உழைப்பில் கிடைத்த பணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 1,512 
 
 

சென்னையில் இருந்த பிரபலமான தொழில் நுட்ப கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் பிரிவு மாணவர்களுக்கு “இண்டஸ்ட்ரியல் விஸிட்டுக்கு” கோவையில் இருக்கும் ஒரு கம்பெனியை சிபாரிசு செய்தார் அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர். கல்லூரி முதல்வர் கூட கேட்டார், ஏன் சார் அந்த கம்பெனியை தேர்ந்தெடுத்தீர்கள். தொழிலில் நாற்பது வருடங்கள் நிலையான இடத்தில் இருந்தாலும் பெரிய அளவில் கம்பெனி இருப்பதாக தகவல் இல்லை, அப்படி இருக்கையில் அங்கு நம் மாணவர்களை அழைத்து செல்லவேண்டும் என்கிறீர்கள்.

சார் நாற்பது வருடங்கள் இந்த போட்டி உலகில் நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயமில்லையே. அங்கு சென்றால் நம் மாணவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

எப்படி சொல்கிறீர்கள்? நான் எனது கல்லூரியில் படிக்கும்போது எங்கள் ஆசிரியர் அங்கு கூட்டி சென்றார் சார். முதல்வர் இரண்டு நிமிடம் அமைதியாக யோசித்தவர் சரி ஒத்துக்கொள்கிறேன், ஆனால் ஒன்று மாணவரகள் இதற்கு தரும் கட்டணம் அந்த மாணவனுக்கு பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது என்று வருத்தப்படக்கூடிய சூழ்நிலை வந்து விடக்கூடாது, புரிந்ததா?

கண்டிப்பாய் சார், இந்த “இண்டஸ்ட்ரியல் விஸிட்” மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை தரக்கூடியதாகத்தான் இருக்கும், இது உறுதி.

குட்..மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்யுங்கள், முதலில் அந்த கம்பெனியிடம் அனுமதி வாங்கி விட்டு மாணவர்களுக்கு தெரிவித்து விடுங்கள் 

எங்கள் கல்லூரி மாணவர்கள் தங்கள் கம்பெனிக்கு “இண்டஸ்ட்ரியல் விஸிட்” வருவதாக தகவல் தெரிவித்தவுடன், அந்த ‘தொழிற்சாலை’ முதலில் கேட்டது, எத்தனை பேர்? ஐம்பது பேர் சொன்னவுடன் அவர்கள் பெயர் பட்டியலை அனுப்ப சொன்னது, அடுத்து அவர்கள் கண்டிப்பாய் தொழிற்சாலையின் “கெஸ்ட் ஹவுசில்தான் தங்க வேண்டும் என்று சொன்னது.

முதல்வர் கேள்விக்குறியாய் ஆசிரியரை பார்த்தார், ஆசிரியர் சார் எப்படியும் எங்காவது ஒரு ஓட்டலிலோ, விடுதியிலோதான் தங்க வைக்கபோகிறோம், வித்தியாசமாய் தொழிற்சாலையின் சூழ்நிலைதான் இருக்கட்டுமே? நாம் கட்டப்போகும் தங்கும் வசதிக்கான கட்டணம் அந்த கம்பெனியிலேயே கட்டி விடலாமே.

எப்படி பல பேர் வேலை செய்யும் தொழிற்சாலைக்குள் தங்க வைக்க முடியுமா? அதுவும் பெண்களும் இருக்கிறார்களே?

நிச்சயம் பாதுகாப்பாய் இருக்கும் சார், முதல்வர் கொஞ்சம் அவ நம்பிக்கையுடனேயே தலையாட்டினார்.

கோவை இரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன், அவர்களுக்காக காத்திருந்த தொழிற்சாலை ஏற்பாடு செய்திருந்த ஒரு பேருந்தில் அனைவரும் ஏறினர். அவிநாசி ரோட்டில் அமைந்திருந்த அந்த தொழிற்சாலைக்குள் இவர்கள் சென்ற பேருந்து போய் நின்றவுடன், முதலில் அவர்களை வரவேற்றது ஐம்பது வயது மதிக்கத்தகுந்த, கம்பெனி சீருடையில் ஒரு தொழிலாளி அவர் ஒவ்வொரு மாணவர்களின் கைகளை பற்றி குலுக்கி வரவேற்றார். மாணவர்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா கம்பெனியை பற்றி வகுப்பாசிரியர் ஆஹா ஓஹோ என்றார், வரவேற்க கூட தகுதியான ஒரு ஆள் கிடைக்கவில்லையா? இவர்களின் முகபாவனையின் மூலம் என்ன தெரிந்து கொண்டாரோ என்னவோ அவர்களை நடந்தே அங்கிருந்த கெஸ்ட் ஹவுசுக்கு கூட்டி சென்றார்.

கம்பெனி மிகப் பெரியதாய் கட்டப்பட்டிருந்தாலும் அதை விட மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த வனமும் அங்கிருந்தது.. பறவைகளின் சத்தம், ஆழ்ந்த அமைதி இவர்களுக்கு காட்டுக்குள் நடப்பதை போன்ற உணர்வை தந்தது. “கெஸ்ட் ஹவுஸ் இவர்கள் எதிர்பார்த்த்தை விட சகல வசதிகளுடன் இருந்தது. அனைவரும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பத்து மணிக்கு கம்பெனி வாசலுக்கு வந்து விடவேண்டும், சொல்லி விட்டு அவர் கிளம்பி சென்றார்.

பத்து மணிக்கு கம்பெனி வாசலில் நின்ற அனைத்து மாணவர்களையும் அங்கிருந்த சீருடையில் இருந்த மேற்பார்வையாளர், மற்றும் நால்வர், ஆண்கள், பெண்கள், என்று  தனித் தனியாய் அமைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று கம்பெனி சீருடையை மாற்றிக்கொண்டு வர சொல்லி ஆளுக்கொரு உடையை கொடுத்தனர். மாணவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முணுமுணுத்துக்கொண்டே சென்றனர்.

உடைமாற்றிக்கொண்டு உள்ளே வந்த அவர்களை மற்றொருவர் வரவேற்று முதலில் அங்கிருந்த தொழிலாளர்களை அறிமுகப்படுத்தினார், அனவருமே கம்பெனி சீருடையிலேயே இருந்தனர்.

அதன் பின் ஒருவரை அழைத்து அவர்கள் கம்பெனி என்ன என்ன பொருட்கள் தயாரிக்கிறார்கள், அவைகள் எப்படி ஆரம்ப கட்டத்திலிருந்து உருமாறுகிறது என்பதை விளக்கினார்.

மதியம் உணவு அங்கேயே வர,  அரை மணி நேரமே அவர்களுக்கு அவகாசம் தரப்பட்டது. வேகமாய் சாப்பிட்டு முடித்தவுடன் ஐந்தைந்து மாணவர்களாக பத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு துறைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தரப்பட்டது. மாலை ஐந்து மணிக்கு கெஸ்ட் ஹவுசுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

அவர்களுக்கு தரப்பட்டிருந்த பத்து நாட்களில் ஒவ்வொரு குழுவும் ஒரு பகுதிக்கு சென்று என்ன செய்கிறார்கள், இவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை கற்றுக்கொண்டனர். அதை விட இரவு வேலையும் அவர்களுக்கு தரப்பட்டது. ஒவ்வொரு குழுவும் கட்டாயமாய் இரவு வேலைகளிலும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கோ மிகுந்த சிரமமாகி விட்டது. அவர்கள் எதிர்பார்த்து வந்து பயணமாய் அமையாமல் இப்படி தங்களை கடுமையாக வேலை வாங்கி விட்டார்களே என்று ஒரு சிலர் கோபப்பட்டனர்.

கடைசி நாள் அவர்களுக்கு ஒரு விருந்து கொடுக்க இருப்பதாகவும், விருந்தை “அவர்கள் தங்கியிருந்த “கெஸ்ட் ஹவுசிலியே” வைத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டன.

அன்றுதான் அவர்கள் நல்ல உடையணிந்து  அப்பாடி தப்பித்து போகிறோம் என்ற உணர்வுடன் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு காத்திருந்த போது அந்த கம்பெனியின் முதலாளி அவர்களை சந்திக்க வருவதாய் சொன்னார்கள். மாணவர்களும் அவர்களை சந்திக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கம்பீரமாய் கோட்டு சூட்டுடன் காரை விட்டு இறங்கி வந்தவரை பார்த்து ஆச்சர்யப்பட்டனர். அன்று இவர்களை வரவேற்க வந்த தொழிலாளிதான் முதலாளியா? அதை விட ஆச்சர்யம் அவருடன் வந்திருந்த அவரது மகனை கூட அந்த கம்பெனியில் சீருடையுடன் பார்த்திருக்கிறார்கள்.

ஏன் எல்லோரும் திகைத்து நின்று விட்டீர்கள், இந்த விருந்து உங்களின் சேவைக்காக எங்கள் கம்பெனி அளிக்கும் விருந்து, சொல்லி அவர்களின் கையை குலுக்கினார்.

சார் நீங்க அன்னைக்கு தொழிலாளியாய் ? திணறியபடி பேச அவர் சிரித்தார். ‘டியர் ஸ்டூடன்ஸ், நீங்கள் அடுத்த வருடம் ஒரு தொழில் துறை பட்டதாரியாக போகிறீர்கள், பட்டம் வாங்கியவுடன் நீங்கள் செல்லும் பணி எவ்வளவு கடினமாய் இருக்கும் என்பதை மாணவர்களாகிய உங்களுக்கு உணர்த்தவே எங்கள் கம்பெனியில் பயிற்றுவிக்கப்படுகிறது. நானும் உங்களைப்போல் பட்டதாரி மாணவனாய் இருந்து வந்தவன் தான். எனது மகனும் பட்டதாரியாய் இருப்பவர்தான், என்றாலும் ஒரு தொழிலில் இருக்கும் சிரமங்கள், நுணுக்கங்கள், இவைகள் யாவும் முதலாளியாய் இருப்பவருக்கும், மேற்பார்வையாளராய் இருப்பவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம், அதனால்தான் இங்கு எல்லோரும் எல்லாவித வேலைகளையும் பங்கிட்டு செய்கிறோம். உங்களுக்கு இரவு வேலையின் கடுமையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றே இரவிலும் உங்களுக்கு பணியை கொடுத்தோம். இதனால் நீங்கள் இந்த பத்து நாட்கள் வெளியில் எங்கும் போக முடியாமல் போய் விட்டது. இது உங்களுக்கு வருத்தமாக கூட இருக்கும். இரவு பணிக்கு வரவேண்டும் என்பதாலேயே எங்கள் கம்பெனி “கெஸ்ட் ஹவுசில்” உங்களை தங்க வைத்தோம். நல்லது இந்த பத்து நாட்கள் நீங்கள் செய்த உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை ஒவ்வொருவராக வந்து பெற்றுக்கொள்ளுங்கள். அனைத்து மாணவர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம், கம்பெனி அளித்த பணம் ஒவ்வொன்றையும் ஆசையுடன் தொட்டு பார்த்து மகிழ்ந்து கொண்டனர். என்னதான் தாய் தந்தை பணத்தில் படித்தாலும் இந்த பணம் அவர்கள் உழைத்து கிடைத்த பணமல்லவா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *