(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இது என் நாய் அல்ல, நிச்சயமாய்”
“புக் பண்ணின ரசீது இருக்கு. உங்களுடையது அல்லவா? உங்களுடையது தான்!”
இரண்டாம் வகுப்பு வெள்ளைக்காரப் பிரயாணியின் கோபம் அதிகமாயிற்றும் “நான் ஸென்ஸ்! என் நாய் எனக்கு அடையாளம் தெரியவில்லை என்று சொல்ல என்ன தைரியம் ! எங்கே என் நாய்?” என்று அடி வயிற்றிலிருந்து கத்தினான்.
மெயில் கார்டு திருஞானம் சாந்தமாக , “அதோ, உங்கள் நாய்” என்று வண்டியில் கட்டியிருந்த நாயைச் சுட்டிக்காட்டினான் மறுபடியும்.
வெள்ளைக்காரப் பிரயாணி ஆத்திரத்துடன், “அது என் நாய் அல்ல. என் நாய் முழுக்கறுப்பு. இன்னும் உயரம், வளர்த்தி. இந்தத் திராபையான எச்சிற்கலை காயல்ல. கொண்டுவா என் நாயை!” என்றான்.
“ஸார் ! இந்த வண்டியில் வேறு ஒரு நாயும் புக் பண்ணவில்லை. கிடையாது. மாறிப்போவதற்கு இட மில்லை. பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான் கார்டு திருஞானம் மறுபடியும்.
வெள்ளைக்காரப் பிரயாணிக்கு வந்த கோபத்துக்குக் கங்கு கரையில்லை. ஆத்திரத்துடன் கார்டையும் ரெயில்வே கம்பெனியையும் வைது அவன் போட்ட சப்தத்தில் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒரு கூட்டம் கூடி விட்டது.
விஷயம் இதுதான். கார்டுவானோடு இணைத் திருந்த சாமான் வண்டியில் கட்டியிருந்த ஒரு நாயைத் தான் ‘புக்’ பண்ணின நாய் அல்ல என்கிறான் அந்த வெள்ளைக்காரப் பிரயாணி. “இல்லை, அதேதான்” என்று சாதிக்கிறான் கார்டு.
இருவருடைய வாதமும் இந்த ரீதியில் வளர்ந்து கொண்டுபோயினவே தவிர ஒரு முடிவும் ஏற்படவில்லை. கூடியிருந்த கூட்டத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘புக்’ பண்ணியிருந்தால் அந்த நாய் எங்கே போய்விடும்? ரெயிலில் கட்டிப்போட்டது எங்கே? இந்த நாய் புக் பண்ணினது அல்ல என்பதற்கு என்ன ருசு, அடையாளம், ரெயிலில் கட்டியிருக்கும்போது?’ என்று ஒவ்வொருவரும் ஒன்றும் நினைக்க முடியாமல் நினைத்துக் கொண்டு போனார்கள்.
கார்டு ஒரே உறுதியாக இருந்துவிட்டதைக் கண்டதும் அந்த வெள்ளைக்கார அதிகாரி விஷயத்தை ‘ரிபோர்ட்’ செய்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளப் போவதாகக் கூறி அந்த எச்சில் இலை நாயை ஓர் உதை கொடுத்து விட்டுப் போய்விட்டான். கார்டு திருஞானமும் அதைப் பொருட்படுத்தினவன் போல் காணப்படவில்லை.
இரண்டு நாள் கழித்து ரெயில்வே கம்பெனி தலைமைக் காரியாலயத்துக்குக் கிடைத்த ரிஜிஸ்டர் நோட்டீஸ்:
“சென்ற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து புறப்பட்டு வரும் நெ. 5 மெயிலில் என்னுடைய கக்ஷிக்காரரும், இரண்டாம் வகுப்புப் பிரயாணியுமான மிஸ்டர் வாட்கில், தம்மோடு கொண்டுவந்த ஒரு வருஷ வயதும் நல்ல கறுப்பு நிறமும் வாய்ந்த ‘கிரே ஹவுண்டு’ வேட்டை நாயைச் சௌகரியத்தை உத்தேசித்துக் கார்டு வானோடு இணைத்துள்ள சாமான் வானில் ரசீது பெற்றுக்கொண்டு விட்டிருந்தார்.
“ஆனால் அவர் இறங்கவேண்டிய இடமான …… யில் வண்டி நின்றதும் நாயைப் பெற்றுக்கொள்ள ரசீதுடன் வானில் போய்ப் பார்த்து, அவருடைய நாய்க்குப் பதிலாக ஒரு சொத்தலான வெள்ளையும் சிவப்பும் கலந்த நாய் கட்டப்பட்டிருந்ததைப் பிரஸ்தாப வண்டியின் கார்டு திருஞானத்திடம் சொல்ல, சாமான்களுக்குப் பொறுப்பாளியான ஷை நபர் பிரஸ்தாப நாய்க்குட்டி தான் புக் பண்ணப்பட்ட நாய் என்று பிடிவாத மாகச் சொல்லி, என் கக்ஷிக்காரர் மறுத்ததையும் லக்ஷியம் செய்யாமல் வற்புறுத்தினார். தம் நாய் இல்லாததால் என் கக்ஷிக்காரர் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
“ஆகையால் இந்த நோட்டீஸ் மூலம் ஒன்று, உடனே பிரஸ்தாப நாயைச் செலவுத் தொகையுடன் அவரிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டியது. அல்லது சொன்ன அடையாளமுள்ள நாய் அகப்படா விட்டால் வாதியின் சாமானைப் பொறுப்புடன் ஒப்படைக்கத் தவறியதற்காகவும், பிரஸ்தாப நாய் விலை பெறுமானத்திற்கும் சேர்த்து ரூ.ஆயிரம் நஷ்ட ஈடு இந்த நோட்டீஸ் கண்ட இரண்டு வாரங்களுக்குள் ரெயில்வே கம்பெனி கொடுக்க வேண்டும் என்று அறிவிப்பதுடன் தவறும் பக்ஷத்தில் மேற்படி விஷயத்தை நியாயமான முறையில் தீர்த்துக்கொள்ள என்னுடைய கக்ஷிக்காரர் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதும் வற்புறுத்திக் கூறப்படுகிறது.
(வக்கீல்) ராமநாதம் (பாரட்லா ) (வக்காலத்து – ஈ. வாட்கில்)”
இதற்கு ரெயில்வே கம்பெனி வி.கே.கில்டர் மிஸ்டர் ஈ. வாட்கி லுக்கு எழுதிய கடிதம்:
“உங்கள் வக்கீல் நோட்டீஸ் கிடைத்தது. பிரஸ்தாப விஷயம்பற்றித் தலைமை ஆபீஸுக்கு இதுவரையில் தகவல் கிடையாது. தங்கள் வக்கீல் நோட்டீஸின்மீது உடனே நடவடிக்கை எடுத்து இது பற்றிய ஓர் இலாகா விசாரணை நடைபெற்று வருகிறது. கூடிய சீக்கிரம் அதன் முடிவைத் தங்களுக்குத் தெரியப்படுத்த முடியு மென நம்புகிறோம். அதுவரையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்துக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.”
அதே தபாலில் மெயில் கார்டு திருஞானத்துக்கும் அனுப்பப்பட்ட உத்தரவு:
“சென்ற ஞாயிற்றுக்கிழமை நீங்கள் டியூடியில் இருந்த நெ. 5 மெயிலில் கார்டு வானோடு இணைத் திருந்த சாமான் வானில் புக் பண்ணி இருந்த, இரண்டாம் வகுப்புப் பிரயாணியான மிஸ்டர் வாட்கில் என்பவருடைய கறுப்புக் ‘கிரே ஹவுண்டை ‘ அவரிடம் ஒப்பிக்கத் தவறியது சம்பந்தமாகக் கூறப்படும் புகாருக்கு, ஏன் அந்தமாதிரி நடந்தது, வேறு நாய் ஒன்று அதன் இடத்தில் இருந்ததாகக் கூறப்படுவதற்குக் காரணம் என்ன என்ற விஷயங்களை விவரம் கொடுத்து, இருபத்துநாலு மணி நேரத்திற்குள் ஸ்டேட் மெண்ட் அனுப்பும்படி கேட்கப்படுகிறது. விஷயம் அவசரமென எச்சரிக்கை செய்யப்படுகிறது.
ஸி. கே. கில்ட ர் (மானேஜர்,… ரெயில்வே கம்பெனி)”
மெயில் கார்டு திருஞானம் சம்பவத்தை விளக்கித் தலைமை ஆபீஸுக்கு அனுப்பிய ஸ்டேட்மெண்ட் :
“ஸார்,
நான் சொல்லப்போவது அன்று நடந்த பிரஸ்தாப நாய் ஸம்பவத்தின் முழு உண்மை . இரண்டாம் வகுப்புப் பிரயாணியான மிஸ்டர் வாட்கில் ஒரு முழுக் கறுப்புக் ‘கிரே ஹவுண்டைச் சாமான் வானில் புக் பண்ணி ஒப்பித்து ரசீது வாங்கினது உண்மையே. ……. லிருந்து புறப்பட்ட வண்டி வழியில் …… ஜங்ஷனில் வந்து நின்றதும் அங்கு இறக்க வேண்டியிருந்த சாமான் களுக்காக ரெயில்வே ஸ்டேஷன் சிப்பந்திகள் போய்த் திறக்க, தற்செயலாக அவிழ்த்துக் கொண் டிருந்த பிரஸ்தாப நாய் திடீரென இடுக்கு வழியே பாய்ந்து, பிடிக்கப்போன எங்களைப் பார்த்து உறுமிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டது. எங்களால் ஆன மட்டும் அதை விரட்டிப் பிடிக்க முயன்றும் முடியாமல் பிரஸ்தாப நாய் ஓடியே போய் மறைந்து விட்டது, கண்ணுக்கு அகப்படாமல்.
“இந்த அசட்டுத்தனத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நாயின் சொந்தக்காரரிடம் போய்த் தெரியப்படுத்துவதற்கும் லஜ்ஜையாக இருந்தது. இந்த அசட்டுச் சம்பவத்தைப்பற்றி ஸரஸாவின் பொம்மை ரெயில்வே கம்பெனிமீது என்னவிதமான கேலி கூறப் படும், அஜாக்கிரதைக்கு என்ன கண்டனம் கிளம்பும் என்றெல்லாம் நினைத்துப் பார்த்தேன். ரெயில் ஸ்டேஷனை விட்டுக் கிளம்ப வேண்டிய நேரமும் நெருங்கிக்கொண் டிருந்தது. ஒரு சின்ன நாய் விஷயமாக ஒரு பெரிய கம்பெனியின் அந்தஸ்தே பாதிக்கப்படு வதைக் காண வெட்கமாக இருந்தது.
“நல்ல வேளையாக ஒரு யோசனை தோன்றியது. எது வந்தாலும் சரி என்று கம்பெனியின் கௌரவத் தையே முக்கியமாக மனத்தில் கொண்டு செய்து முடித்து விட்டேன். அது என்ன என்பதை நீங்களே இதற்குள் ஊகித்திருப்பீர்கள். கறுப்புக் ‘கிரே ஹவுண்டுக்குப் பதில் வேறு ஒரு சொத்தல் நாய் அங்கே எப்படி வந்தது என்று நான் சொல்லவேண்டுமா? அந்தப் பிரயாணி இறங்கும் இடமான … யைச் சேர்ந்ததும் மிஸ்டர் வாட்கில் வந்து பார்த்தபோது இருந்த நாய் அதுதான். ரெயில்வே சிப்பந்தி ஒருவன் முயற்சியால் பிரஸ்தாப நாய் ஓடிப்போன அதே ஸ்டேஷனில் கட்டப் பட்ட எச்சிற்கலை நாய் அது.
“மிஸ்டர் வாட்கில் தம் நாய்க்குப் பதில் வேறு நாய் தம்முடையதெனக் கூறப்பட்டதைக் கண்டு ஆத்திரங்கொண்டு நடவடிக்கை எடுத்துக் கொண்டது சகஜமே. ஆனால் கம்பெனியின் கௌரவத்துக்கு முன் என் தப்பு வேறு இருந்தபோதிலும் சரி – அவர் கோபங் கூட எனக்குப் பெரிதாகத் தோற்றவில்லை. அது அவருடைய நாய்தான் என்று ஒரேயடியாய் அடித்துப் பேசிவிட்டேன். புக் பண்ணின ரசீதிலோ நாய் அடையாளம் ஒன்றும் விவரமாக இல்லை. என் துணிவும் இதனால் வலுப்பட்டது. மிஸ்டர் வாட்கில் ஸ்டேஷனில் ஒரு களேபரம் செய்துவிட்டுப் போய்விட்டார். கோபத துடன் நடவடிக்கை எடுத்துக் கொள்வதாகப் பயமுறுத்தி விட்டும் போனார்.
“நான் அந்த நாயையும் ரசீதையும் அந்த ஸ்டேஷ னில் ஒப்பித்து விட்டுப் போய்விட்டேன். இதுதான் நடந்த விஷயம். இந்த மாதிரி செய்தது சரியல்ல என்பதையும் அஜாக்கிரதையாக நாயை ஓடவிட்டது தப்புத்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் நடந்து விட்ட பிறகு என்ன செய்வது? கம்பெனியின் பெயருக்கு இழுக்கு ஏற்படக்கூடாதென்ற நினைப்பில் இதைச் செய்து விட்டேன். ஓர் உண்மையான நல்ல எண்ணத் துடன் செய்த இந்தப் பிழையை மன்னித்து விடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தங்களுக்குக் கீழ்ப்படியும்,
திருஞானம் (மெயில் கார்டு)”
இந்த ‘ஸ்டேட்மெண்டை’ ஒட்டித் தலைமை ஆபீஸிலிருந்து மிஸ்டர் ஈ. வாட்கிலுக்குத் தயாரான பதில்:
“உங்கள் நோட்டீஸ் மீது கம்பெனி நடத்திய இலாகா விசாரணை மூலம் கம்பெனி கார்டு கூறும் விஷயம் சரியானதுதான் என்று ஊர்ஜிதப்படுகிறது. தாங்கள் புக் பண்ணிய ரசீதில் நாய் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறதே அன்றி, விவரங்கள் ஒன்றும் காணப்படவில்லை ……….. ஸ்டேஷனில் நீங்கள் பெற்றுக் கொள்ளப் போனபோது இருந்த நாய் தங்களுடையது தான் எனக் கம்பெனி அபிப்பிராயப்படுகிறது.
ஸி. கே. கில்ட ர்
(மானேஜர் , … ரெயில்வே கம்பெனி)”
ஆனால் அது அனுப்பப்படுவதற்கு முந்தியே மிஸ்டர் வாட்கிலிடமிருந்து வந்த கடிதம்:
“நான் எதிர்பாராத வகையில் திடீரென என் கறுப்புக் ‘கிரே ஹவுண்டு’ – ரெயிலில் காணாமற்போன அது – என்னிடம் இப்போது தான் வந்து சேர்ந்தது. ஆகவே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் உத்தேசம் எனக்கு இல்லை. ஆனாலும் இந்த மாதிரிச் சில்லரைச் சம்பவங்கள் இனி ஏற்பட்டுப் பிரயாணிகளுக்குத் தொல்லை ஏற்பட ஹேது இல்லாமல், கம்பெனி தக்க முன் ஏற்பாடுகளை, இந்தச் சம்பவத்தை எச்சரிக்கை யாகக் கொண்டு செய்யுமென்று எதிர்பார்க்கிறேன்.
உங்கள் ,
ஈ.வாட்கில்.”
இந்தக் கடிதம் கண்டதும் மிஸ்டர் வாட்கிலுக்குத் தயாரான பதிலை உடனே கிழித்து எறிந்துவிட்டுத் தலைமை ஆபீஸிலிருந்து மெயில் கார்டு திருஞானத்துக்கு அனுப்பப்பட்ட குறிப்பு:
“கம்பெனியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்தையும், அது விஷயமாகக் கையாண்ட சமயோசித யுக்தியையும் கம்பெனி பாராட்டுகிறது. ஆனாலும் பொறுப்பான விஷயத்தில் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டதைப்பற்றியும் பின்னும் அதிகமாக இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு ஓர் எச்சரிக்கையாகவும் உங்கள் தவறுக்காக நடப்பு வருஷத்துக்குச் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஸி. கே. கில்டர்
(மானேஜர் … ரெயில்வே கம்பெனி)
– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை.