கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2024
பார்வையிட்டோர்: 506 
 
 

அத்தியாயம் 17-20 | அத்தியாயம் 21-24 | அத்தியாயம் 25-28

அத்தியாயம்-21

புதிய புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள்… நெருக் கடிகள் குறைந்து, வேற்றுார் செல்லும் வண்டித்தடம் தெரிகிறது. இளவெயில் இதமாக இருக்கிறது.

‘அய்யாவும் அம்மாவும் அவளிடம், வீட்டை விட்டுப் போகிறாயா, தாயம்மா ?’ என்று கேட்பது போல் தோன்றுகிறது.

என்னை மன்னிச்சிடுங்க… எனக்கு எதுவும் தெரியல. நீங்க காட்டிய சத்தியம் இப்ப என்னை வெளியேறச் சொல்கிறது.

அப்போதுதான் கையில் மாற்றுச் சேலை கூட இல்லாமல் வந்திருப்பது உணர்வில் தைக்கிறது… ‘காஞ்சி’ என்று ஊர் பேர் விளங்கும் பின்புறம் காட்டிக் கொண்டு ஒரு பேருந்து போகிறது.

ஒரு காலத்தில். இரண்டு புறங்களிலும் பசிய வயல்களாக இருந்தன. இப்படி நல்ல சாலையாக அப்போது இல்லை… ஆனால், இருபுறங்களிலும் ஏதேதோ பேர் போட்ட குடியிருப்புகளுக்காக, வீட்டுமனை எல்லைக் கற்கள் முட்டுமுட்டாகத் தெரிகின்றன.

ஒரு பெரிய சுற்றுச்சுவருக்கு இடையே மேலே வெண்மையான தூபியும் சிலுவைச் சின்னமும் தெரிகிறது. சாலையில் இருந்து அந்தக் கோயிலுக்குச் செல்ல ஒழுங்கான வழியும், பூச்செடிகளும் அமைந்திருக்கின்றன. சட்டென்று இடது கைப் பக்கம் பார்க்கிறாள். பசிய மரங்கள் தெரிகின்றன. சாலையின் எல்லையில் பாதுகாப்பான முட்கம்பி வேலிக்குள், சிவந்த தெச்சிப்பூக்கள் குலுங்கும் பசுமையான அரண். பெரிய எழுத்துக்களில் ‘சிவசக்தி ஆசிரமம் பசுஞ்சோலை’ என்று எழுதப்பட்டிருக்கிறது. பெரிய வாயிலின் அகன்ற கதவுகள் திறந்திருக்கின்றன. உள்ளே, மிக அமைதியான சூழல், மாமரங்களில் பூமித் தாயைப் பாதுகாக்கும் பசுங்குடைகள் போல் சூழ்ந்தி ருக்கின்றன. இன்னும் பூக்கத் தொடங்கவில்லை. மிகப் பெரிய பரப்பு. பல்வேறு வண்ண மலர்களின் தோட்டம்.

ஆங்காங்கு ஒன்றிரண்டு பேர் தோட்ட வேலை செய்பவர் தெரிகின்றனர்… பாதையில் அம்புக்குறி காட்டும் இலக்குகள். சிவசக்தி ஆலயம்… கிணறு… பொதுக்குடில்…

“ஆச்சி, காஞ்சி ரோடில சிவசக்தி ஆசிரமம்னு ஒண்ணு இருக்குதாம். மனசுக்கு ஆறுதலா இருக்குமாம். ரொம்ப அழகா, அம்பாளின் பதினாறு வடிவங்களை அமைச்சி ருக்காங்களாம். ஒருநா போவலாமா? வரியளா?”

சங்கரி… சங்கரி… நீ இங்கு வந்தாயா?…

ஒரு கால் இங்கு இருப்பாளோ? கேள்விப் பட்டதெல்லாம் பொய்யாகப் போகட்டும்.

சங்கரி… உடன் பிறந்தவனின் குடும்பம், மக்கள் என்று உழைக்கவே, அக்கினிமேல் நின்று தவம் செய்தாயே அம்மா ?…

நெற்றியில் திருநீறும், கீழே குங்குமமும் துலங்கும் முகமும் ஒடிசலான, மாநிறமேனியில் கழுத்து மூடிய ரவிக்கையும் கைத்தறிச் சேலையுமாக அவள் “ஆச்சிம்மா!” என்று கூப்பிடுவ்துபோல் தோன்றுகிறது.

வெண்மையும் நீலம் சிவப்பு அழகு விளிம்புகளுமாகத் தெரியும் தேவியின் ஆலயம். முன்புறம் எதிரே ஒரு பாதாம் மரம், அழகிய தீபாராதனைத் தட்டுகளைப் போல் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதைச் சுற்றி வழுவழுப்பான மேடை அதில் வெறும் காவித் துண்டணிந்த, சிவப்புக் கயிறில் கோத்த ஒற்றை உருத்திராட்சம் அணிந்த சாமியார் இருக்கிறார். தாடி மீசை இல்லை. சற்று தொலையில் ஒட்டுக்கூரை கொட்டடிகள் தெரிகின்றன.

பளபளப்பாய் இழைக்கப்பட்ட படிகள்.

பட்டும் பளபளப்புமாக ஏழெட்டு ஆண் பெண்கள், பக்தர்கள் தெரிகின்றனர். மிகப் பெரிய சலவைக்கல் கூடத்தில் ஓர் அழகிய விதானமுடைய மண்டபத்தில் தேவி சலவைக் கல்லில் எழுந்தருளி இருக்கிறாள். சரிகைக்கரையிட்ட மஞ்சள் அரக்குச்சேலை. பச்சை ரவிக்கை. முத்தும் இரத்தினங்களுமான மாலைகள். சிம்ம வாஹினியாக, அபயம் கொடுத்து அருள் புரியும் அம்பிகை. இந்தப் பிரதானமான அம்பிகையைச் சுற்றி, பதினாறு தூண்களில், மாடங்களில் அம்மனின் வெவ்வேறு திருக்கோலங்கள். காயத்ரி, சண்டிகை, துர்க்கை, என்றெல்லாம் பெயர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு எந்த வடிவிலும் சங்கரியே தெரிகிறாள்.

கொத்துக் கொத்தாக வெண்மையும் சிவப்புமாக மலர்கள் அலங்கரிக்கும் பிரதிமைகளில், கண்களைத் திறந்து கொண்டாலும் மூடிக் கொண்டாலும் அவளே தெரிகிறாள்.

சங்கரிக்கு நாற்பது, நாற்பத்தைந்து வயசிருக்குமா?

எத்தனை பூக்களை இந்தப் பூமி பிரசவிக்கின்றன?

எல்லாமே காயாகின்றனவா? காயாகாத பூக்கள் தாம் கடவுளுக்கு என்று அருள் பெறுகின்றன… ஆனால் கடவுளுக்கு மட்டுமே பூசனைக்குரிய பூக்கள், ஆணையும் பெண்ணையும் தெய்வ சாட்சியாக இணைத்து, உலகை வாழவைக்கும் ஒரு தொடக்கத்துக்கான மணமாலைக்கும் பயன்படும் பூக்கள்… ஆனால், மாலைகள் கட்சிகளின் வெற்றிச் சின்னங்களாக, அழுக்குப் பிரதிமைகளை அலங்கரிக்கும் கட்சி மாலைகளாக… மிதிபடும் பூக்களாக, புழுதியில் வீசப்பட்டுக் கருகும்…

நெஞ்சைச் சுமை அழுத்துகிறது. இலக்குத் தெரியாமல் ஒவ்வொரு பிரதிமையின் முன்னும் நின்று மீள்கிறாள்.

பெரிய இடமாக இருப்பதால், கூட்டம் இல்லை போல் தோன்றுகிறது. ஆனால், பிரதான மண்டபத்தின் முன் ஐம்பது பேருக்குக் குறையாமல் வந்திருப்பது தெரிகிறது.

வெள்ளை வேட்டி அணிந்த ஒரு பிரும்மசாரி போன்ற இளைஞர் பூசை செய்கிறார். அவர் என்ன மந்திரம் சொல்கிறார் என்பது செவிகளில் விழவில்லை.

பிரதானமான இராஜராஜேசுவரி – அம்மனைப் பூசித்த பிறகு, பதினாறு வடிவங்களுக்கும் அவர் பூசை செய்கிறார். ஆங்காங்கு அவருடன் பூசையைப் பின்பற்றுவதுபோல சில பக்தர்கள் நகர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அப்போது, வெளிப்பக்கம், திண்ணை விளிம்பில் நின்று, பார்க்கும் வித்தியாசமான ஒருவனை அவள் பார்க்க நேரிடுகிறது. ஒல்லியாக, கூன் விழுந்த முகம். வெள்ளை வேட்டி… கதர்… கதர்சட்டை வழுக்கையில்லை; முடி தும்பைப் பூவாக இருக்கிறது.

அவன் முகத்தைப் பார்க்கும் ஆவலில் அவள் அதே இடத்தைச் சுற்றி வலம் வருவது போல் வருகிறாள். முன்பக்க வாயிலில் பெரிய மணி தீபாராதனை என்றழைக்க சுநாதமாக ஒலிக்கிறது. அவன் திரும்புகிறான். அவளும் பார்க்கிறாள்.

கழுத்துமணி தெரிய… நெற்றியில் பச்சைக்குத்துடன்…

“என்னம்மா, பாக்குறீங்க?… எனக்கும் பாத்தாப்புல இருக்கு…”

“நா. தாயம்மா… குருகுலம்… எஸ்.கே.ஆர். தியாகி.”

“அம்மா..! நான் சுப்பய்யா, தெரியல…?”

ஏதோ பிடிகிடைத்தாற்போல் மனம் சிலிர்க்கிறது.

பேசவில்லை. தீபாராதனைக்குப் போகிறார்கள்.

இவன் அம்மா அஞ்சலை. அப்பா கிடையாது. சேவா கிராமம் போய் பராங்குசம் வந்து ஆசிரியப் பொறுப்பேற்ற போது இவனும் வந்தான். ராதாம்மாவுக்கு இந்தி பேசப் பயிற்சி கொடுத்திருக்கிறான். நல்ல கறுப்பு; இப்போது, உடல் வெளுத்து சோகை பாய்ந்தாற்போல் இருக்கிறான்.

திடுமென்று ஒருநாள், குடிலைவிட்டுப் போய்விட்டான். அம்மா அஞ்சலை குருகுலத்தில்தான் பின்னர் வேலை செய்தாள்.

பேச்சே எழவில்லை. வெகுநாட்கள் சென்றபின் அறிமுகமானவர்களைப் பார்த்த மகிழ்ச்சி பிரதிபலிக்கவில்லை.

தனியாகத்தான் வந்திருக்கிறானா? எங்கிருந்து எங்கு வந்து முளைத்திருக்கிறான்? பிரதான தேவிக்குப் பின் சுற்றிலும் வந்து தீபாராதனை முடிகிறது. கர்ப்பூரத்தட்டை அங்கேயே நடுவில் பீடமொன்றில் வைத்து விடுகிறார் பூசாரி.

பக்தர்களுக்கு அந்தப் பூசாரி இளைஞரே, பூக்களும் தீர்த்தப் பிரசாதமும் தருகிறார்.

குங்குமப்பூ, கர்ப்பூர மணமும் கரைந்த தீர்த்தம் நாவுக்குப் புனிதம் கூட்டுகிறது. புலன்கள் ஒடுங்கிவிட்டால் எந்தச் சுவையும் கவர்ச்சி கொடுக்காது அய்யா. ராதாம்மா வின் மறைவுக்குப் பிறகு, வழக்கமாக, கீதைபடித்துச் சொல்வார். அம்மாவுடன் அவளும் கேட்பாள்.

யோகத்தில் ஒடுங்கியவர் அம்மா. ஒரு குழந்தை வேண்டுமென்று, காந்திஜியைத் தனியாகச் சந்தித்து, புருசனின் பிரும்மசரிய விரதத்தை மாற்றிக் கொள்ள அறிவுரை பெற்றார். முத்தாக ஒன்று பெற்றதை இழந்த சோகம்… ஒரே வருசம்தான்…

இரவு படுத்தவர், உறக்கத்திலேயே இறைவனடி சேர்ந்தார். நோய், நொடி, எதுவுமே அநுபவிக்கவில்லை… ஆனால், அய்யாவுக்குத் துயரம் இல்லையா?…

புரியவில்லை.

அவள் அந்தப் பிரசாத தீர்த்தத்திலேயே, கனவில் மிதப்பது போல் நிற்கிறாள்.

ஒரு பெரிய ‘ஸில்வர்’ அடுக்கில் சர்க்கரைப் பொங்கல் தேவிக்கு நிவேதனமாயிருக்கிறது.

எல்லோருக்கும் வாதா மரத்தடியில் கண்ட சாமியார் வாழை இலைத் துண்டுகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார். பூசாரி ஒரு வாளியில் பொங்கலை எடுத்து வந்து பெரிய கரண்டியால் ஒரு கரண்டி எடுத்துப் போடுகிறார். பட்டுக்கரை வேட்டிகள், சரிகைப் புடவைகள், குழந்தைகள் என்று எல்லோருமே அந்த விசாலமான கூடத்தில் பளிங்குத் தரையில் அமர்ந்து பிரசாதம் உண்ணுகின்றனர்.

“அம்மா, நீங்களும் வாங்கிக்குங்க?”

இலையில் சர்க்கரைப் பொங்கல். நெய் மணக்கும், முந்திரி திராட்சை தெரியும் பொங்கல். சுவாமியும் பக்தர்களும் மட்டும் செழிப்பில்லை; பிரசாதமும் செழிப்புத்தான்.

பொங்கலுடன் அவள் படியில் இறங்குகையில், படிக்குக் கீழே உள்ள சுத்தமான கடப்பைக்கல்லில், சாமியார் ஒரு வாளிப் பொங்கலைப் போடுமுன், ஏழெட்டு நாய்கள் வருகின்றன.

எல்லாமே ‘அநாதைகள்’தாம். தாமே தெருப் பொறுக்கி இன விருத்தி செய்யும் உயிர்கள். அவற்றில் ஒன்று சொறி நாய். அது அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, இன்னும் இன்னும் என்று குலைக்கிறது. சுப்பய்யா, தன் இலையில் இருந்து கொஞ்சம் போடுகையில் சாமியார் ஓடி வருகிறார். “நீங்க போடாதீங்க சுவாமி. அது பசியில்லை; வெறி” என்று கையால் விரட்டி, “போ” என்று துரத்துகிறார். ஆனால் அது சுப்பய்யாவைக் குறி வைத்து ஓடிவர, தாயம்மா, தன் இலையில் இருந்து கொஞ்சம் கீழே போடுகிறாள். அதற்கு அது அடங்கவில்லை.

“நீங்க சாப்பிடுங்கம்மா..?” என்று சுப்பய்யா வற்புறுத்துகிறான். ஆனால் தாயம்மாவைத் துரத்தி, அவள் காலில் பாய்ந்து புடவையை இழுத்துக் கடித்ததும் அவள் பொங்கலை அப்படியே இலையுடன் நழுவவிட்டதும் மின்னல் வெட்டாக நிகழ்ந்து விடுகின்றன.

“அடாடா… நான் சொன்னேனே, கேட்டிங்களா?”… ஒண்ணும் ஆகாது தாயே, குழாயடியில் புண்ணைக் கழுவிக் கொள்ளுங்கள்.”

“சாமி! கொஞ்சம் குங்குமம் குடுங்க, கடிவாயில் வைக்கட்டும்” சுப்பய்யா குங்குமத்தை வாங்கி வருகிறான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மண்ணில் பொங்கல் சிதறி இருக்கிறது. நாய் வெறி தணிந்தாற் போல் ஒடியிருக்கிறது.

“தாயே, இப்படி உக்காருங்க, கொஞ்சம் பிரசாதம் தரச்சொல்றேன், சாப்பிடுங்க!” என்று பாதாம் மரத்தடி மேடையில் அமர்ந்த அவர்களைச் சாமியார் உபசரிக்கிறார்.

“இருக்கட்டுங்க. இத இவரே வச்சிருக்காரு…” சுப்பய்யாவின் பிரசாதத்தில் இருந்து சிறிதளவு உண்கிறாள். அவளுடைய உறுதி, துணிவு எல்லாம் நைந்து கரைகின்றன. வெறிநாய், சொறி நாய் கடித்திருக்கிறது… இதுவும் ஊழ்வினையா?

குடிலில் ஒரு பையனை நாய் கடித்துவிட்டது. உடனே அய்யா அவனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். தொப்புளைச் சுற்றி பதினாறு ஊசிகள் போடவேண்டும் என்று போட்டார்கள் ‘அம்மா மாதிரி’ உறக்கத்தில் பிராணன் போகுமா?

பசி, பட்டினி, எல்லாம் உச்சக் கட்ட மரண பயத்தில்தான் கொண்டுவிடுமோ? சாயபு, சிறை உண்ணா விரதத்தில் எப்படியெல்லாம் ஆசை காட்டி அதை முறிக்கச் சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார். ராமுண்ணி…? சே! அந்த நெஞ்சுரம் ஏனில்லை?

மவுனமாக அவர்கள் அந்தப் பெரிய ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள். ஆங்காங்கே நின்ற கார்களில், வந்திருந்த பக்தர்கள் போகிறார்கள்.

மவுனம் கனத்திருக்கிறது.

“நீங்க எங்கியோ, வடக்கு அப்பவே போயிட்டதாச் சொன்னாங்க? இங்க வந்து எத்தினி நாளாச்சு? இப்பதா எங்கியும் இந்தி இல்ல. எங்க இருக்கிறீங்க? உங்கம்மா…”

“அவங்க அப்பவே ஊருக்குப் போனாங்க. அஞ்சாறு மாசத்துல போயிட்டாங்க இருபது வருசமாச்சு. நீங்க எப்படி இங்க? பெரிய வீட்டில இல்லியா?”

அவள் அதற்கு விடை கூறாமல், “குருகுலம் போனிங்களா? பராங்குசத்தைப் பாத்தீங்களா?” என்று கேட்கிறாள்.

“என்ன என்னத்துக்கு வாங்க போங்கன்னு சொல்லுறீங்க? நா உங்க மகன் போல. சும்மா, சுப்பய்யா, இங்கு எங்க வந்தேன்னு கேளுங்க…”

அவள் மனம் இலேசாகிறது. “என்ன இருந்தாலும் நான் படிச்சு வேல பாக்குற கவுரவம் இல்லாதவ. எதோ நல்லவங்கள அண்டி ஊழியம் செய்ததில் பூப்பந்த வச்சிட்ட எலச்சருகுபோல. இப்ப இதுல பூவும் இல்ல; பசுமையும் இல்ல. நொறுங்கிப் போனாலும், உசுரு உணர்வு, அடங்கல…”

கண்ணிர் பொங்க, குரல் கரகரக்கிறது.

“இதபாருங்க, விதின்னு சொல்றத இப்ப நானே நம்புறேன்… ராதாம்மா ஆஸ்பத்திரில இருந்தப்ப பார்த்தேன். பிறகும் – கடைசில, அய்யா அம்மாளையும் பார்த்தேன். அந்த இந்திக்களேவரத்துல, உங்க பய்யன் என்னை நேராக அடிச்சி, சட்டையக் கிழிச்சி, அவமானம் பண்ணினான். அப்புறமும் இங்கே இருந்தேன். அதுக்கும் மேலான அவமானம் வந்தது. ஒடிப்போனேன். எது அவமானம், எது இழுக்கு, எது தர்மம்னு ஒண்ணும் இப்ப புரியல. விதியின் கை எழுதிச் செல்லும் வாழ்க்கை…”

‘ஏம்பா, சுப்பய்யா, ராதாம்மா வீட்டுக்காரர், பையன்லாம் எங்க இருக்காங்க தெரியுமா?…”

“அவங்க அப்பவே நேவிலேந்து ரிடயராகிட்டாங்க. வடக்கே இமாலயப் பக்கம், போனாங்க. சிப்கோ மூவ்மெண்ட்ல தீவிரமா இருந்தாதா கேள்விப்பட்டேன்.”

“அது என்னப்பா?…”

“அதுவா, அங்கே பெரிய மரத்தெல்லாம் வெட்டிக் காடுகளை அழிச்சி, பரிசுத்தங்களை மாசுபடுத்துவதை எதிர்த்து ஒர் இயக்கம். ‘சிப்கோ’ன்னா ஒட்டிக்கிறதுன்னு அர்த்தம். கன்டிராக்ட் தடியங்க மரம்வெட்ட வரச்ச உங்கள மாதிரி பொம்பிளங்க அதை அப்படியே கட்டிட்டு ஒட்டிட்டு, எங்கள வெட்டிட்டு பின்னால மரத்த வெட்டுங்கன்னு சொல்ற இயக்கம்…”

நெஞ்சு உருகுகிறது “அய்யா, பய்யன்…?”

“பையன் அமெரிக்காவுல பி.எச்.டி. பண்றான்னு சொன்னாங்க அவங்க அத்தை இறந்து போனாங்க. வேற சேந்த மனிசங்க யாரையும் நான் பார்க்கல…”

“விக்ரம். அதுக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணிலியா ?”

“தெரியல. இப்ப உலகமே கிராமம் மாதிரி சுருங்கிப் போச்சின்னு சொல்றாங்க. வியாபார, அதர்மத் தொடர்பு கள்தா இறுக்கிப் புடிச்சிட்டிருக்கு. அதுக்குள் மனுசங்க ஒருத்தொருத்தர் தெரியாம வலைக்குள் இறுகிப் போயிட்டாங்க. எங்கியோ இருந்து வந்து கடை துறந்து கோழிக்கறி பண்ணி விக்கிறான்…”

“அய்யோ, அதெல்லாம் சொல்லாதீங்க…”

நிகழ்காலமே வேண்டாம் என்று சொல்வது போல், மரங்களினூடே வந்து வெளியே நிற்கிறார்கள். வரிசையாகச் செருப்புகள் வைத்திருந்த இடத்தில் சுப்பய்யா தன் செருப்பை இனம் கண்டு மாட்டிக் கொள்கிறான். அவளுக்குச் செருப் பணிந்து பழக்கமில்லை. வெளியேறுகிறார்கள்.

அத்தியாயம்-22

அவர்கள் சாலையில் அடிவைக்கையில் ஒரு பஸ் வருவது தெரிகிறது இந்த ஆசிரமத்துக்கே ஒரு கும்பல் இறங்குகிறது.

“வாங்க ஏறுங்க; நாம போகலாம்?”

“வாணாம்பா, ஒரெட்டு நடந்து போயிரலாம்?”

“இப்ப இந்தப் புடிவாதம் வாணாம். ஏறுங்க” அவன் பலவந்தமாக அவளைப் பஸ்ஸில் ஏற்றுகிறான். “கே.ஜி. ஆஸ்பத்திரி. ரெண்டு டிக்கெட்” என்று சொல்லிவிட்டு மகளிர் இருக்கையில் காலியாக இருந்த இடத்தைப் பார்த்து உட்கார்த்தி வைக்கிறான்.

“கே.ஜி. ஆஸ்பத்திரியா? அங்கெ எதுக்கப்பா போவணும்? நாம மின்னாடியே எறங்கிட்டா குறுக்குச் சந்தில புகுந்து ஸ்கூல் பக்கம் திரும்பிடலாமே?”

“கொஞ்சம் வாய மூடிட்டு வரீங்களா ?”

அவன் முகம் ஏணிப்படிக் கடுப்பாக மாறவேண்டும்?

பெரிய சாலையில் அந்த ஆஸ்பத்திரி இருக்கிறது. வெகு நாட்களாகச் செயல்படும் ஆஸ்பத்திரி என்று பெயர். ஆனால் சென்று நெருங்கும் பிரபலம் பற்றி அவளுக்குத் தெரியாது.

சாலையில் அவர்கள் வந்திறங்கும் போது, பிற்பகல் மூன்று மணி இருக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என்று எங்கே பார்த்தாலும் தள்ளுபடி விழா. ஃபிரிட்ஜ், வாஷிங் மிசின் கிரைண்டர் என்று நடுத் தெருவுக்கே வருவதுபோல் கடைபரப்பி இருக்கிறார்கள். துணிக்கடைகளோ, பழக்கடையில் மொய்க்கும் ஈக்களைப் போல் மக்களைக் கவரும் பரபரக்குள்ளாக்கி இருக்கின்றன. ஒரு புறம் தலையணை மெத்தை விரிப்பு என்று மக்களைக் கூவி அழைக்கும் வாணிபம். இடைஇடையில் சிக்கன், மட்டன் மசாலா நெடி வீசும் உணவுக்கடைகள். குப்பைத் தொட்டிகளும் நிரம்பி வழியும் கழிபட்ட பிளாஸ்டிக் குப்பைகள்… ஏதோ தோசைக்கு இடையே வைக்கப்பட்ட உருளை மசாலா போல் உயர்ந்து போயிருக்கும். ஆஸ்பத்திரிக்குள் அவன் அவள் கையைப் பற்றிக் கொண்டு அழைக்கிறான்.

“யே, இப்ப எதுக்கு ஆசுபத்திரி? வுடுங்க!”

‘எதுக்கா? சொறி நாய்; வெறி நாய், விசம் நீரை உறிஞ்சி, நீர்சுண்ட, எச்சிமுழுங்க முடியாம, நாயபோல” அவள் விலுக்கென்று கையை உதறிக் கொள்கிறாள்.

“அதெல்லாம் ஒண்ணுமாகாது. அதான் அம்பாள் குங்குமம் வச்சாச்சே!”

“எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. முரண்டு புடிக்காம உள்ள வாங்க… எதோ சக்தி உங்களையும் தள்ளிட்டு வந்திருக்கு என்னையும் தள்ளிட்டு வந்திருக்கு. காரண காரியம் புரிபடல; வாங்க…”

ஆஸ்பத்திரியிலும் அந்த நேரத்தில் கெடுபிடி தெரியவில்லை. ஒரு பழைய வீடுதான். நுழைந்ததும் கூட மறைப்பில் தட்டி போல் ஒரு தடுப்பு. ஒழுங்கை போல் பின்புறம் செல்லும் இடத்தில் ஒரு கட்டிலில், நோயாளிப் பெண் படுத்திருக்கிறாள். சொட்டு இறங்கும் அந்த நிலையருகில் ஒரு பெண் கவலையுடன் நிற்கிறாள். பெஞ்சியில் வரிசையாக நோயாளிகளோ உறவினர்களோ குந்தியிருக்கின்றனர். எங்கோ ஒரு குழந்தை வீரிட்டுக் கத்தும் குரல் செவியில் விழுகிறது.

மருந்தகமும் உள்ளே இருக்கிறது. அருகில் உள்ள திட்டி வாசலில் சுப்பய்யா தலை நீட்டி “ஒரு நாய்கடி கேஸீங்க. ஊசி போடணும்” என்று சொல்வது செவியில் விழுகிறது.

“வளர்ப்பு நாயா, தெரு நாயா ?” என்று நர்ஸ் கேட்கிறாள்.

“தெரியல. ஆனால் அது கோயில் நாய்!”

“என்னய்யா ? வெளயாடுறியா? கோயில்ல நாய் வளக்கிறாங்களா ?”

“ஏன், கூடாதா?’ என்று கேட்டுவிட்டு, “அது சொறிநாய், வெறிநாய்…” என்று முடிக்கிறான்.

அவள் அவன் சட்டையைப் பற்றி இழுக்கிறாள். “ஒண்ணும் வாணாம்பா !”

“அப்ப, அந்தப்பக்கம் போயி சீட்டுப் போட்டுட்டு வாங்க. அஞ்சு ஊசி போடணும்; ஆயிரம் ரூபாய் ஆகும்.”

“இப்பவே அஞ்சு ஊசியும் போட்டுடுவீங்களா? ஆயிரம் ரூபாயும் குடுத்திட…?”

“என்னய்யா, எகன முகனயா பேசுறீங்க. இவ்வளவு ஆகும்னு சொன்னேன். சொறிநாய், வெறிநாய்னு சொன்னீங்க. அஞ்சு ஊசி போட்டாத்தான் பத்திரம். இப்ப முதல்ல முந்நூறு கட்டிட்டுச் சீட்டு வாங்கிட்டு வாங்க!”

அவன் அந்தப் பக்கம் நகர்ந்ததும் இவள் வந்த வழியில் நடையைக் கட்டுகிறாள். கோயிலுக்குப் போனாள், நாய் கடித்தது, சரி. இவனைப் பார்த்து எத்தனை வருசம் ஆயிருக்கிறது? இப்ப தீரும் என்று வந்த வழியில் ஆயிரம் ரூபாய்க்கு ஊசியா? முருகா? இவள் மாசச் செலவு கூட அவ்வளவு ஆகாதே?

விடுவிடென்று கடைகளுடே அவள் நடக்கையில் அவன் விரைந்து வந்து அவள் கையைப் பற்றி நிறுத்துகிறான். கைப்பிடி இறுகுகிறது எலும்பும் நரம்புமாகத் தெரியும். அந்தக் கைக்கு இத்துணை வலிமையா?

‘என்னம்மா? திரும்பப் பாக்குமுன்ன எதோ பி.டி. உஷான்னு ஒடுறீங்க ? நா முந்நூறு கட்டிச் சீட்டு வாங்கிட்டே! வந்து ஊசி போட்டுக்குங்க?”

“எனக்கு ஊசிகீசி ஒண்ணும் வாணாய்யா, நா அப்படி நாய் மாதிரி ஊளையிட்டுச் சாவணும்னு விதியிருந்தா, சாவறேன். என்ன வுடய்யா !” –

அவன் விடையே கூறாமல் அவளை இழுத்து வருகிறான்.

கட்டுக்கட்டும் இடத்தில் ஒரு நர்ஸ் பெண், அவள் சேலையை அகற்றி, காலில பட்ட கடிக்காயத்தைப் பார்க்கிறாள். முழங்காலுக்குக் கீழ் ஆடு சதையில் கவ்வி இருக்கிறது. இரண்டு சுற்றுச் சீலையும் கிழிபட்டிருக்கிறது. இரத்தம் பட்டிருக்கிறது.

கடிவாயை மருந்து நீர் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கிறாள்.

‘பல் ஆழமா முனெடத்துல பதிஞ்சிருக்கு பாரு… ஏம்மா போயி சொறி நாயக்கடிக்கிறீங்க இந்த வயசில…?” அவள் சிரிக்காமலே கடிபட்ட இடத்தில் மருந்துத் துணி வைக்கிறாள்.

“இந்தம்மாக்கு, புள்ள குட்டி, பேரன் பேத்தின்னு இல்ல. பொழுது போகல நேரா கோயிலுக்குப் போயி, சொறி நாயக் கடிச்சிட்டாங்க, போனாப் போவுதுன்னு, நா கோயிலுக்கு வந்தவ, இவங்கள தத்து எடுத்துக்கலான்னு இருக்கே…”

“அதும் சரிதா. வயசு எழுபத்தெட்டுன்னு போட்டிருக்கிங்க. இது இரண்டாவது குழந்தைப் பருவம். தத்தெடுக்கிறது சரிதான்..”

பஞ்சால் நன்றாகத் துடைத்து, பதமாக பிளாஸ்திரி போடுகிறாள்.

பிறகு, இடது கையில் ஊ சியும் போடுகிறாள் இன்னொரு நர்ஸ்.

“ரொம்பத் தண்ணி படாம வச்சுக்குங்கம்மா ? நாளக்கழிச்சி வாங்க. அடுத்த ஊசி போட்டுக்கலாம்.”

வெளியே வருகிறார்கள்.

சுப்பய்யா ஒர் ஆட்டோவைக் கூப்பிடுகிறான்.

“ஏம்ப்பா, உங்கிட்டக் காசு ரொம்ப இருக்குதா? பொடி நடையா நடந்து போயிரலாமே?”

“உங்க கால்ல செருப்பில்ல. கால்ல காயம். ஏறி உக்காருங்க..” அவள் உட்காருகிறாள்.

“பள்ளிக்கூட வாசலில் கலகலப்புக் கூட்டம் இல்லை.

திரும்பும்போது, சங்கரி இருந்த வீட்டுக்கூரை ஒடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன… சொரேலென்கிறது…

“ஏம்ப்பா. கொஞ்சம் நிறுத்து?…”

அவன் தாண்டிப் போய் விடுகிறான். வீட்டுப் பக்கத்தில் அய்யப்பன் வாழைகள் இலைக்குப்பைகள் அலங் காரங்களை இரண்டு மூன்று நோஞ்சான் மாடுகள், பன்றிகள் இழுத்துப் போட்டிருக்கின்றன.

அவள் வண்டியில் இருந்து இறங்குகிறாள்.

“த…சூ.” என்று கை ஓங்கிப் பன்றிகளை விரட்டுகிறாள்.

இடுப்பில் இருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறக்கிறாள். வீட்டில் அடி வைத்ததுமே, வயிறு கூவுகிறது.

“உள்ள வாங்க… வாப்பா…’ என்று திருத்திக் கொண்டு, பின் புறமிருந்து துடைப்பம் எடுத்து வந்து முன் வாசல் அலங்கோலங்களைப் பெருக்குகிறாள். அந்த வாழைக் கழிவுகளை உண்ணும் மாடுகளில் கொல்லையில் கட்டப்பட்டிருந்த செவலையும் இருக்கிறது. இவளைக் கண்டதும் அது தானாக வீட்டுப் பக்கம் போகிறது. உள்ளே வந்து பின்புறக்கதவைத் திறந்து அழைத்துக் கொள்கிறாள். சேலை நுனியில், இரத்தக் கறை தெரிகிறது. கசக்கியும் முழுதும் போகவில்லை.

வேறு சேலை மாற்றிக் கொண்டு, அடுப்பைப் பற்ற வைக்கிறாள். அரிசியைக் களைந்து வைத்துவிட்டு, சேலையை சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்துகிறாள். அரைமூடி தேங்காய் இருக்கிறது. அதை நசுக்கி வற மிளகாய், புளி வைத்து அறைக்கிறாள்.

சமையலை முடித்துவிட்டு அவள் வெளியே வந்து பார்க்கிறாள். மாடிப்படி அறை பூட்டி இருக்கிறது. கூடத்தில், வெளித்திண்ணையில் இல்லை. எங்கே போய்விட்டான்?

பக்கத்து மனைக்கட்டில் செங்கல் வந்து இறங்கி அடுக்கி இருக்கிறார்கள். தெருவில் கம்பி கொண்டு போகும், சிமிட்டி மூட்டை சுமந்து செல்லும் ஏதேதோ வண்டிகள் செல்கின்றன.

“எங்கே போனான், சொல்லாமல் கொள்ளாமல் ? ஆனால், எங்கிருந்து எப்படி வந்தான்?…”

சூனியமாக இருக்கிறது கனவா, நிகழ்வா?

உள்ளே சென்று சாப்பிடவும் பிடிக்கவில்லை. வாயிலிலேயே நிற்கிறாள். கறுத்து வாடிய முகத்துடன் வருகிறான்.

“ஏம்ப்பா? எங்கே போயிட்டே? நா ஒரு சோத்தப் பொங்கி வச்சிட்டுக் காத்திருக்கிறேன். பொழுது சாஞ்சு போச்சி ஒருவேள சாப்புடத்தான் போனிங்களோ?…” வேகமாகச் சொற்கள் வருகின்றன.

“வந்து… அந்த ஒட்டு வீடு பிரிக்கிறாங்களே, அங்க யார் இருந்தாங்க?” சுருக்கென்று நெஞ்சில் கத்தி குத்திவிட்டாற் போல் வேதனை தோன்றுகிறது.

“வயசான ஓமியோபதி டாக்டர், ஏழைகளுக்கு வைத்தியம் பண்ணிட்டிருந்தார். இப்ப வரமுடியல போல இருக்கு அவரு படப்பை பக்கத்திலேந்து வருவார்… சாப்பிட வரியா?”

“ஒரம்மா கிரீச் நடத்திட்டிருந்தாங்கன்னு சொல்றாங்களே, சங்கரின்னு…”

“அ… ஆமாம்.. அவளத்தான் நாலு மாசமாக் காணல. புறந்தவன் வந்து கூட்டிட்டுப் போயிட்டாப்பல…”

‘நீ முதல்ல சாப்புட வா. எனக்குப் பசிக்கிதப்பா, ஊசிபோட்டதோ என்னமோ, என்னிக்கும் தெரியாத பசி…”

“நீங்க அவுங்களப் பாத்திருக்கீங்களா தாயம்மா…”

“முதல்ல நீ பசியாறு. பிறகு பாக்கலாம்…” இலையைப் போட்டு மணை போடுகிறாள். அவன் முகம் கழுவிக் கொண்டு வருகிறான்.

சோறு ரசம், துவையல்… மோர்…

அவன் இலையை எடுத்துக் கொண்டு செல்கிறான். இவள் கரைத்துக் குடிக்கிறாள்.

அப்போது ரங்கன் உள்ளே வருகிறான். பெஞ்சியில் கிடந்த தந்தி பேப்பரைப் பார்த்துக் கொண்டு நிற்கும் சுப்பய்யாவைப் பார்க்கிறான். என்னம்மா, சொல்லாம கொள்ளாம கதவப் பூட்டிட்டுப் போயிட்ட காலம இல்ல, மத்தியானம் இல்ல, புள்ள வீட்டுக்குத் தான் போயிட்டியோன்னு போன் போட்டுப் பார்த்தேன், சரி வித்யாலயா வுக்குத்தான் போயிட்டியோ மனசுமாறின்னு விசரிச்சேன், அங்கும் இல்ல. எங்க போயிட்டு வரே! இவுரு யாரு?”

இவன் இப்போது எஜமானனாகிவிட்டான். வரீங்க, போறீங்ககூட இல்லை…

“இவுரு யாரு?”

“இவுரு, அந்தகாலத்து ஆளு. குருகுலத்துல வேலை செய்தவரு. பேரு சுப்பய்யா…”

சுப்பய்யா நிமிர்ந்து பார்க்கிறான்.

“வணக்கமுங்க. நீங்களே சொல்லுங்க. என்ன இந்த இடமெல்லாம் பொறுப்பா பாத்துக்க சேர்மன் அய்யா, வச்சிருக்காங்க. இப்படித்தா. சொல்லாம கொள்ளாம திடுதிடுன்னு போயிடறாங்க, வயிசாயிடுச்சி. மகன் கூப்பிடுறாங்க. அங்க போகணும். இல்லன்னா குருகுலம் பக்கமே அவுட் அவுஸ் தாரேன்னு கூப்பிடுறாங்க. அதுவும் மாட்டேன்னு இப்புடி நடக்குறாங்க. எனக்குத்தானேய்யா, பொல்லாப்பு? நீங்க எந்த டிரெயின்ல, எங்கேந்து வாரீங்க? எனக்கு ஒரு சேதி சொன்னா டேசனுக்கு வந்திருப்பேன்ல? தியாகி அய்யா சொந்தக்காரங்களா?” ரங்கனின் நிலை கொள்ளாத பரபரப்பு வெளிப்படுகிறது.

“அவங்களுக்கு ரொம்ப வேண்டியவன்தான். இப்பதா அவங்க யாரும் இல்லையே?”

“அது சரி. நீங்க எந்துரிலேந்து வந்திருக்கிறீங்க?”

“புனா… ஒரு காரியமா வந்தேன். இந்தம்மாவை எதிர்பாராம கோயில்ல பார்த்தேன். அங்க இவங்கள ஒரு நாய் கடிச்சிட்டது. கூட்டிட்டுப்போயி ஆசுபத்திரில ஊசி போட்டுக் கொண்டாந்துவிட்டேன்.”

‘அடாடா… என்னம்மா ? இதுக்குத்தா நான் சொல்லிட்டேருக்கிறன். எந்த கோயிலுக்குப் போனீங்க? திருநீர்மலையா? ஏகாதசி கூட இல்லியே?…”

“இதபாரு ரங்கா. நா ஒண்ணும் வீட்டுக் கைதி இல்ல. உன் சோலியப் பார்த்திட்டுப் போ. அப்பிடிப் போனா போயிட்டுப் போறன்…”

அவன் ஒன்றும் பேசாமல் போகிறான். முகம் உப்பியிருக்கிறது.

சுப்பய்யா விளக்கு வைத்து, பிரார்த்தனை என்று அரைமணி உட்கார்ந்திருக்கிறான்.

“ஏம்ப்பா, நீ என்ன காரியமா வந்தேன்னே சொல்லல. அய்யா பாட்டுக்கு டிரஸ்ட்னு, எல்லாம் வச்சிருக்கிறதா சொல்றாங்க. ஆனா, கடைசி மூச்சை அவங்க வுடறப்ப நாந்தா இருந்தே. சுத்தப் பாலிலும் விசம் சேந்திடும்னு அப்பவே புரிஞ்சிட்டாங்க. இந்த இடத்துல, சத்தியமா, ஏழை எளிசுங்களுக்குக் கல்வியோ வைத்திய சேவையோ பண்ண, அம்மா பேரை வச்சி நடத்தணும்னு அவங்க எண்ணம். மாடில பீரோல, அம்மா, ராதாம்மா உபயோகிச்ச சாமான்கள், போட்டோ படங்கள், துணிமணி, வீணை எல்லாம் இருக்கு. அப்பவே பராங்குசம், என்னை அவங்க நெருக்கத்திலேந்து விலக்கணும்னு பார்த்தான் சுப்பய்யா. அய்யா, அம்மாவும் போன பிறகு, இந்த தேசத்த நினச்சி மனசொடிஞ்சி போனாங்க…”

“புரியிது…”

“என்னமோ, உன்னக் கண்டது எனக்கு இப்ப தெம்பா இருக்கு. முந்தாநா வந்து… அவ… என்ன மிரட்டுறாப்பல சொல்லிட்டுப் போயிருக்கிறா. இந்த இடம் மிச்சூடும் வளைச்சி பெரிய ஆஸ்பத்திரி, கெஸ்ட் அவுஸ், அது இதுன்னு அமெரிக்காவுக்கு மேல வரப்போவுதாம். இதபாரு, கிழக்கால, குடும்பம் குடும்பமா பொழப்பத் தேடி வந்து அல்லாடுதுங்க. எதுக்கால, அங்க பழைய பங்களா ஒண்ணு இருந்திச்சே, அதை இடிக்க வந்த சனங்களப் பாத்தேன். கடப்பாறய வச்சிட்டு வெயில்ல இடிப்பானுவ. அஞ்சும் குஞ்சுமாக இடிச்சத எடுத்து அடுக்கும். காலம அரிசி பருப்பு, கறி மீனு வாங்கி வந்து அடுப்பு வச்சிப் பொங்கும். தின்னும். எண்ணெய் காணாத முடி அழுக்கு. சாங்காலமா தண்ணி சேந்திக் குளிக்கும். ஆம்புளங்க ராத்திரி குடிச்சிப் போட்டு கட்டயா தரயில கெடப்பானுவ ஒரு பொம்புள, பாவம், ரெண்டு புள்ள, இங்க திண்ணையில படுக்கிறேம்பா… படுத்துக்கம்பேன்… இதையும் அப்படி இடிப்பாங்க…”

இவளுக்குத் தொண்டை கம்மிப் போகிறது. “எல்லா இடத்திலும் இதே வரலாறுதாம்மா. நா. இப்ப ஒரு முக்கிய விசாரணையா நேத்துதா வந்தே வந்ததும், விசாரிச்சேன். இந்த இடம், வீதி எனக்கு நல்லா தெரியுமே? ஆனா, இந்தத் தெருவுக்கு இப்ப, மயில் ரங்கம் தெருன்னல்ல போட்டி ருக்கு! புதுநகர் காலனி அதுவும் தெரியல. மணிக்கூண்டு கிட்ட விசாரிச்சேன். அங்கே மெஸ் வச்சிருக்கிற அம்மா, அட்ரசப் பாத்திட்டுச் சொன்னாங்க. அந்த வீட்டக் காட்டினாங்க. வூடு டீச்சர் வீடு, வித்திட்டாங்க. மூணு லட்சம்னு வாங்கி ரிஜிஸ்தர் ஆயிடிச்சின்னாங்க. அப்பதா அங்க டாக்டர் இருந்ததா- வயித்தியம் பண்ணுவாருன்னு பூவிக்கிற பொம்புள சொல்லிச்சி. டீச்சரத் தேடிட்டுப் போகு முன்ன, ஸ்கூல்ல விசாரிச்சேன். வாச்மேன் சொன்னான், நீங்க விசாரிக்கிற பொம்புள, இங்க நாலு மாசமா இல்ல. அவங்க, சிவசக்தி ஆசிரமம் போகணும்னு சொன்னாங்க. அப்படியே போய்த் தங்கிட்டதாக் கேள்வி. நீங்க யாருங்கன்னு கேட்டான். நான் புனாவிலேந்து வந்திருக்கிறேன். அவங்க… அண்ணன்னேன். அப்ப நீங்க வேறயா? முன்ன கூட ஒரண்ணன் இப்படித்தா வந்து விசாரிச்சாரு. அந்தப்பொம்புள ஒரு மாதிரின்னு இழுத்தா… பளார்னு அவன் கன்னத்துல ஒரு அறை விட்டிருப்பேன். அடக்கிக்கிட்டு ஆசிரமத்துல போய்ப் பார்ப்போம்னு தா வந்தே. அங்க யாரும் தங்கறாப்புலவே தெரியலேன்னாங்க…”

“சுப்பய்யா…!” என்று பீறிடும் அவள் குரல் அலறலாக ஒலிக்கிறது. அப்போது அவன் சட்டை உள் பையில் இருந்து அந்தக் கடித உறையை அவளிடம் கொடுக்கிறான். கை நடுங்குகிறது. அவள் பிரிக்கிறாள்.

தேவரீர், உயர்திரு, சுப்பய்யா வாத்தியார் அவர்களுக்கு, அடியாள் சங்கரி, அநேக கோடி நமஸ்காரங்கள். என்னைத் தங்களுக்கு நினைவிருக்கும். நான் இப்போது, 13 மயில்ரங்கம் வீதி, பாரதி புது காலனி என்ற விலாசத்தில் இருந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். என் பெரியண்ணன் ராஜஸ்தானிலும் சின்னண்ணன் சிங்கப்பூருக்கும் போய்விட்டார்கள். அம்மாவும் காலமான பிறகு என் நிலை மோசம். நான் உங்களை அநுமான் செளக்கில் பார்த்துப் பேச முயற்சி செய்தேன். கண்டு கொள்ளாமல் போய்விட்டீர்கள். பிறகு அண்ணன் மகனுக்கு இங்கே இன்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்தது. ஒரு வீடு எடுத்துக் கொண்டு அவனைப் படிக்க வைக்க – அவனுக்கு சமையல் பண்ணிப்போட என்று முடிவு செய்து என்னை இங்கே கொண்டு வைத்தார்கள். முதலில் மூன்று வருசம் ஒருவீட்டில் மாடியில் இருந்தோம். பிறகு அவர்கள் காலி செய்யச் சொன்னதால், பக்கத்திலேயே சிறு வீடொன்றில் இப்போது இருக்கிறேன். அண்ணன் பையன் படிப்பு முடிந்து சிங்கப்பூர் போய் விட்டான். எனக்கு அவன் இருந்த வரையிலும் பாதுகாப்பாக இருந்தது. பிறகு, நானே ஒரு ஜீவனம் தேட வேண்டி, இதே இடத்தில, வேலைக்குப் போகும் தாய்மாரின் சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த வீட்டின் வாசல் புறத்தில் ஒரு நல்ல டாக்டர், வயசானவர், ஏழைகளுக்கான வைத்தியசாலை நடத்துகிறார். இரவு எட்டு மணிக்கு அவர் போய்விடுவார். காலை பத்தரை மணிக்கு வருவார். அதனால் இரவு நேரங்களில் எனக்குப் பயமாக இருக்கிறது. இங்கே யாரையும் நம்ப முடியவில்லை. எனக்குத்திக்கு இல்லை. இந்தக் கடிதம் கண்டவுடன் என்னை வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் போன்ற ஆதரவற்ற பெண்களுக்கு இங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை. உங்களைத் தான் தெய்வரூபமாக நம்பியிருக்கிறேன். உடனே தந்திபோல் பாவித்து வந்து தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும். தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். அடியாள், சங்கரி…

அத்தியாயம்-23

ஜயந்தி டீச்சர் தெரிவித்த விவரங்கள் இரத்தக் கோடுகளாய் மின்னுகின்றன. தெய்வத்துக்கே உரியதாகப் புனிதம் காத்த மலரைக் கசக்கிப் புழுதியில் தேய்த்துவிட்டு, அதன் மீது, நாக்கூசும் அபவாத முட்களைப் படரவிட்ட கயவன் அரக்கனாக நின்று கொக்கரிக்கிறான். காவிப்பட்டு மணிமாலைகள்… சிவசக்தி ஆசிரமம் எப்படி?

பெத்த தாய், கூடப்பிறந்தவங்க, உழைப்பை வாங்கிட்டாங்க. யாருமே அவளைக் காப்பாற்றவில்லை. ஆனும் பெண்ணுமாக அஹிம்சைப் போராட்டத்தில் பங்குபற்றிச் சிறை சென்றார்கள்…

யு.ஜி.ல இருப்போம். சாப்பாடு கொண்டு வருவாங்க. சிநேகமாகப் பழகுவோம். தப்பு அபிப்பிராயம் வரக் கூடாதுன்னு கல்யாணம் பண்ணிக் கொள்வோம்…

பெண் நெருப்புத்தான். ஆனாலும் அவளைத் தவறாக ஆண் பயன் படுத்தினால், அழிவுதான். அந்த நெருப்பைப் பாதுகாக்க வேண்டும்.

சுப்பய்யா எங்கோ பார்த்துக் கொண்டு பேசுகிறான்.

இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னே, குடில்ல, மருத முத்து ரயில் தண்டவாளத்துல தலைகொடுத்தான். நினப்பிருக்கா?

மைதானத்தில் பிள்ளைகளைக் கூட்டிப் பிரார்த்தனை செய்வதில் இருந்து உடற்பயிற்சி மேற்கொள்வது, தேசியகீதம், வந்தே மாதரம் இசைப்பது முதல் அனைத்துச் செயல் பாட்டு ஒழுக்கங்களும் அவன் தலைமையில்தான் நெறிப் படுத்தப்பட்டன. அப்பழுக்குத் தெரியாத உடை; தோற்றம். மாநிறம் தான். அவன் ஒழுக்கக் குறைவானவன் என்று கரும்புள்ளியை வைக்கவே முடியாது…

“ஏன்பா ?”

“சுசீலா தேவியத் தெரியுமில்லையா?”

“தெரியும். ரொம்பத் துவக்க காலத்திலேயே இங்கே வந்து சேந்தாங்க. புருசன் சிறுவயசிலேயே போயிட்டான். ஒரு குழந்தை, மூணு வயசு, அதுவும் நம்ப ஸ்கூலுக்கு வரும். சுசீலாவின் அக்கா, வாரம் ஒருமுறை கூட்டிட்டு வருவாங்க. அம்மாவும் அய்யாயும் கூடக் கொஞ்சுவாங்க. வந்தே மாதரம் நல்லாப் பாடும்…”

“நீங்கல்லாம் குடிலை விட்டுப் போன பிறகு, கபட மில்லாம இருந்த சூழல்ல, ஒரு துரும்பப் பத்த வச்சி எறிஞ்சாங்க. ஒரு தடவை சுசீலா லீவுக்குப் போயிட்டு வந்தாங்க என்ன நடந்திச்சின்னு தெரியல. மத்தியானம் சாப்பாட்டு நேரத்துக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அன்னிக்கு சாயுங்காலம் அவங்கண்ணன் மட்டும் வந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியல. விடுதியிலே இருந்த சரஸ்வதி டீச்சரையும், ஜானம்மா டீச்சரையும் கூப்பிட்டுப் பராங்குசம் விசாரணை செய்தாராம். இதெல்லாம் எனக்குக் கவனமே இல்ல. ஆனா, மாலைப் பிரார்த்தனைக்கு மருதமுத்து வரல. மறுநா காலையிலே சைதாப்பேட்டைத் தண்டவாளத்துல, எக்ஸ்பிரஸ் வண்டிக்குத் தலை கொடுத்திட்டார்.

ஆசிரமமே கொல்லுனு ஆயிட்டது. ரயில் பாதையைக் குறுக்கே தாண்டிப் போயிருக்காரு, விடியக்காலம் பாதையோரம் நடக்கப் போவாரு, விபத்துன்னு பேப்பர்காரங்க தகவல போட்டாங்க – அய்யாகூட இரங்கல் கூட்டத்துக்கு வந்து கண்ணீர் விட்டார். பராங்குசம் உருகினான். சுசீலா டீச்சர் பிறகு வரவேயில்லை…”

‘அட…பாவி…? இ…இது கொலையில்லியா? ஒரு அகிம்சைக் கோயிலில கொலைகாரப் பாவி அப்பவே உருவாயிட்டானா?…”

“ஆமாம்மா. இவன் சுசீலா டீச்சருக்கு மருதமுத்து சகவாசம் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து ஆசிரமத்தின் பேரைக் காப்பாற்றுங்கள் என்று ஒரு சக டீச்சர் எழுதுவதுபோல் மொட்டைக் கடிதாசி அண்ணன் பேருக்கு எழுதி இருக்கிறான். அவங்க உசந்த சாதி. சநாதனக் குடும்பம். இவரு தாழ்ந்த சாதி. அதுவும் விதவா விவாகத்தை ஏத்துக்காத வங்க. குழந்தை வேற இருக்கு. மருதமுத்துவை விசாரணை என்ற பேரில் என்ன சொன்னானோ? அவரு உசிரையே தியாகம் செய்தாரு… அடுத்த இலக்கு நான்.”

ஏலக்காயும் கிராம்பும் கர்ப்பூரமும் மணக்கும் பெட்டி என்று நினைத்திருந்தாளே? அதன் உள்ளிருந்து மோசமான பாச்சைப் புழுக்கையும் கரப்பான் புழுக்கைகளும் வெளியாகின்றன.

“அம்மா போயி, அய்யாவும் ஒய்ந்து போயிருந்தாங்க. இவன் அவங்க வரபோதெல்லாம் பிரமாதமா சத்திய ஜோடனை செய்து வச்சிருப்பான். எனக்கே ஒண்ணும் அப்பல்லாம் தெரியலன்னா பாருங்க? நிர்வாகமே கொஞ்சம் கொஞ்சமா காந்தி சத்தியத்தில் இருந்து நழுவி, கறைபடிய ஆரம்பித்திருக்கு – கணக்கு வழக்கெல்லாம், அவன் பேரில் தனிச் சில்லறை சேரும் வழி கண்டு பிடிக்கச் சொல்லிக் கொடுத்தது. எல்லோரையும் கைக்குள் போட்டுக் கொள்ளும்

சாதுரியங்கள் சேர்ந்தன. அதனால அடுத்த களை எடுத்தல் நான்தான்…”

“என்னமோ இந்தி எதிர்ப்புச் சூழலில் ஒட்டாம வடக்கே போயிட்டன்னு தான் நினைச்சிருந்தேன். அய்யாவிடம் வந்து நீ அப்படித்தான சொல்லிட்டுப் போனே?”

“ஆமாம்மா. இதெல்லாம் மோசமான பண்பாட்டு ஒழுக்கச் சிதைவுகளில் கட்டிய அரசியல் ஆட்சிகளில் விளைந்த பயன்கள். மது விலக்கை எடுத்து, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கடைதிறந்து மது சாரத்தை ஓட விட்டது, சினிமா கடைவிரித்த இழிவுகள், ‘கற்பழிப்பு’ என்ற சொல்லே உச்சரிக்கச் கூசிய ஒழுக்கங்களை பத்திரிகைளெல்லாம் ‘மஞ்சளாக’ மாறியதால் சுத்தமாத் துடைத்தன. (ஏ) சினிமாங்கற முத்திரைதான் பணத்தை அள்ளித்தரும்னு, இந்த சென்னைப் பட்டினத்து சாலை, மூலைமுக்குக ளெல்லாம் விளம்பரங்கள்… மருதமுத்து, மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமானானார். எனக்கு உயிரை விடுவது கோழைத்தனம்னு பட்டது. மழலைப்பள்ளி இருந்தது. அய்யா இருந்த நாளில் பக்கத்தில் இருந்த குப்பத்துக் குடிசைப் பிள்ளைகள் கூட வரும். அது அம்மா வந்த காலத்தில் மழலைப்பள்ளிக்குக் குடிசைக் குழந்தைகள் வருவதில்லை. ஓரளவு வசதியாக இருக்கும் குழந்தைகள் வந்தன. எல்லாக் குழந்தைகளும் வெளியே இருந்து தான் வந்தார்கள். தோட்டக்காரன், காவலாளி யாருக்குமே உள்ளே குடும்பம் இல்லை. அநேகமாகத் தங்கும் பிள்ளைகள், டீச்சர்களுக்கு மட்டுமே விடுதி. அது அம்மா இங்கே வரும் நாட்களில் குழந்தையை விட்டுவிட்டு வருவார்கள். அது தானாக ஆடிப்பாடிட்டிருக்கும். அநுசுயா டீச்சர், நான், ஆபீசில் இருந்தால் அது அங்கேயே இருக்கும். திடும்னு ஒருநாள் வித்யாலயாவின் வெளிப்புறச் சுவரில், என்னையும் அநுவையும் பற்றி, கேலிப்படம் போட்டிருந்திச்சி. அது சுப்பய்யான்னு எழுதி, “நாங்க புதிசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க”ன்னு பாட்டுப் போட்டிருந்திச்சி. குழந்தை திகைச்சுப்போயி பாக்குறப்பல…

“நல்ல வேளையா, நான் காலம சூரியன் உதிக்கும் போதே நடக்க வெளியே வந்தவன் பாத்திட்டேன். ஒடனே உள்ளே கொட்டடிக்குப் போயி தேங்கா மட்டையக் கொண்டு வந்து அழிச்சேன். நேரா பராங்குசத்து வீட்டுக்குப் போனேன். உள்ளாறதான அப்ப வீடு? அவங்க சம்சாரம், வாசல்ல கோலம் போட்டிட்டிருந்தாங்க. ‘இந்தாங்கம்மா, மருதமுத்துகிட்ட யாரோ வெளயாடினாங்க, அந்த நெருப்புல அவரு உசிரைக் குடுத்தாரு. இப்ப ஏங்கிட்டயும் அதே வெளயாட்ட ஆரோ ஆடுறாங்க? நானொண்ணும் உசுரவுடமாட்டேன். சத்தியத்த நிரூபிக்க, குத்தம் பண்ணுறவங்களக் கொண்டு வர எனக்கு முடியும். ஆனா, சம்பந்தபட்ட, ஒரு அப்பாவித் தாய்க்கு அது கேடாக முடியும் ? என்று சொல்லிவிட்டு, சுண்ணாம்பை எடுத்து நானே அழித்தேன். அடுத்த நாளே கால் கடுதாசிய நீட்டிட்டு இங்கே அய்யாட்ட வந்து சம்பிரதாயமாச் சொல்லிட்டுப் போனேன்…

“அப்ப போனவன், இந்தப் பட்டணத்து மண்ணை இப்படி வந்து மிதிப்பேன்னு கொஞ்சமும் நினைக்கல…”

அவன் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.

“அட… சுப்பய்யா? சுப்பையா? என்ன இது? ஏம்ப்பா, ஏதோ நடந்திச்சி. அதுக்குப் போய் இவ்வளவு வருத்தப்படுற? அது பிறகும் இங்கு வந்திட்டுத்தானிருந்தா. ரெண்டு வருசத்துல அவளும் புருசன் கூடப் போறதாச் சொல்லிட்டுப் போனா. அய்யா இறந்தபோது அவ பேப்பரில ‘தியாகின்’னு கட்டுரை எழுதியிருந்ததா நிக்கெலஸ் டாக்டரு படிச்சிச் சொன்னாரு, கூட்டத்துல…”

அவன் தேறி முகத்தைத் துண்டால் துடைத்துக் கொள்கிறான்.

“தாயம்மா, நா இப்ப போறேன். மணிக்கூண்டு பக்கத்துலதான் பழைய ஆளு, ராமலிங்கம்னு, அங்க தங்கியிருக்கிறேன். நா வரேன், நாளைக்கு. நீங்க மறுக்க ஊசி போட்டுக்கணும்” என்று சொல்லிவிட்டு எழுந்திருக்கிறான்.

“இரப்பா ஏ, இங்க ரா தங்கக்கூடாதா? இப்ப கூட அவதூறு கட்டுவாங்கன்னு பயமா?…”

“பயந்துகிட்டு ஒடல. இன்னும் கொஞ்சம் விவரம் விசாரிக்க வேண்டியிருக்கு வரேன்…”

அவன் சென்ற பிறகு, அவளுக்கு கையகல இருளை விரட்டியடித்த ஒளித்திரியும் அணைந்துவிட்டாற்போல இருக்கிறது.

பராங்குசத்தின் அசாத்திய வாதனைகளால் மட்டும் அவன் காயப்பட்டிருக்கவில்லை.

சங்கரி விசயத்திலும் காயப்பட்டிருக்கிறான்.

‘அடியாள் சங்கரி’ என்னை உடனே வந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்; பாதுகாவலில்லை…

அப்படி என்றால், இவன் அவளைத் திருமணம் செய்து கொண்டானா ? வரதட்சணைக்கோ எதற்கோ அவளை இம்சைப்படுத்துபவன் இல்லை. இவனைச் சேர்ந்த தாயும் அப்படிப்பட்டவள் இல்லை. நினைத்துப் பார்க்கிறாள். சங்கரியின் கழுத்தில் தாலிச்சரடு இருந்ததாகத் தெரிய வில்லை. ஒரு சிறு மண்பவழ மாலை மட்டுமே தெரியும். கழுத்து இறங்காத ரவிக்கை; விலகாத மாறாப்புச்சேலை. தலைப்பு, தொங்காது. இழுத்து மடி உடுத்தி இருப்பாள்…

அவன் மறுநாள்தான் அவளை ஊசிபோட, வந்தழைத்துச் செல்வதாகக் கூறி இருக்கிறான்.

ஆனால், ஒருகால் வருவானோ என்று வாசலிலேயே நின்று பார்க்கிறாள்.

ஒடுகள் எடுத்த பிறகு அந்த வீடு இடிக்கப்படுகிறது.

குழந்தைவேலு வருகிறான்.

நடையில் சோர்வு. எப்போதும் போல் சிரிப்பு இல்லை; பொங்கி வரும் பெருமிதம் இல்லை. வந்து வராந்தா திண்ணையோரம் குந்துகிறான்.

“ஏம்பா, சோர்வா இருக்கிற? நீ இப்படி இருந்து நா பார்க்கலியே ?”

‘தல நோவுதும்மா. டீ வாங்கிக் குடிச்ச. மருந்து கடக்காரரு ஒரு மாத்திரை குடுத்தாரு கேக்கல…”

“ஏம்பா..? உங்களப் பாத்தாலே இருக்கிற துக்கம் பறந்து போகும்? பனி வெயிலோ …”

‘இன்னாவா ? வூட்லே ஆரும் இல்ல. மன்சே செரியில்லிங்க.”

“ஏ, உங்க சம்சாரம் இல்லியா?”

“அவ மவன் ஆட்டோடு போயி குந்திகினா…”

“ஓ, மகனுக்குக் கலியாணம் ஆயிட்டுதா?”

“ஒரு புள்ளயும் கீது!”

“மகன் வேலையாயிருக்கிறாரா?”

“கீறாரு இன்சினிரு வேல…”

“அப்ப சந்தோச சமாசாரம்தான். நீங்க எம்புட்டுக் கஷ்டப்பட்டு, பொண்ணு புள்ளயப் படிக்க வச்சி ஆளாக்கி நல்ல நெலமைக்குக் கொண்டாந்திருக்கிய பொண்ணு பெரி…ய ஆஸ்பத்திரில வேல பாக்குது, அப்பாவுக்கு ஒடம்பு ‘சுகமில்லன்னா, பாக்காதா?”

அவன் பேசவில்லை. சிறிது நேரம் மெளனம்.

‘அம்மா, உங்களக்கும் புடுட்டுக்கிற, நாங்கூட எத்தினியோ தபா நெனச்சிட்டுகிற. இந்தம்மா, அமைச்சர் புள்ளிய வுட்டு, இப்டீ வந்து குந்தினுகிதேன்னு. பொண்ணாவுது, புள்ளியாவுது!”

இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

‘உங்கிட்ட சொல்றதுக்கிண்ணாம்மா; சருக்கார் ஆசுபத்திரி வேல வந்திச்சி. எனக்கு ஒரு நோவுன்னா, போயி வயித்தியம் பாத்துக்கலாம்… இப்ப… அந்த ஆசுபத்திரி வாசலுக்கே போவுறதுக்கில்ல…”

“வாரம் ஒரு தபா உங்கள வந்து பாக்குறதில்ல?”

“அதும் பேச்ச வுடும்மா. நா. நெனச்சாப்புல அது இல்ல. போன வாரம் வந்திச்சி. நா, கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்லிச்சி. நா ஒண்ணும் பேசல. அந்தப்பய இன்னா செஞ்சான் ? படிக்கிறப்பவே, லவ்வுன்னு ஆயி அப்பனுக்குத் தெரியாமயே கட்டிக்கிட்டான். பொண்ணுகூட பெரி…வூடு புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலைக்குப் போவணும். அப்ப வந்து ஆயியக்கூப்புடுறான். இவ, மண்ணத்தட்டிட்டுப் போறா… தனி வூடுதான வச்சிகிறாங்க? அப்பா, நீங்க வாங்கன்னு கூப்புடல. போம்மா…”

குறையே சொல்லாத மனிதன். தன் மக்கள் கடைத்தேற கூழையாகி எங்கெங்கோ கவடு தெரியாமல் புகுந்து புறப் பட்டவன். அவனுக்கும் தன் மான உணர்வு, காயப்பட்டிருக்கிறது.

“ஆரோ ஒரு பெரி… டாக்டராம். வயசு அம்பதாவுதாம். இது. தேவையாம்மா? எங்கூரு பையனே ஒருத்தன் மருந்து கடை வச்சிகிறான், கன்டோன்மென்ட் பக்கம். ‘மாமா, எப்டிகிறே’ன்னு விசாரிப்பன். இது எப்பவானும் வந்து கண்டா, கேலி பேசுவா. ஒரு அஞ்சு சவர அப்டி இப்டியா சேத்து வச்சிகிறே. நெல்ல படியா ஒரு கலியாணம் கட்டி வச்சி, கெடக்கலான்னு நெனச்சது கெனாவாப்பூட்டுது.”

“நீங்க கலியாணத்துக்கே போவலியா?”

“நா புள்ளவூட்ல போயி, என் சம்சாரம் கையில அத்தக் குடுத்தே… ஒரு சவரன் மோதிரம், மூணுசவரன் செயின். ஒரு சவரன் காதுக்குத் தொங்கட்டானும், பூமாதிரி தோடும். எனக்குத் தெரிஞ்ச சேட்டு கடயிலதா சீட்டுப் போட்டு வாங்கின. புள்ள கலியாணம் போவல. பேரப் புள்ளிக்குக் காது குத்து வைப்பாங்கன்னு நெனச்சே ஒருநா பய்ய காருல வந்தா. புள்ள பாத்துக்கணும். தனி ஆடு வச்சிகிறேன்னு இட்டுகினு போனா.”

“நீங்க போகலியா?”

“ஒரு வாட்டி போன. நம்ம புரவலர் அய்யா வூட்டுக்குக் கூடதா போவ. அங்க இன்னான்னாலும் கச்சின்னு ஒரு மருவாதி உண்டு. ஒடனே ஃபோன் போட்டு சீட்டு வாங்கிக் குடுத்தாங்க… அங்க மதிக்கலன்னாக்கூட, அட போன்னு வுட்டுடல… என் சம்சாரம்கிறாளே, அவக்கு ஆருமில்ல. எங்க சொந்த ஊரு, திருச்சி பக்கம், சிமிட்டி ஃபாக்டரிக்குப் பக்கம். மானம் பாத்த சீம. சிமிட்டி பாட்டரி கட்டுறப்ப அங்க வேல செய்யிற பங்காளியோட சண்ட போட்டுட்டு அடிச்சிட்டே போல்சில சொல்லிடுவான்னு ஒடியாந்தே. இங்க அப்ப லீக்கோ கரி ஏசண்டு ஒருத்தர் இருந்தாரு. அவுரிட்ட மூட்ட செமப்பே. அப்படி உருண்டு வந்த மண்ணாங்கட்டி நானு. மூட்ட செமக்கிற பயலுவல்லாம் குடிப்பானுவ கண்ட பொம்புள சாவாசமும் வச்சிப்பானுவ. நா… இத இது போல, இப்ப ஏ.ஜி. ஆசுபத்திரி கிதே, அதுக்குப் பின்னால, ஏசன்டு அய்யா ஆடு. நாயுடு… ராமம்போட்டுட்டு செழுப்பாருப்பாரு… பீடி சிகரெட்டு ஒண்னும் தொட மாட்டே… காலம் பெரி…கெணறு. அதுல தண்ணி எறச்சிக் குளிச்சிப்பேன். வாரத்தில ரெண்டு வாட்டி, சினிமாக்குப் போவ. எம்.ஜி.ஆர். படம்னா, மொத்தல் போவ… கலியாணம் காச்சின்னு நெனக்கல. அப்ப, இவ கலியாணங்கட்டி புருசன் செத்திட்டான். ஆருமில்லாம தா இருந்தா. அப்ப, ரயில் பாலம் புதிசா கட்டுறாங்க. எல்லாப் பொம்புளக கூடவும் போவா வருவா. நா அம்பது கிலோ மூட்டையச் செமந்து வண்டில வைப்பேன். குடோனிலேந்து வாரப்ப, பாப்பா ஒரு நா. ராத்திரி பொம்புளகளோடு சினிமா போயிகி நானும் அடுத்தாவுல குந்திகிறே. எவனோ இவகிட்ட வி

பண்ணிகிறான். அயுதுகினே வெளியே போயிட்டா. அப்பால, மக்யா நா போயி, நாஞ்சொன்ன, உன்னிய கல்யாணம் பண்ணிகிறே சம்மதமான்னே.

“நாயுடு சாருக்கு ரொம்ப சந்தோசம். “மண்ணாங்கட்டி, நீதா நல்ல மனிசன். நீ வெறும் மண்ணில்ல. தங்கக் கட்டி!”ன்னு சொல்லி, அவுருதா இருநூறு ரூவா செலவு செஞ்சி, திருநீர்மலைக்கு இட்டுப் போயி கட்டி வச்சாரு. அவ, அவங்க வீட்ல வேல செஞ்சா. நல்ல மனிசன். லீக்கோ கரியுமில்ல. அவுரு, அந்தம்மால்லாம் பூட்டாங்க. வூட்டையும் இடிச்சிட்டாங்க…”

“சுவரோடோனும் சொல்லி அழு” என்று மனச் சுமையைக் கொட்டுகிறானோ?

“அவ இப்ப, புருசன் பெரிசில்ல, வசதியாகிற மகம்வூடுதா பெர்சுன்கிறா. மருமகப் பொண்ணு டக்குபுக்குனு வூட்டுக்குள்ளாறவே ஷூ போட்டுகினு தஸ்ஸாபுஸ்ஸு இங்கிலீசில பேசுறா. ‘செவுந்தி, உனுகு இது தேவயா? யார் யாரோ, எசமானுங்க, வூட்ல, சம்பளத்துக்கு வேல செஞ்சம். அல்லாருமே நன்னி விசுவாசமா கீறாங்க. ஆனா, பெத்தவங்கள வேலக்காரங்கன்னு நெனக்கிற எசமானுவ தேவயா? வா, போவலாம்’ன. அட, போய்யா, நம்ம புள்ளிங்கதான். எனக்கு ஒண்ணும் கொறயில்லன்னிட்டா. பெத்த புள்ளிங் களே நம்ம மதிக்கல. பேரப்புள்ளிங்களா மதிக்கப்போவுது?… சரி, வாரம்மா. உங்கிட்டப் பேசுன. தலவலி கொறஞ்சா போல கீது… வாரம்மா…”

“ஏய்யா, கெளம்பிட்டீங்க? அப்ப தனியே சமையல் பண்ணி சாப்பிடுறீங்களா?”

அவன் திரும்பிப் பார்க்கிறான். “இல்ல, நானும் தனியாதா இருக்கிற. அட, வயிசான காலத்துல, ஒரு பிடி சோறு, தண்ணி நான் குடுக்கமாட்டனா? ஒரு கஞ்சி, கசாயம் எதுன்னாலும்…” அந்தச் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

கையெடுத்துக் கும்பிடுகிறான். “ஒங்க நெல்ல மன்சு புரியிது. என்னிக்காலும் வுயுந்து போனா, வாரன், வார பெரி…ம்மா?” என்று செல்கிறான்.

பொய்யும் களவும் வஞ்சகமும், கஞ்சிக்கில்லாத வறுமையிலும் உடலுழைப்பிலும் பிறக்கவில்லை.

உலகில், இன்னமும் பரிசுத்தங்களும் தன்மான உணர்வுகளும், நேர்மைகளும் இருக்கின்றன. காந்திஜியின் சத்திய வாழ்வைப்போலவே இந்த மண்ணாங்கட்டியின் வாழ்வும் சத்தியமானதுதான். இந்த சத்திய அப்பனின் பரம்பரை, பொய்ம்மைகளால் கவரப்பட்டு அந்த மாயை யிலேயே முழுகுகிறது. ராதாம்மாவின் பையன் எப்படி இருப்பான்?

…..

அன்றும் மறுநாள் காலையிலும் சுப்பய்யா வரவில்லை.

ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போக நிச்சயம் வருவான் என்று நம்பியதும் நடக்கவில்லை.

மாலை ஐந்து மணிக்குத் தன் ஜோல்னாப்பையுடன் வருகிறான்.

“வாப்பா, நேத்திலிருந்தே எதிர்பார்த்திட்டிருந்தேன். ஆசுபத்திரிக்கு ஊசி போட கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன நெனப்பு…”

“…அடடா… மறந்துபோயிட்ட. இப்ப கெளம்புங்க போயி ஊசி போட்டுட்டு வந்திடலாம்?”

“அட… அதெல்லாம் வாணாம். நீ இப்ப உக்காரு. ஒரு டீ போட்டாந்து குடுக்கட்டுமா ?”

“அதெல்லாமும் வச்சிருக்கீங்களா?…”

“நான் சாப்பிடுறதில்லன்னாலும் வச்சிருப்பேன். யாருன்னாலும் வந்தா கெடக்கட்டும்னு ஒரு துாள் பாக்கெட்…”

“அதெல்லாம் வாணாம். அப்ப உங்களுக்கு இப்ப ஆசுபத்திரிக்குப் போக வாணாமா?”

“எனக்கு ஒண்ணும் ஆகாது. ஒரு ஊசி போட்டாச்சி, போதும். அம்பாள் குங்குமமே போதுன்னே, கேக்கல. சரி, நீங்க எங்க போயி என்ன விசாரிச்சிங்க?…”

“எல்லாம் விசாரிச்சேன்… நான் பாவி, பாவி, மன்னிக்க முடியாத பாவி!” என்று தலையில் அடித்துக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு விம்முகிறான்.

பிரும்மசரியம். அது ஒழுக்கம். என்ன ஒழுக்கம்?

“நான் எங்கே போய் இந்த மகாபாவத்துக்குக் கழுவாய் தேடுவேன் ? உயர்குன்றில் தீபமாக என்னை நினைத்து இறுமாந்திருந்தேன். குழியில் விழுந்திருக்கிறேன். அந்தத் தீபம் பெருந்தீயாய் என்னைச் சூழ்ந்து கருக்குகிறது. எங்கே போய் இறக்கிவைப்பேன்? காவிப்பட்டு, மஞ்சள்பட்டு, ஸ்படிகம், உருத்திராட்சம், திருநீறு குங்குமம், சந்தனம் எல்லாமே கறை பிடித்துப்போன, சீழ்பிடித்துப்போன சமூக அடையாளங்களாய்விட்டது தாயே, இதைக் கீறி யாரே வைத்தியம் செய்யப் போகிறார்கள்? தீவிரவாதிகளா? வெடி குண்டுக் காரர்களா ?…

“கடைசி காலத்தில் பாபுஜியிடம், அமெரிக்கப் பத்திரிகைக்கு ஃபோட்டோ எடுக்கும் பெண் ஒருத்தி வந்து கேட்டாளாம். அணுகுண்டு வந்துவிட்டது; உங்கள் அஹிம்சை நெறி தாக்குப் பிடிக்குமா என்றாளாம். உண்டு – அணுகுண்டைப் போட வருபவன், கடைசி நிமிடத்தில் மனம் மாறிவிட முடியும. அணுகுண்டைவிட அஹிம்சை சக்தி வாய்ந்தது என்றாராம். அன்று மாலையே, அவரைச் சுட்டுப் பொசுக்கிவிட்டோம்…”

முதல் நாள் மண்ணாங்கட்டியாகிய குழந்தைவேலு, காட்டிய சோகமுகத்துக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை என்று அவளுக்குத் தோன்றுகிறது.

“அம்மா, சங்கரியைத் துடிதுடிக்க வதைத்து அழித்தவன் நான், நான்தான். பாவி, ஆண் என்ற கருவம், இறுமாப்பு. அகங்காரம். சாந்தி, சத்தியம், அஹிம்சை, பிரம்மச்சாரியம் எல்லாமே ஆண் அகங்காரங்கள்… இவனுக்குத்தான் பிரம்ம சாரியமா? அவளுக்கும் உண்டு. ஆனால், இந்த ஆண் வருக்கம் அவளை விடுவதில்லை. அபலையாக என்னிடம் புகலிடம் கேட்டாள். ஒரு பெண்ணாகப் பிறந்த குற்றத்துக்காகவே, … ஐயோ, ஐயோ” என்று அறைந்து கொள்கிறான்.

அவள் அவன் கையைப் பற்றி இதம் செய்கிறாள். நெற்றிப் பொட்டைத் தடவுகிறாள்.

“தம்பி, நீ தெரிந்து செய்யல. வருத்தப்படாதே. எதுவும் நம் இச்சையில் நடக்கவில்லை. விதியின் கை என்று நீதானே சொன்னாய்? ஆறுதல் கொள்…”

அத்தியாயம்-24

குருகுலத்தில் இருந்து சென்ற சுப்பய்யா, புனேயில் ஒரு வித்யாலயத்தில் இந்தி கற்பிக்கச் சேர்ந்தான். தமிழர் அதிகமாக வசிக்கும் பேட்டை ஒன்றில், ஒரு வீட்டு மாடியறையில் குடியிருந்தான். அவர்கள் தாம் அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரர். கீழ்த்தளத்தில்தான் சங்கரியின் அண்ணன் குடும்பம் இருந்தது. வாயில்புறம் கடப்பைக் கல் வரந்தாவில் மரத்தாலான மாடிப்படி வராந்தாவில் இருந்து நேராகத் தெருவுக்குக் குழந்தைகள் போக முடியாதபடி, கம்பியழிப் பாதுகாப்பும் கதவும் இருந்தன. அந்த வீட்டுப் பின்புறம் செல்ல, பின்புறம் முற்றத்துக்குக் கொண்டு செல்லும் படிகளும் இருந்தன. அது மராத்திய தம்பதியின் பகுதியில் இருந்தது. முற்றத்தில் தகரக்குடிசைகளில் சில எளிய குடும்பங்கள் இருந்தன. இடையில் பெரிய பொதுத் தண்ணிர்த் தொட்டி; குளிக்க, துவைக்க வசதிகள். சுப்பய்யா அந்தப் பகுதியில் இறங்கி தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வான். மேல் தளத்தில் பொதுவான கழிப்பறை வசதி இருந்தது. கீழ்த்தள முற்றத்திலும் அந்த வசதி இருந்தது. சங்கரியின் குடும்பம் குடியிருந்த பகுதி முன் கூடம், ஒரு படுக்கையறை, சமையல், சாப்பாட்டுக்கான கூடம், குளியல், கழிப்பறை வசதிகள் கொண்டிருந்தன. அவர்கள் முற்றத்துக்கு வரவேண்டாம், என்றாலும் மேல் தளத்திலும், கீழ்த் தளத்திலும் வேலை செய்த ஹீராபாய், அவர்கள் வீட்டுத் துணிகளை முற்றத்தில் துவைத்து உள் வராந்தாவில் உலர்த்துவாள். ஏற்கெனவே ஒரு சூடு விழுந்த உணர்வில் இருந்த சுப்பய்யா, அக்கம் பக்கம் தமிழர் குடும்பங்களில் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடக் கூசியிருந்தான். அவன் கற்பித்த வித்யாலயத்தில் மராத்தி மொழி பிரதானமாக இருந்தாலும் அந்த மொழியும் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவனுக்கு அந்தப் பிரதேசமும் சமூகமும் அந்நியப் பட்டிருக்கவில்லை. அவன் கற்பித்த வித்யாலயத்தில் இருபாலரும் படித்தார்கள்.

அவன் அன்றாட நியமங்களுக்கப்பால், எந்தத் திசையிலும் கருத்தைச் செலுத்தியிருக்கவில்லை. தானே தன் உணவை அநேகமாகத் தயாரித்துக் கொள்வான். ரொட்டி, காய், பருப்பு… ஸ்டவ்வில் இதைத் தயாரித்துச் சாப்பிட்டு விட்டுப் போவான். அங்கே காலை, ஏழரைக்கு ஒரு பகுதியும், பிற்பகல் இரண்டு மணிக்கு ஒரு பகுதியும் – இரண்டு அடுக்குகளாகப் பள்ளி வகுப்புகள் நடைபெறும். மேல்தளத்து தம்பதி அடிக்கடி கதவைப் பூட்டிக் கொண்டு மாலை வேளைகளில், பஜன், பூஜா என்று போய் விடுவார்கள். அவர்களுடைய மகள் ஒருத்தி கோலாப்பூரில் இருந்தாள். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருந்தனர். இராணுவம் தொடர்பான கணக்குத் தணிக்கை அலுவலராக வேலை பார்த்து அவர் ஒய்வு பெற்றவர். அந்த அம்மையாரும் வீட்டிலிருந்தபடி படித்து மராத்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். அவர்கள் அவன் மீது அளவிறந்த அன்பு காட்டி னார்கள். ‘கீர்’ ‘கடி’ என்று ஒற்றையாக இருக்கும் அவனுக்கு அந்த அம்மை சிறு கிண்ணத்தில் ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பாள். அவர்கள் கோலாப்பூருக்குப் போகும்போது, வாயில் முன் கதவுச்சாவி ஒன்றை அவனிடம் கொடுத்து வைப்பார்கள்.

அவனுக்குத் தெரியும் போது, சங்கரியின் அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். மூன்று வயசில் ஒரு பெண் குழந்தை. இன்னும் கொஞ்சம் பெரியவனாக ஒரு பையன்; கைக்குழந்தை என்று மூன்று குழந்தைகள் இருந்தார்கள். அண்ணன் கறுப்பாக, தாட்டி யாக இருப்பான். மனைவியும் பருமன்தான். காலையில் எட்டரை மணிக்கு அவர்கள் பைக்கில் வேலைக்குச் செல்வார்கள். கைக்குழந்தை சங்கரியின் இடுப்பில் இருந்து அழும். பிறகு டாடா சொல்லும்.

இதெல்லாம் செவிவழிக்காட்சிகள் தாம். முன் கூடத்தில் ஒரு கட்டிலில் பெரியம்மா, படுத்திருப்பார். நலிந்த குரலில் அவள், “சங்கரி, புள்ள தொட்டில்ல என்ன பண்ணிருக்கான் பாரம்மா, முருகா, என்னிய இப்படிச் சோதிக்கிறியே?” என்று புலம்புவது செவிகளில் விழும்.

அவனையும் அறியாமல், அந்தக் குடும்பத்தில் உள்ள சங்கரி யார் என்று தெரிந்து கொள்ளும் ஈர்ப்பு… குடியேறியது என்று இப்போது தோன்றுகிறது.

அந்த மூன்று வயதுக் குழந்தை அருகேயுள்ள ஒரு பாலபவனத்துக்குப் போய்க் கொண்டிருந்தது. ஐந்தாறு வீடுகள் தள்ளி உள்ள அந்த மழலைப் பள்ளிக்குக் காலையில் அம்மாவோ, அப்பாவோ கொண்டு விடுவாரோ, அல்லது ஆயா யாரேனும் இருந்தார்களோ? ஒருநாள் மதியம், சங்கரி இடுப்பில் கைக்குழந்தையுடன் இந்தக் குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்ததை அவன் பார்த்தான். அவள் தலை குனிந்து நடந்தாள்.

அந்தக் குழந்தை ‘பாட்டி’ என்றழைத்துக் கொண்டு மேலே வரும். குழந்தை பெயர் பவானி. “பவானி காய்காதோ ?” என்பார்.

தாத்தா “மீ ஜேவ்லா” என்று அது மராத்தியில் பதில் சொல்லும். தன் கவனம் சிதறக்கூடாதென்று அவன் கதவை ஒருக்களித்துக் கொள்வான்.

மாலையில் சில தமிழ் மாணவர்கள் அவனிடம் வந்து இந்தி கற்றுக் கொண்டார்கள். எல்லோரும் பையன்கள். ஒரு தடவை அந்தக் குழந்தை அப்போது அவன் அறைக்குள் வந்தது. “பாட்டி இல்லே?”

“இல்ல. அவங்கல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க. நீ இப்ப சமர்த்தா, நல்ல பிள்ளையாக் கீழே போயிடம்மா, கிளாஸ் நடக்குதில்ல?” என்று அனுப்பி வைத்தான்.

அப்போது குளிர்காலம். விடுப்பு நாட்கள். வீட்டுக்காரர்கள் ஊரிலில்லை. அவன் அறையை ஒட்டடை அடித்துச் சுத்தம் செய்தான். போர்வை தலையணை உரை, சட்டை எல்லாவற்றையும் கீழே கொண்டு சென்று சோப்புப் போட்டுத் துவைத்துப் பிழிந்து விட்டு நீராடினான். சில்லென்று நீராடிவிட்டு வருகையில் கீழ்த்தளத்து சமையலறையில் இருந்து குழந்தை அலறும் ஒலி கேட்டது. ‘ஒண்ணுமில்ல… இதபாரம்மா…’ என்ற சமாதானங்கள் எடுபடவில்லை. தாளாத நோவில், குழந்தை துடிக்கிறது; தவிக்கிறது. அவன் மேலே துணியைக் கொண்டு செல்கையில் பின் வாயில் கதவு திறந்தது. ஹீரா… ஹீரா…? யாருமில்லை. அவள் அலறிப் புழுவாய்த் துடிக்கும் குழந்தையை எடுத்துக் கொண்டு முன்புறம் போகையில், தொட்டில் குழந்தையும் சேர்ந்து அழுதது.

“குக்கரை இறக்கிட்டு, பருப்பை எடுத்திட்டிருந்தேம்மா, சீலயப்புடிச்சி இழுத்து வம்பு பண்ணினா. அண்ணி அவளுக்கு வயிறு மந்தமா இருக்கு, உடம்பு சுடுது, ரசஞ்சோறு தவுர எதும் குடுக்காதன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க காலம எந்திரிச்சி பேடா வோணும் சேவு வோணும்னு தொந்தரவு பண்ணுனா. ரெண்டு கிண்ணத்துல போட்டுக் குடுத்தே. திங்கியவுமில்ல. வாரி எறச்சிருக்கா… இப்ப கைப்பருப்பு இடுக்கிலேந்து நழுவி, இவகையில கொட்டிடிச்சி… தேங்காண்ணை ஒறஞ்சி கெடக்கு. என்ன பண்ணுவே…” என்று சங்கரி பிரலாபிக்கும் குரலில் விசிறிக் கொண்டிருந்தாள்.

“இப்படிப் புள்ளிகள வுட்டுப்புட்டு பெரிச மட்டும் கூட்டிட்டு இவுங்க போயிடறாங்க. சங்கரி, தோசமாவு இருக்கில்ல, பூசு. வாடிகண்ணு, பாட்டி விசரறேன்…”

அந்த நேரத்தில்தான் அவன் சென்றான்.

“என்னம்மா? என்ன ஆச்சி?…”

“அத்தே. அத்த. பருப்பக் கொட்டிட்டா. அடுப்பி லேந்து கொட்டிட்டா…”

“அடி செருப்பால, கேக்குறவங்க என்ன நெனப்பாங்க? அம்மயோட துக்கிரித்தனம் அப்பிடியே வருது?” என்று பாட்டி பாய்ந்தாள்.

“அம்மா நீ எதுக்கு இப்பிடி எல்லாம் பேசுற? புள்ளக்கு வலி எரிச்சல்…”

தோசை மாவை எடுத்து வந்து அவள் போட முனைந்த போது, அவன் பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை பவானியைப் பார்த்தான்.

புறங்கை, பிஞ்சு விரல்கள், மணிக்கட்டுப் பின்புறம், முழங்கைக் கீழ்ப்பகுதிகளெல்லாம் சிவந்து ரணம் பட்டிருந்தது. “தோசை மாவெல்லாம் வேணாம். சில் தண்ணி கொண்டாங்க… இருங்க, ஐஸ் வாங்கிட்டுவரேன்!” என்று அவன் எதிர்ப்பக்கம் இருந்த கடையில் இருந்து ஐஸ் துண்டுகள் வாங்கி வந்து தடவினான். பிறகு அவனே டாக்டரிடம் துரக்கிச் சென்றான்.

அவர் பார்த்துவிட்டு “நல்லவேளை, குளிர்ந்த ஐஸ் வைத்தீர்கள்” என்று சொல்லி, களிம்பு தடவி, பாதுகாப்பாக ஆங்காங்கு மருந்துத்துணி வைத்து பிளாஸ்திரி போட்டார். கையில் ஒரு சாக்லேட் கொடுத்தார்.

“யார் பெத்த புள்ளயோ ? சமயத்துக்கு வந்து உதவி பண்ணின. இல்லேன்னா, என்ன செய்யும் அது?… அவுங்க ரெண்டுபேரும் பெரி புள்ளயக் கூட்டிட்டு ஹாயா லீவுன்னு பம்பாய் போயிட்டாங்க. நாளக்கி மதியம் வராங்க. தம்பி சமயத்துல உதவின…” என்று நன்றி சொன்னாள் பெரியவள்.

இப்படித்தான் பரிசயம் தொடங்கியது. மறுநாள் பம்பாயில் இருந்து வந்த மகன், காத்திருந்து, இவன் வாசகசாலைக்குப் போகும் நேரத்தில் வாயிலில் மகளுடன் நின்றிருந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் ஸார் ! நீங்க தமிழ்க்காரர்னு இப்பதாந் தெரியும். அம்மா சொன்னாங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஸார். ரோட்டில விழுந்தாலே கவனிக்காம போற காலம் இது… டாக்டருக்கு என்ன ஆச்சு ஸார்?”

“நோநோ… அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க ஒண்ணும் குடுக்க வாணாம். பாப்பா, எப்படியிருக்கு?” என்றான்.

“அங்கிளுக்குத் தேங்க்ஸ் சொன்னியா?… நீங்க சாக்லேட் வாங்கிக் குடுத்தீங்களாமே? ரொம்ப சேட்ட ஸார்.”

அவன் உள்ளே அழைத்ததை மென்மையாக மறுத்து விட்டு வெளியேறினான்.

பொள்ளிக் கொப்புளம் கிளம்பாமல் சூட்டுக்காயம் ஆறிவிட்டது. அதிகம் சிவப்பில்லை என்றாலும் இளந் தோலில் தேங்காயெண்ணெய் பளபளக்க குழந்தை வருவாள். இதற்காகவே அவன் மிட்டாய் வாங்கி வைத்தி ருப்பான்; கொடுப்பான்.

பத்து நாட்கள் சென்ற பின் ஒரு நாள், வெயில் படும் படி, பெரியவள் வாயிலுக்கு நேராகக் காலில் எண்ணெய் தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவன் ஏழரைக்குச் சென்றுவிட்டு, பதினொன்றரை இடைவேளையில் வந்திருந்தான். காலை உணவு எதுவும் தயாரித்திருக்கவில்லை. சில நாட்களில் நேரமாகிவிவிட்டால், இந்த நேரத்தில் ஏதேனும் ‘கிச்சடி’ தயாரித்து உண்டுவிட்டு இரண்டு மணிக்குப் போவான்.

அவன் வரும்போது, ஸ்டவுக்கு எண்ணெய் வாங்கி வருவதைப் பார்த்து, “தம்பி? என்ன, இப்ப வரீங்க?” என்று கேட்டாள்.

“இல்லீங்க, ஸ்டவ் எண்ணெயாயிட்டுது. அதான் வாங்கிட்டு வந்தேன்.”

“அடாடா, நீங்க ஏன் சிரமப்படுறீங்க?… எங்க வீட்டுல எண்ணெய் இருக்கு. இங்க காஸ் அடுப்பானதால, எண்ணெய் உபயோகமில்ல. ஹீராகிட்ட சொன்னா, வாங்கிட்டு வாரா, கார்டுதான். ஆமாந் தம்பி, நா கேக்குறேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க, தனியா சமச்சி சாப்பிடுறீங்க…? வீட்ல… யாரும் இல்லியா?… பொறந்த வூட்டுக்குப் போயிருக்காங்களா?… இல்லாட்டி இப்பதா, புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலை செய்யிறாங்க. ஒரே எடத்துல இருக்க முடியாம…”

“…சே, சே அதெல்லாம் இல்லம்மா. நான் தனி ஆள்…” என்று சொல்லிவிட்டு விடுவிடென்று மேலேறி வந்து விட்டான். இப்படி ஆரம்பித்து அந்தம்மாள் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கலானாள்.

“தம்பி, செத்த நில்லுங்க…” குழந்தை பவானி ஒரு டப்பியை எடுத்து வந்து கொடுக்கும்.

“இன்னிக்குப் பொங்கல்… உள்ள வாங்க… ஏனிப்படி ஒட்டிக்கிடுமோன்னு போறீங்க?…” “…அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என்றான் அவன். சாரதா!… அம்மா… மருமகள் வந்தாள். “உள்ள வாங்க ஸார். எங்களுக்கு டயம் இல்லாம போயிடுது. வாரத்தில ஒரு நாதா லீவு… அம்மா சொல்லிட்டே இருக்காங்க. பையனக் கூட்டிட்டு அவுங்க ‘டென்டிஸ்ட்’ கிட்டப் போனாங்க. எனக்கு வாஷிங், அது இதுன்னு வேலை. சங்கரி மட்டும் இல்லன்னா இந்தக் குடும்பம் நாறிப்போகும்.” மாமி யாருக்காகத்தான் அவள் அழைத்திருக்கிறாள்.

மேலே சாவித்திரி அம்மாவும் சுக்டன்கர் பாயும் ஊரிலிருந்து வந்தார்கள். அவர்களிடம் சங்கரியின் தாயார் எல்லாம் பேசியிருக்கிறாள். அவர்கள் இருவரும் அவனிடம் வந்து பேசினார்கள்.

‘சங்கரிக்கு வயதுக்கு வந்த நேர சாதகம் சரியில்லையாம். இதனால் பெண் கேட்டு வரும் இடங்களில் வரன் அமையவில்லை. சங்கரியின் தங்கைக்கும் கூடக் கல்யாணமாகி விட்டது. சுக்டன்கரும், சங்கரியின் அப்பாவும் ஒரே தணிக்கைத் துறையில் வேலை செய்தவர்களாம். இந்த வீட்டுக்கு அவர்கள் வந்த போது சங்கரிக்குப் பதினைந்து வயசிருக்குமாம். அவர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகிப் போன போதெல்லாம் குடும்பத்தைத் துரக்க முடியாமல், சங்கரியையும் அண்ணன்களையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவர் ஒய்வு பெற்று ஒரு வருசம் கூட இருக்கவில்லை. இங்கே இருக்கும் அண்ணன் இரண்டாவது அண்ணன். மூத்தவன் டெல்லியில்-ஒர் அக்கா-தங்கை. தங்கைக்கு இங்கே வந்து தான் கல்யாணம் செய்தார். அவர் இறந்து போன மறுவருடமே, அந்தம்மா ‘ஸ்ட்ரோக்’ வந்து படுத்துவிட்டார். கை கால் அசைக்க முடியாமல் இருந்தது. அவன் பார்த்தபோது – இப்போது தேவலையாக இருக்குது.

சங்கரிக்குக் கல்யாணம் என்று யார் மூலமாக வேனும் வரன் வந்தாலும், அண்ணனும் அண்ணியுமே தடுத்து விடுவதாக, அவள் அம்மா சொல்லி வருந்தினார்களாம். ஏதோ, நகை, பாத்திரம் என்று சேகரித்து வைத்திருக்கிறாளாம். தான் கண் மூடுமுன் கெட்ட பழக்கம் எதுவும் இல்லாத நல்ல பையனைப் பார்த்து ஒப்புவிக்க வேண்டும் என்று இருக்கிறார்களாம்.

“சுப்பய்யா, சங்கரி ரொம்ப நல்ல பெண். இங்கே வந்து தான் தமிழ் ஸ்கூலில் எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்தாள். உனக்கும் ஒரு துணை. அவளுக்கும் ஒர் ஆதரவு. மாட்டேன்னு சொல்லாம ஏத்துக்கப்பா…ன்னு சொன்னாங்க.”

அவன் கண்களில் நீரருவி வழிகிறது.

சூடுபட்ட குரங்கு போல் அவன் அந்த இடத்தைவிட்டு அடுத்த வாரமே காலி பண்ணிக் கொண்டு வேறு பேட்டைக்குப் போனான். அங்கிருந்து பஸ்ஸில் பள்ளிக் கூடம் வருவான். யார் கண்ணிலும் படக் கூடாது என்ற மாதிரி ஒடிப்போனான்.

ஒருநாள், பஸ்ஸில் சுக்டன்கர் அவனைப் பார்த்து விட்டார்.

“சுப்பய்யா!” என்று கத்திவிட்டு அவன் இறங்கும் இடத்தில் இறங்கினார்.

“என்னப்பா? என்ன ஆச்சு, உனக்கு? எதுக்காக இப்படி ஒடுற?… இப்ப நாங்கல்லாம் கல்யாணம் பண்ணிட்டு குடும்பம்னு சுகமா இருக்கலியா? உனக்கு என்ன பிரச்னை?” என்று கேட்டார். அவன் அறைக்கு வந்தார். ஏதேதோ ஊகங்களைக் கிளப்பி அவனைச் சந்தேகக்கண்ணால் ஆராய்ந்தார். “ஒ, அதெல்லாம் இல்ல சார், என்னை மன்னிச்சிடுங்க. கல்யாணம் குடும்பம்னு இல்லாம, ஆசாரிய வினோபா பாவே போல மனித குலத்துக்கு சேவை பண்ணனும்னு…”

அவர் ஆத்திரத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு போனார். பிறகு, சுக்டன்கர், மகள் வீட்டுக்குச் சென்ற இடத்தில் மாரடைப்பு வந்து காலமானார் என்று கேள்விப் பட்டான்.

நன்றி கொன்ற பாவியாக, சாவித்திரியம்மாளைப் பார்க்கக்கூட அவன் போகவில்லை.

மேலும் ஒரு வருசமாயிற்று. ஒருநாள் அநுமான் மந்திர் பக்கம் ஒரு மாணவனுடன் நடந்து கொண்டிருந்தான்.

சங்கரி கையில் காய்கறிப் பையுடன் குறுக்கிட்டாள்.

“மன்னிச்சுக்குங்க..” என்றாள் தலை நிமிராமல்.

“அம்மா இறந்து போயிட்டாங்க சாவித்திரி அம்மா தான் சொன்னாங்க, உங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க..” என்றாள்.

“ம்… அதுக்குன்னு வழில வந்து மறிக்க வேணாம்…” என்றான். அப்படி ஏன் கடுமை காட்டினான் ? பொறிகடலை நடுவே கருக்கென்று கடிபடாமல் ஒன்று இருக்குமே? அப்படி… ஏன்? ஏன் அப்படி வெடுக்கென்று பேசினான்? என்ன காரணம்? பயமா? பயம் அவன் மீதே அவனுக்குப் பயம். ஏனென்று தெரியவில்லை. பயத்தில் எழுந்த வீம்பா, வீம்பில் எழுந்த பயமா? புரியவில்லை.

அந்த வருசமே மராத்வாடா கிளைக்குப் போனான். எதிர்பாரா விதமாக பேஷ்வா பார்க்கில் சாவித்திரி அம்மாவைப் பேரக் குழந்தைகளுடன் பார்த்தான்.

“சுப்பய்யா?… எப்படி இருக்கே?… உனக்குத் தெரியுமா? நீ வருவேன்னு அந்தப் பொண்ணு சங்கரி ரொம்ப எதிர்பார்த்திட்டிருந்தா. இப்ப அவங்களே இத்தனை வருசமா இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. புருசன் பெண்சாதி இரண்டு பேருக்கும் டிரான்ஸ்ஃபர் கிடச்சிடிச்சு. டெல்லிக்குப் போயிட்டாங்க…” என்றாள் வருத்தத்துடன்.

சிறிது காலத்துக்குப் பிறகு அவனும் நாக்பூர் வித்யா பீடத்துக்குப் போனான். இத்தனை வருசங்களுக்குப் பிறகு, புனேயில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தான். பழைய பள்ளித் தலைவர் கங்காதர் சர்மா, “சுப்பய்யா, உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு மூணு நாலு மாசமிருக்கும். வச்சிருக்கிறேன். ஸ்கூல் பக்கம் வா, நாளைக்கு!” என்றார்.

அந்தக் கடிதம் ஏதாக இருக்கும் என்ற யோசனையே அவனுக்கு எழவில்லை. பழைய பள்ளிக்கூடம் பத்து வருசமாகுது, பார்ப்போம் என்றுதான் போனான்.

அந்தக் கடிதம்தான் அவள் பார்த்த கடிதம்.

“அம்மா, நான் வந்து விசாரித்து மணிக்கூண்டு பக்கம் மெஸ் அம்மா சொன்னதும், இங்கே ஸ்கூலுக்குத்தான் வந்து நேராகப் போனேன். தாய்மார், பிள்ளைகளைக் காலையில் பள்ளியில் விட்டுவிட்டுப் போனால், இவள்தான் அந்தக் குழந்தைகளைத் தன் வீட்டுக்கழைத்து வந்து தாயோ தகப்பனோ மாலை, ஆறு அல்லது ஏழு மணிக்கு அழைத்துச் செல்லும் வரை வைத்துக் கொள்வாளாம். பள்ளியில் விசாரியுங்கள் என்றார்கள். நான் வாட்ச்மேன் தடுத்ததைப் பொருட்படுத்தாமல் உள்ளே போனேன். அந்த ஆபீசில், பட்டுஜிப்பா உருத்திராட்சம் ஸ்படிகம், திருநீறு குங்குமம் என்று உட்கார்ந்திருந்தான். ‘சங்கரின்னு இங்க கிரீச் வச்சிருந்தாங்களாமே’ன்னு வாயெடுத்ததும், அவன் முகம் சிவந்து விட்டது.

“யார்ரா இவங்க? ஏய்யா? எங்கேந்து வரீங்க, சங்கரி, கிங்கரின்னு, கழுத்தப் புடிச்சி வெளியே தள்ளுய்யா, வாட்ச் மேன்! வாட்ச்மேன்! சீய்! ஒரு நடத்தை கெட்ட கழிசடை, அதைத் தேடிட்டு ஆளாளா, இங்க வரானுவ? நானே அவளக் காணமேன்னு சொல்லி, அண்ணன்காரன் யாருன்னு கண்டு தகவல் சொல்லச் சொன்னேன். கேடு கெட்டது ஸ்கூலுக்குக் கெட்ட பேரு. எவங்கூட ஓடினாளோ?. உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட்ட சொன்னாளாம். எச்.ஐ.வி. இருந்திச்சின்னு சொல்லிகிறாங்க… கருமம்…” அவன் கழுத்தைப் பிடிக்கப் போயிருப்பான். அதற்குள் வாட்ச்மேன் இவனை வெளியில் கொண்டு வந்து தள்ளி விட்டான்.

“என்னால தாங்க முடியல… தாங்க முடியல. கத்தியால் குத்திச் செய்யும் கொலையைவிட மாபாதகம் இது. இந்தப் பாதகத்தைச் செய்தவன் நான். நான். அவளுடைய நெருப்புப் புனிதத்துக்குக் குலைத்து அழித்த பின்னும் களங்கம் கற்பிக்கிறாங்களே? எந்த டாக்டர்… எவன்… இவனுகளை சம்ஹாரம் பண்ணனும்…”

கண்கள் சிவந்து வெறிபிடித்த நிலையில் அவன் வெளியே பாய்கையில் நல்ல வேளையாக ரங்கன் எதிரே வருகிறான்.

“இன்ன சாரு?… எதானம் போட்டுட்டாயா?” என்று குடிப்பது போல் சாடை காட்டுகிறான்.

அவனை ஒரு தள்ளுத்தள்ளும் போது, அவள் விரைந்து முன் வாயில் கதவைச் சாத்துகிறாள்.

“சுப்பய்யா, வேண்டாம், போவுதுப்பா, அது அவ விதி… ஆறுதல் கொள்ளு. ரங்கா, உனக்கு ஒண்னுமில்ல, நீ போ.” மாடிப்படி அறைக்கதவைத் திறந்து அங்கே அமரச் செய்கிறாள்.

“சுப்பய்யா, இப்படிப் பொங்குவதால தீர்வு இல்லலட்சோப லட்சம் பெண்கள், படிக்கிறாங்க வேலைக்குப் போறாங்க. ஆனா, அவுங்களுக்கு வேணுங்கற மனிச மரியாதை கிடைக்கல… ஆறுதல் கொள்ளப்பா…”

அவன் பேசாமல் உட்கார்ந்திருக்கிறான். கதவை மெள்ளச் சாத்திக் கொண்டு வருகிறாள்.

– தொடரும்…

– உத்தரகாண்டம் (சமூக நாவல்), முதற்பதிப்பு: டிசம்பர் 2002, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *