ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் , இன்னொரு பக்கம் ஆத்திரமாக வந்தது. இப்படிப் படித்த முட்டாள்களாக , அறிவிலிகளாக இருக்கின்றார்களே என்னும் வருத்தமும் வந்தது. கீதா, இன்று நேற்றல்ல, 20 ,25 வ்ருடங்களாக நட்பு ரீதியாகப் பழகியவர். பல நேரங்களில் உதவியாக இருந்தவர் என்றாலும் அவர் செய்த செயலை மாறனால் தாங்க முடியவில்லை. நேரே அவளின் இருக்கைக்கு சென்ற மாறன், அவளிடம் ‘ உங்கள் பிரார்த்தனையால் தலையில் இருக்கும் ஒரு முடியை கீழே விழ் வைக்க முடியுமா ? ‘ என்றான். என்ன சொல்கிறான் இவன் என்று புரியாமல் இவனைப் பார்த்த அவளிடம் ,” பிரார்த்தனையால் எல்லாம் முடியும் என்று சொல்கின்றீர்களே , அதற்கென்று ஒரு கூட்டத்தை மேய்த்துக்கொண்டு அலைகின்றீர்களே, அதனால்தான் கேட்கிறேன், ‘உங்கள் பிரார்த்தனையால் என்ன செய்ய முடியும், தலையில் இருக்கும் ஒரு முடியைக் கீழே விழ வைக்க முடியுமா ? ” என்றான் மாறன் மறுபடியும்.
” நான் உங்களிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னேனா ? ” என்ற மாறன்
” இடலிச்சட்டியில் இட்லி மாவை ஊத்தி வைக்கிறேன். அடுப்பைப் பத்தவைக்காம, மின்சாரத்தைப் பயன்படுத்தாமல், 20 பேர் இல்லை, 200 பேர் சேர்ந்து பிரார்த்தனை பண்ணி, இட்லியை வேக வையுங்கள் , உங்கள் பிரார்த்தனையின் மகிமையை பார்ப்போம் ” என்றான்.
” ஏன் இப்படி இருக்கின்றீர்கள்? எலும்பைத் தேடி அலையும் ஏதோ போல், எவனுக்கடா பிரச்சனை வரும் என்று மோப்பம் பிடித்துக்கொண்டே அலைவது ? ஏதாவது உடல் ரீதியாகப்பிரச்சனை என்றால் , உடனே நாங்கள் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறோம் , அந்த நோய் குணமாகி விடும் , இந்த நோய் குணமாகிவிடும் என்று கப்சா விடுவது” என்று கடுமையாகச்சொன்னவுடன்
” என்னங்க, இவ்வளவு கடுமையாகப்பேசுகின்றீர்கள், என்ன செய்தேன் நான் , உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று ஜெபக்கூட்டத்தில் சொன்னேன், உடனே உங்களுக்காகப் பிரார்த்தனை செய்வோம் என்று சொன்னார்கள், செய்தோம், நல்லதுதானே செய்தோம் , அதற்கு ஏன் இப்படி ” என்றவளை மறித்தான் மாறன். “ஒரு பிரச்சனை எனக்கு இருக்கிறது, அதற்காக மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று நட்புரீதியில் உங்களிடம் சொன்னால், நல்ல மருத்துவமனை பற்றி எனக்கு அறிவுரை சொல்வது போலச்சொல்லிவிட்டு , அங்கு போய் அவருக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள் ” என்று சொன்னால் இது எவ்வளவு பெரிய மோசடி” என்றான் மறுபடியும்
” போன மாதம் உங்கள் பிரார்த்தனை குழுவில் இருந்தவரின் அப்பா , நோய் வந்து செத்தாரே, இரவும் பகலும் பிரார்த்தனை என்ற பெயரிலே கத்திக்கிட்டே கெடந்தங்களே,உங்க கர்த்தர் வந்து காப்பாத்திக் கொடுத்துட்டாரா? மத்த விசயம் பத்தியில்லாம் ஆயிரம் கேள்வி கேட்கிற நீங்க, பக்தின்னு வந்தா, முழு முட்டாளா ஆகி , அறிவையெல்லாம் மூளையிலிருந்து கழட்டி தனியா வச்சிருங்களே , யோசிக்கவே மாட்டீங்களா” என்றான் மேலும்
” சாரி மாறன் , நீங்கள் இவ்வளவு சீரியசாக இதனை எடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது ” என்றவளிடம் ஏதும் சொல்லாமல், வெறுப்பாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் மாறன். அரைப்பைத்தியங்கள் கழகம் என்பது போல , அலுவலகத்திற்குள் ஒரு குழு வைத்திருந்தார்கள் சிலர். எது என்றாலும் உடனே கூட்டம்தான், பாட்டுத்தான். ‘கல்லேலூயா பாட்டுத்தான்’ என்று அலுவலகத்திற்குள்ளேயே அலைந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தைப் பற்றிப் பெரும்பாலும் மாறன் அலட்டிக் கொள்வது கிடையாது, ஏதோ சிலர் சேர்ந்து கோயிலுக்குப்போவது போல, இவர்கள் சிலர் சேர்ந்து சர்ச்சுக்குப்போகின்றார்கள், ஜெபக்கூட்டம் என்று நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தான் .பார்ப்பன மதமான இந்து மதத்தை விட்டு வெளியேறி, சூத்திரப் பட்டத்தை துறந்து விட்டார்கள். அந்த வகையில் நல்லது. என்னத்தையோ கர்த்தர், யேசு என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள் என்று மாறன் அவர்களைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.
ஒரு நாள் இவன் பெரிதும் மதித்த ஒரு தொழிற்சங்கத்தலைவர் , இந்தப் பிரார்த்தனை கூட்டங்களை நடத்துகின்றார், ஆட்களைச்சேர்க்கின்றார் என்று கேள்விப்பட்டவுடன் , அதிர்ச்சியாக இருந்தது. பல்வேறு தொழிற்சங்க வகுப்புகள் எடுத்த தோழர் அவர். இவனே சில தொழிற்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றான் மிக அருமையாகப் பேசக்கூடியவர். மைக்கைப் பிடித்தால் ஏற்ற இறக்கங்களோடும், அவருக்கே உரித்தான நகைச்சுவையோடும் கூட்டத்தைக் கல கலப்பாகி விடுவார். அவர் எப்படி இப்ப்டி என்று ஒரே குழப்பமாக இருந்தது. மதம் ஒரு அபின் என்று சொன்ன காரல் மார்க்ச்சை, லெனினை, மாவோவைக் கூட்டங்களில் குறிப்பிடக்கூடியவர், அவர்களின் கோட்பாடுகளைத் தெரிந்தவர். இவர் எப்படி இந்தக் கூட்டத்திற்குள் சென்று , அதுவும் ஒருங்கிணைக்கும் அமைப்பாளராக ஆனார் என்பது மிகப்பெரிய புதிராக இருந்தது மாறனுக்கு.
மத உரிமை என்பது , வழிபாடு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆத்திகனாக இருப்பவன், நாத்திகனாக மாறலாம், நாத்திகனாக இருப்பவன் ஆத்திகனாக மாறலாம், அது ஒவ்வொருவனின் மனதைப் பொறுத்தது.அறிவு வயப்பட்டவன் எவனும் நாத்திகனாகத்தான் இருக்க முடியும். ‘சுய நல்மும், பேராசையுமே’ பக்திக்கு அடிப்படை என்பதைப் போல சுய நலம் மேலோங்கி, ஊர் ஊராகத் தொழிற்சங்கக்கூட்டத்திலே பேசி என்ன பணம் கிடைக்கப்போகின்றது , பிரசங்கக்கூட்டம் என்றாலும் பண்ம் கொட்டும் என்று போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். . எப்படியோ இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவன் விசயத்தில் , இந்த ஜெபக்கோஷ்டி உள்ளே நுழைந்தவுடன் , ஆத்திரம் ஆத்திரமாக வந்தது மாறனுக்கு.
அன்றொரு நாள் அப்படித்தான் ஜெபக்கூட்டத்தை சேர்ந்த ஒருவர் மாறனை வம்புக்கு இழுத்தார். பேச்சு விவாதமாக மாற, “நீங்கள் எந்தப் பாடத்தில் பட்டதாரி ” என்றான் மாறன். அவர் ,’நான் விலங்கியல் பட்டதாரி ‘என்றார். விலங்கியல் படித்திருக்கின்றீர்கள், தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எனக்கும் இரண்டு குழந்தை இருக்கின்றது,உங்களுக்கும் குழந்தை இருக்கின்றது. ஆணும் பெண்ணும் சேராமல், … ஆவியால் பிள்ளை பிறக்குமா ? என்றான். ‘உங்கள் வீட்டுப்பெண், கர்ப்பமாகி, நான் யாரோடும் சேரவில்லை, நான் …. ஆவியால் கர்ப்பமாக் இருக்கின்றேன் ‘ என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா எனக்கேட்டு மேலும் பல கேள்விகளைக் கேட்டான் மாறன். “மனிதனைப் படைத்தது கடவுள் என்றால், சாத்தானைப் படைத்தது யார் ? “என்பது போல சில கேள்விகளைக் கேட்க, குழப்பமாக பார்த்து விட்டு அந்தத் தோழியர் போய்விட்டார். மறு நாள் மாறனைப் பார்த்த அவர்,” சார், நாளை முதல் உங்களிடம் நான் பேசமாட்டேன் ” என்றார், மாறன் “ஏன் ” என்றான். “எங்கள் சர்ச்சில் போய் கேட்டேன் . நீங்கள்தான் நடமாடும் சாத்தானாம். அதனால்தான் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார், அவரோடு பேசாதீர்கள் ” என்று சொல்லி விட்டார் என்றார். அன்று முதல் வெகு நாளாக அவர் பேசவில்லை. நமது சகோதரிகள் இவ்வளவு அப்பாவியாக இருக்கின்றார்களே. இவ்வளவு வெல்லேந்தியாக விவரம் தெரியாதவராக இருந்தால், ஏன் பாதிரியார்கள் ஏமாற்ற மாட்டார்கள், பணம் வசூலிக்க மாட்டார்கள்” என்று நினைத்துக்கொண்டான் மாறன் அன்று
மாறனின் மகள் வேறு இன்று காலையில் பள்ளியைப்பற்றிச்சொல்லிக்கொண்டிருந்தாள். ‘ அப்பா, எங்க பள்ளிக்கூடத்தில் கழிவறைப்பக்கம் போகவே முடியவில்லை, அவ்வளவு அசிங்கமாக இருக்கிறது. ஆசிரியர்களிடம் சொன்னால் நீங்கள்தான் சுத்தமாக வைச்சிருக்கணும் ‘ என்று சாதாரணமாகச்சொல்லி விடுகின்றார்கள். காலையில் வகுப்பிற்கு செல்லும் மகள் சில நேரம் மாலை வரை கழிவறைப்பக்கமே போகாமல் இருக்கிறாள் என்பது அதிர்ச்சியாக இருந்தது மாறனுக்கு. “ஏன் எல்லோரும் சேர்ந்து சொல்ல வேண்டியதுதானே, தலைமை ஆசிரியரிடம் ” என்றான், “அதெல்லாம் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கிறோம், வாரத்திற்கு ஒரு நாள் இரண்டு நாள் இங்குதான் மாவட்ட ஆசிரியர்கள் கூட்டம் எல்லாம் நடக்கிறது, ஏ.யி.வோ, சி.யி.வோ எல்லாம் இங்குதான் வருகின்றார்கள், அவர்கள் வரும்போது பூட்டி வைத்திருக்கும் கழிப்பறையைத் திறந்து விட்டு விடுகின்றார்கள், அது சுத்தமாக இருக்கும். எங்களுக்கு இப்படித்தான் இருக்கிறது ” என்றவள் மேலும் ‘எப்பா,கக்கூஸை பார்க்க மாட்டேன் என்று இருந்து விடுகின்றார்கள் , ஆனால் ஜெபம் பண்ணு, பிரேயர் பண்ணு ‘ என்று உயிரை எடுக்கின்றார்கள், அடுத்த வருடம் தயவுசெய்து வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விடுங்கள் , மதப் பைத்தியம் பிடிச்ச சில டீச்சர்கள் பண்ணும் கொடுமை தாங்க முடியவில்லை ” என்றாள் ‘ ‘ அப்படி என்ன செய்கின்றார்கள் ‘ என்ற மாறனிடம் , மாறனின் மகள் ‘ என்னமோ அன்னிய பாஷை , பேசுகிறேன் என்று சொல்லி டீச்சரே என்னனம்மோ உளறுகிறார்கள் ‘ என்றாள்.நரகம் என்று ஒன்று இருக்குண்ணு டீச்சரே நம்புறாங்கப்பா, மைக்கேல் ஜான்சனை நரகத்தில் போட்டு வறுத்து எடுத்துக்கிட்டு இருக்காங்களாம்.ஒருத்தரு போய் பார்த்துட்டு வந்தாங்களாம். பைத்தியக்காரத்தனமா டீச்சரே பேசுறாங்க, தாங்க முடியலை
‘ ஒன்னுக்கு, ரெண்டுக்குப் போறதுக்கு பள்ளிக்கூடத்திலே சுத்தம் பண்ணுங்கடா என்றால் அதனைச்செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டு, மாலையில் உட்காரவைத்து ‘ கர்த்தரைத் துதித்தால் , காரியம் எல்லாம் கைகூடும் ‘ என்று பாட்டுப்பாடச்சொல்கிறார்கள், ‘ ;சீக்கிரம் விடுங்கடா, வீட்டுக்குப்போயி பாத்ரூம் போகணும் ‘ என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது ,அப்பா சில நேரம் ‘ என்றாள்.அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது மாறனுக்கு. இப்படிப்பட்ட பள்ளிக்கூடத்தில் பிள்ளையைச்சேர்த்து விட்டு தப்பு பண்ணிவிட்டோமோ என்ற குற்ற உணர்வு வந்தது .
சில நாட்களுக்கு முன்னாள் ஜோஸிடம் பேசிக்கொண்டிருந்தான் மாறன். அப்போது ஜோஸ் , ‘ “எங்க மதத்தை அழிக்கிறதுக்கு வேறு யாரும் வேண்டாம் சார், இப்போ புதுசா கிளம்பியிருக்கிற இந்த கல்லேலோயா கோஷ்டியே அழித்துவிடும் ‘ என்றார் . ‘ ஏன்’ என்ற மாறனிடம் ‘ சார் நாங்களும் சர்ச்சிக்குப் போறவங்கதான், கத்தோலிக்கப் பிரிவைச்சேர்ந்தவர்கள் நாங்கள், ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப்போவோம், கும்பிடுவோம், வந்திருவோம், ஆனால் இந்தக் கோஷ்டி அப்படியில்லை, அரைப்பைத்தியங்கள் போலவே நடந்து கொள்கின்றார்கள். திடீரென்று அந்நிய பாஷையில் பேசுகிறோம் என்று ஏதோதோ பேசுவார்கள், இந்த அந்நிய பாசையிலே பேசுவது என்பதே மிகப்பெரிய மோசடி, திட்டமிட்ட நாடகம். கொள்ளையடிக்கப் போறவன் திட்டம் போட்டு போறது மாதிரி ஏற்கன்வே திட்டம் போட்டு , அந்நிய பாசை என்ற பெயராலே உளறுகிறார்கள். இந்து மதத்திலே சாமியாடுவது, பேயாடுவது மாதிரி இது மனநல நோய் . இதற்கு சிகிச்சை கொடுத்துத்தான் , சரி செய்ய வேண்டும் . ஆனால் நோயாளியை ஊக்கப் படுத்தி எங்கள் மதத்தின் பெயரைக் கெடுக்கின்றார்கள். இரவு 12 மணிக்கு மொத்தமாக உட்கார்ந்துகொண்டு ‘கல்லேலோயா, கல்லேலோயா ; என்று கத்துவார்கள். இயல்புக்கு மாறான பல செய்ல்களைச்செய்வார்கள். இவர்களால் ஒட்டு மொத்தமாக கிறித்துவ மதத்திற்கே கெட்ட பெயர் ‘ என்றவரிடம் கிறித்துவ மதத்தில் எத்தனை பிரிவுகள், இந்தியாவில் எத்தனை வகையினர் என்பதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான் மாறன்.
” சார், பெரும்பாலான குடும்பங்களில் நிம்மதியில்லை, நிம்மதியாக இருக்கும் குடும்பங்களில் கூட அவர்களே பிரச்சனைகளை உருவாக்கிக்கொள்கின்றார்கள். தன்னிரக்கம் கொண்டவர்களாக தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்கிறார்கள். கையில் பிளேடு வைத்துக் கிழித்திக்கொண்டு , இரத்தம் வரவைத்து, பின்பு அந்தப் புண்ணுக்கு மருந்து போடாமல் பிரார்த்தனை செய்வதுபோல, குடும்பத்தில் இவர்களே பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள். பின்பு அந்தப் பிரச்சனையை பத்துப்பேர் இருக்கும் இடத்தில் சொல்லுகின்றார்கள். தனக்குப் பிரார்த்தனை செய்து காப்பாற்றும்படி கூட இருக்கும் மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டு, நான் சாட்சியாகிறேன் எனக்குச்சரியானவுடன் என்று சொல்லி எல்லோரும் ஒன்னாச்சேர்ந்து அழுது, புலம்பி, வாழ்க்கையையே துயரமாக்க்கிக் கொண்டு துன்புறுகிறார்கள். மற்றவர்களையும் அப்படி அழுமூஞ்சி ஆக்குவதற்கு படாத பாடுபடுகிறார்கள் ” என்றார் வெறுப்பாய்.
மகளைப் போலவே மாறனின் மகனும் கிறித்துவப்பள்ளிக்கூடத்தில்தான் படித்தான். அந்தப் பள்ளிக்கூடத்தைச்சேர்ந்தவர்களும் இந்தக் கூட்டத்தைச்சேர்ந்தவர்கள்தான் போலும்.ஒரு நாள் 4–ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு வீட்டுப்பாடமாக 120 பக்கத்தை எழுதி வரச்சொல்லியிருந்தார் அவனது ஆசிரியை. மாலை 8 மணிக்கு மகன் ஏதோ வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்துக்கொண்டு விட்டு விட்டான். இரவு 1 மணிக்கு எழுந்து பார்த்தால், அவனது மகன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தான். ” டேய். என்ன இன்னும் தூங்கவில்லையா ” என்று மாறன் கேட்க , அப்பா, டீச்சர் கொடுத்த வீட்டுப்பாடத்தில் பாதிதான் எழுதியிருக்கிறேன். இன்னும் பாதி இருக்கிறது ,வீட்டுப்பாடம் எழுதாமல் போனால் அந்த டீச்சர் என்னைத் திட்டுவார்கள் ” என்று அழ ஆரம்பித்தான். அவனைச்சமாதானப்படுத்தி, காலையில் மகனோடு பள்ளிக்கூடத்திற்குப்போனான் மாறனும். மகனின் ஆசிரியரைப் பார்த்து ‘எத்தனை பக்கங்கள் வீட்டுப்பாடம் கொடுப்பது என்று கணக்கு இல்லையா? 4-ம் வகுப்பு படிக்கும் பையனிடம், புத்தகத்தில் உள்ள 120 பக்கத்தை எழுதி வரச்சொன்னால் எப்படி முடியும் ? ” என்று கேட்டபோது முழித்த அந்த ஆசிரியை ” சார் கஷ்டப்பட்டாத்தானே சார் முன்னேற முடியும் ” என்றார். ” எதையும் எதார்த்தமாகப் பாருங்கள் . உத்தேசமாக ஒரு பக்கம் நீங்கள் எழுதிப்பார்த்து , எத்தனை பக்கம் கொடுப்பது என்று கொடுங்கள் ” என்று இவன் சொல்ல ஒத்துக்கொண்ட ஆசிரியை , ” சார் கஷ்டப்பட, கஷ்டப்படத்தான் கடவுள் அருமை புரியும் ” என்றாள். இங்கர்சால் மாறனின் நினைவில் வந்தார். ” குழந்தைகளுக்கு நம்ப கற்றுக் கொடுக்காதீர்கள், சிந்திக்க கற்றுக் கொடுங்கள். குழந்தையின் அருகில் மதப்பிரச்சங்கிகள், மந்திரவாதிகள், குறி சொல்பவர்கள் போன்றவர்களை விட்டு விடாதீர்கள் ” என்று இங்கர்சால் பேசியது ஞாபகம் வந்தது. ஆசிரியரே இப்ப்டி மூட நம்பிக்கை குப்பையாக இருந்தால் பிள்ளைகள் எப்படி உருப்படும் என்று ஆசிரியரிடம் மாறன் விவாதிக்க ஆரம்பித்தான். பேச்சு நீடிக்க ” சார், உங்களை இன்னும் யேசு தொடலையா ” என்றாள் ஆசிரியை , மாறன் ” மேடம், உங்களை யேசு வந்து தொட்டுட்டு போயிட்டாரா ? ” என்றவுடன் திரு திருவென முழித்தாள். அதற்குப் பிறகு மாறனைப் பார்த்தவுடனேயே வகுப்பை விட்டு அந்த ஆசிரியை போய்விடுவாள். ஆனால் மாறனின் மகனை படாதபாடு படுத்தி விட்டாள் ஒரு நாத்திகரின் மகன் என்று தெரிந்து.
குழ்ந்தைகளை சில நேரம் இப்படி மதப்பைத்தியங்களிடம் விட்டுச்செல்கிறோமே என்று வருத்தமாக இருக்கும் மாறனுக்கு. ஜோஸ் சொன்ன செய்திகளெல்லாம் இப்போது மனத்திரையில் ஓடியது. சாம் ஹரீஸ், தன்னுடைய எண்டு ஆப் பெயித் என்னும் புத்தகத்தில் எழுதியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. ” உலகத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடவுள் நம்பிக்கைதான் காரணம். நீங்கள் மதத்தீவிரவாதிகள்தான் உலகத்தில் பிரச்சனை என்று நினைக்கின்றீர்கள். மத நம்பிக்கை தனிப்பட்ட முறையில் இருந்தால் தவறு இல்லை என்று நினைக்கின்றீர்கள். அது தவறு. உலகத்தின் பிரச்சனையே கடவுள் நம்பிக்கைதான். கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவனும் , தன் மதத்திற்கு ஆபத்து, தன் கடவுளுக்கு ஆபத்து என்று வருகின்றபோது, தீவிரவாதி போலத்தான் செயல்படுகிறான். அவனது , அவளது கடவுள் நம்பிக்கை பல நேரங்களில் த்ற்காலிகத் தீவிரவாதிகளாக அவர்களை ஆக்குகிறது ” என்று குறிப்பிட்டிருந்தார். உண்மைதான் போலும்.
இப்படி யோசித்துக்கொண்டிருந்த மாறனின் செல்பேசி ஒலித்தது.கீதாதான் கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். வெறுப்பாகவே ” சொல்லுங்க” என்றான் செல்பேசியில். ‘உடனே வீட்டுக்கு வாங்க சார், என் பொண்ணுக்கு முடியலை, அவரு வேற ஊரில இலலே ” என்று ப்தட்டத்துடன் சொல்வதைக் கேட்டவுடன் , வண்டியை எடுத்துக்கொண்டு கீதாவின் வீட்டுக்கு விரைந்தான். கீதாவின் மகள் மூச்சு பேச்சு இல்லாமல் மய்க்கமாகி கிடந்தாள்.மேலே மாடிக்கு துணி காயப்போடப் போனவள் , உருண்டு படிகளில் விழுந்திருக்கின்றாள். பக்கத்து கடையில் கலரை வாங்கி முகத்தில் தெளித்த மாறன், ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினான். கீதாவின் ஜெபக்கூட்டத்தைச்சேர்ந்த ஒருத்தியும் வந்து சேர்ந்திருந்தாள். ” ஜெபம் பண்ணலாமே ‘ என்ற அவளை முறைத்த கீதா, ” 20,25 வருட மாறனின் நட்பை காயப்படுத்திட்டோமேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. மாறன் நாத்திகன்தான், ஆனா ஒரு பிரச்சனையென்று வரும்போது முன்னாடி வந்து நிற்பார்.பிரார்த்தனை பண்ணி ஒரு தலைமுடியைக் கூட கீழே விழ வைக்க முடியாது,மாறன் சொன்னது உண்மைதான். உன் மகளுக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது ஜெபம் பண்ணுவோம் இப்போ விலகு, நாங்க ஆஸ்பத்திரிக்கு போகணும் ‘ என்ற கீதாவை நிமிரிந்து பார்த்த மாறன், ” எப்போ ஆஸ்பத்திரிக்கு போனாத்தான் உயிரைக் காப்பாத்த முடியும்ன்னு தோணுச்சோ, அதுவே கடவுள் எதிர்ப்புத்தான் , அதுவே கடவுள் மறுப்புத்தான் “என்று நினைத்துக்கொண்டு ஆம்புலன்ஸில் கீதாவின் மகளை ஏற்றிக்கொண்டிருந்தான்.