(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1
கடைக்காரப் பையன் ஒருவனை அழைத்து, “ஏலே ஐயா, கீழ வாய்க்காக் கசாப்புக் கடைக்குப் போயி, அரைக்காச் சேரு கொத்துக் கறி வாங்கிக்கிட்டு, குளத்தங்கரைக்கு வந்து சேரு. சேருதியா?” என்று ஆணையும் கேள்வியும் போட்டுவிட்டு, பெட்டகத்திலிருந்து நாலணாக் காசை எடுத்து விட்டெறிந்தார் சைவத் திருவாளர் நாறும்பூநாத பிள்ளையவர்கள்.
கடைக்காரப் பையன் நடையை விட்டு இறங்கியதும் பிள்ளையவர்கள் சில்லரைகளை வரவு வைக்கத் தொடங் கினார். மாலைக் கருக்கல் நெருங்கிவிடவும், பக்கத்து ‘ஒரு சொல் பிள்ளை’யவர்கள் கடையிலிருந்து ஆறரை மணி யுத்தச் செய்திகள் கர்ஜிக்கவும், தாம் போகவேண்டிய இடத்தை எண்ணி பட்டறையிலிருந்து வெளியிறங்கினார் பிள்ளை. பின் தம்முடைய மகனை அழைத்து, பட்டறை யைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். பிறகு நயினார் குளக்கரையை நோக்கி நடையைத் தட்டினார்.
இம்மாதிரி சமயங்களில் தனக்குக் கிடைக்கும் டெம்பரவரி’ பதவியைக் காயமாக்குவதற்கு, தன் அப்பா என்றைக்கு மண்டையைப் போடுவாரோ என்பதை எதிர்பார்த்து ஏங்கும் அந்தச் செல்வச் சிரஞ்சீவி பட்டறையில் வந்து அமர்ந்து கொண்டான்.
நயினார் குளக்கரைக்குச் சென்று சனிக்கிழமை கருட தரி சனம் காணாவிட்டால், அன்று இரவு வீட்டில் சுசிருசியான வெந்நீர்ப் பழையதும் வெந்தயக் குழம்பும் இருந்தாலும் கூட, பிள்ளையவர்களுக்குத் தொண்டை நனையாது. ஆதலால் இரணிய நேரம் கழிந்து கருடாழ்வார்கள் பள்ளி கொள்ளும் முன்னமே தரிசனம் பெற்றுவிட வேண்டும் என்ற தவிப் பால் நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டார்.
குளத்தங்கரையில் பிள்ளையவர்கள் சொற்படி கொத்துக் கறியுடன் காத்திருந்தான் கடைக்காரப் பையன்.
கருட தரிசனத்துக்கென்று ஆட்டுக் கறி வாங்குவதில் நாறும்பூ நாத பிள்ளைக்கு மனசில் அருவருப்பு இருந்தாலும், பிள்ளை யவர்களுக்குத் தரிசன பலனைத் தேடித் தரும் கருடாழ்வார் சுத்த சைவ நாயன்மாரல்லவே! ஆதலால், ஆட்டுக்கறித் துண்டை ஆகாயத்தில் விட்டெறியும் சாக்கிலேதான் பிள்ளையவர்களுக்கும் தரிசனம் கிட்டிற்று.
தரிசனம் முடிந்த பின் பிள்ளையவர்கள் கீழ்கரைப் புற மடைப் பக்கம் சென்று நித்ய அனுஷ்டானங்களை முடிக்கச் சென்றார். கடன் முடித்துத் திரும்பிய பிள்ளை குளத்தங் கரைப் படியிலிறங்கி, முகங் கால் கழுவி, திருநீற்றைக் குழைத்துச் சம்பிரமமாக அணிந்துகொண்டு கரையேறினார்.
“யாரது?கிளப்புக் கடைப் பிள்ளைவாளா?” என்றுபழகிய குரல் காதில் விழவும் நாறும்பூநாத பிள்ளை திரும் பினார். அதற்குள் குரல் கொடுத்த திசையில் இரண்டு உருவங்கள் தாமரைக் குளச் சரிவிலிருந்து ஏறி வந்தன.
“என்ன, தரிசனத்துக்கு வந்தியளாக்கும்!” என்று விசாரித்தது ஒரு குரல்.
“யாரு, சுத்தமல்லிப் பண்ணையா? எங்கே இவ்வளவு தேரத்துக்கு? சேவைக்குக் கூட, வரலே போலிருக்கே” என்று பதிலுக்குச் சம்பிரதாய வரையறை பிசகாமல் விசாரித்தார் பிள்ளை.
“நல்லாச் சொன்னிய. பண்ணையாவது, சேவைக்கு வராமெ இருக்கதாவது? சேவை தவறிச்சின்னாத்தான் அவுஹளுக்குத் தொண்டையிலே தண்ணி எறங்காதே என்று இடக்காகச் சொன்னார், சுத்த மல்லிப் பண்ணையின் கூட நின்ற ஐ.பி.பிள்ளை.(ஐ.பி.பிள்ளையின் இயற் பெயர் என்ன வென்பதே பலருக்குத் தெரியாது. ஐ.பி. பிள்ளை என்ற இந்தப் பட்டம் அவருடைய பிதுர்க்களில் யாரோ ஒருவர் ‘மஞ்சள் கடுதாசி’ நீட்டியதன் விளைவாய் அவருக்குக் கிடைத்த ஒரே பிதிரார்ஜிதம்.)
ஐ.பி.பிள்ளை இப்படிக் குட்டை உடைக்கத் துணிய வும், அவருடைய பேச்சு வேலியைத் தாண்டிவிடக் கூடாதே என்று முந்திக்கொண்டு, “சேவைக்கு வராமப் போறதாவது? அப்பவே சேவை முடிஞ்சிட்டுது. அதனாலே, சும்மா இப்பிடி கிழக்கே போயி காத்தாடிட்டு வாரோம்” என்றார் சுத்தமல்லிப் பண்ணை.
சுத்தமல்லிப் பண்ணை இவ்வளவு பேசுவதற்குள்ளாகவே அவருடைய வாயிலிருந்து அடித்த நாட்டுச் சரக்கின் நாற்றம் பிள்ளையவர்களின் சுவாசத்தை உலுப்பிற்று.
சுத்தமல்லிப் பண்ணை போன்ற பெரிய மனிதர்கள் யலர் கருட தரிசனத்தைச் சாக்காகக் கொண்டு, இறைச்சி வாங்கி அதை அப்படியே மிச்சம் பிடித்து, தாமரைக் குளச் சாராயக் கடையில் வறுத்த கறியாக மாற்றிக் கொள் வதும் பிள்ளையவர்களுக்குத் தெரிந்ததுதான்.
தெரிந்ததுதான். எனினும் ஜாதி அபிமானம், ஊரான் பொல்லாப்பு முதலியன குறித்து அதை வாய்விட்டுக் கூறி வம்புச் சனியனை பிள்ளை யவர்கள் விலைக்கு வாங்க விரும்பவில்லை.
என்ன பிள்ளைவாள். பேசமாட்டிங்கியளே” என்று பண்ணை விசாரித்ததும், நாறும்பூநாத பிள்ளையவர்கள் கழுத்தில் கிடந்த உத்திராக்ஷத்தைத் தொட்டுப் பார்த்து விட்டு, ‘நமசிவாய’ என்று தமக்குள் முனகிக் கொண்டார்:
“பேசாமெ என்ன? விசயம் இருந்தால்லெ…’
“அதென்ன அப்பிடிச் சொல்லுதிய? ரெண்டுபட்டுக் கிடந்த ஊரே ஒண்ணாப் போயிரும் போல இருக்கு. பேசற் துக்கா விசயமில்லெ” என்று தாம் பிரேரேபிக்க இருந்த விஷயத்திற்கு அங்குரார்ப்பணம் செய்தார் பண்ணை.
“பிள்ளைவாளுக்கு சமாச்சாரம் தெரியாது போலுக்கு என்று மிகவும் பரிதாபத்தோடு விளம்பினார் ஐ.பி.பிள்ளை. விசயத்தை விட்டுச் சொன்னால்’ லெ தேவலை. இப்பிடி அளிப்பாங்கதை போட்டியன்னா-” என்று தம் நிலைமையைச் சாதுரியமாய் விளக்கி நின்றார் நாறும்பூ நாதர்.
ஆவியாக மாறி வரும் சாராய ஏப்பத்தை விழுங்க முயன்று கொண்டே சுத்தமல்லிப் பண்ணையவர்கள், “எல் லாம் சொல்லுதேன் வாருங்க. அப்பிடி அந்த அரசடியிலெ உட்காருவம்’ என்று அழைத்துக்கொண்டே, குளத்தை யடுத்து வேம்பும் அரசும் லதாவேட்டி தாலிங்கனம் செய் வதைக் காத்து நிற்கும் விக்னேச்வரரின் திருவடிக்குச் சென்றார்.
ஐ.பி.பிள்ளையோ தம்மையுமறியாது இளம்போதை யில் கால் தடுமாறுவதை வெளிக் காட்டக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தோடு, மிகவும் உரிமை பாராட்டி.. நாறும்பூநாத பிள்ளையின் தோளில் கை போட்டுக்கொண்டு, என்ன பிள்ளைவாள், பண்ணை கூப்பிடுதாகள் லெ, வாருங்க” என்று அழைத்துச் சென்றார்.
பிள்ளையவர்களுக்கு இந்தத் ‘தண்ணி வண்டி’களுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்டோமே என்ற பயமிருந் தாலும் ‘கடிச்சா முழுங்கிருவானுவ?’ என்று உள்மனசு ஊட்டிய தைரியத்தின் துணைகொண்டு, அரச மரத்தடிக்குச் சென்றார்.
ஆசாமிகளுக்கு போதை ஏறி ‘கிறிச்சி’ கிளம்புவதற் குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு கம்பி நீட்டி விட வேண்டும் என்று நினைத்த பிள்ளையவர்கள் “என்ன பண்ணை யார்வாள், விசயத்தைச் சொல்லுங்க” என்று நேரடியாகக் கேட்டார்.
“எல்லாம் நம்மவங்க விசயந்தான். நம்ம பெரிய கோயிலு இருக்குதில்லே. அதிலே கும்பாபிசேகம் நடத்தப் போறானுவளாம். அதுக்கு நம்ம அண்ணாச்சிகளெல்லாம். இந்தப் பாப்பாரப் பயல்களோடே சேர்ந்துகிட்டு, பணம் பிரிக்கப் போறானுவளாம். பாத்தியளா?’’ என்றார் பண்ணையவர்கள்.
“ஊரிலே பஞ்சம் வந்து ஊரே ஆட்டம் கண்டுட்டு தில்லே. உடனே சாமிக்கும் ஆட்டம் கண்டுட்டுது போலுக்கு” என்று தம் வாழ்க்கையில் அடிமேல் அடியாக அனுபவித்த கஷ்டங்களினால் மனசில் கனத்துவரும் நாஸ்திக மனப்பான்மையுடன் கிண்டல் செய்தார் ஐ.பி.பிள்ளை.
“ஐ.பி.பிள்ளைவாள், அந்தப் பயலுகளைப்பத்தி ஆயிரம் சொல்லுங்க. சாமியைப்பத்தி சொல்லறதுன்னா….. அது நல்லால்லே” என்று கூறித் தமது தெய்வ பக்தியை நிலைநிறுத்தினார் பிள்ளை.
உடனே ஐ.பி.பிள்ளையும் தம்முடைய பேச்சை விட்டுக் கொடுக்காமல் “சாமியைப் பத்தியா சொல்லு தேன். ஊரிலே பட்டினி வந்ததும், இந்தப் பயலுகளுக்கும் வக்கு அத்துப் போச்சி. சும்மாயிருப்பானுவளா? நல்லா யிருந்த சாமியை நாலு ஆட்டு ஆட்டியிருப்பானுவ” என்று தமது பேச்சின் உட்கருத்தைக் கம்பீரமாக விரித்துரைத் தார்.
“அப்பிடியுஞ் சொல்லாதிங்க. எல்லாம் சாமி முன்னே திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்துத் தானே நடத்து தாங்க. சாமியுமா கெட்டதைச் செய்யும்?” என்று வாதித் தார் நாறும்பூநாத பிள்ளை.
“ஆமா, சாமிதான் கையை நீட்டி முன்னே கிடந்த சீட்டை, இந்தா’ன்னு எடுத்து நீட்டிச்சாக்கும். உங்க களுக்கு உலகமே தெரியலே” என்று அடித்துப் பேசினார் ஐ பி. பிள்ளை.
“சவத்தை விட்டுத் தள்ளுங்க. சாமியே அவங்க சாமி யாப் போயிட்டுது. நாமெ என்னத்தைச் செய்ய?” என்று சலித்தார் பண்ணை. அதோடு விடாமல் “நம்மவங்களே வெறும் வெக்கங்கெட்ட மூதிய. காலமெல்லாம் அவனு களைப் பகைச்சிட்டு, இப்போ அவனுகளைக் கட்டிக் கிடந்து அளுதானுக, பாருங்க” என்று தமது சாதியின் தனித் தன்மை மாசுபடுவதைக் குறித்துச் சலித்துக்கொண்டார்.
‘சாதி என்னங்க சாதி? இப்பதான் தகப்பன் பேரு தெரியாத பயலுகள்ளாம் பிள்ளைன்னு பட்டம் வச்சிக்கிடு தான். அதுக்குப் பிறகு வெள்ளாளன் என்ன, விவசாரி என்ன?” என்று தம் குலக் கற்பு அழிந்ததைக் குறித்து விசனப்பட்டுக் கொண்டார் ஐ.பி.பிள்ளை.
“நிசந்தான். நம்மவங்கள்ளயே ஒரு ஒளுங்கு முறை உண்டா? பணக்காரப் பயலுக எல்லாம் மத்தவங்களைச் சேர்க்கக் கூசுதானுவ. கேட்டா, ‘நான் காரைக் கட்டான். அவன் ஹி….ஹி…..’ அப்படிங்கான்” என்று கொஞ்சம் தைரியத்துடன் தம் மனசிலுள்ளதைக் கூறிவிட்டார் நாறும்பூநாத பிள்ளை. அதன் பிறகுதான் தம்மோடு கூடவே இருக்கும் ‘பணக்காரப் பயலுகளில் ஒருவரான பண்ணை இருப்பதை உணர்ந்தார் பிள்ளை.
‘சரி சரி, சாதியை எதுக்கு சந்திக்கு இழுக்கிய. ஊரு தான் நாத்தமடிச்சிட்டுதே” என்று சுத்தமல்லிப் பண்ணை தம் வெறியில் நாறும்பூநாத பிள்ளை கூறியதைச் சரிவரக் காதில் வாங்காமல் கூறினார். பிள்ளையவர்களுக்கு இதைக் கேட்ட பின்தான் பயம் தெளிந்தது.
“பிள்ளைவாள், நாங்க இதை எதுக்காகச் சொல்ல வந்தோம்னா, இந்தக் கூட்டத்தோடெ நாமும் ஒத்துத் தாளம் போடுறதே தப்புங்கறேன். பயலுக பணம் பிரிக்க வந்தா நாமெ ஒத்தைச் சல்லி கொடுக்கக்கூடாது. ஆமா” என்று தம் மனசில் கிடந்த விஷயத்தை ஒருமட்டும் வெட்ட வெளிச்சமாக்கினார் ஐ.பி.பிள்ளை.
இந்த ‘வரி கொடா இயக்கத்தில்’ கலந்துகொள்ளத் தமக்குத் தைரியம் உண்டா என்பதை அறிய முடியாத பிள்ளை “நாம குடுக்கலென்னா, கும்பாபிசேகம் நின்னிறப் போவுதா?” என்று ஐ.பி.பிள்ளை பிரேரேபிக்கும் ‘தனிப் பட்ட சத்தியாக்கிரஹத்தின்’ பலவீனத்தை எடுத்துக் காட்டினார்.
“நிக்குது,நிக்கலெ.இந்தப் பயலுக மடியிலே நம்ம காசு ஏறப்பிடாது” என்று அடித்துப் பேசினார் ஐ.பி.
“இருந்தாலும், சாமி காரியம் பாருங்க. இதிலே தடங்கல் செய்றதுன்னா..” என்று இழுத்துப் போட்டார் பிள்ளை.
“நீங்க என்ன இப்பிடிச் சொல்லுதிய? உங்களுக்கு உலகமே தெரியலெ. சாமிக்கா இவ்வளவும் செய்யப் போறானுக? எல்லாம் வயித்துச் சாமிக்குத்தான்’ என்று போதை படியிறங்கி நின்ற வேளையில் தம்மிருக்கையையும் அறிமுகப்படுத்திக்கொண்டார் பண்ணை.
“ஆமா, ஊரிலாம்பட்ட பார்ப்பானுங்களுக் கெல் லாம் படியளப்பாங்க. நம்மவனும் கையிலே ஆப்பிட்டதெச் சுருட்டிக் கிடுவானுவ. எல்லாம் காரியமில்லாமலா கட்டியளுவாங்க” என்றார் ஐ.பி.பிள்ளை.
பிள்ளையவர்களோ விட்டுக் கொடுக்கவில்லை. சாமி காரியத்தை அவ்வளவு லகுவில் உதறிவிடக் கூடிய மனப் பக்குவம் அவருக்கு இல்லை. அதனால் பிராமண போஜனத் தை எதிர்க்கும் அந்த இரட்டையரிடம் ‘அன்னதானம் செய்தா புண்ணியந்தானே” என்று மிகவும் அடக்கத் துடன் கூறினார்.
“அன்னதானமா? வேலையத்த களுதைகளுக்கா விருதாச் சோறு?” என்று சீறினார் ஐ.பி.
“என்ன பிள்ளைவாள், ஏன் தயங்குதிய? பயப்படாமெ அவனுக வந்து கேட்கிறப்போ கையை விரிச்சிருங்க” என்று தைரியமூட்டினார் பண்ணை.
“சரி” என்று அந்த உடனடிப் பிரச்னையைத் தீர்க் கும்படி ஒரு வார்த்தையைப் போட்டு, நழுவ உத்தேசித்தார் நாறும்பூநாதர். வேறு வழி அவருக்குத் தோன்றவில்லை.
பிள்ளை ஆமோதித்து ஓர் நிமிஷ நேரத்தில் குளக் கரைப் படியிலிருந்து ஓர் உருவம் கரையேறி வந்தது. “யாரது? முருகவிலாஸ் பிள்ளைவாளா உட்காந்திருக்கது?’ என்று விசாரித்துக்கொண்டு பக்கத்தில் நெருங்கியது அந்த உருவம்.
குரலைக் கேட்டதுமே, நாறும்பூநாத பிள்ளைக்கு குலை நடுங்கிற்று. “பட்டர் சாமியா?” என்று குசலம் விசாரிக் கும்போதே அவர் குரல் தடுமாறிற்று.
வந்த பட்டர் சாமியோ விடாது. “என்ன பேசிக்கிட் டிருந்தேள்? கூட இருக்கது பண்ணைவாளா?” என்று கேட்டது.
‘”ஒண்ணுமில்லெ” என்று கூறினார் பிள்ளை. ‘பொய்!’ என்று அவர் குரலிலேயே நன்றாகத் தெரிந்தது. தாங்கள் பேசிக் கொண்டிருந்ததை இந்தப் பார்ப்பான் கேட்டிருப் பானோ என மூவர் மனசிலும் ஐயம் எழுந்தது. எனினும் ஐ.பி.பிள்ளை விட்டுக் கொடுக்காமல், “பிள்ளைவாள், நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும். மறந்திராதிங்க” என்று எதையோ ஞாபகப் படுத்துவதுபோல் பேச்சை உருமாற்றிக் கழித்துவிட்டு எழுந்தார்.
பிள்ளையவர்கள் பதில் சொல்லவில்லை. இதை யெல் லாம் கவனித்த பட்டர் சாமி மூவரும் ஏதோ ‘மூவர் மகா நாடு’ கூட்டுகிறார்கள் என்பதை உணர்ந்து, ‘சரி பிள்ளை வாள், அப்ப நான் வர்ரேன். தேவஸ்தானத்திலே ஜோலி யிருக்கு” என்று கிளம்பியது. ‘தேவஸ்தானம்’ என்ற வுடனேயே பிள்ளையவர்களுக்கு உடல் நடுங்கிற்று.
பட்டர் சென்றவுடன், ஐ.பி.பிள்ளை “களுதை, கேட்டா கேட்டுட்டுப் போவுது என்று திரஸ்கரித்து விட்டு, பண்ணையவர்களைத் தட்டியெழுப்பி ‘பண்ணையார் வாள், வாருங்க போவோம்” என்று அழைத்தார். பண்ணையவர்களும் எழுந்து நின்றவுடன், ஐ.பி.பிள்ளை நாறும்பூ நாத பிள்ளையைப் பார்த்து “வாருங்களேன், போவோம்” என்று அழைத்தார்.
”எங்கே?” என்று சுருக்கமாகக் கேட்டார் பிள்ளை.
“பக்கத்துக் கடைக்குத்தான்” என்று பதில் வந்தது. பிள்ளையவர்கள் கேட்டதே தப்பு என்று உணர்ந்து, “நான் வருகிறேன்” என்று கிளம்பி விட்டார்.
ஐ.பி.பிள்ளையும், பண்ணையவர்களும் ‘வெறும் தொடை நடுங்கி’ என்று பிள்ளையவர்களுக்குப் பட்டம் சூட்டிவிட்டுத் தாமரைக் குளச் சரிவிலிறங்கினர்.
2
சில வருஷங்களுக்கு முன்னெல்லாம் திருவாளர் நாறும்பூநாத பிள்ளையவர்களின் தினசரி வாழ்க்கை இன் றைக்குள்ள ஒரு சில சிறு மாறுதல்கள் கூடவின்றி எப்படி நடந்து வந்தது என்பது பலரும் அறிந்த விஷயந்தான். பத்து வருஷங்களுக்கு முன்னால் என்றைக்காவது விடியற் கருக்கலில், மேலப் பாளையம் பனைமர உச்சிகள் உருக்காட் டும் வேளையில், திருநெல்வேலி, குறுக்குத் துறை ஆற்றுக் குள்ளிருக்கும் திருவுருமாமலைச் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்கம் சென்றவர்களுக்கு நாறும்பூநாத பிள்ளையின் தினசரி வாழ்க்கை எங்கே ஆரம்பமாகிறது என்பது தெரிய வரும்.
மோஹினிப் பிசாசோ, மொட்டைப் பிராம்மணத் தியோ என்ற பயமும் ஐயமும் இன்றி, படிக்கட்டில் ஏறி வரும் அந்த வெள்ளை உருவத்தை நெருங்கிப் பார்ப்பவர் களுக்கு நாறும்பூநாத பிள்ளைதான் அப்படி ஈர வேட்டி யைப் போர்த்திக்கொண்டு வருகிறார் என்பது புலப்படும். மாதாங் கோயில் தெருவிலுள்ள தம் வீட்டிற்கும் குறுக்குத் துறைக்கும் உள்ள தூரத்தைப் பொருட்படுத்தாது, எந்தக் காலத்திலும் ஆற்றுக்குச் சென்று குளித்து வருவது அவருக்கு வழக்கமா யிருந்தது. தாமிரபருணி கலங்க லின்றித் தெளிந்துவரும் அந்தக் கருக்கலிலேயே குளிப்பது தான் அவருக்குப் பிடிக்கும். குளித்துவிட்டுக் கரையேறி ரோட்டுக்கு வருவார். வருகிற வழியில், பெரிய கோயிலை நடை திறக்கு முன்பே, மூன்று முறை வலம் வந்து வெளிப் பக்கச் சுவரை யொட்டி யிருக்கும் உண்டியலில் காலணா போட்டுவிட்டு வீட்டுக்கு நடப்பார்.
வீடு வந்து சேர்ந்ததும் முற்றத்தில் கட்டப்பட்ட கம்பிக் கொடியில் வேட்டியை உதறி உலரப் போட்டுவிட்டு, நடந்துவந்த களைப்புத் தீர நடையில் உட்கார்ந்து, தொள தொளத்துப் போன கால் குதிரையை வருடுவார். பிள்ளையவர்கள் வந்ததுமே, அவருடைய சம்சாரம் ஸ்ரீமதி நெல்லை வடிவு ஆச்சி கணவருக்குக் கால் கழுவத் தண்ணீர் கொடுத்து, அடுக்களையுட் சென்று நீத்துப்பாகம் கொண்டு வந்து கொடுப்பாள். பிள்ளையவர்களின் காலைச் சாப்பாடு சமயங்களில் அந்த ஒரு குவளைப் பழந் தண்ணீருடனேயே நின்று விடும்.
அதன்பின் நெல்லை வடிவு ஆச்சி வீட்டில் மிஞ்சிய கழுநீர்க் குடத்தைக் தூக்கிக்கொண்டு, பக்கத்து வீட்டு எருதுப் பிரைக்குச் சென்று, தொட்டியில் ஊற்றிவிட்டு, அதற்குப் பிரதியாக வாங்கி வரும் சாணத்தைக் கரைத்து வாசல் தெளிப்பாள். வாசல் தெளித்து முடிந்ததும் பிள்ளையவர்கள் “பய எந்திரிச்சான்னா, பள்ளிக்கூடம் போவச் சொல்லு. மூதி ஏச்சங் காட்டிக்கிட்டுத் திரியாமெ” என்று மனைவியிடம் கூறிவிட்டு, தொண்டர் சந்நிதியிலுள்ள தம் கடைக்குச் செல்வார்.
நாறும்பூநாத பிள்ளையவர்களின் பலகாரக் கடை காலை ஆறு ஆறரைக் கெல்லாம் திறக்கப்பட்டுவிடும். கடையைத் திறப்பதும் மூடுவதும் பிள்ளையவர்களேதான். ஏன், கடைக்கே சர்வாதிகாரி அவர்தான். அதாவது பட்டறை யிலிருந்து சில்லரை வரவு வைப்பதிலிருந்து தோசை வார்ப்பது, பரிமாறுவது எல்லாம் அவரே கவனித்துக் கொள்வார். இலை எடுத்துப்போடும் வேலை திருநெல்வேலி யில் சாப்பிடுவோரையே சாருமாதலால், பிள்ளையவர்களின் சுயமரியாதையும் எந்த விதத்திலும் பாதிக்கப் படுவதில்லை. பிள்ளையவர்களின் பலகாரக் கடை அந்த வட்டாரத் திலேயே நல்ல பெயர் பெற்றது. காலையில் கருப்புக்கட்டிக் கடுங்காப்பி மிளகாய்ப் பொடி தோசை, அதன்பின் ஒன்பது மணிக்கெல்லாம் பள்ளிச் சிறுவர்களுக்கு உப யோககரமான சுசியம், எள்ளுருண்டை என்ற ஸ்வீட்டுகள், வாழைக்காய் பஜ்ஜி, பக்கடா என்ற ஸேவரிகள், அதன் பின், உச்சிவேளை நெருங்கி விட்டதனால், கடை தேடிவரும் ரொக்கப் புள்ளிகளுக்கும், ஒன்றிரண்டு வாடிக்கைக்காரர் களுக்கும் ஒரு புளிக்குழம்பு, மிதுக்குவத்தல், ஒரு துவரம், நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது கொத்துமல்லித் தொக்கு என்ற சம்பிரமங்களுடன் சாப்பாடு. காலையில் மிஞ்சிப் போன இனிப்பு, காரவகைகளைத் தீர்த்துக் கட்டும் கிளியரன்ஸ் ஸேல்ஸ்’ சாயந்திரம் நடைபெறும். இரவு எட்டு மணியிலிருந்து, பத்து மணிவரை தோசை மிளகாய்ப் பொடி, சுக்குத் தண்ணீர், பக்கடா முதலியன கிடைக்கும்.
பிள்ளையவர்களின் கடை பெரிய ஹோட்டல்களைப் போல் ரத வீதியில் அமையாவிட்டாலும் நல்ல ஜன நடமாட்டமுள்ள முச்சந்தியில் அமைந்திருந்ததால், வியா பாரத்தில் என்றும் காய்ச்சல் வந்தது கிடையாது. என் றைக்கும் நல்ல கிராக்கிதான். ஆலங்குளத்து ‘நாடாக்க மார்கள்’ மொட்டை வண்டிகளில் ஊத்து மலை விறகு, பனை யோலை, பனங்கருப்பட்டி, ஆலங்குளத்து மிளகு வற்றல் முதலியன ஏற்றி வந்தால், பிள்ளையவர்கள் கடைக்கு அருகி லுள்ள வண்டிப் பேட்டையில் தான் தங்கவேண்டும்.
இப்படி ஆலங்குளத்திலிருந்து வரும் நாடார்களுக்கும், வடக்கே மானூர்ப் பக்கமிருந்துவரும் தேவமார்களுக்கும் நாறும்பூநாத பிள்ளையின் கடைதான் வயிற்றுக்கும் செல வுக்கும் கட்டிவரும். பிள்ளையின் கடையில் அளவுச் சாப்பாடு என்றால் அணா ஒன்றரைதான். எனினும் பட்டணக் கரையில், ‘நாங்களும் சாப்பிடுகிறோம்’ என்று பெரிய ஹோட்டல்களில் பருக்கை கொறிக்கும் நாகரிக வர்க்கத் தாருக்கு அந்த அளவுச் சாப்பாடே அதிகமென்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும், பிள்ளையவர்கள் தம் கடைக் குப் பசியோடுவரும் தொழிலாளிகளுக்கு அவர்கள் வயிறாரச் சாப்பாடு போட்டு அனுப்புவார். ஏதாவது விசேட நாட் களில் பிள்ளையவர்களின் கடையில் அரிசிப் பாயசமும், அப்பளமுங்கூடக் கிடைக்கும். இந்நேரத்திற்குள் சாப் பாட்டை முடித்துவிட வேண்டும் என்று கோடு கிழிக்கும் வர்க்கத்தாரல்ல ஏழை மக்கள். ஆதலால் மாலை நாலு மணி வரையிலும் பிள்ளையவர்கள் கடையில் சாப்பாட்டுப் பந்தி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
‘சாப்பாட்டுக் கடை முடிந்து சாமான்கள் அரங்கேறிய பின் பிள்ளையவர்கள் மறுநாள் காலைத் தோசைக்கு மாவரைப்பார்; இரவு பக்கடாவுக்கு மாவு பிசைந்து வைப் பார். பிறகு கடைக்கு முன்னால் அலங்காரமாக விருக்கும் மரப்படிகளில் மிஞ்சிய மிச்சம் மிஞ்சாடிகளை ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு பள்ளிக்கூடம் விட்டு வரும் தன் புத்திரச் செல்வத்துக்காக வழிமேல் விழிவைத்து நிற்பார். பிள்ளையவர்களின் புத்திரச் செல்வமான முருகையா என்ற பத்து வயதுப் பையன் பள்ளிக்கூடம் விட்டதும், வயற் காட்டு மாந்தோப்பில் கல்லெறியச் செல்லும் திருக்கோஷ்டி யுடன் சேராமல், ஒழுங்காகக் கடைக்கு வந்து சேர்ந்து விடுவான். காரணம், பிள்ளையவர்களின் கடை பலகாரக் கடையாயிருப்பதுதான். முருகையா வந்ததும் அவனைப் பட்டறையில் அமர்த்திவிட்டு, பிள்ளை நயினார் குளக்கரைக் குச் செல்வார். பிள்ளையவர்களின் புத்திரனான முருகையா தகப்பன் சென்றதும் தன்னாலியன்றவரை தட்டுகளிலிருக்கும் சரக்குகளை வயிற்றுக்குள் தள்ளி, ‘கிளியரன்ஸ் ஸேல்ஸை வெகுவாகத் துரிதப்படுத்துவதும் உண்டு. நாறும்பூநாத பிள்ளை குளக்கரைக்குச் சென்று அனுஷ்டானாதிகளை முடித்து விட்டு, அன்று கருட தரிசனம் பார்க்கவேண்டிய தினமாயிருந்தால் அதையும் முடித்துவிட்டு, கீழரதவீதி வழியே போய் சுவாமி நெல்லையப்பர் கோவிலுட் சென்று ஆறுமுக நயினாரைத் தரிசித்துவிட்டு, ஒத்தைமாடத் தெரு வழியே சென்று சந்திப் பிள்ளையார் கோயில் தீப தரிசனம் செய்து விட்டுக் கடைக்குத் திரும்பி வருவதற்குள் இரவு மணி எட்டு ஆகிவிடும்.
எட்டு மணிக்கு மேல்தான் அவர் கடையில் இரவு வியாபாரம் ஆரம்பமாகும். பட்டணத்தில் ஊத்தப்பம் என்று அருமையாய் அழைக்கப்படும் பொருளின் விஸ்வ ரூபந்தான் பிள்ளையவர்கள் கடையில் தோசையாக விளங் கும். மேலும், கோசைக்குத் துணை நிற்கும் மிளகாய்ப் பொடி எண்ணெயின் கூட்டுறவால், எத்தனை தோசை களானாலும் சாப்பிடலாம் என்று தைரியம் உண்டாகும். எனினும் பிள்ளையவர்கள் கடையில் இரவு தோசையை விட, பக்கடா, சுக்கு வெந்நீர் இவைகளுக்குத்தான் சரி யான கிராக்கி. இரவு வெந்நீர்ப் பழையது சாப்பிடும் பேர்வழிகளுக்கு நாறும்பூநாத பிள்ளைக் கடை பக்கடாவைப் போன்ற வேறொரு தொடுகறி கிடைப்பது அரிது. ருசி யாகவும், கணிசமாகவும் இருப்பதால், எத்தனை தட்டுக் களானாலும் விற்பனையாகிவிடும். பிள்ளையவர்கள் கடைச் சுக்கு வெந்நீருக்கு வாடிக்கைக்காரர்கள் ‘ராமபாண(ன)ம். என்று அழகாகப் பெயரிட்டிருந்தார்கள். காரணம் விஷக் குடிநீர்போல் காரசாரமாய் இருப்பதுடன், சாரணைவேர் கருடக்கொடி போன்ற மூலிகைகளும் சேர்ந்து தயாரிக்கப் படுவதால் உடம்புக்கு நல்லது என்று எல்லோரும் பிரிய மாய்ச் சாப்பிடுவார்கள். சுக்கு வெந்நீர் தீர்ந்து மண்டி யான பின்னுங்கூட வியாபாரம் குறையாது.
சுக்கு வெந்நீர்த் தவலையைப் பிள்ளையவர்கள் கழுவிக் கவிழ்த்து விட்டாரென்றால் அன்றைய வியாபாரமும் அத் துடன் முடிந்தது என்று அர்த்தம். பிறகு கடைக்கு நிழல் தரும் வண்ணம் தூக்கி நிறுத்திய மூங்கில் தட்டியை இறக்கி, கடையை மூடிவிட்டு, பக்கத்துக் கடையில் மருதை நாயுடு சுருட்டு ஒன்று வாங்கிப் பற்றவைத்துக்கொண்டு நிலாக் காலமாயிருந்தால், குளக்கரைப் பக்கம் செல்வார்; இல்லையெனில் வீட்டுக்குச் செல்வார். வீட்டுக்கு வந்து மனைவி பக்குவமாய்ப் பிசைந்து வைக்கும் பழையதைச் சாப்பிட்டுவிட்டு, வெளித்திண்ணையில் படுக்கையைப்போடுவார். போட்டபின் இரப்பில் சொருகியிருக்கும் கந்தரனு பூதி, விநாயகரகவல், கந்தரலங்காரம் என்ற நூல்களை எடுத்து. முனிஸிபாலிட்டியார் புண்ணியத்தில் விழும் மின் சார ஒளியில் சில பகுதிகளைப் படிப்பார். நிலாக் காலமா யிருந்தால், மின்சார ஒளி கிடையாத காரணத்தால், மனப் பாடமான பகுதிகளை வாய்விட்டுப் பாடிவிட்டு, “என் அப்பனே, முருகா!” என்று கூறி, பிளந்த வாயில் சொடக்கு. விட்டு, சோம்பல் முறித்துவிட்டு, தலையைச் சாய்ப்பார்.
இதெல்லாம் சென்ற பத்து வருஷங்களுக்கு முந்திய விவரம்.
அவருடைய வாழ்க்கைப் பாதையில் வண்டியைக் குடைசாய்த்து விடும் நொடியோ பள்ளமோ குறுக்கிட்டு விடவில்லை; வாழ்க்கை என்னவோ அவருக்கு சுவாமி நெல்லையப்பர் ஹைரோட்டில் காலாற நடந்து போவது போலத்தான் தோன்றியது. இடையில் திருநெல்வேலியில் வந்த வெள்ளம், காலரா, காங்கிரஸ் தேர்தல்கள் முதலி யன எவையுமே பிள்ளையவர்களின் தெய்வ பக்தியையும் வாழ்க்கை நிலையையும் பாதித்ததில்லை.
ஆனாலும் யுத்தம் ஆரம்பித்த பின்பு, பிள்ளையவர் களுக்கு தாமரையிலைத் தண்ணீர் போலிருந்த வாழ்வில் ஏனோ சிறிது பிடிதளர்ந்து, லௌகிகப்பற்று ஜாஸ்தியாய் விழுந்தது. இதற்குக் காரணம் எதுவென்று திட்டமாய்ச் சொல்லமுடியாது. தம்முடைய பேர் சொல்ல நிற்கும் முருகையாவுக்கு ஏதாவது பண்டமாய் மீத்து வைக்க வேண்டும் என்ற கருணையோ, உழைத்து உழைத்து ஓடாய்ப்போன அருமை மனைவிக்கு ஏதேனும் வழி தேடி வைக்கவேண்டும் என்ற புருஷார்த்தமோ – எதுவென்று கூறமுடியா விட்டாலும், பிள்ளையவர்களுக்குத் திடீரென்று யணம் சேர்க்கவேண்டும் என்ற ஆசை விழுந்தது மிகவும் அதிசயமானதுதான். ஆனாலும் சமயங்களில், பிள்ளையவர் கள், “நேத்துத் நோட்டைத் தூக்கிக்கிட்டு நிலுவை பிரிச்சவனெல்லாம் இன்னிக்கு பட்டறையிலே முதலாளியா யிருக்கான்” என்று சொல்லுவதிலிருந்து அவ ருக்கும். சமூகத்தில் ஒரு உயர்ந்த ஸ்தானம் பெறவேண்டும் என்ற ஆசை உண்டானதென்று ஊகிக்கலாம். அதை நிறை வேற்றுவதற்காகத்தான் அதற்கு மூலாதாரமான பணம் சேர்க்கும் முன்னணியில் அவரும் கலந்து கொண்டார் என்றுதான் எல்லோரும் கருதினார்கள்.
நாட்டில் அகவிலை ஏறி, சரக்குகளுக்குக் கிராக்கி ஆரம்பமாகும் வேளைக்கும், மக்கள் கையில் புரளும் வரும் யடிப் பணம் ஏற்றம் காணாமலிருந்த காலத்துக்கும் இடையி லுள்ள இடைக்காலத்தில், நாறும்பூநாத பிள்ளைக் கடை யில் திடீரென்று வியாபாரத்தில் ஒரு நல்ல விறுவிறுப்பு ஏற்பட்டது. பெரிய ஹோட்டல்களிலெல்லாம் பண்டங் களின் விலையை உயர்த்தும்போது, நாறும்பூநாத பிள்ளை மட்டும் தெரிந்தோ தெரியாமலோ, சாமான்களின் கனபரி மாணத்தைக் குறைத்தும், விலைவாசி நிர்ணயத்தைச் சிதைக்காமலும் இருந்த செய்கை ஒரு விதத்தில் சரியான வியாபார தந்திரமாகவே அமைந்தது. ஆனால், தம்மை யறியாமலேயே காலக்கிரமத்தில் கையாடிவிட்ட இந்த வியாபார நுணுக்கத்தை ஒரு வருஷத்திற்குப் பிறகுதான் நாறும்பூநாதரே உணர்ந்தார்.
இம் முறையில் நாளா வட்டத்தில் நாறும்பூநாத பிள்ளைக்கு வியாபாரத்தில் சரியான பிடிப்பும், விளம்பர மோகமும் ஏற்பட்டதன் விளைவாக, எடுத்துக் கட்டிய கடையும், ஒரு கையாளும், வாசலில், ‘முருக விலாஸ் சைவாள் சாப்பாட்டுக் கிளப் – மண்பானைச் சமையல்- உழுங்கலரிசிச் சாதம் – வடை பாயசத்துடன் அணா நாலு. அளவு சாப்பாடு அணா இரண்டு’ என்று எழுதப்பட்ட விளம்பரப் பலகையும் ஏற்படலாயிற்று: காலக் கிரமத் தில் நாறும்பூநாத பிள்ளையவர்கள் கடையும் திருநெல் வேலியிலுள்ள மத்தியதர வகுப்பாருக்குப் பயன்படும் கிளப்புகளில் ஒன்றாக விளங்கவே, நாறும்பூநாத பிள்ளையும் மற்றவர்களைப் போல், தாமும் நடந்துகொள்ள வேண்டிய தாயிற்று. இரவு கடைக் கணக்கெல்லாம் முடித்துவிட்டு, வீடு வந்து சேர்வதற்குள் மணி பன்னிரண்டு ஒன்றாகிவிடும்.
வீட்டிலோ நெல்லை வடிவு ஆச்சி கொட்டு கொட் டென்று விழித்துக் கொண்டிருப்பாள். முன்னெல்லாம் நெல்லை வடிவு ஆச்சி அக்கம் பக்கத்து வீடுகளில் முறுக்கு சுற்றப் போய்விட்டு வந்த அலுப்பினால், முன்தானையை விரித்துக் கூடத்தில் படுத்து விடுவாள். இப்போது அதற் கெல்லாம் வழியின்றி, ‘முதலாளி’யின் வரவு நோக்கிக் காத்திருப்பாள். பின் பிள்ளையவர்கள் சாப்பிட்டுவிட்டு வருவதற்கும் கந்தரனுபூதி ஏதேனும் சொல்வதற்கு மனசில் தெம்பும், திறனும் இருந்தால் சொல்லிவிட்டுப் படுப்பதற்கும் நேரம் சரியாயிருக்கும். ஆதலால் முன் போல அதிகாலையில் எழுந்து ஆற்றுக்குச் செல்லும் வழக்க மும் படிப்படியாய் நின்றுவிட்டது. இப்போதெல்லாம் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் ஸ்நானம், காப்பி பலகாரந்தான். கடைப் பையன் வந்து ஆறு மணிக்கே சாவியை வாங்கிப் போய்விடுவான். பிள்ளையவர்கள் சாவ தானமாய் ஒன்பது மணிக்கு ஈரச்சடையை உலர்த்திச் சிக்கலெடுத்தவாறே, கடைக்குச் செல்வார்.
வியாபாரத்தில் தலையெடுத்து பெரிய கைகளுடன் போட்டியிட முடியாத நிலைமையிலிருந்தாலும், தாமும் ஒரு முதலாளி என்ற மனப்பான்மை அவருக்கு வழக்கத்தில் ஊறிவிட்டது. கடைப் பையன்களை அதட்டுவது, பட்டறை யிலிருந்து கொண்டு சில்லரைகளை வரவு வைப்பது, இரவு கடைப் பையன்கள் புடைசூழ்ந்து வழியனுப்ப வீடு சேர் வது, புத்திரச் செல்வம் இங்கிலீசு படிப்பது, நெல்லைவடிவு ஆச்சி சமயம் கிடைத்த போதெல்லாம் ‘முருகையாவுக்கும் தான் வயசாகலியா? நம்ப கண்ணு முன்னாலேயே ஒரு முடி போட்டு வைக்கக் கூடாதா? வீட்டிலேயும் என்னான்னு கேக்கதுக்கு ஒரு மவராசி வேண்டாமா?’ என்று கூறுவது- எல்லாம் சேர்ந்துதான் அவர் மனசில் முதலாளித்துவ மனப்பான்மையைச் சிருஷ்டித்திருக்க வேண்டும். ஆனாலும், இந்த முதலாளித்துவமும், பணப் பெருக்கமும் தம்முடைய வாழ்க்கை முறையையும், தெய்வ பக்தியையும் ஓரளவு பாதித்திருக்கின்றன என்பதை அவர் உணரவில்லை, மேலும் திருநெல்வேலியில் தலையெடுக்கும் எந்த வெள்ளாளனுக்கும் பிராமணத் துவேஷம் ஏற்படுவதும் நாறும்பூநாத பிள்ளைக்கு மற்றொரு காரணம். இந்த முறையில் திருவாளர் நாறும்பூ நாத பிள்ளையவர்கள் தற்போது வீட்டில் வெந்நீர் ஸ்நானம் செய்வதன் காரணமாகக் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வலம் வருவதும், சந்திப் பிள்ளையார் கோயில் அந்தி தரிசனம் காண்பதும் அரிதாய் விட்டன. அதற்குப் பதில் குறுக்குத்துறையில் இவர் பேருக்கு செவ் வாய்க்கிழமைதோறும் அர்ச்சனை நடந்து விபூதிக் குங்குமப் பிரஸாதம் வீடு தேடி வரும்; கடைப்பையன் வாரந் தவறா மல் சந்திப் பிள்ளையாருக்கு உடைத்து வரும் விடலைத் தேங்காயால், பிள்ளையவர்களுக்குப் பிள்ளையார் புண்ணியத் திலும் பங்கம் நேர்ந்து விடவில்லை; கருட தரிசனக் கட்டம் மட்டும் வேறொருவர் செய்ய முடியாத காரணத்தால் தாமே நேரில் செய்து வந்தார். மேலும், நயினார் குளக் கரை தம் கடைக்குப் பக்கத்திலேயே இருப்பதாலும், பட்டறையில் உட்கார்ந்திருந்த கடுப்புத் தீர உலாவ வழி கிடைப்பதாலும் பிள்ளையவர்களுக்கு கருட தரிசனம் மட்டும் தீரா வினையாக லபித்துவிட்டது.
இப்படி இருந்துவருங் காலத்தில்தான் திருநெல்வேலி பெரிய கோயிலில் செய்ய முனைந்த கும்பாபிஷேக முயற்சி கள் பிள்ளையவர்களின் தெய்வ பக்தியையும், ஜாதியபி மானத்தையும் சீர்தூக்கும் சோதனைத் துலையாக வந்து சேர்ந்தது. திருநெல்வேலியுறை செல்வர்களான சுத்தமல்லிப் பண்ணை போன்ற பிள்ளைமார்களுக்குத் தாங்கள் தான் ஆளவும் வாழவும் பிறந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. இந்த ஆசையின் காரணமாக எழுந்த பிராமணத் துவேஷமும், தற்பெருமையும் அவர்களுக்கு உண்டு.
எனினும், பெருந்தொகை புரளும் சுபகாரியங்களில் பிராமணரும் சைவப் பிள்ளைமாரும் ஒன்று கலந்து கொள் வார்கள். இந்தக் கலப்பு ருஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் பொது எதிரியைத் தொலைப்பதற்காகச் சமயத்தில் கை கோத்துக்கொண்ட மாதிரி தான் என்று அறிந்தவர்கள் சொல்லுவார்கள். இருந்தாலும் இருவருடைய பொது நலனையும் உத்தேசித்து, பரஸ்பரம் மனக் கசப்பை விட்டுக் கொடுப்பதாகக் காட்டிக்கொண்டு, பொதுக் காரியங்களில் ஈடுபடுவார்கள்; பின் காலக் கிரமத்தில் ஒருவரையொருவர் விழுங்கப் பார்ப்பார்கள். இந்தக் கும்பாபிஷேக விசேடத் தின் போதும் அப்படி ஒரு கலப்பு ஏற்பட்டது. அந்தக் கலப்பு தங்கள் ஜாதியபிமானத்தைக் குலைப்பதாகக் கருதிய வர்கள் ஒரு சிலர்.
அந்தச் சிலரில் இருவர்தான் சுத்தமல்லிப்பண்ணையும் ஐ.பி.பிள்ளையும். இருவருக்கும் அந்தக் கலப்பு பிடிக்கா திருப்பதற்கு ஜாதியபிமானம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. பண்ணையவர்களுக்கு கும்பாபிஷேக வைபவக் கமிட்டியிலே இடங் கிடையாமற் போனதும், சுய ஜாதிக்காரனே தம்மை மதிக்காததும், கிடைப்பதற் கிருந்த வரும்படி கைகடந்து போனதும் காரணங்களாக இருக்கலாம் என்று கருதுபவரும் உண்டு. ஐ. பி. பிள்ளைக்கு இம்மாதிரி சுயநல புத்தி ஏற்படாமைக்குக் காரணம், அவ் வளவுக்குத் தாம் தகுதியற்றவர் என்பதோடு கூட, பிராம்மண அன்னதானம் என்றதுமே அவருக்கு மனசில் கசப்பு ஏற்பட்டது. இந்த இருவரும் சேர்ந்து நாறும்பூநாத பிள்ளையைத் திருத்த முயன்றதில்தான் பிள்ளையவர்களுக்குத் தம் தரும சிந்தையில் கலக்கம் ஏற்பட்டது.
நயினார் குளக்கரையில் பண்ணையும் ஐ.பி.பிள்ளையும் விதைத்த விதை பிள்ளையவர்களின் மனத்தில் முளை விடா விடினும், உறுத்திக் கொண்டேயிருந்தது. “பயலுக பணம் பிரிக்க வரும்போது பாத்துக்கிடலாம்” என் று மெத்தனத்தில் இருந்து விட்டார் பிள்ளை.
3
பட்டறையில் அமர்ந்திருந்த நாறும்பூநாத பிள்ளை எழுந்திருந்து, ‘வாருங்க-” என்ற இழுப்புக் குரலில், நடையேறிவரும் திருக்கூட்டத்தை வரவேற்றார்.
பெரிய கோயில் பட்டர்சாமி, தர்மகர்த்தாபிள்ளை இருக்கும் போது, அவர் “ஏன்?” என்று கேட்டால், என்ன?’ என்று குரல் கொடுப்பவரும், அவரில்லாதபோது தர்மகர்த்தா பிள்ளையின் அந்தரங்கக் காரியதரிசி’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்பவருமான சங்கரலிங்கம் விள்ளை, தர்மகர்த்தா பிள்ளை, உள்ளூர் மணியம், இன்னும் இவர்களுக்குப் பின்னால் மேல் துண்டை இறக்கி அரையில் கட்டி புடை சூழ்ந்து வரும் காக்காய்கள், அந்தக் காக் காய்களுக்கு முன்னே பெருமிதமாய் நிமிர்ந்து வரும் பெரிய கோயில் வில்லைச் சேவகன் -இத்தியாதி வர்க்கம் வாசல் நடையேறிக் கடைக்குள் நுழைந்தது.
பிள்ளையவர்கள் எழுந்திருந்து அந்தச் சிவநேசச் செல்வர்களை வரவேற்று பிறகு உள்ளே திரும்பி “ஏலே, ஐயா, காப்பி கொண்டுவாடா” என்று குரல் கொடுத்து விட்டு உட்கார்ந்தார்.
அதற்குள் பெரிய கோயில் பட்டர்சாமிகள் மனசிலே இருந்திருந்து இந்தப் பய கடையிலா காப்பி சாப்பிடுவது?’ என்ற எண்ணம் உறுத்த, “காப்பி ஏதுக்கிங்கிறேன்? இப்பதான் பெரிய போத்தி கடையிலே தாக ஸாந்தி யாச்சு!” என்று விளம்பரப்படுத்தி காப்பியை நிறுத்த முயன்றார்.
எனினும் கடைக்காரப் பையன்களோ, முதலாளியின் வாக்கை உடனே நிறைவேற்றி வைத்தார்கள். மேஜை மேல் கொண்டுவந்து வைத்த காப்பியை சங்கரலிங்கம் பிள்ளை எடுத்து தர்மகர்த்தா பிள்ளையவர்களிடம் வழங்க, அவர் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார். சங்கர லிங்கம்பிள்ளை மற்றொரு காப்பியை பட்டர்சாமி முன் நீட்டினார். பட்டர்சாமி கொடுத்த காப்பியை மறுக்க முடியாதவராய் வாங்கி அதை மேஜைமேல் வைத்துவிட்டு, நாறும்பூநாத பிள்ளையவர்களை நோக்கி, “என்ன பிள்ளை வாள், அன்னைக்கி உங்களைக் குளத்தங்கரையிலே கண்டது. அதுக்கப்புறம் சௌகர்யமே வாய்க்கலெ” என் ஆரம்பித்தார்.
குளத்தங்கரை என்றதுமே பிள்ளையவர்களுக்கு ‘கெதக்’ என்றது: “ஆமா, இங்கே என்ன ஓய்வா? ஒளிவா? எதுக் கெடுத்தாலும் பிச்சித்தான் பிடுங்குதாங்க -“
“ஆமா, வியாபார மும்முரத்திலே ஓய்ச்சல் ஒளிவைப் பார்த்தா முடியுமா?” என்று கூறிக்கொண்டே, தாம் கொண்டுவந்திருந்த டிக்கட்டுக் கட்டுக்களை உலைத்தார் தர்மகர்த்தா பிள்ளை.
“வியாபார மும்முரம் என்ன வாளுது? சாமானுக்குத். தான் கிராக்கி அதிகமாச்சே ஒளிய ஒரு பலனைக் காணோம்” என்று தாளத்தில் ஆரம்பித்தார் பிள்ளை.
“அதென்னமோ பிள்ளைவாள். எல்லாம் ஆண்ட கிருபை. நீங்க இன்னைக்கி இருக்கிற செல்வாக்குக்கும். சிறப்புக்கும் அவன்தானே காரணம்?” என்று பேச்சைத் தம் தடத்துக்குத் திருப்பினார் தர்மகர்த்தா.
“ஆண்டவன் என்ன செய்யக் கிடக்கு? நம்ம முயற்சி யும் மக்கியா போச்சி? உளைச்சதுக்குத் தக்க பலன் கிடைச்சுது” என்று தர்மகர்த்தாவை முறியடிக்க உத் தேசித்தார் பிள்ளை.
அதற்குள், பட்டர்சாமி, “என்ன பிள்ளைவாள், அதென்ன அப்படிச் சொல்றேள்? உங்க தெய்வபக்தியும், ஆண்டவன் கிருபையுந்தான் உங்களை இவ்வளவு நல்ல- நிலையிலே வச்சிருக்குன்னா!” என்று விடாது முடுக்கினார்.
“நல்ல நிலை யென்னா? ஏதோ கடன் காட்சி இல்லேன்னு தான் பெருமைப் படணும். வியாபாரம் தான் அவ்வளவு ஓட்டமில்லையே!” என்று சொன்னார் பிள்ளை.
“நீங்க சொல்றதும் ஒரு வகைக்கி சரிதான். ஆனாலும் இந்த மாதிரி இக்கட்டான வேளையிலே சாமி கடாக்ஷம்தான் வேண்டியிருக்கு” என்று விஷயத்தை நழுவவிடாமல், முளையைவிட்டுத் தூர விலகிப் போகாமல் சுற்றி வந்தார் தர்மகர்த்தா. காரியம் ஆக வேண்டும் என்ற ஒரே கார ணத்தால் ஏற்பட்ட தர்மகர்த்தாவின் கடவுள் நம்பிக்கை யைக் கண்டு பிள்ளையவர்கள் ஆச்சரியப்பட்டார். விடாக் கண்டர்களான பட்டர் சாமியும், தர்மகர்த்தா பிள்ளையும் நாறும்பூநாத பிள்ளையை மடக்குவதற்கு எமப் பிரயத் தனம் செய்தார்கள்.
“பிள்ளைவாள், உங்க தெய்வ பக்தி ஊரறிஞ்சது. எனக்குத் தெரியாதா?” என்றார் தர்மகர்த்தா.
“என்ன பிள்ளைவாள், எல்லாம் ஒங்க முகத்துக்கு நேரே சொல்லப்பிடாது. பாருங்க, உங்களுக்கு இருக்கிற முருக பக்தியிலே கால்வாசி கூட எனக்கு இருக்கும்னா அது சந்தேகந்தான்” என்று தர்மகர்த்தா பிள்ளையை ஆதரித்துப் பிள்ளையவர்களை மடக்கினார் பட்டர்.
பிள்ளையவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதில் சொல்ல வகை தெரியாமல் திகைத்தார்.தர்மகர்த்தா பிள்ளையையும், பட்டர்சாமியையும் எதிர்ப்பது என்பது காற்றிலே கை வீசிய கதையாய்ப் போய்விட்டது. இது தான் சமயமென்று தர்மகர்த்தா பிள்ளை ஐம்பது ரூபாய் டிக்கட்டுப் புஸ்தகம் ஒன்றை எடுத்து, பிள்ளையவர்கள் முன்னால் வைத்தார்.
“பாருங்க.உங்க தகுதிக்கு அம்பதா? எவ்வளவோ குடுக்கலாம். ஆனா, இப்போ எதுக்குன்னுதான் குடுக்கது? அதுனாலெத்தான்-” என்று ஆரம்பித்தார் தர்மகர்த்தா பிள்ளை.
நாறும்பூநாத பிள்ளை, “அம்பது ரூபாயா? அவ் வளவுக்கு நிலையிருந்தாத்தான், நான் இப்படி ஏன் இருக்கேன். ஹி ஹி… என்று இழுத்தார். மனசிலோ ஐ.பி.பிள்ளையும்,பண்ணையும் இட்ட விதையின் உறுத்தல் நின்றபாடில்லை.
“பாத்தியளா, உங்கள்’ட்டெல்லாம் டிக்கெட்டெக் கிளிச்சிக் குடுத்துட்டு ரூபாயை வாங்கணும்” என்று செல்லக் கோபத்தோடு கூறினார் தர்மகர்த்தா. பிள்ளை யவர்கள் புத்தி ஏனோ தடுமாறியது.
“இந்தாங்க. தர்மகர்த்தா பிள்ளைவாள். சக்தி எடங் கொடுக்கணும் பாருங்க. வேணுமின்னா ஒரு பதினோரு ருபாய் டிக்கெட்டு வாங்கிக் கிடுதேன். இத்தோட முடிஞ்சி போச்சா? இன்னும் எத்தனையோ?” என்றார் தீர்மானமாக.
“இதுக்குக் குடுக்கலேன்னா, வேறு எதுக்குத் தரப் போறேள்?” என்று கேட்டார் பட்டர்.
“பட்டர்சாமி, இன்னும் எவ்வளவோ பெரிய தலைகள் எல்லாம் இருக்காகளே” என்றார் பிள்ளை.
“பெரிய தலைகளை நாங்க கவனிச்சிக்கிடுதோம். நீங்க இந்த அம்பதைக் கட்டாயம் எடுத்துத்தான் தீரணும்’ என்றார் தர்மகர்த்தா.
‘நம்ப தகுதிக்கு இவ்வளவுதான் தாங்கும். முருகையா, பெட்டியைத் திறந்து ஒரு பதினோரு ரூபா எடுத்துக் குடு’ என்று தம் மகனுக்கு உத்திரவிட்டார் பிள்ளை.
“வந்து-‘” இழுத்தார் பட்டர்.
“வீணா நேரத்தைக் கடத்தாதிய. நமக்கு இவ்வளவு தான் தாங்கும்” என்றார் பிள்ளை.
தர்மகர்த்தா பிள்ளை வேறு வழியில்லாமல் பிள்ளை யவர்கள் கொடுத்த பதினொரு ரூபாயை வாங்கிக் கொண்டார். காரியம் முடிந்த பின், வந்த திருக்கூட்டம் பேச்சை வளர்த்தாமல், ‘நாங்க வர்ரோம்’ என்று கிளம்பிற்று.
பட்டர்சாமிக்குக் கொடுத்த காப்பி மேஜைமேல் அப்படியே இருந்தது. ஈக்கள் அதை மொய்த்துக் கொண்டிருந்தன, பிள்ளையவர்கள், “பயலுக குரங்குப் பிடியாத்தான் புடிக்கானுவ” என்று முன்கி விட்டு, “ஏலே ஐயா. அந்தக்காப்பியைத் தூர ஊத்து. பாப்பார மூதிக்கு என்ன திமிருங்ஙே?” என்று கூறினார்.
பின் பிள்ளையவர்கள் ஏதோ குற்றம் செய்து விட்டது போல், திருதிருவென்று விழித்தார்.
அதற்குள் பக்கத்துக் கடையிலிருந்து வந்த ஆறரை மணி யுத்தச் செய்திகள் கர்ஜிக்க ஆரம்பித்தன. உடனே பிள்ளையவர்கள் தம் புத்திரச் செல்வம் முருகையாவை அழைத்து, பட்டறையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டு, நடையை விட்டுக் கீழிறங்கினார். கடையை விட்டு பிள்ளையவர்கள் வீதியில் காலடி வைப்பதற்கும் ஐ.பி. பிள்ளையும், பண்ணையும் வந்து சேருவதற்கும் சரியாயிருந்தது.
“என்ன பிள்ளைவாள், இந்தப் பயலுக உங்க கடைக்கு வந்துட்டுப் போறானுக போலுக்கே” என்று ஆரம்பித்தார் பண்ணை.
“ஆமா. உயிரை வாங்கிட்டானுக” என்றார் பிள்ளை.
“நாங்க சொன்னபடி கையை விரிச்சிட்டியள்லெ” என்றார் ஐ.பி.பிள்ளை.
“குரங்குப் பிடியா நிக்கயிலே, நாம என்ன பண்றது? பதினோரு ரூபா அளுது தொலைச்சாச்சி” என்று சலிப்போடு கூறினார் நாறும்பூநாதர்.
“ஆமா நல்லவங்களுக்கு இது ஏதுங்க காலம்? கடைசியிலே நாமதான் ஏமாந்த பயலுகளாப் போரோம்” என்றார் ஐ.பி.பிள்ளை.
பிள்ளையவர்கள் பதிலே கூறவில்லை.
“சரி, வாங்கோ போவாம். நம்ம சொல்லுக்கு எங்கே மதிப்பு இருக்கு?” என்று சினந்து கொண்டார் பண்ணை.
“எங்கே போறது?” என்று கேட்டார் ஐ.பி.
“கடைக்குத்தான்” என்று கூறிக்கொண்டே, நயினார் குளக்கரைக்குத் திரும்பினார் பண்ணை.
– 1945 – ரகுநாதன் கதைகள் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை