பஸ்ஸா, வேனா, ஆஸ்பத்திரியில அறுத்து முடிச்சு அள்ளிப் போட்டுக்கிட்டுப் போகிற பொண வண்டியான்னு தெரியலை. எங்கேயோ தூக்கலா பச்சை இலை வாசனை. கூடவே, விடிகாலையிலே மீன் சாப்பிட்டு, வரிசையா ஏழெட்டு பேர் ஏப்பத்தோடு விட்ட வாடை. சக மனிதர்கள். பொறுத்துக்கணும்.
அனேகல். னேகல். கல்.
கானா பாடிட்டு கண்டக்டர் விட்ட இடத்தில் இருந்து தூங்க ஆரம்பிச்சார். சுவாதீனமாக ஆளாளுக்கு அவரோட லெதர் பையில காசு போட்டுட்டு வண்டி ஏறியிருந்தாங்க. என் பக்கத்து ஸீட் நரை மீசைக்காரர் அந்தப் பையில் இருந்து காசு எடுத்துக்கிட்டு ஏறி வந்தவர். அஸ்ஸாம் போலீஸ்னு காக்கிச் சட்டை சொன்னது.
யானைக் கால்தானே இது?
நான் கேட்டதுக்கு அஸ்ஸாம் போலீஸ், உஸ்பெஸ்கிஸ்தான் பிரதமர் போல அமர்த்தலாச் சிரிச்சது. உஸ்பெஸ்கிஸ்தான் பிரதமரை உனக்கு எப்படிய்யா தெரியும்னு கேட்டுத் தொணதொணக்க வேணாம். நான் ஒட்டகத்தைத் தேடிக்கிட்டு காடு மேடெல்லாம் திரிஞ்சிட்டு இருக்கறவன். உவமான உவமேயம் எல்லாம் பிற்பாடு.
யானைக் கல்? சரியான உச்சரிப்பு அனேகல் தானா? அனேகல்? அனேகல்?
சத்தம் கிளப்பி டிரைவரைக் கேட்டேன். அந்தாளு நான் ஏதோ கெட்ட வார்த்தை சொன்னதுபோல சிவசிவன்னு ரெண்டு காதையும் பொத்திக்கிட்டான். முன்னாடி உட்கார்ந்திருந்த பெரிசு எங்க பெரியப்பா போன வருஷம் செத்ததற்குத் துக்கம் கேட்கற தோரணையில என்னைப் பார்த்து சோகமாத் தலையாட்டுச்சு.
சரி, ஒட்டகம் இந்தப் பிரதேசத்தில் இருக்க வாய்ப்பு இல்லே. அடுத்த ஸ்டாப்?
பின்னாடி இருந்து யாரோ சட்டையைப் பிடிச்சு இழுத்தாங்க. ஜமுக்காளத்தை மார்பு வரை உடுத்தின பொண்ணு. உலகம் இப்ப அழியப்போறதுன்னு அஸ்ஸாமிய மொழியிலே அலறி, என்னை ஜன்னல் வழியே தப்பிச்சுப் போகச் சொல்லுதுபோல. வேகமா இறங்கினேன். துருப்பிடிச்ச மஞ்சள் பலகை இதுதான்டா அஸ்ஸாம் மாநிலம்… ஹைலகண்டி மாவட்டம்… அனேகல் கிராமம்னு அறிவிச்சுது.
சூர்யகாந்த் பரூவா. ஜாக்கிரதையா ஞாபகம் வெச்சுக்குங்க. இன்னொரு தடவை சொல்ல நேரம் இல்லை. பழிகாரன் பரூவா. அவனைத் தேடித்தான் வந்திருக்கேன்.
எங்க கம்ப்யூட்டர் கம்பெனியில் போன மாசம் வேலைக்குச் சேர்ந்தான். பொறுங்க. உடனே என்னை ஜீன்ஸ், டி-ஷர்ட், கை நிறையக் காசு, பேங்க் கடன்ல வாங்கின கார்ல போற சாஃப்ட்வேர் இன்ஜினீயர்னு நினைச்சு, ‘போய்யா ஆணி புடுங்கி’ன்னு எகிறினா, நான் திரும்ப வண்டையாத் திட்டுவேன்.
ரெண்டு காரணம். முதலாவது, ஆணி புடுங்கறது, பொட்டி தட்டுறதுபோல கம்ப் யூட்டர் காரியங்கள் செய்யறவங்க பாவப்பட்ட ஜன்மங்க. திட்டக் கூடாது. முப்பது வயசிலேயே அரைக் கிழவன் ஆக்கிடுற கஷ்டமான வேலை இதெல்லாம். ஓய்வு ஒழிச்சல்னு பேச்சே இல்லை. ரெண்டாவது காரணம், நான் முப்பது வயசானாலும் கண்ணுக்குக் கீழ் ஒரு கருவளையம்கூட இல்லாதவன். ஹெச்.ஆர். அதாவது கம்ப்யூட்டருக்குத் தீனி போட பொட்டிக்கார ஆள் பிடிக்கிற ஆசாமி!
இன்னிக்கு என்ன தேதி? ஜனவரி 30. சரியாக ஜனவரி ஒண்ணாம் தேதி ஆபீஸில் நுழைஞ்சான் அந்த படுவா. சரி, என் தப்புதான், என்ன செய்யணும்கிறீங்க? நான்தான் அவனை வேலைக்கு எடுத்தேன். படுபாவி, புராஜெக்ட் மேனேஜர் லோனப்பன் கேட்ட படிப்புத் தகுதிக்கு, எக்ஸ்பீரியன்ஸுக்கு வருஷம் பதினஞ்சு லகரம் சி.டி.சி. அதாவது காஸ்ட் டு கம்பெனி, புரியலியா, சம்பளம் மற்ற இனத்தில் செலவு பிடிக்குமாம். ஃபைனான்ஸ் எக்ஸிகியூட்டிவ் தேனம்மை சொல்லிச்சு. ஆச்சி சொன்னா அப்பீலே இல்லேங்கறதால, அஸ்ஸாமில் இருந்து விண்ணப்பிச்ச இந்த பரூவா பையனைப் படு சல்லிசாப் பிடிச்சு வலையில் சிக்கவெச்சேன். எத்தனை ரூபாய்க்குப் படிந்து வந்ததுன்னு எல்லாம் கேட்கக் கூடாது. அது தொழில் ரகசியம்.
எப்படிய்யா பிடிச்சேன்னு தேனம்மை ஆச்சியே வாயைப் பிளந்துச்சு. நவ்க்ரி டாட் காம், ஃபேஸ்புக், ஆஸ்புக் எல்லாம் தேடி இந்த பரூவாவைப் பிடிச்ச பிரதாபத்தைச் சொன்னபோது, பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன் பண்ணிடுப்பா முதல்ல என்றார் பாஸ். அல் – கொய்தா கையாளாக இருப்பான் பையன்னு அவருக்கு ஏனோ லேசான சந்தேகம். அஸ்ஸாமிலே ஒசாமா பின்லேடன்காரங்க அநேகமா கிடையாதுன்னு கஷ்டப்பட்டு விளக்கினாலும், எதுக்கும் உடனே கூகுள்லே சர்ச் பண்ணிடுன்னார்.
அவன் படிச்ச கொஹிமா கல்லூரி, லோக்கல் பால் வியாபாரம், உதிரித் தேயிலை வியாபாரம் செய்கிற ரெண்டு பிரமுகர்கள், ஏதோ சொசைட்டி தலைவர் மாதுரி தீட்சித் படம் அச்சடிச்ச லெட்டர்பேடில் குட் பாய்னு கோணை கோணை எழுத்திலே கிறுக்கின நற்சான்றிதழ்னு இப்படி பரூவா சொக்கத் தங்கம்கிறதுக்காக ஏக அத்தாட்சி. தீர விசாரிச்சு, அவன் வர்ற முந்தியே அறிக்கை சமர்ப்பிச்சேன்.
டெலிபோன்லயே மூணு இன்டர்வியூ செய்து, மூணாவது இன்டர்வியூவை ரிக்கார்டும் செய்திருந்ததால, அவன் நேரில் வந்ததும் குரலை அடையாளம் தெரிஞ்சது. இன்னொரு சோதனை பாக்கி. அப்ளிகேஷனோடு ஸ்கேன் செஞ்சு இ-மெயிலில் அனுப்பின அவனோட போட்டோவும் மூஞ்சியும் அச்சு அசலாப் பொருந்தி இருந்தாப் போதும். கவலை இல்லாமல் புராஜெக்ட் மேனேஜர் கையில் ஒப்படைச்சுடலாம். அப்புறம் அடுத்த வருஷம் இன்க்ரிமென்ட் தரலாமானு ஆலோசனை செய்கிற வரை மேனேஜர் பாடு, புராஜெக்ட் பாடு, ஒட்டகம் பாடு!
‘அது ஏன் ஒட்டகம்’னு நான்தான் அவசரத்தில் சொல்லலை. கேட்டிருக்கலாம் இல்லையா? போகட்டும். அதையும் சொல்லிடறேன்.
மழை நாள் காலையில சொட்டச் சொட்ட நனைஞ்சுக்கிட்டு ஆபீஸில் புகுந்த பரூவாவுக்கு கோழிக் குஞ்சு மாதிரி தலைமுடி ஈரத்தில் ஒட்டி இருந்தாலும், மனசிலே கூட்டிக் கழித்துப் பார்த்து, வேலை விண்ணப்ப முகம் இதுதான்னு முடிவெடுத்தேன். ஆனாலும், நம்ப முடியலை. அந்த மூஞ்சி தரைக்கு ரொம்ப மேலே இருந்தது. ஆமா, பரூவா ஏழு அடி ஒரு அங்குல உயரம். ஒட்டகமேதான்!
வாசல் நிலைப்படியில இருந்து டாய்லெட் கதவு வரை அவன் தலையைப் பதம் பார்த்ததால, குனிஞ்சபடியே ஆபீஸில் நடமாட கேணத்தனமான ஆலோசனையை ஹெச்.ஆர் எக்ஸிகியூட்டிவாக அவனுக்கு வழங்கினேன். தலை இடிச்சாலும் பரவாயில்லை. இருக்கணுமே! சீலிங் ஃபேன்ல பட்டு, வாழைக்காய் போல சீவித் தள்ளிட்டா புராஜெக்ட் மேனேஜர் லோனப்பனுக்கு யார் பதில் சொல்றதாம்?
‘புள்ளிக்காரனுக்கு இங்கிலீஷ் பரிச்சயம் இல்லையோ?’ன்னு கேட்டான் லோனப்பன். லோனப்பனோட புராஜெக்ட் கஸ்டமர் ஸ்காட்லாந்தில் ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனி. தாடிவெச்ச அவங்க அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸில் தினசரி லோனப்பனை வதைச்சுட்டு இருந்தாங்க. தாடி அரும்பின ஒரு அம்மையாரும் இதில் அடக்கம்.
முதல் வேலையா பரூவாவுக்கு ‘மை நேம் இஸ்’ சொல்லிக் கொடுத்தேன். ‘நான் அஸ்ஸாமில் இருந்து வரேன்’. ‘எனக்கு சூடான டீ பிடிக்காது’. ‘நான் கோர் ஜாவா கம்ப்யூட்டர் பரிபாஷையில நிபுணன்’. ‘குடை பிடிச்சுக்கிட்டு ராத்திரி நடக்கக் கூடாது’. இப்படிக் கலந்து கட்டியாக இங்கிலீஷ் வாக்கியங்களை ஸ்காட்லாந்துக்காரங்க உச்சரிப்பில் சொல்ல அவனுக்குப் பழக்கப்படுத்தினேன்.
பாலிசி எடுக்கிறவன் எப்போ மண்டையைப் போடுவான்னு கணக்குப் போட்டு பிரிமியம் தொகையை நிர்ணயிக்கறதுதான் லோனப்பன் புராஜெக்ட் டீம் வேலை.
பரூவாவுக்கு இன்ஷூரன்ஸுக்கு இங்கிலீஷ் ஸ்பெல்லிங் தெரியுமான்னே சந்தேகம். ஆனாலும், வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் ராத்திரியே கஸ்டமரோடு வீடியோ கான்ஃபரன்ஸ்னு லோனப்பனும் கோஷ்டியும் உட்காரும்போது வழக்கமா இருக்கப்பட்ட ஒருத்தன் எஸ்கேப் ஆக, ஒட்டகத்தை உள்ளே தள்ளிவிட்டேன்.
‘இவன் எங்க டீம் புது மெம்பர். பில் கேட்ஸுக்கே கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுக்கக்கூடியவன்’ ரேஞ்சில் லோனப்பன் அறிமுகப்படுத்த, கஸ்டமர் மரியாதைக்கு பரூவாவைக் குசலம் விசாரிச்சான். ‘நான் ராத்திரி சூடான குடை பிடிக்கறதில்லே!’னு ரொம்ப பவ்யமா அறிவிச்சான் பரூவா.
‘இது இந்தியாவில் அஸ்ஸாம் பக்கத்துப் பேச்சு வழக்கு. நல்லா இருக்கேன்னு அர்த்தம்’. லோனப்பன் சமாளிக்க, அஸ்ஸாம் டீயின் மகிமையை, அதோட மணத்தைப் பத்தி ஸ்காட்லாந்துக்காரர்கள் மீதி அரை மணி நேரம் பேசி, வீடியோ கான்ஃபரன்ஸை முடிச்சாங்க. என்ன காரணமோ, முதல் பார்வையிலேயே அவங்களுக்கு பரூவாவைப் பிடிச்சுப்போனது. அங்கேதான் பிடிச்சது எனக்கு அஷ்டமத்துச் சனி. பரூவாவைத் தேடி இத்தனை தூரம் என்னை அலையவெச்சது அதுதான்!
ஏனா? ரெண்டு ராத்திரி ரெகுலரா வீடியோ கான்ஃபரன்ஸில் அட்டென்டென்ஸ் கொடுத்துட்டு, அடுத்த நாள் காலையில் பரூவா மிஸ்ஸிங். தொலைஞ்சே போனான்!
‘எங்கேய்யா ஒட்டகம்? ராத்திரி கான்ஃபரன்ஸ் முடிச்சு எங்கே அனுப்பினே?’
லோனப்பன் கேட்டான். நான் என்ன பரூவாவை அன்டார்டிக்காவுக்கு பெங்குவின் பிடிக்கவா அனுப்பினேன்? அவனுக்கு வேளச்சேரியில் ஒன் பை செவன் ஆகக் குடியிருக்க இன்னும் ஆறு பிரம்மச்சாரிக் கட்டைகளோடு இடம்பிடிச்சுக் கொடுத்திருந்த ஜாகைக்குத்தான் கான்ட்ராக்ட் மட்டடர் வேனில் அனுப்பிவெச்சேன். நான் இப்போ அனேகல்ல இறங்கின வேனோடு ஒப்பிட்டா, ஏ.சி-யும், புஷ் பேக் ஸீட்டும், சதா மெட்டாலிக் ராக் இரையற மியூஸிக் சிஸ்டமுமாக அது ஒரு சொர்க்கம். ஒட்டகம் அந்த சொர்க்கத்தில் இருந்து எங்கே போய்த் தொலைஞ்சுது?
பிரஸ்தாப தினத்துல காலை ஆறரை மணி சுமாருக்கு பரூவா ஆபீஸுக்குள் நுழைஞ்சதா செக்யூரிட்டி கார்டு அலெக்சாண்டர் முத்துசாமி சொன்னார். எனக்கும் லோனப்பனுக்கும் ‘‘mother call. going.’’ என்று அரையே அரைக்கால் அடியில் ஒரு இ-மெயில் அனுப்பி இருக்கிறான் பரூவா அந்த நேரத்தில்!
‘பச்சைப் பசேல் தேயிலைத் தோட்டமும், மலைச் சரிவும், மேய்க்கக் கூட்டிப் போக எருமை மாடுமாக இருந்த பையனை இப்படி வேளச்சேரிக்கு அடுத்த கான்க்ரீட் காட்டுக்குள்ளே பறிச்சு நட்டா, போகாம என்ன செய்வான்? இயற்கை அன்னை அழைப்பு. கால் ஆஃப் நேச்சர்’ன்னான் லோனப்பன்.
‘எட்டு மணி நேரமாவா டாய்லெட்ல குந்தியிருக்கான்?’- பாஸ் கேட்டார்.
‘ராத்திரி வீடியோ கான்ஃபரன்ஸ்ல கஸ்டமர் கேட்பானே’- லோனப்பன் என்னைப் பார்த்த பார்வையில் பரூவா ஜாடையில் கோடம்பாக்கத்தில் யாரையாவது செட்- அப் பண்ணி இட்டு வர முடியுமான்னு விசாரிப்பு தெரிஞ்சது. அங்கே ஆம்பிளை ஒட்டகம் எல்லாம் கிடைக்காதுன்னு நானும் பார்வையில் பதில் சொன்னேன்.
ராத்திரி வீடியோவுல ஸ்காட்லாந்து பார்ட்டி ஒரு குண்டைத் தூக்கிப் போட் டுது.
‘புதுசா சேர்ந்த நாலு பசங்களையும் இங்கே உடனே அனுப்புங்க. யாராவது செத்துப்போனா, புதைக்கக்கொள்ள செலவு செய்யற புராஜெக்ட் ஆரம்பிச்சுடலாம்!’
‘நாளைக்குச் செத்தா இன்னிக்கு ரேட்டுல சடங்கு சம்பிரதாயம். மகாராஜா கணக்கா அழகான சவப்பெட்டி. லிமோசின்லே எடுத்துப் போய்ப் புதைக்கறோம்’ இப்படி விளம்பரம் செஞ்சு, அவங்க ஆரம்பிச்சிருந்த அட்வான்ஸ் சவ அடக்க சேமிப்புத் திட்டம் லோக்கல் மார்க்கெட்ல ஹிட்டோ ஹிட்!
‘என்ன செய்வியோ, எங்கே போவியோ, அடுத்த திங்கள் காலையில பரூவாவைக் கூட்டி வந்து எனக்கு முன்னால நிறுத்தணும்’னு கண்டிப்பு காட்டினார் பாஸ்.
‘சார், அடுத்த சனிக்கிழமை காலங்கார்த்தால நடேசன் பார்க்ல என்
பெண்டாட்டி பாட்டுக் கச்சேரி இருக்கு. அதுக்கு இல்லாம இப்படி நான்!’
‘என்னத்துக்காக பார்க்குல கச்சேரி? அரை டிராயர் போட்ட ரெண்டு டஜன் ஆசாமிங்க தலையில மப்ளரோடு சுத்திச் சுத்தி வந்து பார்ப்பாங்க. ரெண்டு அத்தையம்மா அப்பிரதட்சணமா சுத்தும். அதாம்பா, ஆன்ட்டி கிளாக் வைஸ்!’
பார்க் கச்சேரியா, பாக்கி நாள் சம்பளமான்னு வீட்ல விவாதம் நடத்தி, அவள் பாட்டுக்குப் பாட, நான் பாட்டுக்கு அஸ்ஸாமுக்குச் சவாரின்னு முடிவானது. அதான் இப்போ நான் இங்கே யானைக்கால் கிராமத்துல. அனேக்கலா, சரி, அதான்பா!
குக்கிராமத்துக்கும் அரையே அரைக்கால் சைஸில் அனேக்கல் அம்போன்னு கிடந்தது. அங்கங்கே கட்டிலைப் போட்டு யார் யாரோ சூரியன் இம்சை செய்யறதைப் பொருட்படுத்தாது ஆனந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தாங்க.
எழுந்து உட்கார்ந்து பக்கத்து மண் பாத்திரத்தில் இருந்து ஜிலேபி எடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்த பெருசை மரியாதையோடு ‘பரூவா வீடு எது?’ன்னு கேட்டேன். என் இந்தி அவருக்குப் புரிய இன்னும் நாலு ஜிலேபி தேவைப்பட்டது!
நாளைக்கு ஜென் கதையாகப் போகிற வாசகத்தைச் சொல்லப்போகிற மத குரு மாதிரி, அவர் ஒரு நிமிடம் மௌனமாகக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அப்புறம் இடுப்பில் செருகியிருந்த பேனாக் கத்தியை மடக்கி, நிமிர்த்திக் காது குடைஞ்சபடி, ‘இந்த ஊர்ல எல்லாமே பரூவா வீடுதான். நானே பரூவாதான்’னாரே பார்க்கணும்!
நான் ஒட்டகம்னு தமிழ்ல சொல்லி உத்தேசமாக வானத்துக்குக் கையைக் காட்டினேன். எதுக்காக அவனைத் தேடுறேன்னு பள்ளம் தோண்டின காது என் பக்கம் சாய்ந்து விசாரிச்சுது. ஸ்காட்லாண்ட், இன்ஷூரன்ஸ், சாஃப்ட்வேர் புராஜெக்ட், வீடியோ கான்ஃபரன்ஸ் இதுக்கெல்லாம் சைகை மொழி தெரியாத காரணத்தால், துணிந்து தமிழில் எல்லாத்தையும் விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்தேன்.
தெளிவாகப் புரிஞ்சுக்கிட்டதுபோல தலையை அசைத்து நிறுத்திச்சு பெரிசு. காதுக்குள் இருந்து ரத்தத் துளியோடு கத்தி வெளிவந்தது. இவர் காது என்ன, சிறு மூளை, பெருமூளையையே காது வழியே பேனாக் கத்தியால் தோண்டி வெளியே எடுத்து சுத்தப்படுத்தி திரும்பப் பொருத்திப்பார் போல. எல்லாம் ஜிலேபி மகிமை.
அவர் காட்டின திசையில் இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் ஒட்டகம்… ஒட்டகம்னு ஜெபிச்சுக்கிட்டு நடந்தேன். பாதை கரடு முரடாக இருந்துச்சு. தவிர, கொஞ்சம் கொஞ்சமாக சமதளம் காணாமல் போய், மேட்டுப் பாங்கான பிரதேசம். ஆயிரத்துச் சில்லரை வகை செடி கொடிகள் செழிச்ச அந்த வட்டாரத்தில் நட்ட நடுவில் ஒரு காரைக் கட்டடம். கதவைத் தட்டினா ஒட்டகம் கிடைக்கக்கூடும்.
கட்டடத்தை நெருங்கியதும் மாடியில் ஏதோ சத்தம். நிமிர்ந்து பார்த்தேன். உழக்குக்கு பூண் பிடித்த சைஸில் ஒரு வழுக்கைத் தலையன் நிக்கறான். அஸ்ஸாமிய மொழியில் ஏதோ கத்தினான். உள்ளே வந்தா காலை உடைப்பேங்கிறான் போல.
நான் சகஜ பாவத்தோடு அவனுக்கு அருள் பாலிக்கிற தோரணையில கை காட்டிட்டு முன்னால் நடக்க, ஒரு விநாடி கண் இருண்டுது. உலக அழகி எதிர்பார்க்காத விதமாகக் கட்டிப் பிடித்த மாதிரி, இல்லே, ஆர்ய வைத்யசாலை தைலம் புரட்டி குளிச்சு, மிளகுக் குழம்பு சாப்பிட்டுத் தூங்கறபோது ஏ.சி நின்னு போய் குப்புனு வியர்த்த மாதிரி தேகம் முழுக்க ஒரு ஷாக். முன்னே ஒரு அடி, பின்னே ஒரு அடி எடுத்துவெச்சு சரிஞ்சு தரையில் விழுந்தேன். மீசையில அஸ்ஸாமிய மண் பட்டையாக அப்பி இருந்தது!
உழக்கன் மாடியில் இருந்து வேகமா ஓடி வந்து என்னைத் தூக்கி நிறுத்தினான்.
‘நல்லவேளை, லோ வோல்டேஜ்தான் மின்சார வேலிக்குக் கொடுத்திருந்தேன். காண்டாமிருகம், யானை வராம இருக்க பாதுகாப்பு. அடி படலியே?’
காண்டாமிருகம் மாதிரி தலையாட்டினேன். ஒட்டகம் எங்கேய்யா?
நீ தப்பாக வந்துட்டேன்னான் அஸ்ஸாமியக் குள்ளன். ஜிலேபி தாத்தா மேல் பழியைப் போட்டேன். கையை நான் உசத்திக் காட்டினதால், பெரிய வீட்டு பரூவான்னு நினைச்சு என்னை இப்படி ஷாக் அடித்து உயிர் போக அனுப்பியிருக்குது பெரிசு.
காரை வீட்டு பரூவா சொன்னபடி இன்னும் நாலு கிலோ மீட்டர் நடந்தேன். எருமைப் பண்ணை. அங்கே ஆறே முக்கால் அடி நீளம், சதா படுத்தே கிடக்கற 70 வயசுக்கார இன்னொரு பரூவா. நீ இல்லேய்யா. அவர் வலது கால் கட்டை விரலால் சுட்டின திசையில் ஒரு பஞ்சாயத்து போர்டு பரூவா. ஜவ்வு மிட்டாய்க்காரன் கெட்-அப்பில் ரெண்டடி அகலம், ஆறடி உயர ஆசாமி. அவர் காட்டின பக்கம் 10 கிலோ மீட்டர் நடந்தா அடுத்த மாநிலம் மிசோரம் வந்துடும்.
போங்கப்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரலை. வேலை போனா, முடியே போச்சு!
உத்தேசமாக சாயா கடை என்று மட்டுப்பட்ட இடம். படியேற, எதிர்பார்த்தபடியே அம்பலப்புழை சேட்டன் ஒரு கேசவப் பணிக்கர் சாயா ஆத்திக்கிட்டு இருந்தார். நாலு நாள் நல்லெண்ணப் பயணமாக பிரதமருடனோ, ஜனாதிபதியுடனோ, அவரையும் அனுப்பிச்சா, போட்ஸ்வானா, மொஸாம்பிக்கில் எல்லாம்கூட பிராஞ்ச் போட்டு விடக்கூடிய கேரள சாமர்த்தியம் அவர் வார்த்தையில் தெரிந்தது.
பூம் பூம் பூம்னு ஏதோ சங்கு சத்தம். எனக்குத்தான் ஊதிக்கிட்டு இருக்காங்க. நான் சாயா கடை பெஞ்சில் உட்கார்ந்து அம்பலப்புழை பணிக்கர் கொடுத்த பருப்பு வடையை ஒரு கடி, கிளாஸ் சாயா ஒரு குடின்னு இருந்தபடி சுவாரஸ்யம் இல்லாம பார்த்தேன். சவ ஊர்வலம் ஒண்ணு ஊர்ந்து போய்ட்டு இருக்கு.
சட்டுனு என் பார்வை கூர்மையாச்சு. நடு நாயகமாக நடந்து வர்ற உருவம் நம்ம ஒட்டகம் இல்லையோ. சாயா கிளாஸை மேஜை மேல வெச்சுட்டு, கையில் வடையோடு தெருவுக்கு ஓடினேன். பக்கத்தில் போய்ப் பார்த்தேன். ஒட்டகமேதான்!
அவன் ஒரு விநாடி நின்னான். கையில பிடித்திருந்த பானையில் கங்கு கனகனன்னு எரிஞ்சுட்டு இருந்தது. பல்லக்குத் தூக்கிகள் பொறுமை இல்லாம கால் மாத்தி நின்னாங்க. மேலே, வயசான ஒரு அம்மா நிம்மதியா படுத்திருந்தாங்க.
‘மதர் சார். டுடே மார்னிங் டெத். ஓப்பன் ஐ. கால் மீ. ஐ ஸ்லீப். ஷீ கோ’.
ஒட்டகம் சிரிக்க முற்பட்டு, இங்கிலீஷில் பேச முற்பட்டு, ரெண்டும் தோற்றுப் போய் அழ ஆரம்பித்தான்.
எனக்குப் புரிந்தது!
‘நிக்கக் கூடாது. போய்க்கிட்டே இருக்கணும். வழி விடு!’ யாரோ சொன்னாங்க. மெள்ள நடந்தபடி ஒட்டகம் திரும்பிப் பார்த்தான்.
‘சார், காலையில சாம்பல் கிடைச்சுடும். எடுத்துக்கிட்டு உங்ககூட சென்னை வந்துடறேன். அங்கே சமுத்திரத்துல கரைக்க உதவி செய்வீங்களா?’
நான் மௌனமாகத் தலை அசைத்தேன். ஆபீஸுக்கு போன் செய்தேன்.
‘ஒட்டகம் கிடைச்சாச்சு. நாளைக்கு கூட்டி வரேன்’.
‘வேணாம். இன்னிக்கே சாம்பல் கிடைக்கணும்னு பிரஷர் கொடுத்து, வாங்கிட்டுக் கிளம்ப வெச்சுடு. கஸ்டமர் க…’
அந்தப் பக்கம் ‘ஹலோ… ஹலோ’ என்று சத்தம் வர… நான் மொபைலை சுவிட்ச் ஆஃப் செஞ்சேன். ஊர்வலத்தில் தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சேன்!
– வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997