காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். ஊரிலென்றால் கிழக்குமுகம் பார்த்த வீடு. காலையில் முன் விறாந்தையில் நின்று பார்த்தால்.. காற்றிலசையும் தென்னோலைகளுக்கு ஊடாக பளிச் பளிச் என சூரியன் தோன்றிக்கொண்டு வருவான். அப்போதெல்லாம் அப்பா தலைக்கு மேலாக கையை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்யும்போது பார்க்க அவனுக்கு வேடிக்கையாயிருக்கும். இப்போது மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்கும் தனிமையில் அவனுக்கும் கடவுள் வணக்கமும் பிரார்த்தனையும் தேவைப்படுகிறது.
கப்பலுக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. சிறீலங்காவில் யுத்த காலத்தில் வேலைகளேதுமின்றி கஷ்டமும் கடனும் பட்டு வாழ்ந்த வாழ்க்கை வேணாமென்று போயிருந்தது. அதையெல்லாம் நிவர்த்திக்கமுடியாதா என்ற நைப்பாசையிற்தான் கப்பலில் வேலைக்கு வந்து சேர்ந்தான். ஒரு வருடம் வேலை செய்துவிட்டு ஊரோடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்றுதான் ஓர் உத்தேசம் இருந்தது. வருடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன… அவனது கடன் பிரச்சினைகள் தீர்ந்தபாடுமில்லை… வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபாடுமில்லை.
கப்பற்தளத்தின் பின் பக்கமாக வந்து நின்று வானத்தைப் பார்த்தான். கப்பலில் பயணிக்கும்போது திசைகள் மாறிவிடுகிறது. முதல் நாள் பயணித்த திசை, காலையில் விழிக்கும்போது மாறியிருக்கும்.. கப்பல் வேறு ஒரு திசையில் போய்க்கொண்டிருக்கும். ஒரே திசையில் பயணித்தாலும் பாகைக் கணக்கிலேனும் பக்கங்கள் மாறிவிடும். கடலலைகளில் கப்பல் அசையும்போது சூரியனும் வானத்தில் ஏய்த்து விளையாடுவதுபோலிருக்கும். கருமேகங்களுக்குள்ளிருந்து சூரியன் வெளிப்படும்போது தோன்றும் ஒளிர்வு மனதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். கைகளை உயர்த்தி வணங்கும்போது அவனுக்குக் கண்கள் கலங்கியது. அது, அந்த சூரிய ஜோதியின் தாக்கத்தினாலும் மனைவி பிள்ளைகளை நினைத்த பிரிவாற்றாமையாலும் கிளர்ந்த ஓர் உணர்ச்சி வசமாயிருக்கலாம். அவன் மௌனமாகிப்போனான். அப்படியே கண்களை மூடி மனசு தியானித்தது. இது வழக்கமான சங்கதிதான். கப்பல் வாழ்வில் ஒவ்வொரு காலையும் கண் கலங்கலுடன்தான் புலர்கிறது.
சமையற்கூடத்திலிருந்து அயூப்கான் யன்னலூடு பார்த்து, அவனை சத்தம் போட்டு அழைப்பது கேட்டது. அயூப்கான் மட்டமான கிரேக்க தூஷனத்தில் திட்டியபடி அவனை அழைத்தான். அடுப்பிலிருந்து கொதியெண்ணை தெறித்துப் பட்டதுபோல சுர்ர் என எரிச்சலேற்பட்டது தயானந்தனுக்கு. எனினும் கண்களை மூடி நிதானித்து பிரார்த்தனையைத் தொடர முயன்றான். மீண்டும் அயூப்கானின் குரல் அதட்டலாக ஒலித்தது. சட்டென சமையற்கூடத்தை நோக்கி ஓடினான்.
கப்பலில் சமையற்கட்டு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்தவன் தயானந்தன். அயூப்கான் முதன்மை சமையற்காரன். பாகிஸ்த்தான் நாட்டைச் சேர்ந்தவன். சமையற்கட்டுக்குள் நுளைந்தபோது அயூப்கானிடமிருந்து மேலும் திட்டுக்கள் கிடைத்தது..
“சீஃப் என்ஜினியர் காலையிலேயே என்னை பன்றிக்குப் பிறந்தவனே என்று ஏசிவிட்டுப் போகிறான்… நீ எங்கடா கிடந்தாய்? உன்னட வேலையையும் நானா பார்க்கோணும்?”
தயானந்தன் எதுவுமே பேசாது சாப்பாட்டு மேசையை துப்புரவு செய்யப் போனான். சீஃப் என்ஜினியரிடமிருந்து அயூப்கானுக்கு நல்ல டோஸ் கிடைத்திருக்கிறது.. அதனாற்தான் தன்மேல் இந்தமாதிரிப் பாய்கிறான். பன்றிமகன் என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது? நேரத்துக்கே டியூட்டிக்கு வராதது தனது தவறுதான் என எண்ணியவாறு மேசையிலிருந்த பிளேட்டுகளை கழுவுவதற்காக எடுத்தான்.
கப்பலில் கப்டின், சீஃப் என்ஜினியர், சீஃப் ஒபிசர் ஆகிய தரத்திலுள்ளவர்கள் கிரேக்க நாட்டவர்கள். இரண்டாம் தரத்திலுள்ளவர்களும் கிரேக்கியர்கள் அல்லது உக்ரேனியர்கள். அவர்கள் வரும்போது மேசையில் சாப்பாடு ரெடியாக இருக்கவேண்டும். சற்று சுணங்கினாலும், ஆசிய நாட்டுக்காரன் ஏதோ இழக்காரமானவன் என்பதுபோல கத்தத் தொடங்கிவிடுவார்கள். காலைச் சாப்பாடு ஆறரை மணிக்கு முதலே ரெடியாகிவிடவேண்டும்.
யாருக்கு ஒம்லட்.. யாருக்கு சொஸேஜஸ், யாருக்கு ஜூஸ் தேவைப்படும், யாருக்கு பசும்பால் விருப்பம்.. இப்படியான அய்ட்டங்களுடன் ரோஸ்ற் பண்ணப்பட்ட பிறெட் என அவரவர்க்கான சீட்களில் அவரவர்க்கு உவப்பாக காலைச் சாப்பாட்டை சரிக்குச் சரியாக வைத்துவிடுவான் தயானந்தன். அந்தளவு சாதுர்யம் அயூப்கானுக்கு இல்லை. அவன் சமையல் வேலைக்கு மட்டும்தான் லாயக்கானவன். சில உக்ரேனியர்கள் சிறிய மீன்களை சமைக்காது பச்சையாக சாப்பிட விரும்புவார்கள். டீப் ஃபிறீசலிருந்து அவற்றை ஏற்கனவே எடுத்து சாப்பிடக்கூடிய பதத்திற்கு மென்மையாக்கி வைக்கவேண்டும். தயானந்தன் தாவரபட்சிணி. கறுமம்.. இதையெல்லாம் செய்யவேண்டியிருக்கிறதே என அலுத்துக்கொண்டே அதையெல்லாம் செய்து வைப்பான். இவ்வாறெல்லாம் எண்ணியவாறு பிளேட்டுக்களையும் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு கழுவுவதற்காக சமையற்கூடத்துக்குள் வந்தபோது அயூப்கானின் கத்தல் தொடர்ந்தது.
“அத்தனை பேருக்கும் நானே குக்கிங் செய்து நானே சேவ் பண்ணவேண்டியிருந்தது.. உன்னால்தானே நான் அவங்களிடம் ஏச்சு வாங்கினேன்.. உனக்கென்ன பயித்தியமா..? சூரியனைப் போய் யாராவது பிறே பண்ணுவாங்களா..? முட்டாள்..!”
அந்த.. ‘பயித்தியமா..’ என்று மட்டமாகக் கேட்டது, ‘சூரியனை யாராவது வணங்குவாங்களா..?’ எனக் கேலி செய்தது, ‘முட்டாள்..’ என்று சொன்னது.. எல்லாம் தயானந்தனின் நெஞ்சுக்குள் நெருப்பை மூட்டியது. அவனது கண்கள் விரிந்து சிவந்தது.
“என்னடா பார்வை?.. … … பயம் காட்டறயா..?” – அரை குறை ஆங்கிலத்தில் அயூப்கான் கத்தினான். அவன் கத்தும்போது தூஷன வார்த்தைகளும் தாராளமாக வந்து விழும்;. தயானந்தன் அவற்றைக் காதில் போட்டுக்கொள்வதில்லை. ஆனால் இது வேறுமாதிரி சீற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஒரு கணம் தேவைப்படவில்லை.. “யூ.. பாஸ்ற்ரார்ட்… …” அடக்கிக்கொண்டிருந்த கோபமெல்லாம் அவனது கட்டுப்பாட்டையும் மீறி வெடித்தது. அயூப்கான் இதை எதிர்பார்க்கவில்லை. ஒருவகையிற் பார்க்கப்போனால் தயானந்தன் தனக்குக் கீளாக வேலை செய்பவன். நோஞ்சான் உடம்புக்காரன். தன்னைப் பார்த்து இந்தமாதிரிக் கத்துகிறானே..! மூர்க்கம் கொண்டவனைப்போல அவனை நோக்கி ஓடினான்.
தயானந்தனுக்கு செய்ய வழியொன்றும் தெரியவில்லை. அயூப்கான் என்றாலோ இரண்டு யானை பலம் கொண்ட ஆள். கழுவிக்கொண்டிருந்த பிளேட் தயானந்தனின் கையிலிருந்தது. ஒரு விசுக்கு விசுக்கினான். அயூப்கானின் கண்களுக்கு சற்று மேலாக அவனது நெற்றியில் பிளேட்டின் விளிம்பு ஒரு வெட்டு வெட்டியது. இரத்தம் குபுக்கென கண்ணையும் மூடி வழிந்தது. அவனது கண்தான் போய்விட்டதோ என்று பயந்துபோனான் தயானந்தன்.
அயூப்கான் பெரிதாக மூசிக்கொண்டு தன் இரு கைகளாலும் தயானந்தனின் தோள்களைப் பிடித்து உலுக்கினான். தயானந்தன் திமிறிக்கொண்டு தலையினால் அவனது நெஞ்சில் ஒரு இடி போட்டான். அயூப்கான் அவனது வயிற்றில் பலமாக உதைத்துத் தள்ளிவிட்டான். தயானந்தன் சுவருடன் போய் தலை அடிபட விழுந்தான்.. ‘அம்ம்மா..’ என தலையிற் கையைப் போட்டுத் தடவினான். தலையில் இரத்தம் கசிந்து வந்தது. விழுந்த இடத்திலிருந்து உன்னி எழுந்து கையில் அகப்பட்ட கத்தியை எடுத்தான். அயூப்கான் சற்றும் தாமதியாது ஒரே பாய்ச்சலில் அவனது கைகளை மடக்கி கத்தியை பறித்து வீசிவிட்டு அலகில் அறைந்தான். தயானந்தன் ஒரு பக்கமாகச் சரிந்து விழுந்தான். அயூப்கான் அதே வேகத்தில் சமையற்கட்டை விட்டு வெளியேறினான்.
தயானந்தன் நிதானிக்க முயன்றான். காலையில் சூரிய நமஸ்காரம் குழம்பியது முதல் எல்லாம் ஏறுக்கு மாறாக நடக்கிறது. இது எங்கே போய் முடியப்போகிறதோ தெரியவில்லை. நேரம் கடந்துகொண்டிருந்தது. வெளியேறிப் போன அயூப்கான் திரும்ப வருவானோ எனப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரே சமையலறையில் இரண்டு முகங்களை வைத்துக்கொண்டு எப்படி வேலை செய்வது? நிலைமையை எப்படிச் சமாளித்துக்கொள்ளலாம் என்றும் தோன்றவில்லை. பக்கத்திலிருந்த இருக்கையிலமர்ந்து யோசித்தான். பன்னிரண்டு மணிக்கு மதியச் சாப்பாட்டிற்கு வந்துவிடுவார்கள். சமையல் செய்யவேண்டும்.
தயானந்தன் சமையற்கட்டு உதவியாளனாயிருந்தாலும் இன்னொரு வகையிற் பார்க்கப்போனால் அவனும் ஒரு சமையற்காரன்மாதிரித்தான். கப்பலிலுள்ள தொழிலாளர்களில் அரைக்கரைவாசிப்பேர் இலங்கையைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். அவர்களுக்கு, அவ்வப்போது சமையற்காரர்களாகக் கப்பலுக்குப் பணியேற்று வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அல்லது உக்ரேனைச் சேர்ந்த சமையற்காரர்களின் சமையற் சாப்பாடு சரிப்பட்டு வருவதில்லை. இந்தப் பிரச்சனை பற்றிய அவர்களது முறைப்பாடு கப்டினுக்கு எப்போதும் ஒரு தொல்லையாயிருந்தது. அதைச் சமாளிப்பதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கான சமையலைச் செய்யுமாறு தயானந்தனைப் பணித்திருந்தார். அதற்காக அவனுக்கு மாதாந்தம் சம்பளத்துக்கு மேலாக ஐம்பது டொலர் அலவன்ஸாகக் கொடுப்பார்.
அயூப்கானின் சமையலுக்குத் தேவையான வெங்காயம் மிளகாய் வெட்டுதல், பாத்திரங்களைக் கழுவி ரெடி பண்ணிக் கொடுத்தல் போன்ற எடுபிடி வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு தனது சமையலைத் தொடங்குவான் தயானந்தன். அடுப்புவசதி கருதி அயூப்கான் முதலில் தனது சமையல் வேலையையும் அதன் பின்னர் தயானந்தன் சமையல் செய்வதாகவும் ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். தயானந்தன் வெஜிட்டேரியனானபடியால் மீன் இறைச்சி போன்ற மச்சமாமிசங்களை வெட்டித் துப்பரவு செய்து சமையற் பாத்திரத்திலிட்டுக் கொடுப்பது அயூப்கானின் வேலை என்றும் அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது.
எல்லாம் நல்லாய்த்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போது ஏற்பட்ட குழப்ப நிலைமையை எப்படிச் சமாளிப்பது? இன்றைக்கு சிக்கன் சமைக்கவேண்டும்.. அயூப்கான் இனி அந்த வேலைகளைச் செய்து தருவானோ என்னவோ என தயானந்தன் யோசித்துக்கொண்டிருந்தபோது, அயூப்கான் தனது நெற்றிக் காயத்துக்கு மருந்திட்டு பிளாஸ்ட்டர் ஒட்டிய தோற்றத்துடன் வந்தான். இன்னொருவர்மூலம் கப்டினிடமிருந்து தயானந்தனுக்கு அழைப்பு வந்தது.
பாகிஸ்த்தான்காரன் போட்டுக் கொடுத்துவிட்டான் போலிருக்கிறது.. என எண்ணியவாறு கப்டினின் அறைக்குப் போனான். கிரேக்க முறைப்படி விதம் விதமான ஸ்வீட்கள் செய்யக்கூடியளவிற்கு அயூப்கான் பயிற்றப்பட்ட சமையற்காரன். அவ்வப்போது கப்டினுக்குப் பிடித்த அய்டங்களைச் செய்து கொடுத்து அவரிடம் நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருந்தான். என்ன ஆகுமோ என்ற பதட்டத்துடன் கப்டினுக்கு முன்னே வந்தபோது அவர் அவனது எந்த விளக்கத்தையும் கேட்கத் தயாராயில்லை. சக தொழிலாளியைத் தாக்குவதற்காகக் கத்தியைத் தூக்கியதென்பது பாரதூரமான குற்றம் என தயானந்தனை எச்சரித்து நூறு டொலர் தண்டம் விதித்து அனுப்பிவைத்தார். அந்தத் தொகை அவனது அந்த மாதச் சம்பளத்தில் வெட்டப்படும்.
தயானந்தன் சோர்ந்துபோனான். வீட்டு நினைவு வந்தது. அவர்களையெல்லாம் பிரிந்து வந்தது அவர்களுக்காக உழைத்து சம்பாதிப்பதற்காகத்தான். இப்படி ஒரு பெரிய தொகை அநியாயமாகத் துண்டு விழுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நூறு டொலர் என்பது அவனைப் பொறுத்தவரை பெரிய தொகைதான். தானும் கிட்டத்தட்ட அயூப்கான் செய்கிற அதேயளவு வேலையைத்தான் செய்கிறேன்.. ஆனால் அவனுக்குத் தன்னைவிட மூன்று நான்கு மடங்கு அதிகமான சம்பளம் கிடைக்கிறது.. தான் இரண்டோ மூன்று வருடங்களில் உழைக்கும் தொகையை அவன் ஆறோ ஏழு மாதங்களில் சம்பாதித்துக்கொண்டு போய்விடுவான். சிறீலங்காவிலுள்ள ஏஜன்ட்டுகள் எங்களை ஏய்த்து குறைந்த சம்பளத்துக்குக் கொண்டுவந்து மாட்டிவிடுகிறார்கள்… இவ்வாறான கவலைகள் தயானந்தனுக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. இப்போது நூறு டொலர் இழப்பு அவனை அவ்வாறானதொரு சலிப்புணர்வுக்குட்படுத்தியது. தான் வீணாக அவசரப்பட்டு சண்டைக்குப் போய்விட்டேனோ என்று தோன்றியது. பேசாமல் இருந்திருக்கலாம். திரும்பப் போய் அயூப்கானுக்கு முகம் கொடுப்பதற்கே எரிச்சலாயிருந்தது. சமையற் கட்டுக்குப் போகாது கப்பலின் வெளித்தளத்திற் போய் அமர்ந்தான்.. மனநிலையை மாற்றவேண்டும்.
கடல்.. அலை பாய்ந்துகொண்டிருந்தது.
நீண்ட கடற்பயணம். ருமேனியாவிலிருந்து இந்தோனேசியா போய்ச் சேர இருபத்தெட்டு நாட்களாகுமென கப்டின் கூறியிருந்தார். ஏற்கனவே பதினான்கு நாட்களாக கப்பல் இரவு பகலாக செயிலித்துக்கொண்டிருக்கிறது. கண் பார்க்குமிடமெல்லாம் கடல். மண்ணும் மரங்களும் மனிதர்களும் அற்ற கடல்நீரினால் மட்டுமான உலகம்போலவும், ஐந்தோ ஆறாயிரம் மீட்டர்கள் ஆழமான சமுத்திரத்தில் இத்தனூண்டு கப்பல் மட்டும் போய்க்கொண்டிருப்பது போலவும் ஒருவித படபடப்பு மனதில். நெஞ்சில் வந்து மோதும் அலைகள். இந்து மகா சமுத்திரத்தில் பயணிக்கையில் நாட்கணக்காக வேறு எந்தக் கப்பலையேனும் காண்பதே அரிதாயிருக்கிறது. காற்றின் வீச்சு அதிகரித்து காலநிலை குளறுபடியாகும் வேளைகளில் வயிற்றையே கலக்குவதுபோல கப்பலை ஆட்டிப்படைக்கிறது கடல். அப்படியே கப்பலைக் கவிழ்த்துவிடுமோ என்றுகூட பயமேற்படுகிறது.
என்ஜின் இயக்கத்தின் சத்தத்தையும் கடலோசையையும் தவிர இந்த உலகில் வேறு அசுமாத்தம் ஏதுமற்றுவிட்டதைப் போன்ற தனிமையுணர்வு. கப்பலில் எத்தனைபேர் வேலை செய்தாலும் வேறு வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள், அல்லது ஒரே நாட்டவரானாலும் வேறு வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தொழில்நிமித்தம் ஒன்றாகச் சேர்ந்திருந்தாலும்… அவரவர்க்கு அவரவர்க்கான பிரச்சனைகள். என்ன ஏது என்று கேட்பதற்கு, தனக்கு ஆறுதல் கூறுவதற்கென்று யாராவது ஒருவரேனும் வரவில்லையே என்று தோன்றியது தயானந்தனுக்கு. அவரவர் தங்கள் கடமைகளில் ஈடுபட்டிருக்கலாம். சாப்பாட்டு நேரத்தில் வரும்போது விசாரிப்பார்கள். எனினும் ஏதோ ஒரு வகையில் தனிமைப்பட்டுப்போயிருப்பது போன்ற உணர்வுதான்..
அலைகள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக தாலாட்டுவதுபோல கப்பலை அசைத்துக்கொண்டிருக்கிறது. கண்கள் சொருக அப்படியே பெஞ்சிற் சாய்ந்தவாறு தூங்கிப்போனான் தயானந்தன்.
ஒரு மணித்தியாலம்கூட ஆகியிருக்காது. யாரோ முதுகிற் தட்டினார்கள். திடுக்குற்று விழித்ததும் தான் எங்கிருக்கிறேன் என்று புரியாது தடுமாற்றமாயிருந்தது. எதிரே நின்றவன் அவனை கப்டின் அழைப்பதாகக் கூறினான். சமையற்கட்டுக்குப் போகாது தூங்கிப்போய்விட்டது அப்போதுதான் மனதில் உறைத்தது. உனக்கு இது தேவையாடா எனத் தன்னையே வைதவாறு கப்டினின் அறைக்குப் போனான். சமையற்கட்டுக்கு வந்து உதவிகளைச் செய்து தராது வெளியே போய் தூங்கிக்கொண்டிருப்பதாக அயூப்கான் முறையிட்டிருக்கிறான். உனது டியூட்டியை ஒழுங்காகச் செய்யாவிட்டால் இன்னும் ஐம்பது டொலர்கள் தண்டமாக வெட்டவேண்டியிருக்கும்.. தொடர்ந்தும் கப்பலில் வேலை செய்ய விருப்பமா இல்லையா என்று கேட்டார் கப்டின். ‘அப்படியென்றாற் சொல்லு.. அடுத்த போர்ட்டில் சைன் ஓஃப் செய்யலாம்..’
நல்ல கதைதான்.. வேலையை விட்டு வீட்டுக்குப் போய் என்ன செய்வது? என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள் சாமி.. நான் சமையற்கட்டுக்குப் போய்விடுகிறேன் எனப் பணிவு பண்ணிக்கொண்டு திரும்பினான் தயானந்தன்.
மனக்கவலையுடன் சென்று காற்றோட்டமாக அமர்ந்ததும் தூக்கம் கண்களைத் தழுவிக்கொண்டுவிட்டது.. அது ஒரு குற்றமா? அதற்கு ஐம்பது டொலர்கள் தண்டமா.. என எண்ணியபோது உண்மையிலேயே மனம் வீம்பு கொண்டமாதிரியிருந்தது.
சமையற்கட்டில் அயூப்கானுக்கு முகம் கொடுக்காமல் வெடுக் வெடுக் என மறு மறு பக்கமாகத் திரும்பினான். அயூப்கானின் சமையலுக்குத் தேவையான உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமல் மேசையிற் கிடந்தன. தக்காளியையும் சலாட் இலைகளையும் கழுவி வைக்கவேண்டும். தயானந்தன் அந்த வேலைகளைச் செய்யவில்லை..
அயூப்கானும் இதைக் கழுவு அதை வெட்டு என வழக்கம்போல ஏவவும் இல்லை. தயானந்தனின் அன்றய சமையலுக்கான சிக்கனை குளிரறையிலிருந்து எடுத்து வந்து சுத்தம் செய்து தரவேண்டியவன் அயூப்கான். அந்த வேலையை அவன் செய்யவுமில்லை.
அயூப்கான் அடுப்பில் இறைச்சியைப் பதப்படுத்தி வேகவைத்திருந்தான். இன்னொரு அடுப்பில் சூப் தயாராகிக்கொண்டிருந்தது. அவற்றை அப்படியே விட்டு வெளியேறிப் போனான். தயானந்தனுடன் ஏதும் பேசவுமில்லை. மற்றய நேரமென்றால் ஏதாவது அலுவலாக வெளியே போகும்போது அடுப்பைக் கொஞ்சம் பார்த்துக்கொள் என கூறிவிட்டுச் செல்வான். தன்னோடு முகம் கொடுத்துப் பேசுவதற்கு அவனுக்கும் சங்கடமாயிருக்கலாம். அதனாற்தான் பேசாமற் போகிறான் என தயானந்தன் தனக்குள்ளே நினைத்துக்கொண்டு நின்றான்.
பத்துப் பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.. அயூப்கான்; வந்து சேரவில்லை. அடுப்பில் வைத்த இறைச்சியை இறக்கி வைப்பதற்காகவென்றாலும் வரத்தானேவேண்டும்.. அதன் பிறகுதான் தனது சமையலைத் தொடங்கலாம் எனப் பார்த்துக்கொண்டிருந்தான் தயானந்தன். அவனுக்குக் கொஞ்சம் தயக்கமாகக்கூட இருந்தது. திரும்பவும் தன்னைப்பற்றி போட்டுக் கொடுக்கத்தாதன்; கப்டினிடம் போய்விட்டானோ..? உருளைக்கிழங்குகளையும் வெண்காயங்களையும் வெட்டித் தரவில்லை என்று முறைப்பாடு செய்வதற்காகவும் போயிருக்கலாம். இன்னொரு ஐம்பது டொலர்களை இழப்பதற்கு அவன் சம்மதமாக இல்லை. செய்துகொண்டிருந்த மற்ற அலுவல்களை விட்டு நல்ல பிள்ளையைப்போல, அயூப்கான் எடுத்து வைத்திருந்த உருளைக்கிழங்குகளையும் வெண்காயத்தையும் வெட்டி வைப்பதுதான் உத்தமம் என்று தோன்றியது. சலாட் இலைகளையும் தக்காளியையும் கழுவி சுத்தம் செய்து பிளேட்களில் அடுக்கி வைக்கவேண்டும்..
இறைச்சிச் சட்டியில் தண்ணீர் வற்றி எரிவு மணம் வந்தது. மடையன்.. செய்த சமையலையும் மறந்துபோய் நிற்கிறானே..! தயானந்தனுக்கு சந்தேகமாயிருந்தது.. ஏதாவது உட்காரணத்துடன்தான் வராது நிற்கிறானோ? தன்னை இன்னும் ஒரு பிரச்சனையில் மாட்டிவிடும் நோக்கமாயிருக்கலாம். சட்டியை இறக்கி வைத்தான். கோபம் பற்றிக்கொண்டு வந்தது. அயூப்கான் சொல்வதைக் கேட்டு கப்டின் தன்மீது பாயத் தொடங்கிவிடுவார். தானும் போய் தனது பக்க நியாயங்களைப் பேசவேண்டும் என வேகமடைந்தான். செய்த அலுவல்களையெல்லாம் அந்தப்படியே விட்டு வெளியேறினான். கப்டினின் கபின் மேலே மூன்றாவது தளத்திலிருந்தது. ஒவ்வொரு படியாக ஓடி ஓடி ஏறினான்.
இரண்டாவது தட்டில் கால் வைத்தபோது ஒரு சந்தேகம் தோன்றியது.. ஒருவேளை அயூப்கான் குளிரறைக்குப் போயிருப்பானோ? தனது சமையலுக்குத் தேவையான சிக்கினை எடுத்து வருவதற்காகப் போயிருக்கலாம்.
கப்பலின் குளிரறையில் மாதக் கணக்காகத் தேவைப்படும் இறைச்சி வகைகளும் இதர மீன் வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக மைனஸ் பதினேழு டிகிரி செல்சியஸ் அளவான உறைகுளிரில் அவை எப்போதும் பழுதுபடாமலிருக்கும். அவ்வப்போது சமையலுக்குத் தேவையானவற்றை கதவைத் திறந்து உள்ளே சென்று எடுத்துக்கொண்டு திரும்பக் கதவைப் பூட்டிவிட்டு வருவதுண்டு. குளிரறையினுள் குளிர் இழப்பைத் தவிர்ப்பதற்காக உள்ளே செல்லும்போதும் கதவைத் தாளிட்டுவிட்டு சென்று கைச்சுறுக்காக தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வருவார்கள்.
ஆனால் குளிரறைக் கதவில் அண்மையில் ஒரு கோளாறு ஏற்பட்டிருந்தது. கதவைத் தாளிட்டால் அது தானாக லொக் ஆகிவிடும். ஊள்ளேயிருந்து திறக்கமுடியாதபடி உடைவு ஏற்பட்டிருந்தது. அந்தப் பழுதடைவை அடுத்த துறைமுகத்திற்குப் போனபினனர்தான் திருத்தியமைக்கலாம்.. அதுவரை அவதானமாகச் செயற்படும்படி கப்டின் பணித்திருந்தார். குளிரறைக்குச் செல்லும்போது இரண்டு பேருமாகச் செல்லவேண்டும்…. ‘கதவைத் தாளிட வேண்டாம்.. ஒருவர் உள்ளே போய் அய்ட்டங்களை எடுத்து வரும்வரை வெளியே மற்றவர் காத்து நிற்கவேண்டும்.’ எனக் கூறியிருந்தார்
அயூப்கான் அதற்குள்ளேதான் போய் மாட்டிக்கொண்டுவிட்டானோ? அவன் அந்தளவுக்கு முட்டாள் இல்லை என்பதும் தயானந்தனுக்குத் தெரியும். ஆனால் புத்திசாலித்தனமெல்லாம் கோபாவேசப்படும்போது வேலை செய்வதில்லைத்தானே?.
உள்ளே போகும்போது அறைக்கதவை வெளியே இழுத்துக் கொழுவிவிடக்கூடிய ஒரு தற்காலிக ஏற்பாட்டையும் ஏற்கனவே செய்திருந்தார்கள். வெளியே கொழுவியில் கதவை இழுத்து மாட்டிவிட்டுப் போயிருந்தாலும், கப்பலின் அசைவாட்டத்தில் அது விடுபட்டு கதவு தானாக மூடிக்கொண்டிருக்குமோ..?
அப்படி ஆகியிருந்தால்.. இவ்வளவு நேரமும் அதற்குள் அடைபட்டிருந்தால்.. அந்த உறைகுளிரில் செத்துப்போயிருப்பானே..!
அந்த நினைவு தோன்றியதும் தயானந்தனின் உடல் ஒருமுறை குலுங்கி அதிர்ந்தது. படிகளில் ஏறிய அதே வேகத்தில் இறங்க முற்பட்டபோது தடுமாறி விழுந்தான். குளிரறை கப்பலின் அடித் தளத்திலிருந்தது. விழுந்து எழும்பி மூச்சிரைக்க இரைக்க பாய்ச்சல் பாய்ச்சலாக படிகளில் இறங்கி ஓடினான். குளிரறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. அப்பாடா.. என ஓர் ஆறுதல்.
அயூப்கான் இங்கு வந்திருக்கவில்லை என எண்ணித் திரும்பினான்.. அதற்கு முன், கதவை ஒருமுறை தட்டிப் பார்க்கலாம் எனத் தோன்றிய அதே கணத்தில், உள்ளிருந்து தட தடவெனச் சத்தங்கள் கேட்டது.
தயானந்தனுக்கு மூச்சே நின்றுவிடும் போன்ற பயம். சட்டென பூட்டைத் திருகி கதவை இழுத்துத் திறந்தான். உள்ளே அயூப்கான் நின்ற நிலையிலேயே துள்ளித் துள்ளி மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான். தனது உடலின் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக துள்ளல் செய்தும் குனிந்து நிமிர்ந்தும் இயங்கியபடியே நின்றிருக்கிறான். எனினும் இயக்கமற்றுப்போனவன் போலத் தோன்றினான்.
திறந்த கதவினூடாக அயூப்கான் கைகளை நீட்டிக்கொண்டு முன்னே சரியவும் தயானந்தன் அவனைத் தாங்கிப் பிடிக்கவும் சரியாகவிருந்தது. அயூப்கானின் மூச்சு இயல்பு நிலையடைந்து தலை நிமிரும்வரை அவனைத் தனது தோளில் தாங்கிக்கொண்டு நின்றான் தயானந்தன்.
– ஞானம் நவம்பர் 2016