எழுத்தாளன் நாடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,391 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏனப்பா இப்பொழுதெல்லாம் நீ ஒன்றும் எழுதுவதில்லை”

ஆமாம் வெகுகாலமாக ஒன்றும் எழுதாமல் இருந்து விட்டேன். அப்படி இருந்தால் சரிப்பட்டு வராது. உடனே உட்கார்ந்து ஏதாவது எழுத வேண்டும்.

என்னத்தை எழுதுவது? சிறுகதையா? கட்டுரையா? நாடகமா?

நாடகத்துக்குக் கிராக்கி அதிகம் தான் எடுத்த எடுப்பிலே எழுதுவதற்கு நாடகம் சரிப்பட்டு வராது. அனுபவமும் போதாது. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்.

கட்டுரை எழுதுவோமா? சே! எனக்கு பிடிக்காத விசயம் அது.

சிறுகதை? இப்போதைக்குச் சிறுகதை ஒன்றை எழுதுவோம். மூன்று நாலு கதைக்குக் ‘கரு’ இருக்கிறது. எதை எழுதுவது?

‘ஜீவமலர் என்ற கதையை எழுதினால் என்ன? ஊஹும்! இன்னும் கொஞ்சகாலம் அது மனசில் கிடந்து வளர வேண்டும் சிறுகதை எழுதுவது குழந்தை பெறுவதைப் போல உயிர் விழுந்து, கருவளர்ந்து உந்தி பருத்து, இனி முடியாது என்ற அவஸ்தையில் பிரசவிக்க வேண்டிய சங்கதி. சுமை இறங்கியதும் என்ன சுகம்!

அடே நல்ல கற்பனை. சிறுகதையைப் பற்றிக் கட்டுரை எழுத நேர்ந்தால் இந்த உபமானத்தை உபயோகிக்க வேண்டும் கட்டுரையே எழுதுவோமா? கட்டுரை வேண்டாம்.

வேறேந்த கதையை எழுதுவது? முதலில் எந்த பத்திரி கைக்கு எழுதுவது என்று தீர்மானித்து விட வேண்டும். கட்டுப் பெட்டிப் பத்திரிகை, முற்போக்குப் பத்திரிகை, பெண்கள் படிக்கும் பத்திரிகை, குழந்தைப் பத்திரிகை, கிழவர் பத்திரிகை இப்படி வகை வகையான பத்திரிகைகள் இருக்கின்றன. வெறுமனே ஆன்ம திருப்திக்காக இப்பொழுது கதை எழுத உட்காரவில்லை நான்.

“இஞ்சேருங்கோ; அம்மா எழுதின காயிதத்துக்கு இவ்வளவு நாளாய் மறுமொழியே எழுதேல்லை. பேனாவை கொஞ்சம் தாறியளா? ”

“இவ்வளவு நாளும் இருந்துட்டு நான் எழுத உட்கார்ந்ததும் தான் உனக்கு எழுதவேணும் போல இருக்காக்கும். சனியன்! உம்! இந்தா! சனியன்! என்ற சொல் வாபஸ், இல்லாட்டா யார் சனியன் என்ற ஆராய்ச்சியை ஒரு அரை மணித்தியாலத்துக்குப் பிறகு செய்வோம். இப்ப அழுது கிழுது தொல்லை கொடுக்காதே! நான் கதை எழுத வேணும், கதை.”

சிவபூசையில் கரடி மாதிரி! இந்தச் சூழ்நிலையில் மனிதன் எழுத முடியுமா? எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்…. நாசமாய் போக!

எந்தப் பத்திரிகைக்கு எழுதுவது என்று யோசித்துக் கொண் டிருந்தேனாகும். ஆமாம். எந்தப் பத்திரிகைக்கு எழுதுவது? நம்ம கே.பி. யுடைய பத்திரிகைக்கு அனுப்பினால் மனுசன் சீக்கிரமாக பிரசுரித்து விடுவான். ஆனால் பணம் தான் வராது.

பணமில்லாமல் பேருக்காக மட்டும் எழுதின காலமெல்லாம் மலை ஏறி விட்டது. ‘மலை ஏறி விட்டது’ என்ற பிரயோகம் எப்படி ஆரம்பமாகியிற்று?

மனைவியுடன் யாரோ ஒரு பெண் பேசும் குரல் கேட்கிறது. யாராக இருக்கும்? எதிர் வீட்டு சரஸ்வதியாக இருந்தால் ஒரு முறை கண்குளிரப் பார்க்க வேண்டும். கொள்ளை அழகு. நமக்கும் ஒரு பெண் வந்து வாய்த்ததே! உடல் உணர்ச்சியைத் தீர்க்க ஒரு பெண், உள்ள உணர்வுகளைப் பசியாற ஒரு பெண், விழியால் அழகை விருந்து கொள்ள ஒரு பெண் என்றிருந்தால்…..?

எல்லாத்துக்கும் சோறு போடுவது யார்? சே! அழகான கற்பனையில் லயித்திருக்கையில் இந்தப் பூவுலகத்து எண்ணங்கள் வந்து எம்மைப் பாழடிக்கின்றனவே.

“யாரங்கே? மண்ணுலகத்து நினைவுகள் நம்மை அணுகா வண்ண ம் தகுந்த நடவடிக்கை எடு! போ!”

‘ம்… பிறகு… கற்பனை ஒடுதில்லையே! சட்டைப்பைக்குள் சிகரெட் இருக்கா பார்ப்போம்.

சிகரெட்டைக் காணோம்; சில்லறைக் காசுகளையும் காணோமே யார் எடுத்திருப்பார்கள்? சில்லறை இருக்கிறதா?

‘மனுசி’யின் நாடியைத் தடவினால் ஒரு சிகரெட் வாங்க ஆறு சதம் பறிக்கலாம். இந்தச் சாக்கில் அவளோடு பேசிக் கொண்டிருக்கும் பெண் யார் என்பதையும் பார்த்து விடலாம்.

சிகரட் ஒரு ‘தம்’ அடிச்சாத்தான் கதை எழுத ‘மூடு’ வரும் இப்ப என்ன அவசரம்? ஆறுதலாக எழுதலாம்.

எழுதித்தான் என்ன கிழிச்சோம்!

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *