ஏழையின் பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 7,610 
 

ஊதல் காற்று உடம்பைத் துளைத்தெடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு போர்வையை-அது வீட்டில் படுக்கும்போதும், வெளியில் போகும்போதும் பாவிக்கும் ஒரே போர்வையை மூடிக்கொண்டு முருகன் நடந்தான். கிரவலும் களியும் கலந்த ரோட்டில் விரைவாக நடப்பது சிரமமாகவிருந்தது.

தூறிக்கொண்டிருப்பது சாதாரண தூறல்தான்.எனினும்,நேற்றுவரை பெய்தது பெருமழை. அதனால் பாதையெல்லாம் சதக் சதக் என்றிருக்கிறது. அவசர தேவைக்கு,இந்த ரோட்டால் யாரும் டாக்சி கொண்டுவருவார்களா?

முருகனுக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. போன வருடமும் இப்படித்தான் பெருமழை பெய்தது. பக்கத்து வீட்டுப் பரமுவின் மனைவிக்குப் பிரசவ வலி. ஆனால் அவளை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போகும் நிலை வந்ததும் எவரும் இந்த கிரவல் ரோட்டால் கார் கொண்டு வந்து அவளுக்க உதவி செய்ய மறுத்துவிட்டார்கள். கடைசியாக மாட்டு வண்டியில் அவளையேற்றிக் கொண்டுபோகும்போது பாதி வழியிலேயே…. முருகனுக்கு அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை.

அந்தத் துயர்ச் சம்பவத்தை நினைக்கும்போது,அவனின் மயிர்க்கால்கள் பயத்தால் குத்திடுகின்றன. நெஞ்சுக் குழிக்குள் ஏதோ அடைப்பது போன்ற பிரமை.’நாகம்மா,உனக்கேதும் நடந்தால் நான் என்னவென்று தாங்குவேன்?’ முருகன் வாய் விட்டுச்சொல்லிக் கொள்கிறான்.

வெளியில் தாங்கமுடியாத ஊதல் காற்று,அவன் உள்ளத்தில் தாங்கமுடியதா வேதனை நெருப்பாய் எரிகிறது.

சேறும் சகதியுமான பாதையின் சிதறல்கள்,அவன் உடுப்பையும் நாசப் படுத்திக் கொண்டிருந்தன.

மழை இலேசாகக் கூடிக்கொண்டிருந்தது.அவன் கைகளிற் குடையில்லை. போர்வையை இழுத்துத் தலையை மூடிக்கொண்டு ஓட்டமும் நடையுமாகப் பிரதான வீதியை அடைந்தபோது அவன் தெப்பமாக நனைந்து விட்டான். மழை சோ வெனக் கொட்டத் தொடங்கி விட்டது.

தகரத்தால் வேய்ந்த தேநீர்க்கடைக்குள் புகுந்துகொண்டு, நனையாத போர்வையின் ஒருபகுதியால் தனது தலையைத் துடைத்துக்கொண்டான். நேரம் நகர நகர அவன் தாங்க முடியாத வேதனையிற் துடித்துக் கொண்டிருந்தான்.

‘இந்தநேரம் நாகம்மா என்ன செய்வாள்?

‘அவளை அந்த மருத்துவிச்சிக் கிழவி பார்த்துக்கொள்ளும்தான் என்டாலும் கிழவிக்குப் பார்வையே சரியில்லை. போன தடவை கிளினிக்குக்குப் போனபோது டாக்டர் சொன்னார், நாகம்மாவின் வயிற்றில பிள்ளை கிடக்கிற நிலை சரியில்ல என்டு,இப்ப நாகம்மா பிரசவ வேதனையிற் துடிக்கிறாள் என்ன நடக்குமோ தெரியாது.அவளைக் கெதியாக ஆசுபத்திரிக்குக்கொண்டுபோக ஒரு வாடகைக்கார் கெதியாக வராதா?’

அவன் வேதனையில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,’சர்’என்று மழைத் நீரை அடித்து விட்டு ஓடும் அந்த மஞ்சளும் கறுப்புமான அந்தக் காரில் அடிபடாமல் ஓடிப்போய் அந்தக் காரை மறிக்கிறான் முருகன். அதற்குள் இருந்தவர்,அவன் அப்படிக் காரை மறித்ததால் கோபத்தில் பாய்ந்து விழுகிறார்.

அந்தக் கார் ட்ரைவரிடம் உதவி கேட்டுப் பிரயோசனமில்லை என்று தெரிந்ததும் அவன் தலையைச் சொறிந்து கொண்டு கார் செல்ல வழியை விட்டு விலகுகிறான்.

தேநீர்க்கடைக்காரச் சிங்கள மனிதன்,பியதாச அரை குறைத் தமிழில் கேட்கிறான்,’என்னண்ணே வீட்ல சமுசாரத்துக்குச் சொகம் இல்லே?’

‘ஓம் அப்பா, இதுதான் மாசம்,அடுத்தகிழமைதான் புள்ள பிறக்குமென்டு டாகுத்தர் சொன்னார். வேலையால வீட்ட நான் போறன் நாகம்மா புள்ள புறக்கிற வலியில துடிச்சுக் கொண்டிருந்தா.காலையில சாடையா நோ இருந்ததெண்டு சொன்னா. அதனால வேலைக்குப் போனதும் முதலாளிக்கிட்ட லீவு கேட்டன். தரமாட்டன் என்டிட்டான். நான் என்ன செய்ய?’ முருகன் சொல்லி முடிப்பதற்கிடையில் அவனின் நா தழுதழுத்து விட்டது.

‘டாக்சிக்காரன் அந்தத் தெருப்பக்கம் வரமாட்டான். அண்டைக்கு மழை பெய்ஞ்ச உடனேயே கிரவல் கரைஞ்சு கார் ஒன்டு கிரவல்சகதியில புதைஞ்சு கரைச்சல் பட்டது.அதனால அவன் மழை பெய்தால் அவன் அந்தப் பக்கம் வரமாட்டான்’ பியதாச முருகனுக்கு அனுதாபத்துடன் சொல்கிறான்.

பியதாச சொல்வதைக் கேட்டதும் முருகனுக்குத் திகில் பிடித்துவிட்டது.
வாடகைக் கார் ஏதும் கிடைக்காவிட்டால் நாகம்மாவின் கெதியனெ;ன?

பியதாச அங்கு தேநிர்க்கடை வைத்திருப்பவன்,டாக்சிக்காரர் பலபேரைத் தெரியும்.

‘பியதாச,உனக்குக் கார் வைச்சிருக்கிற கனபேரைத் தெரியும்..யாரையும் சொல்லிப் பாரேன்’ முருகன் கெஞ்சுகிறான்.

‘நான் சொல்லறன், ஆனா கிரவல் ரோட்டுப்பக்கம் யார்; வரப்போறாங்க?’ பியதாசாவின் குரலில் அவநம்பிக்கை.

நேரம் போய்க்கொண்டிருந்தது. முருகனுக்கு,நாகம்மாவின் நிலையை யோசித்தபோது அவன் இருதயத்தை யாரோ குடைவதுபோல் இருந்தது.

‘காலையில முதலாளிக்கிட்ட லீவு கேட்டேன்.அந்தப் பாவி கொடுத்தானா?
எங்கள நாய்மாதிரி நடத்துறான்.காசில்லாதவனுக்குத்தான் எவ்வளவு கஷ்டம்?’

முருகன் தன்பாட்டுக்குப்பேசிக் கொண்டிருப்பது பியதாசாவுக்குக் கேட்டது.

‘முதலாளிகள் அப்புடித்தான்..நம்பள நாய்மாதிரி நடத்துவான். அதுதான் நான் சண்டை போட்டிட்டு இப்ப ஏதோ நட்டம் வந்தாலும் இந்தக் கடையில் லாபம் வராட்டாலும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ரு+பா கையில கிடைக்குது. ஆனா, முதலாளிங்களோட சண்டை போட்டிட்டு கடை போட எல்லாராலும் முடியாதில்ல..சீவிக்கிறதுன்னா மனுசனா சீவிக்கிறது இல்லேன்னா மனுசனா வாழுறதற்காகப் போராடி செத்துப் போறது’ பியதாசாவும் தனக்குள் பேசிக் கொள்வதுபோல் முருகனுக்குக் கேட்கத் தக்கதாகப் பேசுகிறான்.

நேரம் போய்க் கொண்டிருக்கிறது. பியதாசாவுக்குக் கடை பூட்டும் நேரமது.

இரவு நீண்டு கொண்டிருக்கிறது. வெளியில் ஜனநடமாட்டமும், வாகன நடமாட்டமும் குறைந்து விட்டன. இருவரும் பாதையைப் பார்த்தபடி இருக்கிறார்கள்.
பியதாசவும் முருகனும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள். முதலாளியின் கொடுமை தாங்காமல் பியதாசா சண்டை பிடித்ததால் அவன் வேலை போய்விட்டது. இப்போது இந்தச் சின்னக் கடைதான் அவனது வாழ்வாதாரம்.

‘முருகண்ணே ஏதும் கார் வராதா என்டு சும்மா ரோட்டுப் பார்த்துக் கொண்டிருக்காம சின்னராசா காரைக் கேட்டுப்பார்க்கிறது’ பியதாசா சொல்கிறான்.
அதில் முருகனுக்கு நம்பிக்கையில்லை.

கல்வீட்டுக்கார சின்னராசா,முருகன் போன்ற ஏழைகளை ஏறிட்டுப் பார்த்ததாகச் சரித்திரம் கிடையாது.

அவன் தனது காரில் போகும்போது அடிபட்டனை ஏனென்றும் பாராமல் போனவன்.

‘தயவு செய்து அடிபட்டவனைக் காரில் போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக உதவுங்கள்’ என்று கெஞ்சியவர்களிடம்,

‘இந்த இரத்தக் காயத்தை என்ட காரில ஏற்றினால் என்ர காரைக் கழுவ வேண்டி வரும்’ என்று ஈவிரக்கமின்றிச் சொன்னவன்.

அவனிடம் இந்த நடுநிசியில் போவதா உதவி கேட்பதா?

மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.

பியதாச தனது கடையைப் பூட்டிவிட்டு, திறப்பைக் கையிலெடுத்துக்கொண்டு,’ வா முருகண்ணே போவம்’ என்று சொல்லியபடி நடக்கிறான்.

இருவரும் ரோட்டில் கால் வைக்கவும் ஒரு டாக்சி வரவும் சரியாக இருக்கிறது.

அந்தக் காரை மறிக்கிறான் பியதாச. வண்டி போகவேண்டிய இடத்தைச் சொல்கிறான் முருகன்.

‘அய்யையோ என்னால முடியாது, அந்தக் கிரவல் ரோட்டில கார் புதைஞ்சா முதலாளிக்கு யார்; பதில் சொல்றது?’

அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் கார் ட்ரைவர் காரை ஸ்ரார்ட் பண்ணுகிறான்.

முருகன் கெஞ்சுகிறான்.

‘ சம்சாரத்துக்குப் பிரசவ வலி, அவசரம்…வயிறு நொந்து கொண்டிருக்கு..ஆஸ்பத்திரிக்கு அவசரமாகக் கொண்டு போகவேணும்’..சிக்கலான கேஸ் என்டு டாக்குத்தர் சொல்லி விட்டார்’ சொல்லி முடிப்பதற்குள் முருகன் அழுது விடுகிறான்.

‘அந்த ரோட்டில காரைக் கொண்டுவந்தா ஆஸ்பத்திரிக்கு இன்டைக்குப் போகேலாது. அடுத்த கிழமைதான் போய்ச் சேரலாம்’ ட்ரைவர் கத்திவிட்டுக் காருடன் பறந்து விட்டான். முருகன் பின்னாலோடி அந்த டாக்சியை நிறுத்தச் சொல்லிக் கத்துகிறான்.

‘ தாய் தங்கச்சி இல்லாதவன்கள்,இவன்களுக்கு இரக்கமே கிடையாதா?’

முருகன் அலறுகிறான்.

‘அவனிட்ட இரக்கம் இருந்தாலும் அவன்ர முதலாளிக்கிட்ட எங்களப்போல தொழிலார்களிடம் இரக்கமில்லையே அதுக்கு அந்த ட்ரைவர் என்ன பண்ணுவான்’ முருகனுக்குச் சொல்கிறான் பியதாச.

இருவரும் சின்னராசாவின் கதவைத் தட்டுகிறார்கள்.பல முறை தட்டியும் பதிலில்லை.

‘சின்னராசா மாத்தையா(ஐயா)’ பெருமழையின் சத்தத்தையும் மீறி பியதாச கூப்பிடுகிறான்.இரவு பத்துமணியாகிறது. அந்த வீட்டில் எந்த வெளிச்சமும் இல்லை.
பியதாச இன்னுமொருதரம் சத்தம் போட்டுக் கூப்பிடுகிறான். கொஞ்ச நேரத்தின் பின் முணுமுணுத்தபடி கதவைத் திறக்கிறான் சின்னராசா மாத்தையா.
‘மாத்தையா, பெரிய கடை முதலாளி மாத்தையா,.’ பியதாச கெஞ்சலுடன்; சொல்கிறான்.

சின்னராசாவின் முகத்தில் எரிச்சல் படருகிறது.

அவருக்கு முருகனின் மனைவியின் அபாயகரமான நிலை பியதாசவால் விளக்கிச் சொல்லப் படுகிறது.

‘கார் ஓட்டமுடியாது..ட்ரைவர் இல்ல..எனக்கும் சுகமில்ல.சின்னராசா படபடக்கிறான்.

இரண்டு மணித்தியாலங்களுக்கு முன் தானே காரோட்டிக் கொண்டுவந்த சின்னராசாவுக்கு என்னவென்று சுகமில்லாமற் போனது?
பியதாச கோபத்துடன் யோசிக்கிறான்.

‘தாய் புள்ள இரண்டு பேரினது உயிர் விசயமிது.. ஒருக்கா கருணை காட்டுங்கோ’ முருகன் கெஞ்சுகிறான்.

‘நாங்க கார் வச்சிருந்தா இவை கேட்ட நேரமெல்லாம் கார் ஓட்ட வேணுமாக்கும்’ எரிந்து தள்ளிய சின்னராசா தனது கதவைப் பட்டென்று சாத்துகிறான்.

இனி என்ன செய்வது?

இந்த சுயநலம் பிடித்த உலகத்தில் முருகனுக்கு அபார கோபம் வருகிறது.

பிரசவ வேதனையில் உயிருடன் மன்றாடும் தன்மனைவியை நினைக்க முருகனுக்கு என்னவோ செய்கிறது. இந்த நேரம் வீட்டில் என்ன நடந்திருக்குமோ? ஏழைகளுக்குத்தான் எத்தனை சோதனை?

டாக்டர் சொன்னபடி நாளும் கிழமையும் வந்ததும் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்க்கத்தான் முருகன் முடிவு கட்டியிருந்தான். ஆனால் நாகம்மாவுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே பிரசவ வேதனை வந்து விட்டது.

‘முருகண்ணே..இனி ஒன்டும் பண்ண முடியாது. மாட்டு வண்டியத்தான் பார்க்கவேணும்’ பியதாச சொல்கிறான்.அந்தக் கிரவல் ரோட்டில போகக் கரத்தை வண்டிக்காரனும் வருவானோ தெரியாது’ பியதாச வருத்தத்துடன் சொல்கிறான்.

‘அறுவான்கள் சும்மா கிடந்த ஒழுங்கையில களிமண்ணையும் கிரவலையும்;போடாம வச்சிருந்தா இந்தப் பிரச்சினைகள் வந்திருக்காது. பழைய ஒழுங்கையில மாடு கட்டின வண்டிகள் பரம்பரையாக ஓடிக்கொண்டிருந்தன. எலக்சனுக்கு வந்தவன்கள், கல்லும் தாரும் போட்டுப் புது ரோட்டுப் போட்டுத்தாறமென்டு சொல்லியே எங்களிட்ட இலக்சனில ஓட்டு கேட்டான்கள். இப்ப எங்களையெல்லாம் பேய்க்காட்டிப் போட்டான்கள். நாங்க ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு நல்ல பாதையில்லாமக் கிரவலிலயும் களியிலயும் புதைஞ்சு கஷ்டப்படுறம்’ முருகன் ஆத்திரம் தீரத் திடடுகிறான்.

‘ஒவ்வொரு மழைக்கும் நாங்க இப்புடிக்கஷ்டப் படுறம்.அவங்களுக்கு அது தெரியுமா? அஞ்சு வருசத்துக்கொருக்கா ஓட்டுக் கேட்க வரக்க என்னவெல்லாமோ சொல்லுவாங்க..அவங்களின்ர பொய் மூட்டைகளோட அடுத்த தரம் வரட்டும்’ பியதாசா கொதிப்புடன் கத்துகிறான்.

‘இந்த அநியாயக்காரன்க எங்களப் பேய்க்காட்டுறது எப்பதான் முடியுமோ? நாங்க அவங்கள நம்பும் வரைக்கும் அவங்கள் ஏமாற்றுவான்கள்…நாங்கதான் வேற ஆட்கள் ஏழைகளுக்கு உதவுபவர்களாக அடுத்த தரம் தெரிவு செய்யவேணும’ பியதாச தொடர்ந்து உறுமுகிறான்.;

மாட்டு வண்டிக்காரன் கந்தன் வீட்டை இருவரும் நெருங்கியபோது,அந்த வீட்டிலிருந்து பேச்சுக் குரல் கேட்கிறது.

‘கந்தா’ என்று சத்தம்போட்டுக் குரல் கொடுக்கிறான் முருகன்.

கந்தன் வெளியே வருகிறான்.

‘ கந்தா, என்ர மனுசி பிள்ளைபெறு நோவில துடிக்குது. வாகனம் வச்சிருக்கிறவன்கள் அந்தக் கிரவல் ரோட்டுக்கு வரமாட்டன் என்டு சொல்லிப் போட்டான்கள். மனிசியை ஆசுபத்திரிக்குக் கொண்டுபோக உன்ர கரத்தைய ஒருக்காக் கொண்டுவாவன்.’

முருகன் மோட்டார் வண்டிக்காரரிடம் கெஞ்சியதுபோல் தன்னோடத்த ஏழையான மாட்டு வண்டிக்காரக் கந்தனிடம் கெஞ்சத் தேவையிருக்கவில்லை.தன்னையொத்த தொழிலாளியிடம் உரிமையுடன் கேட்கிறான.

‘கந்தன்,தலையைச் சொறிந்து கொண்டு,’கரத்தையைக் கொண்டு வாறதும் கஷ்டம்தான். அந்தக் கிரவல் ரோட்டால ஆசுபத்திரிக்குப் போக எவ்வளவு நேரமெடுக்குமொ தெரியாது’ என்று சொல்கிறான். முருகன் நம்பிக்கையுடன் நிற்கிறான்.

வண்டிக்கரத்தை கட்டுப்படுகிறது. படுபயங்கரமான சேறும் சகதியுமான கிரவல் ரோட்டால் மாட்டு வண்டி முருகனின் வீட்டுக்குப்போய்ச்சேர நடுச்சாமத்தைத் தாண்டிவிட்டது.

அங்கே சோர்ந்துபோன கொடிமாதிரிக் கிடக்கிறாள் நாகம்மா.

நாகம்மாவுக்குப் பிறந்த பிஞ்சுக்குழந்தை, இரத்தம்தோய்ந்தபடி,புதுஉலகத்தைக்கண்ட பயத்தில் வீரிட்டுக்கொண்டிருக்கிறது.

‘எங்கேயப்பா முருகா இவ்வளவு நேரமும் போயிருந்தாய்? உன்னைத்தேட உன்ர மூத்த மகனையும் அனுப்பிப்போட்டன்.புள்ள பிறந்து அரை மணி நேரமாயிட்டு. இன்னமும் நஞ்சுக்கொடி விழல்ல, நாகம்மாவுக்கு இரத்தமும் கனக்கப் போயிற்று..இந்தக் கரத்தையில ஏத்திக்கொண்டு போய் எப்ப
ஆசுபத்திரியக் காணுறது?’

முருகன் நாகம்மாவைப் பார்க்கிறான். அவள் முகம்,இரத்தம் அதிகம்போனதால், மங்கிய வெளிச்சத்தில் வெளிறிப்போய்த் தெரிகிறது.அவளின் மூச்சு மிக மிப் பெலவீனமாகத் தெரிகிறது;. முருகனுக்குச் சொல்லவொண்ணாத துயரில் கண்ணீர் வருகிறது.அவன்; அன்புடன், தன்மனைவியின் கரத்தைப் பற்றுகிறான்.அது இரத்தம் தோய்ந்து பிசுபிசுவென ஒட்டுகிறது. அவள் உடம்பு சில்லிட்டிருக்கிறது.

கைத்தாங்கலாக, முருகனும், பியதாசவும், கந்தனும் நாகம்மாவை வண்டியிற் துக்கிப் போடுகிறார்கள்.

மாடுகள் இரண்டும் கஷ்டப்பட்டு இழுக்க வண்டி விரைகிறது.

சிற்றொழுங்கைகள் கழிந்து,கிரவல் ரோட்டில் வண்டி ஏறியதும், அளவுக்கு மீறய சேறு சகதியால் வண்டியை இழுக்க முடியாமல் மாடுகள் திணறுகின்றன.
மழை இன்னும் தூறிக்கொண்டிருக்கிறது. கிழவி, ஓட்டைக் குடையை விரித்து, உணர்விழந்த தாயையும், இப்போதுதான் பிறந்த பிஞ்சுக் குழந்தையையும் மூடுகிறாள். சாதாரணமாகப் பத்து நிமிடத்தில் கடக்கவேண்டிய ரோட்டைக்கடக்க எவ்வளவோ நேரமாகிவிட்டது.

பிரதான பாதைக்கு வந்ததும்,மாட்டு வண்டி விரைந்து பறக்கிறது.

மாட்டு வண்டியின் வேகமான ஓட்டத்தில் நாகம்மாவின் உடம்பு குலுங்குகிறது. அந்தக் குலுக்கலில் நஞ்சுக்கொடியை வெளிவரவிடாத நாகம்மாவின் பெண்ணுறுப்பிலிருந்த குருதி வழிந்து அவள் உடுத்திருந்த சேலையில் கோலம் போடுகிறது.

ஹாஸ்பிட்டலை அடைந்து நாகம்மாவை வார்ட்டில்ச் சேர்த்தபோது நாகம்மாவின் மெல்லியமூச்சு அடங்கிக்கொண்டிருந்து.

ரோட்டுக்கரையில் வண்டி நனைந்து கொண்டிருந்தது. பக்கத்துக் கட்டிடத்து ஓரத்திலொதுங்கியமர்ந்த கந்தன் பீடி புகைத்துக்கொண்டிருக்கிறான். பியதாசவும் முருகனும் நாகம்மாவைச் சேர்த்திருக்கும் வார்ட் பக்கம் போகலாமா என்று காவலாளியைக் கேட்க அவன் அவர்களை விரட்டுகிறான். முருகனுக்குக் காவலாளியின் செய்கை ஆத்திரத்தையுண்டாக்குகிறது.

அவர்கள் திரும்பிவந்து கந்தனுடன் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

‘நீங்கள் ஏன் இந்த மழையிலயும் குளிரிலயும் என்னோட கஷ்டப்படவேணும், நீங்க நாளைக்கு வேலைக்குப் போகவேணும். வீட்ட போங்கோ, பாவம் செய்த நான் அனுபவிக்கிறன்’ முருகன் பெருமூச்சுடன் சொல்கிறான்.

‘இஞ்ச நாங்க யாருக்கும் ஒரு பாவமும் செய்யல்ல. மற்றவையின்ர ஏமாற்றலும் சுரண்டலும்தான் எங்கள வதைக்குது’ பியதாச சொல்கிறான்.

வானம் இருண்டு கிடக்கிறது. வானத்தில் மருந்துக்குக்கூட ஒரு நட்சத்திரம் கிடையாது. பியதாசவும் கந்தனும் முருகனை விட்டுப் போகவில்லை. கொஞ்ச நேரம் இருந்து நாகம்மாவின் நிலையைப் பார்த்து விட்டுப்போவதாகச் சொல்கிறார்கள்.

முருகனுக்கு,நாகம்மா வார்ட்டில் உயிருக்கு மன்றாடும்போது, அவளைப் போய்ப் பார்க்காமல்,வெளியில் பொறுமையாயிருக்கு மனம் கேட்கவில்லை.
மீண்டும் காவற்காரனைக் கெஞ்சுகிறான்.

காவற்காரன் அவனை விரட்டுகிறான். முருகனின் கையிலிருந்த ஒரு ருபாய் காவற்காரனின் கையில் லஞசமாகத் திணிபட, அவன் முருகனை வார்ட்டின் உள்ளுக்கு விடுகிறான்.

‘சரி கெதியாய்ப்போயிட்டு வா’.

முருகன் ஓட்டமும் நடையுமாகத் தன்னை யாரும் வெளியில் துரத்திவிடுவார்களோ என்ற பயத்தில் நாகம்மா இருக்கும் வார்ட்டை நோக்கி விரைகிறான்.

வார்ட்டில் ஏதோ ஆரவாரம், பிரசவ அறையினுள் இருந்து ஓடிவரும் நேர்ஸ் அவனை ஏதோ கேட்கிறாள்.

‘பிளட், பாஸ், டிக்கட்’ ஏதோவெல்லாம் நேர்ஸ் சொல்கிறாள்.அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.

‘மிஸ்’அவன் அந்த நேர்ஸைக் கெஞ்சலுடன் பார்க்கிறான்.

‘நீ இப்ப வார்ட்டுக்குக்கொண்டு வந்த நாகம்மாவின் புருஷனா?’ அவள குரலில் அவசரம்.

‘ஓம் மிஸ்,’ அவன் குரலில் நடுக்கம்.

‘உம்முடைய மனுசிககுப் பிரசவ நேரம் அதிகம் இரத்தம் போயிருக்கு, இரத்தம் குடுக்கவேணும், யாரையும் கூட்டிக்கொண்டு வரமுடியுமா?’ அவள் அவசரப் படுகிறாள்.

‘ ஓம் மிஸ்’ அவன் பதறுகிறான்.

‘ ஆனால், இரத்தம் குடுத்தாலும் நாகம்மாவைக் காப்பாற்ற முடியுமோ தெரியாது. ஏன் நீங்கள் நேரத்துக்கு நாகம்மாவை வார்ட்டுக்குக் கொண்டுவரல்ல? இவ்வளவு நேரமும் என்ன செய்தியள்?’

‘மிஸ் கொண்டு வரக் கார் கிடைக்கல்ல…கிரவல் ரோட்டால எங்கட வீட்ட வர ஒரு கார்க்காரனும் சம்மதிக்கல்ல’ அழுது கொண்டு சொல்கிறான் முருகன்.

‘இரத்தம் குடுக்க யாரையும் கெதியாகக் கூட்டிக் கொண்டுவா’ நேர்ஸ் பதட்டத்துடன் சொல்கிறாள்.

‘என்ர இரத்தத்தை எடுங்கோ மிஸ்’ தனது உயிரையும் கொடுத்து நாகம்மாவைக் காப்பாற்ற முருகன் தயார்

‘ உன்ர இரத்தம் மட்டும் போதுமோ தெரியாது நாகம்மாவுக்கு எக்கச் சக்கமாக இரத்தம் போயிருக்கு’

ஓட்டமும் நடையுமாகத் தன் சினேகிதர்களான பியதாசவையும் கந்தனையும் நாகம்மாவுக்கு இரத்தம் கொடுக்க இழுத்துக்கொண்டு வருகிறான் முருகன்

அவர்கள் வார்ட்டுக்கு வரவும், டாக்டர் நாகம்மாவின் அறையிலிருந்து சோர்ந்த முகத்துடன் வரவும் சரியாக இருக்கிறது.

‘ஐயா நாகம்மாவுக்க இரத்தம் குடுக்க வந்திருக்கம்’ முருகன் ஓடிவந்த வேகத்தில் மூச்சுவாங்கச் சொல்கிறான்.

‘நீ நாகம்மாவின் புருஷனா?’ டாக்டர் கேட்கிறார்.

‘ஓம் ஐயா’

‘உங்களுக்கென்ன மூளையில் களிமண்ணா இருக்கு? நேர காலத்திற்குப் பிரசவப் பெண்ணைக் கொண்டு வாறத்துக்கு என்ன பிரச்சினை? முக்கால் உயிர் போனபிறகு வார்ட்டுக்குக் கொண்டுவந்தால்…….’ டாக்டர் சொல்லிக் கொண்டே போகிறார்

மூவரும் சிலையாக நிற்கிறார்கள்.

நேர்ஸ் வருகிறாள். ‘ நாங்கள் என்ன செய்யலாம்? நீங்க நேரகாலத்துக்குக் கொண்டு வராததால எங்களால நாகம்மாவைக் காப்பாற்ற முடியல்ல’

முருகன் பிரமித்துப்போய் நிற்கிறான்.

பொழுது புலர்ந்து கொண்டு வருகிறது. பெருமழையில் நனைந்த வண்டிலின் பக்கம் போகிறார்கள். நாகம்மாவின் பிணத்தை வண்டிலில் ஏற்றவேண்டும்.

முருகனின் விழிகள்,வண்டியிற் சில்லில் சிக்குண்டு கிடக்கும் பத்திரிகையிலுள்ள செய்தியில் நிலைகுத்தி நிற்கின்றன.

‘வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் நலத்திற்காக,கொழும்பிலிருந்து கண்டிக்குப் புதிய பாதை போடப்படும்’

பணம் படைத்தவர்களுக்குப் புதிய சொகுசுப் பாதை!

முருகன் சிலையாக நிற்கிறான். ஏழைகளின் உயிர் காப்பாற்ற, ஏழைகளுககுச் சரியான பாதைகளை யார் போடுவார்கள்?

பொய் சொல்லிப் பொதுமக்களை ஏமாற்ற அவசியல்வாதிகள் மலிந்த நாட்டில் ஏழைகளுக்கு வழியமைப்பார் யார்?

(யாவும் கற்பனையே)

சிந்தாமணி பிரிசுரம். இலங்கை 1971.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *