கத்தியின்றி ரத்தமின்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 31, 2021
பார்வையிட்டோர்: 4,055 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மலைகள் மிகவும் பயங்கரமாக எழுந்து நின்றன. மக்களின் உரிமை உடைமை இத்தியாதிகளை சங்காரம் செய்த தென்னாபிரிக்க வெள்ளைக்காரக் கொடுமைகளை விடக் கோரமானதாகத் தலை விரித்துக் கொண்டு நிற்கின்றன.

உள்ளே எது நடந்தாலும் அதை வெளியுலகுக்குக் காட்டுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் அவை அந்தத் தேயிலைத் தோட்டத்தை அரண் செய்து நிற்கின்றன.

அந்த மலைகளின் ராட்சத உடலில் பட்டி பிடித்தாற்போல் மலைகளைச் சுற்றி வரும் செம்மண் பாதையில் கைப்பிரம்பைச் சுழற்றியபடி நடந்து கொண்டிருக்கிறார் தோட்டத்து டிஸ்பென்ஸர். தோட்ட மக்கள் பாழைப்படி டாக்டரைய்யா!

பையில் ஸ்டெதஸ்கோப்பும் மனதில் துவேஷமும் வெள்ளைக்கார நடை நடந்து கொண்டிருந்த சிங்கள டாக்டரய்யாவைக் கண்டதும் லயத்து நாய்களுக்கு ஒரே குஷி. கூட்டமாகக் குரைத்தபடி ஓடி வந்தன.

கூலிக்காரன் நாய்தானே என்னை என்ன செய்துவிடும் என்ற அசட்டையுடன் நடந்து கொண்டிருந்த அய்யா டக்கென்று நின்றார். பாய்ந்து வந்த நாய்களும் பிரேக் போட்டு நின்றன.

பாதையடியில் நாய் குறைத்த சத்தம் கேட்டு காந்தி படத்துக்கு மாலை போட்டுக் கொணடிருந்தவன் றோட்டுப் பக்கம் திரும்பிப்பார்த்தான். டாக்டரையா லயத்துப் படியில் இறங்கிக் கொண்டிருந்தார்.

“செலாங்கய்யா… லயம் பார்க்கவா?”

ஆமாம், தலைவரர் என்ன இன்னைக்கு வேலை இல்லியா…?” என்று கேட்டபடி இறங்கி வந்த ஐயா

“யாரூட்டு படம் இது… மாலை எல்லாம் போடுறே…” என்று கேட்டார்.

முன்பொரு தடவை அவரே அவனிடம் கூறியிருக்கிறார் ‘இந்தியாக்கார ஆளுங்களுக்குக் கொஞ்சம் சூட தேசப்றுக் கிடையாது…. இந்த லயம் முழுக்கப் பாரு. ஒவ்வொரு வீட்டிலேயும் காந்தி படம் இருக்கும். நேரு, சுபாஷ் சந்திரபோஸ் படம் இருக்கும். எவன் வீட்லேயாவது நம்ம தலைவரூட்டு படம் ஒன்று இருக்கா. ஒரு சேநானாயக்கா, பண்டாரநாயக்கா கெடயாது… ஆனா சொல்லிக்கிறது மட்டும் இது எங்கள் நாடு. இதுல எங்களுக்கும் உரிமை வேண்டும் அப்படி இப்படின்னு’ என்று.

‘அய்யாவுக்கு ஏன் இந்த வேண்டியில்லாத வெவகாரமெல்லாம். யம் பாக்க வந்தா லயத்தைப் பாத்துட்டுப் போக வேண்டியதுதானே’ என்று நினைத்துக் கொண்டவன் அவரிடம் கேட்டு வைத்தான்: “யாரார் வீட்டுல என்னென்ன படம் மாட்டியிருக்குன்னும் ஐயா கணக் கெடுக்குறீங்க போல….” என்று.

“அதில்ல தலைவரே, இந்த ஆளுங்களை எல்லாம் புடிச்சு வெறட்டிப்புடனும். இது உங்க நாடு இல்லே… இந்த நாட்டின் தலைவர்கள்லாம் உங்க தலைவர்கள் இல்லே… உன் காந்தி, உன் நேரு இருக்கிற நாட்டுக்கே போடான்னு இவங்களை எல்லாம் புடிச்சு வெறட்டிப்புடனும்…”

“இதேயே தானே உங்கள் தலைவர்களும் சொன்னாங்க… சொல்றாங்க… சொல்லப்போறாங்க… ‘நீங்கல்லாம் எங்க நாட்டு மக்கள் இல்ல. நீ எல்லாம் ஓடிப்போ… இந்த நாட்டுல உங்களுக்கு எதுவும் கிடையாதுன்னும், கடைசித் தமிழனையும் இந்த நாட்டை விட்டு கப்பலேற்றிய பிறகுதான் எனக்கு சாவே வரும்’ என்றும் சங்கல்பம் செய்து கொண்டவர்களுடைய படங்களையெல்லாம் கண்ணாடி போட்டு மாட்டிக்கொள்ள இவர்கள் என்ன பேடிகளா… எங்களை அடிப்பதற்கு ஆள் கூட்டி வரவில்லை காந்தி. ஆனா அவர் எங்களுக்காக அடிபட்டிருக்கின்றார். அதனால்தான் அவரை ஏற்றுக் கொள்கின்றோம். காந்தி படத்துக்குப் பிறேம் போட்டு மாட்டிக் கொள் என்று யாரும் இந்த மக்களுக்குக் கட்டளை இடவில்லையே…”

இப்படிச் சுடச்சுட முகத்திலடித்தாற்போல் முன்பொரு தடவை டாக்டரய்யாவுக்கு பதில் கொடுத்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

காந்தியின் படத்தைப் பார்த்து இது யாருடைய படம் என்று கேட்பதன் மூலம் தனக்கும் எனது தலைவர்களுக்கும் பெருமைத் தேடிக் கொள்வதாக எண்ணிக்கொள்ளும் அய்யாவின் அறியாமை அவனுக்கு சிரிப்பூட்டியது.

“இது யாருன்னு அய்யாவுக்குத் தெரியலையா… அடப்பாவமே! ‘மனிதர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதால் மற்ற நாட்டை வெறுக்கிறார்கள் என்;பதல்ல பொருள்’ என்று கூறிய மகாத்மா இவர்தான்.

மற்றவர்களுடைய தலைவர்களை, மற்ற நாட்டவர்களை வெறுப்பதன் மூலம் மட்டுமே உங்கள் நாட்டை, உங்கள் தலைவர்களை, உங்கள் நாட்டவர்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளும் உங்கள் போன்றவர்களுக்கு உலகத்துக்கே ஒப்பற்றவரான ஒரு மனிதரைத் தெரிய முடியாதுதான்….”

“தெரியாமல் என்ன நல்லாத் தெரியும்… ஏன் மாலை போடுறேன்னு தான் கேட்டேன்…” என்ற படி பேச்சை முடித்துக்கொண்டு தலைவர் வீட்டுக் கோடியில் நுழைந்து அடுத்த லயத்துக்குப் போய்விட்டார் அய்யா.

மேசையில், காற்றில் பட படத்த நோட்டீசை எடுத்து மறுபடியும் பார்த்துக் கொண்டார் தலைவர்.

அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி கொண்டாடும் காந்தி விழா பற்றிய நோட்டீஸ் அது.

பேச்சாளர்கள் வரிசையில் அவருடைய பெயரும் தடித்த எழுத்தில் இருக்கிறது.

தென்னாபிரிக்காவிலும் நேபாளம் போன்ற நாடுகளிலும் சிறுபான்மை இந்திய மக்களுக்காக அஹிம்சையுடன் அவர் செய்த அறப்போர் பற்றிப் பெச வேண்டும் என்பது அவரடைய அவா.

முக்கியமாகத் தென்னாபிரிக்காவில் அவர் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி இன்றெல்லாம் பேசலாம்.

காந்தி எழுதிய ‘தென்னாபிரிக்க சத்தியாக்கிரகம்’ என்னும் நூல் மேசையில் கிடக்கிறது. அதை எடுத்து வாசிக்கும் போதே அவருடைய நெஞ்சு உருகியது.

கறுப்பர்கள் நடக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட வீதியொன்றில் தெரியாத்தனமாக காந்தி நடந்தபோது அங்கு காவல் நின்ற போலீஸ்காரன் நெராக அவரிடம் வந்த ஏன் வந்தாய் என்றும் கேட்காமல், ஒரு வார்த்தையும் பேசாமல், ‘போய்விடு’ என்று கூறாமல் தன்னுடைய பலம் கொண்ட மட்டும் பூட்ஸ் காலால் அவர் நெஞ்சில் எட்டி உதைத்தான்.

இந்தத் திடீர் தாக்குதலால் அவர் நிலைகுலைநை;து போனார். அவரடைய நோஞ்சான் உடம்புக்கு போலீஸ்காரனின் முரட்டு உதையைத் தாங்கிக்கொள்ளும் சக்தி கிடையாது. எpகிறிப்போய் விழுந்தார். பாதையின் எதிர்ப்பக்கம் இருந்த வெள்ளைக் கல்லில் அவருடைய முகம் மோதி நசுங்கியது.

தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க அவருக்குச் சில நிமிடங்கள் பிடித்தன.

வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துவிட்டுக் கொண்டார். நெற்றிப் பொட்டு வீங்கிப் புடைத்திருந்தது. எங்கே வலிக்கிறது என்று தெரியாமல் உடல் மழுவதும் நோவு எடுத்தது.

காந்தி உதைப்பட்ட செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. அவரை உதைத்தவனைக் கோர்ட்க்கு இழுத்துப் பழி வாங்குமாறு அனைவரும் அவரை வேண்டினர். ஆனால் காந்தி மறுத்துவிட்டார்.

“அவனுக்கென்ன தெரியும் பாவம். சாவி கொடுத்துவிட்டவன் யாரோ. இவன் ஆடுகிறான். அவன் என்னை உதைத்தான் என்பதல்ல அவமானம். என் சமூகத்தையே உதைத்திருக்கிறான்.

தலைவர் கண்களை மூடிக் கொண்டார். கோடாக நிற்கும் இமை விளிம்பில் மணியாக உருள்வது கண்ணீரல்ல. கரைந்த அவரது உள்ளம்.

ஆஹா! இவரல்லவா மகாத்மா.

கத்தியின்றி, இரத்தமின்றி காந்தி நடத்திய அகிம்சைப் போர்களைப் பற்றித் தன்னால் எவ்வளவு அழகாகப் பேச முடியும் என்பதைத் தீர்மானித்துக் கொண்ட பிறகே ஜில்லாவிலிருந்து வந்த கடிதத்துக்கு ஒப்புதல் பதில் போட்டார்.

தான் ஒன்றித்துப்போன ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குக் கூறும் போது உணர்ச்சிப் பெருக்குடன் சொற்பெருக்காற்றலாம் என்ற நம்பிக்கையும் அவருக்கிருந்தது.

இன்று நேற்றா மேடையேறுகின்றார். சொற்பொழிவுக்கு ஒத்துக் கொண்டால் தலைப்பையும் தரும்படி கேட்டிருந்தார்கள் விழாக் குழுவினர். அவர் எழுதி அனுப்பிய தலைப்பைத்தான் விழா நோட்டீசில் அச்சிட்டிருக்கிறார்கள். தலைப்பை நினைக்கையில் அவருக்கு இப்போதும் புல்லரிக்கின்றது.

“கத்தியின்றி ரத்தமின்றி”

-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ-

அன்று ஒரே அடை மழை.

வானம் பொத்துக் கொண்டு விட்டதோ என்று ஐயுறும் அளவுக்கு அடித்துக் கொண்டு ஊற்றுகிறது. இந்தப் பூமியே இப்படித்தான். எப்போது பெய்யும். எப்போது காயும் என்று யாராலும் நிர்ணயித்துக் கூற முடியாது.

நோவா காலத்தைய நாற்பது நாள் மழையும் அன்றே பெய்து தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிகாலையிலே காற்றும் மழையுமாகக் கொட்டத் தொடங்கிவிட்டது.

மலையில் நிற்கும் மரங்கள் ஆடி அழன்று சோபை கெட்டுப்போய் நிற்கின்றன.

கூடையும் தலையுமாக கொழுந்தெடுக்க மலையேறிவிட்டவர்கள் குன்னிப்போய் மரத்தடிக்கு மரத்தடி நிற்கின்றனர் நனைந்த கோழிகள் போல் வெளிறிப்போய்.

தடதடவென்று ஓசையுடன் எங்கோ ஒரு சவுக்குக் கிளை முறிந்து விழுகிறது.

“ஏய் புள்ளங்களா ஒருத்தரும் மரத்தடியில் நிக்காதீங்க. வாதேதும் புண்டு விழுந்தாலும் விழும்…. ஆபத்து” என்று கத்தியவாறு நின்று கொண்டிருந்த மரத்தடியிலிருந்து பெயர்ந்தோடினான் கங்காணி.

கையை நீட்டிக் கொழுந்தெடுக்க முடியாவிட்டாலும் பெயருக்குக்கூட மலையில் நிற்க முடியவில்லை.

ஊன்றி நிற்கும் கால்களும், ஊஞ்சலாடித் தொங்கும் கைகளும் உணர்விழந்து சுரணை கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. வேறோர் மலையில் வேலை செய்யப் போய் உரப்பட்டியில் ஒண்டி நின்ற தோட்டத்துத் தலைவர் ஆபீசை நோக்கி ஓடினார்.

கம்பளிச் சட்டையும் தானுமாக கதகதவென்று உட்கார்ந்திருந்த துரை ள்ளிழுத்த புகையை கூரையை நோக்கி ஊரிவிட்டு “ஏஸ் தலைவர் என்னா இந்த நேரம்?” என்றார்.

“வேலைவிட்டுறனுங்க மழை அடிக்கிற அடி தாங்க ஏழாதுங்க. மரம் ஏதும் ஒடிஞ்சு விழுந்தா ஆபத்து….”

“சரி விட்டுறுவோம்… ஆனா இன்றைய சம்பளம்…..”

“முழுச் சம்பளம் குடுகணுங்க. தோட்டத்துக்கே உழசை;ச ஆளுங்கதானே. மழை இப்படி பேயோட்டி முழு நேரம் வேலை செஞ்சுருக்குங்க தானே…”

“சரி இன்னும் ஒஐ அரை மணி நேரம் பார். மழை விடாட்டி எடுத்த கொழுந்தை நிறுத்துட்டுப் போகச் சொல்லு…..”

“நல்லங்க” என்று ஆபீஸ் படி இறங்கிய தலைவரை துரையின் குரல் நிறுத்தியது.

“கணக்கப்பிள்ளையை ஆபீசுக்கு வரச் சொன்னேன்னு சொல்ரு உடனே….”

-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ-

“இப்போது மணி ஒன்பதுதானாகிறது. இப்போதே வேலை நிற்பாட்டி முழுப்பேர் கேட்கிறார்கள். நீ எப்படியாவது பனிரெண்டறுதி நீ கொழுந்தெடுக்கப் பார். அப்போது தான் பாதிக்குப் பாதியாவது தேறும். ஒரே நேரம் நிறுத்தாலும் பரவாயில்லை… சரி போ”

தொப்பையாக நனைந்தபடி மழைக்கோட்டும் தானுமாக ஆபீசுக்கோடி வந்த கணக்கப்பிள்ளையிடம் துரை இப்படிக் கூறினார்.

பெருமாள் மாடாய் “வெறிவெல் சார்” என்று தலையாட்டிவிட்டு மழைக்கோட்டைச் சுமந்தபடி படியிறங்கினார் கணக்கப்பிள்ளை.

முட்டையுடன் ஊரும் கட்டெறும்புக் கூட்டமாய் கூடையுடன் சாரி சாரியாக ஆட்கள் ஊர்ந்து கொண்டிருந்தனர் – பெரட்டுக் களத்தை நோக்கி கொழுந்து நிறுக்க.

கைக்கடிகாரம் நனைவதையும் பொருட்படுத்தாமல் மழைக்கோட்டுக்கு வெளியே கையை நீட்டி மணியைப் பார்க்கின்றார் ஆபீசிலிருந்து படியிறங்கிக் கொண்டிருந்த கணக்கப்பிள்ளை.

மறுபடியும் உற்றுப் பார்த்தார். மணி ஒன்பது ஐந்து. இந்த மழையில் ஆட்களை மலையில் நிறுத்தி வைப்பதும் ஒன்றுதான். லயத்துக்கனுப்புவதும் ஒன்றுதான். மலையில் நின்றால் மட்டும் வேலை செய்யவா போகிறாரர்கள். வேலை செய்யத்தான் முடியுமா?

ஆனால் பன்னிரண்டு மணிக்கு முன்பாக இவர்களை வீட்டுக்கனுப்பி விட்டால் துரையிடம் தப்பிக்க முடியுமா அவரால்.

சாரைப்பாம்பு போல விர்ரென்று இறங்கினார் குறுக்குப் பாதையில்.

சர்ரென்று ஊற்றிய மழை சப்பாத்துத் தொப்பி மழைக்கோட்டு ஆகியவற்றில் டப்டப்பென்று விழுந்து தெறித்தது.

நீரடித்த காடாய்க் கிடக்கிறது பெரட்டுக் களம்.

ஆட்கள் கூடையும் படங்குமாய் கூனிக் குறுகிக் கொண்டு நிற்கின்றனர்.

“ஏ கங்காணி! என் இதுகளை எல்லாம் இழுத்துக்கிட்டு வந்தே…. மணியைப் பார்…” கையை நீட்டிக் காட்டுகிறார். “ஒன்பதே கால்தான். இப்பவே நெறுக்க ஏலாது. ஒன்பதே காலுக்கு நிறுத்த இந்தாளுகளை வீட்டுக்கனுப்பிட்டா ஒங்க பாட்டன் துரை சும்மாருப்பானா… இப்பவே நிறுக்கேலாது. போய் வேலை செய்யச் சொல்லு… ம்ம்… போ… எல்லாம்…” கணக்கர் கத்தினார்.

கணக்கப்பிள்ளை ஐயாவுக்குப் பயந்த ஓரிருவர் கூடையைத் தூக்கிக் தலையில் மாட்டினர்.

“ஒருத்தரும் போக வேணாம். போடு கூடையைக் கீழே….” தலைவர் நின்று கொண்டிருந்தார்.

கணக்கப்பிள்ளை தலைவரை முறைத்துப் பார்த்தார்.

“அய்யா சும்மா மொறைக்காதீங்க தொரைக்’கிட்டக் கேட்டுட்டுத்தான் ஆளுகளை மலையில் இருந்து எறங்கச் சொன்னேன் நான்….”

“வேலை செய்யுற ஆளுகளை மலையில் இருந்து எறங்கச் சொல்ல நீ யார்….? தொரையே சொல்லியிருந்தாலும் கூட நீ வந்து என்கிட்டத்தான் சொல்லியிருக்கணும்”

“இங்க பாருங்கையா” ஒரு பெண் காலைக் காட்டுகிறாள். நாட்டியக்காரி கலங்கை கட்டியது போல் விரல் பருமனில் ரத்தம் குடித்த அட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. இதைக் கவனித்ததாகக் கூடக் கணக்கப்பிள்ளை காட்டிக் கொள்ளவில்லை.

“தொரைதான் போகச் சொல்லிட்டாரே உங்களுக்கென்னய்யா வந்தது…. நீங்க கையை ஒடிச்சுக் கிட்டு சம்பளம் குடுக்கிறாப்புல…”

“கையை ஒடிகக்pற காலை ஒடிக்கிற கதை எல்லாம் நம்மக்கிட்ட வாணாம்… நான் நெறுக்கப் போறதில்லே… நீ எல்லாம் மலைக்குப் போ…”

“நிறுக்காட்டிப் போ… கொஞ்சம் கூட ஈவு இரக்கம் கெடையாதவன்” என்றபடி ஒருவன் கூடையைக் காலால் எட்டி உதைத்தான்.

கொழுந்து விசிறியடித்தது.

“ஏன்டா பார்த்திகிட்டு நிக்கிறீங்க. கொட்டீட்டு வா…” நாலைந்து இளவட்டப் பையன்கள் கூடையை எத்திவிட்டனர்.

“நிறுக்கப் போறியா இல்லையா…” இது தலைவர்.

“நீ ஆயிரம் காரணம் சொல்லு. நான் நிறுக்கப் போறதில்லே…” இது கணக்கப்பிள்ளை.

“ஆளுங்க எல்லாம் குளிர் புடிச்சுத் செத்தா…?”

“மண்ணும் ஈரமாத்தான் இருக்கு… குழி வெட்ட லேசாத்தான் இருக்கும்”

ஆத்திரம் கொண்ட தலைவரின் கவ்வாத்துக் கத்தி கணக்கப்பிள்ளையின் தோளில் பாய்ந்தது.

கொய்ய மரத்தில் கொத்தியது போல் கணக்கப்பிள்ளையின் தோள் எலும்பில் கொத்தி நின்ற கத்தியுடன் பிரக்ஞையற்று கீழே விழுந்தார் கணக்கப்பிள்ளை.

ரத்தத்தில் மூழ்கிய கத்தி தனது சிவந்துவிட்ட கண்களால் தலைவரை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது.

– செங்கதிர் – பெப்ரவரி 2009 – வீச்சு 14

– மீன்கள் (சிறுகதைத் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: ஜெயமோகன், முதற் பதிப்பு: டிசம்பர் 2013, நற்றிணை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *