உப்புக்குழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 11,890 
 
 

கபர்க்குழிவெட்ட பாபுகானைத் தேட வேண்டியிருந்தது. வழக்கமாக அவன் உட்காரும் ‘இட்லிமண்ட‘ எழுமலை சலூன் கடை, பேசிக்கொண்டு நிற்கும் ‘டாவு‘அலாவுதீன் வெற்றிலைப் பாக்குக் கடை, கடனுக்குச் சாப்பிடும் ‘அட்டு‘அய்யர் கடை என்று ரஷீத் அலைந்து திரிந்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தது. இரண்டுமுறை அவன் குடியிருக்கும் லண்டன் பாய் தோப்புக்கும் போய்வந்துவிட்டான். எல்லோரும், “இப்ப இங்கனத்தானே நின்னுக்கிட்டு ருந்தான்!” என்று சொன்னார்கள். வெளியே தலைநீட்டி எட்டி இருபுறமும் பார்த்து, “எங்கனயும் போயிருக்க மாட்டான். இங்கனத்தான் இருப்பான்!” என்று ஆசுவாசமும் சொன்னார்கள். ஆளைத் தான் பார்க்க முடியவில்லை.

பாபுகான் கபர்க்குழி வெட்டும் வேலையைத் தவிர, ஏழெட்டுத் தொழில்களை கைவசம் வைத்திருந்தான். கிணறுவெட்டும் வெள்ளைப்பாண்டிக்கு கையாளாகப் போய்வருவான். வீடு களுக்கு வெள்ளையடிக்கும் மாரியப்பனுக்கு உதவியாளாக நிற்பான். கடனைக் கழிக்க அய்யர் கடைக்கு தண்ணீர் அள்ளி ஊற்றுவான். பூட்டு ரிப்பேர் செய்வான். எலக்ட்ரிக் வேலை பார்ப் பான். கூடை முடைவான். நிமுந்தாள் வேலையும் அவன் பட்டியலில் இருந்தது. என்றாலும் எந்தத்தொழிலும் அவனைப் பொருளாதாரத்தில் மேம்படுத்தவில்லை. ‘கபர்க்குழி வெட்டுறது தர்த்திரியம்‘ என்பான். ‘அதுனாலத்தான் மேல வரமுடியல!‘ என்று சமாதானமும் சொல்லிக் கொள்வான்.

அதைக்கேட்கும் ஹஜரத்தோ… முஅத்தீனோ, “அப்டிச் சொல்லக்கூடாது. மௌத் தாக்களுக்கு குழிவெட்டித்தர்றது புண்ணியம்” என்று நபிமொழியையும் ஹதீஸ்களையும் மேற் கோள்காட்டிப் பேசுவார்கள். பாபுகான் காதுகொடுத்து சமர்த்தாகக் கேட்டுக்கொள்வான். கடைசி யில், “அப்ப ஏன் நீங்க யாரும் கபர்க்குழிவெட்டிப் புண்ணியம் தேடிக்கிற மாட்டேங்க்றீங்க?” என்று எதிர்க்கேள்வி கேட்பான். இந்தக்கேள்விக்கு சரியான பதிலை, யாரும் இதுவரை அவனுக்குச் சொன்னதில்லை. “நபிமொழியும் ஹதீஸும் கேக்குறதுக்கு சூப்பராத்தான் இருக் கும்” என்று முணுமுணுத்துக் கொள்வான். அப்போது அவன் தலையாட்டுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

கபர்க்குழி வெட்டுவது அவனுக்குக் குலத்தொழில் இல்லை. அவன் தாதாவுக்குத் தாதா காலத்திலிருந்தே அவர்கள் குடும்பத்துக்கு நில புலமெல்லாம் இருந்தது. தாதா தெருவுக்கு ஒன்றாக வயதுவாரியாக… நிறவாரியாக… உடல்வாகுவாரியாக தொடுப்புகளை வைத்திருந்தார். நேருக்குநேர் நின்று ஒற்றை ஆளாகக் கரடியொன்றை வெறும் கைகளாலேயே அடித்துக் கொன்றவர் என்ற பெருமை அவருக்கிருந்தது. பராக்கிரம பலசாலி அவர். அதனால், அவர் ஒருபார்வைப் பார்த்தாலே ‘பலதுகள்‘ சாய்ந்து, அவரை மடியில் போட்டுக் கொண்டன. ஆனால் பாபுகானைப் பெற்றெடுத்தவர் படுநோஞ்சான். இருந்தும், எண்ணிக்கையில் அவருக்குப் போட்டியாக சிட்டுக்குருவியாகச் சிறகடித்துத் திரிந்திருக்கிறார். ஏதாவது ஒரு வீட்டின் கதவை தாதா தட்டும்போது, அந்தவீட்டிலிருந்து பாவா வெளியில் வரும் எதிர்சேவையும் நடந்திருக்கிறது. இருந்த நிலமெல்லாம் ஏக்கர் கணக்கில் நீராய் வழிந்து, தொலைந்து போனது தான் மிச்சம். நிகரமாக, அந்தநேரத்துச் சுகத்தைத் தவிர வேறெதுவும் பகரமாக நிற்கவில்லை. வம்சாவழியாய் இப்படித் தொலைத்துத் தொலைத்தே, இப்போது ஒண்டுவதற்குக்கூட சொந்த இடமென்று கையகலம் இல்லாமல் போய்விட்டது. பாபுகானுக்கு தாதாவின் திறமையோ, பாவாவின் நேர்த்தியோ வருவதற்கான வாய்ப்பை பொருளாதார ரீதியாக அவர்கள் விட்டு வைத்துவிட்டுப் போகவில்லை. வீட்டில் அடுப்பெரிய, வெளியில் ஏதாவது செய்தால்தான் ஆயிற்று எனும் நிலைதான் அவனுக்கு என்று எழுதியிருந்தது.

