ஒப்பனையுதிர் காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 6,233 
 
 

மேற்புறத்தில் படிந்திருந்த தூசியைத் தட்டியபடி மைலாப்பூர் கோவிந்தன், புத்தகத்தைக் கொடுத்தான். ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ முதற்பதிப்பு கொடுத்த மகிழ்ச்சியை விட, அதிலிருந்த பெயர் அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது. கே. சாமுவேல் அமிர்தசாமி, உ.வெ.சா. தெரு, தாம்பரம். அதே கோழி கிறுக்கிய கையெழுத்து.

“சும்மா சொல்லக் கூடாது சார், பெரிய புதையல், அந்த வீட்டு அம்மாவே போன் பண்ணி வரச் சொன்னாங்க”

“வீட்ல இவரு இல்லையா?” என்று சாமுவேல் பெயரைக் காட்டினேன்.

“அவரு நம்ம ரெகுலர் கஸ்டமர் சார். போனவாரம் செத்து பூட்டாரு. நம்ம கைல வாங்கின நெறைய புத்தகங்கள் நம்ம கைக்கே திரும்பி வந்திருச்சி.”

அவன் சிரிப்பிற்குப் பின்னால் வியாபார வெற்றியின் நுனிவால் ஆடிக் கொண்டிருந்தது.

ஸ்ரீதேவியின் இறப்பு செய்தியைப் படிக்க ஆரமித்து விட்டான்.

“என்னமா ஆக்ட் பண்ணுவா சார், எதோ தப்பு நடந்திருக்கு சார்.”

அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு, ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ புத்தகத்துடன் மைலப்பூரிலிருந்து தாம்பரம் கிளம்பினேன்.

ஒய்வு பெற்ற 5 ஆண்டுகளில் எந்த நிகழ்வைப் பற்றியும் பள்ளிக் கூடம் ஏன் தெரிவிப்பதில்லை என்று தெரியவில்லை. நான் மதுரையில் போய் செட்டில் ஆகி இருக்கக் கூடாதா?

உறவினர்கள் யாரும் இல்லாத ஊரில் எதற்காக இருக்க வேண்டுமென்ற என் முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பல விழாக்களில் ஒதுக்கப்படும் உணர்வும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.
சாமுவேல் அமிர்தசாமியின் கோணல் சிரிப்பும், ஒருவித அசட்டுத்தனமும் தான் நினைவுக்கு வருகிறது. பண்ருட்டி அருகே, ஒரு குக்கிராமத்திலிருந்து இந்த பள்ளிக்கு யாரோ ஒரு போதகர் வழியாக பொருளியல் முதுகலை ஆசிரியராக வந்தான் என்று அன்றைய தலைமையாசிரியர் சொன்னதாக ஞாபகம்.

மிக நெருக்கமான நண்பன் என்று அவனைச் சொல்லிவிட முடியாது. இருப்பினும் வாசிக்கும் பழக்கம் கொண்டவன் என்ற உண்மையைச் சொல்லியிருக்கலாமே. அவனது இயல்பான கூச்ச சுபாவம் அதனை மறைத்து விட்டதா? ஸ்டாப் ரூமில் இலக்கியம் பற்றி ஜி. மார்டின், ஜெயராஜ் ஆகியோருடன் பேசும் போது, இவன் எதுவும் கூறாமல் தான் இருந்திருக்கிறான். எனக்குத் தெரிந்து அவன் வாசிப்பின் எல்லை தினத்தந்தி அல்லது பைபிளாகத் தான் இருந்திருக்கும். “சாமு தந்தில எத்தினி மணிக்கு டெஸ்ட்” என்று கிண்டல் பண்ணியது நினைவு இருக்கிறது.

கோவிந்தன் கடையில் கஸ்டமராக இருந்திருக்கிறான் என்பது அடுத்த அதிர்ச்சி. நான் தாம்பரத்தில் இருந்த போது வாரத்திற்கு ஒருமுறையாவது கோவிந்தன் கடைக்கு வருவதுண்டு. எப்படி எனக்கு இவனைப் பற்றியும், புத்தகம் வாங்குவது பற்றியும் தெரியாமல் போனது?

மதுரையிலிருந்து தாம்பரம் சப் ட்ரெஷரிக்கு வரவில்லையெனில், கோவிந்தன் கடைக்கு போயிருக்கமாட்டேன். அங்கு போகாமல் இருந்திருந்தால், சாமுவேல் அமிர்தசாமி மரணம் தெரியாமல் போயிருக்கும்.
தாம்பரம் வரும்வரை ஒரு 60 வயதுக்காரர் என்னருகே ஸ்ரீதேவி பற்றி தொனதொனத்துக் கொண்டிருந்தார். அது குடும்ப நெருக்கடியால் தற்கொலை செய்திருக்கும் என்றார். முகத்தில் இத்தனை ஆபரேஷன் பண்ணியிருக்க வேண்டாம் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. மனதில் கிளர்ந்த ஒருவித ஏக்க உணர்வை தவிர்க்க முடியவில்ல. ஒரு நினைவுக் கோபுரம் புதிதாக உயர்ந்து நின்றது. உள்ளே PTA கட்டட கூரையை சரிசெய்திருப்பார்களா? பல கட்டடங்களில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஓடு மாற்றப் பட்டிருக்குமா? ‘வெள்ளையடிக்கப் பட்ட கல்லறையாக்கிடாதீங்க’ என்று கடைசி வருடத்தில் ஸ்டாப் ரூமில் சண்டையிட்டது நினைவுக்கு வருகிறது.

அமிர்தசாமி வீட்டிற்கு இரண்டு மூன்று முறை வந்திருக்கிறேன். அந்த தெருவிலிருந்த ஜார்ஜ் சாரைப் பார்க்க அடிக்கடி வருவதுண்டு, அவர் இறக்கும் வரை.

அவன் வீட்டிற்கு முன்புறத்தில் இரண்டு கிறிஸ்மஸ் மரங்கள். ஒன்று சற்று கோணலாக இருந்தது, அவன் சிரிப்பைப் போன்று. வீடு பூட்டப்பட்டிருந்ததால் அடுத்த வீட்டுக்காரரிடம் கேட்டேன். அவன் மனைவி, மகளுடன் சொந்த ஊரான பெங்களூருக்கே சென்று விட்டதாகவும், வீட்டை விற்பதற்கு அட்வான்சு கூட வாங்கி விட்டான் என்றும் சொன்னார்.

சிமென்ட் நிறத்தில் அவன் வீடு இருந்தது. இந்த வீட்டிற்குள் அவன் தந்தி படித்திருக்க மாட்டான் என்ற உண்மையை இன்னும் நம்ப முடியவில்லை. ஜெபக்கூட்ட கார்டு ஒன்றை கொடுத்தார் அந்த வீட்டுக்காரர். 16வது நாள் பெங்களூர் காந்தி பஜாரில் ஜெபக்கூட்டம் இருந்தது. “நல்ல மனுஷன் சார். கவுந்துகிட்டே தான் தெருவுல நடப்பாரு. பொஞ்சாதி சரியில்லே. என்ன இருந்தாலும் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடாது சார்.”

“எந்த முடிவு?”

“ஏங்க, இது இன்னான்னு வந்து பாருங்க”

உள்ளே போனவர் திரும்பவே இல்லை. இன்னும் சொல்லப்படாத ரகசியங்களை வாழ்க்கை எப்போதும் கொஞ்சம் புதைத்து வைத்திருக்குமோ?

மனைவிக்கு போன் பண்ணி தகவல் தெரிவித்த போது, “அந்த லூஸ் மனுசனா? அவரு பெண்டாட்டி வாயாடி ஆச்சே” என்றார்.

நான் இப்படியே பெங்களூரு போய் மகள் வீட்டில் இருந்துவிட்டு, ஜெபக்கூட்டம் அட்டென்ட் பண்ணி வருவதாகச் சொன்னேன்.

சேலையூர் மாடம்பாக்கத்தில் நான் குடியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த சாமிநாதனைப் பார்த்து விட்டு, எக்மோர் ரூமுக்கு சென்றேன். மாடம்பாக்கம் வீடிற்கு அமிர்தசாமி இரண்டு முறை வந்திருப்பான் என்று நினைக்கிறேன். ஒன்று ஒய்வு பெற்றபின் பள்ளிக்காக மரபுப்படி வீட்டில் கொண்டு வந்து என்னை விடும்போது, இறுதியாக வீட்டைக் காலிபண்ண ஆயத்தமாக இருந்தபோது.

எல்லா பொருட்களையும் ஹாலில் வைத்துக் கொண்டு லாரிக்காக காத்திருந்தேன். நான் உள்ளே போய், இருந்த செவென் அப்பை ஒரு டம்ளரில் ஊற்றி வருவதற்குள் “ஒன்னும் வேணாம் சார், நான் வரேன்” என்று சொல்லிவிட்டு மாயமாக மறைந்து விட்டான். அதன்பிறகு சிலமுறை மொபைலில் பேசி இருக்கிறான். அப்புறம் அந்த எண்ணுக்குப் போட்டால், கிடைக்கவில்லை. சிம்மை மாற்றியிருப்பான்.

எப்பொழுதுமே அவன் புத்தகங்கள் குறித்து பேசாதது சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இலக்கியம் அவனுக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்ற முடிவுக்கு நான் எப்போதோ வந்திருந்தேன். சிலமுறை த. மு. எ. ச. கூட்டங்களுக்கு வந்து பாதியில் போயிருக்கிறான். பள்ளியில் ஒருமுறை இலக்கியமன்ற கூட்டத்தில் தூங்கிப் போனான். மாணவர்கள் அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார்கள். அவன் வகுப்பில் இருந்தால் சப்தமாக இருக்கும். பாடம் நடத்துவது வேடிக்கையாக இருக்கும். நடத்துவது எல்லாவற்றையும் கோணலான கையெழுத்தில் கரும்பலகையில் எழுதிவிடுவான். அவன் வகுப்பில் யாருமே தோல்வி அடைந்ததில்லை என்பதும் விந்தைதான்.

திருமணத்திற்கு முன்பே அவனை அவன் மனைவி ஜான்சியுடன் தாம்பரம் ரயில்வே பால படிக்கட்டில் பார்த்திருக்கிறேன். அவள் அழகாக, அவனைவிட சற்று உயரமாக இருந்தாள். 10, 12 வயது இளையவளாக இருக்கலாம். சினாட் கூட்டமொன்றில் சந்தித்திருக்கின்றனர். ஏற்கனவே விவாகரத்தானவள். அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது. எப்படி இவர்கள் ஒன்றிணைந்தனர் என்பது இன்றுவரை தெரியாது.

இவன் வீட்டில் அப்பா மட்டும் தான். கிராமத்துக்காரர்கள். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. இவனைப் பற்றிப் பேசும் போது, பள்ளியில் பலரின் முகத்தில் ஒருவித கேலிச் சிரிப்பும், சில கிண்டல் பேச்சுக்களும் இருந்தன.

பேருந்தில் பெங்களூரு செல்லும் போதும் பக்கத்திலிருந்தவன் மொபைலில் ஸ்ரீதேவி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது சென்னை, மும்பை வீடுகள் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சாமுவேல் அவனிருந்த வீட்டைக் கட்டும் போது நிறைய கடன் வாங்கியதும், வங்கியிலிருந்து நிறைய பிரச்சணைகள் வந்ததும் தெரியும். ஜான்சி ஒரு தனியார் கிருஸ்துவ பலகலைக்கழகத்தில் பணியாற்றினாள். அவள் ஒப்பனை செலவுக்கே அந்தப் பணம் போதாது என்று பலரும் பேசுவதுண்டு. Post Mortem என்ற பெயரில் ஸ்ரீதேவி உடலைக் குத்தி குதறி எடுத்து இருப்பார்கள் என்று நினைத்தபோது மொபைலில் அவள் நடித்த சில காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. மிக அழகான உடல் அமைப்பு…

மல்லேஸ்வரத்தில் மகள் தெரிந்த ஆட்டோவில் ஏற்றிவிட்டாள். இறப்பு செய்தியைக் கூறியதும் அவள் சொன்னது “அந்த லூஸ் மாமாவா?” என்றுதான். அப்படி சொல்லாதே என்றேன். மனம் என்னவோ அவள் சொன்னதை ஆமோதித்துக் கொண்டிருந்தது.

காந்தி பஜாரில் அந்த ஹால் வெள்ளை துணி உறை போடப்பட்ட நாற்காலிகளுடன் கண்ணாடி வழியே தெரிந்தது. முதல் வரிசையில் ஜான்சியும், அவள் மகளும். இருவரும் அக்கா, தங்கை போன்று தெரிந்தனர். மிக உயரமான மரத்தின் நிழல்கள் சாலையை அரவணைத்திருந்தன. நான் உள்ளே சென்றபோது ஜான்சி எழுந்து நின்று தோத்திரம் பண்ணினாள். தன் மகளிடம் குனிந்து எதோ சொல்ல அவளும் தோத்திரம் செய்தாள். நான் பணியாற்றிய காலத்திலேயே மகளை பெங்களூருவில் படிக்கவிட்டிருந்தாள்.

நான் கடைசி வரிசையில் உட்கார்ந்தேன். இன்னும் சில நாற்காலிகள் காலியாக இருந்தன. துணி உறை சுத்தமாக இருந்தது. பசவன்குடி பற்றிக் கன்னடத்தில் எதோ பேசிக் கொண்டிருந்தனர் அருகில் இருந்த இருவர்.

மகள் வீட்டிற்கு ஒருமுறை வந்தபோது பசவன்குடி பூங்காவுக்கு வந்திருந்தேன். ஞானபீட விருது பெற்ற அனைத்து எழுத்தாளருக்குமான நினைவு மண்டபத்தின் அருகில் நின்றிருந்த போது “சார்” என்ற குரல் கேட்டுத் திரும்பியபோது சாமுவேல் அமிர்தசாமி நின்றிருந்தான்.

அன்றுமாலை குவெம். பு. பிறந்தநாள் இலக்கிய நிகழ்வு. அதற்கு வந்திருப்பானோ என்று கேட்ட போது, தனக்கு கன்னடம் புரியாது என்று மட்டும் கூறினான். ‘பை டூ’ வில் காபி குடித்துவிட்டு பேருந்துக்கு செல்லுகையில் அவன் வீடிற்குக்கூட அழைக்கவில்லை.

ஜெபக்கூட்டத்திற்கு அலெக்ஸ் வந்தார். அதே டை அடித்த குறுந்தாடி, தலைமுடி. ஆஜானுபாகுவாக ‘பைசன்’ என்ற செல்லப் பெயரை தக்க வைத்துக் கொண்டிருந்தார். முன்னாலிருந்து என்னை நோக்கிக் கை தூக்கி ஆட்டினார். ஜான்சியின் காதில் எதோ கூறினார் ஒரு கரத்தால் அவள் தொலை அழுத்தியபடி. அவள் என்னிடம் வந்து “நீவு மார்த்தாதீத்ரா… சாரி… அவர பத்தி பேசுறீங்களா?” என்றபோது நான் சிரித்தபடி மறுத்துவிட்டேன்.

மற்றொரு போதகர் வந்தபின் நிகழ்ச்சி தொடங்கியது. 11.30 இருக்கும்.

கன்னடத்திலும், தமிழிலும் பாடல்கள் வந்தன. அவனைக் குறித்து ஒருவர் கன்னடத்தில் பேசினார். மற்றொருவர் அவன் மாமா என்று சொல்லிக் கொண்டு பேசினார். வேஷ்டி, சட்டையில் இருந்தார்.

இறக்கும்வரை அவன் பெற்றோருக்கு அவன் உதவியதைப் பற்றிக் கூறினார். முதல் வரிசையில் ஒல்லியாக இருந்த ஒரு பையனை முன்னாள் வரவழைத்து, “இந்த தம்பி ஞானராஜ் இன்னக்கி இஞ்சினியரா கைநிறைய சம்பளம் வாங்கிட்டு இருக்கானா அதுக்குக் காரணம் சாமுவேல் அமிர்தசாமி, என் மருமகன்தான். இவன் மாதிரி எத்தனையோ பேருக்கு பீஸ் கட்டி இருக்கான். மகள் ஜான்சிக்கு கூட தெரியாம உதவி இருக்கான். அதனால அவங்களுக்குள்ள நிறைய சண்டைலாம் வந்திருக்கு.”

பள்ளி ஹாஸ்டலுக்குப் போய் கோச்சிங் கிளாஸ் எடுப்பான் என்பது தெரியும். பண உதவி அளிப்பது போன்ற தகவல்கள் எப்படி தெரியாமல் போனது? அவனுக்கு நெருங்கின நண்பர்கள் யாரேனும் இருந்திருந்தால் தெரிந்திருக்கும். என்னைப் போன்றே அவனும் வெளியூர்க்காரன் என்ற ‘தடை செய்யப்பட வேண்டிய மனிதர்கள்’ பட்டியலில் இருந்தான்.

ரெவெரெண்ட் அலெக்ஸ் தான் அருட்செய்தி. தன் மீது அபரிவிதமான அன்பு வைத்திருந்த சகோதரன் என்று உணர்ச்சி மேலிட கூறினார். ஜான்சி கண்களைத் துடைத்துக் கொள்வது தெரிகிறது. அலெக்ஸ் பல பாஸ்ட்ரேட்டுகளுக்கு மாற்றப்பட்டதற்கு அவரது பெண் உறவுகளும், பண கையாடல்களும் காரணம் என்பார்கள்.

இந்த அலெக்ஸ் மட்டும் தான் அமிர்தசாமியின் நண்பராக இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஒன்று மட்டும் நெருடலாக இருந்தது. எதனால் எப்படி இவன் இறந்தான் என்பதைப் பற்றி யாரும் பேசவில்லை.

நான் எதிர்பார்க்கவே இல்லை. ஜான்சி நன்றி கூற எழுந்தாள். பாதி கன்னடமும், பாதி தமிழுமாக அவள் பேசியதில் எனக்குப் புரிந்தது இதுதான் – தன்னையும் தன் மகளையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார். புத்தகங்கள் குவிந்திருக்கும் அவரது அறைக்கு நாங்கள் செல்வதில்லை. புத்தகம் வாங்குவது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். நானு அவரிக தொம்பா தொந்தரு கொட்பிட்டே… என்னை ஜென் என்று கூப்பிடுவார். நிறைய கவித்துவமாக என்னிடம் சொல்வார். எனக்கு அது புரியாது. என் மாமா கிருஷ்ணராவை அவரது வயதான காலத்தில் கவனிக்க யாரும் முன்வராத போது, இவர்தான் ‘கத்ரி குப்தே’ யில் இருக்கும் ‘சத்யா சாய் சேவா டிரஸ்டி’ ல் சேர்த்து, மாதா மாதம் பணம் அனுப்பினார். நாங்கள் அவரை மாதம் ஒருமுறை வந்து பார்த்துக்கொள்வோம். சென்றமாதம் தான் அவரும் இறந்து போனார்.

கூட்டம் முடிந்தபிறகு ஒரு சிற்றுண்டி ஒழுங்கு செய்திருந்தனர். நான் எழுந்தபோது வெள்ளையுறை கீழே விழுந்தது. நாற்காலியின் கிழிந்த பகுதி தெரிந்தது. அலெக்ஸ் ஜான்சி கையைப் பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

நான் அவளிடம் சென்ற போது “தாங்க்ஸ் சார்” என்றாள். திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் “ஒரு நிமிசம்தான் சார், பக்கத்துலதான் வீடு. இதோ வந்துடறேன்” என்று மகளுடன் சென்றாள்.
5 நிமிடத்திற்கு பிறகு ஒரு ஒட்டிய பார்சலுடன் வந்தாள்.

“சார், அவர் சாகுறத்துக்கு ரெண்டு நாள் முன்பு இந்த புக்ச உங்களுக்கு அனுப்பனும்னு சொன்னாரு” என்று கொடுத்தாள்.

கனமாக இருந்தது. அவன் கைப்பட எழுதிய என் மதுரை முகவரி அந்த பார்சலின் மேல் ஒட்டப்பட்டிருந்தது. இடது புறம் அவனது சென்னை முகவரி.

ஆட்டோவில் கிளம்பிய போது மனது கனமாக இருந்தது. உரையை கிழித்தேன். உள்ளே மூன்று புத்தகங்கள் இருந்தன.

1. ஆத்மாநாம் கவிதைகள்
2. எர்னெஸ்ட் ஹெம்மிங்வேயின் ‘Farewell to arms’
3. சில்வியா பிளாத் கவிதைகள்

இவர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்பது இவனுக்கு எப்படித் தெரியும்?

ஆத்மாநாம் கவிதைகளைத் திறந்தபோது எனக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது. இடது மேல் மூலையில் எனது பெயர் இருந்தது. என் கையால் எழுதப்பட்டது. தொலைந்துபோன புத்தகம் திரும்ப கிடைத்துவிட்ட மகிழ்ச்சியைவிட இவன் கைக்கு எப்படிப் போனது என்ற கேள்விதான் பெரிதாக நின்றது.

– ஜனவரி 2020 (நன்றி: http://egbertsachidhanandham.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *