1983, ஜூலை 29ஆம் திகதி.
அந்த நாளை மறந்து விட வேண்டுமென்று எத்தனை தினங்கள் நான் நித்திரையின்றி உழன்றிருக்கின்றேன். என்னை, என் குடும்பத்தை சின்னாபின்னமாக சிதைத்த நாள். என் நெஞ்சைக் கீறி, என் கனவுகளைக் கலைத்து, என் கற்பனைகளை மண்ணோடு மண்ணாக்கி இப்போதும் என் கனவுகளில் சிவப்பு இரத்தம் கொப்பளிக்க என்னை மீண்டும் மீண்டும் சித்திரவதை செய்து சிறுகச் சிறுகக் கொன்று கொண்டிருக்கும் கரிய நாள்.
அந்த நாளை நினைத்துப் பார்க்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அவை நினைத்துப் பார்த்து பூரித்துப் போகும் நினைவுகளாக இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை, வாழ்வின் வசந்தமயமான நினைவுகளை விட நெஞ்சை வதைத்து வாட்டும் கோர நினைவுகளே மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன. இந்த நினைவுகளும் அப்படித்தான். மனதின் ஆழத்தில் இறுகப் பதிந்து கொண்டு என் எதிரிகளாக என் தலை மீது அமர்ந்து கொண்டு என் மார்பைக் கீறிக் கீறி ரணகளமாக்குகின்றன. வானுயர செந்நீரைப் பீறியடிக்கச் செய்து கோரக்காட்சிகளையே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
இப்போதும் கூட என் சுயநலத்துக்காகத்தான் இவற்றை என் மனதில் இருந்து கொட்டி விடத் தீர்மானித்தேன். இப்படிப் பல முறை நான் முயற்சித்திருக்கிறேன் . ஆனால் அந்தப் பாழாய்ப் போன நினைவுகள் என் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கின்றன.
* * *
அப்போது எனக்கு இருபத்து மூன்று வயது முடிந்து இருபத்து நான்கு வயது ஆரம்பமாகியிருந்தது. அப்போதுதான் பல்கலைக்கழகக் கல்வியை முடித்து தனியார் நிறுவனமொன்றில் சந்தைப்படுத்தல் ஆய்வு அலுவலராக உத்தியோகத்தில் சேர்ந்திருந்தேன். வாழ்வில் பல துன்பங்களையும், வறுமையின் கொடுமைகளையும், மேடு பள்ளங்களையும் அச்சிறு வயதிலேயே அனுபவித்து வளர்ந்திருந்த என்னில் ஒரு முரட்டுச் சுபாவமும், அநீதிக்கெதிரான போர்க்குணமும், தைரியமும், துணிச்சலும், உலகின் சகல அதர்மங்களையும் அழித்தொழித்து விட வேண்டும் என்ற ஓர்மமும் என்னை தன்னம்பிக்கையின் சிகரத்துக்கு இட்டுச் சென்றிருந்தன. காலம், இளமைத் துடிப்பு என்ற வெட்டறிவாளையும் என் கைகளில் தந்திருந்தது. அநீதி எங்கு தோன்றினாலும் அதனை அறுத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகமும் என்னுள் கிளர்ந்தெழுந்திருந்தது.
மத்திய மலை நாட்டின் வளர்ச்சியே கண்டிராத பின்தங்கிய தேயிலைத் தோட்டமொன்றில் பிறந்த எனக்கு சுற்றியிருந்த சிங்களக் கிராமங்களே விளையாட்டுக் களங்களாக இருந்ததால் சிங்கள நண்பர்களே அதிகமிருந்தனர். சரளமாக சிங்களம் பேசும் என்னை சிங்களவனா தமிழனா என்று பிரித்துப் பார்க்க கடினமாக இருக்கிறது என சில நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.பல்கலைக்கழகத்தில் என் ஆங்கிலப் புலமையையும் வளர்த்துக் கொண்டிருந்தேன். இந்த மும்மொழிப் புலமையே எனக்கு சந்தைப்படுத்தல் ஆய்வு உத்தியோகத்தைப் பெற்றுக் கொடுத்தது. எங்கள் சந்தைப்படுத்தல் ஆய்வுக் குழுவில் நாங்கள் பன்னிரண்டு பேர் அங்கம் வகித்தோம். நான் ஒருவன் தமிழன். இன்னுமொருவன் முஸ்லிம். ஏனையவர்கள் சிங்கள இளைஞர்கள். நாங்கள் ஒரு நல்ல நண்பர்கள் குழுவாக இயங்கினோம். எனினும் எனது யதார்த்தமான திறமைகள் ஏனையோர் மத்தியில் பளிச்சிட்ட போது எங்கள் முகாமைத்துவப் பணிப்பாளர் அதனை அடிக்கடி சிலாகித்துப் பேசிய போது ஏனையவர்கள் மத்தியில் அது என் மீது பொறாமைத் தீயைத் தூண்டியது. தொடர்ந்தும் முகாமைத்துவப் பணிப்பாளர் என்னுடன் மிக நட்பாக இருந்தமை ஏனையவர் மனதை உறுத்தியது.
கொழும்பு நகரையும், சுற்றுப்புற சிறு நகர்களையும் சுற்றிவந்து எங்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட எங்களுக்கு விசாலமான, வசதியான வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது. அநேகமான நேரத்தை நாங்கள் கொழும்பு நகர வீதிகளிலும், தொழிலாளர்கள் திரளாக பணியில் ஈடுபட்ட தொழிற்சாலைகளிலும் வினாக்கொத்துக்களுக்கு விடைதேடி ஆய்வில் ஈடுபடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தோம். வாழ்வில் கிடைத்த முதல் தொழில், குதூகலமான நண்பர் குழாம். அது ஒரு பொற்காலம்.
* * *
முதல் முறையாக தொழில் ஒன்று செய்து, மாதா மாதம் கை நிறைய சம்பளம் வாங்கி, சொந்தப் பணத்தில் செலவு செய்து ஜீவித்த வாழ்வின் அந்த இன்பத்துள்ளல் எத்தனை இனிமையானது. எல்லார் வாழ்விலும் அத்தகைய காலம் ஒன்றிருந்திருக்கத்தான் செய்யும். ஆனால் எனக்கு அந்த செங்கதிரோனின் பொற்கிரணங்கள் பரப்பிய பொற்காலம் சுமார் ஏழு மாதங்கள் மட்டுமே நீடித்தது. 1983 ஜனவரி முதலாம் திகதி ஆரம்பமான எனது பொற்காலம் 1983 ஜூலை 23ஆம் திகதி முற்றுப் பெற்றது. அன்று தான் தமிழ் மக்கள் வாழ்வில் பெரும் பள்ளத்தையும், ஆழமான வடுவையும், சிங்கள இனவாதிகளின் சகிக்க முடியாத பேயாட்டத்தின், கருஞ் ஜூலையின் முதல் கரிநாள் ஆரம்பமாகியது.
அன்றைய காலைப் பொழுது எனக்கு வழக்கமானதாகவே இருந்தது. அண்மைக் காலமாகவே நாட்டில் நிலவிய இன முறுகல் காரணமாகவும், வடக்கில் முடுக்கி விடப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும் நாட்டில் ஆங்காங்கே இன வன்செயல்கள் வெடித்த வண்ணமே இருந்தன. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் இனக்கலவரம், அதனைத் தொடர்ந்து 1978, 1980, 1981 ஆகிய ஆண்டுகளின் பரவலான இன வன்செயல்கள் கண்டியிலும், இரத்தினபுரியிலும் மற்றும் பல மலையகத்தின் நகர்களிலும் ஏற்கனவே இரத்தக் களறிகளை ஏற்படுத்தியிருந்தன. அவற்றாலெல்லாம் மலையக மக்கள் சொல்லவொண்ணா துன்பங்களை அனுபவித்திருந்தாலும் யுத்த அழிவுகளுக்கு மத்தியில் அவற்றை யாரும் பெரிதாகப் பேசவில்லை. அதன் காரணமாக மலையக மக்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட்டுப் போனரேயன்றி அதற்கெதிரான குரல்கள் எங்குமே எடுபடவில்லை. இனமுறுகல் கடுமையாக ஏற்பட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் விவாதிக்கப்பட்ட போதெல்லாம் மலையக மக்களுக்கான தீர்வு பற்றி ஒருவரும் வாய் பேசாதிருந்தனர். யுத்தம் முடிந்த பின்னரும் இன்றும் கூட மலையக மக்களின் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
எனக்கும் இத்தகைய சம்பவங்கள் எல்லாம் பழக்கப்பட்டுப் போயிருந்தன. என்னிடமிருந்த துணிச்சல், சிங்கள மொழி வளம் எல்லாம் இணைந்து இவற்றைப் பொருட்படுத்தாத ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன. அன்று எங்கள் சந்தைப்படுத்தல் ஆய்வுக்குழுவினர் பாணந்துறைப் பிரதேசத்துக்கு செல்ல ஏற்பாடாகி இருந்தது. நேற்றைக்கு முந்தைய தினம் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பால் பதின்மூன்று இராணுவ வீரர்கள் இறந்து போய் விட்டனரென்றும், அவர்களின் இறுதிக் கிரிகைகள் கொழும்பு பொரளை மயானத்தில் இடம்பெறவிருந்ததால் இன வன்செயல்கள் இடம்பெறலாம் என்ற செய்தி பரவலாக அடிபட்ட போதும் அதனை ஒரு எச்சரிக்கையாகவும், பயப்படத்தக்கதாகவும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல வேலைக்குச் செல்லத் தயாரானேன். அன்றும் எங்களுக்கென வழங்கப்பட்டிருந்த வாகனமும் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்தது. நானும் நண்பர்கள் குழாத்துடன் இணைந்து கொண்டேன். நாங்கள் காலி வீதியூடாக பாணந்துறைக்குச் சென்றோம்.
அந்த காலை வேளையில் எல்லாமே வழமை போல் தான் நடந்து கொண்டிருந்தன. வழியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற்றதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. நாங்கள் வழமை போல் எங்கள் எங்கள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சுமார் பதினொரு மணியளவில் “”நிலைமை சரியில்லை என்றும் பொரளை கனத்தையில் வெடிகுண்டில் இறந்த இராணுவ வீரர்களுக்கு இறுதி மரியாதை செய்யச் சென்றவர்கள் ஊர்வலமாகச் சென்று வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பல தமிழ்க் கடைகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளதென்றும் எங்களை திரும்பி வந்து விடுமாறும்” தலைமையகத்தில் இருந்து எங்கள் முகாமையாளர் பணிப்புரை தந்திருந்தார்.
நாங்கள் திரும்பி வரத் தீர்மானித்த போதும் என்னிலோ எங்கள் குழுவினரிடமோ எந்தவிதமான பதற்றமோ கலவரமோ தோன்றவில்லை. இளமையின் உச்சத்தில் இருந்த போது குழுவினர் ஒரு பயமும் அறியாமல் சிரித்துப் பேசி தமது குரங்குச் சேட்டைகளை செய்த வண்ணமே வந்தனர். எனினும் அதன் பின் தொடர்ச்சியாக ரேடியோ மூலமும், தொலைபேசி வாயிலாகவும் கிடைத்த செய்திகள் எங்களுக்குள் ஒரு மௌனத்தை ஏற்படுத்தியிருந்தன. வெள்ளவத்தையில் பல தீ வைப்புச் சம்பவங்களும் கொழும்புக் கோட்டை, மெயின் வீதி ரெக்லமேசன் வீதி என்பன பற்றிக் கொண்டு எரிந்தன. அப்போதும் எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை. என்னைச் சுற்றி பத்து சிங்கள நண்பர்கள் இருக்கின்றனர் என்ற துணிச்சலாக இருக்கலாம்.
இருந்தாலும் என்னை அவர்களுடன் அழைத்துப் போவது சங்கடத்துக்குரியதாக இருந்திருக்கலாம் என்று எனக்குப் பின்னர் தோன்றியது. நாங்கள் கொழும்புக் கோட்டையில் துறைமுகத்துக்கு சற்று சமீபமாக இருந்த வழமையாக தேநீர் அருந்தும் ஹோட்டலான “கொழும்பு பிளாஸா’ வுக்கு சென்று தேநீர் அருந்தினோம். அங்கே சுற்றிவர பெரும் கலவரம் நிகழ்ந்து கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. மெயின் வீதி ஆரம்பிக்கும் இடமும், ரெக்லமேஷன் வீதி இரண்டு புறமும் வானளாவ தீ எரிந்து கொண்டிருந்தது. இடையிடையே வெடிச் சத்தங்கள் கேட்டன. யார் சுடுகிறார்கள் என அனுமானிக்க முடியவில்லை. எனக்குள் முதற் தடவையாக சற்று பதற்ற நிலை தோன்றியது. அதனை நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
சிறிது நேரம் சென்றதும் நண்பர்கள் நிலைமையை ஆலோசித்துப் பார்த்தனர். வாகனங்களில் செல்வோரை இறக்கி தேசிய அடையாள அட்டையை பரிசோதித்த பின்னர் தமிழர் என்று தெரிந்தால் தாக்கப்படுகின்றனர் என தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து என்னை அவர்களுடன் அழைத்துச் செல்வது பாதுகாப்பல்ல என்று கூறிய நண்பர்கள் தாங்கள் தலைமையகத்துக்குச் சென்று எனக்கு வேறு பாதுகாப்பான வாகனம் அனுப்புவதாகக் கூறி எங்கேயும் போகாமல் இருக்கும் படி பணித்து விட்டு அவர்கள் சென்று விட்டனர். அந்த இடமும், அங்கிருந்தவர்களும், முகாமையாளரும் எனக்குப் பரிச்சயமானவர்களாதலால் எனக்கு அவர்கள் தீங்கு விளைவிக்கமாட்டார்கள் என என் மனது கூறியது.
வெளியில் கலவரங்கள் மேலும் அதிகரித்துக் கொண்டிருந்தன. நான் செய்வதறியாது திகைத்து என்னை அழைத்துப் போக வாகனம் வராதா என்று காத்திருந்தேன். ஏன் இன்னும் வாகனம் வரவில்லை என்று ஒரு கட்டத்தில் சந்தேகம் எழுந்தது. விசாரிக்கலாம் என்று நினைத்து ஹோட்டல் முகாமையாளரின் உதவியுடன் எனது சந்தைப்படுத்தல் ஆய்வு முகாமையாளருடன் தொடர்பு கொண்டேன். அவர் அதிர்ச்சியும் பதற்றமும் கலந்த குரலில் பேசினார். என்னை பத்து நிமிடம் பொறுக்கும்படியும் தான் வந்துவிடுவதாகவும் கூறினார்.
அவருடன் பேசிய பின் எனக்கு ஒரு விடயம் சட்டென விளங்கியது. நான் என்னுடன் வந்த நண்பர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த பதினொரு பேரும் பாதுகாப்புடன் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். அதிலும் அத்தகைய ஒரு இக்கட்டான கையறு நிலையில் என்னை பரிதாபத்துக்குரியதாக்கிய உணர்வு, அவர்கள் என் நிலைபற்றி தலைமையகத்துக்கு அறிவிக்கவில்லை என்ற விடயமாகும். நான் அதன் பிறகும் பட்ட துன்பங்களை விட அன்று அவர்கள் இழைத்த நட்பின் துரோகம் எப்போதும் என்வாழ்வில் ஆறாத புண்ணாகவும் , நட்புக்கு இடமற்றதாகவும் ஆக்கியது.
எனது இரத்தம் பதற்றத்தாலும் அவர்கள் செய்த துரோகத்தாலும் எனது மதிப்புக்குரிய முகாமையாளர் மீதும் சந்தேகம் கொள்ள வைத்தது. அவர் வருவாரா என்று நம்பிக்கையற்ற நிலையில் நான் தவித்துக் கொண்டிருந்த போது அவர் வந்தார். எனது எல்லாப் பயமும் உடனேயே சூரியனைக் கண்ட பனி போல் விலகிப் போய் விட்டன. எனக்கு பழைய தைரியம் வந்து விட்டது. அவர் என்னைத் தோளைத்தொட்டு அழைத்துச் சென்று தனது வாகனத்தின் பின்புறத்தில் ஏற்றி பயப்பட வேண்டாமென்றும், கூடிய மட்டும் சீட்டுக்கடியில் தாழ்ந்து படுத்துக்கொள்ளுமாறும் கூறினார். அது ஒரு பெரிய விசாலமான ஆடம்பர வாகனம். சுற்றிலும் சாயம் பூசப்பட்ட கண்ணாடிகள்.யார் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரியாது. கீழே படுத்துக்கொள்ள வசதியாக இடமிருந்தது. நான் அடியில் முடங்கிக் கொண்டேன்.
எங்கள் முகாமையாளருக்கு நான் தங்கியிருந்த வீட்டைத் தெரியும். முன்னரும் அங்கு வந்து சில தடவைகள் என்னை அழைத்துச் சென்றுள்ளார். வாகனம் வேகமாக நான் வசித்த ராஜகிரிய நாவல வீதியை நோக்கிச் சென்றது. நான் வசித்து வந்த அந்த இடம் இலங்கையின் மிக மோசமான இனவெறியர் வாழ்ந்த இடம் என்பதை பின்னர் அவர்கள் என் முதுகில் கோடுபோட்டு தோலுரித்துக் காட்டிய போது உணர்ந்தேன்.
நான் சென்ற வாகனம் இடையிடையே சில தடவைகள் மறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. “கௌத எத்துலே’ (உள்ளே யார்) என்ற வெறிக் குரல்கள் கேட்டன. “கௌருத் நே’ (யாரும் இல்லை) என்று பதிலளிப்பதும் “யனவா…. யனவா.’ (போ…போ…) என்ற குரல்களும் கேட்டன. எனது மனம் “திக்…திக்..’ என அடித்துக் கொண்டது. அன்று நான் தப்பித்துக் கொண்டேன். என் நண்பர்கள் எனக்கு இழைத்த துரோகத்தை நினைத்து நான் நொந்து போயிருந்தாலும் எனது முகாமையாளர் என்மதிப்பில் உயர்ந்து நின்றார். அவர் என்னை வீட்டில் சேர்த்து விட்டு சில தினங்களுக்கு எங்கும் போக வேண்டாம் என்று எச்சரித்து விட்டுச் சென்றார்.
* * *
அன்றைய இரவும் அடுத்தடுத்த தினங்களில் வந்த இரவுகளும், ஏன் பகல்களும் கூட இந்நாட்டில் தமிழர் வாழ்வின் மிகக்கரிய, கொடூரமான பொழுதுகளாக பதியப்பட்டுப் போய் விட்டன.
அன்றிரவு முழுவதும் என்னிடமிருந்த சிறு ரேடியோவை காதுக்கருகில் வைத்து சத்தம் வெளியில் வந்துவிடாத படி உலகின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் ஒலிபரப்பப்பட்ட எல்லா செய்தியலைகளையும் திருகித்திருகிக் கேட்டுக் கொண்டிருந்தேன். பிலிப்பைன்ஸ் நாட்டின் வெரிட்டாஸ் வானொலி தமிழர்கள் மீதான சிங்கள இனவெறித் தாக்குதல்களை விலாவாரியாக அறிவித்திருந்தது. இத்தாக்குதல்களில் அரசியல் பின்னணி இருப்பதாகவும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலருக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கூறியிருந்தது. இனவெறிக் கலவரங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருந்தன.
என்னதான் இருந்தாலும் எனக்கு வீட்டில் அடைந்து கிடக்க முடியாமல் இருந்தது. கொழும்பு புறக்கோட்டை பழைய சோனகத் தெருவில் என் அண்ணன் ஒருவர் கடையொன்றின் கணக்காளராக தொழில் பார்த்து வந்தார். அவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது. தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரை சென்று பார்த்து வரலாமென்று புறப்பட்டேன். வீட்டில் இருந்தவர்கள் போக வேண்டாமென என்னை எச்சரித்தனர். உண்மையில் நான் போடிங் இருந்த வீடு ஒரு சிங்கள வீடாக இருந்த போதும் என்னையும் அவர்கள் தங்கள் பிள்ளை போல் பாசம் வைத்து பழகினார்கள். அவர்களுக்கும் ஒரே பையன்தான். க.பொ.த (உ/த) படித்துக் கொண்டிருந்தான். அவனும் என்னை அண்ணா, அண்ணா என்று ஒட்டிக்கொண்டான். நான் கற்று வைத்திருந்த ஓவியக் கலையை அவனுக்கும் கற்றுக்கொடுத்திருந்தேன். அத்துடன் என்னுடைய கம்யூனிச தத்துவங்களும் அவனில் ஒட்டிக் கொண்டுவிட்டன. இவர்களை விட என்னில் அதிக பாசம் வைத்திருந்தவள் அடுத்த வீட்டில் வசித்து வந்த அந்த அனோமா என்ற சிட்டுக்குமரி. அவள் அடிக்கடி தன் காதலை சில சில்மிசங்கள் வாயிலாக வெளிப்படுத்தி “நீ என்ன சொல்கிறாய்’ என்று தன் காந்தக் கண்களால் கேட்டபோதும் நான் ஒருபோதும் அவளை அண்மிக்கவில்லை. அவளும் அன்று காலையிலேயே என்னைத் தேடிவந்து “தாங்கள் இருக்கும் போது ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை’ என்று கூறிவிட்டுப்போனாள்.
நான் எல்லாத் தயக்கங்களுக்கும் விடை கொடுத்துவிட்டு பகல்பட்டே வெளியே கிளம்பினேன். பஸ் வண்டிகள் வழக்கம் போலவே ஓடிக் கொண்டிருந்தன. 176ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து மருதானைக்குப் போய் அப்புறம் கோட்டை பஸ்ஸில் போக வேண்டும். 176 பஸ் ராஜகிரியவுக்கு வந்தபோது என் மனதில் மறுபடியும் திக்கென்ற பயம் எழுந்தது. ஒரு பெருங்கூட்டம். தமிழர் கடைகளை உடைத்துக் கொண்டிருந்தது. பலர் கிடைத்த பொருட்களை தோளிலும் கையிலும் தூக்கிக்கொண்டு ஓடினர். ரோட்டில் பல இடங்களில் டயர்கள் எரிந்து கொண்டிருந்தன. எத்தனை பேர் எரிக்கப்பட்டனர் என்று எண்ணுவதற்கெல்லாம் அவகாசம் இல்லை. பொறல்ளையில் இருந்து மருதானை வரை வீதியின் இருபுறமும் ஒரே சாம்பற் காடாக கிடந்தது.
புஞ்சி பொறல்லைச் சந்தியில் பஸ் செல்லமுடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. நான் சிங்கள மக்கள் மத்தியில் பிறந்து அவர்கள் மத்தியிலேயே வாழ்ந்தவன் என்ற ரீதியில் அவர்களை நன்கு புரிந்து கொண்டவன் என்று கருதிக் கொண்டிருந்தேன். ஆனால் அன்று அவர்கள் என் நம்பிக்கையைப் பொய்ப்பித்தார்கள். அவர்கள் கண்களில் அப்படியோர் கொலைவெறி தாண்டவமாடியது. அன்று நான் சுமார் பதினைந்து பேர் வரை கொல்லப்படுவதைப் பார்த்தேன். கூட்டத்தினரிடம் இருந்து தப்பியோடிய சிறுவனொருவனை நான்கு பேர் துரத்திச் சென்றனர். தடுக்கிக் கீழே விழுந்த அவன் தலையில் ஒருவன் கொங்கிறீட் கல்லைத் தூக்கிப் போட்டான். இன்னொரு சமயம் ஒரு டொயோட்டா ஹை ஏஸ் வேனில் இருந்து நான்கைந்து இளைஞர்களை ஜன்னலுக்கூடாக உருவியெடுத்தனர். அவர்களை நான்கு புறமிருந்தும் கால்களையும் கைகளையும் இழுத்துப் பிடித்து நார்நாராக பிய்த்துப் போட்டனர். அவர்கள் சிங்கள இளைஞர்களா? தமிழ் இளைஞர்களா என்று எப்படி இனங்கண்டு பிரித்துப் பார்த்தனர் என்று விளங்கவில்லை. உண்மையில் அவர்கள் சிங்கள இளைஞர்களாக இருக்கலாம் என்று எனக்குள் எழுந்த சந்தேகம் இன்றுவரையும் தீர்ந்தபாடில்லை. அவர்களின் ஒரே ஒரு தாரக மந்திரம் “கொட்டியா… கொட்டியா… மரணவா… மரணவா’ (புலி.. புலி… கொல்லு) என்பதாகும்.
அதற்குமேலும் அந்த பஸ்ஸில் தொடர்ந்து பிரயாணம் செய்ய என்னால் முடியவில்லை. எனது உடம்பின் சகல இரத்தமும் நீராகி உடலுக்குள்ளேயே கரைவது போன்றதொரு உணர்வு. அடிவயிற்றில் குடல் சுருட்டிக் கொண்டது. ஓங்காளிப்பும் வாந்தி எடுக்கும் உந்துதலும் ஏற்பட்டது. நான் திக்பிரமை பிடித்து பஸ்ஸைவிட்டு இறங்கி எதிர்த்திசையில் நடந்தேன். என்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பிப்பார்க்கும் தைரியம் எனக்கிருக்கவில்லை. வீதியில் கலவரத்தின் இரைச்சல் என் மண்டைக்குள் சென்று என்னவோ செய்தது. சற்றுதூரம் செல்லும் போது நான் போக வேண்டிய பாதையில் செல்லும் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்ஸில் இன்னும் ஒருவனையாவது ஏற்றிச் செல்லும் அளவுக்கு இடம் இருக்கவில்லை. கதவிலும், ஜன்னல்களிலும் பலர் தொங்கிக் கொண்டிருந்தனர். நான் எனது சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி பல்லைக் கடித்துக்கொண்டு ஜன்னலில் ஒருகையும், கதவில் ஒரு காலுமாக தொங்கிக்கொண்டேன். எவ்வாறு நான் வீட்டைச் சென்றடைந்தேன் என்பது இப்போது நினைவுக்கு வரவில்லை.
நான் இந்த இரண்டு நாட்களில் இரண்டுமுறை உயிர்தப்பி விட்டேன். இன்னும் எத்தனை முறைதான் செத்துப் பிழைக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஆதலால் அடுத்ததடுத்த நாட்களில் வெளியில் போகும் தைரியம் எனக்கு வரவில்லை. கிடைக்கப்பெற்ற செய்திகளின்படி இன்னமும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. மலைநாட்டின் பல நகரங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டு அனுமான் எரித்த இலங்காபுரியாகிவிட்டது. இங்கே எரித்தவன் இராவணன். எரிக்கப்பட்டவர்களோ சீதையும் ராம லக்ஷ்மணர்களும்.
எத்தனை நாளுக்கு எனது அஞ்ஞாதவாசம் நீடிக்கப் போகின்றதென்று தெரியவில்லை. பாண்டவர்கள் காட்டுக்கு விரட்டப்பட்டு பதினான்கு வருடகாலம் கானக வாழ்க்கையும் ஒரு வருட அஞ்ஞாதகால வாசத்தையும் கழித்தபின்பு ஊர்திரும்பிய பின்பும் அவர்களுக்கு விடிவுகாலம் ஏற்படவில்லை. உண்மையில் அதன் பின்னர் தான் குரு ஷேத்திரப் போரே ஆரம்பமானது. அப்படியானால் அடுத்துவரப்போவது குரு ஷேத்திரப் போராகத்தான் இருக்கப் போகின்றதோ? உலகத்தின் மீதான மனித பாரத்தைக் குறைக்க போர்களையும் யுத்தங்களையுத் இவர்கள் இலகுவான வழிமுறைகளாகப் பயன்படுத்துகிறார்களோ? இருக்கலாம்!
குரூரமான இரவுகள் தொடர்ந்தன. உறங்க வேண்டுமென்று கண்களை மூடிக்கொண்டால் முதல்நாள் பார்த்த கொலைகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தன. என்னை மறந்து சற்÷ற கண்ணயர்ந்து விட்டாலோ அவர்கள் என்னையும் துரத்தி தலைமேல் கல்லைப் போடுவது போன்ற சொப்பணம் தொடர்ந்து… தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. நாசமாய்ப்போன சொப்பணம் கூட சித்திரவதை செய்தது.
இவ்விதம் ஆறுநாட்கள் கடந்து போய்விட்டன. டி.வி, ரேடியோவில் செய்திகள் கேட்பதும், டெலிபோன் செய்து அலுத்துப்போவதுமாக இருந்தது. கொழும்பில் இருந்து வட பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். தரைவழிப் பயணம் செய்யமுடியாத நிலை. நான் டெலிபோன் செய்து அண்ணனின் நிலையையும் நண்பர்களின் நிலையையும் விசாரித்துக் கொண்டிருந்தேன். எனது அண்ணன் ஜிந்துப்பிட்டிக் கோயிலில் அடைக்கலம் பெற்றுள்ளதாக வேறு ஒருவர் வாயிலாக செய்தி கிடைத்தது. பல நண்பர்கள் அருகருகே காணப்பட்ட அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். சிவராம் என்ற மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பொறியியல் கல்வியைப் பூர்த்தி செய்திருந்த எனது நல்ல நண்பன் கத்தி வெட்டுக்கு இலக்காகி களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படாததால் உயிரிழந்திருந்தான். ஆனால் அவனை போய்ப்பார்க்கும் சூழ்நிலை இல்லை. அப்போது எங்கள் வீட்டிலிருந்து மிகக் கொடூரமான மற்றுமொரு செய்தி கிடைத்தது.
முதல்நாள் இரவு அவர்கள் வசித்த பிரதேசத்தின் சுற்றுப்புறக் கிராமங்கள் தாக்கப்பட்டதாகவும் அன்றிரவு தாமும் தாக்கப்படலாம் என்ற அச்சம் கருதி அவர்கள் எல்லோரும் அருகிலிருந்த பற்றைக்காட்டிலேயே இரவைக் கழித்துள்ளனர். எங்கள் அப்பாயிக்கு (பாட்டி) வயது தொண்ணூரைத் தாண்டியிருந்தது. அவரை அழைத்துச் செல்ல முடியாமல் வீட்டில் தனியே விட்டுச்செல்ல வேண்டியிருந்துள்ளது. காலையில் சென்று பார்த்த போது அவர் இறந்து போய் காணப்பட்டுள்ளார். பயம் காரணமாகவே அவர் இறந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர் இரவு தன்னந்தனியாக என்ன பாடுபட்டிருப்பார்? இந்த செய்தியை சொன்ன கையோடு என்னை தயவுசெய்து வீட்டுக்கு வர முயற்சிக்க வேண்டாமென்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர். என்னால் சுவற்றில் மண்டையை முட்டிக்கொண்டு அழுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
இத்தகைய சோகங்களை எண்ணி நான் மிகச் சோர்ந்து போயிருந்த போது தான் அந்த எமகண்டம் வந்தது. அன்று ஜூலை 29ஆம் திகதி மாலைப்பொழுது, இந்த சில நாட்களில் அநேகமாக கொழும்பில் இருந்த எல்லா தமிழர் வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டுவிட்டன. எஞ்சியிருந்தவர்கள் என்னைப்போல் இவ்விதம் மூலைமுடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்தவர்கள் மட்டுமே.
அன்று காலையில் இருந்தே புலிகள் கொழும்பைக் கைப்பற்றப் போகிறார்கள் என்ற வதந்தி பரவி ஒரே பதற்றமாக இருந்தது. நானும் மிகப் பயந்து அகதி முகாமுக்கு ஓடிவிடலாமா என்று தவித்துக் கொண்டிருந்தேன். எனினும் வீட்டினர் எனக்கு ஆறுதல் கூறி’ தம்மை மீறி ஒன்று நடந்துவிடாது என்று’ சமாதானப்படுத்தினர். அவர்கள் வார்த்தைகள் எனக்குத் தெம்பைத் தந்தாலும் “ஏதும் நடக்கலாம்’ என்று ஒரே தவிப்பாகவே இருந்தது. வீட்டுக்கு முன்னால் இருந்த பிரதான வீதியில் வெறியர் கூட்டம் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது.
நானும் அந்தவீட்டுப் பொடியன் லலித், அடுத்த வீட்டு யுவதி அனோமா ஆகியோரும் சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு மூன்று பேர் மட்டும் விளையாடும் விளையாட்டொன்றை விளையாடிக் கொண்டிருந்தோம். இந்த சில நாட்களாகவே சீட்டு விளையாடுவதும், கெரம் அடிப்பதும் தான் எங்கள் பொழுதுபோக்கு. லலித்தும் அநோமாவும் நான்படும் அவஸ்த்தையை கொஞ்சம்கூட புரிந்துகொள்ளவில்லை. நான் ஒரு தமிழன் என்பதையும் மறந்து என்னை ஒரு சிங்களவனாகவே அவர்கள் பார்த்தார்கள். ஊரெங்கும் சிங்கள வெறியர்கள் தமிழர்களை கொன்று குவிக்கிறார்களே என்ற கவலையும் அவர்களுக்கில்லை. நடப்பது ஒன்றும் நம் கட்டுப்பாட்டில் இல்லாத போது அதனை “விதி’யென்று நாம் ஏன் அழைக்கிறோம் என்பதன் உண்மையான அர்த்தம் அப்போது எனக்கு தெளிவாக விளங்கியது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் முன்கதவின் கண்ணாடிகளும் ஜன்னல்களின் கண்ணாடிகளும் “படீர்… படீர்….’ என உடைந்து வீழ்ந்து நொருங்கின. எங்கள் மனங்களும் திகிலால் “திக்….திக்..கென அடித்துக் கொண்டன. யாரோ கல்லெறிகிறார்கள் என்று யோசிப்பதற்குள் ஏழெட்டுப்பேர், முன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தார்கள்.
“கொட்டியா…கோ? கொட்டியா…கோ…?’ (புலி எங்கே… புலி… எங்கே?) என்று கத்தியபடி அவர்கள் வெறித்தனமாக வந்தார்கள். அவர்கள் கண்களில்தான் எத்தனை கொலைவெறி. எல்லா தமிழனையும் இல்லாதொழித்து விட வேண்டுமென்ற கொலைவெறி. மருதானையில் அந்தச் சிறுவனின் தலைமீது கல்லைத் தூக்கிப்போட்ட அதே கொலைவெறி. இனி நான் தப்பிப்பிழைப்பேன் என்பதற்கான எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்று என் மனசுக்குத் தோன்றியது. அவர்கள் நேராக என்னிடம் வந்து என் சட்டையைப் பிடித்துத் தூக்கினர். பின் “தர…தரலென’ என் இரண்டு கைகளையும் பிடித்து இழுத்துச் சென்றனர்.
என்னுடன் இருந்த லலித்தும் அனோமாவும் ஓ…வென அலறினர்.
சத்தம் கேட்டு வீட்டுக்காரர்கள் ஓடிவந்து “எப்பா…எப்பா.. அரயாட்ட கான்ட எப்பா… எயா அஹிங்சகயா…. (அவனை அடிக்காதீர்கள்…அவன் அப்பாவி) எனக் கத்தி தடுக்கப்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
அவர்களில் ஒருவன் தடியுடன் எகிறிக்குதித்தான். தடியைக் காற்றில் விசுக்கி “கவுருத் மெயாவ பேரகண்ட ஹெதுவொத்… ஒக்÷காமலாவ மரணவா…’ (யாராவது இவனைக் காப்பாற்ற முயற்சித்தால் எல்லோரையும் கொல்லுவோம்) என்று வீட்டுக்காரர்களை மிரட்டினான்.
அவர்கள் என்னை நாயைப்போல் இழுத்துச் சென்றார்கள். வாசலில் திரளாகக் கூடியிருந்த வெறித்தனம் மிக்க கும்பலொன்றுக்குள் வீசியெறிந்தார்கள்.
என்கதி.. பசியோடு காத்திருந்த சிங்கக் கூட்டத்துக்குள் தூக்கிப்போட்ட வெள்ளாட்டுக் குட்டிப்போல் ஆனது. என் உடம்பில் எந்த இடமும் தப்பிப் பிழைக்கவில்லை. அடி, உதை , மிதி என என்னை அவர்களை நிலத்தில் இருந்து எழுந்திருக்க கடைசிவரை விடவேயில்லை.
என் உடம்பிலிருந்த திராணியெல்லாம் ஒவ்வொரு அடிக்கும், ஒவ்வொரு உதைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போய்க்கொண்டிருந்தது. அவர்கள் என்னை அங்கும் இங்கும் தூக்கி வீசினார்கள். பந்தாடினார்கள் உடலில் இருந்த ஆடைகள் நழுவிக்கொண்டிருந்தன. உடம்பில் இருந்து ஜீவன் மெதுமெதுவாக விடைபெற்றுக்கொண்டிருந்தது.
அதன்பின் என் உடம்பில் எந்த அசைவும் தெரியவில்லை. ஒருவன் ஒரு பெரிய டயரை உருட்டிக் கொண்டுவந்தான். மாற்றுமொருவன் பெற்றோல் கேன் ஒன்றை கொண்டு வந்தான். தெருவோரத்தில் டயரைக் கவிழ்த்து அதன் மீது என்னைத் தூக்கிப் போட்டார்கள். என்னைத் தீக்கிரையாக்கும் அந்த நிலையிலும் ஒருவன் கட்டையால் ஓங்கி மண்டையில் அடித்தான். அந்த அடி என் சுயநினைவை பறித்துக் கொண்டது. நான் மீள முடியாத அந்தகாரத்துக்குள் தள்ளப்பட்டேன்.
(யாவும் கற்பனையல்ல)