முன்னமெல்லாம் கபரஸ்தானில் குழிவெட்டித் தந்தது, ஜமான் எனும் ஒரு கிழவர்தான். அவர் எந்த ஊர்க்காரர் என்பது யாருக்கும் தெரியாது. இந்த மஹல்லாவில் அவருக்கென்று சொந்தம் யாரும் கிடையாது. வழிப்போக்கராய், தொழுவதற்கு பள்ளிவாசலுக்குள் நுழைந்தவர் அப்படியே இங்கே தங்கிவிட்டார். பள்ளிவாசலுக்குத் தொழவருபவர்கள் கொடுக்கும் சில்லறை அவர் வயிற்றுப்பாட்டுக்கு அப்போது போதுமானதாக இருந்தது. பள்ளிவாசல் சஹானை அவர் தனது ஜாகையாக்கியிருந்தார். குழிவெட்டும் வேலையிருந்தால் செய்து விட்டு, மீதிநேரத்தில் பிரம்மச்சரிய சுகஜீவனம் நடத்திக்கொண்டிருந்தார்.

கபரஸ்தான் இம்மையில் மறுமையைக் காட்டும் இடமாக, ஒருசோலைவனம்போல இருந்தது. நீளஅகலமான பெரிய இடம். நிழலும் குளுமையும் அதை பூலோகச் சொர்க்கம் போலக் காட்டின. அதன் நடுவில், மஹல்லாவை உருவாக்கியவரின் நினைவாக டேர் ஒன்றிருந்தது. அதைச்சுற்றிக் கட்டிடம் கட்டியிருந்தார்கள். நெடிய உயர்ந்த இலந்தை மரங் களும் கொடிக்கா மரங்களும் அங்கே இருந்தன. பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கின. ஆனால், மேலே ஏறிப்பறிக்க வாகு இருக்காது. சிறுவனாக இருந்தபொழுது உதிர்ந்து கீழே கிடக்கும் பழங்களைப் பொறுக்க கபரஸ்தானுக்கு வந்த பாபுகான், ஜமான் கபர்க்குழி வெட்டும்போது, வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான். குழிக்குள் இருந்துகொண்டு, வெட்டிய மண்ணை அவர் தலைக்குமேலே லாவகமாகத் தூக்கிவீசும் அழகில் லயித்துக் கிறங்கிப் போனான். “எப்டி நீங்க மேலே தூக்கிவீசுற மண்ணு, ஒங்கத்தலைல விழாம தூரப்போய் விழுகுது?” என்று ஆச்சரியமாக அவன் கேட்டபோதுதான், சுழி வேலை செய்ய ஆரம்பித்தது.

“மம்பெட்டியப் பிடிச்சு வெட்டு. ஒனக்கும் அதுவரும்!”

இளரத்தம். எதையும் செய்து பார்க்கத் தூண்டும் வயது. மண்வெட்டியைப் பிடித்தான். அவரைக் காட்டிலும் லாவகம் வந்து தொலைத்தது. குழிவெட்டும்போதெல்லாம் ஓடோடி வந்து அவருக்கு உதவியாளனாக மாறியவன், கிழவரின் மௌத்துக்குப் பின்பு, அவனே வெட்டுவன் ஆகிவிட்டான்.

அவன் வெட்டும் குழி, கிழவர் வெட்டியக் குழிகளைக் காட்டிலும் வடிவமாகவும் நேர்த்தி யாகவும் இருப்பதாக, இருபது வருஷங்களுக்கு முன்னால் ஜமாத் தலைவர் டில்டாபாய் சொன் னது, அவனை அந்தவேலையில் நிரந்தரமாக இருத்தி வைத்துக்கொள்ளத்தான். ‘ஜமாத் தலைவரே சொல்லிவிட்டார்‘ என்று, ஜனாதிபதி கையால் மெடல் குத்திக்கொண்டதுபோல அதன் பின் நடந்துகொண்டான். இப்போதும் அதே டில்டாபாய்தான் ஜமாத் தலைவர். அவர் ஆளனுப்பி ஏதாவது வேலை சொன்னால், வந்தவரிடம், ‘அதுகெடக்குது… அ(று)ந்த கேசு‘ என்று காரி உமிழ்வதைக் கையாண்டு வருகிறான்.

பாபுகானைத் தேடித்தேடி ரஷீத் வெறுத்துப் போனான். மக்ரீபுக்கு ஜனாஸாவைக் கொண்டு வந்துவிடுவார்கள். இப்போது மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது. பாபுகானே தனி ஆளாக நின்று கபர்க்குழி வெட்டுவது, இப்போது அத்தனை லேசானது இல்லை. நாற்பது வயதுக்குள்யேயே கழன்றுவிட்டான். அவனால் முன்புபோல நின்று வெட்டவும் முடியவில்லை. நேரமும் இழுக்கும். குழிவெட்ட அவனைவிட்டால் வேறு ஆளும் மஹல்லாவில் இல்லை. பாபுகானைத் தான் தேடுவதாக எல்லோரிடமும் சொல்லிவைத்துவிட்டு, கபர்க்குழி வெட்ட வேண்டிய இடத்தைப் பார்த்துவிடலாமென்று கபரஸ்தானுக்குப் போனான்.

மஹல்லாவில் யார் யார் எந்தக்கொடி வழி? யார் யாருக்கு கபரஸ்தானில் தஃபன் செய்ய எந்த இடம் என்பது ரஷீதுக்கு அத்துப்படி. சரியாக அந்த இடத்தைக் காட்டி விடுவான். மௌத்தானவரின் வாரிசுகளோ… உறவுகளோ… வந்து இடத்தைப் பார்த்து, “இங்கே வெட்டுங்க!” என்று பாபுகானிடம் சொன்னாலும், “இதுநம்ம பீடிக்கான இடந்தானானு ரஷீதிடம் ஒருவார்த்தைக் கேட்டுக்கலாமே?” என்று அவனைத் தேடுவார்கள். பாபுகானும், “அவன்ட்ட ஒருவார்த்தைக் கேட்டுக்குங்க” என்று பரிந்துரைப்பான்.

கபரஸ்தானின் முன்வாசலை, பள்ளிவாசல் சஹானிலிருந்து போவதுபோல உள்ளே யிருந்து அமைத்திருந்தார்கள். மெயின்ரோட்டிலிருந்து போகும்பாதை எப்போதும் அடைக்கப் பட்டிருக்கும். சுவர்ஏறிக் குதித்து உள்ளேபோவதும் நடக்கத்தான் செய்தது. ஜமாத் தலைவரோ, ஹஜரத்தோ பார்த்தால், “கபரஸ்தானுக்கு சுவரேறிக் குதிச்சுதான் வரணுமா. அவ்வளவு அவசர மா?” என்று, கேள்வியை ஒருமாதிரி நீட்டிநிமிர்த்திக் கேட்பார்கள். அதற்குப் பல்வேறு பதில்கள் இருக்கும். கபரஸ்தான் சுவர் ஏறிக்குதிக்கும்முன்னே ரஷீத் சுற்றும்முற்றும் பார்த்துக்கொண் டான். யாரும் இல்லை.

தாவூத் சாயபு, ஹைதர்அலி கொடிவழி. அந்தக் குடும்பத்துக்கான இடம் மஹல்லாவை உருவாக்கியவரின் டேருக்கு வடமேற்குப் பக்கத்தில் இருந்தது. போய்நின்று பார்த்தான். குப்பை யும் கூளமுமாக இருந்தது. அருகிருந்தக் குத்துச்செடியிலிருந்து ஓணான் ஒன்று அவன் கால் பக்கத்தில் தாவி, விழுந்தடித்து ஓடியது. மான்போல தாவித்தாவி ஓடிய அதன் ஓட்டத்தில் காய்ந்துகிடந்த சருகுகள் இசைத்தன. இசை கபரஸ்தானின் அமைதியைக் குலைத்தது. தனியாகப் பலமுறை வந்திருக்கும் அவனுக்கு அந்தப் பின்னிசை இப்போது பதற்றத்தைக் கொடுத்தது. நான்கு கபர்களைத் தாண்டி பள்ளம் விழுந்திருந்த இடத்திலிருந்து ஒருபாம்பு சரசரத்துச் செல்வது தெரிந்தது. பெரிய சாரைப்பாம்பு. ரஷீத் லேசாகப் பின்வாங்கினான்.

கிழவர் ஜமான் குழிவெட்டும் காலத்தில் இருந்த கபரஸ்தான், இப்போது இல்லை. அப்போது குட்டை ஷாஜஹான் மாமு இருந்தார். வேலைவெட்டி இல்லாத ரசனையான ஆசாமி. கபரஸ்தான் சோலைவனமாக மாறியது, அவர் கைவண்ணம்தான். தொழுகையாளிகள் ஒலுசெய்த தண்ணீரையும், குளிக்கும் தொட்டியிலிருந்து வீணாக வழிந்தோடிய தண்ணீரையும் கபரஸ்தானுக்குள் திருப்பிவிட்டார். தண்ணீர்போவதற்கு செங்கல் வைத்துக்கட்டிய அழகான ஓடுபாதையை உருவாக்கினார். யானைக்கல்லுக்கும் விவசாயக் கல்லூரிக்கும்போய் பூச்செடி களை வாங்கிவந்து நட்டுவைத்தார். அவர் மௌத்தான பின்பு, கபரஸ்தானும் மௌத்தாகி விட்டது. யாரும் எதையும் கண்டு கொள்ளவில்லை.

பாம்பைக் கண்டதும் மெல்ல அந்தஇடத்திலிருந்து நகர்ந்து, ரஷீத் வெளியேவர யத்தனித்தபோது, நடுவிலிருக்கும் டேரிலிருந்து குறட்டைச்சத்தம் வந்தது. ‘நூத்தம்பது வருஷத் துக்கு முன்னால செத்தவரோட கொறட்டை இப்பக்கேக்குதே?‘ என்று, அந்தச்சத்தத்தில் பயந்து போனான். அப்புறம் கொஞ்சமாய் நிதானித்து, மெல்ல உள்ளே எட்டிப்பார்த்தான். பாபுகான் கைலி விலகி மல்லாந்து கிடந்தான். குறட்டையொலிவிட்ட வாய், உலைத்துருத்திபோல திறந்து திறந்து மூடியது.

“நாசமாப் போச்சு. பொச்சுல வெயில் அடிக்குற பட்டப்பகல்ல மல்லாந்து கெடந்து கொறட்டைவிட்டுத் தூங்குனா, சூத்தப்பொளக்கச் சொல்லிக்கிட்டு பரக்கத்(பொருள்) கொட்டும்!” நெடுநேரமாய் அவனைத்தேடிக் கடுப்பாகிப் போயிருந்தவன், அவன் முதுகில் எத்தி, “ஏந்திரிடா தொத்தபய மகனே! ஒன்னிய எங்கனயெல்லாம் தேடுறது?” என்று கத்தினான்.

இருவருக்கும் நல்ல பழக்கமிருந்தது. தூக்கத்திலிருந்து விழித்தவன், “எதுக்குக் கெழட்டுக்
கூதி சங்கூதுற?” என்று பாய்ந்தான்.

“கபர்க்குழி வெட்டணுன்டா”

தலையைச் சொறிந்து கொண்டான். “தர்த்திரியம் என்னியவிட்டுப் போகாதுபோல!”

“ஆமா… இல்லாட்டியும் நீ சம்பக்குளம் மகாராஜா!”

தலைசாய்த்து ரஷீதை அரைக்கண்ணால் பார்த்த பாபுகானுக்குத் தூக்கம் போயிருந்தது. “ஆம்பளக் குழியா? பொம்பளைக் குழியா?”

“பொம்பளக் குழி!”

கபர்க்குழி வெட்டுவதற்கு கணக்கு இருந்தது. அது அவனுக்கு மனப்பாடமாக ஆகியிருந் தது. எழுந்துநின்று நெளிந்தான். உடம்பை முறுக்கினான். “மணி பன்னெண்டு இருக்கும்போல. நல்லாத் தூங்கிட்டேன். சரி, டீ வாங்கிக்குடு” கொட்டாவி ஒன்றை வெளியேற்றினான். காலை யிலிருந்து ஏதும் சாப்பிடாததில் குடலில் புகுந்திருந்தக் காற்று, பின்வழியாக ‘டர்ர்ர்ர்ர்‘ரென்று பிரிந்தது.

“நாத்தமெடுத்தவனே… பின்னால வாடா” ரஷீத் முன்னே நடந்தான்.

“ஆமா… இவரு குசுவிட்டா சந்தனமா மணக்கும். போடா போடா பீக்குண்டி!”

அவன் அப்படிச் சொன்னபிறகு, ரஷீத் எதுவும் பேசவில்லை.

‘அட்டு‘அய்யர் கடைக்குப் புறப்பட்டார்கள். பள்ளிவாசல் வாசலைக் கடக்கும்போது, அலுவலகம் முன்னாலுள்ள போர்டில், மௌத்தா யார், யாருடைய வாரிசு, மௌத்தானவரின் விலாசம், எத்தனை மணிக்கு தபன் உள்ளிட்ட செய்திகள் எழுதப்பட்டிருந்தது. பாபுகான் நின்று நெளிந்து எழுத்துக்கூட்டிப் படித்தான்.

“யாருடா இது?”

“கொடைக் கம்பேனி தாவூத் சாயபு இருக்காருல்ல. அவரு மக!”

“கொடைக் கம்பேனி. ஆமா. அதோட ஓனரு தாவூத் சாயபு. சரி. அவருக்கேதுடா மக?”

“என்ன இப்டிக்கேக்குற?”

“அட.. ஆமால்ல… அவருக்கு ஒரு லட்டுக்குட்டி இருந்துச்சுல்ல. யாரோ ஒரு தம்பளப் பயக்கூட ஓடிப்போச்சே!”

“இதெல்லாம் நல்லா ஞாபகம் வைச்சுரு. நடடா!”

அய்யர் கடையில் ரஹீம்தான் பட்டறையில் நின்றிருந்தார். அவர்களைப் பார்த்ததும் ஸ்ட்ராங் டீ போட்டுக் கொடுத்தார்.

கண்ணாடிப் பெட்டிக்குள் நிறைய வடைகள் விற்காமல் அப்படியே கிடந்தன. அதைப் பார்த்ததும் பாபுகானுக்கு பசி பெருக்கெடுத்தது. “ரஷீது, ரெண்டு வடை எடுத்துக்குறேனே?”
“காசு யார் குடுப்பா? கூலியில புடிச்சுக்குவேன்!”

“ஆமா… பெரியக்கூலி? சித்தாள்வேலைக்குப் போறவளே முள்ளங்கிப் பத்தையா முந்நூத் தம்பதுரூவா வாங்குறா. சொளையா ரெண்டுவேளை டீயும் வடையும் தர்றானுக. இங்கன நாக்குத்தள்ள கபர்க்குழி வெட்டுனா, நூறு ரூவாயப் புளுத்துவீங்க. என்னமோ இப்பத்தான் எறநூறு ரூவாயத் தர்றீங்க. அதுலயும் ஆயிரத்தெட்டு நொட்டைவேற. தெனமுமா நாலுபேரு டிக்கிட் வாங்கிட்டு மேலே போய்ச்சேர்றாங்க. வருஷத்துக்கு மொத்தமே நாலுவிழுந்தாப் பெருசு!”

மஹல்லாவில் இருந்தவர்கள் வசதி, பி்ள்ளைகளின் படிப்பு, வேலை என்று பூர்வீகத் தைத் தொலைத்துவிட்டு வேறுவேறு ஊர்களுக்குப் போய்விட்டார்கள். அங்கிருக்கும் பள்ளி வாசல், ஜமாத், மகமை, கபரஸ்தான் என்று தங்களைப் பதியனிட்டுக்கொள்வதால், பூர்வகுடி களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகிறது.

வடையை எடுத்துக் கடித்தபடி டீயை உறிஞ்சினான்.

லுஹர்த் தொழுகைக்கான அஜான் கொடுப்பதற்கு முன்பு, ஒரு டீ அடித்துக் கொள்ள லாம் என்று ஹஜரத் டீக்கடைக்கு வந்துசேர்ந்தார். அங்கே பாபுகானும் ரஷீதும் நிற்பதைக் கண்டதும் அவர் வாய் சும்மா இருக்கவில்லை. “என்ன பாபுகான்? இன்னிக்கு மய்யத் விழுந்துருச்சுபோல. குழிவெட்டுல ஒனக்கு வரும்படிதான்! டீ ஒஞ்செலவா?” என்று வாயைக் கொடுத்தார்.

கபர்க்குழிவெட்டும் தொழில் குறித்து ஏற்கனவே ஏகப்பட்டக் கடுப்பில் இருந்தவன், காலையிலிருந்து எதுவும் சிக்காமல் வாழ்க்கையை வெறுத்துத் தூங்கிப்போனவன், ஹஜரத் இப்படிக் கேட்டதும் அவர் பக்கம் திரும்பினான். “ஆமா. பெரிய வரும்படி! நொரைத் தள்ளத் தள்ள குழிவெட்டுறது நாங்க. மய்யத்தை வெச்சதும் குழிக்குள்ளாற மண்ணைத் தள்ளுறது எவனோ சொந்தக்காரன். அந்த மண்ணை மேடேத்தறது வேறஎவனோ போக்கத்தவன். நீங்க நோகாம லோட்டா தண்ணீய வாங்கி, கபர்மேல கோடு கிழிச்சு ஊத்தி, அழுக்குப்படாம ஜியாரத் ஓதிட்டு, நோட்ட வாங்கிட்டுப் போயி எவ்வளருக்குனு அங்கிட்டுநின்னு எண்ணுவீங்க. அப்ப அது வரும்படியாத் தெரியாது!”

நிறுத்தி நிதானமாக அவன் பேசுவதைக் கேட்ட ஹஜரத் வேறுபக்கம் திரும்பிக் கொண் டார்.

“ரொம்பப் பேசாம வந்துக் குழியத்தோண்டுடா!” அவனை இழுத்துக்கொண்டு ரஷீத் கிளம் பினான்.

ரஷீத் காட்டிய இடத்தில் ஒருவண்டிக் குப்பை இருந்தது. அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு மண்வெட்டியால் கொத்தினான். தரை எதுக்கழித்தது. மண்வெட்டி பதியவில்லை. ஹைதர் அலி கொடிவழியில் கடைசியாக கலிமா ஷஹாதத் குரல் எழும்பியது, ஷாநவாஸ்க்குத்தான். அப்போதுதான் அந்தஇடம் மண்வெட்டியைப் பார்த்திருக்கும். அதுநடந்து முப்பது வருஷத்துக் கும் மேலிருக்கும். நீண்ட காலத்துக்குப்பின் இப்போதுதான் அந்தக்கொடி வழியில் மய்யம் விழுந்திருக்கிறது. தரை கெட்டிப்பட்டுப் போய்க்கிடந்தது.

கடப்பாறையை எடுத்துக்குத்தி கட்டாந்தரையை நெம்பினான். பெரிதாக மண் நெகிழ்ந்து
கொடுக்கவில்லை. ஒருஅடி ஆழத்தைத் தோண்டுவதற்குள் ஏழெட்டு முறை நிமிர்ந்து, முதுகை நேராக்கிக் கொண்டான். வேர்த்து ஊற்றியது. வழித்து எறிந்தான். கபர்க்குழி வெட்டிய காசில், மகள் எழுதப்போகும் பத்தாவது பரிட்சைக்கு பணம் கட்டுவதற்கு வழி உண்டாகியிருப்பதை மனதுக்குள் எண்ணிக்கொண்டான். கடப்பாறையை ஓங்கித் தரையில் குத்த முடிந்தது. மூத்தப் பெண்ணுக்கும் இப்படித்தான் யாருக்கோ குழிவெட்டி போதும் போதாதக் காசைப் போட்டு மெப்பினான்.

குழிவெட்டும் ஒவ்வொரு முறையும் அடுத்த முறை மண்வெட்டி பதியும்போது, தங்கக் கலசத்தின் மீதோ, புதையல் பெட்டகத்தின் மீதோ படப்போவதுபோல அவன் மனசுக்குள் ஒருநினைப்பு ஓடிக்கொண்டே இருக்கும். இப்போதும் அப்படியிருக்கவே செய்தது.

“என்னடா தொத்தலு. இந்தத்தடவையாச்சும் பொதையல் எடுத்துருவியா. அதப்பத்திப் பேசக் காணோம்?”

“ஆமா… பேசி என்ன பண்ண? சரி… அந்தப்புள்ளதான் இந்துவா மாறிருச்சே. கோவிலுக் கெல்லாம் போகும். பொட்டெல்லாம் வெச்சுக்கும். அதுக்கு எப்டிடா இங்கன எடம் குடுப் பாய்ங்க?”

பாபுகானின் கேள்வியில் நியாயம் இருந்தது. ரஷீத் அவனை ஏறிட்டான். ”வாய்ப்புளுத்த வனே. குழிவெட்டுற வேலையப் பாருடா!”

“ஆமாடாப்பா. எங்க வாய மூடிருங்க. உள்ளுக்குள்ளாற விட்டுருங்க ஓட்டைய! ஒருத் தன் நியாயம் பேசிறக்கூடாது. பொறுக்காது. அதுசரி… நமக்குக் கூலியோடத்தான் பேச்சு. இந்தாப்பாரு நானூறு ரூவா வாங்கிக்குடுத்துரு. வெலவாசியெல்லாம் தெரியும்ல்ல. ஆமா. பசியோ குழிவெட்டுறேன்!”

தாவூத்சாயபு தன்னை நபிவழியைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர். கண்விழிக்கும்போதே கலிமா சொல்லிக்கொண்டுதான் எழுந்திரிப்பார். ஐந்துவேளை தொழுகையாளி. முப்பதுநோன்பு பிடிப்பார். ஜக்காத் செய்வார். ஹஜ்ஜுக்குப் போய் வந்திருக்கிறார். ஊரில் நல்ல செல்வாக்கு இருந்தது. ஜமாத்தில் முக்கிய ஆள்வேறு. அவர் பெண்ணை நிக்காஹ் செய்துகொள்ள உறவுக்குள் போட்டியிருந்தது. ‘சிவதனுசு வில்லை முறிக்கவேண்டும்‘ என்பதுபோல, ஒட்டக உயரத்துக்கு எந்தப்பிடிப்புமின்றி எம்பிக்குதிக்க வேண்டும் என்று ஏதாவது போட்டி வைத்திருந்தால், அதற்கும் தயார் என்பதாக ஒருகூட்டம் அலையாடிக் கொண்டிருந்தது. அதற்கெல்லாம் வேலை வைக்காமல் அவர்மகள் பரகத்துன் னிஸா, தன்னுடன் கல்லூரியில் படித்த இந்துப்பையன் சின்னச்சாமியை, தன்பெயரை தனலெட்சுமி என்று மாற்றிக்கொண்டு, மீனாட்சியம்மன் கோவிலில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டாள்.

மகள் எடுத்த முடிவுக்கு, அவர் மாற்று எதுவும் செய்யவில்லை. யார் யாரோ என்ன வெல்லாமோ சொல்லி அவர் மனதைக் கரைத்துப் பார்த்தார்கள். காதுகளையும் வாயையையும் மூடிக்கொண்டார். மகள் மீது அவருக்கு அத்தனைப் பாசம் இருந்தது. தனக்கு இப்படியொரு ஆசை இருக்கிறது என்று மகள் சொல்லியிருந்தால், அதற்கு ஏற்றாற்போல ஏதாவது செய்ய முயன்றிருப்பார். சொல்லாமல் கொள்ளாமல் மகள் இப்படிச் செய்துகொண்டது, அவருக்குப் பெரும் வாதையாக இருந்தது. அதனால் மகளுடனான பந்தத்தை உதறிவிட்டார். இது நடந்து ஏழெட்டு வருஷம் ஆகிப்போயிருந்தது.
மகளுடன் அவர் குலாவவில்லையே தவிர, என்னென்ன நடக்கிறது என்று கவனித்தே வந்தார். மகளை எப்படி வாழ வைக்கவேண்டுமென்று நினைத்திருந்தாரோ அதையெல்லாம் மனதுக்குள் செய்து அழகுபார்த்தார். ஏழெட்டு வருஷமாகியும் மகளுக்குக் குழந்தை உண்டாக வில்லையென்று உள்ளுக்குள் கவலைகொண்டார். நாகூர்ஆண்டவருக்கும் முத்துப்பேட்டை ஷேக் தாவூதுக்கும் நேர்ந்துகொண்டார். ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொண்டதில்லை.

இரண்டுநாள் காய்ச்சலென்று படுத்தவள், மூன்றாவது நாள் காலையில் எழுந்திரிக்க வில்லை என்று தகவல் வந்தபோது, முதல்ஆளாகக் காரை எடுத்துக்கொண்டு அந்தவீட்டுக்கு ஓடியவர், அவர்தான். அப்புறம்தான் ஜமாத் ஆட்கள் துணைக்குப் போனார்கள்.

சின்னச்சாமி நல்லபையனாக இருந்தான். அப்போதுதான் முதல்முறையாக சந்தித்துக் கொள்கிறார்கள். அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதான். அவருக்கும் அழுகை பீறிட்டது. ஒருவரை யொருவர் சமாதானப்படுத்திக் கொண்டு, சொல்லிச்சொல்லி அழுதார்கள்.

கடைசியில் அவர் கையேந்தினார். “அய்யா.. என் உசுருபொண்ணுய்யா அது. அதோட ஆசைய என்ட்ட சொல்லவே இல்லய்யா. நெறைய கனவெல்லாம் இருந்துச்சிய்யா. எதையும் செஞ்சுபாக்க முடியல. அவளுக்கு எங்கையால நிக்காஹ்தான் செஞ்சுவைக்க முடியல. கபர் சடங்கையாச்சும் செஞ்சுக்குர்றேன்யா. எம்பொண்ணு மய்யத்தை என்ட்ட தந்துருங்கய்யா”

பெற்ற வயிறு பரிதவித்ததில் சின்னச்சாமி நெக்குருகிப் போனான். “ஆகட்டும்ய்யா. தந்துர்றேன்!” என்று உறுதி சொன்னான். அவன் தந்த உறுதியையடுத்து ஜமாத் கூடிப்பேசியது. கலிமா சொல்லி பிணத்தின் காதில் ஓதி, அதை இஸ்லாம் முறைப்படி, கபரஸ்தானில் அடக்கம் செய்து விடலாம் என்று முடிவு செய்தது. முறையாக சின்னச்சாமி வீட்டில் செய்வதை யெல்லாம் செய்தபின், மகளின் மய்யத்துடன் தான் வந்துவிடுவதாக தாவூத் சாயபு, தன் துணைக்கு வந்த ஜமாத் ஆட்களை திருப்பியனுப்பி, காரிய ஏற்பாடுகள் செய்யச் சொல்லி விட்டார்.

“காசுருந்தா அல்லாஹ்கூட எல்லாத்தையும் ஏத்துக்குர்றான்?” மூன்றுமணிவாக்கில் ‘அட்டு‘அய்யர் கடையிலிருந்து ரஷீத் வாங்கிவந்த பொங்கல், சட்னி, சாம்பாரை கலந்துகட்டி சாப்பிட்ட பாபுகான் பேசிக்கொண்டே கபர்க்குழியை வெட்டிமுடித்தபோது, அஸர்த் தொழுகை முடிந்திருந்தது.

இஷாவுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கபரஸ்தானுக்குள் ஆங்காங்கே இருந்த விளக்குகளை எரியவிட்டிருந்தார்கள். பள்ளிவாசல் போர்டில் எழுதப்பட்டிருந்தச் செய்தி யைப் பார்த்து, தொழுகையாளிகளும் ஜமாத் ஆட்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு துவாசெய்யக் காத்திருந்தார்கள்.

கபர்க்குழிவெட்டிய பாபுகான், “டேய்.. என்னடா பாடியயும் காணல. பாடியப் பெத்தவரை யும் காணல. அவனுக எப்ப வர்றது. வெட்டுக்கூலி எப்ப வாங்கறது?” என்று ரஷீதிடம் எகிறத் துவங்கியிருந்தான்.

போர்டைப் பார்த்துவிட்டு கபரஸ்தானுக்குள் வந்து, பாபுகான் வெட்டியக் குழியையும் எட்டிப்பார்த்துவிட்டு, “குழிவெட்டுறது ஒருகலைதான். அப்டியே நூல் பிடிச்சாப்ல செதுக்கிருக் கான் பாரு. எங்கனயாச்சும் ஒரு பிசுறு இருக்கா!” என்று யாரோ ஒருவன் நிஜமாகவே சிலாகித்
துப் பேசினான். அது பாபுகானின் காதில் விழவும் செய்தது. ‘பிசுறு.. மசுரு…‘ அவன் ரஷீதைக்
கோபத்துடன் பார்த்தான்.

“பொறு. பொறு. எங்கியும் போயிறாது, ஒங்காசு!”

இஷா தொழுகையும் முடிந்துபோனது. டில்டாபாய் ரஷீதைக் கூப்பிட்டார். “பாடிய வாங் கிட்டு வர்றேன்னு எங்களையெல்லாம் அனுப்புனாரு. இப்ப அவரோட செல்லும் ஆஃப் ஆகி ருக்கு. நீயும் இன்னும் ரெண்டுபேரும் கரீம் கார்ல போயி என்னன்னு பாத்துட்டு வந்துருங்க. ஏதும்னா தகவல் சொல்லு. அடுத்து நாங்க வந்துர்றோம்!” என்றார்.

பாபுகானின் நொச்சிலிருந்து இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்றிருந்த ரஷீத், டில்டாபாய் ஏவியதை உடனடியாக ஒத்துக்கொண்டான். அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டி ருந்த பாபுகான், “நானும் வருவேன்டீ” என்று ரஷீதுடன் ஒட்டிக்கொண்டான். ஆனால் அவர்கள் கிளம்பிப் போவதற்கான வேலையை தாவூத் சாயபு கொடுக்கவில்லை. அவரது கார் பள்ளி வாசல் முன்னால் வந்துநின்றது. கூடியிருந்த கூட்டம் ஜனாஸா வைத்த வேன் பின்னால் வருகின்றதா என்று ரோட்டைப் பார்த்தது. எதையும் காணவில்லை.

“என்னபாய் நீங்க மட்டும் வர்றீங்க?” டில்டாபாய் அவரை எதிர்கொண்டு கைகளைப் பிடித்துக் கொண்டார்.

தாவூத் சாயபு எதையும் பேசாமல், குமுறிக்குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவரு டைய டிரைவர்தான் சொன்னான். “அக்காவோட பாடிய தர்றேன்னுதான் அந்த சின்னச்சாமி சொன்னாரு. நாங்கக் காத்துருந்தோம். ஆனா நேரமாக ஆக அவங்க, அவங்க முறைப்படி சடங்குகளச் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. ஹாஜியார் போய்க் கேட்டதுக்கு அந்த சின்னச்சாமி யோட அம்மா, ‘அவ நீங்க பெத்தப் பொண்ணா இருக்கலாம். ஆனா இப்ப அவ எங்கவீட்டு மருமக. எங்க மருமகள எங்க முறைப்படிதான் எரிப்போம். ஒங்கக்கிட்ட தரமுடியாதுன்னுட் டாங்க. ஹாஜியாரு எவ்வளோ கெஞ்சிப் பாத்தாரு. தரமாட்டேன்னுட்டு சுடுகாட்டுக்குக் கொண்டு போய்ட்டாங்க”

கூட்டம் திக்கித்துப்போய் நின்றிருந்தது.

பாபுகான் நொந்துபோய்விட்டான். “டேய் கெழக்கூதி. கெழவன் என்னென்னமோ சொல் றான். இங்கே நான் வம்பாடுபட்டுருக்கேன். பொணம் வரலை. அதுனால கூலியில்லன்னு சொன்னானுகன்னு வெச்சுக்க. தாயோளி ஒன்னியத் தூக்கிப்போட்டு பொதைச்சுருவேன்!” என்று கறுவினான்.

தாவூத் சாயபு மகளின் மய்யத்தோடு வராமல், வெறுங்கையுடன் திரும்பிவிட்டார் என்ற சங்கதி தெரிந்து, மஹல்லா ஆட்களும், குடியிருக்கும் மற்றவர்களும் பள்ளிவாசல் முன் கூடி விட்டார்கள். தள்ளாத நடையில் மஹல்லாவின் மூத்தவர்களும் வந்திருந்தார்கள்.

ஜமாத் கூடியது. டில்டாபாய் சோகத்துடன் சொன்னார். “அவங்க பாடியத் தரமுடியா துன்னு சொன்னதுக்கு நாம யாரும் எதுவும் உரிமை கோரமுடியாது. அதை ஹாஜியார் தாவூத் சாயபு ஒத்துக்கிட்டுதான் திரும்பி வந்துருக்காரு. இப்ப நாம இங்கன என்ன செய்றதுன்னுதான் பாக்கணும். ஒரு இரங்கல் கூட்டம்போட்டு, ஜியாரத் செஞ்சுட்டுக் கௌம்பலாம்!”

கூட்டத்தில் வயதானவர்களுடன் இளைஞர்களும் நிறைந்திருந்தார்கள். குசும்புக்காரர்
களும் ஓரிருவர் இருந்தார்கள். தொப்பி வைக்காத ஒருவன் எழுந்து நின்று கேட்டான். “ஜியாரத் செய்றதெல்லாம் ஒண்ணும் விஷயமே இல்ல. செஞ்சுறலாம். பாடி வந்துரும்ங்க்ற நம்பிக்கைல கபர்க்குழி வெட்டிவெச்சுருக்கீங்க. பாடி இப்ப வரலை. வெட்டிவெச்ச அந்தக் கபர்க்குழிய என்ன செய்யப்போறீங்க? வெட்டுனக் குழிய சும்மாப் போட்டுவைக்கலாமா? இல்ல, எதையும் உள்ளே வைக்காம மறுபடியும் மூடிறலாமா?”

தாவூத் சாயபு மகள் மௌத்தாகிப்போன சங்கதி திசைமாறி, வெட்டிப்போட்டக் கபர்க் குழியில் மையம்கொண்டுவிட்டது. இருந்தும், இப்படியொரு கேள்வி வரும் என்று யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை. நியாயமான அந்தக்கேள்வியில், கூட்டம் திகைத்துப்போனது. பதில் சொல்லவேண்டியவர்களிடம் அந்தக்கேள்விக்கு பதிலேதும் இருக்கவில்லை. குழிவெட்டிய பின், இப்படி நடப்பது இதுதான் முதன் முறை. ஆளாளாக்குப் பார்த்துக் கொண்டார்கள்.

“வெட்டியாச்சுல்ல… அதை என்ன பண்றது? அப்டியே கெடக்கட்டும்!” என்றார், ஒருவர்.

“என்ன நொப்டியே கெடக்கட்டும்? அது எங்க வகையறாவுக்குன்னு ஒதுக்குன இடம். இப்ப பாடி வரலைங்க்றதுக்காக சும்மாப்போட்டு வைக்கமுடியாது. பின்னாடி என்னமாச்சும் ஒண்ணுன்னா நீங்க ஆட்டிக்கிட்டுப் போயிருவீங்க. அப்டிப் போட்டுவைக்கலாம்னு குரான்லயோ ஹதீஸ்லயோ எங்கேயாச்சும் சொல்லீருக்கா?” என்றான், ஒருவன்.

“அப்ப அந்தக்குழில ஒன்னியப்போட்டு மூடிறலாம். நீ குழிக்கான அந்த வகையறா தானே?” ஒரு குசும்புக்குரல் காற்றில் அலைந்துபோனது.

“எவன்டா அது, தா…யோளி?”

வெட்டியக் குழியை என்ன செய்வது என்பதில், ஆளாளுக்கு யோசனையைச் சொன்னார் கள். என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல், ஜமாத் ஆட்களிடம் மட்டுமின்றி, மஹல்லா ஆட்களுக்கும் மற்ற ஆட்களுக்குமே இருந்தது.

பெருசுகள், “இப்டியெதுவும் இதுக்கு முன்னால நடக்கலைல்ல. அதான் எதுவும் சொல்ல முடியல. ஹஜரத்து, ஒங்களுக்கு ஏதாச்சும் படுதா? நீங்கதான் ‘இல்ம்‘(வாழ்க்கை முறை)படிச்ச வங்க ஆச்சே!” என்று கேட்டார்கள்.

“அப்டியெதுவும் தெரிலியே!” என்று அவர்களும் ஒதுங்கினார்கள்.

கூட்டத்தில், ஷாப்ஜான்பாயும் உட்கார்ந்திருந்தார். அவர் தன்னை அறிவாளி என்று கருதிக்கொள்பவர். ஆனால் அவரை யாரும் அங்கீகரித்ததில்லை. “நான் ஒண்ணு சொல்றேன். கேளுங்க. வெட்டுனக்குழிய சும்மாப் போடக்கூடாது. உள்ளாறப்போட்டு மூடுறதுக்கும் பாடி வரலை. அதுக்குள்ளாற ஏதாச்சும்போட்டு மூடணும்ன்னா, உப்பைப்போட்டு மூடலாம். உப்பு ரஹமத்தானது. அதைப்போட்டு மூடுறதுல யாருக்கும் எந்த நஷ்டமும் வரப்போறதில்ல. குழிய வும் மூடிறலாம்!” என்றார்.

கூட்டத்தில், ‘உப்பைப்போட்டு மூடலாமா?‘ என்று ஆராய்ந்தார்கள். கடைசியில் ஏக மனதாக மூடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டபோது, மணி பின்னிரவு பனிரெண்டைத் தாண்டியிருந்தது.

“ஷாப்ஜான்பாய் அறிவாளிதான்டா. முதல்முறையா உருப்படியா ஒருயோசனை சொல்
லிருக்காரு” என்று குசும்புக் குரலொன்று அங்கீகரித்தது.
மூடியிருந்த ரசூல் கடையைத் திறக்கச்சொல்லி, ஊப்பு மூட்டைகளைத் தூக்கிவந்தார் கள். மூட்டையைப் பிரித்துக் கபர்க்குழிக்குள் கொட்டும்போது, ”ராத்திரி மணி பன்னெண்டு ஆயிருச்சுய்யா. கபர்க்குழிய வெட்டுனதுக்குக் கூலியக் குடுங்கய்யா!” இரவுநேரக் கபரஸ்தானின் நிசப்தத்தைக் கலைத்துப் பேரொலியாய் எழுந்தது, பொறுமையிழந்துவிட்ட பாபுகானின் குரல்.

தம்பளப் பயல் – இந்துப் பையன்
பீடி – வகையறா
டேர் – சமாதி
அஜான் – தொழுகைக்கான பாங்கு அழைப்பு
ஜக்காத் – தானதர்மம்
முஅத்தீன் – பூசாரி
தாதாவுக்குத் தாதா – முப்பாட்டன்
தாதா – தாத்தா
சஹான் – வளாகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *