ஏதோ ஒன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 4,926 
 

இருள் வானைக் கீறிக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது.

எவ்வளவு உண்மை, மறுக்கவே முடியாத பிரத்தியட்சமான உண்மை.

அடிவானில் ஒளி ஓடுங்கி, அவியத்தான் வேண்டுமா?

தூரத்தே பெரும் கட்டிடங்களின் மங்கற் கோடுகள். இருளுடே தெரிகின்றன. அவற்றிற்கும் அப்பால், சிவனொளிபாத மலையின் சிகரத்து மின் விளக்கு, நம்பிக்கை தரும் ஒளியாக மின்னுகின்றது.

நம்பிக்கை தரும் அச்சிறு ஒளியின் பின்னால், அதனோடு இணைந்து, மாபெரும் மலை, உண்மைப் பொருள் இருக்கிறது.

எரி வெள்ளி…?

முழுவதும் ஒளிதான், ஆனால் அதன் பின், – கண்ணைப் பறித்து மின்னி அவியும்போது அதன் பின் – சூனியம் தான் மிச்சம்.

என் கொள்கைகள் எரி வெள்ளியா?

‘சகல பிரச்சனைகளுக்கும் காரணம், அடிப்படைக் காரணம், என்ன தெரியுமா?

அவன் என்னை நிமிர்ந்து பார்க்கிறான். அவன் பார்வையில், என் பேச்சில் இருந்த படபடப்பு இல்லை. அமைதி உருகி வருகிறது.

‘நீயே… சொல்லு….!’

‘அடிப்படைக் காரணம் பொருளாதாரக் குறைவுதான்….! ஒருவன் அளவிற்கு அதிகமாக உண்டுகளித்கும்போது, இன்னொருவன் ஒருவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல் தவிக்கிறான்! ஒருவன் ஆடம்பரமாகக் காரிலே பவனி வரும்போது, இன்னொருவன் கொதிக்கும் வெயிலில், தார் சூடு பாதங்களைத் தீய்க்க, செருப்பிற்கே வழியின்றித் தடுமாறுகிறான்! ஒருவனுக்கு அளவுக்குமதிகமான உடைகள்! இன்னொருவனுக்கு தன் மானத்தை மறைக்கவும் ஒரு முழந்துண்டில்லை! ஒருவனுக்கு அரண்மனை போன்ற வீடுகள் பல! இன்னொருவனுக்கு வாழ்வதற்குச் சிறு குடிசையுமில்லை! ஒருவன் பிறர் உழைப்பிலே வாழ்கிறான்! இன்னொருவன் உழைத்து வாழ வழியின்றித் தவிக்கிறான். இந்த நிலையேன்…..? இந்த ஏற்றத்தாழ்வுகளேன்? மனிதர்களுக்குள் ஏற்றவிறக்கங்கள் ஏன்?’

உணர்ச்சி வசப்படுகின்றேன்.

எதிர்த்தரப்பில் அமைதி ‘இந்த மனித பேதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்! வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அமைக்கவேண்டும்! எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் எல்லாத்துறைகளிலும் அளிக்க வேண்டும்!

ஆவேசத்தோடு தொடர்கின்றேன்.

‘அப்போதுதான் எல்லோருக்கும் உணவு கிடைக்கும்! வாழ வீடுகள் கிடைக்கும்!’

இருளினூடே என் கண்கள் துழாவுகின்றன. மலையுச்சியிலமைந்திருக்கும் என் விடுதியிலிருந்து பார்க்கும் போது, பல்கலைக்கழகக் கட்டிடங்கள் மங்கலாகத் தெரிகின்றன.

மேடுகளும், பள்ளங்களும்!

வானில் இங்கொன்றும், அங்கொன்றுமாக நட்சத்திரப் பூக்கள். இரவுச் சாப்பாட்டிற்குரிய அழைப்பு மணி கிணு கிணுக்கின்றது. அவன் எழவில்லை.

‘வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை நான் எதிர்க்கிறேன் என்று நீ எண்ணுகிறாயா?’

நான் அவனைக் கண்ணிமைக்காது பார்க்கிறேன்.

அவன் மெதுவாக எழுந்து சென்று, பலகணிக் கதவைத்திறந்து விடுகின்றான். மென்காற்று இழைக்கிறது!

மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்றுதான் நானும் விரும்புகின்றேன். எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்! ஒருவன் ஒருவேளை சோற்றிற்குத் தவிக்கும்போது, இன்னொருவன் மேலதிகமாக உண்டு சீரழிப்பதை நானும் வெறுக்கிறேன்!…..’

‘அப்படியானால் நீயேன் மொழி, இனம் மதம் என்று திரிகிறாய்?

வானில் இருளின் கருமை அகன்று, தெளிவு தோன்றுகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த நட்சத்திர மலர்கள், வானமெங்கும் இப்போது மலர்கின்றன.

‘அவ்விடத்தில் தான் நீயும், நானும் வேறுபடுகின்றோம்! நீ உணவு மட்டும் தான் வாழ்க்கை என்கிறாய்?’

‘பின் வேறு என்ன?….?’

‘உணவுமட்டும்தான் வாழ்வல்ல! உணவு மடடும்தான் வாழ்வென்றால், மிருகங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்?’

அவன் கேள்வியோடு நிறுத்தி விட்டு, என்னைப் பார்க்கின்றான்:

‘உன் கொள்கைகள் உயர்ந்தவை! நல்லவை! ஆனால் – சிறிது யோசித்துப்பார், தெரிந்தோ, தெரியாமலோ மொழியையும், இனத்தையும், மதத்தையும் காட்டி.., ஒரே நாட்டில் வாழ்கின்ற இன்னொரு சமூகத்தின் மேல் இனவெறியை ஊட்டிவிட்டு, பதவிக்கு வந்த சிங்கள அரசில்;, நாம் வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தைக் காணப் பொதுவுடைமை பேசுவுது சரியா? அப்படிப் பேசிசிக்கொண்டிருந்தால் நம்மினம், நம்மொழி………’

நான் வேகமாகக் குறுக்கிடுகின்றேன்.

‘வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தில், இனம், மொழி?’

இப்பொழுது அவன் குறுக்கிடுகின்றான்:

‘இரு மொழி பேசும் மக்கள் சமூகம் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒரு சமூகம் மட்டும் அதுவும் சிறுபான்மைச் சமூகம் மட்டும், வர்க்கபேதமற்ற சமூகத்தை அடையப் போராடும்போது, அச்சமூகத்தின் மொழி இனம் அழிந்து போய்விடும்! அதுமட்டுமல்ல, எல்லா மக்களும், மொழி, இன மதவேறுபாடுடின்றிப் போராடும் போதுதான் நீ கருதுகின்ற சமூகம் உருவாக முடியும்……!’

என் கண்களில் வெறுப்பு

‘புரிந்து கொள்ளாதவன்!’

‘உணவு மட்டுத்தான் வாழ்க்கையா?’

அவன் திரும்பவும் கேட்கிறான்.

என் தலை திடமாக அசைகிறது.

‘உணவு கிடைத்தால் போதுமா?’

திரும்பவும் கேட்கின்றான்.

‘ஒரு மணிக்கு மேலாகிறது! இன்னும் படுக்காமல் வெளியே என்னத்தை அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கின்றாய்?’

என் அறை நண்பன் கேட்கிறான்.

‘நீ படுத்துக்கொள்! விளக்கை அணைத்து விட்டுப் படு!’

வெளியே இருள் தான். தூரத்தில் சிவனொளி பாதமலைச் சிகர மின் விளக்கு கண்ணைச் சிமிட்டுகிறது.

நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் ஒன்றாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

‘எவ்வளவு ஐக்கியம்!’

இன்னொரு மேசையிலிருந்து அவன், அந்த பிற்போக்குவாதி, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

எனக்குப் பக்கத்தில் ஓரிடம் காலியாக இருக்கிறது.

அதில் ஒரு தமிழ் மாணவனை அழைத்து வந்து இருத்துகிறான், எங்களுக்கு உணவு பரிமாறுகிறவன்.

இந்தத் தமிழ்ப் பண்டிகளை இங்கேன் இருத்துகிறாய்?’ கேட்டவன், என் முன்னிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சிங்கள மாணவன்தான், சிங்களத்தில் தான் கேட்டான்.

என் இதயமேன் துடிக்கிறது? இதயமே நீறற்று வரண்டு போனது போல்….. அடிவயிற்றில் பெரு நெருப்புப் படர்வது போல…..

என்னால் அங்கிருக்க முடியவில்லை. மொழி விளங்காத நண்பர்கள் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் எழுந்து சென்று, ‘அவனு’க்கு முன் அமர்ந்து கொள்கின்றேன்.

அவன் விழிகளில் அதிசயம், கேள்வி.

நான் வேதனையோடு விளக்குகின்றேன்.

அவன் சிரிக்கின்றான்.

‘உணவு மட்டுந்தான் வாழ்க்கையா?’

நானென்ன பதில் கூறுவேன்?

‘உணவு மட்டுந்தான் வாழ்க்கை என்றாயே? அப்படியானால் இங்கே ஏன் எழுந்து வந்தாய்? தமிழ்ப் பண்டி என்று சொன்னானே, அவனுக்கு முன்னாலும் உணவு இருக்கிறது தானே?’

வேதனையோடு தலை குனிகிறேன்.

‘அவன் அப்படிக் கூறியபோது நீ எதையோ ஒன்றை இழந்தது போல உணரவில்லையா?’

உணர்கிறேன், உணர்கிறேன்.

இருள் வானைக் கீறிட்டுக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது.

தூரத்தே சிவனொளிபாதமலைச் சிகரத்து மின் விளக்கு மின்னுகின்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *