ஒருத்தருக்கு ஒருத்தர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 9,354 
 
 

கதை ஆசிரியர்: வண்ணதாசன்.

குஞ்சம்மா என்கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக இருந்ததால் மறந்துவிட முடியுமா என்ன. முத்துலட்சுமியும், சுந்தரியும் ஒல்லி. சுந்தரியின் அண்ணன் மேல் காலெல்லாம் பாலுண்ணியாக இருக்கும். மிஞ்சியது ஒயர்மேன் சின்னையாவுடைய பெண் தங்கம்மாதான். சின்னையா என்பது அவருடைய பெயரல்ல. எல்லோரும் சின்னையா சின்னையா என்று கூப்பிட்டதால் அப்படி.

ரொம்ப நாட்களுக்குப் பின் எங்கள் வீட்டில் மச்சு எல்லாம் எடுத்து, லைட் போட்டபோது, வயரிங் பண்ண வந்தது சின்னையாதான். சின்னையா ‘வி ‘ கழுத்து மல்பனியன் போட்டிருப்பார். அம்மன் தழும்பு முகம். ஆக்கர் வைத்த பம்பரம் மாதிரி இருக்கும். குரல் எம்.ஆர்.ராதா மாதிரி. எனக்கு எம்.ஆர். ராதா குரல் சின்னையா குரல் மாதிரியிருந்தது. எது முதலில் கேட்டதோ, அதைத்தானே பிந்திக் கேட்டது ஞாபகப்படுத்தவேண்டும்.

பானுவுடைய தம்பி குளிக்கும்போது வாய்க்கால் தண்ணீரில் முங்கிச் செத்துப் போனான் என்று சொன்னார்கள். இத்தனைக்கும் குளித்தது பிராமணக்குடி வாய்க்கால்தானாம். அத்தோடு ஜெமினீஸ் காபிப் பொடிக்கடையை மூடிவிட்டு வெளியூர் போய்விட்டார்கள். திருத்தமாகத் தைக்கப்பட்ட கதர்ச்சட்டையும், சந்தனக் கீற்றும், பூணூலுமாக, காப்பிப் பொடிப் பொட்டலம் தருகிற பானுவின் அப்பாவும், பச்சைப் பெயிண்ட் அடித்த அந்தத் தராசு காப்பிப் பொடிப் பொட்டலத்துடன் மெதுவாகத் தணிவதும் ஞாபகம் வருகிறது.

முத்துலட்சுமி அப்பாவின் நகைக்கடை முங்கிப் போய்விட்டது. என் அண்ணனுடன் படித்த முத்துலட்சுமியின் அண்ணனை ஒரே ஒரு தடவை ரயில்வே ஸ்டேஷன் கூட்டத்தில் பார்த்தேன். அங்கு விலாஸ் காலண்டர் தவிர, கண்டிப்பாக எங்கள் வீட்டில் தொங்குகிற இன்னொரு காலண்டர் முத்துலட்சுமி அப்பா நகைக்கடைக்கு உரியது. வெள்ளை அடிக்கும்போது மர பீரோ தலையில், சினிமாப் படம் போட வெட்டின ஓட்டையுடன் ரொம்ப நாட்கழித்துஅது அகப்பட்டது. சுந்தரியின் அண்ணனை எல்லோரும் பல்லிக் குஞ்சு என்று கூப்பிடுவார்கள். பல்லிக்குஞ்சு பெரிதாகி ஆரெம்கேவி ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தது. ‘என்ன, செளக்யமா இருக்கியா ‘ என்று கேட்டது. பாலுண்ணி அப்படியேதான் இருந்தது. சுந்தரியைப் பற்றி வெட்கப்படாமல் கேட்டிருக்கலாம். இப்போது வெட்கப்பட்டு இருக்கக்கூடாதென்று நினைக்கிறது எல்லாவற்றிற்கும் அப்போது வெட்கப்பட்டிருப்போம் இல்லையா.

வயர்மேன் சின்னையா பெண் தங்கம்மாவை ஏதோ ஓர் பாங்கில் வைத்துப் பார்த்தேன். மாதர் சங்கம், தையல் மிஷின் லோன் என்று நாலைந்து பேரைச் சுற்றிலும் நிற்க வைத்துக்கொண்டு, பாங்க் ஆபிஸருடன் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது. பேச்சும் முழியும் சரியில்லையே என்று படுமே அப்படியிருந்தது. அப்படியிருப்பதே செளகரியம் என்று தோன்றி மேலும் கொஞ்சநேரம் தங்கம்மாவைப் பார்த்தேன். தங்கம்மாவுக்குத் தெரியாத சாகசம் கிடையாது போல. உச்சி வகிட்டை இடதுகைப் பெருவிரலால் சொறிந்து கொண்டாள். மூக்குத்தி என்ன பேசும்போதேவா கழன்று விழப்போகிறது ? அப்படி விழுந்துவிடுமோ என்பதுபோல் மூக்குத்தி திருகாணியைச் சரி செய்து கொண்டாள். ‘அட மூதேவி ‘ என்று பாஸ் புத்தகத்தை வாங்கிக் கொண்டு நான் படியிறங்குகையில், தடதடவென்று என்னைத் தாண்டி இறங்கிப் போனாள்.

குஞ்சம்மா எங்கும் போகவில்லை. எங்கும் போகாதது மட்டுமல்ல. எங்கள் வீட்டைப் போலவே அவளுடைய வீடும் ரொம்ப காலமாகவே ஒரே தெருவில் இருந்தது. ஒரே தெரு என்ன ஒரே தெரு. எங்கள் தெருவேதான். சொந்த வீட்டுக்காரர்கள் ஏன் வீடு மாற்றப் போகிறோம். குஞ்சம்மா அப்பா பெரிய பிரிண்டிங் ஆபீஸ் வைத்திருந்தார்கள். அதென்னவோ அந்தக் காலத்தில் பைண்டிங் ஆபீஸ், பிரிண்டிங் ஆபீஸ் என்றுதான் பெயர் போட்டிருப்பார்கள்.

அச்சுக் கூடம் என்று போட்டது முத்தையா பிள்ளை மட்டும்தான். முத்தையா பிள்ளை அச்சுக்கூடம் இருந்த இடத்தில் இப்போது கயத்தாற்று சாய்பு ஒருத்தர் கோரம்பாய் விற்கிற கடை வைத்திருக்கிறார். நேதாஜி படம் ஓவல் சைஸில் அச்சடிக்கப்பட்ட ஸ்கூல் நோட்களைத் தயார் பண்ணி விற்பனை செய்தது குஞ்சம்மாவின் அப்பாதான். ஒரு பக்கம் அச்சாபீஸ். ஒரு பக்கம் பைண்டிங் ஆபீஸ். இது வந்து முத்தையா பிள்ளை கடையைச் சாப்பிட்டு விட்டது என்று சொல்வார்கள்.

முழுப் பரிட்சை லீவு முடிந்து, பள்ளிக்கூடம் திறக்கிற சமயம் பழைய புஸ்தகம் வாங்கி, நாங்களே பசை காச்சி, பைண்டிங் பண்ணி, கட் பண்ணப் போவது முத்தையா பிள்ளை கடைக்குத்தான். ரொம்ப போட்சாக இருந்த முத்தையா பிள்ளையே எங்களைப் பார்த்ததும் எழுந்து வந்து கட்டிங் மெஷினில் கொடுத்துக் கட் பண்ணுவதைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கும். மேல் கீழ் அட்டையின் கெட்டிக்கு இடையில் வெள்ளை விசிறியாக வெட்டுப்பட்ட புஸ்தகம் அடுக்கு விரிப்பது அழகாக இருக்கும். புஸ்தகத்தைக் கையில் கொடுக்கும்போது ‘நல்லா படிக்கணும் ‘ என்பார். முத்தையா பிள்ளையும் குஞ்சம்மா அப்பாவும் பேசிக்கொள்வதைப் பார்க்க அபூர்வமாக இருக்கும். ‘என்ன அண்ணாச்சி, அப்படியா அண்ணாச்சி, ஆகட்டும் அண்ணாச்சி ‘ என்று குஞ்சம்மா அப்பா மிகுந்த மரியாதையோடு ஒற்றைச் சொல்லாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அந்த வயதிலேயே என்னவோ பண்ணும். அஞ்சாம் வகுப்பு ஸார்வா, ஹெட் மாஸ்டர் சிவக்கொழுந்து வாத்தியாரிடம் பேசுவது போல இருப்பதுதான் காரணம்.

முத்தையா பிள்ளை கடைக்குள் மாடக்குழியில் ஒரு பிள்ளையார் உண்டு என்பது குஞ்சம்மாவும், குஞ்சம்மாவுடைய அப்பாவும் வந்து கும்பிட்டபோதுதான் தெரியும். என்ன கும்பிட்டு என்ன பண்ண. குஞ்சம்மாவுக்கு கல்யாணமாகி, எண்ணி இருபத்திமூணே நாளில் குஞ்சம்மா மாப்பிள்ளை செத்துவிட்டார். குஞ்சம்மாவுக்கு நான் செகண்ட் இயர் படிக்கும்போதே கல்யாணம் முடிந்துவிட்டது.

கல்யாணமான பிறகு, ஆனித் திருவிழாவுக்கு குஞ்சம்மா வந்திருப்பதாக, அம்மாதான் பேசிக்கொண்டு இருந்தாள். பேராச்சியக்கா மகள் – ‘குண்டு குண்டுண்ணு இருப்பா. கல்யாணத்துக்குப் பொறகு நல்லா வாழ்ந்து வடிஞ்சு ஒண்ணுபோல லெச்சணமா இருக்கா ? ‘ குஞ்சம்மாவை நானும் இரண்டு மூன்று நாட்களுக்கு அப்புறம் பார்க்க நேர்ந்தது.

எனக்கொன்றும் குஞ்சம்மா மெலிவாக இருப்பது மாதிரித் தெரியவில்லை. கன்னம் முன்னை விட உப்பியிருந்தது. நிறைய பரு. மூக்குத்தி. பட்டரிடம் வாங்கின திருநீறை உள்ளங்கையில் பொத்திக்கொண்டே, அவளுடைய அம்மா, அடுத்தடுத்த தங்கச்சிகள் என்று ஒன்று போலப் போய்க் கொண்டிருந்தார்கள். குஞ்சம்மா ஆண் பிள்ளைபோல இருந்தாள். அடுத்த தங்கச்சி கூட அப்படித்தான். மூன்றாவது பெண்தான் பேராச்சியக்கா ஜாடை. ஆனாலும் குஞ்சம்மாவை எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. என்ன இருந்தாலும், கூடப் படித்த ஞாபகம் என்பது பட்டுத்துணி மாதிரி எல்லாவற்றையும் போர்த்தி, ‘இந்தா பாத்தியா ‘ என்று உள்ளங்கையில் ஏந்திவிடாதா.

அப்படி உள்ளங்கையில் ஏந்தி வைத்திருந்தால்தான், குஞ்சம்மா மாப்பிள்ளை இறந்து போனதைக் கேட்டபோது கஷ்டமாக இருந்தது. ‘என்னை விடக் கெட்டிக்காரன் உலகத்திலே உண்டாண்ணு, சீமையில் இல்லாத மாப்பிள்ளையாக் கொண்டாரப் போகிற மாதிரிக் குதிச்சான் ‘ துட்டு இருந்தால் உன் மட்டுக்கு ‘ண்ணு தலையிலே ஓங்கி ஒரு இறுக்கு இறுக்கீட்டாரு ஆண்டவன் ‘ -இப்படியெல்லாம் ஒரு ஆம்பிளையால்தான் இன்னொரு ஆம்பிளை பற்றிக் கூற முடியும். நான் முடி வெட்டிக்கொள்ள, சலூனில் குனிந்திருக்கும்போது, வாசலில் குஞ்சம்மா மாப்பிள்ளை இறந்து போனதை வைத்து, குஞ்சம்மா அப்பாவைப் பற்றி இவ்வளவு ஆங்காரமாகச் சொல்லிக் கொண்டிருந்தது சைக்கிள் கடை சுப்பையாப் பிள்ளை.

பெயர்தான் அப்படியே தவிர, சைக்கிள்கடை வைத்திருந்த காலமெல்லாம் மலையேறி ரொம்ப நாளாகிவிட்டது. அவருடைய இரண்டு பெண் பிள்ளைகள், கட்டிக் கொடுத்த இடம் சரியில்லாமல், வீட்டிற்கு வந்து தோசைக்கு அரைத்துக் கொண்டிருக்கிறது. சுப்பையா பிள்ளை சம்சாரம் முறுக்குச் சட்டியை அடுப்பில் வைக்கவில்லை என்றால், இவர் இப்படி மேல்துண்டு கூடப் போட்டுக் கொள்ளாமல்தான் அலைய வேண்டும். அவருடைய பையன் முனிசிபாலிட்டியில் பில் கலெக்டராக இருக்கிறான். எல்லாம் சேர்மன் பா.ராமசாமி புண்ணியம். அவனுக்குப் பெண் கேட்டு, குஞ்சம்மாவைக் கொடுக்கவில்லை போல. அதுக்காக இப்படியா முடி வெட்டுகிற கருப்பையா அவர் பாட்டில் வெட்டவேண்டியதுதானே. சுப்பையாப் பிள்ளை ஏதோ எல்லாவற்றையும் அப்படியே பிட்டுப் பிட்டு வைக்கிற மாதிரித் தலையைத் தலையை எதற்கு ஆட்டவேண்டும். இரண்டு பேரையும் அப்படியே அரசடிப் பாலத்து வாய்க்காலுக்குள் தள்ள வேண்டும் என்கிற மாதிரி இருந்தது. இதில் சுப்பையாப் பிள்ளை வேறு கண்ட கண்ட இடத்தில் சொறிந்து கொண்டிருந்தார்.

குஞ்சம்மா அப்பா இதற்கெல்லாம் கவிழ்ந்து போய்விடவில்லை. வீட்டு ஏறுநடையை விட்டு சைக்கிளை இறக்கிவைத்து, எப்போதும் போல சகுனம் பார்த்துக் கொண்டு நின்றார். சகுனம் சரியில்லாவிட்டால், குஞ்சம்மா அம்மாவைக் கூப்பிட்டு கொஞ்சதூரம் போய்விட்டு எதிரே வரச்சொல்லி அப்புறம்தான் புறப்படுவார் என்று சொல்வார்கள். இப்படி ஒன்று இரண்டு ஜாஸ்தியாகச் சொல்வார்களே தவிர, யாரும் அப்படியெல்லாம் பார்த்ததில்லை. நான் குஞ்சம்மா அப்பா சகுனம் பார்க்கிறார் என்று தெரிந்ததும், என் சகுனத்தில் அவர் போவாரோ மாட்டாரோ பாவம் என்று தயங்கியபடியே வேகமாக வருகிறேன். அவர் முகத்தைப் பார்க்கவில்லை. ‘எம்பெருமானே ‘ என்று ஒரு சத்தம் மட்டும் கேட்கிறது. உச்சந்தலைக்கு மேல் காக்காய் பறக்கும்போது காற்று விசிறுமே அதுபோல் சிறு விசிறல் கேட்டது. குஞ்சம்மா அப்பா சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் திரும்பிப் பார்க்கும்போது.

திரும்பி என்றால் திரும்பியா பார்க்க முடியும். லேசாகப் பக்கவாட்டில் பார்த்தபோது, குஞ்சம்மா அப்பாவின் வேஷ்டியோ, மேல் துண்டோ விசிறினது மாதிரி இருந்தது. வாசனைத் திருநீறு மாதிரி ஒரு செகண்ட் மூக்கில் பட்டது. திருநீறு வாசனை மட்டும்தான் நிஜம். அப்படி விசிறினதும் வெள்ளையாகத் தெரிந்ததும் வேட்டியில்லை. புறா. மாவடிப்பிள்ளை வீட்டுப் புறா. அந்த வீட்டுத் தோட்டத்தில்தான் கூண்டு வைத்துப் புறா வளர்க்கிறார்கள்.

‘போ. போவ் ‘ என்று மாவடிப்பிள்ளை கூண்டைத் திறந்து விட்டுத் தானியம் விசிறும்போது நாப்பது, ஐம்பது என்று புறாக்கள் சடசடவென்று அடிக்கும். பொன்வண்டுக் கலரும் சாம்பல் கலரும் தான் அதிகம். வெள்ளைப் புறா கொஞ்சம்தான். வெள்ளைப் புறா நடக்கிறதைப் பார்க்க வேண்டும். உயர்ந்த மதில் சுவர்கள், கட்டிட விளிம்புகள் எல்லாம் அவைகளுக்கு பிடிக்குமோ என்னவோ. தோகை விரிக்கிற மாதிரிச் சிறகை சிலுப்பிக் கொண்டு அது நடந்து கொண்டிருக்கும். நாம் அதைப் பார்த்து, அதைப் பார்க்க இன்னொருத்தரைக் கூப்பிடும்போது, அதைத் தெரிந்துக்கொண்டது மாதிரிச் சட்டென்று பறக்கும். அப்படிச் சடசடவென்று புறாக்கள் பறக்கச் சரிவாக அடிக்கிற வெயில், வெளிச்சமாக விழுந்து கொண்டிருக்க மாவடிப்பிள்ளை வீட்டுச் சந்துக்குள் இருந்து கேடி. வேலாயுதம் அண்ணன் வந்து கொண்டிருந்ததைப் பார்க்க நன்றாக இருந்தது.

கேடி என்றால் கேடி எல்லாம் ஒன்றுமில்லை. என்னமோ அப்படி ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். என்னைவிட மூன்று வயது வேண்டுமானால் கூட இருக்கும். கேடி. வேலாயுதம் அண்ணன் படித்தது சுந்தரமூர்த்தி ஓதுவார் ஹைஸ் ஸ்கூலில். நாங்கள் படித்தது வயற்காட்டுப் பள்ளிக்கூடம். ரயில்வே ஸ்டேஷனுக்கு அவர்கள் பள்ளிக்கூடம் தாண்டித்தான் போக வேண்டும். ஒருதடவை அந்தப் பக்கம் போகும்போது ரோடு முழுவதும், அறுவடைக்குப் பிணையல் அடித்துக் கொண்டிருந்தார்கள். வைக்கோல் வாசம் மூக்கைத் துளைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ ‘ என்ற பாட்டு லவுட் ஸ்பீக்கரில். சுந்தரமூர்த்தி ஓதுவார் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் நடக்கிறது. கேடி. வேலாயுதம் அண்ணன் தான் சூப்பர் சீனியர் சாம்பியன். பச்சை வெல்வெட் டிராயரும் பனியனுமாக வேலாயுதம் அண்ணன் மேடையிலிருந்து கப் வாங்கிக் கொண்டு வரும்போது எல்லாம் விசில் அடித்தார்கள்.

வேலாயுதம் அண்ணன் பீடிக் குடிப்பதைப் பின்பு ஒரு நாள் பார்த்தபோது கூட எனக்கு மரியாதை குறையவில்லை. வேலாயுதம் அண்ணன் போலீஸாகவோ, ஜெயில் வார்டனாகவோ வேலை கிடைத்துப் போய்விட்டதாகச் சொன்னார்கள். இந்த ஊரில் தான் வேலையாம். ஆனால் பார்க்கமுடிந்ததே இல்லை.

வேலாயுதம் அண்ணனுடைய அப்பாவைத்தான் அடிக்கடி பார்ப்பேன். அவர் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவே மாட்டாரோ என்னவோ. குனிந்துக்கொண்டேதான் நடப்பார். வலதுகால் எப்போதுமே வீங்கியிருக்கும். பெரிய கட்டுப்போட்ட வலதுகாலை இழுத்து இழுத்துப் பக்கவாட்டில் நகர்த்திக் கொண்டே, இடது காலால் நேராக நடந்து வருவார். தலை நரைத்துப் பறந்துக் கொண்டிருக்கும். சிகரெட் குடித்துக் குடித்துத் தொங்கின உதட்டில் ஒரு இடம் மட்டும் சிவந்த வெள்ளையாக இருக்கும். ஒரு வேலை கேடி. வேலாயுதம் அண்ணன் அப்பாதான் கேடியாக இருந்திருப்பாரோ என்று தோன்றும். ‘அஞ்சு வருஷம், பத்து வருஷம்ணு ஒவ்வொருத்தனும் குத்தகைக்கு எடுத்தமாதிரி ஆடி முடிச்சுட்டுத்தானே இந்தத் தெருவுல, வேறு வழியில்லாமல், தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு கிடக்கான் ‘ என்று மீசைக்கார ஆயான் பொதுப்படையாக, இந்தத் தெரு ஆண்பிள்ளைகளைப் பற்றி சொன்னது சரியாகத்தான் இருக்கும்போல.

சில விஷயங்களைப் பார்த்தால் எல்லாம் சரியாக நடந்துக்கொண்டிருப்பது மாதிரித்தான் இருக்கிறது. குஞ்சம்மா, இவ்வளவுக்கு அப்புறமும், பத்து படித்துவிட்டு டாச்சர் ட்ரெய்னிங் முடித்தது, அப்பா கிளாப்டன் பள்ளிக்கூடத்தில் பார்த்தது, அப்படி வேலை பார்த்த குஞ்சம்மாவை மறுபடியும் கேடி. வேலாயுதம் அண்ணன் கட்டிக்கொண்டது எல்லாம் அப்படிச் சரியாக நடந்த விஷயங்கள் அல்லாமல் வேறு என்ன.

‘அச்சாபீஸ்காரன் துட்டுக்குல்லா போய் விழுந்திட்டான். நம்ம திருநாவுக்கரசு ‘ என்று கேடி. வேலாயுதம் அண்ணனின் அப்பாவைப் பார்த்துச் சொன்னார்கள். அவர் விழவும் இல்லை. எழுந்திருக்கவும் இல்லை. எப்போதும் போலத்தான் தலையைக் குனிந்து கொண்டே நடந்துக் கொண்டிருந்தார். வேலாயுதம் அண்ணன் குஞ்சம்மாவைக் கட்டிக்கொண்டதற்காக அவருடைய கால் வீக்கம் குணமாகிவிடுமா என்ன. அதுவுமில்லை. வேலாயுதம் அண்ணனின் அம்மா இன்னும் முக்குப் பம்ப்பில்தான் ஏழு நடை என்று வீட்டிற்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறாள்.

இதைவிடச் சுவாரசியம் சீவலப்பேரி பெரியம்மை என்னிடம் கேட்டதுதான். ‘யே.சுந்தரம். அச்சாபீஸ்காரர் மகளும் வேலாயுதமும் லவ் பண்ணியில்லா தாலி கட்டிகிட்டாங்களாம். நிசந்தானா ? ‘

நான் ஒன்றும் சொல்லவில்லை.

‘ஒருத்தருக்கொருத்தர் புடிச்சுப் போச்சாம் ‘லா ? ‘ – பெரியம்மை மேற்கொண்டும் என்னைக் கேட்டாள். என் வீட்டுக்காரிக்கு ஒரே சிரிப்பு. அந்த இடத்தில் ஒன்றும் சொல்லாமல், வீட்டுக்குள் வந்ததும், ‘உங்க பெரியம்மை இங்க்லீஷ்ல எல்லாம் பேசுதாங்களே ‘ என்று சொன்னாள்.

அவ்வளவுதானா. அந்த பெரியம்மை சொன்ன ஒரு சொல்தானா உன் காதில் விழுந்தது. அதற்கு மேல் உனக்கு ஒன்றும் தோன்றவில்லையா. இந்தத் தெருவில் ஒருத்தி சின்ன வயதில், கல்யாணம் ஆன மூணே வாரத்தில் கஷ்டப்படுகிறாள். அப்புறம் மேற்கொண்டு படிக்கிறாள். வேலைக்கும் போகிறாள். மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாள். இதில் உனக்கு ஒன்றும் தோன்றவில்லையா. சந்தோஷமில்லையா. அப்படியே அவர்கள் விருப்பப்பட்டுக் கல்யாணம் பண்ணியிருந்தார்கள் என்றால் அது எவ்வளவு நல்லது.

‘லவ் பண்ணியிருந்தா என்ன தப்பு ‘ – நான் சொன்னேன்.

‘உங்களுக்கு எதுதான் தப்பு இல்லை ? ‘ – இதைச் சொல்லி, முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு மேலும் மேலும் அவள் போய்க் கொண்டே இருந்தாள். அடுப்படிப் புகை சுழன்று, அவளுக்கு முன்னால் புறவாசலுக்குப் போய்க் கொண்டு இருந்தது.

எனக்குப் பெரியம்மையைப் பார்க்கவேண்டும் போல இருந்தது.

‘பெரியம்மை, உனக்காவது அப்படித் தோணுச்சே ‘.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *