எதிர்க்கட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,059 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை மணி ஐந்து இருக்கும். வெள்ளிநாயகம், தங்க நாயகத்தின் குடிசை வாசலில் வந்து நின்று, “என்னா அண்ணே, கூட்டத்திற்கு வாறியா?”என்று கேட்டான்.

“வாரேன், தம்பி!”என்று சொல்லிக் கொண்டே, வெளியே வந்தான் தங்கநாயகம்.

இருவரும் கடற்கரையை நோக்கி நடந்தனர். வழியில் “ஏன் அண்ணே! நம்ம சங்கத்தை யாரோ தொறந்து வைக்கப் போறாங்கன்னு சொன்னியே, அது யார் அண்ணே?”என்று கேட்டான் வெள்ளிநாயகம்.

“அவர்தான் நம்ம தலைவர் சண்டமாருதம்!”என்றான் தங்கநாயகம்.

“அவருக்கு நம்மைப் பத்தி என்னா தெரியும்? பாவம். நடந்து கூட அவருக்கு பழக்கமிருக்காது போல இருக்குதே!”

“நல்லாச் சொன்னே! அவர் எம்மாம் பணம் வச்சி இருக்காரு!”

“ஓஹோ! அதுக்காவத்தான் அவரைக் கூப்பிட்டிருக்காங்களா?-சரிசரி; எனக்கு ஒரு சந்தேகம், அண்ணே!”

“என்ன சந்தேகம்?”

“அந்தச் சங்கத்தை ‘நம்மசங்கம்’ன்னு நான் எப்படிச் சொல்லிக்கிடறது. அண்ணே?”

“ஏன் சொல்லிக்கிடக்கூடாது?”

“என்ன இருந்தாலும் நீ வேறே, நான் வேறே இல்லையா?”

“என்ன வேறே? நீயும் கூலி, நானும் கூலிதானே?”

“அது சரி, ரெண்டு பேரும் கூலியாயிருந்தாலும் நமக்குள்ள வித்தியாசம் இருக்குதில்லே?”

“அது என்ன வித்தியாசம், தம்பி?”

“நீ ரெயில்வே கூலி;உனக்குன்னு ஒரு சட்டை, கிட்டைஎல்லாம் கொடுத்திருக்காங்க. எனக்கு அப்படியில்லை, பாரு! நான் கண்ட சட்டையை போட்டுகிட்டு நினைச்ச இடத்திலே நின்னுகிட்டு இருக்கிறவன் தானே?” “என் சட்டையைச் சொல்லு, ‘கூலி’ன்னு, நெத்தியிலே எழுதி ஒட்டி வச்சிருக்காப் போல! பார்க்கப் போனா எல்லாம் பொதி சுமக்கிற ரெண்டு கால் கழுதைங்கதானே? அதிலே வித்தியாசம் ஒரு கேடா?”

“ஒரேயடியா அப்பிடிச் சொல்லிப்பிட முடியுமா?”

“அட, நீ ஒண்ணு! அதுக்காவத்தானெ நம்ம சங்கத்துக்குக் ‘கூலிங்க சங்கம்’னு பொதுவாக பேரு வச்சி இருக்காங்க!”

“என்னமோ போ, அண்ணே! எனக்கு ஒண்ணும் புரியலே!” அதற்குள் கடற்கரை நெருங்கி விடவே, அவர்களுடைய பேச்சு நின்றது. மேடைக்கு அருகே இருவரும் நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டனர்.

“ஸ்ரீமான் சண்ட மாருதத்துக்கு, ஜே!” என்ற கோஷம் காதைப் பிளந்ததும், கூலிகள் சங்கத்தின் திறப்பு விழா ஆரம்பமாயிற்று. இளைஞர் ஒருவர் மேடையின் மேல் ஏறிக் கம்பீரமாக நின்று,

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில்

ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே!

நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?”

என்னும் பாரதியாரின் பாடலை உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்; கூட்டத்தில் அமைதி நிலவியது.

பாட்டு முடிந்ததும் தங்கநாயகம் ஒரு நீண்ட கரகோஷம் செய்துவிட்டு, “கேட்டியா தம்பி, நம்ம வாழ்வு தாழ்வு எல்லாம் எங்கே இருக்குதுன்னு இப்பவாவது தெரிஞ்சு கிட்டியா?” என்று கேட்டான், வெள்ளி நாயகத்தை.

“எங்கே இருக்குதாம்?” என்று வெறுப்புடன் அவனைத் திருப்பிக் கேட்டான் வெள்ளி நாயகம்.

“இது கூட உனக்குத் தெரியலையா? – அட பாவி, எல்லோரும் ஒற்றுமையாய் இருக்கிறதுலேதான் இருக்கு தாம்!” என்றான் தங்க நாயகம் பெருமையுடன்.

“ஆமாமாம்; ஆனா….”
“ஆனா என்னா? உனக்கு எப்போப் பார்த்தாலும் சந்தேகந்தான்!” என்று தங்க நாயகம் எரிந்து விழுந்தான்.

அதே சமயத்தில், ‘ஸ்’ என்ற சத்தம் சபையின் மூலை முடுக்கிலெல்லாம் எழுந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீமான் சண்ட மாருதம் எழுந்து ஒலி பெருக்கியின் முன்னால் நின்றார்.

“தயவு செய்து அமைதியாயிருங்கள்!” என்று ‘தற்காப்பு’க்காகச் சபையோரைக் கேட்டுக் கொண்டு தம் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அவருடைய பேச்சிலும் அன்று ஒற்றுமைதான் முக்கிய ஸ்தானம் வகித்தது.

ஏனெனில் கூலிகளுக்கு தங்கள் சங்கத்தால் நன்மை விளைந்தாலும் சரி, நன்மை விளையாவிட்டாலும் சரி – அந்தப் பழியை ஒற்றுமையின் மேல் போட்டுவிட்டு தலைவர் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?-எனவே “ஒற்றுமை இன்றேல் ஒன்றுமே இல்லை; “ஒற்றுமை வழி ஒன்றே வழி!” என்று அழுத்தந்திருத்தமாக முழங்கிவிட்டு, திறப்பதற்கு ஒன்றும் இல்லாத கூலிகள் சங்கத்தை அவர் ‘சும்மானாச்சும்’ திறந்து வைத்தார். அவருக்கு அடுத்தாற்போல் பேசிய இன்னும் சிலரும் ஒற்றுமையைப் பற்றியே ஓயாமல் பேசிப் பேசி ஓய்ந்தார்கள்; ஒரு குரோஸ் சோடா புட்டிகள் காலியான பிறகு கூட்டம் இனிது முடிவதற்குப் பதிலாக ஒரே கரிப்புடன் முடிந்த காரணம் வேறொன்றுமில்லை; சோடாதான்!

அதற்குமேல் தங்கநாயகத்துக்கும் வெள்ளிநாயகத்துக்கும் அங்கே என்ன வேலை!-எழுந்து தங்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடந்தனர். பிரசங்கிகள் கூலிகளை ஒருகணம் மறந்து, தாங்கள் அன்றைய தினம் பேசிய பேச்சுகளுக்காக ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டனர். பிறகு, “கேவலம், ஒரு சட்ட சபை அங்கத்தினர் பதவிக்குக் கூட இந்தக் காலத்தில் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது!”என்ற தங்களுடைய ஆற்றாமையை ஆளுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டு கலைந்தனர்.

மறுநாள் மாலை வெள்ளிநாயகம் வழக்கம்போல் சென்னை ‘பாரிஸ் கார்னரில் அப்படியும் இப்படியுமாக நடை போட்டுக் கொண்டிருந்தான். அதுவரை சம்பாதித்திருந்த எட்டனாக்காசு அவன் மடியில் பத்திரமாக இருந்தது. அதை எடுத்து அவன் அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டான். எத்தனை தரம் எண்ணிப் பார்த்துத்தான் என்ன? அந்த பாழும் எட்டனா எட்டனாவாகவே இருந்தது! அதை வைத்துக் கொண்டு அவனும் அவனுடைய மனைவி மக்களும் அன்றையப் பொழுதை எப்படிக் கழிப்பது? இன்னும் ஒரு எட்டனாவாவது கிடைத்தால் பரவாயில்லை!-அதற்காக யாராவது கையில் ஒரு சிறுபையுடன் சென்றாலும், “ஏன் சாமி!கூலி வேணுமா, சாமி!” என்று அவன் கேட்டுக் கொண்டே இருந்தான். கிறுக்குப் பேர்வழி ஒருவர் “என்னிடம் கூலிக்கு ஒன்றுமில்லை; என்னை வேண்டுமானால் தூக்கிக் கொண்டு போய் என் வீட்டில் விடுகிறாயா?” என்று கேட்டபோது கூட அவன் சளைக்க வில்லை; “ஆகட்டும், சாமி! தோள் மேலே வேணுமானால் உங்களை துக்கிட்டுவாறேன்; எப்படியாச்சும் காசு கெடச்சா சரி!” என்று சொல்லிக் கொண்டே அவரை நெருங்கினான். “போடா, போ!”என்று சொல்லிவிட்டு அவர் விரைந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய மனிதர் பெட்டி, படுக்கையுடன் ரிக்ஷாவில் வந்து பஸ் நிலையத்தில் இறங்கினார். ரிக்ஷாவாலா அவரிடம் கூலி பெற்றுக் கொண்டு அப்பால் சென்றதும் வெள்ளி நாயகம் ஓடோடியும் வந்து, “ஏன் சாமி! எங்கே போவணும்?”என்று கேட்டான்.

“பெங்களுருக்கு!-ஏன், நீயும் வருகிறாயா?” என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

“நீங்க அம்மாந்துரம் நடந்து போறதாயிருந்தா, நானும் அம்மாந்துரம் நடந்து வாறேன், சாமி!”என்றான் வெள்ளி நாயகமும் சிரித்துக் கொண்டே.

அதற்குள் ஒண்ணாம் நம்பர் பஸ் வந்து நின்றது. பெரிய மனிதர் வெள்ளி நாயகத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, பெட்டியையும், படுக்கைகையையும் தூக்கிக் கொண்டு போய் பஸ்ஸில் வைத்தார்.

கண்டக்டர், “பெட்டி, படுக்கைகளையெல்லாம் பஸ்ஸில் ஏற்றக் கூடாதுங்க!”என்று அவரைத் தடுத்தான்.

“ஏன்?” என்று கேட்டார் பெரிய மனிதர்.

“எனக்குத் தெரியாதுங்க; உங்க சர்க்காரைக் கேளுங்க!” என்று சொல்லிவிட்டு, அவன் டிரைவரை நோக்கி, “போப்பா, ரைட்!” என்று அலட்சியமாக ‘விஸில்’ அடித்தான்; பஸ் கிளம்பிவிட்டது.

வெள்ளிநாயகம் பெரிய மனிதரைப் பார்த்தான். பெரிய மனிதர் வெள்ளி நாயகத்தைப் பார்த்தார்.

“இப்போவெல்லாம் பட்டணத்துல எந்தப் பஸ்ஸிலும் பெட்டி, படுக்கைகளை ஏத்தறதில்லைங்க!” என்றான் வெள்ளி நாயகம்.

“நாசமாய்ப் போச்சு நான் இப்போது ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போக வேண்டுமே, என்ன செய்வது?”என்று முணுமுணுத்தார் பெரிய மனிதர்.

“இதோ, பக்கத்திலே பீச்சுடேசன் இருக்குதுங்க;அங்கேயிருந்து பார்க்குடேசனுக்கு எலெக்டிரிக் வண்டி போகுதுங்க; அதிலே பெட்டி, படுக்கையெல்லாம் ஏத்துவாங்க. ரொம்பக் காசுகூட இல்லை; ஓரணாத்தான்!- பார்க்கிலேயிருந்து ஸென்ட்ரஸ் டேசன் ரொம்ப கிட்ட!” என்று அவருக்கு தூபம் போட்டான் வெள்ளி நாயகம்.

சிக்கனத்தை உத்தேசித்துப் பெரிய மனிதர் அவன் சொன்னதை ஒப்புக் கொண்டார். வெள்ளிநாயகம் அவருடைய பெட்டி, படுக்கைகளைத்துக்கிக் கொண்டு பீச்ஸ்டேஷனைநோக்கி நடந்தான். பெரிய மனிதர் அவனைத் தொடர்ந்தார்.

வழியில் வெள்ளி நாயகத்துக்கு ஒரு சபலம் தட்டிற்று. பீச் ஸ்டேஷன்வரை சென்றால் ஐயா ஒரனா கொடுப்பாரோ, இரண்டனா கொடுப்பாரோ ஸென்ட்ரல் ஸ்டேஷன்வரை தானே சென்று அவரை வண்டியில் ஏற்றி விட்டால் எட்டணாவாவது கொடுக்க மாட்டாரா?-இவ்வாறு எண்ணியதும் அவன் அந்தப் பெரிய மனிதரை நோக்கி, “நானே ஸென்ட்ரல் வரை வந்து உங்களை வண்டி ஏத்தி விடட்டுங்களா?” என்றான். ஒரே கூலியாயிருந்தால் தமக்கும் செளகரியந்தானே என்று எண்ணி அவரும் “சரி!” என்றார்.

அவ்வளவுதான் வெள்ளி நாயகத்துக்குத் தெம்பு பிறந்துவிட்டது; அவன்குதிநடை போட்டுக் கொண்டு சென்றான். அன்றையக் கவலை தீர்ந்த பிறகு இந்த உலகத்தில் தன்னைப் பொறுத்தவரை அவனுக்கு வேறு எந்தக் கவலையும் இல்லையல்லவா?

ஜிகு ஜிக்கு…..ஜிகு ஜிக்கு……. ஜிகு ஜிக்கு….. ஜிகு ஜிக்கு….ஜிகு ஜிக்கு….

தலை தெறிக்கும் வேகத்தில் சென்னை மாநகரின் அமைதியை குலைத்துக் கொண்டு வந்த ‘எலெக்ட்ரிக் ட்ரெயின்’ பார்க் ஸ்டேஷனை அடைந்தது. அதற்குள் வரிசை வரிசையாய் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. இருந்தாலும், பெரிய மனிதர் கூலிக்காரனின் மூலம் தம்முடைய அந்தஸ்தை உலகத்துக்கு ஓரளவு ‘வெளிச்சம்’ போட்டுக் காட்டிக் கொண்டு வந்தது, தனி வெளிச்சமாய்த் தான் இருந்தது!

ஆயிற்று; இதோ ஸென்ட்ரஸ் ஸ்டேஷனின் மணிக்கூண்டு கம்பீரமாகத் தனக்கு எதிரே நிற்கிறது; இன்னும் இரண்டே நிமிஷத்தில் பிளாட்பாரத்தை அடைந்து விடலாம்…….

…..எட்டணாக் காசு இந்தக் கைமேல் ‘டக்’கென்று விழும், தன்னிடம் ஏற்கெனவே எட்டணா இருக்கிறது. முழுசாக ஒரு ரூபாய்! இன்று வீட்டுக்கு இத்துடன் கம்பி நீட்டி விடலாம். அதோ, தங்கநாயகம் அண்ணன்கூடத் தனக்கு எதிரே சொல்லி வைத்தாற்போல வருகிறதே! ……….அது போட்டிருக்கிற ஊதாச் சட்டையும், சிவப்புப் பட்டையும், அதிலே ‘போர்ட்டர்’ என்று எழுதியிருக்கின்ற அழகும்-அடாடாடாடா!-ம், அண்ணனுக்கு என்ன குறைவு? தன்னைப் போலவா?-அடடே அண்ணன் ஏதோ பாட்டுக்கூடப் பாடுதே! என்ன பாட்டாயிருக்கும்?

…….ஆமாம்; அதுதான்! அதுவேதான்!- ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!-‘ நேற்று கேட்ட பாட்டை அண்ணன் அப்படியே பிடிச்சிகிச்சே!

ஐயோ, இது என்ன சங்கடம்?

……….அண்ணன் தன்னை ஏன் அப்படி முறைச்சி பார்க்குது? அதன் மீசை ஏன் அப்படித் துடிக்குது? கண்களில் கணத்துக்கு கணம் ஏன் அப்படிச் சிவப்பேறுகிறது? – ஒன்றும் புரியவில்லை தம்பிக்கு.

“என்னா அண்ணே!” என்று அது குழைந்தது.

‘அண்ணே, அண்ணேன்னு சொல்லி ஆளை ஏய்க்கவா பார்க்கிற? ‘இங்கே கூலி எடுத்துக்கிட்டு வர உனக்கு என்னடா அம்மாந் தைரியம் ? நான் இங்கே வேலை மெனக் கிட்டா இருக்கேன்?” என்று ஆவேசத்துடன் கூறி, அவன் தலைமேலிருந்த படுக்கையை பலவந்தமாகத் தூக்கித் தன் தலைமேல் வைத்துக்கொண்டு கையில இருந்த பெட்டியையும் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, நீங்க வாங்க. சாமி!”என்று அழைத்தது இது.

“அண்ணே, அண்ணே! நம்ம வாழ்வு. தாழ்வு எல்லாம்…..”

“ஆமாம் போடா! நீயும் நானும் ஒரு கட்சியாயிருந்தாலும் நம்ம வயிறு நமக்கு ‘எதிர்க்கட்சி’ யாயிருக்கின்றதே!” என்று அதை பொருட்படுத்தாமல் இது நடையைக் கட்டிவிட்டது.

பெரிய மனிதர் தம்மைப் பாதிக்காத விஷயங்களில் எப்பொழுதுமே சட்டத்தையும், ஒழுங்கையுமே கடைப்பிடிப்பவர். ஆகவே அதை அத்துடன் விட்டு விட்டு, அவர் இதைத் தொடர்ந்து சென்றார்.

“எனக்கு கூலி ஒன்னும் இல்லிங்களா, சாமி!” என்றது அது.

நல்ல வேளையாக அப்போது ஒர் இளம் பெண் அந்த வழியாக வரவே, அவள் பார்க்கும்படியாக நாலணாவை எடுத்து வீசி எறிந்துவிட்டு, அவர் மேலே நடந்தார்!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email
விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *