உயிர் காத்த நல்லாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,045 
 
 

கோடை விடுமுறையில் கலாசாலை மூடியிருந்தபோது எங்கள் ஊருக்குப் போயிருந்தேன். போன அன்றைக்கு மாலையில், வடக்கே மலையடிவாரத்தில் உள்ள ‘கல்லணை’ வரைக்கும் காலார மலைக் காற்று படும்படி உலாவிவிட்டு வரலாமென்று கருதிப் புறப்பட்டேன். பேச்சுத் துணைக்கு உடன்வர ஒருவராவது அகப்பட மாட்டாரா என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது திருவடியா பிள்ளை வந்து சேர்ந்தார். குசலப்பிரச்னமெல்லாம் வழக்கமாக முடிந்தது. அவர் கேட்க வேண்டும்’ என்று காத்திருக்காமல் நானாகவே கருப்பட்டிப் புகையிலை, வெற்றிலை, பாக்கு, முதலிய காணிக்கை களுக்கு அருகில் இருந்த கடையில் ஆர்டர்’ செய்து வரவழைத்துவிட்டேன். பிள்ளை மனங் குளிர்ந்தார்.

“அப்ப, நீங்க எங்ஙனே இப்பிடிக் கிளம்பிட்டிக?” பாக்கை மென்று கொண்டே திருவடியா பிள்ளை கேட்டார்.

“வேறெங்குமில்லை, பிள்ளைவாள்! இப்படிக் கல்லணையாறு வரை காலாரப் போய்விட்டு வரலாம் என்றுதான்.”

“அடேடே! கல்லணையாத்துப் பக்கமா போறிக? நாங்கூட அங்ஙனேதான் பொறப்பிட்டேன்! ‘ஒரெத்த நல்லா கோயில்’ வரை போகணும்…. அப்பப் பொறப்பிடுங்க, போவலாம்!”

இருவரும் கிளம்பினோம். போகிற போக்கில் பேச்சுக்குச் சுவாரஸ்யமான விஷயம் வேண்டுமே என்று நான் பிள்ளையவர்களை ஒரு கேள்வி கேட்டு வைத்தேன். திருவடியா பிள்ளையைப் போன்ற ஒருவர் கூட வரும்போது பேச்சுக்குச் சரியான விஷயம் அகப்படாமலா போகும்?

“ஆமாம் பிள்ளைவாள்… எனக்குப் பல நாளாக ஒரு சந்தேகம். உங்களிடம் கேட்க வேண்டும் என்று ஆசை கல்லணையாற்றுக் கரையிலே இருக்கிற அம்மனோட கோவிலுக்கு ஒரெத்த நல்லா கோவில்’னு இந்தப் பக்கத்தில் பேர் வழங்குகிறதே?… அந்தப் பெயரின் அர்த்தமே எனக்கு விளங்கவில்லையே?”

“காலேஜிலே லெக்சரரா இருந்தாப் போது முங்களா? இதுக்கெல்லாம் அனுபவமிருந்தா விளங்கும்! இப்போது வழங்கும் பெயர் சரியான பெயரேயில்லை! கல்லணையாற்றுக் கரையிலுள்ள அம்மன் கோவிலின் பெயர் உயிர் காத்த நல்லாள் கோவில்’ என்பது. நாளடைவில் பழகு தமிழில் மருவி மருவி அது அடைந்த புத்துருவமே ‘ஒரெத்த நல்லா கோவில்’ என்னும் பொருள் விளங்காத பெயர்” என்றார் திருவடியா பிள்ளை.

“அப்படியானால் அந்தப் பழைய பெயருக்கு ஆதாரமான வரலாறு ஏதாவது இருந்தாக வேண்டும்….? ஒரு காரணமுமின்றி அந்த அம்மனுக்கு உயிர் காத்த நல்லாள்’ என்ற பெயர் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?” இப்படி நான் மீண்டும் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியபோதுதான் பிள்ளையவர்களிடமிருந்து இந்தக் ‘கதை’ பிறந்தது.


“பல தலைமுறைகளாக இங்கே இந்தப் பக்கத்தில் நிலவி வரும் ‘ஒரு நம்பிக்கை’ உங்களுக்கும் தெரிந்ததுதானே? நம்மூர்க்காரர்களும் இங்கே கல்லணைக்கு மேலே மலையில் வேட்டையாடுவதற்காக வரும் வேட்டைக்காரர்களும் அந்த நம்பிக்கையை இன்றும் ஒரு கட்டுப்பாடான சம்பிரதாயமாகவே போற்றி மேற்கொண்டிருக் கிறார்கள். இங்கே முயல் முதல் பயங்கரமான வேங்கைப் புலிகள் வரை எதை வேட்டையாட வேண்டுமானாலும் மலையடிவாரத்திற்கும், ஆற்றங்கரையிலுள்ள இந்த அம்மன் கோவிலுக்கும் இடைப்பட்ட பிரதேசம் அம்மனின் ஆட்சி எல்லை. அம்மனின் ஆட்சி எல்லையில் சகல ஜீவ ஜந்துக்களும் அவள் காவலில் அடங்கியிருக்கின்றன.

“அவள் காவலுக்கு உட்பட்ட பிரதேசத்தில் எந்த ஒரு சிறு உயிருக்கும் அழிவு வரக் கூடாது. அவ்வளவேன்? ரத்தக் குறியே காணக் கூடாது. அம்மன் துடியான தேவதை. கட்டுப்பாட்டை மீறியவர்களைத் தண்டிக்க வேண்டிய விதத்தில் தண்டிக்காமல் விடமாட்டாள்’ என்ற இந்த நம்பிக்கை அந்தக் காலத்தில் இப்போது இருப்பதைவிட இன்னும் பரிபூரணமான அளவில் இருந்தது. இப்போதும் அந்த நம்பிக்கை கெடவில்லை. ஆனாலும் கண்டும் காணாமலும் ஏதேதோ நடந்து விடுகிறது. ஆனாலும், அந்த நாட்களிலோ அவனவனுக்குத் தன் பயம் இருக்கும். இந்த மாதிரி விஷயங்களில் விளையாட்டாகக் கூட அவநம்பிக்கை ஏற்படாது. ஆனாலும், அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு முத்துவேலு நாயக்கன்’ இருக்கத்தான் இருந்தான். அடாததைச் செய்தான், படாததைப் பட்டான். அம்மனுடைய சக்தியே அதனாலேதான் வெளியாயிற்று.”

“அந்த, ‘முத்துவேலு நாயக்கன்’ அப்படி என்னதான் ஆகாத காரியத்தைச் செய்துவிட்டான்? அதனால் என்ன விளைந்துவிட்டது? சற்று விவரமாகத்தான் சொல்லுங்களேன் பிள்ளைவாள்!” என்றேன் நான்.

“அந்தக் கதையைத்தானே இப்போது நான் சொல்லத் தொடங்கினேன். நீங்கள் ஏன் இடையிலே இடையிலே மறித்துக் கேள்வி கேட்கிறீர்கள்? பேசாமல் கேட்டுக்கொண்டு வாருங்கள். எல்லாம் நானாகவே விவரமாகச் சொல்லுவேன்” – இந்த மறுமொழியால் என் குறுக்குக் கேள்விகளை நிறுத்தி விட்டு, பிள்ளை மேலே தொடர்ந்து கூறலானார்.

“நான் சொல்லுகிற இந்தச் சம்பவம் நடக்கும் போது தான் சர்க்காரிலிருந்து செலவு செய்து அம்மன் கோவிலுக்கு வடக்கே மலையடிவாரத்தில் ஆற்றின் குறுக்கே அணை வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அணைக்கட்டு வேலைக்காகப் பெரிய பெரிய என்ஜினீயர்களெல்லாம் வந்து தங்கியிருந்தார்கள். அணையில் வேலை செய்யும் கூலிகளுக்கு மேஸ்திரியாக நம்மூர் முத்துவேலு நாயக்கன்தான் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான். மிகவும் சாத்வீகமாகத்தான் இருப்பான். ஆனால் அவனைப் பிடித்த போதாத காலம்! கையில் நாலு காசும், சந்தர்ப்பமும் சேர்ந்து கொண்டதும் ஆள் எதற்கும் துணியலாம் என்று எண்ணியோ என்னவோ, துணிந்து விட்டான், கட்டுப்பாட்டை மீற!

என்ஜினீயர்களை மேற்பார்வை செய்வதற்காக ஒரு வெள்ளைக்காரத் துரையும் வந்திருந்தான். அவன் பேர் ‘ஜான் பீட்டர்’ என்றோ , என்னவோ சொல்லிக் கொண்டார்கள். இந்த வெள்ளைக்காரத் துரையை ‘உயிர் காத்த நல்லா’ளினும் உயர்ந்த தெய்வமாக மதிக்கத் தொடங்கியதால்தான் முத்துவேலு நாயக்கன் ‘அந்தக் கதி’யை அடைந்தான்.

அந்தக் காலத்தில் ஆகாசத்திற்கும் பூமிக்குமாக அடர்ந்து படர்ந்த மூன்று பெரிய ஆலமரங்கள் கோவிலைச் சுற்றி இருந்தன. இவைகளுக்கு இடையே இருபது தப்படி நீள அகலமுள்ள இடுப்பளவுச் சுவரோடு கூடிய காம்பவுண்டு தான் அம்மனின் சந்நிதி. இந்த நான்கு புறத்துச் சுவர்களுக்கும் மேலே வெட்டவெளிதான் அதாவது கூரையோ, மேலடைப்போ கிடையாது. இதில் ஒரு விசேஷமென்ன வென்றால் மூன்று ஆலமரத்திலிருந்தும் மூன்று கிளைகள் பிரிந்து வந்து அம்மன் வீற்றிருந்த இடத்திற்கு நேர் மேலே கூடிப் பின்னியிருந்தன. மழை பெய்தாலோ, வெய்யில் உக்கிரமாகக் காய்ந்தாலோ, ஒரு பொட்டு மழைத் துளியோ, வெய்யிலோ , அம்மன் மேல் படமுடியாமல் இந்தக் கிளைகள் இணைந்து விமானம் போலக் கூடியிருந்தன. இதனை அம்மனின் தெய்வீக சக்தியால் விளைந்ததெனக் கருதி அந்தக் கிளைகள் கூடுமிடத்தில் மூன்று பெரிய வெண்கல மணிகளைக் கட்டியிருந்தார்கள். இந்த மணிகளை அடிக்காமல் பூசை நடத்தக் கூடாது என்று ஓர் ஐதீகமும் இருந்து வந்தது. கோவில் காம்பவுண்டுச் சுவருக்கு நடுவில் பெரிய வாசல் உண்டு. ஆனால் அந்த வாசலுக்குக் கதவு, பூட்டு எதுவும் கிடையாது.

கோவிலின் சுற்றுப்புறத்தில் நாலுபக்கமும் ஏறக்குறைய ஒரு பர்லாங் தூரத்திற்கு அருகம்புல் தளதளவென்று வளர்ந்து காடாக மண்டிக் கிடக்கும். எப்போதும் இருப்பதைவிட ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து முடிந்திருப்பதனால் மார்கழி, தை மாதங்களில் இந்த அருகம்புல்வெளி கண் கொள்ளாக் காட்சியாகப் பச்சை மரகதத்தில் கம்பளம் செய்து பேர்த்தியது போல அற்புதமாக இருக்கும். பிராணிகள் தாமாக வந்து மேயலாமே தவிர இந்தப் புல்லையாரும் அறுத்துக்கொண்டு போக மாட்டார்கள். ஊர் மாடுகளை இங்கே மேய்வதற்கு அனுப்பினாலோ, அவைகளில் சில தப்பித் தவறி மலையடிவாரத்துப் புதர்களுக்குப் போய்த் துஷ்ட மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டுவிடும். ஆகையால் ஊர்மாடுகளைத் தீவனவசதி குறைந்துபோன தட்டுமுட்டான காலத்தில் கூட இந்தப் பக்கம் மேய்க்கக் கொண்டுவர மாட்டார்கள். இதனால் மலையிலுள்ள மான்களுக்கு மட்டுமே இந்த ‘உயிர்காத்த நல்லாள்’ கோவில் புல்வெளி பெரிதும் பயன்பட்டு வந்தது. மலை மேலாவது புலி முதலிய துஷ்ட மிருகங்களுக்கு மான்கள் அஞ்சி மறைவாகப் பதுங்க வேண்டியதிருக்கும். அடிவாரத்துப் புதர்களைத் தாண்டி இங்கே அம்மன் கோவில் புல்வெளிக்கு வந்துவிட்டால் நிர்ப்பயமாக மேயலாம். வேட்டைக் காரர்களாலோ துஷ்ட மிருகங்களாலோ எவ்விதமான விபத்தும் ஏற்படுவதற்கில்லை.

மார்கழி, தை ஆகிய இரண்டு மாதங்களிலும் என்றைக்கு, எப்போது இங்கே வந்தாலும் புல்வெளி நிறையப் புள்ளி மான்களைக் கூட்டம் கூட்டமாகக் காணலாம். தை மாதப் பிறப்பின் போது ஊராரெல்லோரும் சேர்ந்து உயிர்காத்த நல்லா’ளுக்குப் பொங்கல் படைப்பதுண்டு. ‘படையலின் போது ஊர் மக்கள் எல்லோரும் கூட்டம் கூடி வந்தாலும், அம்மனின் பாதுகாவலில் உயிர் பயத்தை அறவே மறந்தவை போல வெறித்து ஓடாமல் வழக்கம் போலவே மான்கள் தம் போக்கில் மேய்ந்து கொண்டிருக்கும். இதை நானே பல முறை கண்ணாரக் கண்டிருக்கிறேன். படையலின்போது நிகழும், கொட்டோசை, சங்கோசை, மணியோசை, எல்லோரும் சேர்ந்து குரவையிடும் சப்தம்’ – இவ்வளவையும் கேட்டும் வெறித்து ஓடாமல் சுபாவமாகப் புல் மேய்ந்து கொண்டிருக்கும் !

அந்த வருடம் சர்க்கார் அணைக்கட்டு வேலையைத் தொடங்கும் போது கார்த்திகை மாதம். மழை காலமாக இருந்தாலும் ஆற்றுத் தண்ணீரின் போக்கை வேறு பக்கம் மடக்கித் திருப்பிவிட்டு வேலையை ஆரம்பித்திருந்தார்கள். சித்திரை வரை வேலை நடக்க முடியும் என்று திட்டமிட்டிருந்தார்கள். திட்டப்படி முடிவதற்காக வேலைகள் ஜரூராக நடந்து வந்தன. மாதம் ஒன்று கழிந்தது. அதற்கு முன்பு சீந்துவாரற்றுக் கிடந்த முத்துவேல் நாயக்கனுக்கு மேஸ்திரி வேலையை ஒட்டி ஊரில் கொஞ்சம் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. அவனும் கொஞ்சம் பெரிய மனிதத் தோரணையோடு வளைய வளைய வந்து போய்க் கொண்டிருந்தான். இதையெல்லாம் விட வேறு ஓர் முக்கிய காரணமும் இருந்தது. அவனுடைய செல்வாக்கிற்கு பயல்’ என்ன மாயம், வசியம் செய்தானோ, பீட்டர் துரையின் தயவை அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தான். துரைக்குக் கோழி முட்டையிலிருந்து, குடி வகைகள் வரை எது வேண்டுமானாலும் தன்னைத் தேடிக் கூப்பிடும்படி நெருக்கமான பழக்கத்தை எப்படியோ ஏற்படுத்திக் கொண்டிருந்தான்!

தை மாதப் பிறப்பிற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருக்கிறபோது, ஒரு நாள் மாலை, பீட்டர் துரை முத்துவேல் நாயக்கனோடு இந்த அம்மன் கோவில் பக்கம் அருமையாக வந்திருக்கிறார். அன்றுவரை அணைக்கட்டுக்கருகிலுள்ள இடங்களிலேயே தன்னுடைய மாலை நேரத்து வாக்கிங் கை நடத்திக் கொண்டிருந்த துரை, அன்று என்ன நினைத்துக் கொண்டாரோ, வேறு ஏதாவது புதிய இடத்திற்கு அழைத்துப் போகும்படி முத்துவேலு நாயக்கனிடம் கூறினார். அதனால் தான் அவன் துரையையும் அழைத்துக்கொண்டு அன்றைக்கு அம்மன் கோவில் பக்கம் வந்திருக்கிறான்!

அம்மன் கோவில் புல்வெளிக்கு அருகே நாயக்கன், துரையை அழைத்துக் கொண்டு வந்தபோது, அங்கே கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த மான்களைக் கண்டு ஸ்தம்பித்துப் போனார் அவர். இத்தகையதொரு காட்சியை அவர் இங்கே எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் கண்ணையும் கருத்தையும் கவரவல்ல இந்த அழகை ‘மாமிச பட்சிணி’யாகிய பீட்டர் துரையின் கண்களால் அழகு நோக்குடன் மட்டுமே காண முடியவில்லை. துப்பாக்கி இருந்தால் நாலைந்து மான்களைத் தீர்த்துக் கட்டிக்கொண்டு போயிருக்கலாமே’ – என்ற எண்ணம்தான் அவருக்கு உண்டாகியது.

