கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 9,724 
 
 

விடுதியில் பணிப்பெண் அரினா. பிரதான மாடிப்படியின் கீழ் அவள் வாசம். துப்புரவுப் பணியில் உதவி செய்கிற செரெகா பின் படிக்கட்டின் கீழே வசித்தான். இருவருக்கும் இடையில் நாணத் தக்க உறவு. குருத்து ஞாயிறன்று செரெகாவிற்கு ஒரு பரிசளித்தாள் – இரட்டைக் குழந்தைகள். தண்ணீர் ஒடும், நட்சத்திரங்கள் மின்னும், ஆணுக்குக் காமம், அரினா மீண்டும் வயிறு பெருத்தவளானாள். ஆறாவது மாதம் இது. பெண்ணின் மாதங்கள் வேகமாய் நழுவுகின்றன. இப்போது செரெகா படையில் சேர வேண்டும். என்ன பிரசினை பார். ஆக அரினா போய்ச் சொல்கிறாள்: ‘ செரெகா, நான் உனக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. நான்கு வருஷம் பிரிந்திருப்போம், நான்கு வருஷத்தில், எப்படிப் பார்த்தாலும், இன்னும் இரண்டு மூன்று பேரைப் பெற்றுப் போடுவேன். விடுதியில் வேலை பார்ப்பதே , பாவாடையைத் தூக்கிக் கட்டிக் கொண்டிருப்பது போலத் தான். யார் இங்கே வந்து தங்கினாலும், உன் எஜமானனோ, யூதனோ, யாராயிருந்தாலும்.. நீவரும் போது என் உள்ளெல்லாம் ஒன்றும் சரியாய் இருக்காது. உபயோகித்து வீசிப் போட்ட பெண் நான். உனக்குச் சரிப் பட மேட்டேன். ‘

‘ அப்படித் தான் போல ‘ என்று தலையை அசைத்தான் செரெகா.

‘நிறையப் பேர் என்னை வேண்டும் என்கிறார்கள். காண்ட்ராக்ட் வேலையைச் செய்கிற திரோபிமிச் – ஆனால் ஆள் சரியில்லை. இசாய் ஆப்ரமிச் – நிகோலோ-ஸ்வியாட்ஸ்கி மாதா கோயிலில் காவலாளி..ஆனால் தள்ளாடும் கிழம். எனக்கும் உன் கொலைகாரத் தனமான முரட்டுத் தனம் சலித்து விட்டது. பாவமன்னிப்புக் கூடாரத்தில் சொல்வது போல உன்னிடம் சொல்கிறேன் – எனக்குத் தெம்பு எல்லாம் போய் விட்டது. மூன்று மாதத்தில் இந்தச் சுமையைத் துப்பி விடுவேன். குழந்தையை அனாதை விடுதியில் போட்டு விட்டு கிழவனைக் கல்யாணம் செய்து கொள்வேன். ‘

இதைக் கேட்டதுமே செரெகா , தன் இடுப்பு வாரைக் கழட்டி, பெரிய கதாநாயகன் போல, அவள் வயிற்றில் வீசினான்.

‘ பார்த்து.. ‘ என்கிறாள் அரினா. ‘ கொஞ்சம் மெதுவாகவே அடி. நீ திணித்தது தான் அதிலே.. வேறு யாருடையதும் இல்லை.. ‘

அடியும் நிற்பதில்லை. இந்த ஆண் அழுவதையும் நிறுத்துவதில்லை. பெண்ணின் ரத்தப் பெருக்கும் ஒய்வதில்லை.

ஏசு கிறுஸ்துவிடம் வந்தாள் பெண்.

‘சரி, சரி ‘ என்கிறாள் அவள். ‘ அய்யா ஏசு, மாட்ரிட்-லோவர் விடுதி – அதுதான் த்வெர்ஸ்காயா தெருவில் இருக்கிறதே – அங்கே இருக்கிற அரினா நான். விடுதியில் வேலை பார்ப்பதே , பாவாடையைத் தூக்கிக் கட்டிக் கொண்டிருப்பது போலத் தான். யார் இங்கே வந்து தங்கினாலும், உன் எஜமானனோ, யூதனோ, யாராயிருந்தாலும்.. உன் இன்னொரு அடிமை இங்கே நடமாடுகிறானே,செரெகா, கூட்டியள்ளுபவனின் உதவியாள். போன வருஷம் குருத்து ஞாயிறுக்கு அவனுக்கு ரெட்டைப் பிள்ளையப் பெற்றேன்… ‘

இப்படியாக எல்லாவற்ரையும் விளக்கினாள்.

‘ செரெகா படையில் சேரப் போகவே இல்லை என்றால் ? ‘ என்று ரட்சகர் கேட்டார்.

‘ அதிலேயிருந்து தப்பிக்க முடியாது. போலிஸ்காரன் வந்து இழுத்துக் கொண்டு போய் விடுவான்..நிச்சயம்.. ‘

‘ ஆமாமாம், போலிஸ்காரன்.. ‘ ரட்சகர் தலை குனிந்தார். : ‘அவனைப் பற்றி நினைப்பே வரவில்லை…கொஞ்ச நாளைக்குத் தான் சுத்தமாக இருந்து பாரேன்.. ‘

‘ நாலு வருஷத்துக்கா ? ‘ கத்தினாள் பெண். ‘ நீ பேசுவதைக் கேட்டால் எல்லா ஜனங்களும் மிருக இச்சையை விட்டு விட வேண்டும் என்பாயே. நீ பழைய பல்லவியே பாடு. நான் எப்படிப் பிழைப்பது..இது நடக்காது, வேறு அறிவுள்ளமாதிரி எனக்கு ஏதாவது உபதேசம் செய்.. ‘

ரட்சகரின் கன்னங்கள் சிவந்தன. இந்தப் பெண் உள்ளத்தில் ஏதோ மென்மையான பகுதியைத் தொட்டு விட்டாள். அவர் ஒன்றும் சொல்ல வில்லை.

‘ சரி ஒன்று சொல்கிறேன், என் அருமைப் பாவி, கடவுளின் பணியாள், அரினாப் பெண்ணே, ‘ என்று ரட்சகர் பெரிதாய்த் தம்பட்டம் அடிப்பது போலப் பேசினார். ‘ இங்கே பரலோகத்தில் ஒரு குட்டித் தேவதூதன் இருக்கிறான். பிரயோஜனமில்லாத பயல். அவன் பெயர் ஆல்பிரெட். இப்போதெல்லாம் ஒரே சிணுங்கல் அழுகை தான். ‘ பிரபுவே என்ன செய்து விட்டார்கள் ? என்னை இருபது வயதிலேயே தேவதூதனாய் ஆக்கி விட்டார்கள். ‘ என்று. நான்கு வருஷத்திற்கு அவன் உனக்குப் புருஷனாய் இருப்பான். உன் பிரார்த்தனை, உன் பாதுகாப்பு, உன் ஆறுதல் எல்லாமே அவன் தான். குழந்தையைப் பற்றி நீ கவலைப் பட வேண்டாம். வாத்துக் குஞ்சு கூட உன் வயிற்றில் வராது, ஒரே
குதிப்புத் தானே தவிர அவனுக்கு ஒரு ஈடுபாடும் இல்லை.. ‘

‘ அது தான் எனக்கு வேண்டும் ‘ பணிப்பெண் அரினா நன்றி பொங்க அழுதாள். ‘ இவர்களின் ஈடுபாடு தான் என்னை இரண்டு வருஷத்தில் மூன்று தாவை கல்லறை வரைக்கும் கொண்டு போய் விடுகிறது… ‘

‘ உனக்கும் இனிமையான நிம்மதி கிடைக்கும். கடவுளின் குழந்தை அரினா, உன் பிரார்த்தனையெல்லாம் பாடல் போல் மனதை லேசாக்கட்டும். ஆமென். ‘

அப்படியே தீர்மானிக்கப் பட்டது. ஆல்பிரெட்டைக் கூட்டி வந்தார்கள். ஒல்லியான, மென்மையான பயல். வெளிர் நீலத் தோள்களின் பின்னால் சிறகுகள் , ரோஜா நிற வெளிச்சம் மின்ன, பரலோகத்தில் விளையாடுகிற இரண்டு புறாக்கள் போலத் துடித்தன. அரினா தன் தடித்த கைகளினால் அவனைத் தழுவி, மென்மை பொங்க அழுதாள் – பெண்மையின் மென்மை.

‘ ஆல்பிரெட், என் ஆத்மா, என் ஆறுதல், என் புருஷன்.. ‘

பிரிவின் போது ரட்சகர் தேவதூதனின் சிறகுகளை ஒவ்வொரு இரவும் எடுத்து வைத்து விட வேண்டும் என்று மிக கண்டிப்பாகச் சொன்னார். ஒரு கதவினைப் போல கொக்கியில் தொங்கின சிறகுகள். ஒவ்வொரு இரவும் அவற்றைப் பிரித்து சுத்தமான துண்டில் அதைச் சுருட்டி வைத்து விட வேண்டும். அவை தொட்டால் உடைந்து விடக் கூடும் – குழந்தைகளின் பெருமூச்சில் வேயப் பட்டதில்லையா அது.

கடைசியாக அவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்க, இதற்கென்றே வந்திருந்த பாதிரிமார்கள் ஏகமாய்ப் புகழ்ந்தனர். உணவெல்லாம் கிடையாது – பரலோகத்தில் அதெல்லாம் பழக்கமில்லை. கை கோர்த்தபடி அரினாவும் ஆல்பிரெட்டும் பட்டாலான ஏணியில் பூமிக்கு இறங்கினர். பெட்ரோவ்கா நகரத்திற்கு வந்தனர். அங்கே மிக நல்ல பொருட்கள் தான் கிடைக்கும். பெண்கள் ஆல்பிரெட்டைக் கண்டு வியந்தனர். – அதுவும் பிறந்த மேனிக்கு அவன் -.அவனுக்கு தோலாலான செருப்பும், கட்டம் போட்ட கால் சராய்களும், வேட்டைக்காரர்கள் அணியக்கூடிய சட்டையும், மின்னும் நீல நிற மேல் கோட்டும் வாங்கினாள்.

‘ மிச்சத்தை வீட்டில் பார்த்துக் கொள்வோம்.. ‘ என்கிறாள்.

அன்று வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டாள் அரினா. செரெகா வந்து கூச்சலிட்டான். அவள் கதவைத் திறக்கக் கூட இல்லை. பூட்டின கதவுக்குப் பின்னாலிருந்தே கத்தினாள்.

‘செர்கீ.. கூச்சல் போடாமல் போ என் காலெல்லாம் ஒரே வலி.. ‘

அவன் ஒன்றும் பேசாமல் போய் விட்டான். தேவதூதனின் சக்தி செயல் படவே துவங்கி விட்டது.

மாலைப் பொழுதில் பெரிய விருந்தொன்றைப் படைத்தாள் அவள். பெரிய டாம்பீகம் தான். அரை போத்தல் வோட்கா மது, ஒயின், டானுபே ஆற்று மீனும் உருளைக் கிழங்கும், தேனீர். ஆல்பிரெட் இதையெல்லாம் லெளகீக ருசியுடன் சாப்பிட்டு விட்டுத் தூக்கத்தில் சாய்ந்து விட்டான். இமைப் பொழுதில் அவன் சிறகுகளைக் கழற்றி மடித்து வைத்து விட்டு அவனைத் தூக்கி கொண்டு போய்ப் படுக்கையில் போட்டாள் அரினா.

பாவப்பட்ட , கிழிந்து நைந்த படுக்கையில் பனியாலான அற்புதம் போல, சொர்க்கத்தின் ஒளி வீச்சு வீச அவன் கிடந்தான். நிலா வெளிச்சம்போல வெள்ளி நிற வெளிச்சமும், சிவப்பு நிற வெளிச்சமும் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு சுழன்று , அறையில் மிதந்து அவன் ஒளிரும் பாதங்களில் அடைக்கலமாகின்றன. அரினா அழுகிறாள், மகிழ்ச்சிக் கூத்தாடுகிறாள், பாடுகிறாள், பிரார்த்தனையில் கூவுகிறாள். இந்தப் பாழும் பூமியில் யாருக்குமே கிடைக்காத மகிழ்ச்சியடா உனக்கு, அரினா. ஆசீர்வதிக்கப் பட்டவள் நீ.

துளி விடாமல் அருந்திய வோட்கா இப்போது தான் தன் பலனைக் காட்டத் தொடங்கியது. அவர்கள் தூங்க ஆரம்பித்த வுடனேயே, அவள் புரண்டு, தன் ஆறு மாத வயிற்றை அவன் மேல் போட்டுப் படுத்தாள். தேவதூதனுடன் தூங்குவது மட்டும் அவளுக்குப் போதவில்லை. அவள் அருகில் படுத்துக்கொண்டு யாரும் துப்பவில்லை என்பதோ, முனகவில்லை என்பதோ, இந்த முண்டத்திற்குப் போதுமானதாக இல்லை. தன் வயிறையும் – செரெகாவின் காமம் சுமத்திய வயிறையும் – வெம்மைப் படுத்த வேண்டும் அவளுக்கு. ஆகவே, அவனை முத்தமிட்டுப் புரட்டி, தூக்கத்திலும் கூட குழந்தையைப் போல அவனைக் கொஞ்சி, தன் பருத்த உடலை அவன் மீது இருத்தி, இறுக்க, அவன் அவன் தேவதூதத்தனத்தை விட்டு, சிறகுகளை விட்டு, அவள் படுக்கை விரிப்பில் அழுதான்.

விடிந்தது. மரங்கள் தலை சாய்ந்தன. தூரதேச வடக்குப் பிரதேசக் காடுகளில் மரங்களெல்லாம் பாதிரியாராய் மாற, மரம் ஒவ்வொன்றும், முழங்காலிட்டு அமைதிப் பிரார்த்தனை நடத்தின. மீண்டும் ஒரு முறை பெண் பிரபுவின் சிம்மாசனம் முன்பு நிற்கிறாள் – பரந்த தோள்களில், விரிந்த கைகளில், துவண்டு கிடந்த ஒரு இளவயதுப் பிணம்.

‘ பாருங்கள், பிரபுவே.. ‘

ஏசுவின் மென்மையான மனம் இதற்கு மேல் சகிக்க முடியாமல், கோபத்தில் அந்தப் பெண்ணைச் சாபமிட்டார்.

‘ பூமியில் மற்றவர்க்குப் போலவே உனக்கும் இனிமேலே.. ‘

‘ அதெப்படி, பிரபுவே.. ‘ மெல்லிய குரலில் கேட்டாள் அந்தப் பெண். ‘ என் உடம்பைக் கனக்கப் பண்ணினவள் நானா ? நானா வோட்காவைக் காய்ச்சினேன் ? நானா பெண்ணின் ஆன்மாவைத் தனிமையாய், முட்டாள்தனமாய்ப் படைத்தேன் ? ‘

‘ நான் உன்னைப் பற்றிக் கவலையே படவில்லை, முட்டாள் பெண்ணே, என் தேவதூதனை இப்படி நசுக்கிப் போட்டாயே.. சாக்கடைச் சகதியே.. ‘

அரினா மீண்டும் பூமியில் வீசி எறியப் பட்டாள். அதே தெவெர்ஸ்காயா தெரு. அதே மாட்ரிட்-லோவர் விடுதி. அங்கே தான் அவளுடைய வாழ்நாள் கழிய வேண்டும் என்று சபிக்கப் பட்டவள். அங்கேயோ வானமே எல்லை. செரெகா அவன் கடைசி நாட்களைக் குடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தான் – படை வீரன் ஆகப் போகிறானே. காண்ட்ராக்டர், கோலோமா நகரிலிருந்து அப்போது தான் திரும்பியவன், பருத்த அரினா மீது ஒரு பார்வை. சொன்னான், ‘ அட உன் சின்னூண்டு வயிறு.. ‘ மேலும் பேசிச் சென்றான்.

இசாய் ஆப்ரமிச் , கிழட்ட்டுப் பயல், இந்தச் சின்னூண்டு வயிறைக் கேள்விப் பட்டவன், பல் போன வாயில் மூச்சைக் கஷ்டப் பட்டு விட்டுக் கொண்டபடி வந்தான்.

‘ இதெல்லாம் ஆன பின்னால், உன்னை நான் சட்டப் படி கல்யாணம் செய்து கொள்ள முடியாது. மற்றவர்கள் போவே உன்னுடன்… ‘

கிழட்டுப் பயல், இப்படியெல்லாம் நினைக்கிற வயசா ? மண்ணுக்குள் புதையுண்டு போக வேண்டியவன். அவனும் கூட அவள் மீது காரித் துப்பவேண்டியது தான். எல்லாருமே – சமையல் கட்டுப் பயல்கள், வியாபாரிகள், வெளிநாட்டுக் காரர்கள் – ஏதோ சங்கிலியை அறுத்தெறிவது போல அவளைக் கத்தரித்தார்கள். வியாபாரி- அவனுக்கோ இதெல்லாம் ஒரு விளையாட்டு.

இது தான் என் கதையின் முடிவு.

அவள் மருத்துவ விடுதியில் கிடப்பதற்கு முன்னால் – மூன்று மாதமாகி விட்டதே – ஒரு நாள் கொல்லைப் புறம் போய், துப்புரவு ஆட்களின் அறைக்குப் பக்கத்தில் நின்ற படி, அவளுடைய பெரிய வயிறை, பட்டுப் போலப் பரந்த வானத்தைப் பார்க்க உயர்த்தி முட்டாள் தனமாகச் சொன்னாள்: ‘

கடவுளே பார் என் வயிற்றை. ஏதோ அவரைக்காய் விதையைப் பிதுக்குவதைப் போல பயல்கள் இதை அடிக்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் ? வேண்டாம், எனக்குத் தெரிந்து கொள்ள ஆசையும் இல்லை.. ‘

இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், ஏசுவின் கண்ணீர் அரினாவைக் கழுவ அவர் அவள் முன் பிரசன்னமானார்.

‘ என்னை மன்னித்து விடு, நான் பாவிக் கடவுள். உன்னை என்ன பாடு படுத்தி விட்டேன்… ‘

அரினா தலையை அசைத்துச் செவிசாய்க்க மறுத்தாள்.

‘ உனக்கு மன்னிப்போ இல்லை, ஏசு கிறிஸ்து.. ‘ என்றாள். ‘மன்னிப்பே கிடையாது ‘

– ஐசக் பேபல்
(ஐசக் பேபல் (1894-1941) ஒரு ரஷ்ய யூத எழுத்தாளர். ஸ்டாலினிஸ காலத்தில் 1937-39 வாக்கில் சிறைப் படுத்தப் பட்டு மறைந்து போனார். மாக்ஸிம் கார்க்கியுடன் தோழமை பூண்டு எழுத்தில் ஈடுபட்டவர்.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *