சதாசிவத்துக்கு நாளை பணி ஓய்வு.
முப்பத்தாறு ஆண்டு காலம் சுற்றிச் சுற்றி வந்த அலுவலகம் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அன்னியமாகிவிடப் போகிறது.
எது எப்படிப் போனாலும் காரில் பத்து மணிக்கெல்லாம் போய் அலுவலக இருக்கையில் அமர்ந்து விட வேண்டும் என்பதற்காக ஓடின ஓட்டம் ஓயப்போகிறது…
இந்த ‘முற்றுப்புள்ளி’யைக் கொண்டாட மனமகிழ்மன்றத்தினர் பணி ஓய்வு பாராட்டு விழா ஒன்று வைப்பார்கள். ஓய்வு பெற்றவருக்கு ஒரு பொன்னாடையைப் போர்த்தி, அரை சவரனில் ஒரு கணையாழி அணிவிக்கிற கையோடு, ஓய்வு பெற்றவரைக் கடைசியாக அவரது வீடுவரைக் கொண்டு சென்று விட்டு வருகிற சம்பிரதாயம்.
இந்தச் “சடங்கு’க்கு சந்தா வசூலிப்பதில் சலசலப்பு. இவர் இந்த யூனியன்… அந்தச் சங்கம் என்ற கோஷ்டிப் பூசல்… “பணம் வேண்டுமானால் தருகிறேன்… பார்ட்டிக்கு வர மாட்டேன்’ என்று பழைய பகைமையை நினைவுகூரும் நிகழ்வுகள்…
இதனாலேயே தனக்கு “விழா’ வேண்டாம் என்று முன்பே சொல்லிவிட்டிருந்தார் சதாசிவம். பணம் வசூல் செய்து தனக்கு மோதிரம் அணிவிப்பதென்பது அவரைப் பொறுத்தவரை ஒவ்வாமையான ஒன்று…
கடைசி நாள்.
அப்பா – மனைவி – மகன் வழியனுப்ப, அலுவலகம் புறப்பட சதாசிவம் வெளியே வர வாசலில் மனமகிழ் மன்றத்தினர் மூவர்.
“வாங்க… வாங்க…’ என்று வரவேற்று உட்கார வைத்து, “சரசு… சீக்கிரம் காபி’ என்றார் சதாசிவம், அந்தக் கடைசி நாளும் சரியான நேரத்துக்கு அலுவலகம் சென்று விட வேண்டும் என்ற முனைப்பில்.
“காபி இருக்கட்டும்… நீங்க இந்த ரிடையர்மென்ட் பார்ட்டிக்கு ஒத்துக்கிடணும்’ என்ற கைகுவித்தார் மனமகிழ் தலைவர்.
“சாரி! நான்தான் மாத ஆரம்பத்திலேயே வேண்டாம்னு சொல்லிட்டேனே…’ முறுவலித்தார் சதாசிவம்.
“சொன்னீங்க… இந்த மாசம் உங்களையெல்லாம் இன்னும் ரெண்டு பேர் ரிடையர் ஆகும் போது உங்களை விட்டுட்டு பார்ட்டி நடத்தறது’ என்ற செயலாளர் முடிக்குமுன்.
“நீங்க சொன்ன மாதிரி மோதிரம், மரியாதை வேண்டாம்… உங்களை வாழ்த்தி நாலு வார்த்தை பேச எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்க’ என்ற பொருளாளர் பிடிவாதம் தொடுக்க –
எண்பத்தாறு வயது தொட்ட சதாசிவத்தின் அப்பா எழுந்து வந்து, “உங்க விருப்பப்படி அவரை நான் விழாவில் கலந்துக்கச் சொல்றேன்’ என்றதும் – “ரொம்ப நன்றி’ என்று புறப்பட்டுப் போனார்கள் மன்றத்துக்காரர்கள்.
“எதுக்குப்பா தேவையில்லாம’ சதாசிவத்துக்குச் சங்கடம்.
“உனக்கு மோதிரம், பொன்னாடையெல்லாம் வேண்டாம்பா…! அவுங்க சொன்னாங்க பாரு நாலு வார்த்தை உன்னைப் பாராட்டிப் போணும்னு… யாரிடமும் கை நீட்டாத அலுவலர்ங்கிற அந்த ஒரு வார்த்தை போதும். நாங்க மூணு போரும் விழாவுக்கு வர்றோம். புறப்படு’ என்ற மகனை அனுப்பி வைத்தார் அந்தக் கால கணக்கு பிள்ளையான சந்தானம்.
விழா தொடங்கிற்று.
ஓய்வுபெறும் மூவரையும் முன் வரிசையில் அமரச் செய்து பின்வரிசையில் அவர்தம் குடும்பத்தினர்.
பாராட்டிப் பேச ஆரம்பித்தார்கள். பதவியால் மூத்தவர் என்பதால் சதாசிவத்தைப் புகழ்ந்து முதலில் பேச்சைத் தொடங்கினார்கள்.
பாராட்டுரை வழங்க வந்த அனைவரும் நல்லதும் கெட்டதுமான பழைய சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்களே தவிர, சதாசிவத்தின் நேர்மையை – அவர் கறை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர் – என்ற தோரணையில் ஒருவருமே பேசவில்லை.
சந்தானத்துக்கு ஏமாற்றமாக இருந்தது.
தன் மகனைப் பற்றிய இந்த வார்த்தையைக் கேட்பதற்கென்றே விழாவுக்கு வந்திருந்த அவர், அருகில் நின்றிருந்த மனமகிழ் மன்றத் தலைவரின் காதருகே குனிந்து மெல்லிய குரலில் நேரடியாகக் கேட்டே விட்டார்.
“ஏன் சார்! சர்வீசில் இருந்த வரைக்கும் என் மகன் யாரிடமும் கை நீட்டாதவன்னு யாருமே ஒரு நார்த்தை பேச மாட்டேங்கிறாங்க?”
தலைவர் நெளிந்தார்.
“அதெப்படி சார்! மூணு பேருக்கு நடக்கிற ரிடையர்மென்ட் விழாவில் ஒருத்தரை மட்டும் கை சுத்தமானவர்னு பாராட்டிப் பேச முடியும்” என்றவர் –
“பெரியவங்க சொல்றதைக் கேட்டீங்களா சார்” என்ற சதாசிவத்தின் காதில் கிசுகிசுத்தார்.
“சரிதாம்ப்பா! அந்த மாதிரியெல்லாம் பேசமுடியாது” என்பது போல் சதாசிவம் தன் அப்பாவைப் பார்க்க –
‘விழா’ எப்போது முடியும் என்றிருந்தது இருவருக்கும்.
– ப.முகைதீன் சேக்தாவூது (மார்ச் 2011)