ஒரு ரூபாய்க்கு ஒரு கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 12,727 
 
 

எங்கள் அலுவலகம் அடையாறில் இருந்தது. மோபெட்டில் முக்கால் மணி நேரப் பயணம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு மணி நேரம். நெரிசலின் கனத்தைப் பொறுத்து ஒன்றரை மணிநேரம்; இப்படி…

அந்த அலுவலகத்தில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. ஓர் ஒரு மாதத்தில் சக gopi ஊழியர்கள் அனைவரும் நன்றாகப் பழகி விட்டார்கள். உணவு இடைவேளையில் எல்லாரும் சேர்ந்தே சாப்பிட்டோம். எங்கள் செக்ஷனில் ஏழு பெண்கள், மூன்று ஆண்கள், கடி ஜோக்ஸ், அரட்டை ஆகியவற்றுக்குப் பஞ்சமே இல்லை. என்னை எல்லாரும் ‘சின்ன சார்’ என்று அழைப்பார்கள். மூன்று ஆண்களில் என்னை விட மூத்தவர் ஒருவர் இருந்தார். அவர் ‘பெரிய சார்’. அவர் பிறரோடு கலக்க மாட்டார். இன்னொருவர் இளைஞர். அவரைப் பெயர் சொல்லியே அழைப்போம்.

பிறருடைய வாழ்கையைப் பற்றி நானும் ஏன் வாழ்க்கையைப் பற்றி பிறரும் அறிந்துகொண்டிருந்தோம்.

உடன் பணிபுரியும் மார்கரெட்டின் நிலை மிக மோசமாக இருந்தது. உழைக்கும் மகளிர் விடுதி ஒன்றில் அவள் தங்கியிருந்தாள். விடுதி நுங்கம்பாக்கத்தில் இருந்தது.

இரண்டு கால்களும் ஊனம் மார்கரெட்டுக்கு. இளம்பிள்ளை வாதம். செயற்கை அவயங்கள் அணிந்திருப்பாள். கூடவே இரண்டு தாங்கு கட்டைகளின் உதவிக்கொண்டே அவளால் நகர முடியும்.

முதலில் நான் அவளுடைய உற்றார்களைப் பற்றிக் கேட்டபோது அவள், “நீங்கள் எல்லாரும்தான் ஏன் உறவினர்கள்” என்றால் சோகம் கலந்த ஒரு புன்சிரிப்புடன். பிறரிடமிருந்தும் கேட்டறிந்தேன். அவளுக்குப் பெற்றோர்கள் இல்லை என்றும், ஓர் அனாதை விடுதியில் இருந்தவள் என்றும். என் கண்கள் கலங்கி விட்டன.

மார்கரெட்டைப் பற்றி நிறைய யோசித்தேன். அவளுக்கு எதாவது வகையில் உதவ வேண்டும் என்று உள்ளம் பரபரத்தது. அவளுக்குப் பேருந்தில் வருவது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பது எனக்கு புரிந்தது. தவிர, விடுதியிலிருந்து பேருந்துநிறுத்தம்வரை வர நிறைய தூரம் நடக்க வேண்டும். மார்கரெட் நகர்ந்து நகர்ந்து வருவதை எண்ணிப் பார்க்க எனக்கு மகா இம்சையாக இருந்தது. அப்பா! எவ்வளவு நேரம் பிடிக்கும்!

மார்கரெட்டின் இசைவுடன் அவளை விடுதியிலிருந்து அலுவலகம் அழைத்து வருவதையும் அலுவலகம் முடிந்து விடுதிக்கு அழைத்துச் சென்று விடுவதையும் ஒரு பொறுப்பாக ஏற்றுக்கொண்டேன். மோபெட்டின் பின் இருக்கையில் மார்கரெட் அமர்ந்திருக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் வண்டியை ஓட்டுவேன்.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அனைவருடைய வாழ்க்கையும் நலமாகவே கழிந்துகொண்டிருந்தது.

மார்கரெட் பற்றிச் சில வார்த்தைகள்; அவளுக்கு வயது இருபத்து நான்கு. என் மகளைவிட ஆறு வயது அதிகம். எப்பொழுதும் சட்டையும் ஸ்கர்ட்டும் அணிந்திருப்பாள். அவளுடைய உடல் பிரச்சினைக்கு வேறு எந்தவித உடையும் பொருந்தாது.

திடீரென்று ஒரு சிக்கல் ஆரம்பித்தது. நான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டேன். மார்கரெட்டுடன் மொபெட்டில் வரும்போது பெட்ரோல் போட வேண்டியதாகிவிட்டது. பங்க்கில் வண்டியை நிறுத்தினேன். இரண்டு ஆயில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 31.50. பர்சில் சரியாக ஐம்பது ரூபாயும் ஓர் ஐம்பது பைசா நாணயமும் இருந்தன. பங்க்கில் சில்லறை கொடுக்க மாட்டார்கள். ஒரு ருபாய் நிச்சயம் தேவை. மார்கரெட்டிடமிருந்து ஒரு ருபாய் வாங்கிக்கொண்டு பெட்ரோல் நிரப்பிக்கொண்டேன். இது ஒரு சாதாரண விஷயம். நினைவில் பதியவேண்டிய அவசியம் இல்லை. மனத்தை உறுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அடுத்த நாள் மார்கரெட்டிடம் மகாபிரமாதமாக ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தேன். மார்கரெட் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுதிருந்து ஒரு ரூபாய் பூதாகாரமான பிரச்சினையாகப் போய்விட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் இன்னும் இரண்டு முறை திருப்பிக் கொடுத்தும் மார்கரெட் ஏற்றுக்கொள்ளவில்லை.

மனதில் ஒருவிதச் சுமை ஏற்பட்டது. அப்புறம் ஒரு பெரும் பிரமை என்னை ஆட்கொண்டது. மொபெட்டில் என் உடன் வரும்போது மார்கரெட் தன் நெற்றியில் ஒரு ரூபாய் வில்லை ஒன்றைப் பொட்டாக வைத்துக் கொண்டிருப்பது போன்ற கற்பனை தோன்றிற்று. பகவானால் படைக்கப்பட்ட கழுத்தை முழுமையாகப் பின்பக்கமெல்லாம் திருப்ப இயலாது!

பிறகு மார்கரெட்டைப் பார்க்கும்போதும் அவளிடம் பேசும் போதும் சதா ஒரு ரூபாய் நினைப்பு வந்துகொண்டேயிருந்தது. ஐம்பத்து மூன்று வயதில் இப்படி ஒரு வினோதமான சிக்கலில் மாட்டிக்கொண்டது ஒருவித எரிச்சலுனர்வை ஏற்படுத்திற்று.

கடைசியில் ஒரு நாள் மார்கரெட்டிடம் என் சிக்கல் முழுவதையும் சொன்னேன். எப்படியும் அவள் அதை வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்றும், ஒரு தீர்வாக திருச்சபை உண்டியலில் வேண்டுமென்றால் நான் காசைப் போட்டுவிடலாம் என்றும் ஆலோசனை வழங்கினாள்.

இதற்கென்றே ஒரு ஞாயிறு மார்கரெட்டுடன் அவள் உறுப்பினராக இருக்கும் திருச்சபைக்குச் சென்றேன். பிரார்த்தனைகளின் ஊடே வெள்ளை அங்கி அணிந்திருந்த ஒருவர் ஒரு நீண்ட கழியை ஒவ்வொரு வரிசையிலும் நீட்டிக்கொண்டிருந்தார். எங்கள் வரிசையில் வந்தபோது கழியின் முனையில் ஒரு குழிவான துணி பைபோல் இருந்ததைப் பார்த்தேன். பிறர் அதில் காசு போட அதுதான் உண்டியல் என்று புரிந்துகொண்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை அதில் போட்டேன். “மார்கரெட், உன் ஒரு ரூபாய்” என்றேன். அவள் புன்னகைத்தாள். திருச்சபையை விட்டு வெளியே வந்தோம். மார்கரெட் வாய்விட்டுச் சிரித்தாள். “நீங்களும் உங்கள் பிரச்சினையும்” என்றாள்.

ஒரு மாலை நானும் மார்கரெட்டும் அலுவலகம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். இருவருக்குமே பசித்தது. ஓர் ஓட்டலில் டிபன், காப்பி சாப்பிட்டோம். பில் ரூபாய் நாற்பத்து ஒன்று. என்னிடம் சரியாக ஓர் ஐம்பது ரூபாய் மட்டும் இருந்தது. கல்லாவில் இருந்தவர் “ஒரு ரூபாய் இருக்குமா?” என்று கேட்டார். “என்னிடம் சில்லறை இருக்கிறது. நான் வேண்டுமானால் ஒரு ரூபாய் தருகிறேன்” என்றாள் மார்கரெட். “ஐயோ மீண்டுமா?” என்று நான் கிட்டத்தட்ட அலறிவிட்டேன். கிழிந்த நோட்டுகளாகப் பார்த்து எனக்கு மீதிக் காசு சிடுசிடுப்புடன் ஓட்டல்காரரிடமிருந்து கிடைத்தது.

அந்த ஒரு ரூபாய்ப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. திருச்சபைச் சம்பவம் எந்தப் பலனையும் பெற்றுத் தரவில்லை.

ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஞாயிறு மார்கரெட்டை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தால் என்ன? செலவில் மார்கரெட்டுக்குத் தரவேண்டிய ஒரு ரூபாயும் சேருமே என்று நினைத்தேன். நாட்கள் செல்லச் செல்ல அது ஒரு நல்ல உத்தி என்றே தோன்றிற்று.

என் பிரச்சினைக்கு விடிவு காலம் வர அந்த ஞாயிறு வந்தது. பதினொரு மணி வாக்கில் மார்கரெட்டின் விடுதிக்குப் பொய் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தேன். விருந்து திருப்திகரமாக அமைந்தது. மார்கரெட் சுலபத்தில் என் வீட்டாருடன் கலந்து விட்டாள். என் மகளுடன் பகிர்ந்துகொள்ள மார்கரெட்டுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. மாலை நான்கு மணிபோல மார்கரெட்டை விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

பேச்சுவாக்கில், “செலவு எவ்வளவு ஒரு ரூபாய் பிடித்தது?? என்று மனைவியிடம் கேட்டேன். அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள். அனிச்சையாக வந்த வார்த்தைகள். கட்டுப்பாடு அறவே இல்லாமல் போயிருந்தது.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மொபட்டும் மார்கரெட்டும் நானுமாக அலுவலக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன. என் ப்ரொஜெக்டின் காலம் நிறைவுற்றது. மற்றவர்கள் நிரந்தரப் பணியாளர்கள்.

பிரிய வேண்டிய நாளில் நாங்கள் அனைவரும் மிகவும் சங்கடப்பட்டுப் போனோம். ஒரு மாதிரியாக இருந்தது. அந்த உணர்வை எப்படி விவரிக்க!

அந்தக் கடைசி தினத்தன்று வழக்கம்போல் மார்கரெட்டை விடுதி வரை அழைத்துச் சென்றேன். விடைபெறும்போது, “நாளையிலிருந்து எப்படி நீ…? நான் வேண்டுமானால் வரட்டுமா?” என்றேன். வார்த்தைகள் தடுமாறின.

மார்கரெட் அவசரத்துடன் மறுத்தாள். “வேண்டாம் வேண்டாம். நான் சீக்கிரமே கிளம்பி பஸ்சிலேயே போய்க் கொள்கிறேன். நீங்கள் என்ன பெரிய பணக்காரரா, தினமும் எனக்காகவே பெட்ரோல் செலவு செய்ய? என்னை மறக்காமல் இருந்தால் சரி” என்றாள்.

“பாரதத்தில் ஒரு ரூபாய்கள் புழக்கத்தில் இருக்கும்வரை உன்னை என்னால் எப்படி மறக்க முடியும்?” என்றேன் மனதில் சுமையுடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *