கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 5,642 
 

அலுவலக நாற்காலியில் அமர்ந்து கோப்புகளை பிரித்து கையில் பேனா பிடித்தும் சந்தரத்துக்கு வேலையில் மனம் பதியவில்லை.

நாலு கொத்து, எட்டு சித்தாள், தவிர இரண்டு ஆள்… கூலி இன்றைக்கு ஐயாயிரத்தைத் தாண்டும். ! – வீட்டு வேலையிலேயே மனம் சுழன்றது.

பதினைந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஆட்களை விரட்டி விரட்டி வேலை வாங்கியதில் வீடு தரை மட்டத்தைத் தாண்டி மேலே வந்திருப்பதால் ரொம்ப திருப்தி.

விடுப்பை 15 நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில் சில சிக்கல்கள். அதனால். .. இன்று ஒரு நாள் மட்டும் அலுவலகம் வந்து விட்டு நாளை முதல் மீண்டுமொரு 15 நாட்கள் விடுப்பு எடுக்கத் திட்டம். அதைக் கருத்தில் கொண்டு தான் இன்றைக்கு வேலைக்கு வந்தான். வீட்டு வேலையிலேயே மனம் லயிப்பு.

வேலை நடக்கும் இடத்தில் அப்பாவைக் காவலுக்கு வைத்து விட்டு வந்தும் திருப்தி இல்லை. மனம் அல்லாடல். !

அப்பா வயதானவர். வெயிலில் நின்று ஆட்களை விரட்டி வேலை வாங்க முடியாது. கண், காது வேறு கொஞ்சம் மட்டு. தூரத்தில் ஆட்கள் இருப்பதும் தெரியாது. அவர்கள் பேசுவதும் புரியாது.

இதையும் மீறி ஆட்களை விரட்டி வேலை வாங்கினால். ..அவர்களிடம் அசைவுகள் இருக்குமேத்தவிர வேலைகள் நடக்காது.

கல் எடுத்து சுமக்கும் இடத்தில் சும்மா வெட்டிக்கதைகள் பேசிக்கொண்டு நாலைந்து பேர் நிற்பார்கள். கவனிக்க ஆளில்லை என்பதால் வேலை மெதுவாகத்தான் நடக்கும்.

” சார் ! ” குரல் கேட்டு நிமிர்ந்தான்.

எதிரில் கடைநிலை ஊழியன் கதிர்.

” என்ன கதிர். .? ”

” மேனேஜர் ஐயா உங்களை கூப்பிடுறாங்க. ”

கோப்பில் அடையாளத்துக்குப் பென்சிலை வைத்துவிட்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தான்.

” வணக்கம் சார். ” முதல் மரியாதை சொன்னான்.

” உட்காருங்க. ..” எதிர் நாற்காலியைக் காட்டிய ஏகாம்பரம் ரொம்ப கண்டிப்பானவர், கண்ணியமானவர்.

அமர்ந்தான்.

” என்ன கதிர். நான் கொடுத்த வேலையை முச்சுட்டீங்களா…? ” கேட்டு ஆளை ஏறிட்டார்.

கோப்புகளைப் பிரித்ததோடு சரி. இன்னும் தொடவில்லை. மனசு வீட்டு வேளையிலேயே இருப்பதால் அதைப்பற்றிய சிந்தனை இல்லை.!

” வந்து சார்…. ” சுந்தரம் இழுத்தான்.

” அரை மணி நேரத்துல முடிக்க வேண்டிய வேலை .இன்னும் ஏன் முடியல. .? ”

‘ என்ன சொல்வது…? ‘ மௌனமாய் இருந்தான்.

” சும்மா சொல்லுங்க. .? ”

” வீட்டு வேலை நடந்துக் கிட்டிருக்கு சார். மேஸ்திரி கிடையாது. நான்தான் பார்த்துப் பார்த்து கட்டுறேன். பதினைந்து நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து விடுப்பு எடுக்க முடியாத்ததுனால இன்னைக்கு வேலையில சேர்ந்துட்டு நாளையிலேர்ந்து விடுப்பு எடுக்கலாம்ன்னு வந்தேன் சார். ”

” அதனால நாம இல்லைன்னா ஆளுங்க வேலை பார்க்க மாட்டாங்க. பேசிக்கிட்டே நேரத்தை ஓட்டுவாங்க. அந்த எண்ணம்தானே. .? ”

” ஆமாம் சார். .! ”

” ஒரு கொத்து, சித்து சம்பளம் எவ்வளவு. .? ”

” அறநூறு, நாநூறு … ஆயிரம் சார். ”

” நாம கொடுக்கிற கூலிக்கு வேலை சுறுசுறுப்பாய் நடக்கணும்ன்னு எதிர்பார்க்கிறதுல தப்பொண்ணும் இல்ல. ..”

” அ. . ஆமாம் சார். ! ”

” இங்கே உங்க ஒரு நாள் சம்பளம் எவ்வளவு. .? ”

” ஆயிரத்து ஐநூறு ! ”

”உங்க சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது… கொத்து சித்தாள் மூணுல ஒரு பங்கு. சரியா. .? ”

” ச. .. சரி சார். ”

” அந்த சம்பளத்துக்கே அவர்கள் முதுகொடிய வேலை பார்க்கணும்ன்னு எதிர்பார்க்கிறபோது. .. நாம வாங்கற சம்பளத்துக்கு நாம் எவ்வளவு உழைக்கனும். ?.! ”

” சார் ! ” பிடரியில் அடிபட்டவனாக அலறினான்.

”சொந்த வேலை. மன உளச்சல் எல்லாம் எல்லோருக்கும் இருக்கு. அதுக்காக அதையே நினைச்சுக்கிட்டு நம்ம கடமையிலிருந்து தவறுவது நாம வாங்கற சம்பளத்துக்கு செய்யிற மிகப்பெரியது துரோகம். ! யோசிச்சுப் பாருங்க. ” முடித்தார்.

சுந்தரத்துக்குள் தன் தவறு சுருக்கென்று குத்தியது.

” மன்னிச்சுக்கோங்க சார். இனி இந்த தவறு நடக்காம பார்த்துக்கிறேன். நீங்க கொடுத்த வேலையை உடனே முடிச்சு வர்றேன் . ” சொல்லி சுறுசுறுப்பாக எழுந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *