரின் திருநாமத்தைப் பாட்டிலே இணைத்து முடித்தார் புலவர்.

“நல்லா இருக்குது” என்று ஜமீன்தார் தம்மையும் மறந்து சொன்னார்.

மந்திரி மௌனமாக நின்றார். அவர் சந்தோஷத்தை வெளிப்படுத்தவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

“என்னப்பா சும்மா நிற்கிறாய்? பாட்டு எப்படி?”

ஜமீன்தாரே இப்படிக் கேட்கும்போது மந்திரி எப்படி மௌனத்தைக் கலைக்காமல் இருக்கமுடியும்?

“எங்கே, பாட்டை இன்னும் ஒரு தரம் சொல்லும்” என்றார் மந்திரி.

“கோவைப் பழம்போல
சிவந்த நாயக்கரே
குண்டு மணிபோல
சிவந்த நாயக்கரே
காவிக் கல்லைப்போல
சிவந்த நாயக்கரே
கற்பூர நாயக்கரே”

என்று பாட்டு முழுவதையும் சொன்னார் புலவர்.

மந்திரி எதையோ கண்டுபிடித்தவரைப் போலத் திடீரென்று, “அதுதான் சொல்கிறேன்” என்று சொல்லி ஜமீன்தாரைப் பார்த்தார்.

மந்திரி என்ன சொல்கிறார் என்பதை அவர் அறிய விரும்பினார்.

“இதிலே குண்டுமணி இருக்கிறதே, அதைப் பற்றித்தான் சொல்கிறேன். குண்டுமணியில் கொஞ்சம் கறுப்பு இருக்கிறதே; அதை வைத்தது சரியா?” என்று கூறி வெற்றி மிடுக்கோடு புலவரை ஏறிட்டுப் பார்த்தார்.

‘புலவர் இடி விழுந்தது போலத் திடுக்கிட்டு முகஞ் சுண்டித் தோல்வியுற்று வந்த வழியே போய் விடுவார். தம்முடைய சாமர்த்தியத்தை ஜமீந்தார் அறிந்து பாராட்டுவார்’ என்றெல்லாம் அவர் கோட்டை கட்டலானார்.

புலவரோ இதற்கெல்லாம் அயர்ந்த பேர்வழி அல்ல; இந்த மந்திரியைப் போல ஆயிரம் பேரை வாயில் போட்டுக்கொள்ளும் மனிதர். சிறிதும் அஞ்சாமல் உடனே பதில் சொன்னார்.

“அதற்குத்தானே காவிக் கல்லைக் கூட வைத்திருக்கிறேன்? அதை உரைத்துத் தடவிவிடுகிறது!”

“பலே, பலே!” என்று ஜமீந்தார் ஆனந்தத்தால் துள்ளினார்.

சவடால் ராயர் வாயடங்கினார். புலவர் அந்தச் சந்தோஷ வேகத்திலேயே சம்மானம் பெற்றுக் கொண்டு போனார்.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *