கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 10,083 
 
 

சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ?

சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் இருந்து தேங்காய் நெற்றுக்கள் முற்றி, அடந்து கீழே தொப்பென ஒலி எழுப்பி வீழ்ந்தாலும், எவரும் சென்று பொறுக்குவதில்லை. சுடுகாட்டுப் பேய்களும் தென்னை நெற்றுக்கள் எனச் சுருண்டுகிடக்கும் என்ற கிலி. அவ்விதம் கண் மறைவாக தாழம்புதரினுள் விழுந்த காய்களில் சில, முளைத்து பல்லுயரங்களில் வளர்ந்து நிற்கின்றன.

‘ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே’ என்றார்கள். அப்படித்தான் விழுந்துவிட்டதுபோலும் சுடலையின் வாழ்வும். மாசி, பங்குனிச் சூரியக் கதிர் தப்பித்தவறியும் தரையில் விழுந்துவிடாமல் படர்ந்து செறிந்துநின்ற ஆலமரத்துக் குடை. ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிவீசிப் பறந்து, அங்க லாவண்யங்களை ஆட்டியும் குலுக்கியும் காட்டி, செம்பட்டை மீசை குருக்காத விடலைகளின் உறக்கம் கெடுத்திய காமு, இன்று வடசேரிச் சந்தையில் கூறு வைத்த சீனி அவரைக்காய் அள்ளுவதுபோல் ஆகிவிட்டது சுடலையின் வாழ்வுச் சக்கரம். மேலது கீழாய்… கீழது மேலாய்.

சுடுகாட்டுச் சுடலை அவன். வான் பெரிய கொடை நடக்கும் நாளிலும் பெண்கள் கோயிலுக்கு வர மாட்டார்கள். காது வடித்துப் பாம்படங்கள் போட்ட கிழவிகள் வந்தால் உண்டு. காலனையும் கேள்வி கேட்ட கிழவி உண்டு நம் மூதாய்களில். வெட்டுப்பட்ட வெள்ளாட்டுத் தலையை வண்ணார் தூக்கிப்போவதைத் தவிர்த்து, வேறு எந்தப் பொருளும் ஊருக்குள் கொண்டுபோகப்படுவதில்லை பிரசாதமாகக்கூட பொங்கிப் பொரிக்கும் படப்புச் சோறு போவதில்லை. செந்துளுவன், சிங்கன், மட்டி, ரசகதலி, பாளையங்கோட்டன், பேயன், வெள்ளைத்துளுவன் பழக்குலைகளும் மாம்பழங் களும் நீட்டவாக்கில் பிளந்து, படைக்கப்பட்ட வருக்கைச் சக்கைப் பழங்கள், வெள்ளரி எல்லாமுமே, மறுநாள் உச்சிக்கொடை முடிந்ததும் வந்தோருக்கும் நின்றோருக்கும் வழிப்போக்கருக்கும் வயல்வெளி யோரங்களில் ஆடு-மாடு மேய்ப்பவருக்கும் பங்குவைத்துக் கொடுத்துவிடுவார்கள். அரளியும் பிச்சியும் மாலைகளாக, தாழம்பூவும் கமுகம்பூவும் கொத்துக்களாக, படப்பாகத் துளசியும் வாடிக்கிடக்கும் கனகாலம்.

கிழக்குப் பார்த்த சுடலை. பின்புறம் பூதப்பாண்டியில் கிளை பிரியும் புத்தனாறு. அதன் முதலாம் கண்ணறை, தாழக்குடி வீரகேரளப் பேரேரி. புத்தனாறு கிளை பிரியும் இடத்தில் தாடகைமலை அடிவாசம். பழையாற்றில் ஒரு காலத்தில் தாடகையே கால் நனைத்திருக்கக்கூடும்.

சுடலைக்கு முன்னால் சுடுகாட்டுக் குழிகள் இரண்டு மூன்று… சாதிக்கு ஒன்றாக. சுடுகாட்டுக் காவலில் சுடலை, சிதைத் தீயை உற்றுப் பார்த்தவாறு, ஈமப் புகையை உள்ளிழுத்து சுவாசித்து கருங்கல் மேனியில் சாம்பலாய் சுடலைப் பொடி பூசியபடி…

சுடலை செல்வாக்குடன் நின்ற காலத்தில் ஆண்டுக்கு ஒரு கொடைக்குப் புத்திமுட்டு இல்லை. மாதந்தோறும் கடைசி வெள்ளி முன்னிரவில் சின்னத் தோதில் படுக்கை உண்டு. சுடுகாட்டுச் சுடலை என்றாலும் கோயிலின் உரிமைப்பட்டவர்கள் ஒரு குடும்பத்தினர். குடும்பக்காரர் எவர் வீட்டில் சுகமாகப் பேறு நடந்தாலும், கல்யாணம் தீர்மானமானாலும், சுடலைக்கு படுக்கை உண்டு. ‘கூப்பிட்ட கொரலுக்கு விளி கேட்கும்’, ‘ஆபத்து நேரத்திலே தலை மாட்டுலே வந்து நிக்கும்’ என்று சுடலைக்கு, குடும்பத்தினர் யாவரிடமும் பெரிய அபிமானம். ஆண்டுதோறும் கொடை முடிந்தவுடன், அடுத்த கொடைக்கு வெட்ட என நேர்ந்துவிடும் வெள்ளாட்டு மறி உண்டு. வீட்டுக்குள் அதற்கு சர்வசுதந்திரப் பாத்தியதை. எவரும், ‘ச்சீ, போ வெளியே’ எனச் சொல்ல மாட்டார்கள். அடுத்த நாள் பச்சரிசி மாவுப்புட்டில் போட்டுப் பிசைந்து தின்ன, கனிந்த பேயன்பழம் வாங்கி வைத்திருப்பார்கள். நேர்ச்சை ஆடு வாய் வைத்துக் கடித்துத் தோலோடு தின்னும். `என்னா…சொள்ளமாடனுக்குப் பேயம்பழத்திலே ஆசை வந்திட்டா? சரி சரி தின்னு… உனக்குப் போகத்தான் எல்லாம்’ என்று செல்லம் கொஞ்சுவார்கள் ஆச்சிகள்… பாம்படம் அசைந்தாட.

காலங்காலமாக நின்றுகொண்டிருந்தான் சுடலை… கால் கடுக்க, கால் மாற்றி… கால் மாற்றி. மூவர்ணக் கொடி ஏந்திய கள்ளுக்கடை மறியலையும் பார்த்தான். இரு வண்ணக் கொடி ஏந்திய இந்தி எதிர்ப்புப் போராட்டமும் பார்த்தான். கப்பி ரோடு, தார்ச்சாலை ஆனது. வில் வண்டிகள், ஜக்கடா வண்டிகள் போய் பலவகை கார்களும் குட்டியானை டெம்போக்களும் வந்தன. சைக்கிளில் டபுள்ஸ் போனவரைப் பிடித்து காபித் தண்ணிக்கு வழிபார்த்த போலீஸ்காரர்கள், ஹெல்மெட் அணியாதவரைப் பிடித்து குவார்ட்டருக்குத் துட்டு சேர்த்தனர்.

கொஞ்ச காலமாக முன்னிரவுகளில், மட்டமான மதுக்குப்பிகள் வாங்கி, கடையில் வாங்கிய முட்டை போண்டாவுடனும், வீட்டு அடுக்களையில் களவெடுத்த ஊறுகாயுடனும், சொட்டுக்கூட ஏற்றத்தாழ்வு வராமல் பங்குவைத்துக் குடித்து மதுப் பயிற்சி செய்தனர் யோக்கியப் பெயரிய இளைஞர்கள். காலி போத்தலை, பிளாஸ்டிக் டம்ளர்களை, எச்சிற் காகிதங்களை, சுடலையின் தட்டகத்தில் வீசிவிட்டுப்போனார்கள். பக்கத்து வயல்களில் நாற்று நட, களை பறிக்க, உரம் சுமக்க, தாள் பிடுங்க வந்த பெண்கள், சுடலையின் ஆலமரத்து நிழலில் கால் நீட்டி அமர்ந்து, பித்தளைத் தூக்குவாளியில் கொணர்ந்திருந்த புளித்த பழையது குடித்து, வெற்றிலை சவைத்தனர். அவருள் தீண்டக்காரி எவள் என்ற கணக்கெடுப்பில் நின்றான் சுடலை.

தலையில் இருந்து உதிர்ந்த மயிரெனப் போனோம் என்று தோன்றியது சுடலைக்கு. குடும்பத்தார் கதையே கட்டிலில் இருந்து இறங்கி, திண்ணைக்கு வந்துவிட்டபோது, கோயிலுக்கு எங்கே கொடை கொடுப்பார்கள்?

ஐம்பதாண்டுகள் முன்னர், புன்னார்குளம் கோலப்பப்பிள்ளை வில்லுப்பாட்டு, கை வெட்டும் கணியான், தங்கப்பழம் குழு நையாண்டி மேளம், கும்பாட்டம் உள்கோயில் மேளம், கிடாவெட்ட ஒற்றை முரசு, குரவை, கோமரம், கிடாவெட்டு, அரைக்கச்சை சல்லடம், தோள் கடயங்கள், பாய்ச்சல் கயிறு, பொன்போல் மினுங்கும் திருநீற்றுக் கொப்பரை, வெள்ளி வெட்டுக்குத்தி, காற்சலங்கை, தலையில் வரிந்துகட்டிய பாகை, அதில் இருமருங்கும் செருகிய தாழம்பூக் குறுமடல் கொம்பு… என்ன, என்ன, என்ன, என்ன, வெட்டி விறைத்து நடந்ததும் என்ன? இன்றைய ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினர்போல அன்று மூர்க்க விழி விழித்தவன்தான் சுடலை.

இன்றோ வெள்ளிக்கிழமைகளில் விளக்குப்போட ஆள் இல்லை. குண்டிக்குத் துணியும் இல்லை, கும்பிக்குக் கூழும் இல்லை. எட்டுப் பத்து மாதங்கள் முன்னர் பங்குனி உத்திரத்துக்குப் படுக்கை வைத்தபோது கழுத்தில் போட்ட மாலையின் அரளி எல்லாம் சருகாகி உதிர்ந்து, காய்ந்த வாழை நார் கழுத்தை அறுத்தது. கிழட்டுத் தள்ளை நாயொன்று ஒருநாள் காலடியில் வந்து சோம்பிக்கிடந்தது. ‘சவத்தை சமுண்டித் தள்ளீருவோம்’ என்று தூக்கில் இடது பதம் சறுக்கிக் கொண்டது.

எல்லாம் தாங்கிக்கொள்ளலாம். அந்திக் கடையில் மீன்வாங்கி, மூவந்திக் கருக்கலில் திரும்பிக்கொண்டிருந்த விதவைப் பேரிளம் பெண்ணை, பக்கத்தூர் பிள்ளையார் கோயிலில் சாயரட்சை பூசைசெய்து சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த கிழட்டுப் பூசாரி மறித்து மடக்கியதையும், ஆலமர அடித்தூர் மறைவுக்குக் கூட்டிப்போய் `தேவநாதக் குருக்கள்’ வேலை செய்ததையும், தட்டில் காணிக்கையாகச் சேர்ந்திருந்த சில்லறைகளைக் கொடுத்து அனுப்பியதையும், பார்த்து நின்ற சுடலைக்குக் குறி விறைத்தது. எத்தனை தலைமுறைப் பிரம்மச்சார்ய நோன்பு… பாவம்!

சுயமரியாதைக் கழகங்களின் தகித்த அடர்சாயங்கள் வெளிறி, ஊழல் காரமும் ஒழுக்கமின்மை சாயமும் ஏறி, பகுத்தறிவுப் பாசறைகள் பாஷாணப் பூசணம் பிடிக்க ஆரம்பித்த பின்பு, அனைத்து ஊர் பேய்க் கோயில்களும் முழிப்புப் பெற்றன. அவலம் என்னவெனில், சாதாரண செக்கடிச் சுடலைமாடன் கோயில், சுடலைமாடன் தேவஸ்தானம் ஆனதுதான். எனினும் அவர் ஆடு கோழிக்கு மாற்றாக அரவணைப் பாயசம் கொள்ளவில்லை. ஆங்காங்கே கழுதை மேய்ந்தடைந்த கோயில் திட்டுக்களில் சுற்றுச்சுவர்கள் எடுத்துக் கட்டப்பட்டு, கோயில் புதுக்கப்பட்டு, தமிழ் சினிமா ஆர்ட் டைரக்டர் பாணி வர்ணங்கள் அடிக்கப்பட்டு ஆரவாரம் காட்டி நின்றன.

வீமநகரியில், வேம்பத்தூரில், வீரநாராயண மங்கலத்தில், வீரவநல்லூரில், வெள்ள மடத்தில், இறச்சக்குளத்தில்,ஈசாந்திமங்கலத்தில், ஆண்டித்தோப்பில், பொதேரியில், புத்தேரியில், சந்தைவிளையில், செண்பகராமன் புதூரில், செரமடத்தில் திருப்பதி சாரத்தில், தோப்பூரில், தெங்கம் புதூரில், மாத்தாலில், மணத்திட்டையில், தாழக்குடியில், தெரிசனங்கோப்பில், சீதப்பாலில் என, பல ஊர்களின் கோயில்கள் நன்மை பெற்றன. ஆண்டுக்கு ஒரு கொடை என்பது எந்தச் சுடலைமாடன், புலமாடன், கழுமாடன், பன்றிமாடன், சங்கிலிமாடனுக்கும் கொண்டாட்டம்தான்; பெரிய ஆடம்பரம்தான்.

பண்டைக்கும் பண்டுதொட்டே, சுற்றுவட்டார சுடுகாட்டுச் சுடலைமாடன் சமூகத்தினர் யாவரும் கூடிப்பேச, தேர்தல் காலத்தில் கூட்டணி அமைக்க, ஆட்சியில் பங்கு கேட்க என்று `சுடுகாட்டுச் சுடலை முன்னேற்றக் கழகம்’ ஏற்படுத்தி அனைவரும் மாதம் ஒருமுறை கூடிப்பேசினார்கள். ஒருகாலத்தில் நமது புத்தனாற்றங்கரைச் சுடலைமாடன் சு.சு.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளராக இருந்தவர். இன்று சாதாரண உறுப்பினராகத் தாழ்ந்துபோனார். கொடை நடந்த கோயில்களின் படப்புச்சோறு, `பூம்படப்பு’ என்று பிரசாதம் பங்கிடப்படுகையில் கையேந்தி நிற்க அவருக்கு அவமானமாக இருந்தது. இருப்பத்தேழு வாதைகளுக்கும் தலைவராக இருந்த தட்டகத்திலேயே அவருக்கு இன்று செல்வாக்கில்லை. இல்லாப்பட்டவன் சொல், ஆட்சிப் பீடம் ஏறுமா? ஒருமுறை சு.சு.மு.க ஆட்சிக்குழு பொதுத்தேர்தலிலும் நின்றுபார்த்தார். வாக்குச் சமதானம் 0.00313 எனக் குறைந்துபோயிற்று.

சு.சு.மு.க பொதுக்குழுக் கூட்டம் முடிந்து நள்ளிரவு தாண்டி, பேயும் உறங்கும் நேரத்தில் தனது பீடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் சுடலை. கூடவே அதே தட்டகத்து மற்றுமொரு பிரதான வாதையான கழுமாடனும், பேச்சுத் துணைக்கு… பெருநடைப் பயணத்தில். போகிற வழியில்தான் கோயில் முதலடி வீடு. வீட்டு முன் மூத்த இரு தென்னைகள். வந்த எரிச்சலில் இடதுகையால் ஒரு தென்னையை ஒரே தள்ளலாகத் தள்ளினார். ஊரைத் துயிலெழுப்பும் ஓசையுடன் விழுந்தது தென்னை.

“வே… வே… என்ன காரியம் செய்து போட்டேரு?” என்றார் பதைத்த கழுமாடன்.

வேறு என்ன செய்ய இயலும் கையாலாகாத கோபத்தை. கொடை ஏற்காமல் பட்டினி கிடப்பதுகூடப் பொருட்டில்லை. ஆனால், நாடெங்கும் எல்லா தெய்வங்களுக்கும் விடிகிறது, தனக்கு விடிவும் இல்லை; வெளிச்சமும் இல்லை என்னும் சலிப்பு.

முன்னர் எல்லாம் எவராவது போகும் காரியம் ஜெயமாக, பீடத்தின் முன்னால் ஓட்டைச் செம்புக் காலணாவோ, பித்தளை அரையணாவோ முந்தியில் இருந்த சுருக்குப்பையில் இருந்து எடுத்து சுடலை காலடியில் போட்டுவிட்டு, வாசல் முகப்பு மர அளிச் சட்டத்தில் ஆணியடித்துக் கொச்சக் கயிற்றில் கொடுக்கப்பட்டுத் தொங்கும் தேங்காய் சிரட்டையில் கைவிட்டு, விபூதி எடுத்துப் பூசிவிட்டுப் போவார்கள். வியாச்சியம் ஜெயித்ததோ, பரீட்சையில் தேறினார்களோ, சுகப்பிரவசம் ஆனதோ, வாங்க அல்லது விற்கப்போன வஸ்து காரியம் நடந்ததோ, நாமறியோம்! எனினும் எவராலும் தீண்டப்படாமல் அந்தக் காசுகள் கிடந்தன. இன்றோவெனில் ஆட்டுப்புழுக்கைகளே கிடக்கின்றன.

நேருக்கு நேர் நின்று தெறித்துப் பார்த்தவர் ரத்தம் கக்கிச் செத்த கதையும், சுடலையின் நடமாட்டம் இருந்த உச்சிக் காலங்களில் குறுக்கே போன கர்ப்பிணிகளின் கருச் சிதைந்த கதையும் இன்று பழங்கதைகளும் மூடநம்பிக்கைகளுமாயின. வில்லுப்பாட்டும் கணியான் கூத்தும் கேட்ட சுடலையின் செவிப்பறைகள், காதைக் கிழிக்கும் குத்துப் பாட்டுக்களில் அதிர்கின்றன. எங்கேயாவது பக்கத்து ஊரில் நடக்கும் கொடையின் வில்லுப்பாட்டின் வீசுகோல் சத்தமும் உடுக்கின் சுண்டும் கட்டைத் தாளமும் பானைத் தாளமும் அநாதமாய்க் காதில் விழும்போது கோழிக்காமம் போலச் சுடலைக்கு மெய் விதிர்க்கும். என்ன செய்யலாம் அந்தத் தவிப்பை?

பக்கத்துப் பீடம் கழுமாடன் கேட்டார் ஒரு நாள், ‘`இப்பிடி ஆத்தமாட்டாம கெடந்து ஆ0வலாதிப் படுகதுக்கு, எங்கயாவது பொறப்பட்டுப் போகப்படாதா?” என்று.

என்ன செய்ய இயலும்? நிலையம் விட்டுக்கொடுத்த காட்டாக்கடை மாந்த்ரீகன் வள்ளிசாக பீடத்தோட வைத்துத் அறைந்து விட்டான் சுடலையை.

“சும்ம நிண்ணுக்கிட்டிருந்தா, ஒரு பீப் ஆண்டியும் கூட்டாக்க மாட்டான் வேய்! உம்மகூடக் கெடந்து நம்ம பொழப்பும் நாறுகு! பவரைக் காட்டணும் வே! அப்பந்தான் திரும்பிப் பாப்பானுவோ!’’ என்றார் கழுமாடன்.

“பவரைக் காட்டவா?”

“ஆமாங்கேன்… அன்னைக்கு நம்ம மொதலடி வீட்டு வயசான தென்னம்பிள்ளையை முறிச்சுப் போட்டேருல்லா?”

“ஆமா… அது ஒரு வெளத்திலே செஞ்சேன்.”

“அது நீருதான் செஞ்சேருனு அவருக்கு எப்பிடித் தெரியும்வே? சூச்சுமம் காட்டணும்… இது நம்ம சொடலை வேலையாக்கும்னு…”

“ஓ! அதையா பவருங்கேரு?”

“ஆமா… பின்னே! அதியாரம்… அதைக் காட்டணும். சும்மா நடந்து போறவனை அடிக்காட்டா போலீஸை மதிப்பானாவே? காட்னாத்தான் ஒலகம் பயப்படும். ஆயிரம் பேருக்கு ஒரு காக்கி உடுப்பும் தொப்பியும் லத்தியும் வெச்ச போலீஸ் போரும்… பயப்படுகாம்லா? எதுக்கு? அதாம் பவரு…”

“அப்பம் பவரு காட்டணும்ங்கேரு?”

“ஆமா…”

“சரி! காட்டீரலாம்… அப்பம் காலம்பற வரப்பட்ட ஆராம்புளி திட்டுவெள பஸ்ஸைத் தூக்கி மறிச்சிரட்டா? சவம், ஓட்டை ஒடசல் ஈயம் தகரம் வண்டிதானே!’’

“பேத்தனமாப் பேசப்பிடாது. பஸ் மறிஞ்சுன்னா என்னா? `பிரேக் பிடிக்லே’ம்பான், `மாடு குறுக்க வந்திட்டு’ம்பான், `ஓட்டுனவன் தண்ணி போட்டு பஸ்ஸை ஆத்திலே மறிச்சிட்டான்’ என்பான்… அதுக்கும் சொடலைக்கும் என்ன பெந்தம்?”

“அதுக்கு?”

“அதை சுடலைதான் செஞ்சாருனு சூச்சுமம் காட்டணும். இல்லாட்டா ஒம்ம மேலே பயம் வருமா?”

“அப்பம் கோமரத்தாடிக்குச் சொப்பனத்திலே போயி நின்னு ஆடட்டா?”

“அதெல்லாம் பழைய டெக்னிக்கு! `கோமரத்தாடி ராத்திரி ரெண்டு தேங்காத் தோசை கூடுதலாட்டுத் தின்னுட்டாரு. சவம் செமிக்குமா? பெரண்டு பெரண்டு படுத்து வயத்த வலிச்சு அவயம் போட்டிருப்பாரு’ என்கிற மாதிரி நாலு பேரு சொல்வான் வேய்!”

“அப்பம் மொதலடிக்குப் பொஞ்சாதி மேலே எறங்கீரட்டா?”

“வேய் சொடல! ஒமக்கு இத்தனை காலம் இல்லாம புத்தி ஏம்வே இப்பிடிப் போகு? அவுளுக்கு இப்பமே அறுவத்தஞ்சு வயசிருக்கும்! தோளுவலி, இடுப்புவலி, முட்டுவலினு கெடக்கா… அவ மேல போயா?’’

“வே வே வே… கழுமாடா… நான் என்ன சொல்லுகேன்? நீரு என்ன மனசிலாக்கீட்டுப் பேசுகேரு.. சரி, நீரே ஒரு ஐடியா சொல்லும்!’’

“மொதலடி வீட்டிலே பொண்டாட்டி மேலே, மருமக மேலே போய் எறங்கீட்டுக் காரியமில்லே பாத்துக்கிடும். அவுரு ஒவ்வொரு பிள்ளை கலியாணத்துக்கும் ஒவ்வொரு கோட்டை விதைபோடு வித்து, இப்பம் கோமணமும் திருவோடுமாட்டு நிக்காரு. பட்டினத்தாரு போல… `காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கேண்…’னு பாட்டும் படிக்காரு… எப்பிடிப் போட்டு நெருக்கினாலும் கொடை எப்பிடிக் கழிப்பாரு? பஸ்ஸை மறிச்சு ஆத்துல தள்ளினா, நாலு ரூவா டிக்கெட் வாங்கிட்டுப் போகப்பட்டவன் உமக்கு கொடை நடத்துவானா? ஆலோசிச்சுப் பாரும்…’’
கறங்கு – சிறுகதை

“பொறவு நீரு போவாத்த ஊருக்கு என்ன மயித்துக்கு வழி சொல்லுகேரு?”

“சொல்லுகதைப் பொறுதியாட்டுக் கேளும். அம்மா அறிவிப்புக்கு கலைஞர் மறுப்பு அறிக்கைபோல மாத்தி மாத்திக் குறுக்கே பேசப்பிடாது… வெப்ராளப்படாமக் கேளும். வெள்ளி, சனிக்கிழமை சாயங்காலமானா வெள்ளை கலர்லே ஒரு ஸ்கார்ப்பியோ இந்த வழியாட்டுக் கெழக்கே போகும் பாத்திருக்கேரா?”

“சனிக்கெழமைண்ணா காரிக்கெழமையா?”

“ஆமா! கட்சிக்கொடி கெட்டீட்டு, ஞாயித்துக் கெழமை காலம்பற அஞ்சு மணிக்குத் திரும்பிப் போகும்லா? `எம்மெல்லே போறாம்’னு சொல்லுவா!’’

“அவனேதான்… டிரைவருக்குப் பக்கத்திலே இருப்பான். கட்சிக்கரை போட்ட வேட்டி, வெள்ள முழுக்கைச் சட்டை, அதை முட்டி வரை மடிச்சுவிட்டிருப்பான். அம்மாசி இருட்டுன்னாலும் கூலிங்கிளாஸ் போட்டிருப்பான். வலது கையிலே பத்து பவுன்லே பிரேஸ்லெட், இடது கையிலே ரோலக்ஸ் வாச்சு, கழுத்திலே தாலி மாதிரி கட்சிச் சின்ன டாலர் போட்டு இருவது பவுன்லே சங்கிலி… பெரிய தொந்தி…

மொகத்திலே கடுகு போட்டா உடனே பொட்டுகது மாதிரி எப்பவும் கடுப்பு..”

“சரிதான். பாத்தா எமதர்மனுக்கு வாகனம் மாதிரி இருப்பான்.”

‘`அவனேதான் லெக்காளி! அதுக்கு என்னத்துக்குத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகேரு? நேரடியா டெல்லி எருமைன்னே சொல்லும்!’’

“சரி! அவனுக்கு என்னா? பொடதியைத் திருப்பீருவமா, முன்னக் காட்டி?”

“அதெல்லாம் வேண்டாம். இங்கேருந்து நாலு மைல் கெழக்கே, ரோட்டை ஒட்டி, பெரிய பங்களா… மூணு ஏக்கர் தோட்டத்துக்கு நடுவிலே. சுத்தியும் பெரிய கல்லுக்கட்டுக் காம்பவுண்டு…’’

“ஆமா… ஏதோ கல்லுக்குவாரி ஓனருக்கு கெஸ்ட் ஹவுஸ்னு கேள்விப்பட்டிருக்கேன்.”

“அதேதான். இவன் இங்கேருந்து போவான்; கான்ட்ராக்டருக்குக் கொழுந்தியா, அவளையும் அவன்தான் வெச்சிருக்கான், கெழக்கே இருந்து மேக்க வருவா… ஆடி கார்லே.’’

“ஆமா, அதுக்கென்னா?”

“நீரு போயி அவ மேல எறங்கணும்!”

“ஓய்… என்னா வெளையாடுதேரா? இந்தக் கெளட்டுப் பிராயத்திலே… தரமாவே நான் அவளுக்கு?’’

“அதைச் சொல்ல வரல்லே வே! `காஞ்சனா’னு ஒரு படம் வந்திருக்கு. ரெண்டாம் பாகமும் வந்தாச்சு. மூணும் வரப்போகாம். அது எங்கயாம் இன்னும் ஓடிட்டுத்தான் இருக்கும். ரெண்டையும் பாரும். மனசிலாகல்லேன்னா கூட ஒருக்கப் பாரும்.”

“பாத்து?”

“எம்மெல்லே பங்களாவுக்குள்ள வந்து, குளிச்சு, கட்டம் போட்ட சாரம் உடுத்து, சென்ட் அடிச்சு, குவார்ட்டரும் கவுத்தி, கோழி பிரியாணியும் பொரிச்ச மீனும் தின்னுப்புட்டு, கான்ட்ராக்டர் கொழுந்தியாளோட சல்லாபமா இருப்பான்.”

“சல்லாபம்னா என்னவே, கழுமாடா?”

“இப்பிடி பால்குடி மாறாத பச்சப்புள்ளயா இருக்கேரே வே சொடலை? சல்லாபம்னா… ம்… உல்லாசமா, சோபனமா… ச்சே! எல்லாம் சம்ஸ்கிருத மாட்டுல்லா வருகு. ம்… கலவித்தொழில் பழகத் தயாராயிருப்பான்.”

“ம்… சரி…”

“அப்பம் பாத்து மத்தவ மேல எறங்கும்.”

“எறங்கி?”

“‘காஞ்சனா’ ஸ்டைல்லே மொதல்ல அரைக்குப்பி விஸ்கி. ஒரு காலை குத்துக்கால் போட்டு உக்காந்து நாலு பிளேட் கோழி பிரியாணி… மூணு லெக்பீஸ் பொரிச்சது…’’

“ச்சீ… சுடுகாட்டுச் சொடலையை எச்சி திங்கச் சொல்லுகேரா?”

“என்ன வே எச்சி? செங்கோட்டை ஆவுடையக்கா பாட்டு படிச்சிருக்கேரா? தேனு, வண்டுக்க எச்சி… தண்ணி, மீனுக்க எச்சி… பட்டு, புழுவுக்க எச்சி… முத்தம், பொம்பளைக்கு எச்சி… பாலு, கண்ணுக் குட்டிக்கு எச்சி… ஒமக்கு வாற்றுச் சாராயம் காச்சப்பட கோடைத்தண்ணி, கிருமிக்கு எச்சி…’’

“போரும் வே! நிறுத்தும். கொமட்டிக்கிட்டு வருகு.’’

“கொடை வேணும்னா என் சொல்லுப்படி கேளும்.’’

“செல்லங்கொஞ்சாமச் சொல்லும் வே!’’

“அவ மேல எறங்கி, புடவையைத் தொடைக்கு வழிச்சுக்கிட்டு, மொரட்டு ஒத்த மொலய வெளீல காட்டீட்டு, நாக்கைத் துறுத்தீட்டு, கண்ணை உருட்டி முழுச்சுக்கிட்டு, அவ உருவத்துக்குள்ள இருந்து, ஒம்ம டப்பிங் கொரல்லே கத்தணும்.”

“தெரக்கத வசனமே எலுதீட்டீரா?”

“ஆமா! அந்த எம்மெல்லே பேரென்ன வே?”

“பூதை பூந்தமிழ் பூபாலன்.”

“அதென்னவே பூதை?”

“அது பூதப்பாண்டி ஊருக்கு சுருக்கம்!”

“ஓ… இந்தச் சுடுகாட்டு முக்கிலே இருந்துக்கிட்டு என்னல்லாம் வே தெரிஞ்சுவெச்சிருக்கேரு!”

“அத விடும். கொழுந்தியா உடம்பிலேருந்து, உம்ம குரல்லே பேசணும்.”

“ஆட்டும்… டயலாக்கைச் சொல்லும்” என்றார் சுடலை ஆர்வமாக.

“டேய்… பூதை பூந்தமிழ் பூபாலா… ஆத்தங்கரை சுடுகாட்டுச் சுடலை வந்திருக்கேன்டா. என்னனு நெனச்சுப்போட்டே? உனக்க காரு முக்குத் திரும்பச்சிலே பொறத்த ஏறி உட்கார்ந்தவன்லா? வந்து இப்பம் உனக்க நைஸ் மேல எறங்கீருக்கேன்…”

“இவ்வளவு நீண்ட வசனம் எப்பிடிவே கழுமாடா மனப்பாடம் செய்யது?”

“அதுக்கு நானும் கூட வருவேன்லா! பிராம்ட் செய்திரலாம்!”

ஆலமரக் கூட்டம் காற்றின் சலசலப்பற்று காட்சியை உள்வாங்கிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரைக் கட்டைத் தென்னம்பிள்ளையில், ஆலமரக் கிளையில் இருந்து மரநாய் ஒன்று இறங்கிக்கொண்டிருந்தது கருக்குக் குடிக்க. கோயில் தட்டகத்தில் எலிகளின் நடமாட்டம். ஆல் இன்னும் பழுத்து உதிர ஆரம்பிக்கவில்லை. புதர்களுக்குள் வெருகுப் பூனை நடமாட்டம்.

திட்டமிட்டப்படி, அடுத்த ஒடுக்கத்திய வெள்ளிக்கிழமை, ஸ்கார்ப்பியோ அந்த வழியாகத் திரும்பியபோது சுடலைமாடனும் கழுமாடனும் தொற்றிக்கொண்டனர். ஒத்திகை பார்த்த காட்சி. வைப்பாட்டி மேல் இறங்கினார் சுடலை. பதறிப்போய் நின்றார், கட்சியில் பூ.பூ.பூ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பூதை பூந்தமிழ் பூபாலன். பூபாலன், பூபாலனார் ஆகச் சில காலம் போகவேண்டும்.

குழறிக் குழறிக் கேட்டார் எம்.எல்.ஏ.

“… இங்க… இஞ்ச என்னத்துக்கு இப்பம்? கட்சி மேலிடத்திலே சொல்லி நடவடிக்கை எடுப்பேன்.சொல்லி நடவடிக்கை எடுப்பேன்!”

“அதை போலீஸ் ஸ்டேஷன்லே, தாலுக்கா ஆபீஸ்லே சொல்லுவே. எனக்க மேலிடம் கைலாச பர்வதம். போறியா டே?’’ என்று உறுமினார் சுடலை… வைப்பாட்டி வாய்மொழியாக, தனது சொந்தக் குரலில்.

கனத்த, பாரிய, இரட்டை நாடி, பயில்வான், எருமை உடம்பு வெடவெட என நடுங்கியது. வேட்டியின் குறிப் பிரதேசத்தில் ஈரம் படர்ந்தது. நீட்டி, முழக்கி, தலைமை நாமாவளி சொல்லிப் போற்றி அகவல் பாடித்தான் பழக்கம் சட்டசபையில். அல்லது லோக்கல் பொறுக்கி பாஷை. சுடலையிடம் என்ன மொழியில் உரையாட எனத் தெரியவில்லை. எனினும் சமகால அரசியல் நாகரிகம்போல, இடுப்பு வளைத்துக் குனிந்து, கைகளைக் கட்டி, நேரடியாகக் கண்களையோ, முகத்தையோ பார்க்காமல்…

“சரிங்க இனமான சுடலைக் கடவுளே! இப்பம் நான் என்ன செய்யணும் இவளை விட்டுட்டுப் போறதுக்கு?”

“சொன்னதைச் செய்வியா?”

“செய்கிறேன் தலைவரே!” சொல்லி விட்டாலும் எம்.எல்.ஏ பூ.பூ.பூ-வுக்கு அடிமனதில் கிலி படர்ந்தது, ஒரு கன்டெய்னர் கேட்டுவிடுவாரோ என்று. சுடலை, கொஞ்ச காலமாக நியூஸ் சேனல்கள் பார்ப்பதில்லை.

“உறுதியாச் செய்வேரா?”

“ஒறப்பு, காட் பிராமிஸ்’’ என்று சங்கைத் தொட்டுச் சொன்னார்.

“பங்குனி மாசம், உத்திரம் கழிஞ்சு, எனக்கொரு கொடை கொடுக்கணும். வில்லுப்பாட்டு, கணியான், நையாண்டி மேளம், கும்பாட்டம், மாமிசப் படப்பு, பூப்படப்பு, உச்சிக்கொடை, வெள்ளாட்டுக்கிடா, ஒண்ணும் கொற இருக்கப்பிடாது…”

“ஒண்ணும் கொற இருக்காது!”

அசரீரியாக “ஆனா, நீங்க கடவுளை நம்ப மாட்டேளே!” என்றார் கழுமாடன்.

“அதெல்லாம் மலையேறி முப்பது வருசமாச்சு. இப்பம் எங்க குலதெய்வம் வேற, பூடங்கள் வேற, குத்தாட்டம் வேற” என்றார் பூ.பூ.பூ.

குரலைத் தாழ்த்திக்கொண்டு சுடலை சொன்னார், “சரி, அப்படியே ஆகட்டும். பங்குனி உத்திரத்துக்கு கால் நாட்டீரு என்னா?” மலையும் ஏறினார்.

மெதுவாகக் கண்விழித்த வைப்பாட்டி, “என்னங்க… உடம்பு என்னமோபோல இருக்கு. ராவா ஒரு லார்ஜ் ஊத்துங்க” என்றாள் மாமன்ற உறுப்பினரைப் பார்த்து!

– ஆகஸ்ட் 2016

Print Friendly, PDF & Email

1 thought on “கறங்கு

  1. மிகச் சிறப்பான சிறுகதை
    சிந்திக்க வைக்கக் கூடிய கதைக் கரு
    சைக்கிளில் டபுள்ஸ் போனவரைப் பிடித்து காபித் தண்ணிக்கு வழிபார்த்த போலீஸ்காரர்கள், ஹெல்மெட் அணியாதவரைப் பிடித்து குவார்ட்டருக்குத் துட்டு சேர்த்தனர். கால மாற்றத்தை கண்ணுக்கு முன் காட்டிய வரிகள். அற்புதம்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *