கங்கா கீதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 775 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தருணம் பௌத்தப் பள்ளியில் நின்ற மாமரங்கள் ஆடவு மில்லை. அசையவுமில்லை. மாஞ்சோலையில் ஊதிக் கொண்டிருந்த காற்று, சலன மற்று இருந்தது. பள்ளியைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்த மஹாவலி கங்கையும் ஒரு கணம் தயங்கி நின்றுதான். திரும்பவும் ஓட ஆரம்பித்தது.

மகாநாயக தேரர் புத்தகோஷர், திரும்பிப் பார்த்தார். பௌத்தப் பள்ளியின் வாசலைத் தாண்டி மறைந்து கொண்டிருந்தது ஒருயௌவன பிக்ஷவின் உருவம். அது கையில் பிக்ஷாபாத்திரத்துடன் நிலத்தை நோக்கிய வண்ணம் சென்றது. இதைப் பார்த்த அவருடைய கண்க ளிலே நீர் நிறைந்து கொண்டிருந்தது. ஆனால், இது அவர் இட்ட கட்டளை.

இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். சமனலகந்த மலையின் அடிவாரத்தில் ஆற்றோரமாய் “ஞானோதயப் பிரிவினா” என்ற ஒரு பௌத்தப் பள்ளி. அதைச் சுற்றிலும் குன்றுகள். ஒரு புறத்தில் குறிஞ்சி நாட்டு மக்களின் குடிசைகள். இடையில், உன்னதமாய் நிமிர்ந்து நின்றது ஒரு புத்த விஹாரை. புத்தகோஷர் அப்பள்ளியின் மஹாநாயக தேரர் பீடத்தில் அமர்ந்ததும், அந்தப் பிரிவினாவின் பெயரும் புகழும் கடல் கடந்து, சீனா, திபெத், இந்தியா முதலிய தேசங்களையும் எட்டியிருந்தது. அந்நாடுகளிலிருந்து புத்த பிக்குகள், மஹா வித்வானாகிய புத்த கோஷரிடம் பாடங் கேட்க வந்து கொண்டிருந்தனர். காஞ்சியிலிருந்து உபாலி என்ற ஒரு யௌவன சந்நியாசியும் வந்திருந்தார்.

புத்த கோஷர் அந்நாட்களில் ‘விசுத்தி மார்க்கம்’ என்ற பௌத்த நூலைப் பாலி பஷையில் எழுதிக் கொண்டிருந்தார். உபாலியின் குருபக்தியையும், புத்திக்கூர்மையையும், திரிபிடகத் தில் அவனுக்கு இருந்த பரிச்சியத்தையும் கண்டு, புத்த கோஷருக்கு அவன் மேல் விசேஷ மதிப்பும் அன்பும் இருந்து வந்தது. அவர் சொல்லிக் கொண்டே போக, அவன் ஏடுகளில் அவை களை எழுதிக் கொண்டே போவான். இடையில் அவன் சட்டென்று ஒரு கேள்வியைப் போட்டு விட்டு, ஆசாரிய குருவையே பார்த்துக் கொண்டிருப்பான். அவரும் அவனுடைய தீஷண் யமான புத்தியைக் கண்டு மனசில் வியந்து கொண்டு, ‘உபாலி, தக்க சமயத்தில் இந்தக் கேள் வியைக் கேட்டு விட்டாய். இல்லையானால். நூலில் குறை ஏற்பட்டிருக்கும்” என்று சொல்வார்.

அந்தி வேளை, இப்படித் தரிசன ஆராய்ச்சியிலும், நூல் எழுதுவதிலும், உபதேசங்க ளிலும் கழிந்து விடும்.

காலையானதும் சங்கத்திலுள்ள பிக்குகள் எல்லோரும் உபாலியும் சேர்ந்து பிச்சைப் பாத்திரத்துடன் ஊர் மனைக்குப் போய் விடுவார்கள்;

உபாலி வழக்கமாய்ப் பிச்சை வாங்கி வரும் ஒரு குடிசையில், ஓர் இளம் பெண்ணும், அவள் தந்தையும் குடியிருந்தனர். டிங்கிரி மெனிக்கா என்ற அந்தப் பெண், பிச்சைப் பாத்திரம் நிறைய உணவு நிரப்பி, உபாலியின் கால்களில் வீழ்ந்து வணங்கி உபசரித்து அனுப்புவாள்.

இலையுதிர் காலம் முடிவடைந்து விட்டது. பௌத்தப் பள்ளியில் இருந்த மாஞ்சோலை யில் மரங்கள் இளந்தளிர் விட ஆரம்பித்திருந்தன. குயிலும், மைனாவும், நாகணவாய்ப் புள் ளும் மாஞ்சோலையில் வந்து ஆரவாரஞ் செய்யும் நாட்கள். சாலையோரத்தின் இரு மருங் கும் நிற்கும் அசோக மரங்கள் பூச்சுமந்து நின்றன. மழை விட்டு ஆற்றுநீர் தெளிவுடன் ஓடிக் கொண்டிருந்தது.

உபாலி வழக்கம் போல் டிங்கிரி மெனிக்காவின் குடிசைக்கு முன்னால் வந்து கண்மூடிய வண்ணம் நின்றான். முன்னால் மஹாவெலி கங்கை, நித்திய யெளவனத்துடன் பாடிக் கொண்டு போனது. பிரகிருதியே அப்பாட்டில் மயங்கி, உற்றுக் கேட்டுக் கொண்டு மௌனமாய் நின்றது. டிங்கிரி மெனிக்கா பிச்சைப் பாத்திரத்தை உணவினால் நிரப்பி விட்டு. பிக்குவின் கால்களில் விழுந்து வணங்கினாள். அப்பொழுது அவள் கைகள் அவனுடைய பாதங்களில் பட்டுவிட்டன.

உபாலி போய் விட்டான். ஆனால் டிங்கிரி மெனிக்கா அப்படியே நின்று விட்டாள். பிக்கு வின் வடிவத்தில், முன் அவள் கண்டிராத ஒரு புதுமையையும், மாயத்தையும். மயக்கத்தையும் இன்று கண்டுவிட்டாள். ரோஜாச் செடியின் இலைகளுள் மறைந்திருக்கும் ரோஜாப் புஷ்பத்தின் இதழ்கள் போல் வெளிக் காட்டாதிருந்த ஓர் இன்பமயமான உணர்ச்சி, அவள் மேனி முழுவதும் பரவி அவளை மெய் சிலிர்க்கச் செய்தது.

மறுமுறை அவள் உபாலியைக் கண்ட பொழுது, அவளுக்கு ஆனந்தத்தினால் கூத்தாட வேண்டும் போல் இருந்தது. சந்திரகிரணங்களைக் கண்ட சந்திரகாந்தக் கல் போல் உள்ளம் நெகிழ்ந்து போனாள். அவளுடைய நடையிலும், பார்வையிலும், கீழே வீழ்ந்து வணங்கும் முறையிலும் ஆடவரைப் பித்தாக்கும் ஒரு மோகன சக்தி எப்படியோ வந்துவிட்டது. இதை யெல்லாம் உபாலி எதிர்பார்க்கவில்லை. அபசுரம் போல் ஏதோ ஒலிப்பதாக அவன் உணர லானான். பௌத்த பள்ளிக்கு அவன் திரும்பும் பொழுது மனம் அமைதியுடன் இருக்க வில்லை. மனிதன் இப்படித்தான்! ஊருக்குள் விஷமி யாரோ ஒரு விதையை விதைத்து விட் டான். அது விஷவிருக்ஷமாகிப் பௌத்த பள்ளியின் புனிதமான காற்றையும் நஞ்சாக்கிவிட்டது. உபாலியைப் பற்றிப் பிக்குக்களுக்கிடையில் பலவிதமான கதைகள் உலாவத் தொடங்கின.

உபாலி வழக்கம் போல் பிச்சைக்குப் போய் வந்தான். அவனது உள்ளம் உலக விவ காரங்களில் படியாமல், மேலும் பரமார்த்திக விஷயங்களிலே உறவாடியிருந்தது. நியமமான வாழ்க்கையினாலும், தியானத்தினாலும் அவனது உள்ளும் புறமும் தூய்மை பெற்று, முகத்திலே சாந்தப் பொலிவு நிறைந்து கொண்டு வந்தது. புத்தகோஷர் தனக்குப் பின்னர் ஆசாரிய பீடத்தில் இருக்கத் தகுதி வாய்ந்த ஒருவன் இருக்கிறான் என்று பெருமை கூடக் கொள்வார்.

ஒரு நாள் டிங்கிரி மெனிக்கா கேட்டாள். “சுவாமி நானும் நேற்று “சில” அனுஷ்டித்தேன். அதனால் என்ன பயன் சுவாமி எனக்கு?”

“நல்லது, அது உனக்கு மனச்சாந்தியும், தூய்மையும் கொடுத்திருக்கும்” என்றான் உபாலி.

“ஆனால் எனக்குப் பெரிய வேதனையாயல்லவோ இருக்கிறது சுவாமி. கடலலை போல் என் நெஞ்சம் ஓயாது புலம்பிக்கொண்டிருக்கிறதே!”

“இந்த வேதனையையும், தீராத் துக்கத்தையும் கண்டு தானே பகவான் உலகத்தையே துறந்தார். உன் மனசை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.”

“மனசைப் பற்றிப் பேசுவானேன். இந்தச் சரீரத்தையே கட்டியாள முடியாமல் போய்விடு கிறது. அக்கினி வீசுவது போல் ஒரு கனல் என் தேகம் முழுவதையும் தகித்துவிடும் போல் உணர்கிறேன். இது ஏனோ சுவாமி?”

“உன் மனந்தான் எதற்கும் மூலகாரணம். இன்று உனக்கு உடல் தளர்ச்சியுடன் மனத் தளர்ச்சியும் இருக்கிறது.”

“எனக்கா தளர்ச்சி சுவாமி? சில வேளைகளில் கார்மேகத்தைக் கண்ட மயில் போல் என் மனம் கூத்தாடுகிறது. ஆற்றோரத்திலிருந்து நான் தண்ணீர் மொண்டு வரும் பொழுது, நடை கொள்ளாமல் குதிக்கச் சொல்கிறது. மெல்லிய இளம் காற்று என் கன்னத்தில் பட்டதும். முகமும் நாணிச் சிவந்து விடுகிறது. இவைகளை உங்களைப் போன்ற ஒருவர் ஒளிந்திருந்து பார்க்க வேண்டு மென்று ஏங்குகிறேன். இந்த ஏக்கத்திலும் ஓர் இன்பம்தான் உண்டாகிறது. இவையெல்லாம் ஏனோ சுவாமி?”

“இதெல்லாம் தளர்ச்சியால் ஏற்பட்ட மயக்கம்.”

“மயக்கம்…. அப்படியானால் நீங்கள் இருப்பது மயக்கமா சுவாமி? நான் இருப்பது மயக் கமா? என் பொற்கனவுகளெல்லாம் மயக்கமா? என் இருதயத்தில் பொங்குகிற உணர்ச்சி யெல்லாம் மயக்கமா?”

உபாலி ஒன்றுமே பேசவில்லை. சட்டென்று அவ்விடத்திலிருந்து போய் விட்டான்.

டிங்கிரி மெனிக்கா ஓடோடியும் போய்த் தன் அறையின் மூலையிலிருந்து கதறினாள். நெருப்புக் கண்ணீர் அவள் கண்களில் பொங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய தந்தை வந்து கூப்பிட்ட பொழுதும் அவள் ஒன்றுமே பேசவில்லை.

உபாலி நேரே தன் அறைக்குப் போய் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். நடுயாமம் வரையிலும் அவன் அறையிலிருந்து, “புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்ற ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

புத்தகோஷர் இந்தியாவைச் சேர்ந்தவர். புத்த சமயத்தின் ஒரு கிளையாகிய ஹீனயான மதக் கொள்கைகளைப் பயிலும் எண்ணத்துடன் இலங்கைக்கு வந்து, நாயக தேரரானார். திரிபிடகத்தின் உரை நூல்களும், பாஷியங்களும் சிங்கள பாஷையில் இருந்தன. அவை களைத் தகுந்த ஆசாரியர் மூலம் படித்துணர்ந்து மஹா பண்டிதராய் விளங்கினார். இவை களுக்குப் பாலிபாஷையில் வியாக்யானம் எழுத வேண்டுமென்று அவருக்குப் பெரும் ஆவல் இருந்தது. இந்நாட்களில் அவர் தீர்க்க நிக்காயம்” என்ற நூலை எழுதத் தொடங்கியிருந்தார். உபாலி பாலி பாஷையுடன் சிங்களமும் நன்கு அறிந்திருந்தமையால், புத்த கோஷருக்கு மிகவும் உதவியாயிருந்தான்.

குருவும் சிஷ்யனும் ஒருநாள் வெளியுலகத்தையும் மறந்து இரவு நெடு நேரமாய் இவ்வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். பிக்குகள் யாவரும் நித்திரைக்குப் போய்விட்டனர். இருவரும் தனிமையாய் இருக்கும் பொழுது புத்தகோஷர், “உபாலி, உன்னை ஒரு விஷயம் கேட்க வேண்டுமென்ற ஆவல் சில நாட்களாய் இருக்கிறது. விஹாரையில் கண்டெடுத்ததாக ஒரு பிக்கு என்னிடம் கொடுத்தான். “இதோ பார். இந்த ஓலையை” என்று ஓர் ஓலையை அவனிடம் நீட்டினார். உபாலி அதை வாங்கி விளக்கில் வாசித்தான். அது காதல் வாசகங்கள் கொண்ட ஓர் ஓலை, உபாலிக்கு டிங்கிரி மெனிக்கா எழுதியிருந்தாள். உபாலி ஒன்றுமே பேசாது மௌனமாய் இருந்தான். அப்பொழுது புத்தகோஷர் “உனக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்றார். “ஒரு தேவா, நான் ஒன்றுமே அறியேன்” என்றான். “நல்லது. நானும் அப்படித்தான் நினைத்தேன். எப்படியானாலும் ஜாக்கிரையாய் இரு” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையைத் தொடங்கினார்.

வானத்திலே கார் முகில்கள் ஓடத் தொடங்கி விட்டன. மழைக்காலத்தின் ஆரம்பம். இனி ஆற்றிலே புதுப்புனல் ஓடிக் கொண்டிருக்கும்.

டிங்கிரி மெனிக்கா அந்திவேளையில் இந்த மஹாவலி ஆற்றங்கரையில் வந்து நின்று மணிக்கணக்காய் ஏதோ யோசனையில் ஆழ்ந்து போவாள். நாணத்தோடு கூடிய ஓர் இன்ப வேட்கையுடன் உபாலியின் வடிவத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்தி, உள்ளங் குமுறுவாள். ஓயாமல், சலிப்பே இல்லாமல் பாடி ஓடிக் கொண்டிருக்கும் அந்த நதியின் நித்திய யௌவனத்தைக் கண்டு, நீறுபூத்த நெருப்புப் போல அடங்கியிருக்கும் உள்ளத்தீ ஆவேசத்துடன் சுடர் விட ஆரம்பிக்கும். அது காட்டுத்தீ போன்று வேகங்கொண்டது. மின் வெட்டுப் போல் திடீரென்று தோன்றி எதையும் நீர்த்துளியாக்கிவிடும். இப்படியான மனத் தளர்ச்சி கொண்டகாலம் அவளுக்கு. நிறைமதி நாலைந்து முறை பௌத்தப் பள்ளியின் வாச லிலே வந்து காய்ந்து விட்டுப் போய்விட்டது. புத்தகோஷர் எழுதிவந்த “சுமங்கல விலாசினி” “மனோரத பூரணி” என்ற திரிபிடக நூலின் பாஷ்யங்கள் சில நாட்களில் முடிவடைந்து விடலாம். புத்தகோஷர் சில சிக்கலான பகுதிகளை விளக்கி உரை கூறிவந்தார். உபாலி அவைகளை எழுத்தாணி கொண்டு ஏடுகளில் எழுதிக்கொண்டு வந்தான். அச்சமயம் டிங்கிரி மெனிக்காவின் தந்தை அவ்விடம் வந்தான். அவன் அலட்சியமாய் புத்தகோஷரைப் பார்த்து, “சுவாமி, நான் சொல்வதைச் சிறிது கேட்க வேண்டும். என் மகள் இன்று கர்ப்பவதியாய் இருக்கிறாள். நான் அவளைக் கேட்டேன். அதற்குப் பொறுப்பு உங்கள் எதிரில் நிற்கும் உபாலி என்று சொல்லுகிறாள். இதற்கு வேண்டியதைச் செய்வது உங்கள் கடமை” என்றான்.

புத்தகோஷர் கூட ஒரு முறை திகைத்து விட்டார்; பின்னர் தான் நிதானம் வந்தது அவருக்கு . உபாலியைப் பார்த்தார்.

“தேவா, நான் ஒன்றும் அறியேன்” என்றான் உபாலி. “ஆனால் உனக்கு அந்தப் பெண்ணைத் தெரியுமா?” “தெரியும் சுவாமி. நாலைந்து வருஷங்களாய் அறிவேன்.” “நீ அவளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“அவள் என் மேல் அன்பாய் இருக்கிறாள். பிக்ஷைப் பாத்திரத்தை உணவால் நிரப்பி உபசரித்து அனுப்புகிறாள்.

“நல்லது. நான் அவளை இங்கு அழைத்து…”

“வேண்டாம் சுவாமி. வேண்டாம். அவள் மனம் உடைந்து போகும்; இறந்தே போவாள்.”

“அப்படியானால் நீ இக் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?”

உபாலி ஒன்றுமே பேசவில்லை. அவனுடைய கண்களிலிருந்து நீர் உதிர்ந்து கொண்டிருந்தது.

புத்தகோஷரின் மனசிலே பெரிய போராட்டம் சூறாவளி போல் எழுந்தது. “பௌத்தப் பள்ளியின் தூய்மைக்கும், ஆசாரத்துக்கும், கௌரவத்துக்கும் பங்கம் வரக் கூடிய கொடிய விஷயம் இது. உபாலியோ தவ ஒழுக்கத்திலும். சீலாசாரத்திலும் – ஆனால் இனி அதைப் பற்றி யோசிக்க இடமில்லை. அவன் நிரபராதியோ அல்லவோ – நிரபராதி என்றாலும் அவனுக்குப் புத்த சங்கத்தில் இனி இடமேயில்லை ….”

உடனே புத்தகோஷர் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றார். “உபாலி, மூன்றாவது முறையாக இந்த அவதூறான வார்த்தைகள் என் காதில் விழுந்திருக்கின்றன. பகவானின் கௌரவம், தர்மத்தின் கௌரவம், சங்கத்தின் கௌரவம் – இவைகளைக் காப்பாற்ற வேண்டியது என கடமை. இந்தக் கணமே நீ இவ்விடத்திலிருந்து வெளியேறுதல் வேண்டும்” என்று அக்ஞை பிறப்பித்தார்.

நாயகதேரரின் கண்களில் நிறைந்து கொண்டு வந்த கண்ணீரை அவரால் மறைக்க முடியவில்லை .

உபாலி இப்போது சமூக சாம்ராஜ்ய நீதி மன்றத்தின் முன்னிலையில் பாரதூரமான அபராதத்தைச் செய்துவிட்ட குற்றவாளி. பார்த்தாலும், கேட்டாலும், சித்தித்தாலும் கூட உலகம் அவனை மிதித்து நசுக்கிவிடும். ஒதுக்கிடத்தில், வழிப்போக்கர் தங்கும் ஒருமடத்தின் திண்ணையில், இராப்பொழுதைக் கழித்து வந்தான். அவன் தன்கொடிய விதியை நினைத்து வருந்த வில்லை. எவர் மேலும் கோபங்கொள்ளவில்லை. அந்த மடத்தை விட்டுப் போய்விட விரும்பவுமில்லை. மலையின் அடிவாரத்தில் இருந்த அந்த மடத்தில் இருப்பது, புத்தபகவானின் நிழலில் இருப்பது போன்ற ஓர் உணர்ச்சியை அவனுக்குக் கொடுத்தது.

புத்தகோஷர் அநுராதபுரத்துக்குப் போய், சங்க பாலராகிய அவரது குருதேவரை மஹாவிகாரையில் கண்டு தரிசித்து நாலைந்து மாசங்களில் திரும்பிவிட்டார். திபெத், சீனா முதலிய இடங்களிலிருந்து இன்னும் அநேக பிக்குகள் பௌத்தப் பள்ளிக்கு வந்திருந்தனர். புத்த விஹாரையில் ஒரு புத்த சிலை புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது. அதன் சுவர்களிலே தேவஸேனன் என்ற பிரசித்த பெற்ற சைத்திரிகன் சித்திரங்கள் எழுதத் தொடங்கியிருந்தான்.

இன்னொரு விஷயம்; மறந்தே போனேன். டிங்கிரி மெனிக்காவுக்குக் குழந்தை கூடப் பிறந்துவிட்டது.

வானத்திலே, வளரும் அர்த்த சந்திரன் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் அது வட்ட வடிவம் பெற்றுவிடும். அன்றுதான் போசங் திருவிழா. சமனலகந்த மலையின் உச்சியில் புத்தபிரானின் அடிச் சுவடுகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஹிந்துக்களும், பௌத்தர்களும் சிகரத்துக்குப் போய் வருவார்கள்.

‘போசங் பண்டிகையும் வந்தது.

மலையடி வாரத்திலிருந்து உச்சிக்குப் பெருந்திரளாக ஜனங்கள், செங்குத்தான பாதை வழியாய்க் கொடிவிட்டுப் போய்க் கொண்டிருந்தனர். உபாலியும் ஜனங்களுடன் தானும் ஒருவனாய் வெளிக்கிளம்பினான். வழியில் ஆற்றைக் கடந்து வரும்பொழுது ஆற்றிலே தண்ணீர் நிமிஷத்துக்கு நிமிஷம் கூடிக் கொண்டு வருவதை அவனும் கவனித்தான். ஆற்றோரமாய்ப் போய்க் கொண்டிருந்த பாதை, வழியாய் வரும் பொழுது, ஆற்றில் ஜலம் கடுவேகமாய்ப் பாயத் தொடங்கிவிட்டது. மலைப் பிரதேசத்தில் எங்கெங்கோ வெல்லாம் கடுமழை பொழிந்திருக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுத்து இரு கரைகளையும் மோதியடித்துக் கொண்டு வந்தது.

டிங்கிரி மெனிக்காவின் வீடு ஆற்றோரத்தில் எதிர்க்கரையில் இருந்தது. அவள் ஆற்றைக் கடந்து இக்கரையிலுள்ள கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். ஆற்றில் ஜலம் பெருக்கெடுத்து விட்டதையும், அதைக் கடக்க முடியாதென்பதையும் கண்டாள்.

உடனே அக்கரையில் உள்ள தனது குடிலில் தூங்கும் தன் குழந்தையின் ஞாபகம் வந்தது. தந்தையும் மலைக்குப் போய் விட்ட ஞாபகம் வரவே, “ஐயோ, என் குழந்தை” என்று அலறிக் கொண்டு ஆற்றில் பாய ஓடினாள். பக்கத்தில் இதற்குள் கூடிவிட்ட ஜனக்கூட்டம், அவளை இழுத்துப் பிடித்துக் கொண்டது. உபாலியும் அப்பொழுது தான் அவ்விடத்தை அடைந்தான்.

எந்தச் சமயத்திலும் அவளுடைய குடிசை இடிந்து அழிந்து விடலாம். அக்கரையிலிருந்த குடியானவர்கள் அநேகர் மலை உச்சிக்குப் போய்விட்டார்கள். எஞ்சியிருந்தவர்களும் ஒதுக்கிடந் தேடி ஓடிவிட்டனர். ஆற்று வெள்ளமோ சூறாவளியின் பேரிசைச்சலுடன் கரை மரங்களை வீழ்த்தி இழுத்துக் கொண்டும், சிறுகுடிசைகளைச் சூறையாடி இடித்து அள்ளிக் ‘கொண்டும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஆற்றைக் கடக்க எவர் முன் வருவார்? ஆனால், உபாலி திடீரென்று ஆற்றில் குதித்துவிட்டான். ஜனங்கள், “என்னவாயிருந்தாலும், தந்தையின் இரத்தம் துடிக்காதா?” என்று சொல்லிக் கொண்டனர். உபாலி ஒரு மரக் கொம் பின் உதவியைக் கொண்டு ஆற்றுப் பெருக்குடன் மிதந்து சென்று கொண்டிருந்தான்.

அதிர்ஷ்டவசமாய் ஒரு தென்னைமரம் ஆற்றின் குறுக்கே வீழ்ந்து நடுவில் நின்ற ஒரு பாறையில் தங்கி அசையாமல் கிடந்தது. உபாலி அதன் உதவியால் ஆற்றைத் தாண்டி கட்டிலில் படுத்திருந்த குழந்தையையும் தூக்கிக் கொண்டு இக்கரை நோக்கி வந்தான். வெள்ளப் பெருக்குக் கூடிக்கொண்டிருந்தது. ஒரு கையில் குழந்தையைப் பற்றிக் கொண்டு, மற்றொரு கையின் உதவியால் சிரமப்பட்டு நீரின் விளிம்புக்கு நீந்தி வந்து ஜலத்தின் கீழ் இருந்த ஒரு கல்லின் மேல் நின்றான். டிங்கிரிமெனிக்கா ஆவலுடன் ஓடி வந்து தன்கைகளை நீட்டினான். குழந்தையை எடுத்துத் தாயின் கைகளில் கொடுக்கும் பொழுது, அவன் நின்ற கல், நிலை குலைந்தது. திடீரென்று அவன் குப்புற வீழ்ந்து போனான். வெள்ளம் அவனை அள்ளிக் கொண்டு போய்விட்டது.

“ஹாமதுரு” என்று கத்திக்கொண்டு கரையோரமாய்ப் பலர் தொடர்ந்து ஓடினார்கள். அவர்கள் ஓர் அரைமைல் தூரம் சென்றதும், ஒரு பாறையின் ஒதுக்கில் அவனுடைய தேகம் சிக்குண்டு கிடந்தது. அவர்கள் அதை எடுத்துவந்து மலையின் உயர்ந்த ஓர் இடத்திலே கிடத்தி, செய்யக்கூடிய சிகிச்சையெல்லாம் செய்து பார்த்தார்கள். உபாலி பிரேதமாய்க் கிடந்தான்.

டிங்கிரி மெனிக்கா பாய்ந்து வந்து கையில் குழந்தையுடன் அவன் காலடியில் வீழ்ந்து கதறினாள். பிறகு எழுந்து நின்று, “இக் குழந்தையின் தந்தை இவரல்ல. நான் இவர் மேல் கடுங்காதல் கொண்டிருந்தேன். இவர் அதை அலட்சியஞ் செய்வதைக் கண்டு ஆற்றாமல் ஆத்திரத்தினால் நான் என் அயலான் ஒருவனுடன் கூடிச் செய்த பாதகச் செயலை இவர் மேல் சுமத்தினேன். பாதகி” என்றாள்.

மஹாநாயக தேரர் புத்தகோஷரும் இதைக் கேட்டுக் கொண்டு தான் நின்றார்.

– கிராம ஊழியன் (ஆண்டுமலர்) 1944.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *