கன்னியாஸ்திரியை கல்லெறிதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 9,861 
 
 

கன்னியாஸ்திரி ரெபேக்காளின் மேல் முதல் கல்லை எறிவதற்காக மெற்றாணியர் வானத்தை நோக்கி கல்லை உயர்த்திப் பிடித்திருந்தார்.

மெற்றாணியர் மெருகூட்டப்பட்ட புதிய பொன்னிற அங்கியை அணிந்திருந்தார். மேலங்கி சிவந்த நிறத்தில் சரிகை வேலைபாடுகளுடன் இருந்தது. இத்தாலிய தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த அவ்வுடையை வாடிகன் கடைவீதியில் சொற்ப விலைக்கு வாங்கியிருந்தார். அவருக்குப் பொருத்தமான அவ்வுடையை வாங்க திருச்சபையின் எந்த அனுமதியும் தேவைப்பட்டிருக்கவில்லை. குறுநில மன்னர்களைப்போல அணிந்திருந்த கிரீடம் வெள்ளியில் செய்யப்பட்டுத் தங்க முலாம் பூசியிருந்தது. செங்கோலை உதவியாளரிடம் கொடுத்திருந்தாலும் மெற்றாணியர் கம்பீரமாகவே கல்லை உயர்த்திப் பிடித்திருந்தார். செங்கோல் செய்யவென்றே தஞ்சாவூரில் சில குடும்பங்கள் இருந்து வந்தன. செங்கோலை பிடித்துகொண்டு மெற்றாணியருக்கு உதவிசெய்ய விரும்பியவர்கள் தொடர்ந்து விண்ணப்பங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

சாயங்காலத்தை அழகூட்ட குவிக்கப்பட்டிருந்த கற்களின் மேல் மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மெற்றாணியரின் உடையைப் புகழ்ந்து பேச யாருக்கும் வார்த்தைகள் கிடைத்திருக்கவில்லை. எறிவதற்குத் தோதான கற்கள் மைலாடி சந்தையிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன. விலையற்ற கற்களைப் பலரும் காணிக்கையாக அனுப்பியிருந்தார்கள்.

வாட்டிகனோடு நெருங்கிய உறவை தொடர் கப்பற் பயணங்களின் வழியே மெற்றாணியர் அடைந்திருந்தாலும் வாட்டிகனின் உத்தரவுகளைப் பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை. நகரமக்கள் விரும்பியிருக்காத பிராந்திய மொழியிலேயே திருப்பலிகளை நிறைவேற்றும் துணிச்சல் எந்த மெற்றாணியருக்கும் கிட்டியிருக்கவில்லை. ஆலயத்தின் வழக்கத்திலில்லாத வழிபாட்டை எந்த முணுமுணுப்பும் இல்லாமல் நிறைவேற்றிக்கொண்டிருந்தார். பிராந்திய மொழியில் திருப்பலிகளை நிறைவேற்ற வாட்டிகனுக்கு அனுப்பியிருந்த அனுமதி கடிதம் கப்பல் விபத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்ததை மெற்றாணியர் அறிந்திருக்கவில்லை.

பிரார்த்தனை நேரத்தில் நாணயங்களை உருட்டி விளையாடும் சிறுவர்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த கன்னியாஸ்திரி ரெபேக்காளின் கட்டுப்பாட்டில் எந்தச் சிறுசுகளும் வந்திருக்கவில்லை. ரெபேக்காளின் புன்னகைக்கே வீறிட்டலறும் குழந்தைகள் பிரார்த்தனைகூடத்தில் கொஞ்சி விளையாடுவதைக் கடவுளால்கூட நிறுத்த முடியாதென்பதை அறியாதவர்கள் ஆலயத்திற்குத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். ஞாயிற்றுகிழமை பிரார்த்தனைக்குக் கூச்சலிடும் குழந்தைகளை அழைத்துவர எல்லாக் குடும்பங்களுக்கும் மெற்றாணியர் உத்தரவிட்டிருந்தார்.

சவஅடக்கச் சடங்குகளுக்கான பாடல்களை உருவாக்கிக்கொண்டிருந்த ரெபேக்காளை கான்வென்டின் கற்சுவர்களுக்கு வெளியேயும் அனேகர் அறிந்துவைத்திருந்தார்கள். அச்சமூட்டும் அவளது மருத்துவமுறைகளும் மக்களைக் கவர்ந்திருந்தது. கல்லறைத்தோட்டத்திற்கும் தேவாலயத்திற்கும் புதிய குறுக்கு வழிகளைக் கண்டுவைத்திருந்தாள். குறுக்கு வழிகள் அவளால் மட்டுமே போகமுடிந்த பாதைகளைக் கொண்டிருந்தது.

பனங்காட்டிலிருந்த கல்லறை தோட்டத்தை அணுகவென்று வாகனங்களும் இருந்திருக்கவில்லை. மேடான அப்பிரதேசத்தில் எந்த மாட்டுவண்டியும் ஏறுவதில்லை. தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தினுள் மோட்டார் வாகனங்கள் பெரும்பாலும் வருவதில்லை. மெற்றாணியரை காண வரும் வாகனங்கள் கிளப்புகிற புகை இரண்டொரு நாட்கள் நகரத்தைவிட்டு அகலுவதில்லை. பேருந்துகளும் லாறிகளும் வந்துபோகவென்றே சாலைகள் நகரத்தினுள் நுழைந்திருந்தன.

சவப்பெட்டிகளைத் தூக்கிவருபவர்கள் வேகமாக நடப்பதில்லையென்றாலும் பாடலையும் மலர்களையும் பிரசவித்துக்கொண்டிருந்த ரெபேக்காளை அடைய அவர்கள் வேகமாக ஓடவேண்டியிருந்தது. கிட்டதட்ட ஏழு மைல் தூரத்திலிருந்த கல்லறைத்தோட்டத்திற்குச் சவப்பெட்டிகளைச் சுமந்துவர யாரும் விரும்புவதில்லை. கல்லறைத்தோட்டத்திற்கான புதிய இடத்தை நகரத்தினுள் கண்டடைய மெற்றாணியருக்கு பலரும் கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

சப்பரதேர் வலம்வரும் காலங்களிலும் நகரெங்கும் ஓடிக்களைத்தவர்கள் ரெபேக்காளை திட்ட விஷேச பாஷைகளைக் கற்றுவைத்திருந்தார்கள். ஆவணி மழைக்காலத்தைக் கொண்டாட தேவாலயத்திருவிழாக்கள் நடப்பதுண்டு. சப்பரத்தை நகரம் முழுவதும் சுற்றிக்கொண்டுவர நியமிக்கப்பட்ட குடும்பங்கள் ரெபேக்காளின் நடைவேகத்தை விரும்பிருக்கவில்லை. மழைக்காலச் சேற்றை மறைக்கக் கடல் மணலை நகரத்தெருக்களெங்கும் விரித்திருந்தாலும் யாராலும் விரைவாக நடப்பதற்கான சந்தர்ப்பங்களைத் தந்திராத தெருக்களில் ரெபேக்காள் விரைந்த நடையில் போய்கொண்டிருந்தாள்.

எல்லா அதிகாலையையும் தேவாலயத்திலிருந்து ரெபேக்காளே பறக்கவிடுவதாக எழுந்த நம்பிக்கைகளை யாரும் குலைத்திருக்கவில்லை. பீட அலங்காரத்திற்கென்று பல கன்னியாஸ்திரிகளும் அதிகாலை வருவதுண்டு. ரெபேக்காளுடைய உலகத்தில் பீட அலங்காரத்திற்கென்று எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

நுங்கும் நுரையுமாக வந்திறங்கும் புதிய கன்னியாஸ்திரிகள் அதிககாலம் அந்நகரத்தில் வாழ்ந்திருக்கவில்லை. நாகரீக வார்த்தைகளே வந்திறங்காத நகரத்தில் புதியவர்கள் காலம் தள்ள பயிற்சிகூடங்கள் இயங்கின.

கான்வென்டின் கற்சுவர்களைத் தாண்டி வளர்ந்திருக்காத போன்சாய்களை அப்பிரதேசத்திலுள்ளவர்கள் விரும்பியிருக்காததை மெற்றாணியரிலிருந்து பலரும் அறிந்து வைத்திருந்தார்கள்.

கான்வென்டு நகரத்துக்கு வெளியே புன்னை மரங்கள் காய்த்துக்குலுங்கும் பழையாற்றின் கரையில் இருந்தது. தண்ணீரை உறையவைத்துச் சிலைசெய்துகொண்டிருந்த சிற்பிகள் தலைமுறையைத் தாண்டியும் பழையாற்றின் கரையைவிட்டு எங்கேயும் போயிருக்கவில்லை. மூலிகைகளால் தண்ணீரை உறையவைக்க அவர்கள் எந்தக் கடவுளையும் வேண்டுவதில்லை. பனிச்சிற்பங்களைச் செய்யவென்றே ஜெனித்த அவர்களை அப்பிராந்தியத்தில் யாரும் தொந்தரவு செய்வதில்லையென்றாலும் நகரக்காவலர்கள் சிறை நிரப்பவென்று சிற்பிகளைப் பிடித்துபோவது வழக்கத்திலிருந்தது.

பனிச்சிற்பங்களைச் செய்துகொண்டிருந்தவர்கள் கன்னியாஸ்திரிகளைக் காதலித்துக்கொண்டிருந்த தகவல் கடைசியாக மெற்றாணியரை வந்தடைந்திருந்தது. அச்செய்தியை மெற்றாணியரின் முன் திறக்க துணிச்சலற்றவர்களே அரண்மனையில் உலாவிக்கொண்டிருந்தார்கள்.

ரெபேக்காள் தன் அசாத்திய நடைதிறனை கான்வென்டிற்கும் தேவாலயத்திற்குமான தூரத்தில் அடைந்திருந்தாள். சிறுபிராயந்தொட்டே மலைசரிவு ரப்பர் தோட்டத்தில் நடந்து பழகியிருந்தாள். ரப்பர் மரத்தின் சருகுகளைக் கூட்டி பனம்பழங்களைச் சுட்டெடுக்கும் வித்தையைக் கற்றுவைத்திருந்தாள்.

சிற்பிகளை மீட்டெடுக்கக் கன்னியாஸ்திரிகள் மதர் சுப்பிரீயரின் கடிதத்துடன் காவல்நிலையங்களுக்குப் போவதுண்டு. ரெபேக்காள் போனால் காவல்நிலைய சுவர்கள் நடுங்கும்படி கூச்சலிடுவாளென்பதால் மதர் அவளைப் பெரும்பாலும் அனுப்புவதில்லை. கன்னிசிவந்துவிடும் ரெபேக்காளின் முகத்தை இரண்டொரு நாள் ஏறிட்டுப்பார்க்க யாரும் விரும்புவதில்லை. நகரக்காவலர்களைப் பலமுறை மதர் எச்சரித்திருந்தாலும் கேட்கும் திறனை இழந்த அவர்களுக்கு வேறுவேலைகளும் தெரிந்திருக்கவில்லை.

ரத்தகொதிப்பின் தொடக்கத்திலிருந்தாளென்றே பலரும் நினைத்திருந்தார்கள். ரெபேக்காளின் பேச்சு சாந்தமாயும் சிலவேளைகளில் குலைநடுங்கும் கூச்சலையும் கொண்டிருந்தன. பிரார்த்தனைகள் வழியே அன்பை தவறவிட்டிருந்தாள்.

நகரம் அவளைக் காதலுக்கும் மனநோய்க்கும் இடையில் கொண்டு சேர்த்துவிடும் சாதுர்யத்திலிருந்தது.

அவள் மனநோயாளியில்லையென்றாலும் நகரம் முழுவதும் காதலும் மனநோயும் பரவிக்கொண்டிருந்தது. நகரமெங்குமிருந்து காதலையும் மனநோயையும் ஒழிக்க மெற்றாணியருக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. இடைவிடாத கடிதங்களால் மெற்றாணியர் குழம்பிபோயிருந்தார்.

இரவு ரோந்துக்கு அனுப்பபட்ட பாதிரிகள் திரும்பி வந்திருக்கவில்லை. நகரத்தின் குழப்பத்தை மெற்றாணியர் புறங்கையால் ஒதுக்கிய தகவல் யாரையும் வந்தடைந்திருக்கவில்லை. நகரத்தின் விசித்திர குணங்களிலிருந்து யாரையும் மீட்டெடுக்க அவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

மனநோய்களின் திரட்டப்பட்ட தகவல்களைச் சுமந்தபடி மெற்றாணியர் ரோமுக்கு போய் வந்துகொண்டிருந்தார். பல மாதங்கள் பிடிக்கும் அப்பயணத்தை மெற்றாணியர் விரும்பவே செய்தார். போப்பை சந்தித்ததின் அடையாளமாகப் போப்பின் திருமுகத்தை ஆலயங்களில் வாசிக்கச் சொல்லி ரகசிய உத்தரவுகளை உலவவிட்டிருந்தார்.

தூரதேசங்களிலிருந்தும் ஆட்கள் திரளாக வந்திருந்தார்கள். பல தேவாலயங்களுக்கும் மெற்றாணியரின் உருக்கமான மடல் போயிருந்தது. மடல் வாசிக்கப்பட்ட பின் ஆசிர்வாதத்திற்குக் காத்திருக்காமல் மக்கள் எழும்பிப்போய்கொண்டிருந்தார்கள்.

எல்லாக் கற்களும் ரெபேக்காளை நோக்கியே எறியப்பட்டன. யாருடைய குறியும் தவறியிருக்கவில்லையென்றாலும் கல்லெறிய அவர்கள் எந்தப் பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. திருச்சபை பயிற்சி கூடங்களில் அதற்கெனத் தனி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும் கலந்துகொள்ளும் விருப்பம் யாருக்கும் இருந்திருக்கவில்லை.

ரெபேக்காள் எந்தக் கூச்சலையும் வெளிப்படுத்தவில்லை. அதற்கான அவசியமும் அவளுக்கு நேர்ந்திருக்கவில்லை. எல்லாத் திசைகளிலிருந்தும் வீசப்பட்ட கற்களைத் தடுக்க எந்த ஆத்மாக்களும் முன்வந்திருக்கவில்லை. ஆத்மாக்கள் தலையிடுவதற்கான காலகட்டத்தை ரெபேக்காள் கடந்திருந்தாள்.

சவஅடக்கச் சடங்குகளில் தவறாமல் கலந்துகொண்டிருந்த அவளுக்கு ஆத்மாக்களோடு நல்ல பரிச்சயம் இருந்தது. ஆத்மாக்களின் திருநாளின் போது கல்லறைத்தோட்டத்தைச் சுத்தப்படுத்த யாரின் உதவியையும் ரெபேக்காள் எதிர்பார்ப்பதில்லை. ஆத்மாக்களின் திருநாளுக்கென அவள் தயாரித்து வரும் பாடல்களை நகரமக்கள் தினமும் பாடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். கிற்றாரை மீட்ட பாடற்குழுவில் அனேகர் இருந்தாலும் அவளது பாடலுக்கு ரெபேக்காளை தவிர வேறுயாரும் கிற்றாரை மீட்டுவதில்லை.

தேவாலய பாடற்குழுவோடு இணைந்து பாட அவள் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. நற்கருணை பவனியின்போது எந்தப் பாடலையும் முணுமுணுக்காத அவளது அமைதியை கன்னியாஸ்திரி மடத்திலுள்ளவர்கள் மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருந்தார்கள். போன்சாய்களைப்போல வாழ நேர்ந்திருந்தாலும் போன்சாய்களின் செழிப்பை அவள் பெற்றிருக்கவில்லை.

கல்லெறிந்தவர்கள் எழுப்பிய கூச்சல் திருவிழாவின் உச்சத்தைக் கொண்டு இறக்கியிருந்தது. ரெபேக்காளின் தேகத்திலிருந்து பொட்டி சிதறிய ரத்த துளிகளை நிலம் விழுங்கிகொண்டிருந்தது.

நகரத்திற்கு வெளியே இருந்து வந்திருந்த மக்களைச் சுமந்த மாட்டுவண்டிகளின் அடியில் லாந்தர்விளக்குகள் எரிய தயாராயிருந்தன. அசைபோட்டுகொண்டிருந்த மாடுகளுக்குக் கல்லெறியும் விதிமுறைகள் தெரிந்திருக்கவில்லை. தூரதேசங்களிலிருந்து நகரத்தை அடைய இரண்டொரு நாட்கள் நடந்த களைப்பை மாடுகள் பழையாற்றின் கரையில் தொலைத்திருந்தன. திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்குப் பழையாற்றின் கரை தயாராயிருந்திருக்கவில்லை. சாக்ரீன் கலக்கிய தண்ணீரை அவசர பந்தலின் கீழே வைத்திருந்தார்கள். குடிப்பதற்குப் போதுமான சுவையைச் சாக்ரீன் கலக்கிய தண்ணீர் தந்திருக்கவில்லை.

கோடைகாலமென்பதால் வந்திருந்த கூட்டத்திற்குப் பானகம் வழங்க பலரும் முயன்றுகொண்டிருந்தார்கள். தூரபகுதிகளிலிருந்து வந்தவர்கள் காலையிலேயே பழையாற்றைக் கொண்டாட்டங்களுக்குத் தயார்படுத்தி விட்டிருந்தார்கள். பழையாற்றின் கரை திறந்த வெளியாக இருந்ததால் குழுமிய மக்கள் ஓய்வெடுக்கத் திணறிக்கொண்டிருந்தார்கள்.

மன்னாவைப் போல இறங்கிகொண்டிருந்த கற்களின் அடியில் ரெபேக்காளின் தேகம் கடைசித் துடிப்பில் இருந்தது. சவஅடக்கத்திற்கான ரெபேக்காளின் பாடலை குழந்தைகள் உரத்தகுரலில் பாடிக்கொண்டிருந்தன. எல்லாக் கற்களையும் தாங்கிகொண்டிருந்த அவளது பிரார்த்தனையைக் குழந்தைகள் விட்டெறிந்த கற்கள் தகர்த்துகொண்டிருந்தன.

மரங்களுக்கு வார்னிஷ் அடிக்கிற தகப்பனுக்குப் பதினாறாவது பெண்ணாகப் பிறக்க ரெபேக்காள் பொருத்தனைகள் பல செய்திருக்கவேண்டும்.

தனிமையின் குணாம்சங்களைக் கன்னியாஸ்திரி பட்டத்தோடு கிடைக்கப்பெற்றிருந்த ரெபேக்காளுக்கு மன்றாட்டுகளைத் தினமும் சுமந்துதிரிவது பிடித்திருந்தது. வெளிறிய வானத்தோடு பேச அவள் கற்று வைத்திருந்த சங்கேத பாஷைகள் போதுமானதாயிருந்திருக்கவில்லை. ஊதாரியைப்போல வார்த்தைகளைச் செலவழித்தாலும் வெளிறிய வானத்தோடு பேச அதிக நேரம் ஒதுக்குவாள்.

கான்வென்டின் கற்சுவர்களைத் தாண்டி விரிந்திருந்த உலகத்தில் போன்சாய்களைப் போல வாழ விருப்பமற்றிருந்தாள். மருத்துவச்சியின் வேஷத்தை விரும்பி அணிந்த தருணத்தை மறக்க சிற்பிகள் புதிய புதிய நகைசுவைகளை அவள் முன் விரித்துகொண்டிருந்தார்கள்.

பதினாறு பெண்களையும் தகப்பனால் சுமக்க இயலாமல் போனதின் வார்த்தைகளை வானத்து வசனங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை வழக்கத்திலிருந்து விரட்ட பெருமுயற்சி எடுத்துகொண்டிருந்தாள். தேவாலயத்தைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த பறவைகளோடு அவள் ஒன்றிப்போயிருக்கவில்லை. ஞானஉபதேசங்களில் பறவைகளைப் பற்றி அதிகநேரம் பேசுவாளென்றாலும் எந்தப் பறவையையும் பிடித்திராத குணத்தை வந்தடைந்திருந்தாள்.

மருத்துவத்திற்குப் படித்திருந்தாலும் ஞாயிற்றுகிழமை வகுப்புகளைக் குற்றங்குறையில்லாமல் நடத்தி கொண்டிருந்தாள். சின்னக் குறிப்பிடத்தைப் படித்திராத பிள்ளைகளைத் தண்டிப்பதில்லையென்றாலும் பயமுறுத்தும் வார்த்தைகளைச் சடையோடு பின்னிவிடுவதில் ரெபேக்காள் பெயரெடுத்திருந்தாள். ரெபேக்காளுக்குப் பயந்து திருவிருந்தை கல்யாணபிராயம் வரை தள்ளிபோட்டவர்கள் நகரத்தில் இருந்தார்கள். பாவம் எதுவும் செய்வதில்லையென்றாலும் சனிக்கிழமைகளில் பாவசங்கீர்த்தனம் செய்வதை ரெபேக்காள் தவறவிட்டதில்லை.

அசூசையால் எந்த நோயாளியையும் அவள் தொடுவதில்லையென்றாலும் வைத்தியத்தை மிகசிறப்பாகச் செய்துகொண்டிருந்தாள். ஆங்கில மருத்துவத்தில் அவளடைந்திருந்த தேர்ச்சியைக் குறித்து மெற்றாணியருக்கே சந்தேகமிருந்தது. எல்லா நோயாளிகளும் விரைந்து குணமடைந்த தகவல் அவருக்கு எட்டியிருக்கவில்லை.

நகரத்தின் சந்துபொந்தெங்கும் ரெபேக்காளின் வருகைக்கு வீறிட்டு அலறிய குழந்தைகள் ஞாயிற்றுகிழமை உபதேசத்திற்கு வரத் தவறியதில்லை. குழந்தைகளோடும் சப்தங்களோடும் அவள் விலகியே இருந்தாள்.

நகரத்தின் பிரதான கடவுளாக அவள் மாறிக்கொண்டிருந்ததை மெற்றாணியரால் தடுக்க முடிந்திருக்கவில்லை. அவர் எல்லா விஷயங்களையும் வெறுமனே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார். மாதத்திற்கு இரண்டு திருப்பலிகளில் மட்டுமே பங்குகொள்ளும் அவரால் நகரமக்களோடு நெருங்க முடிந்திருக்கவில்லை.

பதினாறு பெண்களைக் கன்னியாஸ்திரியாக்கின ரெபேக்காளின் தகப்பனை ஊர்மக்கள் மரியாதையாகவே நடத்தினார்கள். அவளது கன்னியாஸ்திரி பட்டத்து நாளில் ஊர்மக்களுக்கு இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். வரிசையாக வெட்டப்பட்ட ஆடுகளின் தலைகள் அவர் வீட்டை அலங்கரிக்கத் தவறியிருந்தன. அசனத்திற்கு வெட்டப்பட்ட ஆடுகளைப்போல ரத்தத்தைப் புனிதப்படுத்த பாதிரியார் முயன்றது ரெபேக்காளின் தகப்பனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

தன் மகளுக்காகச் செய்த கடைசிச் செலவு அதுதானென்றாலும் மற்றபெண்களுக்குக் கன்னியாஸ்திரி பட்டத்தின் போது எந்தச் செலவையும் அவர் செய்திருக்கவில்லை. தூரதேசங்களில் குடியேறியிருந்த எந்த மகளும் அவருக்குக் கடிதங்கள் அனுப்புவதில்லை. கன்னியாஸ்திரி மடங்களில் கடிதமெழுத பரிபூர்ண அனுமதி உண்டென்றாலும் ரெபேக்காளின் தகப்பன் கடிதங்களுக்கு வெளியே உலவிக்கொண்டிருந்தார்.

மரங்களை இழைத்து வார்னிஷ் தடவியபடியே தன் கண்ணீரை மறைத்துக்கொண்டுவிடும் வழக்கத்தை வைத்திருந்தார். எல்லா நற்கருணை விருந்திற்கும் அவரை முன்னால் அமரவைக்க ஊர்மக்கள் விருப்பங்கொண்டிருந்தார்கள். அதற்கான தகுதியை அவர் பெற்றிருந்தாலும் பாவமன்னிப்பை சரிவர நிறைவேற்றாத ஆளாகவே இருந்தார். நற்கருணை பவனியின் போது அவர் மீதும் தூப ஆராதனை காண்பிக்க ரகசிய உத்தரவு அமலில் இருந்தது. மெற்றாணியரின் அரண்மனைக்குச் செல்ல யாதொரு முன்னனுமதியும் அவருக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. அரண்மனை விருந்திற்கு அவருக்கு அழைப்புகள் வருமென்றாலும் கூச்சத்தால் எல்லாவற்றையும் தவிர்த்து வந்தார்.

ரெபேக்காளின் ஊரிலிருந்து நகரம் வெகுதொலைவில் இருந்தது. தன் வீட்டு முற்றத்து ரப்பர் மரங்களிலிருந்து ஒட்டுக்கறைகளை நெட்டா சந்தையில் விற்றுவிட்டு ரெபேக்காளின் தகப்பன் பேருந்து ஏறுவதைப் பார்ப்பவர்கள் மெற்றாணியரை காணப்போவதாகத்தான் நம்பினார்கள். மாதத்திற்கு ஒருமுறை கடைசி மகளைக் கான்வென்டின் வெளிவாசலில் நின்றபடி பார்த்துப்போகும் வழக்கத்தை வெகுகாலம் அவர் கைக்கொண்டிருந்தார்.

சுமந்துவந்த கூழான் சக்கையை ரெபேக்காளே வெளியே வீசியெறிந்ததை அவரால் லேசில் மறந்திருக்க முடியவில்லை. மறப்பதற்கான பெருமுயற்சியில் ஆறுகாணி வாற்றுச்சாராயம் அவர் வீட்டை அண்டியிருந்ததை மக்கள் நம்பியிருக்கவில்லை. சக்கையோடு சிற்பிகளின் குடிசையில் இரண்டொரு நாள் தங்கிவிட்டே வீடு திரும்பினார். அவரிடம் எந்தப் பிடிவாத குணமும் மிச்சமிருந்திருக்கவில்லை.

கூழான் சக்கையோடு நகரத்துப்பக்கம் வருவதை அடியோடு நிறுத்தியிருந்தார். மொட்டைபனைகளையெல்லாம் விற்றுவிட்டாரென்றாலும் அக்கானிக்காக விட்டுவைத்திருந்த இரண்டொரு பனைகளும் ரெபேக்காளை காணவிரும்பின. ஆயினி மரத்தின் மூட்டில் கட்டப்பட்டிருந்த மனைவியின் கல்லறையில் உதிர்க்க வார்த்தைகளற்று அடிக்கடி நின்றுகொண்டிருந்ததை ஊர்மக்கள் கவனித்திருக்கவில்லை.

கன்னியாஸ்திரிகள் சிற்பிகளுடன் காதல் கொண்டிருந்த செய்தி நகரத்தை வந்தடைந்திருந்த போது கவிந்துகொண்டிருந்த இருள் திகைத்திருந்தது. மங்காத ஒளியை நகரவாசிகள் நம்ப இயலாமல் பார்த்துகொண்டிருந்தார்கள். எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தியிராத அச்செய்தி நகரத்தின் இயக்கத்தைக் குலைத்திருந்தது. வீடுகளெங்கும் வண்ண மெழுகுத்திரிகளைக் கொளுத்தி வைத்து புதிய பிரார்த்தனைகள் துவங்கியிருந்தன.

ஆற்றங்கரையோரம் கூடியிருந்த மக்கள் புதிய புதிய பாஷைகளால் திருவிழாத்தனத்திற்கு வெறியூட்டியிருந்தார்கள். வெறுப்பின் கற்கள் சகல இடங்களிலிருந்தும் உதிரத்துவங்கின. களைப்பற்ற அவர்கள் ரெபேக்காளின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.

கன்னியாஸ்திரி மடத்தில் நடந்த நீண்ட பிரார்த்தனையில் ரெபேக்காள் கலந்துகொண்டிருக்கவில்லை. விடியற்காலம் துவங்கிய பிரார்த்தனை நேரங்காலமற்று நீண்டு கொண்டிருந்தது. மதர் நெக்குருக பிரார்த்தனை வார்த்தைகளை உதிர்த்துகொண்டிருந்தாள். ரெபேக்காள் பிரார்த்தனை தீரும்வரை உணவுமேஜையைவிட்டு அகன்றிருக்கவில்லை.

சக கன்னியாஸ்திரிகளால் எந்த நம்பிக்கையையும் ரெபேக்காளுக்குத் தந்திருக்க முடியவில்லை. நம்பிக்கைகள் அர்த்தமிழந்துவிட்டிருந்த தருணத்தை மதர் உணர்ந்திருந்தார். ரெபேக்காளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு பிரார்த்தனையை முடித்துவைத்தார். உணவுமேஜையின் வலப்பக்கமாக அமர்ந்தபடி கண்ணீரை மறைக்க மதர் எடுத்த முயற்சிகள் பலித்திருக்கவில்லை. அவர்கள் இருந்த துக்கத்திலும் உணவின் சுவை மாறியிருக்கவில்லை. நேரங்கெட்ட நேரத்தில் பரிமாறப்பட்ட உணவை ரெபேக்காள் மறுத்திருக்கவில்லை.

வற்றிப்போன கன்னங்களுடன் ரெபேக்காள் தேவதையின் சாயலை அடைந்துகொண்டிருந்தாள். தளர்வுற்ற நடையில் எல்லாவற்றிற்கும் தயாராயிருப்பதை வெளிப்படுத்தினாள். தளர்வுற்ற ரெபேக்காளின் நடையை அன்றுதான் மக்களால் காணமுடிந்தது. கூட்டத்தின் முன் உருகிக்கொண்டிருந்த அவளது உருவம் முணுமுணுப்புகளை அலட்சியப்படுத்தியிருந்தது. சம்மனசுகளின் கடைசிப் பிரார்த்தனையை அவள் மனனம் செய்ய மறந்திருந்தாள். மிரட்சியற்ற அவளது விழிகளிலிருந்து கண்ணீருக்கான அவசியத்தைக் கூட்டத்தில் யாரும் யாசித்திருக்கவில்லை.

அவளது தனிமையைக் கொன்றுவிட்டிருந்த சிற்பிகளின் குடிசைகள் தீபிடித்து எரிந்துகொண்டிருப்பதைக் கடைசிக் காட்சிப்போலப் பார்த்துகொண்டிருந்தாள். அதை மட்டுமே அவளால் செய்ய முடிந்ததென்றாலும் ஒரு பெருமூச்சைகூடச் சிற்பிகளுக்காகச் செலவழித்திருக்க முடியவில்லை. கன்னியாஸ்திரி உடை பொருத்தமற்றுப் போயிருந்தாலும் ரெபேக்காளை அவ்வுடை கச்சிதமாகத் தழுவியிருந்தது. நம்பிக்கையூட்டிக்கொள்ள யாருடைய பெயரும் அவளது ஞாபகங்களுக்குக் கிட்டியிருக்கவில்லை. எரிந்துகொண்டிருந்த குடிசைகளிலிருந்து கருகும் உடல்களின் வாசம் காற்றிலிருந்தது. பழையாற்றின் கரை முழுவதும் நிரம்பியிருந்த மக்கள் அவ்வாசனையை நுகர்ந்திருக்கவில்லை.

தேவாலயத்தின் மணியை ஒலிக்க அனுப்பப்பட்டிருந்த உபதேசியார் கடைசிப் பிரார்த்தனையில் இருந்தார். ஆலயத்தின் மணியை அடிக்க உபதேசியாருக்கு மட்டுமே அனுமதியிருந்தது. தேவாலய கோபுரத்தின் மத்தியில் நுணுக்கமான வேலைபாடுகளுடன் இருந்த மணியைச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியர்கள் கடல்மார்க்கமாகக் கொண்டுவந்திருந்தார்கள். தேவாலய கோபுரம் மணின் உருவத்திற்கு ஏற்றபடி நிர்மாணிக்கப்பட்டிராததால் கோபுரத்தின் மத்தியில் மணி பொருத்தமற்றுத் தொங்கிகொண்டிருந்தது. நகரம் முழுவதும் உயிர்ப்பிக்கும் ஓசையை அம்மணி கொண்டிருந்ததைப் போர்த்துகீசியர்கள்கூட அறிந்திருக்கவில்லை. ஞாயிற்றுகிழமை திருப்பலிகளிலும் ஆபத்து காலங்களிலும் மணியை ஒலிக்கத் திருச்சபை அனுமதித்திருந்தது.

முழங்காலிட்டு நீண்ட பிரார்த்தனையைத் துவக்கியிருந்த அவரது உடல் லேசான நடுக்கத்திலிருந்தது. உலகத்தின் கடைசிப் பிரார்த்தனையில் உபதேசியாரின் பங்களிப்பை குறித்து நகரத்து மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. வாழ்வில் ஒரே ஒரு உடையைச் சொந்தமாக வைத்திருந்த உபதேசியாரை யாரும் சீந்துவதில்லையென்றாலும் எல்லோரையும் நேசிக்கக் கற்று வைத்திருந்தார். வாழ்வில் எந்த முணுமுணுப்பும் கொண்டிராத அவரைக் கடவுள்கூட அறிந்து வைத்திருக்கவில்லை.

பீடம் அலங்கரிக்கப் பறித்து வரப்பட்ட மலர்களின் மீது நகரத்துப் பாதிரிகள் உறங்கிக்கொண்டிருந்ததை உபதேசியார் கவனிக்கத் தவறியிருந்தார். நகரத்தில் நடந்த கால்பந்தாட்டத்தில் பெற்றிருந்த உடல்வலியால் பாதிரிகள் தொடர்ந்து தூங்கிகொண்டிருந்தார்கள். தூங்குவதற்குப் பொருத்தமான இடம் அதுவல்லவென்றாலும் களைப்பு பாதிரிகளை உருகுலைத்திருந்தது.

கன்னியாஸ்திரிகள் சிற்பிகளைக் காதலிக்கும் தகவல் கடவுளை அடையுமுன்னம் கற்களால் எறிந்துகொல்ல மெற்றாணியர் அனுமதித்திருந்தார். அவ்வுத்தரவில் கையெழுத்திடும் முன்பு கலக்கத்தை விரட்ட இரண்டு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். வாட்டிகனுக்கு அதைத் தெரியப்படுத்த நேரமில்லாதிருந்தது.

எல்லாத் தகவல்களும் வாட்டிகனை சென்றடைய அதிகக் காலமெடுத்தது. கப்பற்பயணங்களில் மட்டுமே அடையமுடியும் வாட்டிகனை மெற்றாணியரை தவிர வேறுயாரும் தரிசித்ததில்லை. ரெபேக்காளின் தகப்பனுக்கு எழுத நினைத்த கடிதத்தை நடுக்கத்துடன் பலமுறை முயற்சித்துக்கொண்டிருந்தார்.

போன்சாய்கள் கர்ப்பந்தரிப்பதில்லையென்றாலும் ரெபேக்காள் கர்ப்பமாயிருந்தாளென்ற வறட்டு இருமல் உலா வந்தது. யாரையும் அவள் காதலித்திருக்கவில்லையென்றாலும் காதலிப்பதற்கான குறைந்தபட்ச அறிவை பெறக்கூட ரெபேக்காளுக்கு நேரம் வாய்த்திருக்கவில்லை.

தேவாலயத்தின் முன்புற மணல்வெளியில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அடித்த பந்து கொடி ஏற்றியிராத கம்பத்தில் மோதி ஆலயத்தின் மணியில் விழுந்தது. இரக்கமற்ற கற்கள் ரெபேக்காளை நோக்கி பறக்க துவங்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *