கறுப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 4,187 
 

சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.

அமெரிக்காவில் இருக்கும் மூத்த மகனைப் போய்ப் பார்ப்பதற்காக செக்இன் செய்துவிட்டு ஏர் ப்ரான்ஸ் விமான அழைப்பிற்காக டிபார்ச்சர் லவுஞ்சில் காத்திருந்தாள் பாகீரதி.

அமெரிக்காவுக்கு அவள் பறப்பது இது முதல் முறையல்ல. பத்துப் பன்னிரண்டு தடவைகள் தனியாகவே பறந்திருக்கிறாள். முதல் மூன்று பயணங்கள் கணவருடன்.

தவிர கணவருடன் இரண்டாவது மகனைப் பார்க்க ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சிங்கப்பூர் வழியாக இதுவரை நான்கு முறை பயணித்திருக்கிறாள்.

பயணத்தின் போது சில தடவைகள் அதிர்ஷ்டவசமாக பிஸினஸ் க்ளாஸில் பாகீரதியை அப்க்ரேட் செய்துள்ளார்கள். அன்று முழுதும் அவள் மிகவும் குஷியாகி விடுவாள். அதை தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிச் சொல்லி பீற்றிக் கொள்வாள்.

இந்த முறையும் தனக்கு அந்த மாதிரி அதிர்ஷ்டம் அடித்தால் நல்லது என்கிற எதிர்பார்ப்பு பாகீரதியின் மனதில் ஏராளமாக மண்டிக் கிடந்தது. பயணம் செய்ய வந்திருந்த மத்திய உதவி அமைச்சர் ஒருவர் திடீரென பாகீரதியிடம் சென்று பேசினார். .

பாகீரதிக்கு ஐம்பது வயதானாலும், பார்ப்பதற்கு நாற்பது வயதுத் தோற்றத்துடன் ஒடிசலாக செக்கச் செவேல் என்று 5.7” அடி உயரத்தில் நேர்த்தியான காட்டன் புடவையில் வைர மூக்குத்தி; வைரத்தோடு; வைர மாலையில் வளப்பமாக இருப்பாள். எப்போதும் ஒரு கவர்ச்சியான சிரித்த முகத்துடன் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள்.

ஒரு தேனீயைப் போல சுறுசுறுப்புடன் வளைய வருவாள். பகலில் தூங்க மாட்டாள். தானே ஆட்டோமேடிக் டொயாட்டா ஆல்டிஸ் காரை ஓட்டிக்கொண்டு அனைத்து இடங்களுக்கும் செல்வாள். அடிக்கடி அமெரிக்கவைப் பற்றி பெருமையடித்துக் கொள்வாள்.

வீட்டை சுத்தமாக ஒரு மியூசியம் போல் வைத்திருப்பாள். வாய்க்கு ருசியாக நன்றாகச் சமைப்பாள். வீட்டுக்கு வருபவர்களை நன்கு உபசரிப்பாள்.

பாகீரதி ரொம்ப மாடர்ன்… வாட்ஸ் ஆப்; பேஸ் புக்; பேஸ் டைம்; வைபர்; ட்விட்டர்; ஸ்கைப் என தன்னுடைய ஸ்மார்ட் போனில் எப்போதும் சஞ்சரிப்பாள். உலக நடப்புகள், உலக அரசியல் என ஆர்வத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாடுவாள்.

பசுமைவழிச் சாலையை தங்கள் பதவி போகும்முன் அமைத்துவிட்டால் கொள்ளைக் காசு சேர்த்துவிடலாம் என்கிற அவசரத்தில்தான் ஆளுங்கட்சியினர் அதை அமைக்கத் துடிக்கிறார்கள் என்று அடித்துப் பேசுவாள். தனக்குத் தெரியாததை கூகுளில் தேடித் தெரிந்து கொள்வாள்.

அவளுக்குத் தாராள மனசு. உதவி என்று கேட்டு யார் போனாலும் அவர்கள் வெறுங்கையுடன் திரும்ப மாட்டார்கள். அது கோவிலுக்கு நிதியானாலும் சரி; தனிப்பட்டவர்கள் யாசிக்கும் பண உதவியானாலும் சரி.

பாகீரதி சிறிய வயதிலிருந்தே கஷ்டம் என்பதையே அறியாமல் செல்வச் செழிப்புடன் வளர்ந்தவள். சென்னை ஏஜி ஆபீஸில் வேலை செய்து டெபுடி அக்கவுண்டண்ட் ஜெனரலாக ஓய்வு பெற்ற அவள் கணவரும் எப்போதும் அவளிடம் அன்பாக பிரியமுடன் இருப்பார். இரண்டு மகன்களும் நன்கு படித்து மூத்தவன் நியூஜெர்சியிலும், இளையவன் பெர்த்திலும் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

பாகீரதிக்கு நிறைய நல்ல குணங்களும் தாராள எண்ணங்களும் இருந்தாலும் கூடவே ஒரு தவறான எண்ணமும் உண்டு. நல்லவைகள் அவளிடம் அதிகம் என்பதால் பலருக்கு பாகீரதியின் சுயரூபம் தெரிய வாய்ப்பில்லை. .

பல சிறப்பான குணங்கள் மண்டிக்கிடக்கும் பாகீரதியிடம், சின்ன வயதிலிருந்தே ஒட்டிக்கொண்ட ஒரு மிகப்பெரிய தவறான எண்ணம் ‘சிவப்பா இருப்பவர்கள் நல்லவர்கள்; அவர்கள் பொய் சொல்லி எவரையும் ஏமாற்ற மாட்டார்கள்; அவர்கள் எப்போதும் சுத்தமானவர்கள்’ என்பது.

அதனால் சிவப்பாக இருப்பவர்களிடம் மட்டும்தான் அவள் முகம் கொடுத்து சிரித்துப் பேசுவாள். அவர்களுக்குத் தன்னுடைய நட்பு வட்டத்தில் இடம் கொடுப்பாள்.

கறுப்பாக இருப்பவர்களைக் கண்டால் அவளுக்கு மிகுந்த அலர்ஜி. முகம் சுளிப்பாள். கூடியவரை அவர்களை முற்றிலுமாக தவிர்த்து விடுவாள்.

இது மிகவும் தவறான மனப்பான்மை என்கிற உண்மையை அவள் கணவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பாகீரதி இதுவரை மாறவேயில்லை. டிவியில் நகைச்சுவை காட்சிகளில் ‘ஆர்யா’ படத்தில் வடிவேலு மாதவனைப் பார்த்து ‘செவப்பா இருந்தா நம்பிருதாங்கய்யா’ என்பார். அந்த ஸீன் வந்தால் பாகீரதியை அவள் கணவர் கிண்டல் பண்ணுவார்.

அழகான பெண்கள் அழகான ஆண்களைத்தான் காதலிக்க முடியும், காதலிக்கவும் வேண்டும் என்பதுதான் பாகீரதியின் காதல் நியதி. ஆனால் பல சமயங்களில் அதை மீறுபவர்கள் மீது அவளுக்கு கோபம் வரும். அப்படித்தான் டிவியில் அனிதாவைப் பார்க்கும்போதெல்லாம் ‘நல்ல நிறத்துடன் அழகான அனிதா எப்படி கன்னங்கரேல்னு இருக்கற குப்புசாமியைப் போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடித்தனம் நடத்துகிறாள்?’ என்று அனிதா-குப்புசாமியைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவாள்.

ஏர் பிரான்ஸ் டிபார்ச்சர் அனவுன்ஸ்மென்ட் கேட்டதும் பாகீரதி மெதுவாக எழுந்து வெஸ்டிபியூல் ப்ரிட்ஜ் வழியாக நடந்து சென்று விமானத்தினுள் நுழைந்தாள். தனக்கான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டாள். சற்று நேரத்தில் பச்சை நிற அங்கியில் டீசல் கறுப்பில் குடை மிளகாய் மூக்குடன் ஒரு ஆப்பிரிக்க பெண்மணி பாகீரதிக்கு பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தாள். பிறகு மெதுவாக கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

பாகீரதி புன்னகைக்கவில்லை. மாறாக அவளுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. ஒரு அமெரிக்கனோ அல்லது ஆஸ்திரேலியனோ வந்திருக்கக் கூடாதா? இந்தக் கறுப்பியுடனா தொடர்ந்து பயணிக்க வேண்டும்? என்று உள்ளுக்குள் குமைந்தாள்.

விமானம் கிளம்பும்முன் பயணிகளை அவரவர் இருக்கைகளில் அமர வைப்பதில் சுறுசுறுப்பாக அலைந்து உதவி புரிந்துகொண்டிருந்த விமானப் பணிப்பெண்ணிடம், கண்களால் ஆப்பிரிக்கன் லேடியை சுட்டிக்காட்டி மெல்லிய குரலில், “ஐ வான்ட் டு சேஞ்ச் மை ஸீட்” என்று பாகீரதி வேண்டுகோள் விடுத்தாள்.

ஒருகணம் திணறிய பணிப்பெண் அடுத்த கணம் “ஷ்யூர் மேடம் ஐ வில் ஹெல்ப் யூ… பட் கிவ் மீ சம் டைம்…” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். ஆனால் பாகீரதி அமைதியின்றி தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். ஆப்பிரிக்கன் லேடி இதை எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

சற்று நேரத்தில் விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. விமானம் கிளம்பி மெதுவாக ரன்வேயில் ஓடியது. விமான பணிப் பெண்கள் சேப்டி விதிகளை சொல்லிவிட்டு, விபத்து ஏற்பட்டால் ஆக்ஸிஜனை எப்படி உறிஞ்சுவது என்று அபிநயித்துவிட்டு தங்களின் இருக்கைகளில் அமர்ந்தனர்.

விமானம் எழும்பி ஆகாயத்தில் சீராகப் பறக்கத் துவங்கியதும், அந்த பணிப்பெண் பாகீரதியைப் பார்த்து ஒரு புன்னகையை வீசிவிட்டுச் சென்றாள்.

பாகீரதிக்கு ‘அவள் தன் கோரிக்கையை மறக்கவில்லை’ என்கிற தெம்பு சற்று உற்சாகமளித்தது. ‘ஒருவேளை அவள் தன்னை அப்கிரேட் செய்து பிஸ்னஸ் கிளாசுக்கு அனுப்பிவைக்கலாம்’ என்று நினைத்தாள்.

சற்று நேரத்தில் அந்த பணிப்பெண் பாகீரதியை நோக்கி விரைந்து வந்தாள். பாகீரதியைப் பார்த்து புன்னகைத்து “மேடம்…யு கேன் நவ் ரிலாக்ஸ்…” என்று சொல்லிவிட்டு அருகே புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்கப் பெண்ணிடம் திரும்பி “எக்ஸ்கியூஸ்மி…” என்றாள்.

அந்த கறுப்பு ஆப்பிரிக்கப் பெண் விமான பணிப்பெண்ணை நோக்க, அவளைப் பார்த்து அன்பான குரலில், “மேடம், ஐ ஹாவ் அப்கிரேடட் யூ டு த பிஸ்னஸ் க்ளாஸ். ப்ளீஸ் ஷிப்ட் நவ்… ஐ வில் ஹெல்ப் யூ டு ஷிப்ட்….” என்றாள்.

பணிப்பெண் உதவ, அந்த அப்பிரிக்கப் பெண்மணி, “ஓ தேங்க் யூ…” என்று எழுந்து பிஸ்னஸ் க்ளாஸை நோக்கிச் சென்றாள்.

இதைப் பார்த்த பாகீரதியின் முகம் சுருங்கிப்போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *