அமெரிக்க நாகரிகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 6,182 
 

அன்று அதிகாலை. குருமூர்த்தியின் வீட்டுப் போன் அலறியது.

“ காந்திமதி உடனே போய் போனை எடு..கண்மணி தான் இந்த நேரத்தில் கூப்பிடுவாள்!….”

காந்திமதி ஓடிப் போய் போனை எடுத்தவுடன் “ நல்லா இருக்கிறாயா அம்மா… ஏன் இந்த ஒரு வாரமா போனே பண்ணலே” என்று கேட்டாள்.

“ காந்திமதி!………… நான் ரத்தினம் பேசுகிறேன்…கண்மணி இல்லே!…கொஞ்சம் குருமூர்த்தி இருந்தா பேசச் சொல்லம்மா…”

“என்னங்க நம்ம கண்மணி இல்லே!….உங்க பிரண்ட் ரத்தினம் பேசுகிறார்..உங்களைக் கூப்பிடுகிறார்….”

வந்து ரிஸிவரை வாங்கிக் கொண்டு “என்ன ரத்தினம்………காலையில் நேரத்திலேயே கூப்பிடறே?…என்ன விசேஷம்?…..? ” என்று குருமூர்த்தி கேட்டார்.

“ ரொம்ப அவசரமான சமாச்சாரம்…அதை போனில் எல்லாம் சொல்ல முடியாது…. நீ சிரமத்தைப் பார்க்காமல், காந்திமதியையும் கூட்டிக் கொண்டு உடனே பெங்களூர் புறப்பட்டு வா!…எல்லாம் நேரில் விபரமாச் சொல்லறேன்!…….”

“ காந்திமதி நாம ஒரு நடை பெங்களூர் போயிட்டு வந்திடலாம்!…அவனுக்கு எல்லாமே மூடு மந்திரம் தான்!…ஏதாவது அவன் குடும்பப் பிரச்னையாகக் கூட இருக்கும்…. போனில் சொல்ல சங்கடப் படுவான் போலிருக்கிறது… அவனுக்கும்

நம்மை விட்டா யார் இருக்காங்க?…..நாற்பது வருட சிநேகிதம்….”

“ திடீரன்று கண்மணி இங்கு வந்திட்டா…”

“ ஏண்டி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா…உனக்கு பாசம் கண்ணை மறைக்கிறது..அவ இதுவரை தகவல் கொடுக்காம ஒரு முறை கூட வந்ததில்லே!…இன்னைக்கு திங்கட்கிழமை வாரத்தில் முதல் நாள்…எதற்கு லீவு போட்டிட்டு இங்கு அவசரமா அவ வரப்போறா.. நாம நாளைக்கு இரவே இங்கு திரும்பிடலாம்…நீ சீக்கிரம் கிளம்பு!…”

அரை மணி நேரத்தில் இருவரும் தயாராகி விட்டார்கள். கார் பெங்களூர் நோக்கி விரைந்தது.

தினமும், குருமூர்த்தியும் பள்ளித் தோழர்கள். இருவருமே எந்த விஷயமாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் கலந்து கொண்டு தான் செய்வார்கள்..அதனால் தான் குருமூர்த்தி மறு பேச்சு பேசாமல் உடனே புறப் பட்டு விட்டார்.

அவர்கள் வருகையை எதிர் பார்த்து போர்டிகோவிலிலேயே காத்திருந்தார் ரத்தினம்.

அவர் முகத்தைப் பார்த்தவுடன், பிரச்னை ஏதோ அவசரமானதென்று தோன்றியது குருமூர்த்திக்கு.

ஒன்றும் பேசாமல் மூவரும் உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்தார்கள்.

“ ரத்தினம்… எதற்கு இப்படி அவசரமாக வரச் சொன்னாய்?…உன் முகம் எல்லாம் வாடி இருக்கு?….”

“ அதைச் சொல்லத்தானே உன்னை இங்கு வரச் சொன்னேன்…நான் சொல்வதை கவனமா கேட்டுக்கோ!….உணர்ச்சி வசப் பட்டு எந்த முடிவும் எடுத்திடாதே!…”

“ பீடிகை பலமா இருக்கு!…விஷயத்திற்கு வா!…”

“ எல்லாம் நம்ம கண்மணி விஷயம் தான்!….”

“ அவளுக்கென்ன மெட்ராஸில் தான் இருக்கிறா….எதாவது நல்ல வரன் வந்திருக்கா?….நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டேன்!…இப்ப கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமா இருக்கிறாள்! ”

“ இப்பச் சொன்னா ஒரு வேளை ஒத்துக் கொள்வா…அதற்காகத் தான் உங்களை வரச் சொன்னேன்!…”

“ எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்லறே?…”

“ இந்த சூழ்நிலையில் மறுக்க மாட்டாளென்று நான் நினைக்கிறேன்!…”

“ நீ சொல்லறது எனக்குச் சுத்தமாப் புரியலே!….”

“ நீ தப்பா நினைக்காதே!….இங்கே ஜெய் நகரில் தான் ஒரு வீட்டில் கண்மணி இரண்டு நாளா தங்கியிருக்கா!……அவளைப் பார்த்தவுடன் தக்க ஆள் வைத்து அவ நடவடிக்கையை கவனிச்சிட்டுத்தான் இருக்கிறேன்!..

இங்கு ஜெய்நகர் பகுதில் சில வீடுகள் இருக்கின்றன. ஐ.டி. யில் வேலை செய்யறவங்க ஆண்-பெண் சேர்ந்து வந்து சில நாட்கள் புருஷன் பொண்டாட்டி மாதிரி இருந்திட்டுப் போகிறது வழக்கம்!…அதற்கு இங்கு ‘லிவ்விங் டுதெதர்’ என்று சொல்லுவாங்க! அந்த மாதிரி தான் நம்ம கண்மணியும் ஒருவனோடு வந்து இங்கு தங்கியிருக்கா!…அந்தப் பையன் பேர் அருண். அவனும் நம்ம கண்மணியோட சென்னையில் வேலை செய்யற பையன்தான்!…சொந்த ஊர் திருச்சி…அவனும் நல்ல குடும்பத்துப் பையன் தான்!…”

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் குருமூர்த்தி..காந்திமதி வாய் விட்டு அழுது கொண்டிருந்தாள்.

இருவரையும் சமாதானப் படுத்தி ஒரு நிலைக்கு கொண்டு வர ஒரு மணி நேரம் ஆனது.

“ பிரச்னை வெளியில் தெரிய வேண்டாம்….குரு நாம நேரா அந்த வீட்டிற்கே போவோம்!…கையும் களவுமா அவர்களைப் பிடித்துக் கொள்வோம்… அவர்களால் எதுவும் சொல்ல முடியாது.. பிரச்னையை நாசுக்கா கையாளுவோம்….கச முச வென்று எந்தப் பேச்சும் வேண்டாம்…இனியும் கல்யாணத்தை ஒத்திப் போட்டா நல்லா இருக்காது என்பதை மட்டும் விளக்கிச் சொல்லி, அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி வந்து விடுவோம்!…”

குருமூர்த்தியால் எதுவும் பேச முடியவில்லை. இதயம் பாறையாகக் கனத்தது! ஒன்றும் பேசாமல் ரத்தினதின் பின்னால் எழுந்து போனார்.

ரத்தினம் சிறு வயசிலே வேலை தேடித்தான் பெங்களூர் வந்தார். முதலில் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் ஒரு உதவியாளனாகத்தான் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி சொந்தமாகத் தொழில் செய்யும் நிலைக்கு உயர்ந்து அதன் பின் ரத்தினம் ரியல் எஸ்டேட் தொழிலில் நிறைய பணமும் சம்பாதித்து விட்டார். நல்ல செல்வாக்கையும் தேடிக் கொண்டார். பெங்களூரில் எல்லாப் பகுதியிலும் அவருக்கு ஆட்கள் இருந்தார்கள்.

“ டேய்! குரு நீ இப்படி மனசை விட்டா ஒண்ணுமே செய்ய முடியாது!….இங்கே பெங்களூரிலே ஐ.டி.யிலே வேலை செய்யறவங்க நிறைய பேர் இப்படித் தான் மாறிட்டு வரறாங்க….இதெல்லாம் அமெரிக்க நாகரிகமாம்! ‘.லிவிங் டுகெதர்’ என்று சொல்லறாங்க!…..”

“ கல்யாணம் ஆகாமலேயே சேர்ந்து வாழறதா?………..…சொல்லவே அசிங்கமா இருக்குதடா! என்னடா நாகரிகம் அது?….கேட்கவே சங்கடமா இருக்கு!…”

“ இங்கு அதை ஆண் பெண் சேர்ந்து வாழப் பழகுவது என்று சொல்லறாங்க!…உனக்கு அதெல்லாம் புரியாது… இப்ப அதை ஆதரிக்கிற மாதிரி சினிமா எல்லாம் கூட எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! நமக்கு இப்ப வேறு வழியில்லே!……….நாம அவங்க இருவரையும் ஒரே வீட்டில் போய் புடிச்சிடுவோம்!……..அவங்களும் வேறு வழியில்லாம கல்யாணத்திற்கு ஒத்துக்குவாங்க!….நாம் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை செய்து கொடுத்து அனுப்பிடுவோம்!….நமக்கும் கௌரவமாப் போயிடும்…அவங்க நிறைய படிச்சவங்க…கை நிறைய சாம்பாதிப்பவங்க… அப்புறம்

அவங்க இஷ்டம்…நாம நம்ம வழியைப் பார்த்திட்டுப் போவோம்!…இப்ப காரை அந்த வீட்டிற்கு விடச் சொல்லிடறேன்!…”

“ சரியடா!…” என்று பல்லைக் கடித்துக் கொண்டே சொன்னார் குருமூர்த்தி.

ஜெய் நகரில் அந்த சின்ன பங்களா முன் கார் நின்றது.

மூவரும் இறங்கி கண்மணியின் அப்பா, அம்மா என்றும், அவளைப் பார்க்க வந்திருப்பதாகவும் வெளியில் நின்ற காவலாளிடம் சொன்னார்கள்.

“ ஐயாவும், அம்மாவும் மாடியில் இருக்கிறாங்க!…” என்று மாடிக்குப் போகும் வழியைக் காட்டினான் அந்தக் காவலாளி. மூவரும் மளமளவென்று மாடிப் படி ஏறினார்கள்.

குருமூர்த்தி வேகமாக முன்னால் போனார். உடனே ரத்தினம் அவர் கைகளைப் பிடித்து நிறுத்தினார்.

“ டேய்!…குருமூர்த்தி!…எல்லாம் நம்ம கையை மீறி போய் விட்டது!…இந்த நேரத்தில் நாம பொறுமையைக் கடைப்பிடித்து, ஊர் முன் தலை குனியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!…நீ ஆத்திரப் பட்டு அதைக் கெடுத்து விடாதே!…..எதுவும் நடக்காதது போல் சாதாரணமா இருக்க முயற்சி செய்!….தேவையான விஷயங்களை நான் நாசுக்காப் பேசிக் கொள்கிறேன்!…” என்று புத்திமதி சொன்னார்.

“ சரி!..” என்று தலையாட்டி விட்டு முன்னால் போனார் குருமூர்த்தி. மேலே மாடி ரூம் கதவு ஒருக்களித்து சாத்தியிருந்தது. அதைப் பார்த்தவுடன், அவரையறியாமல் போன வேகத்தில் கதவை வேகமாகத் தள்ளி திறந்து விட்டார் குருமூர்த்தி.

உள்ளே நைட்டி உடையில் ஒரு வாலிபன் மார்பில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் கண்மணி.

கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆன புருஷன், பெண்டாட்டி போல இருவரும் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கதவு திடீரென்று திறந்ததும், திடுக்கிட்டுப் போய் இருவரும் சரியாக உட்கார்ந்து கொண்டார்கள். அம்மா, அப்பாவைப் பார்த்ததும் கண்மணி எழுந்து நின்று கொண்டாள்.

“ கதவை தட்டி விட்டு வரக்கூடாதா?..” என்ற் மூவரையும் பார்த்து பொதுவாகக் கேட்டாள் கண்மணி.

கதவைத் தட்டித் தகவல் கொடுத்து விட்டு, கதவைத் திறப்பது அடிப்படை நாகரிகமாம்! குருமூர்த்திக்கு இருந்த மனநிலையில் அதெல்லாம் எங்கே புரியப் போகுது?

கண்மணியிடம் எந்தப் பதட்டமும் இல்லை! புகுந்த வீட்டில் இருக்கும் பொழுது, பெண்ணைப் பார்க்க அப்பா, அம்மா வந்தால் எந்த மாதிரி நடந்து கொள்வாளோ அது மாதிரி நடந்து கொண்டாள்.

“ மிஸ்டர் அருண்!….இவங்கதான் எங்க அப்பா.. அம்மா!…அவர் எங்க அப்பாவோட பிரண்ட் ரத்தினம்!…” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள்.

“ உட்காருங்க சார்!….என்ன சாப்பிடறீங்க?….” என்று உபசரித்தான் அருண்.

பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்தார்கள் குருமூர்த்தியும், காந்திமதியும். அவர்கள் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்தார் ரத்தினம்.

குருமூர்த்தி கஷ்டப் பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டார்.

“ தம்பி!…நாங்க கிராமத்தில் வளர்ந்தவங்க!…..எங்களுக்கு இந்த நாகரிகம் எல்லாம் தெரியாது….மனசில் பட்டதைப் பேசித்தான் பழக்கம்…..என் பிரண்ட் ரத்தினம் சொன்னார் இதெல்லாம் அமெரிக்க பழக்க வழக்கம் என்று………..எங்களுக்கு அந்த நாகரிகம் எல்லாம் தெரியாது!..தப்பா நினைச்சுக்காதே!..கண்மணி!….உனக்கு இந்த தம்பியைத் தான் பிடிச்சிருக்குனு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா… நாங்க அதற்கு தடையாவா இருந்திருப்போம்….ஜாம் ஜாம்மென்று உங்க கல்யாணத்தைப பண்ணி இங்கேயே ஹனி மூனுக்கு அனுப்பி வைத்திருப்பமே!…”

“ அப்பா!…..நீங்க இப்ப எதற்கு இப்படி கல்யாணத்திற்கு அவசரப் படறீங்க?…..”

“ ஏண்டி இப்ப அவசரப் படாம பின்னே உனக்கு குழந்தை பிறந்தவுடனா அவசரப்படறது?…” என்று குறுக்கே பாய்ந்தாள் காந்திமதி.

“ அம்மா!…நீ இங்கே வந்து எங்களை அசிங்கப் படுத்தாதே!….உன் பட்டிக்காட்டுத் தனத்தையெல்லாம் மேட்டூரில் வச்சுக்கோ!…” என்று கோபமாகச் சொன்னாள் கண்மணி.

“ கண்மணி! ” என்று கத்திக் கொண்டு எழுந்தார் குருமூர்த்தி. அதற்குள் ரத்தினம் குருமூர்த்தியின் கைகளைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார்.

“ டேய்!…குரு நீ பேசாம உட்கார்…நான் கண்மணியிடம் பேசிக் கொள்கிறேன்!” என்று ரத்தினம் சொன்னார்.

அதன் பின் ரத்தினம் அமைதியாக “ கண்மணி!….நீயும் அதே மேட்டூரில் வளர்ந்தவள் தான்!…. அதையும் இதையும் பேசி பிரச்னையை ரசாபாசப் படுத்தி விடாதே!….இப்பவும் ஒன்றும் கெட்டுப் போய் விடலே!…இங்கே ஐ. டி. யிலே வேலை செய்யறவங்க நிறையப் பேர் இருக்காங்க!….அடிக்கடி வெளி நாட்டிற்கு போய் வரறாங்க!….கிட்டத் தட்ட அவங்களில் பலர் இங்கேயே தங்களை அமெரிக்கா நாட்டு மக்கள் என்று நினத்துக் கொண்டு தான் வாழறாங்க!….அவங்களுக்கு இங்கே பகல் இரவாத் தெரியுது…இரவு பகலாத் தெரியுது….நம் நாட்டுப் பெண்களும் பொருளாதார சுதந்திரம் வந்த பிறகு ஜல்லிக் கட்டுக் காளை போல் தான் திரியறாங்க!……அதல்லாம்

அவங்க இஷ்டம்…எல்லோரும் மெத்தப் படிச்சவங்க…..நாங்க யாருடைய சுதந்திரத்திலும் தலையிட விரும்பலே!… உங்க அப்பா, அம்மா வாழ்ந்த வாழ்க்கை வேறு மாதிரி….அவங்களுக்கு சுட்டுப் போட்டாலும் அமெரிக்க நாகரிகம் எல்லாம்

வராது…ஐ.டி.யிலே வேலை செய்யற நீங்க சொல்லற ‘லிவ்விங் டுகெதர் ’ என்ற வார்த்தையெல்லாம் அவங்க இதுவரை கேட்டிருக்க மாட்டாங்க!…

சரி….அது எப்படியோ போகட்டும்!…நீ உன்னை பெற்று வளர்த்தவங்களுக்காக ஒரு காரியம் மட்டும் பண்ணு!… அது எங்களுக்குப் போதும்! ….”

“சரி!…அங்கிள்!…நான் அப்படி என்ன செய்ய வேண்டும்?”

“ உனக்கு உன் பிரண்ட் அருணைப் பிடிக்குமா?..”

“ ரொம்பப் பிடிக்கும்!….அவருக்கும் என்னைப் பிடிக்கும்!..”

“ அப்படியானா ரொம்ப சந்தோஷம்!….நீங்க இரண்டுபேர்களும் உடனே ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க!…எங்களுக்கு அது போதும்!..”

“ அங்கிள்!….எனக்கு கல்யாணம் செய்து கொள்வதில் இஷ்டமில்லை!….அதே போல் தான் அருணுக்கும் கல்யாணம் என்ற கமிட்மெண்ட் எல்லாம் பிடிக்காது!..”

“ நீங்க பெங்களூர் வந்து எத்தனை நாளாச்சு?…”

“இங்கே வந்து நாலு நாளாச்சு……அங்கே ஆபிஸிலே ஒரே ‘ஸ்டிரஸ்’….மன அழுத்தம் தாங்க முடியலே….அதற்கு ஒரு வடிகாலாத் தான் நாங்க பெங்களூர் வந்தோம்….மற்றபடி எங்களுக்கு நீங்க சொல்லற மாதிரி கல்யாண ஆசை எல்லாம் இல்லே!….”

“ என்னம்மா…..இப்படி சொல்லறே?….”

“ அங்கிள்!….பிளீஸ்! நீங்களாவது எங்களைப் புரிஞ்சுக்குங்க!….அம்மா அப்பா பட்டிக்காடு….அவங்களால் புரிஞ்சுக்க முடியாது!…நீங்க பெங்களூரிலே நீண்ட காலம் வசிக்கிறவங்க!…நாங்க யாருக்காகவும் வாழ முடியாது!…நாங்க எங்களுக்காகத் தான் வாழ முடியும்!…” என்றாள் தீர்மானமாக!

அதற்குள் குருமூர்த்திக்கு மயக்கம் வந்து விட்டது. காந்திமதி நெஞ்சில் அடித்துக் கொண்டு “ஏண்டி!…இந்த ‘சேர்ந்து வாழற வாழ்க்கை’ எல்லாம் இந்த பன்னி பருவத்திற்கு வேண்டுமானால் சரியா இருக்கும்!….வயசான பிரிஞ்சு போய் நீங்க நாறிப் போயிடுவீங்கடி!..” என்று கூச்சல் போட்டு அழ ஆரம்பித்தாள்!..

அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தி வீடு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் ரத்தினத்திற்கு போதும் போதுமென்றாகி விட்டது!

குருமூர்த்தியை ஒரு நல்ல டாக்டரிடம் அழைத்துப் போனார் ரத்தினம்.

டாக்டர் பரிசோதனை செய்து விட்டு மருந்து மாத்திரை எல்லாம் எழுதிக் கொடுத்தார்.

“ ஒரு பத்து நாட்கள் ‘கம்ப்ளீட் ரெஸ்ட்’ எடுக்க வேண்டும் ” என்று சொல்லி விட்டார்.

பெங்களூரில் இருந்தால் கண்மணி நினைவாகவே இருக்கும் என்று அவர்களை அழைத்துக் கொண்டு ரத்தினம் மேட்டூர் புறப்பட்டார். கிராமத்து தோட்டத்தில்

இரண்டு நாட்கள் குருமூர்த்தியுடன் ரத்தினமும் தங்கி, தோட்டத்தில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு குருமூர்த்திக்கு நிறைய புத்திமதிகள் சொன்னார்.

மற்றவர்களுடைய வாழ்க்கையை வேறு யாராலும் வாழ முடியாது!…அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் வாழ்ந்தாக வேண்டும்! மேற்கத்திய நாகரிகமும், நமது கலாச்சாரமும் வேறு வேறானவைகள்!

பெண்களை படிப்பிற்காகவும், நல்ல சம்பளத்தில் கிடைக்கும் வேலைக்காகவும் அவர்களை எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நாம் தனியாக அனுப்ப நாம் என்று துணிந்து விட்டோமோ……அன்றே இது போன்ற கலாச்சார மாற்றம் வந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை!

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவைதான்! அதை பல பெண்கள் ஒரு வேகத்தில் தவறாகப் பயன் படுத்தி விடுகிறார்கள்!

மத மாற்றத்தைக்கூட சகித்துக் கொள்ள முடிந்த நம்மால் இந்த நாகரிக மாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது போலிருக்கிறது! பெங்களூரில் பரவிய இந்த நாகரிக மாற்றம் இப்பொழுது தமிழ் நாட்டிலும் பரவத் தொடங்கியிருக்கிறது!

நம் மக்கள் இதை எப்படித்தான் ஏற்றுக் கொள்வார்களோ! நினைக்கவே வேதனையாக இருக்கிறது!

ரத்தினம் மேட்டூரில் தங்கிய இரண்டு நாட்களில் நண்பருக்கு நிறைய புத்திமதியும், தைரியமும் சொல்லி விட்டு பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

ரத்தினம் பெங்களூர் திரும்பிய இரண்டாவது நாள். மேட்டூரிலிருந்து ஒரு போன்.

“ சார்!…ரத்தினமா பேசுவது?….சார்!…இங்கே மேட்டூருலிருந்து உங்க நண்பர் குரு மூர்த்தியோட பக்கத்து வீட்டுக்காரங்க பேசறோம்!….உங்க பிரண்ட் குருமூர்த்தியும், அவர் மனைவி காந்திமதியும் இங்கே தூக்குப் போட்டுத் தொங்கிட்டாங்க!…எங்களுக்கு ஒண்ணும் புரியலே!…நீங்க உடனே புறப்பட்டு வந்தா நல்லா இருக்கும்! …”

உடனே காரை எடுத்துக் கொண்டு ரத்தினம் மேட்டூருக்கு அவசரமாகப் புறப்பட்டார்!

– பாக்யா செப்டம்பர் 1-7-2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *