ஒரே பகலுக்குள்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 221 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஒரு பெண்ணை , முதல் தடவையாகத் தொட்டும் தொடாமலும் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு ஆணைப் போல, பெருமாள், அந்த அரசாங்கக் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் தெற்கு வீட்டின் கதவுக்கு மேலிருந்த காலிங்பெல்லை பட்டும் படாமலும் தொட்டார். வீட்டுக்குள் நிலைப்படிக்கு மேல் டிரான்ஸிஸ்டர் வடிவத்திலுள்ள ஒரு டப்பா இந்நேரம் கீச்கீச்சென்று இரண்டு தடவையாவது கத்தியிருக்குமென்பதும் அவருக்குத் தெரியும். அந்த எலெக்ட்ரானிக் கருவி மேலுள்ள குருவி படத்திற்கு ஏற்ப, இதுவும் அசல் குருவியாகக் கத்துவதால், ‘ஆபீஸரையா’ சில சமயம் குருவிச் சத்தத்தை, காலி ங்பெல் சத்தமாகவும்… காலிங்பெல் சத்தத்தை, குருவிச் சத்தமாகவும் எண்ணி ஏமாந்து, பிறகு தன்னையே ஏமாளியாக நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொள்வதும் இந்தப் பெருமாளுக்குத் தெரிந்ததுதான். ஆகையால், பெருமாள் கதவு மத்தியில் பொருத்தப் பட்ட லென்ஸ் மாதிரியான கண்ணாடியில் வலது கண்ணைப் பதித்தார். ஆள் நடமாட்டம் தெரிந்தது.

பெருமாள் காத்திருந்தார். ஒரு நிமிடம்… ரெண்டு… மூணு…. ஐந்து நிமிடங்கள்… அந்தச் சமயம் பார்த்து மாடிச்சுவர் விளிம்பில் உட்கார்ந்து கத்திய ஒரு சிட்டுக்குருவியைத் துரத்திவிட்டு, மீண்டும் காலிங்பெல்லை அழுத்தினார். கால் நிமிடம் வரை கையை அதிலேயே வைத்திருந்தார்.

முகத்தில் அறைவதுபோல் கதவு திறக்கப்பட்டது. திறந்த வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அந்த கவர்மென்ட் கதவு, அதைத் திறந்தவரை மாதிரியே ஆடியது. வீட்டுக்காரருக்கும் முகம் எள்ளும் கொள்ளும் வெடிப்பதுபோல் துடித்தது. சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறம். ஊதினால் பறக்கும் என்பார்களே, அப்படிப்பட்ட பூஞ்சையான உடம்பு. வெள்ளைக் கண்ணாடி. கருடன் மாதிரி வளைந்த மூக்கு …. மனைவி கொடுத்த மாத்திரை ஒன்றை வாயில் போட்டு, அந்த வாய்க்குள் தண்ணீரையும் ஊற்றியிருப்பார் போலிருக்கிறது. பெருமாளைப் பார்த்து, அவர் கத்திய கத்தலில் வாயில் கிடந்த அந்த மாத்திரை வெளியே தெறித்தது.

“ஏன்யா….. எத்தனை தடவை உனக்குச் சொல்றது? எனக்கென்னன காது செவிடா? லேசா பட்டனை அழுத்தினாப் போதாதா?”

“இல்லீங்க அய்யா… ஆரம்பத்துல லேசாத்தான் அழுத்துனேன்…”

“பொய் வேற சொல்றே…”

“அப்படி இல்லீங்க அய்யா…. நெசமாவே…”

“எதிர்த்து வேற பேசறே…”

“மன்னிச்சிடுங்க அய்யா… தப்புத்தான்…”

“நடிக்க வேற செய்யறே…”

பெருமாள், மேற்கொண்டு பதிலளிக்கவில்லை. போனவராம் இதுக்காகவே காலிங்பெல்லை லேசாகத் தொட்டார். பத்து நிமிடத்திற்குப் பிறகு தற்செயலாய் கதவைத் திறந்த இந்த ஆபீஸர்… ” உள்ளே ஆயிரத்தெட்டு வேலையில இருக்கேன்… அதோட டெலிபோன் சத்தம்…. டி.வி. சத்தம்… டூ இன் ஒன் சத்தம்…. குழந்தை சத்தம்…. இந்த மழையின் சத்தம்… இந்த சத்தத்துல நீ பாட்டுக்கு லேசா பிடிச்சா என்னப்பா அர்த்தம்?” என்றார். இதற்காகவே மறுநாள் பலமாக அதிகநேரம் அழுத்தினால், “கர்நாடகக் கச்சேரியாக செய்யறே…?” என்றும் சீறினார்.

சிந்தித்துக் கொண்டிருந்த பெருமாள், தன்னைமாதிரி ஆட்களுக்கு சிந்தனை ஒரு ஆபத்து என்று உணர்ந்தவர்போல், ஆபீஸர் கோபத்தைச் சரிக்கட்டும் வகையில் டீப்பாயிலிருந்த கூடையை ஒரு கையால் தொட்டார். அடுக்கடுக்காக இருந்தபைல் கட்டுக்களை இன்னொரு கையால் தொட்டார். இரண்டையும் காவடி போல் தூக்கிக் கொண்டார். கூடைக்குள் ஹாட் பாக்ஸ், தெர்மாஸ்பிளாஸ்க், ஒரு வாழை இலை, பீர்பாட்டில் மாதிரியான ஒரு தண்ணீ ர் பாட்டில்…..

பெருமாள் வாசலுக்கு வெளியே வந்து, அவசர அவசரமாக செருப்பை மாட்டினார். அவருக்குப் பின்னால் வந்த ஆபீஸர், “குயிக்… குயிக்…” என்று கத்துவதும், அவரது மூச்சுக்காற்று, தனது காதுக்குள் நுழைவதும் பெருமாளுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. ஆனால், செருப்புகளுக்குள் போன பாதங்களின் பெருவிரல்கள் அவசரத்தில் அதன் வளையங்களுக்குள் நுழைய மறுத்தன. பெருமாள், அதைப்பற்றிக் கவலைப்படாமல் பெருவிரல்களை அந்த வளையங்களுக்குள் மாட்டிக் கொள்ளாமலே, சர்க்கஸ்காரன் மாதிரி பாலன்ஸ் செய்தபடியே நடந்தார். கீழே விழப்போனவர், எப்படியோ தாக்குப் பிடித்துக் கொண்டார்.

பெருமாள் கீழே வந்ததும், அவர் நின்ற தரையைவிட ஒரு அடி தூக்கலான சிமெண்ட் முகப்பில் நின்றபடியே ஆபீஸர் கம்பீரமாய்க் கேட்டார்.

“கார் எங்கே ?”

“அதோ … அதோ ….”

“ஏன்? வழக்கம்போல இங்கேயே கொண்டு வந்தா என்ன?”

“நாலு நாளா மழையா? இங்கே ஒரே சேறு…. முள்ளுச்செடி வேறு விழுந்து கிடக்கு அய்யா. கொஞ்சம் நடந்தா…”

“நடக்கேன்… நடக்கேன்… மதுரையில் டெப்டி டைரக்டர் ராமபத்ரன் இருக்காரே, அவரோட வீடு… இப்படி இடுக்குல இல்ல… பெரிய மைதானம் முன்னால இருக்கு. நீ அங்கேயே போய் வேலை பார்க்கலாம். மாத்திடுறேன்…”

பெருமாள் அலறியடித்து ஓடினார். கார் இருக்கையில் துள்ளிக் குதித்து ஏறினார். அகலமான பாதையில் நின்ற அந்தக் காரை ஒடித்து வளைத்து, ரிவர்ஸில் எடுத்தார். அந்த இடுக்குப் பாதைக்குள் கார் ஒப்பாரி போட்டுக்கொண்டே போனது.

அதென்ன… என்ன தடுக்குது?

பெருமாள், கார் இருக்கையிலிருந்து இறங்கினார். கணுக்கால் அளவு சேறு இருக்குமென்று நடந்தால், அது முழங்கால்களைத் தொட்டுவிட்டது. கீழே ஒடிந்து கிடந்த கருவேல மரக் கிளையை கையில் முள் குத்து, தம் பிடித்துத் தூக்கி, ஒரு ஓரத்தில் போட்டார். டயர் பஞ்சர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே கண் சிமிட்டிய ஒற்றைக்கண் முட்களையும், ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினார். ஆபீஸரோ, “குயிக்மேன் – குயிக்மேன் ” என்றார். பெருமாள் மீண்டும் காரைப் பார்த்து ஓடி, இருக்கையில் எகிறிக் குதித்துரிவர்ஸில் வந்தார். சக்கரங்கள் சேறுக்குள் மாட்டிக்கொண்டு, ஒரே இடத்திலேயே சுற்றி வந்தன. பெருமாள் கீழே இறங்கி, வண்டியைத் தள்ளி, சக்கரங்களை நகர்த்தி ஆபீஸருக்கு கதவைத் திறந்து வைத்தபடியே நின்றார். அந்த நேரத்தில் மாடிப்படி வழியாக வந்த போதைக்கார மகனை திட்டிக்கொண்டே இருந்த ஆபீஸர் திட்டுவதை முடிப்பது வரைக்கும், பெருமாள் பேச்சற்றுப் போனவராய் பத்து நிமிடம் கார்க் கதவை திறந்து வைத்தபடியே நின்றார்.

எப்படியோ, அந்தக் கார், அரைக்கிலோ மீட்டர் ஓடி, ஒரு குட்டைப் பக்கம் வந்தது. பெருமாளுக்கு காலில் சேறு அப்பியதால் ஆக்ஸிலேட்டரை அழுத்த முடியவில்லை. பிரேக்கும் பிடிபடவில்லை. வண்டியை நிறுத்தினார். பின்னால் தினசரி பத்திரிகை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த ஆபீஸர், மேல் புருவங்களை நிமிர்த்தியபோது, பெருமாள் விளக்கமளித்தார்.

“காலிலே ஒரே சேறு… அந்தக் குட்டையிலே லேசா காலைக் கழுவிட்டு…”

“லேசாய் கழுவ வேண்டாம்… பலமாவே குளிச்சிட்டு வா…. நான் டாக்ஸியிலே போயிடறேன்…”

கார்க் கதவைத் திறக்கப்போன பெருமாள், அதை விட்டுவிட்டு கீரைகோபம் கோபமாக இழுத்தார். கார் பறந்தது. ஆபீஸர், அவரது முதுகைப் பார்த்தபடியே ஒரு கேள்வி கேட்டார்.

“ஏன்யா…. யூனிபார்ம் போடலை?”

“அதுங்களா அய்யா… நேற்று நைட்ல உங்களை இங்க விட்டுட்டு ஆபீஸ் போனேனா . ஒரே மழையா? சைக்கிள்ல வீட்டுக்குப் போறப்போ வெள்ளை யூனிபாரம் தெப்பமா நனைஞ்சிட்டு…. இன்னொரு யூனிபாரமும் முந்தா நாள் இதே மாதிரி ஆயிட்டு… அதோட இந்த உல்லன் பேண்டும் கோட்டும், குளிர தவிர்க்குது…”

“அப்படியா? நீ யூனிபாரம் போடாம இருக்கிறதுக்கு ஏற்பாடு செய்யறேன்…”

“ரொம்ப நன்றிங்க அய்யா….”

“அதாவது…. உன்ன வேலையில் இருந்தும் யூனிபாரத்தில் இருந்தும் கழட்டி விடுறேன்.”

“அய்யோ … அய்யா…. நான் புள்ள குட்டிகாரன்… தெரிஞ்சு தெரியாம பேசியிருந்தால் மன்னிச்சிடுங்க….”

நீண்ட மௌனம். டிரைவர் பெருமாள் கருமமே காரானார். அதிகாரி, தன்னைத்தானே, அதிசயத்து பார்த்துக் கொண்டார். அப்போது, அந்தக் கார், சாலையில் குறுக்கசால் பாய்ச்சும் ஒரு கடையை தாண்டிப் போனது. அரை கிலோ மீட்டர் போனதும், ஒரு வெட்ட வெளி. அதில், காரை நிறுத்தச் சொன்னார் அதிகாரி. பிறகு, ஆணையிட்டார்.

“அதோ, அந்த கடையில் போய் இரண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வா. இந்தா அய்ம்பது பைசா.”

பெருமாள், தலையை சொறிந்து கொண்டே நடந்தார். சடைப் பய… கடை முன்னாலயே, காரை நிறுத்த சொல்லி இருக்கலாம். ஆனாலும், பெருமாள் சிந்தனையை உதறி போட்டுவிட்டு, அந்த கடையில் இரண்டு வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். அந்த பழங்களை கையில் வைத்தபடியே, மேலும் கீழுமாய் பார்த்த அதிகாரி. மீண்டும் ஆணையிட்டார்.

“இதுக்கு பேரு பழமய்யா… வெயிட்டே இல்ல…. இந்த பழத்த திருப்பி கொடுத்துட்டு காச வாங்கிட்டு வா….”

பெருமாள், மீண்டும், வாழைப் பழத்தை கைகளில் ஏந்தி கடைக்காரரிடம் போனார். விவரத்தை சொன்னார். கடையோ, நாயே, பேயே என்று சொல்லாத குறையாக பெருமாளை திட்டியது. பழத்தை வாங்கவும் மறுத்துவிட்டது. வேறுவழியில்லாமல் பெருமாளே, அந்த இரண்டு பழங்களை தின்றுவிட்டு, சட்டைபையில் இருந்த அய்ம்பது காசை ஆள்காட்டி விரலுக்கும், பெருவிரலுக்கும் மத்தியில் வைத்துக் கொண்டு அதிகாரியிடம் வந்து கொடுத்துவிட்டு, இருக்கையில் அவசரம் கருதி, குதித்து ஏறினார். வாங்கிக் கட்டிக் கொண்டார்.

“உனக்கு அறிவு இருக்கா…. காருல எப்படி ஏறணுமுன்னு தெரியாதா…. நான் ஒருத்தர் ஆபீசர் பின்னால இருக்கேன். நீ என்னடான்னா திமுரா குதிச்சு ஏறுறே. பழையபடி இறங்கி, வழக்கம் போல ஏறுய்யா.”

பொமாள் பழையபடியும் இறங்கி, வழக்கம் போல் அவரை பயபக்தியோடு பார்த்துவிட்டு, இருக்கையில் பூ விழுவது போல விழுந்தார்.

அதிகாரியின் பேச்சையும், ஏச்சையும் பெருமாளால் தாங்கிக் கொள்ள முடிந்தாலும், அந்தக் காரால் தாங்க முடியவில்லை போல் தோன்றியது. மக்கர் செய்தது. நகர மறுத்தது. பெருமாள் காரின் முன் பக்கம் போய் திறந்துப் பார்த்தால், பேன் பெல்ட் அவுட்டு, ஒருவேளை அதிகாரி வீட்டு முன்னால் குண்டுங்குழியுமான நீர் தரையில் சிக்கியதால் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம். பேன் பெல்டை வாங்கித்தான் போட வேண்டும். அவர் கெஞ்சி கெஞ்சி விவரம் சொன்னார்.

“போன் பெல்ட் அறுந்துட்டுங்கய்யா…. புதுசா வாங்கிப் போட்டாத்தான் ஓடும்..”

“இப்போ, நான் எப்படிய்யா ஆபீஸ் போறது.”

“அவசரத்திற்கு தோஷசம் இல்லிங்க அய்யா. அதோ பல்லவன் பஸ் வருது… நம்ம ஆபீஸ் முன்னாலயே நிற்கும். கூட்டமும் அதிகம் இல்ல…. அதனால், இன்னிக்கு மட்டும் அய்யா அதுல போகலாம். மதியானத்திக்குள்ள நம்ம காரு ரெடி ஆயிடும்.”

அந்த அதிகாரி, கையாட்டியதும், பல்லவனும் நின்றான். இவரோ, ராசாதி ராசகம்பீரத்தோடு, பெருமாளை எப்படி பார்ப்பரோ, அப்படி, பல்லவ ஓட்டியை பார்த்தபடியே அன்னம் போல் நடை நடந்தார். பேருந்தின் பின் முனையில் எட்டிப் பார்த்துக் கொண்டு நின்ற நடத்துனர், இப்படிக் கத்தினார்.

“யோவ் சாவுகிரக்கி.. பெரிய கதாநாயகன்னு நெனப்போ… சீக்கரமா ஏறி தொலையேன்…”

– குங்குமம் 1987

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *