கணக்கர் கடவுள்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 4,353 
 
 

இந்தியா…..ஆண்டு 1978……

இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை.

இரண்டு வருடங்கள் கழித்து அப்பாவைப் பார்க்கப் போகிற சந்தோஷமும் இல்லை. மனம் நிறைய கவலையே நிறைந்து இருந்தது.

அவசரப் பயணம் என்பதால் மதிப்புள்ள சாமான்கள் எதுவும் கொண்டு செல்ல வில்லை. கஸ்டம்சில் நேரம் எதுவும் வீணாகவில்லை. ஆனாலும் சென்னைக்கே உரித்தான ரௌடிகளின் மிரட்டல், விமான நிலையத்திலேயே ஆரம்பித்து விட்டது….

“அந்த ஆபிசர் சொல்லியனுப்பிச்சாரு….ரெண்டாயிரம் ரூபா எடு” என்றான் ஒரு ரௌடி…பணம் கட்டும்படி நான் எதுவும் கொண்டுவரவில்லை என்று சொல்லியும் மிரட்டல் பாவணையில் என்னை நெருங்கினான்.

ஓடும் வரை துரத்துகிற நாயை நின்று திரும்பிப் பார்த்து முறைத்தால் பயந்து ஒடுங்குவதைப் போலத்தான் இவர்களும். அதைப் புரிந்து நானும் “போலீசைக் கூப்பிடவா?” என்றதும் மிரட்டி பணம் பிடுங்க வந்த ரௌடி காணாமல் போனான்.

நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் “சண்டாளப் பசங்க!!….. நாசமா போகணும்!!” என்று சபித்தார். ‘இந்த சாபமெல்லாம் எங்கே பலிக்கப் போகிறது?’ என்று நினைத்தபடி என் வீட்டிற்குப் போனேன்.

அப்பா இருந்த கோலம் என்னை அதிர வைத்தது. சதைப் பிடிப்பு எதுவும் இல்லாமல், எலும்பும் தோலுமாய்……, நடக்கக்கூட சக்தி இல்லாமல்….., சின்னக் குழந்தை போல் சுவரைப் பிடித்துக் கொண்டு, அங்குலம் அங்குலமாய் கழிவறை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்……

“என்ன வாழ்க்கை இது?’ என்ற வெறுப்பு தெரிந்தது. நான் “அப்பா” என்று கூப்பிட்டது கூட அவர் காதில் விழவில்லை.

குழந்தையாக இருந்த போது பெற்றோர் நமக்கு அசிங்கம் பாராமல் செய்ததை எல்லாம் அவருக்கு நான் செய்யலானேன்.

“இந்தா…, அப்பாவுக்கு நீயே சாப்பாடு ஊட்டிவிடு….., நேத்திலேர்ந்து எதுவும் சாப்பிட மாட்டேங்கிறார்…… ஊட்டி விட்டாலும் வாயைத் திறக்க மாட்டேங்கிறார்…… இப்படியே இருந்து செத்துடறேன்னு சைகை காட்டி அழறார்”

என்னருகே வந்தமர்ந்த அம்மா என் தோள் மேல் சாய்ந்து, குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

கண்களில் நீர் பெருக, எனக்கு அன்னமிட்டு வளர்த்தவருக்கு சாதம் ஊட்ட, அவர் வாயருகே என் கையை நீட்டினேன். அவர் வாயைத் திறக்கா மல் சிறு குழந்தை போல் அடம் பிடித்தார்.

நான் சட்டென்று எழுந்து, “அம்மா, நான் போய் இவரை ஆஸ்பத்திரியில சேர்க்க வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்திட்டு வரேன். தயாரா இருங்க” என்று சொன்னேன்.

‘சுயநலம் பார்க்காமல் என்னை வளர்த்து ஆளாக்கியவரை அவர் கடைசி நாட்களிலாவது வலி இல்லாமல்…… மன வேதனை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது என் கடமை இல்லையா?’

அம்மா மறுத்தும் நான் டாக்டரைப் போய்ப் பார்த்து ஏற்பாடு செய்தேன்…. நிறைய பணம் தேவைப்பட்டது. வங்கிக்கு சென்று, என் கணக்கில் இருந்த சுமார் நான்கு லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, ஒரு மஞ்சப் பையில் அள்ளித் திணித்து, மின்சார ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்…….

ஆழ்ந்த யோசனையில் இருந்த நான் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும்தான், என் கையில் பணப்பை இல்லை என்பதை உணர்ந்தேன்

திரும்பி உள்ளே சென்று பார்க்கலாம் என்பதற்குள், அந்த ரயில் கிளம்பி இருந்தது. துாரத்தில் போய்க்கொண்டிருந்த அந்த ரயிலில் இருந்து என் அப்பா எனக்கு “டாட்டா!” காண்பிப்பது போல்….. ஏதோ ஒரு நம்பமுடியாத பிரம்மை எனக்கு தெரிந்தது!!

ஸ்டேஷன் மாஸ்டரிமும் போலீசிக்கும் புகார் செய்தேன். பிரபல நாளிதழிலும் விளம்பரம் செய்தேன். நான்கு நாட் கள் கழித்து அப்பா உயிர் துறந்தார்….. அந்தப் பணமும் எனக்குக் கிடைக்கவில்லை.

‘நான் செய்த பாவம் என் அப்பாவைக் காப்பாற்ற முடியாமல் என்னைத் தடுத்ததா? அல்லது யாரோ ஒருவர் செய்த புண்ணியம் அந்தப் பணத்தை அவன் அனுபவிக்க வைத்ததா? ஆண்டவனின் லீலைதான் என்ன?’ என்று குழம்பினேன்.

“எவன் கைக்கு அந்தப் பணம் போனதோ, அவன் நாசமாப் போகட்டும்!” என்று என் மனம் உள்ளுக்குள் சபித்து கொண்டிருந்தது.

சில நாட்களுக்குப் பின் உள்ளுக்குள் சபித்துக் கொண்டு இருந்த நான், “நாசமா போகட்டும்!”’ என்று சில வேளைகளில் பலர் காதில் விழும்படி சபிக்கலானேன்

***

சிங்கப்பூர்…….ஆண்டு 1998…….

ஜகதீஷ்….. குமாரவேலுவின் ஒரே மகன். ஏழு வருடங்கள் உற்றார் ஊரார் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகி, ஏங்கித் தவமிருந்து பெற்ற பிள்ளை…… குழந்தையாய் தாய் வயிற்றில் இருந்து வெளியே வரும் வரை எவ்வளவு சோதனை??!!

கடைசியில் ஆண்டவனின் வரமாக அந்தப் பிஞ்சுக் குழந்தை, தன் பிஞ்சுக் கைகளையும் கால்களையும் மெல்ல அசைத்தபடி குமாரவேலுவின் கையில் மலர்ந்த போது, உடம்பெல்லாம் பனி போல் உருகியது…. ஒரு தெய்வத்தை நேரில் கண்ட பூரிப்பு அந்தப் பிஞ்சு மலரைப் பார்க்கும் போது!!.

அன்று முதல் அந்தக் குழந்தை தான், குமாரவேலுவின் வாழ்க்கையானது.

தன் மகன் அந்த உலகப் புகழ் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் போல் விஞ்ஞானத்தில் சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டு அவரது பெயரையே சூட்டினான்.

கூடவே நல்ல வழிகாட்டியாய் இருந்து, சிறந்த கல்வி பெற வைத்தான். ஜகதீஷம் முதல் வகுப்பு முதல் எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாக படிப்பில் சிறப்பாக திகழ்ந்தான்….. சிறந்த மாணவன் என்று பெயர் பெற்றான்!

செகண்டரி இறுதிப் படிப்பில் முதல் மாணவனாக வந்ததும், குமாரவேலுவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை!

மகனைக் கட்டி அணைத்து, உச்சி மோந்து, “அடுத்து என்ன படிக்கப் போறே? நீயே சொல்லு. இனி எல்லாமே உன் இஷ்டம்….. எவ்வளவு பணம் வேணும்னாலும் கேளு, ஏன் எதுக்குன்னு கேட்காம தரேன். நீ பெரிய சைன்டிஸ்டா வரனும்.” என்று உற்சாகப்படுத்தினார்.

“சைக்காலஜி படிக்கணும்னு ஆசைப்படறேன்”

“ஏன் அந்த சப்ஜெக்ட்?”

“நீங்க என்கிட்ட பல முறை சொல்லி இருக்கீங்க…… என்னை ஏழு வருஷம் தவமிருந்து பெத்தது….. அதுக்காக எத்தனையோ அவமானங்களை அனுபவித்தது…. இதெல்லாம்……அப்புறம் நான் படிச்ச நியூட்டனோட இரண்டு விதிகள் Third Law of Motion ‘To Every Action there is Always an Equal and Opposite Reaction’ (நியூட்டனின் மூன்றாவது விசை விதி – ‘ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு’)

……அப்புறம்…… அந்த Law of Conservation of Energy – ‘Energy can Neither be

Created Nor be Destroyed; Energy Disappearing in One Form Re-appears in Another Form without any Loss – (ஆற்றல் அழிவின்மை விதி – ‘ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஆற்றல் ஒன்று ஒரு வகையில் மறையுமாயின் அதுவே பிறிதொரு வகையில் சேதமின்றி வெளித்தோன்றும்!)…..

இந்த இரண்டு விதிகளும் நம்ம அன்றாட வாழ்க்கைக்கும் வழி வகுத்து வருதுன்னு எனக்குத் தோணுது……பாவம், புண்ணியம், ஜென்மம் இதெல்லாம் உண்மைதான்னு நிறைய பேர் நம்பினாலும், இதுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை. அந்த ஆதாரத்தைக் கண்டு பிடிக்கணும்னு ஆசைப்படறேன்பா!” குமாரவேலு, பதினெட்டு வயதான மகனின் பேச்சைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார். அவனை ஆரத் தழுவிக் கொண்டு மெச்சினார்.

ஜகதீஷ் மருத்துவக் கல்லுாரியில் அடி எடுத்து வைத்தான்….. புது நண்பர் கள், புது படிப்பு, பதின்ம வயது கோளாறுகள் எல்லாம் சேர்ந்து அவனுக்கு வேறொரு உலகைக் காட்டின.

கற்பகா என்பவள் அவனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தாள்…. இருவரும் படிப்பில் மட்டுமல்ல, காதலிலும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்!!

அமெரிக்காவில் உள்ள அவள் உறவுக்காரப் பையன் வடிவில் சிக்கல் முதலில் வந்தது. கற்பகா தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளும் படி ஜகதீஷை வற்புறுத்தினாள்.

அவன் அப்பாவிடம் தன் ஆசையைச் சொன்னான்.

அவரோ, முதலில் கடுமையாக எதிர்த்து விட்டு, இவனது உறுதியைப் பார்த்ததும், “படிப்பை முடித்து விட்டு, அதே பெண்ணையே திருமணம் செய்து கொள்” என்று சொன் னார்.

ஆனால் கற்பகாவால் அதுவரை காத்திருக்க முடியவில்லை. திடீரென்று கல்லூரிக்கு வருவதை நிறுத்தினாள் சில நாட்களில் அமெரிக்கப் பையனையே மணந்து செட்டிலாகிவிட்டாள்!

இது ஜகதீஷை மிகவும் பாதித்தது…. இது வரை தோல்வியே சந்தித்திராத அவன் வாழ்வில் இந்தத் தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!!

இவனுடைய சோகத்தைப் பார்த்த சிலர் ஆறுதலும், அறிவுரையும் சொன்னார்கள். சிலர் கிண்டல் செய்தார்கள்….

சிலர் தவறான பாதையை காட்டினர்…. சொர்க்கத்தைக் காட்டுவதாக சொல்லி நரகத்திற்கு இட்டுச் சென்றார்கள்!……போதை மருந்து பழக்கத்தால் வந்த வினை, நிலைமை கை மீறிப் போனது…..சுற்றுலா போவதாகச் சொல்லி விட்டு, கோவாவுக்கு போய் ஜகதீஷ் அடித்த கொட்டம் பற்றி குமரவேலுவிற்கு அவரது நண்பர் மூலம் தெரிய வந்தது.

அவனிடமே கேட்ட போது, அவன் தன்னை மறந்த நிலையில் இருந்தான். “ஆமாம்” என்று அகந்தையாகச் சொன்னான்….. வீட்டிலேயே பணம் திருட ஆரம்பித்தான். ஒரு நாள் கண் எதிரில் பார்த்துத் தடுத்த போது, ஜகதீஷ் அவரைத் தள்ளினான்!!

“கிட்ட வராதீங்கப்பா!….. எனக்கு செத்துப் போகணும் போல இருக்கு!… நான் இந்த நிலைக்கு வர நீங்கதான் காரணம்….. ஏன் என்னன்னு கேட்காம கேட்டப்பல்லாம் பணம் கொடுத்து என்னைக் கெடுத்துட்டீங்க!!”…முகம் சிவந்து அழாத குறையாக பேசினான் ஜகதீஷ்.

“ஜகதீஷ்…. நீயா இப்படிப் பேசறே?….. உன் சுய புத்தி எங்கே?…. ஆராய்ச்சி ஆர்வம் எங்கே?…. பெரிய சைக்காலஜிஸ்ட் ஆகணும்னு சொல்வியே…? நீயா….?” குமாரவேலு அவன் காலில் விழாத குறையாக மன்றாடினார்.

அன்று இரவே ஜகதீஷ் பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டைவிட்டுப் போனது, மறுநாள் காலையில் தான் தெரிந்தது.

இந்த மாதிரி பிள்ளைகள் மயங்கிக் கிடக்கிற இடம் போலீஸ் உதவியுடன் அறிந்து, அங்கே போய் பிள்ளையை இழுத்து வந்து, நன்றாக அடித்து உதைத்தார்.

குறுக்கே வந்த மனவியையும் தள்ளி விட்டு, ஆத்திரம் தீர அடித்த பின், அழுதார்

“என்ன பாவம் செய்தோம்?’ என்று மனம் வெம்பி அழுத போது அவருக்கு இதயம் வலித்தது……..நிழலாகிப் போன நிஜம் ஒன்று நினைவிற்கு வந்தது……

***

இந்தியா…..ஆண்டு 1978……

குமாரவேலுவின் மனைவிக்குப் பிரசவ நேரம்…… இந்தியாவில், சென்னையில் அவளை மருத்துவ மனையில் சேர்த்து விட்டு குழந்தை பிறப்பை ஆவலோடு எதிர்பார்த்திருந்த நேரம்….

மனைவி சரளாவுக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் அவளையும் பிறக்கப் போகும் குழந்தையையும் காப்பாற்ற மருத்துவ செலவு அதிகமாகும் என்று டாக்டர் கூறி விட்டார்.

குமாரவேலுவிற்கு அப்போதுதான் சிங்கப்பூரில் நல்ல வேலை ஒப்பந்தம்

ஆகி இருந்தது. குழந்தை பிறந்த பின் குடும்பத்தோடு சிங்கப்பூருக்குச் சென்று விடலாம் என்று முடிவு செய்தவனுக்கு, நிறைய பணம் தேவைப் பட்டது.

‘தவமிருந்து பெறுகிற பிள்ளையைப் பறி கொடுப்பதா? அன்பான மனைவியை இழப்பதா? சிங்கப்பூர் கனவை பறி கொடுப்பதா?’ என்று மனம் அல்லாடிக் கொண்டிருந்தது.

ஆண்டவனை வேண்டியவாறு மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தவனுக்கு அந்த மஞ்சப் பை கண்ணில் பட்டது!…….அதன் அருகே யாரும் இல்லை….. எடுத்துத் திறந்து பார்த்தால்……. கற்றை கற்றையாகப் பணம்!!

குமாரவேலுவிற்கு ஒரே சந்தோஷம்…..ஆண்டவன் இவ்வளவு சீக்கிரம் தனக்கு வழி காண்பித்துள்ளாரா என்று மயங்கி குதூகலமானார்….அத்தனை பணத்தையும் எடுத்துக்கொண்டு போய் உடனேயே மருத்துவ செலவிற்குப் பயன்படுத்தினார். தன் சிங்கப்பூர் பயணத்திற்கும் எடுத்துக் கொண்டார்.

சில நாட்களுக்குப்பின் நாளிதழில் வெளி வந்த விளம்பரத்தைப் பார்த்தார். மனம் சஞ்சலப்பட்டது. என்றாலும் “அது அவனோட விதி” என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.

இரண்டு வருடங்கள் கழித்து குடும்பத்தோடு சிங்கப்பூர் வந்து, உல்லாச வாழ்க்கையினால்……. அந்த சம்பவத்தை காலப் போக்கில் மறந்தும் போனார்.

***

சிங்கப்பூர்…….ஆண்டு 1998…….

இப்போது அவை எல்லாம் குமாரவேலுவின் நினைவிற்கு வந்தன…. “பெரிய பாவம் பண்ணிட்டேன்!” என்று புலம்பினார் குமாரவேலு.

அவரால் இப்போது அழத்தான் முடிந்தது. அசைய முடியவில்லை. அதிர்ச்சி அவர் உடலை முடக்கி விட்டது……..ஜகதீஷ் பர்ஸில் இருந்து பணம் எடுப்பதைத் தடுக்க முயன்ற போது அவன் உதைத்த உதை அவரை எங்கெங்கோ பதம் பார்த்திருந்தது.

ஜகதீஷ் குழந்தையாக பிஞ்சாக இருந்த போது……அந்தப் பிஞ்சுக் கால்களை முத்தமிட்டு மகிழ்ந்த காலத்தை எண்ணிப் பார்த்தார் குமாரவேலு.

“அந்த சம்பவத்தை ஒரு சத்திய சோதனையாகக் கருதி, நேர்மையாக நடந்து கொண்டு, இன்னொருத்தரின் பணத்தை எடுக்காமல் இருந்து இருந்தால்…. இன்று எனக்கு இந்தக் கோலம் வந்திருக்குமா?”

இப்போதெல்லாம் நாம் செய்கிற பாவங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் இல்லை, அந்தந்த ஜென்மத்திலேயே அனுபவிக்க வேண்டி வருகிறது என்ற கசப்பான உண்மையை அனுபவத்தால் உணர்ந்தார்.

செய்த தவறுக்கு மனம் நொந்து வருந்தி படுத்த படுக்கையாகவே சிலதினங்கள் கழித்து இறந்து போனார்.

மனத் தத்துவம் படித்து அதில் விஞ்ஞானி யாக ஆசைப்பட்ட ஜகதீஷ்…. இப்போது ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறான்.

அவன் கணக்கு இனிமேல்தான் துவங்குகிறது!!

கணக்கர் கடவுளிடம் நம் எல்லோரின் பாவ புண்ணிய கணக்குகள் அவரின் Data Baseல் இருக்கிறது!!!….

டிஜிட்டல் உலகில் புரளும் நாம் தான் விழித்து நல்லவிதமாக வாழ வேண்டும்.

Print Friendly, PDF & Email

1 thought on “கணக்கர் கடவுள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *