(இந்த கதையின் “கரு” பத்திருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறுகதையில் படித்தது)
இரண்டு நாட்களாய் இரயிலில் பிரயாணம் செய்து வந்த அலுப்பு என்னை எங்காவது படுத்து எழுந்தால் போதும் என்று எண்ணச்செய்தது. அதுவும் மூன்றாம் வகுப்பு பெட்டியில் கூச்சலும், குழப்பமுமாய், ஒவ்வொரு நிலையத்தில் நின்று அங்கு ஏறும் பல மாநில மக்கள், இடித்து, பிடித்து, நசுங்கி, அப்பா எப்படியோ இந்த சென்னையில் வந்து இறங்கி விட்டேன். ஆனால் ஒன்றுமே புரியவில்லை, எங்கள் ஊருக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. ஒரே குப்பை கூளம், வழியெங்கும் அசுத்தம், இந்த இரயில்வே ஸ்டேசனை பார்க்கும்போதே தெரிகிறதே !
மெல்ல நடந்து வெளியே வந்தேன். இவர்கள் பேசுவது புரிகிறது, ஆனாலும் நம்மால் இவர்கள் மொழியில் தடங்கலின்றி பேச முடியுமா? தயக்கமாக இருந்தது. அதிலும் தாடியும், மீசையுமாக அழுக்கு உடையுமாக, கையில் ஒரு மூட்டையை வேறு வைத்துக்கொண்டிருக்கும் என்னுடன் பேசுவார்களா? முதலில் முகம் கை கால் கழுவிக்கொள்ள வேண்டும். எதிரில் ஒரு ஹோட்டல் தெரிய பசி இருந்தாலும் மனம் எதுவும் சாப்பிட ஒப்பவில்லை. நல்ல வேளை வழியில் ஒரு குழாயில் தண்ணீர் வழிந்து கொண்டிருக்க முகம் கை கால் மட்டும் கழுவிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் படித்தவர்போல் தெரிந்த ஒருவரிடம் ஒரு சீட்டை காண்பித்து எப்படி போவது என்று கேட்டேன். முதலில் நான் பேசிய தமிழ் வார்த்தைகள் புரிய கஷ்டப்பட்டவர், பின் புரிந்தவுடன் நீங்கள் இரயிலில் போவதுதான் சரி, தஞ்சாவூர் ட்ரெயின் அப்படீன்னு கேளுங்க, அதுல ஏறி கும்பகோணம் அப்படீங்கற ஊர்ல இறங்கிக்குங்க, அங்க கேட்டீங்கன்னா இந்த அட்ரசுக்கு வழி சொல்வாங்க. அநேகமா இப்ப பத்து மணிக்கு இருக்கும்னு நினைக்கிறேன், வாங்க நான் அந்த வழியாத்தான் போறேன், பெருந்தன்மையுடன் கூடவே கூட்டி சென்றார்.
பரவாயில்லை, இந்த மாநில மக்கள் அழுக்காய் இருந்தாலும் பதில் சொல்லி மரியாதை கொடுக்கிறார்கள், மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், வந்த வழியே அதே இரயில் நிலையத்துக்கு போவது ஒரு வித அலுப்பை தந்தது.
மீண்டும் ஒரு இரயில் பயணம். சென்னையில் இருந்த அளவுக்கு மக்கள் கூட்டம் தென்படவில்லை. மூன்று மணி இருக்குமா? வானத்தை அண்ணாந்து பார்த்து கணக்கு போட்டேன், இனி இந்த அட்ரசுக்கு வழி கேட்க வேண்டும். நல்ல வேளை இறங்கும்போதே ஒருவரிடன் கேட்டேன், அவர் சைகையில் என்னுடன் வா என்று நடக்க ஆரம்பித்து விட்டார். அவர் பின்னாலேயே நடந்தவன் வெளியே வந்த்தும் ஒரு பேருந்தை காண்பித்து “சீயக்காபுரம்” அப்படீன்னு கேளுங்க. சொல்லிவிட்டு விரு விருவென போய் விட்டார்.
வேகமாக சென்று அந்த பேருந்தில் ஏறி அவர் சொன்ன ஊர் பெயரை சொன்னவுடன் நடத்துநர் என் உடைகளையும் தோற்றத்தையும் பார்த்து வியப்புடன் டிக்கெட் கிழித்து கொடுத்தார். என் உடைந்த தமிழில் இடம் வந்தால் சொல்லுங்க, அவர் தலையாட்டி அடுத்தவருக்கு டிக்கெட் கொடுத்து சென்றார்.
ஆஹா என்ன ரம்யமாக இருக்கிறது, அருமையான் கிராம்ம், மனம் இலயிக்க, அப்படியே மெய் மறந்து நடந்து சென்றேன். வழியில் போன சின்னஞ்சிறுசுகள் முதல் பெரியவர்கள் முதல் என்னை அதிசயமாய் பார்த்தனர். என் தோற்றம் அவர்களை அப்படி பார்க்க வைத்திருக்குமோ? நினைத்து சிரித்தவன் எதிரில் சைக்கிளில் வந்த ஒரு இளைஞனிடம் அந்த அட்ரசை காட்டினேன். அதை பார்த்தவன் என்னை வியப்புடன் பார்த்து விட்டு சைக்கிளில் உட்கார் சொன்னான், களைப்புற்று இருந்ததால் தடுமாற்றத்துடன் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டேன். அந்த இட்த்துக்கு என்னை கூட்டிச்சென்றான்.
வீட்டு வாசலில் நான்கைந்து பேர் கட்டு குடுமியுடன் உடல் முழுவதும் அங்கங்கு திருநீறு பூசி இருக்க, உட்கார்ந்து சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் அருகில் சென்றவுடன் பேசிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து யார் வேண்டும் உங்களுக்கு?
நான் காசியிலிருந்து வருகிறேன், பரமேஸ்வரன் என்பது ? நான்தான் என்ன விஷயம்?
வியப்பாய் என்னை பார்த்து கேட்கவும், நான் கொண்டு வந்த மூட்டையை பிரித்து, அதற்குள் வைத்திருந்த ஒரு குடுவையை கொடுத்து ஒரு கடிதத்தையும் நீட்டினேன்.
கைகள் நடுங்க அதை வாங்கி படித்தவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் பெருக, நின்று கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரை நெருங்கி அந்த கடிதத்தை வாங்கி படிக்க அந்த இடத்தில் ஒரே பரபரப்பு ஆகி விட்டது. அதற்குப்பின் ஒருவரும் என்னை கவனிக்க வில்லை. உள்ளிருந்து பெண்கள் அழுகை சத்தம்..
நான் அப்படியே பத்து நிமிடங்களுக்கு மேல் நின்றவன் மெதுவாய் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். மீண்டும் மிக நீண்ட இரயில் பிரயாணம் போக வேண்டும்.
இரயில் நிலையத்தில் சோர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறேன், இரவு மூன்று மணிக்கு சென்னை போகும் இரயில் வ்ருமாம், அதில் சென்னை சென்று அப்படியே காசிக்கு இரயில் ஏற வேண்டும். சென்னையில் இருந்து இறங்கியது முதல் ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்திருக்கிறேன். விடியற்காலையில்தான் ஒரு வாய் தண்ணீரில் தொண்டைய நனைக்க வேண்டும்.
அந்த குட்டி இரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு..பெரிய கூட்டமே திரண்டு வந்து கொண்டிருந்த்து. முன்னால் பரமேஸ்வரன் வந்து கொண்டிருந்தார்.அவர்கள் என்னை நோக்கி வரவும், நான் மெல்ல எழுந்தேன்.
பரமேஸ்வர்ன் அப்படியே என் கைகளை பற்றிக்கொண்டு அழுதார். ஐயா என்னை மன்னிச்சுக்குங்க, நீங்கள் கொடுத்த கடிதத்தில் “என் தந்தை இறந்துட்டாரு”அப்படீங்கற செய்தியை கேட்டவுடன் உங்களை மறந்து விட்டேன். மன்னிச்சு, தயவு செய்து என் கூட வரணும், உங்க வருகைக்கு இந்த ஊரே காத்திருக்கு !
அதுவரை என் மீதிருந்த களைப்பு அத்தனையும் பறந்தோட பரமேஸ்வரனையும், அவரை சுற்றியுள்ளவர்களையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டேன். ஐயா இது போதும் என் கடமையை செஞ்ச திருப்தி எனக்கு கிடைச்சிடுச்சு. நான் காசியில ரிக்க்ஷா ஓட்டிகிட்டிருக்கறவன், ஒரு நாள் உங்கப்பா என் வண்டியில் ஏறும்போது ரொம்ப உடம்பு சரியில்லாம ஆயிட்டாரு, அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போலாமுன்னு முயற்சி பண்ணப்போ “இல்லே நான் இனி பிழைக்க மாட்டேன்”என்னை எங்கயாவது படுக்க வையின்னு சொன்னாரு. நான் அவரை என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டேன்.. அவர் “இப்ராஹீம்” முசல்மான் வீட்டுல இருக்கறமேன்னு கொஞ்சம் கூட சங்கடப்படலை. இப்ராஹீம், நான் வேண்டறது என் உயிர் இந்த காசியிலயே போயிடணும், என்னை எரிச்சு சாமப்லை கங்கையில கரைச்சது போக மிச்சத்த என் மகன் கிட்டே கொடுத்து காவிரியில கரைச்சுட சொல்லு, அப்ப்டீன்னு என் முன்னாடியே இந்த லெட்டரை எழுதுனாரு. சொல்லி வச்ச மாதிரி அடுத்த நாளே அவரு “மெளத்” ஆயிட்டாரு. அவர் சொன்னமாதிரி அவர் அஸ்தியை கங்கையில கரைச்சு, மிச்சத்த உங்க கிட்டே ஒப்படைச்சுட்டேன். அல்லா எனக்கு துணை இருந்ததுனால என்னால இதை செய்ய முடிஞ்சது. என்னை மன்னிச்சுடுங்க, நோன்பு மாசமா இருக்கறதுனால, என்னால இப்ப உங்களோட வர முடியலை. கண்டிப்பா மறுபடி உங்க ஊரை பார்க்க வருவேன்.
பரமேஸ்வரனும், அந்த ஊரும் என்னை கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்க நான் சென்னை செல்லும் இரயிலில் மூன்றாம் வகுப்பில் ஏறிக்கொண்டிருந்தேன்.