பீட்டர் துரை தமக்கே உரிய கொச்சைத் தமிழில் தம்முடைய மான் மாமிச்’ ஆசையை முத்துவேல் நாயக்கனிடம் கூறியிருக்கிறார். முத்துவேல் நாயக்கனோ உடனே மனம் பதறி நடுநடுங்கியவனாய், அது கூடாது என்றும், அம்மனின் ஆட்சி எல்லைக்குள், அவள் காவலில் மேயும் மிருகங்களை ஹிம்சிக்கக் கருதுவது பாவமென்றும் மிகுந்த சிரமமான விவாத விளக்கங்களோடு துரைக்குக் கூறிப் பார்த்திருக்கின்றான், துரையோ அவன் கூறியதைக் கேட்டு இடி இடியென்று சிரித்து ஏளனம் செய்திருக்கிறார்.

கடைசியில் துரையின் பிடிவாதத்திற்கு முன் முத்துவேலு நாயக்கன் தாழ்ந்து போகவேண்டியதாயிற்று. அவன் மேஸ்திரி வேலை நிலைப்பது அவர் கையிலிருக்கும் போது வீணாக அவரைப் பகைத்துக் கொள்வானா? துரையின் வேண்டுகோளை மறுநாள் நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்களித்து விட்டான். மறுநாளைக்கு மறுநாள் தை மாதப் பிறப்பாக இருப்பதனால், கோவிலில் படையலுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இதனால் பகலில் மான் வேட்டையாடுவது என்பது முடியாது. யாராவது கண்டால் முத்துவேலு நாயக்கனை ஊருக்குள் உயிரோடு நுழையவிட மாட்டார்கள். அம்மன் கோவில் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக அவனைக் கொத்திப் போட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். இதனால் யாருக்கும் தெரியாமல் துரையின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு ஓர் தந்திரமான ரகசியத் திட்டம் வகுத்துக் கொண்டான் முத்துவேலு நாயக்கன்.

மலைப் பகுதியில் மான், பன்றி முதலிய மிருகங்களை வேட்டையாடுவதற்காகக் கந்தகத் தூளையும் கரிப்பொடியையும் கொண்டு ஒருவகை நாட்டு வெடிகுண்டு செய்வது வேட்டைக்காரர்கள் வழக்கம். வெடி மருந்தை மாட்டுச் சவ்வு’ என்ற ரப்பர் போன்ற பசைச் சுருளில் பொதியச் செய்து மேலே பச்சைக் களிமண்ணைப் பூசித் தோலால் இறுக்கித் தைத்து விடுவார்கள். மலையில் மான், பன்றி முதலிய மிருகங்கள் அதிகமாகப் பழகும் இடங்களில் இப்படிச் செய்த வெடிகுண்டுகளை அங்கங்கே போட்டு வைப்பதுண்டு. களிமண் உலர்ந்ததும், இந்தக் குண்டுகளின் இரண்டு ஓரங்களிலும் மாட்டுச் சவ்வு துருத்திக் கொண்டு வெடிக்கத் தயாராக இருக்கும்! இவ்வாறு வெடிக்கத் தயாராக இருக்கும் இந்த வெடி குண்டுகள் மிருகங்களின் கால்களில் இடறியோ, சவ்வின் வாடையினால் வாயால் மிருகங்கள் குண்டைக் கவ்வுகிறபோதோ படீரென்று வெடித்து அவைகளைக் கொன்று தள்ளிவிடும். மறைந்திருக்கும் வேட்டைக்காரர்கள் தாங்கள் வைத்த குண்டுகள் வெடித்து மிருகங்கள் செத்ததும் மறைந்திருந்த இடங்களிலிருந்து வெளிப்பட்டு, ‘வேட்டை’களை எடுத்துக் கொண்டு போவார்கள்.

முத்துவேலு நாயக்கன், வேட்டையிலும் நல்ல பரிச்சயம் உள்ளவனாகையால் அவனுக்கும் இந்த நாட்டு வெடிகுண்டு செய்வதில் நல்ல பழக்கம் உண்டு. தைப் பொங்கலுக்கு முதல் நாள் மாலை அம்மன் கோவில் புல்வெளிக் காட்டில் ஏழு எட்டு இடங்களில் பச்சைக் களிமண் உலராத குண்டுகளைக் கொண்டுபோய் வைத்துவிட வேண்டும். நிச்சயம் நான்கைந்து மான்களாவது குண்டுகளில் சிக்கிச் சாவது உறுதி. குண்டுகள் உலர்ந்து சவ்வு மிதிபட்டு வெடிப்பதற்குள் இரவு நேரம் வந்து விடுமாகையினால் யாரும் பார்க்காமலே காரியம் நடந்துவிடும். இரவு எட்டு ஒன்பது மணிக்குள் வேட்டையில் அகப்பட்ட மான்களின் உடல்களோடு துரையைப் போய்ச் சந்திக்கலாம். இதுதான் சரியான யோசனை’ என்று இவ்வாறு தனக்குள் ஒரு தீர்மானம் செய்துகொண்டிருந்தான் முத்து வேலுப் பயல். அணைக்கட்டில் பாறை உடைப்பதற்காக வந்திருந்த வெடிமருந்தில் கொஞ்சம் தயார் செய்துவைத்தான். துரையோடு உலாவப் போனதற்கு மறுநாள் மாலை தன் திட்டப்படியே புல்வெளிக் காட்டில் ஓர சாரங்களின் குண்டுகளை அங்கங்கே போட்டு வைத்துவிட்டு அவைகள் வெடிக்க இரவு ஏழரை மணிக்குமேல் ஆகுமென்று அனுமானித்துக் கொண்டு கிளம்பினான். திரும்பவும் ஏழேகால் மணிக்குத் தான் வந்தால் குண்டுகள் வெடித்து மான்கள் சாவதை மறைந்திருந்து காண்பதற்காக ஒரு புதரையும் அப்போதே அடையாளம் பார்த்து வைத்துவிட்டுத்தான் புறப்பட்டான். தன் காரியம் அவ்வளவு கச்சிதமாக வெற்றியுடன் முடியும் என்று நம்பிக்கை பயலுக்கு. மீண்டும் ஏழு மணிக்கு மேல் கோணிப் பையோடு வந்து மான்களை அடைத்துக் கொண்டு போகவேண்டிய வேலைதான் பாக்கி என்ற திருப்தியோடு ஊருக்குள் வந்துவிட்டான் நாயக்கன்.

பொங்கல் படையலன்றைக்குத் தோரணங்களிலிருந்து அம்மனுக்குப் போடுகின்ற மாலை வரைக்கும் எல்லாம் அருகம்புல்லோடு சேர்த்தே தொடுக்கவேண்டுமென்று ஓர் சம்பிரதாயம் உண்டு. இதற்கு அந்தப் புல்வெளி அருகையே பயன்படுத்த வேண்டும். முத்துவேலு நாயக்கன் வெடிகுண்டுகளை வைத்துவிட்டுப் போய் ஒரு நாழிகை கழிந்திருக்கும். மாலை, ஜாடனை வகையறாக்களுக்காக அருகம்புல் கொண்டு போவதற்காகப் பூசாரியும் வடிவேலுப் பண்டாரமும் புல்வெளிக்கு வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் தற்செயலாக நாயக்கன் ‘உழப்பிவிட்டுப் போன பக்கமே புல்லுக்காக இறங்கமேண்டுமா? பண்டாரம் முதலில் ஒரு களிமண் உலராத குண்டைக் கண்டெடுத்ததும் இருவருக்கும் எந்தப் பயலோ, மான் வேட்டைக்காக அக்கிரமம் செய்துவிட்டுப் போயிருக்கிறான்’ என்ற சந்தேகம் பலமாக ஏற்பட்டு விட்டது.

இதன் விளைவாக அந்த நெட்டிற்குச் சால் பிடித்து இருவரும் அலசிப் பார்க்கத் தொடங்கினர். அரை நாழிகையில் முத்துவேலு நாயக்கன் வைத்துவிட்டுப் போயிருந்த அத்தனை குண்டுகளையும் ‘வைத்தவனை’ வாயாரச் சபித்துக் கொண்டே கண்டெடுத்து விட்டனர் பூசாரியும் பண்டாரமும்! “கலி காலமையா! அக்கிரமம் பெருத்துவிட்டது” என்று கூறிக்கொண்டே, அவ்வளவு குண்டுகளையும் தலையைச் சுற்றி அருகிலிருந்த ஒரு புதரில் வீசி எறிந்துவிட்டுக் குடலைகள் நிறைய அருகம்புல்லோடு திரும்பிச் சென்று விட்டார்கள் அவர்களிருவரும்.

இரவு ஏழேகால் மணிக்கு பேட்டரி லைட்டு’ கோணிப்பை சகிதம் புல்வெளிக் காட்டிற்கு வந்தான் நாயக்கன். வரும்போதே அபசகுனம் போல் அடுத்தடுத்து இரண்டிடங்களில் கால் இடறித் தடுக்கியது. பயலுக்கு அப்போதே மனதில் ஒரு தினுசாகப் பட்டு, ‘கதக்’ கதக்’ என்றிருக்கிறது! ஆனால் துரையைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற போதையில், இதெல்லாமே மூடநம்பிக்கை! சுத்த ஜகப் புரட்டு’ என்று தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டு புறப்பட்டு விட்டான். மூன்றாம் அபசகுனமாகப் பேட்டரி லைட்டில் பேட்டரி ஸெல்கள் தீரவில்லை என்றெண்ணிக் கொண்டு வந்ததற்கு மாறாகப் பாதி தூரத்தில் வந்து போட்டுப் பார்த்தால், பேட்டரி’ எரியவில்லை . மனம் பலவாறு குழம்பி, அடிவயிற்றில் புளியைக் கரைத்தாலும், குழப்பத்தோடு குழப்பமாக முன்வைத்த காலைப் பின் வைக்காமல் புல்வெளிக் காட்டிற்கு வந்துவிட்டான் மேகத்தில் மறைந்திருந்த மங்கலான நிலா ஒளியில் மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. தான் எங்கெங்கே குண்டுகளை வைத்திருந்தானோ, அந்த இடங்களில் மான் கூட்டம் அதிகமாக இருந்ததை மனமகிழ்ச்சியோடு நோக்கித் திருப்தியடைந்தான் நாயக்கன்.

குண்டுகள் வெடிக்கின்றவரை தான் சாயங்காலமே பார்த்து வைத்துவிட்டுப் போயிருந்த புதரில் மறைவாக இருந்து கொள்ளலாம் என்று அந்தப் புதரை நோக்கி நடந்தான், முத்துவேலு நாயக்கன் பீட்டர் துரை தன்னருகில் வந்து சபாஷ் என்று பாராட்டி, முதுகில் தட்டிக்கொடுப்பது போல் ஒரு மானஸீகத் தோற்றம் அவனை அந்த இருட்டிலும் நிமிர்ந்து ராஜநடை நடக்கும்படி செய்தது. இறுமாப்போடு அடிமேல் அடிவைத்துப் புதர்ப் பக்கம் செல்லலானான் புதருக்குப் பக்கத்தில் காலில் ஏதோ சில உருண்டையான கற்களைப்போல இடறின. அப்படி இடறியவற்றின் விளிம்பிலிருந்து கூர்மையான ஒன்று காலில் குத்தியதைப் போல வலிக்கவே, முத்துவேலு நாயக்கன் குனிந்தான்.

ஒரே ஒரு விநாடி கீழே அவன் கண்ட பொருள்? ‘ஐயோ’ என்று அலற வாயைத் திறந்தான். அதற்குள் ‘பட’ரென்று ஓர் பெரிய வெடி முழக்கம் வான முகட்டையே பிளந்துவிடுவதுபோல் எழுந்தது. நாயக்கனின் அலறல்’ அந்தப் பெருஞ் சப்தத்தில் அடங்கி ஒடுங்கிவிட்டது. பதினைந்தடி உயரம் மேலே வானத்தில் தூக்கி எறியப்பட்டது முத்துவேலு நாயக்கனின் உடல் கோணிப்பையும் பேட்டரி விளக்கும் திசைக்கு ஒன்றாகப் போய்ச் சிதறி விழுந்தன. அடுத்தடுத்து நாலைந்து தடவை மேலே தூக்கித் தூக்கிக் கீழே விழச் செய்யப்பட்டது. ‘உயிர் காத்த நல்லா’ளுக்கு எதிராக வினை விதைத்தான் அவன். அவளோ வடிவேலுப் பண்டாரத்தையும் பூசாரியையும் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டு, அவன் மான்களுக்காக விதைத்து வைத்த அத்தனை குண்டுகளையும் கண்டெடுத்து, அவன் தங்க இருந்த புதரில் அவனுக்காகவே விதைத்து வைத்தாள்!

ஆனாலும் பாருங்கள், உயிர் காத்த நல்லாள்’ என்ற பேருக்கு ஏற்ப தான் காக்கும் உயிர்களைக் கொல்ல நினைத்த முத்துவேலு நாயக்கனுக்குக்கூட உயிர்ச் சேதம் ஏற்படுத்தி விடவில்லை அவள்! வலது காலையும் கண்களையும் பறித்துக் கொண்டு அவனை உயிரோடு விட்டு விட்டாள். மறுநாள் பொங்கல் படையலும் அதுவுமாக இந்த முத்துவேலுப்பயல்லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் வலது முழங்காலுக்குக் கீழே ஆபரேஷன் செய்யப்பட்டுக் கண்களில் வெடிமருந்து பாய்ந்த எரிச்சல் தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தான். மேலே தூக்கி எறியப்பட்டதனால், உடலின் எல்லாப் பாகங்களிலும் காயங்கள் ! கை கால்களை அசைக்க முடியாமற் கிடந்தான். பீட்டர் துரை அவனுக்காக மதுரையிலிருந்து ஆபரேஷன் வேலையில் தேர்ச்சியுள்ள பெரிய டாக்டரை வரவழைத்திருந்தார். எல்லோரையும் போலப் பீட்டர் துரையும், கரும்பும் வாழைத் தாருமாக அம்மனை வழிபட்டு மன்னிப்புப் பெறுவதற்காக முத்துவேலின் வேண்டுகோளுக்கிணங்கிக் கோவிலுக்கு வந்ததுதான் யாவரையும் அந்தத் தை மாதப் பிறப்பன்று ஆச்சரியத்தில் ஆழச்செய்தது! ” அந்தக் குற்றத்திற்கு முத்துவேலு காரணமில்லை! எல்லாம் என்னாலே வந்த வினை! அதைப் பரிகாரப்படுத்திக் கொள்வதற்காகவே அவன் ஆஸ்பத்திரியில் கிடக்கும் இந்த நாளில் அவன் சார்பாகக் கிறிஸ்தவனாகிய நான், உங்கள் கோவிலுக்கு வந்தேன்” – என்று துரை கொச்சைத் தமிழில் கூறிய போது, யாவரும் மனமுருகிவிட்டனர். துரை அன்று நெற்றியில் விபூதி குங்குமம் கூட இட்டுக்கொண்டார்.

***

ருவடியாபிள்ளை ‘உயிர் காத்த நல்லாள்’ என்ற பெயரின் ஸ்தல புராணத்தை மேற்கண்டவாறு உதாரணக் கதையோடு எனக்குக் கூறி முடித்தபோது, உலாவச் சென்ற நாங்களிருவரும் மேற்படி அம்மன் கோவிலின் அருகே போய்ச் சேர்ந்தோம்.

திருவடியாபிள்ளை மேல் வேஷ்டியை அரையில் வரிந்து கட்டிக்கொண்டு, வாய்க்காலில் இறங்கிக் கைகால்களைச் சுத்தம் செய்துகொள்ளத் தொடங்கினார்.

“ஆமாம்! பிள்ளைவாள், உங்களுடைய இந்தக் கதைக்கு ஏதாவது ‘அதாரிடி’ – அதாவது ஆதாரம் உண்டா? இல்லை – வெறுமனே கர்ண பரம்பரையா வருவதுதானா?” – நான் கேட்டேன்.

“அதென்ன அப்படிப் போனாப் போவுதுங்கறாப்பிலே ஒரு வார்த்தையைக் கேட்டிட்டியளே! இந்தத் திருவடியா பிள்ளை ‘சொல்றதுலே’ எப்பவும் ‘பாயிண்டு’ இல்லாமப் போவாதுங்க…” என்றார் பிள்ளை.

“ஆமாம்! ஆமாம்! ‘பாயிண்டு’ இருக்கத்தான் இருக்கிறது! நீங்கள் சொல்வதில் அது இல்லாமல் எங்கே போகும்?” – சிரித்துக்கொண்டே நான் கூறினேன்.

– 1963-க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *