ஏழையின் தாஜ்மகால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 1,766 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கட்டி முடியப்போகிறது தாஜ்மகால். இது பூமியில் நட்டுவைத்த நிலவா என்று நாளை திகைக்கப் போகிறது உலகம். “இந்தச் சமாதியில்தான் காதல் உயிரோடிருக்கிறது” என்று கொண்டாடப் போகிறார்கள் கவிஞர்கள். 

பரிவாரங்களும் அரசப் பிரதிகளும் கட்டடக் கலைஞர்களும் புடைசூழ, யானையின் அம்பாரி மீதிருந்து தாஜ்மகாலின் நேர்த்தியில் நெஞ்சைப் பறிகொடுத்துக்கொண்டிருந்த சக்கரவர்த்தி ஷாஜகான் அந்த வெள்ளைச் சோகத்தை விரும்பி அனுபவித்தார். 

“உலகக் காதலுக்கு அழப்பட்ட ஆகப்பெரிய கண்ணீர்ச் சொட்டு இது தான்”. 

வாய்விட்டுச் சொல்லி வருந்தி வருந்தி மகிழ்ந்தார் சக்கரவர்த்தி. ஆகாயத்தையே பின்புலமாய் அமைத்ததுதான் தாஜ்மகாலின் கம்பீரத்துக்குக் காரணமென்றும் கருதிக்கொண்டார். நீலவான்  நெடுந்திரையில் வரையப்பட்ட கல்லோவியம் இதுவென்றும் முணுமுணுத்துக்கொண்டது அரச உதடு. 

“இன்னும் சில மாதங்கள் அவகாசம் வேண்டும் ஆலம்பனா. தோட்டங்களும் நீரூற்றுகளும் நிர்மாணிக்கப்பட்டுவிட்டால் தாஜ்மகால் முற்றிலும் நிறைந்துவிடும்”. 

சொல்லிலும் உடலிலும் பணிவுகாட்டிச் சொன்னார் தலைமைக் கட்டடக் கலைஞர் உஸ்தாத் இஸா அஃபாண்டி. 

“கட்டடச் சிற்பியே! இங்கிருந்து காணும்போது இத்துணை பெரிய மகாலுக்கு நுழைவாயில் மட்டும் சிறிதென்று தோன்றுகிறதே… சாஸ்திர விதியே அதுதானா? அல்லது என் கண்களுக்கு இடமாறு தோற்றப்பிழையா?” 

அம்பாரி யானையின் அருகே ஓர் அரபுக் குதிரையில் அமர்ந்திருந்த உஸ்தாத் இஸா அஃபாண்டி புன்னகையோடும் பொறுப்போடும் பதில் சொன்னார். 

“மன்னிக்க வேண்டும் சக்கரவர்த்தி. தங்கள் காதலின் உளவியலுக் கேற்பவே நான் உருவம் கொடுத்திருக்கிறேன்” 

“எப்படி?” 

“காதல் உள்ளே நுழைவது கண் என்ற சிறுவாசல் வழியேதான். உள்ளே நுழைந்த காதல் போகப்போக வளர்கிறது; பிறகு ஆகாயமளவு விரிகிறது. அதுபோலவே சிறுவாசலில் தொடங்கும் தாஜ்மகால் உள்ளே செல்லச் செல்ல விரிந்து கொண்டே போகும். பிறகு அண்ணாந்து பார்த்தால் கூரை தெரியாத அளவு விதானம் விஸ்வரூபம் எடுக்கும். பேரரசியைத் தாங்கள் முதலில் பார்த்தது சந்தையில் ஒரு சிறிய கண்ணாடிக் கடையில்தான். அதுதான் இன்று தாஜ்மகாலாய் விரிந்து நிற்கிறது. எண்சாண் உடம்பிற்குக் கண்கள் சிறியவைதாமே. ஏன்…? ஆலம்பனா அமர்ந்திருக்கும் யானைக்கும் கூடக் கண்கள் சிறியவைதாம்”. 

சொன்ன பதிலில் திருப்தியடைந்தவராய் சோகரசத்தோடு புன்னகைத்துக் கொண்டார் சக்கரவர்த்தி ஷாஜகான். 

அந்தநேரத்தில் மகாலுக்குள் தடதடவென்று சத்தம் கேட்டது. காவலர்கள் யாரையோ தூரத்தில் துரத்துவதும் தெரிந்தது. காட்டின் பூகோளமறிந்த குரங்குபோல் கட்டடத்தின் நெளிவு சுளிவு அறிந்தவனாய்க் காவலர்களுக்குச் சிக்காமல் சிரித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான் நடுத்தர வயதுகொண்ட அழுக்கு மனிதன் ஒருவன். காவலர்களின் காலடி ஓசையிலும் தப்பிச் செல்லுகிறவனின் சிரிப்பொலியிலும் கவனம் சிதைந்த பேரரசர் ‘யாரவன்’ என்றார் சற்றே உக்கிரமாக. 

“மகாலின் வளாகத்திற்குள்ளேயே சுற்றித்திரியும் ஒரு பைத்தியம். குரங்குகளையெல்லாம் துரத்தியடித்த எங்களால் இந்தப் பைத்தியத்தை வெளியேற்ற முடியவில்லை. ஆலம்பனா ஆணையிட்டால்…’ உயரத்திலிருக்கும் சக்கரவர்த்திக்குக் கேட்கவேண்டுமே என்று சற்றே உரத்தகுரலில் சொன்னார் தலைமைக் காவலர். 

தாடி தடவிக்கொண்டே சற்றே யோசித்த சக்கரவர்த்தி “வேண்டாம்! பைத்தியத்தைக் கொல்வது பாவம்” என்றார். 

இன்னொரு குதிரையில் அமர்ந்திருந்த லாகூர் சிற்பி உஸ்தாத் அகமதுவை விளித்த சக்கரவர்த்தி தாஜ்மகால் மீது கோபுரம்போல் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நான்கு மினார்களையும் சுட்டிக் காட்டினார். 

“அவை நான்கும் செங்குத்தாக நில்லாமல் சற்றே சாய்ந்திருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. என் பார்வை சரியா? தவறா?”. 

“மிகச் சரி ஆலம்பனா. அவை நான்கும் திட்டமிட்டே சாய்வாகக் கட்டப்பட்டுள்ளன. ஒருவேளை காலப் புயலில் அவை சாயநேர்ந்தால் தாஜ்மகாலின் தலை மீது விழுந்துவிடக்கூடாது; வெளியே சென்று விழ வேண்டும் என்பதற்குத்தான் அந்த ஏற்பாடு”. 

“சபாஷ்! பாராட்டுகிறேன். உங்கள் புகழ் சாயப்போவதில்லை”.

“தங்கள் சாம்ராஜ்யத்தைப்போல” 

அந்தி சாய்ந்தது; மெல்லிய இருள் சூழ்ந்தது; இருளால் தாஜ்மகாலை மூழ்கடிக்க முடியவில்லை. வானத்தில் தொலைந்த நிலா பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டு குழம்பிக்கிடந்தன நட்சத்திரங்கள். 


அன்று இரவு சக்கரவர்த்தி ஷாஜகான் தூங்கவில்லை. 

தாஜ்மகாலின் சுவர்களிலும் கதவுகளிலும் பதிப்பதற்காகப் பாரசீகத்திலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் திபெத்திலிருந்தும் தேர்ந்தெடுத்துக் கொண்டுவரப்பட்ட ரத்தினங்களும் மணிகளும் வைரங்களும் அறைமெழுகும் அரைவெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்த காட்சி அந்த இரவில் அரசரோடு சேர்ந்து ஆயிரம் கண்கள் விழித்திருப்பதாய்த் தோற்றமளித்தது. 

“இன்னும் சில மாதங்களில் நிறைவேறிவிடும் என் நெடுங்கனவு. என் காதல் அரசியே மும்தாஜ்! இந்த பூமிக்கு வந்துபோன பெண்களில் உன்னைப்போல் நினைவுச் சின்னம் கொண்ட ஒருத்தி உனக்கு முன்னும் இல்லை; பின்னொருத்திக்கு வாய்க்கப்போவதுமில்லை. இந்த வரலாற்றுப் புகழாளி முதலும் கடைசியுமாய் நீயேதான். நினைத்தால் நெஞ்சு விம்முகிறது. கொஞ்ச உழைப்பா? ஆயிரம் யானைகளின் இழுதிறன் – இருபதாயிரம் பணியாளர்களின் சிவப்பு வேர்வை – இருநூற்று ஐம்பத்திரண்டு மாதங்களின் கால முதலீடு – ஐம்பது இலட்சம் பொருட்செலவு – பத்துமைல் நீளத்தில் நெடுஞ்சாரம் உலகக் கட்டடக் கலைஞர்களின் மூளைச்சாறு – எல்லாவற்றையும் இயக்குவதற்கு என் இருதயத்தின் மத்தியில் எரிந்து கொண்டேயிருக்கும் காதலின் மகாஜோதி -அனைத்துக்கும் மேலாய் காதலுக்குக் கஜானாவைத் திறந்துவிட்ட இந்த மொகலாய மன்னனைச் சகித்துக்கொண்டிருக்கும் இந்துஸ்தானம். எப்படியோ முடிந்துவிட்டது தாஜ்மகால். கண்ணே! மும்தாஜ்! உலகத்தின் உயரமான மரணம் நம்முடையதாய்த்தான் இருக்க முடியும்’. 

படுக்கையில் விழுந்து கண்களை மூடியதும் அதிகபட்சம் ஏழு நிமிடங்களுக்குள் உறங்கிவிட்டால் உடம்பிலும் மனசிலும் குறையில்லை என்று பொருள். ஆனால் 70 நிமிடங்களுக்கு மேலும் அவரைப் புரட்டிப் புரட்டிப் போட்டுத் தூக்கத்தைத் துண்டித்துக்கொண்டேயிருந்தது ஒரு காட்சி. தாஜ்மகாலில் கேட்ட ‘தடதட’ சத்தம் அவர் காதுகளில் தேய்ந்து தேய்ந்து ஒலித்தபோதெல்லாம் – நகரும் மேகமாய் அழித்து அழித்து எழுதப்படும் கோட்டுச் சித்திரமாய் உறக்கத்தின் உபத்திரவமாய் அரைத்தூக்கக் கனவில் வந்துவந்து போய்க்கொண்டிருந்தான் அந்தப் ‘பைத்தியக்காரன்’. 

யாரவன்? ஏன் என் இரவின் மீது கத்தி வீசுகிறான்? 


மற்றுமொரு மாலை நேரம். யமுனா நதிக்கரையில் நின்று, சுழித்துக்கொண்டோடும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சக்கரவர்த்தி. தாஜ்மகாலின் வாசலில் திருக்குர்ரான் வாசகம் பொறிக்கும் அமானாத்கானும் படைத்தளபதிகளும் மற்றும் சில அரசவைக் கவிகளும் சக்கரவர்த்தியைச் சூழ்ந்திருந்தனர். சற்றே தலை நிமிர்ந்து தாஜ்மகாலைக் கடந்துபோகும் மேகங்களைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த ஷாஜகான் “தண்ணீர் ஏன் கீழே இருக்கிறது? மேகம் ஏன் மேலே இருக்கிறது?” என்ற கவித்துவமான கேள்வியை அரசவைக் கவிஞர்கள் மேல் வீசினார். எதிர்பாராத கேள்வியில் அதிர்ந்துபோன கவிகளில் ஒருவர் சற்று நேரத்தில் தன்னிலை அடைந்து, ‘அலைகளை அனுப்பி சக்கரவர்த்தியின் பாதங்களுக்கு சலாம் போடத்தான் தண்ணீர் கீழே இருக்கிறது. தாஜ்மகாலைப் புனித நீராட்டத்தான் மேகம் மேலே இருக்கிறது’ என்று சமாளித்தார். 

அது எங்கேயோ கேட்ட குரல் என்ற போதிலும் சக்கரவர்த்தி தலையசைத்ததால் எல்லாரும் ‘சபாஷ்’ என்றார்கள். 

‘எனக்கு இன்னொரு கனவு இருக்கிறது அமானாத்கான்’ என்றார் ஷாஜகான். 

‘நனவாக்கக் காத்திருக்கிறோம்’ என்றார் அமானாத்கான். 

“அதோ யமுனையின் அந்த மறுகரையில் தாஜ்மகாலுக்கிணையாக இன்னொரு மகால் எழுப்பப்பட வேண்டும். அது முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட வேண்டும். எனது நினைவிடமாக அது திகழ வேண்டும். உலகம் அதை ‘ஷாஜ்மகால்’ என்று அழைக்க வேண்டும்”. 

“ஆகா அற்புதமான கனவு. நிச்சயம் நிறைவேறும்” 

“நிறைவேறும் அல்லாஹ் என் ஆயுளையும், மகன்கள் என் அதிகாரத்தையும் பறிக்காதிருந்தால்” 

திடீரென்று மின்னல்போல் சக்கரவர்த்திக்கு முன்னால் தோன்றிய பைத்தியக்காரன் ‘அப்படியானால் அலீமாவுக்கு யார் மகால் ஓட்டுவார்கள்?’ என்று துடுக்காகக் கேட்டுவிட்டு அவரையே வெறித்து விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். முகத்துக்கு வெளியே நின்ற உறுப்பாகப் பிதுங்கி நின்றன அவன் கண்கள். 

“இந்தப் பைத்தியத்தை இழுத்துப் போங்கள்” என்று படைத்தலைவன் உத்தரவிடுவதற்குள் ஓடிவந்த காவலர்கள் கோழிக் குஞ்சைப் பருந்து இடுக்குவதுபோல் கிடுக்கிப்பிடிபோட்டு அவனை இழுத்துப்போனார்கள். 

விடைபெறும் போது சக்கரவர்த்தி படைத் தலைவனின் காதோடு சொல்லிவிட்டுப் போனார் .

“இவன் பைத்தியமில்லை; இவனைப் பற்றிய முழுவிவரமும் நாளை எனக்கு வந்தாக வேண்டும். இது பாதுஷாவின் கட்டளை”. 


“ஆலம்பனா! அவன் பெயர் இப்ராகிம். அவன் முழுக்கப் பைத்தியமில்லை. நினைவுகள் வந்து வந்து போகின்றன. நினைவிழக்கும்போது தொடர்பில்லாமல் உண்மை பேசுகிறான். நினைவுள்ளபோது உண்மை பேசிவிடுவோமோ என்று அஞ்சுகிறான். இதுவரை முயன்று சேகரித்த சில தகவல்களைச் சக்கரவர்த்திக்குச் சமர்ப்பிக்கிறேன். ஆக்ரா அருகிலுள்ள பதன்பூர் அவன் சொந்த ஊர். அவன் தந்தை தௌலத்கான் வளையல் வியாபாரி. வளையல் கடையில் வேலை பார்த்து வந்தவன் எதிர் வரிசையிலிருந்த செருப்புத் தொழிலாளி பிர்தௌசியின் மகள் அலீமாவைக் காதலித்தான். காதல் முற்றிவிட்டது. ஒருவர்மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தார்கள். தந்தை தௌலத்கான் அதை விரும்பவில்லை. “மூன்று ஆண்டுகள் அவளைப் பிரிந்திரு; அதன் பிறகும் காதல் உறுதியானால் நிக்காஹ் செய்யலாம்” என்று நிபந்தனை விதித்த தந்தை அவனை மொகலாயப்படையில் சேர்த்துவிட்டார். தாங்கள் அகமத் நகர் மீது போர்தொடுத்தபோது ஆலம்பனாவின் படையில் இவனுமிருந்தான். அகமத் நகர் பாசறையில் பேரரசியார் மும்தாஜ் இறந்தபோது காவல் புரிந்தவர்களில் இப்ராகிம் ஒருவன். பர்கான்பூரில் அடக்கம் செய்யப்பட்ட பேரரசியாரின் திருவுடல் தோண்டியெடுக்கப்பட்டு இன்றைய தாஜ்மகாலின் அடித்தளத்தில் மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்ட படைக்குழுவில் இப்ராகிம் இருந்தான். அரசியாரின் நல்லடக்கத்திற்குப் பிறகு மீண்டும் படைமுகாமுக்கே அனுப்பப்பட்டான். அதன் பிறகு மனநலம் பாதிக்கப்பட்டதால் படைநீக்கம் செய்யப்பட்டான். அன்று முதல் இன்று வரை தாஜ்மகால் வளாகத்தையே சுற்றிச் சுற்றி வருகிறான்”. 

“அது சரி… அலீமா என்னவானாள்?” 

”அதைச்சொல்ல மறுக்கிறான்; கேட்டால் அழுகிறான். அரசு ஆவணங்களிலும் அலீமா என்ற பெயருக்குத் தொடர்ச்சியில்லை”. 

“அவனுக்குத் தீங்கு செய்யாதீர்கள். உங்கள் கண்காணிப்பில் அவன் பத்திரமாயிருக்கட்டும். தாஜ்மகால் நிறைவுற்றதற்கான விருது விருந்து முடியட்டும். அதன்பின் அவனை அழைத்து வாருங்கள். என்னிடம் அவன் உண்மை சொல்லுவான்”. 

“ஆணை ஆலம்பனா” சக்கரவர்த்தியிடமிருந்து படைத்தலைவன் விடைகொண்டான். 


தாஜ்மகால் தோட்டத்தில் விருது விருந்து தொடங்கியது. மயிலாசனத்தில் வந்தமர்ந்தார் சக்கரவர்த்தி ஷாஜகான். வெனிஸ் நகரத்துப் பெருந்தச்சன் வெரோனியா துருக்கியக் கட்டடச் சிற்பி உஸ்தாத் இஸா அஃபாண்டி – பாரசீகக் கைவினைக் கலைஞர் அமானாத்கான் – லாகூரின் பெருஞ்சிற்பி உஸ்தாத் அகமத் ஆகியோரும் – அரசுப் பொறியாளர்களும் – கட்டடக் கலைஞர்களும் பேரரசர் கையால் வழங்கப்படும் விருதுக்குக் காத்திருந்தார்கள். மந்திரிப் பிரதாணிகளும் நகரத்தின் பெருவணிகர்களும் தனவந்தர்களும் கவிஞர்களும் விருந்துக்குக் காத்திருந்தார்கள். 

ஒரு வண்ணப் பறவையாய் அங்குமிங்கும் பறந்து பறந்து ஏற்பாடுகளைச் சீர் செய்துகொண்டிருந்தாள் ஷாஜகானின் மூத்த மகள் ஜஹானாரா பேகம். மெல்லியதொரு ஷெனாய் அந்தச் சூழலை மெழுகிக்கொண்டிருந்தது. 

மூத்த மகன் தாராவின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை மூன்றாம் மகன் ஔரங்கசீப்பிடம் காணமுடியவில்லை. தாஜ்மகால் என்பது தேச விரயம் மற்றும் மத விரோதம் என்பது அவனது வருத்தம் தோய்ந்த கருத்து. 

ஜஹானாரா கை காட்டியதும் ஷெனாய் அணைந்தது; பேரரசர் எழுந்தார். 

“என் தனிப்பட்ட சோகத்தைப் பொது சோகமாகவும் பொது சோகத்தைக் காதலின் பெருமிதமாகவும் மாற்றிக்காட்டிய அனைவரையும் பாராட்டுகிறேன். இது கல்லறை அல்ல; காதலின் சயனமண்டபம். அங்கே என் காதலி தனியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறாள்…” என்று சக்கரவர்த்தி சொல்லிமுடிப்பதற்குள் ‘இல்லை பாதுஷா… பேரரசி தனியாகத் தூங்கவில்லை. துணைக்கு என் அலீமாவும் தூங்கிக்கொண்டிருக்கிறாள்’ என்று கூவிய பெருங்குரல் தாஜ்மகாலின் குவிமாடத்திலிருந்து கேட்டது. 

மினாரைக் கட்டிக்கொண்டு கத்திய பைத்தியக்காரன் மீது எல்லார் கவனமும் கவிந்தது. 

“சக்கரவர்த்தியே கேளுங்கள். சர்க்கார் அதிகாரிகளே கேளுங்கள். என் காதலி அலீமா ஒரு செருப்புத் தொழிலாளியின் மகள். அவளும் நானும் உயிருக்குயிராய்க் காதலித்தோம். இந்த ஆக்ராவின் தெருக்களில் எங்கள் பாதம்படாத இடமில்லை. பிரிக்கப்பட்டோம். மொகலாய ராணுவத்தில் சேர்ந்து நான் மண்காத்தேன். என்னைப்பிரிந்த அவளோ இந்தக் கல்லறைக்கு மண் சுமந்தாள். காதல் வெறியோடு திரும்பி வந்தேன். காணவில்லை என் கண்மணியை. பூமியெல்லாம் தேடிப்பார்த்தேன் அவளோ பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்தாள். எங்கு தெரியுமா? இதோ இந்தத் தாஜ்மகாலின் அஸ்திவார ஆழத்தில். இந்தத் தாஜ்மகாலில் மும்தாஜூக்கு முன்பே புதைக்கப்பட்டவள் என் ஆசை அலீமாதான். அவளைப் பலியிட்டது உங்கள் கட்டடக் கலையின் மூட நம்பிக்கையா? இல்லை உங்கள் அதிகார வர்க்கத்தின் காமச்சேட்டையா? எதுவென்று தெரியாது; ஆனால் இரண்டில் ஒன்று நிஜம். கண்ணால் கண்ட சாட்சிகள் செத்துவிட்டார்கள்; இப்போது எனக்கு சாட்சி இல்லை. அதோ தாஜ்மகாலை வருடிப்போகும் யமுனா நதியின் அலைகளைக் கேளுங்கள். கதறிக்கொண்டோடும் காற்றைக் கேளுங்கள். உண்மை சொல்லும். உங்களுக்கு இது உடல் புதைத்த இடம்; எனக்கோ என் உயிர் புதைத்த இடம். உங்களுக்கு இது தாஜ்மகால்; எனக்கோ இது அலீமாமகால்”. 

“பிடியுங்கள் அந்தப் பைத்தியக்காரனை; சிரச்சேதம் செய்து விடுங்கள்” 

தாஜ்மகால் மீது அவன் தாறுமாறாக ஓடினான். காவலர்கள் துரத்தத் துரத்தக் கைக்குச் சிக்காத காற்றைப்போல் ஓடினான். மகாலின் மறுபக்கமடைந்தான். சுழித்துக்கொண்டோடிய யமுனை நதி அவனை ‘வா வா’ என்றது; குதித்தான்; வெள்ளத்தில் கரைந்துபோனான். 

ஆரோக்கியமில்லாத மௌனம் ஒன்று நிலவியது; சோக விருந்தாய் முடிந்தது. யாரும் யாரோடும் பேசவில்லை. கட்டடச் சிற்பி உஸ்தாத் இஸா அஃபாண்டியை சைகையில் அழைத்தார் சக்கரவர்த்தி. 

“தாஜ்மகால் போதும். இன்னொரு ‘ஷாஜ்மகால்’ வேண்டாம்; ஏழைகள் பலியாக வேண்டாம். என்னை மும்தாஜுக்குப் பக்கத்திலேயே புதைத்துவிடுங்கள்”. 

தாஜ்மகாலை அண்ணாந்து பார்த்தார் ஷாஜகான். சோகத்தின் நிறம் கருப்பென்று யார் சொன்னது? வெள்ளையும் கூட.

– அக்டோபர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *