நான் வீடு தேடிக்கொண்டிருந்தேன். வீடு அம்சமாக அமைந்திருந்தால் அது என் பணியிடத்துக்குத் தொலைவில் இருந்தது. அணுக்கத்திலும் பொதுப்போக்குவரத்து வசதிகளுடனும் அமைந்தவை சுமாரானவையாகவும், மின்னுயர்த்தி வசதிகள் இல்லாமல் 3வது / 4வது தளத்திலும் இருந்தன. கடைசியில் ஹன்னா என்றொரு பெண் தன்வீட்டை பகுதியாக வாடகைக்குக் கொடுக்கவிருப்பதை Zweitehand பத்திரிகையின் சிறு விளம்பரப்பகுதியில் பார்த்தேன். அநேகமாக வீட்டைப் பகுதியாக வாடகைக்குக் கொடுப்பவர்கள் ஆண்களுக்குத் தரமாட்டார்கள். இருந்தும் ஒரு வெளிநாட்டு ஆணுக்கும் வாடகைக்குத்தருவியாவென்று ஹன்னாவுக்கு மின்னஞ்சல் எழுதினேன். அன்றே பதில் வந்தது. ஒரு குடியிருப்பாளர் இயைந்து அனுசரித்துப்போகக்கூடிய ஒருவராக இருப்பதுதான் முக்கியம் ஆண் / பெண், சுதேசி / விதேசி, கருப்பு / வெளுப்பு இவையெல்லாம் எனக்குத் தடைகளில்லை.. அடுத்தநாள் அவள் தந்திருந்த நேரத்தில் வீட்டைப் போய்ப்பார்த்தேன். அதையும் நிராகரித்துவிடக் காரணங்கள் எதுவுமிருக்கவில்லை. வீட்டின் பிரதம குடிருப்பாளருக்கான முதன்மை ஒப்பந்தம் அவளிடமே இருந்தது. ‘ஒருமாத மனைப்பகிர்வில் இருவருக்கும் ஒத்துவரவில்லையானால் என் பகுதிவாடகை ஒப்பந்தம் முறிவடையும்’ என்பதைத் தவிர அவள் வேறெதையும் நிபந்தனையாக விதிக்கவில்லை. பேச்சில் மிகவும் புரிதலுள்ள பெண்ணாகத் தெரிந்தாள். அவ்வீட்டுக்கே குடிபோனேன்.
அது முதலாம் உலகமகாயுத்தம் முடிந்தவுடன் 1925 இல் கட்டப்பட்டதும் புராதன கட்டிடங்களைக் கண்காணிக்கும் திணைக்களத்தின் (Landesdenkmalamtes Berlin) இன்னும் 100 – 150 வருடங்கள் தாக்குப்பிடிக்குமென உத்தரவாதமும் பெற்றதுமான பழைய சாம்பர்நிறப் பார்க்கல்லிலான உறுதியான கட்டிடம். பழையகுடியிருப்புகளில் வாழ்வதிலுள்ள அனுகூலம் நவீன அடுக்ககங்களை விடவும் ஒப்பீட்டளவில் அவற்றுக்கு வாடகை குறைவாக இருக்கும். சிலவற்றில் மின்னுயர்த்தி வசதிகள் இருக்காது. எமது வீடு முதலாவது தளத்தில் இருந்ததால் எமக்கு அதைப்பற்றிய கவலையில்லை, அறஞ்சார்ந்து விசாரஞ் செய்தால் இவ்வகைச் சிந்தனை கொஞ்சம் சுயநலந்தான், ஆனாலும் தனியொரு மனிதன் மானுடம் நிரற்படுத்தி வைத்திருக்கும் துயர அடுக்குகளில் எதுக்கென்றுதான் வருந்துவது? அருமையறிந்து பராமரிக்கப்பட்ட, மனையின் இருவருக்கும் பொதுவான பிரதான வெளிவாசலுக்கு செதுக்கல் சித்திரங்களுடனான மரக்கதவு. அதுவே Rolls Royce இன் கதவுகளைப்போல ஓசையின்றி மிருதுவாகத் திறந்து சாத்தும். அதன் திறப்புக்கள் நம்மிருவரிடமும் இருந்தன. எங்கள் இருவர் படுக்கை அறைகளையும் ஒரு நீண்ட இடைகழி பிரித்தது. அதன் முடிவில் “L” வடிவிலமைந்த பொதுவான சமையலறை, அதன் ஒரு புயத்தில் நீண்டதொரு சாப்பாட்டுமேசையும் அதைச்சுற்றிக் கதிரைகளும் இடப்பட்டிருந்தன. மறு புயத்தில் மின்னடுப்பு, வெதுப்பிகளும், கழுவுதொட்டிகளும். எனக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் அம்மேசையைச் சுற்றி அமரவைத்தே உபசரிப்பேன்.
ஒரு முறை ஹன்னாவின் பள்ளித்தோழியென்று ஒருத்தி தென்மாநிலத்திலுள்ள Augsburg என்றொரு நகரத்திலிருந்து ஏதோ பணியுயர்வுக்கான நேர்முகத்தேர்வுக்குவந்து இரண்டுநாட்கள் கலகலப்புடன் தங்கிப்போனாள். மற்றும்படி அவளுக்கும் விருந்தினர்களென்று எவரும் வீட்டுக்கு வருவதோ தங்குவதோ இல்லை. அவரவருக்கு அவரவர் வாழ்வியல்த்தோரணைகள் (Life Styles). அவளோ நானோ ஆரம்பத்தில் சமையலறைக்குள் அதிகம் வினைக்கெடமாட்டோம், ஆதலால் எங்கள் சமையல்கள் மற்றவரால் தாமதமாவதுமில்லை. அவள் ‘பஸ்டா’ வகைகளை வெள்ளை-வைன், அடர் கிறீம் எல்லாம் சேர்த்து அலாதியான சுவையுடன் சமைப்பாள். அப்படி அவள் ‘பஸ்டா’ சமைக்கும் வேளைகளில் எனக்கும் கிடைக்கும். நான் எப்போதாவது இறால் அல்லது கோழியிறைச்சியில் செய்யும் இடியப்பப்பிரியாணியும், Fried – Rice உம் அவளுக்கும் நிரம்பப்பிடிக்கும்.
ஆரம்பத்தில் எங்கள் இருவருக்கும் சமையலைறையில் தனித்தனியான குளிர்ப்பதனப்பெட்டிகள் இருந்தன. அவளுக்கு Chianti Classico, Famiglia Barbera d’Asti போன்ற சிவப்புவைன் வகைகள் மிகவும் பிடிக்கும். சிவப்பு வைன்வகைகளைக் குளிர்பதனப்பெட்டிகளுக்குள் வைத்துப்பாதுகாக்க வேண்டியதில்லை, கெட்டுவிடாது. விரும்பினால் அருந்தமுதல் கொஞ்ச நேரத்துக்கு அவற்றைக் குளிரில் வைத்தாலே போதும்.
ஒருநாள் அவளாகவே சொன்னாள்: “ ஜீவன் எதுக்கு உனக்கு தனியாகவொரு குளிர்பதனப்பெட்டி…கொஞ்சம் ஜூஸும், பியரும், முட்டைகளும், மீனும், கோழியுந்தானே வைத்திருக்கிறாய்……. உன்னுடைய பெட்டியை நிறுத்திவிட்டு அதிலுள்ளவற்றை என்னுடையதுக்குள் வைத்துவிடேன், மின்சாரப் பாவனையுங்குறையும், சூழலுக்கும் நல்லது” என்றாள். சூழல் பிரக்ஞை உள்ள பெண்ணானபடியால் அடுத்தவர்களைப் பற்றியும் சிந்திக்கத்தெரிந்த நல்லபெண்ணாகத்தான் இருக்கவேண்டும். சம்மதித்தேன்.
அவள் Femina, Freundin, Flow, Brigitte, Gala, Cosmopolitan, Vogue, போன்ற மாதர் இதழ்களையும் விரும்பி வாங்கிப்படிப்பாள். இன்னும் திறில்லர்கள், கிறைம் நாவல்கள் வாசிப்பதிலும் ஆர்வம். ஆனால் அவற்றை பொதுப்புத்தகப் பெட்டிகளிலிருந்தோ, நூலகத்திலிருந்தோ, படித்துவிட்டு யாரும் தெருவில் வைத்திருந்தாலோ எடுத்துவருவாளேயன்றி, அவ்வகை நூல்களுக்காக பென்னி செலவுசெய்யமாட்டாள்.
நமக்குப் பொதுவான மற்றொரு வதியுமறையும் இருக்கிறது. அதற்குள் தொலைக்காட்சியையும் இரண்டு மென்னிருக்கைகளும் வைத்திருக்கிறோம். ஹன்னா ஓய்வுநாட்களில் அவ்வறையினுள் அமர்ந்து விதவிதமான வண்ணக்குச்சிகளை வைத்துக்கொண்டு கோட்டோவியங்கள் வரைந்து தள்ளுவாள். கற்றுத்தேர்ந்த ஓவியரல்ல, எனினும் அவளிடம் கேலிச்சித்திரக்காரர்களைப்போல நினைத்ததை வெளிப்படுத்தும் ஆற்றலிருந்தது. சமையலறையின் கிழக்குச்சுவரில் ஒரு மென்பலகை (Pinboard) உள்ளது. ஹன்னா அதில் அடுத்தமுறை வாங்கவேண்டிய சமையலுக்கான பொருட்கள், வெஞ்சனங்களைக் காகிதத்தில் குறித்துப் பதித்திருப்பாள். சுமாராக அமைந்துவிடும் ஓவியங்களையும் அப்பலகையில் பதிக்கும்ஊசிகளால் பதித்துவிடுவாள். அவ்வாறு ரோமானிய காதல் தேவதை Venus ஐயும், கிரேக்க தாபம் / ஆசையின் தேவதை Eros ஐயும் வரைந்து பதித்தியிருந்தாள். ‘நம்மிடமும் காதல்த்தெய்வங்கள் இருப்பதையும் மன்மதன் கரும்பினாலான கணையில் தாமரை அரும்பின் பாணத்தைப் பொருத்தி ரதிமேல் ஏவுவான்’ போன்ற மரபுவழிக்கதைகள் இருப்பதையும் சொன்னேன், ஆர்வமாகக்கேட்டாள்.
ஒருநாள் அவள் ஒரு ஓவியத்துடன் நீண்ட நேரம் வினைக்கெட்டுக்கொண்டிருந்தாளா……. சும்மாதானும் அவளைக் கலாய்க்க வேண்டி
“ஏம்மா பெண்களில் Leonardo da Vinci · Michelangelo · Rembrandt · Vincent van Gogh · Pablo Picasso போல் உலகம் போற்றும் ஓவியர்கள் ஒருவரும் உருவாகவில்லையே” என்றேன்.
“பார் ஜீவன்….. ஓவியத்தப்பொருத்தமட்டில் நானொரு கத்துக்குட்டிப்பாப்பா, அவர்கள் தரத்தில் நின்று பேச எனக்கெல்லாம் தகுதிகிடையாது…மெஸ்யூ” என்றாள் வெள்ளந்தியாக. (மெஸ்யூ > Mister ஃப்றெஞ் வழக்கு)
பின் என்ன நினைத்தாளோ ஒரு Saussage ஐயும் அதோடுசேர்ந்து நசுங்கும் இரண்டு முட்டைகளை நிழல்போல் வரைந்து மென்பலகையில் பதித்திருந்தாள். Saussage இன் செல்லக்கவிப்பும், பரிமாணாங்களும் ஒரு குழந்தைக்கே புரிந்துவிடும், ‘அது ஆண் லிங்கத்தின் குறியீடு’. இவள் என்னை உசுப்பத்தான் இந்தமாதிரிப் பண்ணுறாள்…அடுத்தநாள் நானும் ஒரு ‘ஆவுடையாரை’ வரைந்து அதன் அருகிற் பதித்துவிடலாமா என யோசித்தேன். ஓவியம் எனக்கொரு இடைஞ்சலையும் தராதவரையில் நான் அதைப் பொருட்படுத்தாதிருப்பதே உத்தமமென்றிருந்தேன். பின் ஹன்னா சமையலறையில் இருந்தவேளை அவள் ஓவியத்தை அப்போதுதான் கவனித்தமாதிரியான பாசாங்கோடு பார்த்தேன்.
“மெஸ்யூ…சொல்லு, இந்த ஓவியம் உன்னை எதுவிதத்திலாவது தொந்தரவோ சங்கடப் படுத்துகிறதா…, அப்படியென்றால் எடுத்துவிடுகிறேன்” என்றாள் தன்மையாக.
“ஓ…நொன் நோ , ஒரு விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை, சமையலறையில் Saussage இருப்பது இயல்புதானே மாம்.”
“அதுதானே…இந்துக்கள் ஆண்லிங்கங்களையும், பெண்குறிகளையும் வழிபாடு செய்வார்களென்று படித்திருக்கிறேன்” என்றாள்.
“ஏனைய மதங்களைப்போலத்தான் இந்து மதத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்து மதத்தை பல தத்துவங்களின் கலவை (An amalgam of philosophies) என்பார்கள். இந்துநதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்கள் / ஆதிசைவர்கள் என நம்பப்படுபவர்கள் ஒருசேர லிங்கத்தையும் ஜோனியையும் உற்பத்தியின் குறியீடுகளாகக் கருதியதால் சைவர்கள் லிங்கத்தையும், சாக்தர்கள் ஜோனியையும் வழிபட்டார்கள். சாக்தம் எனும் சக்தியை வழிபட்ட பிரிவினர் அநேகமாக இப்போது இல்லை எனலாம், ஆனால் லிங்கத்தையும், லிங்கம் ஜோனிக்குள் பொதிந்த நிலையிலுள்ள ஆவுடையார் எனும் உருவையும் பூஜித்துவழிபடும் வழக்கம் சைவர்களிடம் இன்னும் தொடருகிறது”. என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டு இணைவலையில் எமது சில வழிபாட்டு உருவங்களின் வகைமைகளையும் தரவிறக்கிக்காட்டினேன், அதிசயித்துப் பார்த்தாள்.
“இந்துக்களிடம் மட்டுமல்ல…ஆதியில் யூதர்களிடமும் ஜோனியை வழிபடும் வழக்கம் இருந்தது, Yvonne என்று ஃப்றெஞ்சிலும் / ஸ்பானிஸிலும் வழங்கப்படும் பெயர் ஆதி ஹீப்ரூ மொழியிலிருந்த Yonnie என்பதன் திரிபேயென தான் சொற்பிறப்பியலில் (Etymology) படித்திருக்கிறேன்” என்றாள். இவ்வளவு அறிந்திருப்பவள் நம் சுயம்பு / சிவ / மஹாலிங்கங்கள்பற்றியும் தெரிந்துவைத்திருக்கலாம். நான் அன்று சாமர்த்தியமாக அந்த விஷயத்துக்கு தேருக்குப்போடுவதைப்போல் சறுக்குமுட்டொன்றைப்போட்டு வேறொரு திசையில் திருப்பிவைத்தேன்.
நாளடைவில் எம்மிடையே புரிதலும் நெருக்கமும் அதிகமாக சமையலறையிலிருந்தபடியே எமக்கிடையேயான வாழ்வியல், தத்துவங்கள், சம்வாதங்களை விசாரஞ்செய்வதோடு பழமைபாடுகளையும் நாட்டு நடப்புகளையும் பரிவர்த்தனை செய்யலானோம். ஒருநாள் இரவு இருவரும் சாப்பிட்டபடியே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவளும் பேசிக்கொண்டே கொஞ்சங்கொஞ்சமாக அவளது பிரிய Chianti வைனை வழமையைவிட அதிகமாகவே மாந்திவிடவும் போதையில் மெல்ல மிதக்கலானாள். “சாராயம்போனால் பூராயம் வருமா”……. அன்றைக்குத்தான் முதன்முதலாக தனது குடும்பம், இளமைக்காலங்கள். பணிபற்றியெல்லாம் என்னிடமும் பகிர்ந்துகொண்டாள்.
DHL விநியோக சிற்றுந்துகளில் பொதிகளை விநியோகம் செய்துகொண்டிருந்த என்னிடம் அவளிடம் பீற்றிக்கொள்ள அத்தனை உத்தியோக மஹாத்மியங்கள் இருக்கவில்லை.
“ஹன்னா திருமணம்பற்றி என்ன நினைக்கிறே” என்றதுக்கு உடனே “ நான் நிறைய பெண்ணியம்பற்றி வாசிப்பவள், அதனால் எனக்கு அதில எல்லாம் அத்தனை நம்பிக்கையில்லை’ என்று சொல்வேனென்று ஒருவேளை நீ எதிர்பார்த்திருப்பாய், ஆனால் திருமணமும் குறிப்பாகப் பெண்களுக்கு நல்லதென்றே நினைக்கிறேன் ” என்றாள்.
“ஏன் ஆண்களைவிடப் பெண்களுக்கு நல்லதெங்கிறாய்…பெண்ணோடு ஒரு ஆணும் இருந்தால்த்தானே திருமணம்…கொஞ்சம் விஷயத்தை இந்த மத்தனுக்கும் புரியும்படியாய்த்தான் சொல்லேன்.”
“சொல்றன் பொறு” என்றவள் தன் கிளாஸில் மேலும் வைனை வார்த்து ஒரு தரம் அதில் வாயைவைத்து மிடறிவிட்டு ‘மௌனமாக’ இருந்தாள். அம்மௌனத்தை ‘இதை இவனிடம் சொல்லத்தான் வேண்டுமா’ எனும் தயக்கமாக நான் பொருளுணர்ந்தேன்.
பின் பேசினாள்:
“நான் பிறந்தபோது என் பெற்றோர்கள்கூடத் திருமணமாகாமல் சேர்ந்தே வாழ்ந்திருந்தனர். ஒருமுறை என்னுடைய குடும்பப்பெயர் எங்கிருந்து வருகிறது என்று நான் அம்மாவிடம் கேட்டபோது “நீ பிறந்தபோது என்னுடன் சேர்ந்து வாழ்ந்த Jonas ஸே உன் அப்பாவென்று நான் நம்பியதாலும் அவருடைய Meyer என்கிற குடும்பப்பெயர் முதற்குடிமகன் என்கிற நல்ல அர்த்தத்தைக்கொண்டிருந்ததாலும் அப்பெயரையே உனது குடும்பப்பெயராகப் பதிவு செய்தேன். என்றார் அம்மா.”
இதைச்சொல்லிமுடிக்கையில் அவள் குரல்கம்மிக் கண்கள்பனித்துக். கொண்டன, அவளது மனதைத் திசைதிருப்பலாமென்ற எண்ணத்தில்
”ஜெர்மனியில் ஒரு தாய் விரும்பினால் அவர் தன்னுடைய குடும்பப்பெயரையும் தன் பிள்ளைக்குத் தரமுடியுமல்லவா…” என்றேன்.
அவள் மேலும் மேசையில் கொஞ்சநேரம் மௌனமாக அமர்ந்திருந்துவிட்டு எழுந்து “குட்நைட்” சொல்லிவிட்டு லேசான உலாஞ்சலுடன் நடந்துபோய் படுக்கையறைக்குள் புகுந்தாள்.
ஒருமுறை அவளுக்குக் காய்ச்சல்வந்தது, குலைப்பன்கண்டவள்போல் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தாள். Novaminsulfon. 500mg வில்லை ஒன்றைக் கொடுத்துவிட்டு, பான்டேஜ் நறுக்கொன்றை நனைத்து அவளின் நெற்றியில் ஒட்டிவிட்டிருந்தேன், இரண்டுமணி நேரத்தின்பின் உடல்வெப்பத்தை அளந்து பார்த்தால் 39 இலிருந்து 37 ஆகத்தணிந்துவிட்டிருந்தது.
“இரண்டே பாகை மட்டும் குறைந்திருக்கு” என்றேன்.
“என்னையேதோ எயிட்ஸ்காரிட்டமாதிரி எட்டிநின்று ஒத்துறே…இந்தக்காய்ச்சல் மட்டும் இல்லேன்னா நானொரு ஆரோக்கிய மடந்தையாக்கும்…என்னை அப்படியே கொஞ்சநேரம் அணைத்து இறுகக் கட்டிப்பிடித்திருப்பாயானால் இன்னுமொரு பாகை இறங்கிடும், எங்கம்மா எனக்கு அப்படித்தான் செய்வா…” என்றாள் வீறமைவாக (seriously).
“அப்புறம் உன் உஷ்ணம் மெல்லமெல்ல எனக்குள் ஏறத்தொடங்கிவிட்டால் எந்து யான் செய்கும்?”
‘என் அச்சம் அதல்ல…அதைவிட திரிபடைந்த உக்கிரத்தீயுயிர் (Multiple variant Virus) காமத்தீ கிளம்பித் தகிக்கத்தொடங்கிற்றென்றால் அது என்னையும் சாய்ந்திடுங்கற’ அசல் சூக்குமத்தை ஹன்னா அறியாள்.
“அப்படித்தான் உடல் சூடானால் வழக்கத்தில் எதைச்செய்வியோ…. அதைச்செய்யேன்……… இலேசான Knutchen (Cuddling/Kissing) செய்வதால் யாருக்கும் பெரிய சேதாரங்கள் வந்திடாது மெஸ்யூ…..” என்றாள். கண்ணைக் குறும்பாகச் சிமிட்டிக்கொண்டு. சின்னதாகத் தொடங்கினாலும் தொடங்கிவிட்டால் இடைநிறுத்திவிடக்கூடிய சங்கதியா அது?
“உடல் சூடாகும்போது வழக்கத்தில் என்ன செய்வேங்கறதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேனா…” என்றேன் பொய்க்கோபத்துடன்.
மறுநாள் பொதுஅங்காடிக்கு என்சீருந்தில் போயிருந்தேன். ஹன்னா பலவீனமாக இருப்பது நினைவில் வரவும் எனக்கான மளிகைப்பொருட்களோடு அவளுக்கும் சேர்த்து வைன்கள், கோதுமைமாவு, கிழங்கு, சமையலெண்ணெய், தண்ணீர், பாலன்ன பாரமானவற்றை வாங்கிவந்து கொடுத்தேன்.
“வாவ்…இதையெல்லாம் நீ என்னைக் கட்டிக்கிட்ட பின்ன பண்ணலாமே, எதுக்கு மெஸ்யூ…… இப்பவே எதுக்கு இத்தனை சிரமப்படுறே” என்றாள்.
“சும்மாவொரு சமூக சேவையென்றே வைச்சுக்கோயேன்…”
”நாம கட்டிக்கிட்ட பின்னாலும்…நிஜமாய் இதே மாதிரி எனக்குச் சாமான்களைச் சுமந்துவந்து கொடுப்பியா Schatz (அன்பே)…” என்றாள் கண்களில் குறும்பு தவழ.
”Warum nicht?” (Why not)
என் கையை ஆதுரத்தோடு இழுத்துவைத்து முத்திவிட்டு மிருதாக அதைத் தடவிக்கொடுத்தாள்.
எங்கள் குடியிருப்பின் தரைத்தளத்தின் கிழக்குச்சுவரில் ஒரு பக்கக்கதவு இருக்கிறது, அவ்வாசலால் வெளியேறி வளவின் பின்கொல்லைக்கும் குடியிருப்பாளர்களின் வாகன நிறுத்திடத்துக்கும் வரலாம். எங்கள் வீடமைந்த வீதியின் ஓரமாக ஒரு ’டிராம்’ பாதையுமுண்டு அது கிழக்கு நோக்கிபோய் மேலும் இரண்டோ மூன்று தரிப்பிடங்கள் கடந்து Herzberge எனும் தரிப்பிலுள்ள பிரபலமான Queen Elisabeth இதயநோய் மருத்துவமனையில் முடிவுறும்.
ஒரு நாள் ஹன்னா பக்கக்கதவால் பூனைபோல் ஓசைப்படாமல் இறங்கி ஒருவனின் அணைப்போடு டிராமில் ஏறிப்போனாள். அதே இளைஞன் ஒரு நாள் வீதியில் பார்த்த என்னிடம் “ மெஸ்யூ இங்கே பாலியல் விடுதிகள் ஏதும் இருக்கா…….” என்று விசாரித்தவனைப் போலிருந்தான். அன்றைக்கு நான் அதிகமாகக் குடித்துவிட்டிருந்தேனோ தெரியவில்லை. அந்த இளைஞனையே ஹன்னா ஒருநாள் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்குக்கூட்டிவந்து ஏதேதோவெல்லாம் அமர்க்களமாகச் சமைத்து விருந்துபோட்டு அனுப்பியது கனவிற்போலிருந்தது அந்த இளைஞன்தான்போலும் கிற்றாரை விளையாடிக்கூடவே இரண்டொரு பாடல்களைப் பாடியதான ஒரு பிரமை. அவ்விரவின் நிகழ்வுகள் கனவிற்போலும், பனிப்புகாருக்குள்ளால் தெரிவதுபோலவும் ஞாபக அடுக்கில் தெளிவின்றிக் கலங்கியுந்தெரிந்தன. அவனையோ கூடவந்த பெண்ணையோ ஹன்னா அறிமுகப்படுத்தியதான ஞாபகம் மட்டும் வரவேயில்லை.
பெர்லின் ஜெர்மனியின் தலைநகரமாகிய பின்னால், ஒரு நாள் மாலையில் பணியிலிருந்து திரும்புகையில் ஹன்னாவே Lychee பழங்கள் வாங்கிவந்தாள், உயர்தர மதுவொன்றின் மென்மையான வாசனை அதிலிருந்து வந்துகொண்டிருந்தது. வதியுமறையில் அவற்றைச் சுவைத்தபடியே வழக்கமான நம் பழமைபாடுகளைப் பேசிக்கொண்டிருக்கையில் பெர்லினின் வேலைவாய்ப்புகள் பற்றிய பேச்சுவரவே ஹன்னாவே சொன்னாள்:
“நான் என்ன தொழில் பண்ணுறேன் என்பதை அறியும் ஆர்வம் உனக்கும் இருந்திருக்கும் இல்லாமலுமிருக்கும், ஆனாலும் நாம இவ்வளவுகாலம் நெருங்கி இருந்தும் அதுபற்றி எதுவும் என்னைக்கேட்காமல் இருக்கிறாய் பாரு…உன்னுடைய அந்தப் பண்பு எனக்குப் பிடிச்சிருக்கு.”
பெர்லின் தலைநகரமாகிவிட்டதால் இங்கேயுள்ள (Short-term) அமயத்துக்கான செகிரடேறியல் சேர்விஸ் செய்யும் குழுமங்களின் தேவையும், அவ்வகைக் குழுமங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதையும் அவ்வகைக் குழுமங்களின் சேவை வகைகள் பற்றியும் விபரித்துச் சொன்னாள். வெளிநாடுகளிலிருந்தோ, ஜெர்மனியின் இதர நகரங்களிலிருந்தோ வியாபார நிமித்தமாக பெர்லின் நோக்கிவரும் வணிகர்களுக்கு (Business Personals) அவர்களின் தேவைகள் தொடர்பான தகவல்கள் குறைவாகவே இருக்கும். அவ்வாறானவர்களின் வியாபாரவாய்ப்புகளை ஆய்வுசெய்வதற்கும், புதிய வியாபரமொன்றை இங்கு ஆரம்பிப்பிக்க விரும்புபவர்களுக்கு நுகர்வோர்களின் ஊடாட்டங்களை, பரம்பலை ஆய்வுசெய்து பரிந்துரைப்பது, அவ்வவ் வணிகக்கேந்திரங்களை அடைவதற்கான வசதிகளை ஆராய்ந்து களநிலமைகளை அவர்களின் மேலிடத்துக்கு அறிக்கையளிக்கவும், புதிய வியாபார ஒப்பந்தங்கள் செய்வதற்கும் வணிகத்துறையினரும் அவர்களது முகவர்கள் / பிரதிநிதிகள் வருவார்கள். வாடிக்கையாளர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உகந்த உள்ளூர் வணிகமுகவர்களை அறிமுகப்படுத்துவது, அதற்கான சந்திப்புகளை சிலவேளைகளில் விருந்துகளையேற்படுத்துவது அவர்களின் தேவைகளில் ஒத்தாசைகள் புரிவதென்று இக்குழுமங்களின் சேவைகள் விரியும்.
ஒருவர் ஓரிடத்தில் ஒரு காலணிநிலையத்தை / உணவகத்தை அமைக்க விரும்பினால் அதை அமைக்க உத்தேசித்திருக்கும் இடத்தைத்தாண்டி ஒரு நாளைக்கு எத்தனை சிற்றுந்துகள், விசையுந்துகள், மிதியுந்துகள், கடந்து செல்கின்றன, எத்தனை பாதசாரிகள் கடந்து செல்கிறார்கள் என்பதைக்கூட கணிப்பீடு செய்வார்களாம். அதுபோன்றவற்றுக்கும் செக்கிரேறியல் சேர்விஸ்களின் பங்களிப்பு / உதவிகள் தேவைப்படுமாம். அவ்வகை செக்கிரேறியல் குழுமங்களில் பணிபுரிபவர்களுக்கு பன்மொழியறிவும், Management / Bookeeping / Translations / interpretatons போன்றவற்றிலும் விஷயங்களைக் காலவிரயமின்றி முடித்துக்கொடுக்கவல்ல சாதுரியமும் இருக்கவேண்டும் என்
று விபரித்த ஹன்னா, தானும் அப்படியாக Sophitha Consultings & Secretarial Service எனும் குழுமத்தின் பணிபுரிவதாகவும் சொன்னள். சில வியாபார ஒப்பந்தங்கள் வெற்றிகரமானதாக அமையும்போது தங்கள் ஒத்துழைப்புக்கான ஸ்பெஷல் போனஸாக விலைஉயர்ந்த பரிசுகளைக்கூடச் சில வணிகர்கள் தருவார்களாம்.
ஒருமுறை Berlin – Prenzlauerberg இல் பலபிள்ளைகளையும் பங்குதாரர்களையுங்கொண்ட ஒரு ஜூதக்குடும்பத்துக்குச் சொந்தமான, காலிமனையாக இருந்த 4,600 சதுர மீட்டர் காணியை அவர்கள் குடும்பத்தின் ஒவ்வொருவருடனும் தனித்தனி சந்திப்பிணக்கங்களை ஏற்படுத்திப்பேசிச் சம்மதிக்கவைத்து Cuxhaven இன் ஒரு கட்டிட ஒப்பந்தக்குழுமத்துக்கு வாங்கிக்கொடுத்ததற்காக அக்குழுமம் தனிப்பட்டமுறையில் தனக்கு ஒரு இலக்ஷம் ஜெர்மன் மார்க்குகளைப் பரிசளித்ததாகச் சொன்னாள். வேண்டிய இடத்தில் தன்பணியை வெற்றிகரமாகச் சாதிக்க தான் ஒரு தேர்ந்த நடிகையைப்போல நடிக்கவும் வேண்டியுமிருக்குமாம்.
USA (Nevada) இல் Las Vegas போலவும் Brazil இன் San Paulo போலவும் Spain இன் Ibiza போலவும் ஜெர்மனியின் Berlin நகரத்தின் கேளிக்கைகள் மிகுந்த இரவுவாழ்க்கை உலகப்பிரசித்தமானது. பெர்லினுக்கு வியாபார நிமித்தமாக வருபவர்களும் உல்லாசிகளாக இருந்துவிட்டால் அவர்கள் விரும்பும் கிளப்புகள், அருந்தகங்களன்ன, கேளிக்கை ஸ்தலங்களுக்கெல்லாம் அவர்களையும் இட்டுச்செல்ல வேண்டியுமிருக்குமாம்.
ஒருநாள் தமது செக்கிறரேறியல் சேர்விஸில் ஹொட்லைன் போன் அடித்ததாம். ஜெர்மனியின் தென்பகுதியான Baden-Württemberg இன் Stuttgart நகரிலிருந்தொரு புதுவாடிக்கையாளர் பேசினாராம். அவருக்கான வியாபாரம்/ ஒப்பந்தம் எல்லாம் பேசியபிறகு தயங்கித்தயங்கி மெதுவான தொனியில் கேட்டாராம் “டோக்கியோவில், லாவோஸிலெல்லாம் செகிரடரீஸ் கட்டில்வரை ஒத்தாசையாக இருப்பார்கள், உங்க ஸ்டாஃப் எப்படி, அவர்களுடன் நான் செக்ஸ் வைத்துக்கொள்ளமுடியுமா…” என்றாராம். அதெல்லாம் தனிமனிதர் சமாச்சாரம், உங்களிடையேயான ஊடாட்டத்தைப் (interaction) பொறுத்த சாங்கியம், அதில் எல்லாம் குழுமத்தின் நிர்வாகம் தலையிடமுடியுமா” என்றதும் குதூகலத்தில் குதித்துப்போனை வைத்தாராம்.
‘ஜீவன் எதுக்குப்பா கல்யாணாங்கட்டிறான்…அதுதானே நிரந்தரமாய் Mistress ஒருத்தியை (Mistress > Concubine) வைத்திருக்கிறானே’ என்று நட்புக்குழுவுக்குள் சிலர் என் காதுபடப்பேசினார்கள்.
சில நண்பர்களுக்கோ நானும் ஹன்னாவும் காதலிக்கிறோமா, அல்லது ஏன் காதலிக்கவில்லை என்பது அவர்கள் கபாலத்தை உட்பக்கமாகக் குடைந்துகொண்டிருந்தது.
அதற்குள்ளும் இன்னும் நெருக்கமான நண்பர்கள் என்று வாய்த்தவர்கள் என்மீதான கரிசனைமீறி “அடே…நீயொரு கூத்தியோட குடியிருக்கிறியாமே…….. செய்திகள் வருகுது உணமையாடா, உன்னுடைய பெயர் கெட்டுபோகாதா” என்றெல்லாம் அனுதாபத்தைச் சொரிந்ததோடு “உனக்கு யாரும் பெண்தர மாட்டார்கள்” என்றெல்லாம் பயமுறுத்தினர், ஏதோ நான் யார்வீட்டிலோ போய் ‘உங்க பெண்ணைக்கொடுங்க’ என்று முட்டிபோட்டு நிற்பதைப்போல.
இவ்வாறெல்லாம் என் நட்புப்பிஸாசுகள் ஹன்னாவை என் வைப்பாட்டியே என்று குறைமதிப்பீடு செய்வதற்கு அவள் பண்ணும் இந்த விவகாரமான தொழிலும் ஒரு காரணம்.
ஒரு இரவு சுரங்கத்தொடரியில் என் எதிரில் அமர்ந்திருந்த என்னைவிடப் பத்துவயதாவது அதிகமாக இருக்கக்கூடிய பெண்ணொருத்தி என்னிடம் உரிமையெடுத்துக்கொண்டு “மெஸுயூ……… எதுவரை பயணம்” என்றாள்.
’Moritplatz’ என்று நான் இறங்க வேண்டிய தரிப்பைச்சொன்னேன்.
“அப்படியே…அதிலிறங்கி இருவரும் காற்றாட நடந்துபோய் ஒரு அருந்தகத்துக்குப் போவோமா…” என்றாள்.
“அதுவும் அருமையான யோசனைதான்…… அதற்கு நன்றி, ஆனால் அதுக்கான ஆயத்தத்தில் இன்றைக்கு நான் இல்லையே அம்மணி…மன்னிக்கணும்,” என்றேன்.
”மெஸூயூ நிரம்பக்கூச்சப்படறாப்பல…Then what do you do for Sex?” என்றாள் இயல்பாக.
“Never with strangers ” என்று சொல்லத்தான் வந்தது, எதுக்கு அவளை நோகடிப்பானென்று பிரயத்தனப்பட்டு விழுங்கிக்கொண்டேன்,
அருகலாக அமையும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உள்ளூர ‘…ம்ம்ம் எனக்கும் பெண்களால் விரும்பக்கூடிய ஒரு தோற்றம் இருக்கு’ என்பதாக ஒரு ‘கெத்து’ முளைத்துப்பின் தானே உதிர்ந்துவிடும். அன்றைக்கு சுரங்கத்தொடரியிலேற்பட்ட அனுபவத்தை ஹன்னாவிடம் விபரித்தேன்.
“அழகான பெண்ணை அறைக்குள்ள உன் கட்டில்லேயே படுக்கவைச்சிட்டு இரவு முழுவதும் இடைகழியில் மடுப்புக்கட்டிலில் (விருந்தினர்களுக்கான) படுத்துத்தூங்கிய உன்னைப் பார்த்தபின்னதான் உனக்கு ஏதும் நரம்பியல் பிரச்சனை இருக்குமோவென்று முதல்ல யோசித்தன் Entschuldigung (சொறி)…எந்த ‘மெஸையா’வானாலும் அவர்களின் ‘ஈர-இரவுகளில்’ வந்தணைக்கும் மோகினிகளிடமிருந்து தப்பமுடியாது என்கிறது உளவியல். ”
“நான் ஒன்றும் விதிவிலக்கான ‘ஏலியன்’ கிடையாதே…அவ்வப்போ புறவயமாகப் பார்த்து மோகித்த அப்ஸரஸ்கள் வரத்தான் செய்வார்கள் ”
“அப்போ அவர்களை என்ன செய்வே….. மோகிப்பியா போகிப்பியா விரட்டிவிடுவியா…”
“அது கனவுதானே…எதுவும் என் கட்டுப்பாட்டிலிருக்காது, அவை ஒருவனின் ஆள்மனது நெறிப்படுத்தும் நாடகங்கள், நானும் அங்கே ஒரு பார்வையாளனாகத்தான் இருப்பேன். பல பலமாதிரியும் அமையும் மாம்”
“எப்படிமனிதா உன் காமத்தை ஒளித்து வைக்கிறே…மனிதனுக்கு இயல்பாய் இருக்கிற காமத்தை ஒளித்துவைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கு…….. உன் உறுப்புகளிலே ஒன்றும் பிரச்சனையில்லையே.”
“உறுப்புகளுந்தேவைதான் மனுஷனுக்கு. ஆனால் காம இந்திரியங்களே என்னைக் கொண்டுலைக்க என் வழியைத்தீர்மானிக்க அனுமதிப்பதில்லை. அதால அவைதரும் உந்தல்கள், உசுப்பல்கள் இல்லாமலில்லை, ஆனால் எப்படியும் அவற்றை வென்றிடுவேனாக்கும்.”
“உன் தத்துவச்சரடுகளாலே என்னை வறுத்தெடுக்காத…மெஸ்யூ, ஆளைவிடு” என்றுவிட்டு போய்ப் போய்ப்படுத்துக்கொண்டாள். ஹன்னா தன் படுக்கையறையை ஒருபோதும் தாளிடுவதில்லை.
தேனருவி என்று அவளுக்குப்பெயர். நம்மவூர்ப்பெண் ஒருத்தி, சுற்றுவழியில் என் உறவுக்குள்ளும் வருவாள், அப்போது மொஸ்கோவில் படித்துக்கொண்டிருந்தாள். அது அவர்களுக்கு கோடைகால செமஸ்டர் விடுமுறை. விடுமுறை காலங்களில் அநேகமான மொஸ்கோ, பெலாறுஸ், கிறீமியாவில் படிக்கும் மாணவர்கள் லண்டன், மான்செஸ்டர், கிளாஸ்கோவுக்கோபோய் ஏதாவது கியோஸ்க் / பூக்கடைகளில் / பதிப்பகங்களில் / அருந்தகங்களில் உதவியாளராக சில்லறைவேலைகள் செய்து, கொஞ்சம் பணம் சம்பாதிப்பார்கள். அப்படி அவளும் லண்டன் போகிறவழியில்த்தான் இங்கே என்னிடம் 2 நாட்கள் தங்கிச்செல்வதற்காக வந்தாள். என்னிடமிருந்த வவுச்சர் ஒன்றைக்கொண்டு நான்தான் அவளுக்கு லண்டன் சென்று திரும்பிவர தொடரிச்சீட்டும் எடுத்துக்கொடுத்தேன். அவள் லண்டனுக்குப்போக முதநாள் இரவு ஹன்னா நம் எல்லோருக்குமாக Sea Foods அனைத்தும்போட்டுப் ‘பஸ்டா’ சமைத்து அசத்தினாள்.
“ஒருத்தி என்னிடம் வந்திட்டாள் என்பதற்காக அவளிடம் நான் செக்ஸ் வைப்பதா?”
“உன் உள்ளாடை கட்டிலின் கீழ்க்கிடந்ததைப் பார்த்தபோது, சிறு சந்தேகம் வந்தாலும்…. நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லையென்பது எனக்குத்தெரியும்.”
“மற்றவங்க அந்தரங்கத்தை வேவுபாக்கிறதும் இப்போ உன் வேலையா…… காதுகளை என் அறைக்குள் எறிந்துவிட்டுத்தான் கிடந்தாயா?”
“சொறி மெஸ்யூ,…… உன் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்துபார்க்கிற நோக்கம் எதுவும் எனக்கில்லை….. பக்கத்து அறைக்குள் செக்ஸ் நடந்தால் குறைந்தபக்ஷம் பூனைகளின் அனுங்கல்போல ஹஸ்கியாய்க் கொஞ்சம் கீச்சுக்கள், சிணுங்கல்களாவது வந்திருந்திருக்குமே, அப்படி ஒன்றும் வராததுதான் அதிசயமாயிருந்திச்சு.”
“Oh…Hallelujah. தூங்கும்போது நான் ஒருபோதும் உள்ளாடை அணிவதில்லை, உடல் உஷ்ணம் அதற்குள் எகிறி இரவை ஈரமாக்கிவிடும், அசௌகரியம். எப்போதும் அதைக்களைந்து தூரவீசிவிட்டுத்தான் தூங்குவேனாக்கும்.”
“ஏன் கிடைக்கிற பெண்களோடகூட செக்ஸ் வைச்சுக்கிறேல்லயென்று ஏதேனும் விரதமா…நீ இறையியல்படிச்சு ஏதாவதொரு மிஷன்ல போய்ச்சேர்ந்திருக்கலாம், விரைவில பிஷொப்பாகியிருப்பாய்.”
“ம்ம்ம்ம்….. செய்திருக்கலாம், தோணலையே…”
“இப்போதும் லேட் ஆகல்ல.”
“ம்ம்ம்…….. சிந்திக்கிறேன். இந்தியப்பெண்கள் புவிக்கோளத்தின் எந்தப்பரப்பில் வாழ்ந்தாலும் ஒருத்தன் அவள்மேல் தன் புலனின்பவேட்கையை (காமத்தை)க்காட்ட அனுமதிப்பாளாயின் அவள் அவனைத் தன் மனதில் புருஷனாகவே வரித்துக்கொண்டுவிடுவாள். ஒரு கூரைக்காக என்னைத்தேடி வருபவள் எனக்கான வெகுமதியல்ல. அவகுக்கேயான ஒரு தேகமும், இதயமும், உயிரும், சுயமுமுள்ள தனியன். 28 வயதுக் கிடாயன் நான் காமம் நிறைந்திருக்கேன் என்பதற்காக ஒரு இரவு ஒதுங்குவதற்காக வந்தவளிடம் என் காமத்தைவிழைவது அபத்தம், அவமானம்.”
“Es ist Komish ” (It’s Funny)
“தேனருவி எனக்கானவளல்ல என்று தெரிந்தபோதும், நான் அவளை என் இச்சைக்கு வற்புறுத்தியிருந்தால் அது வல்லுறவு, ஒருவேளை நான் அவளை வல்லுறவு செய்திருந்தால் என்ன நீ செய்திருப்பே……..”
“அதுக்கு அனுமதித்திருக்கமாட்டேன், 110 ஐ அழைத்திருப்பேன்….. ஆனால் உன்னால அதெல்லாம் முடியாதென்பதும் எனக்குத்தெரியும்.” என்றாள் இளக்காரமாகச் சிரித்தபடி
“திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான விடயமல்லவா?”
“அவரவருக்கு இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவருக்கும் என்பது பொருத்தமாக இல்லை.”
“உன்னிடம் ஈடுபாடுகொண்டுள்ள ஒருபெண் இதைக்கேட்டிருந்தாலும் உனது பதில் இதுதானா?”
“நான் வித்தியாசமான பதிலைச்சொல்லியிருக்கக்கூடிய பெண்கள் எவரையும் இதுவரையில் சந்திக்கலையே.”
“நிஜத்தைச்சொல்லு நீ எவள்மீதாவது எப்போதாவது காதல்வசப்பட்டிருக்கியா”
“சும்மா கொஞ்சம் அவ்வப்போ ஆசைப்பட்டிருக்கேன், அதைத்தான் காதல் என்று தீர்மானித்து ஒருபோதும் ஏமாந்ததில்லை.”
“நான் காதலிக்கக்கூடியமாதிரிப்பெண் எவளையும் நான் இதுவரை சந்திக்கேல்லை….. அதேபோல் நான் சந்தித்த எவளுக்கும் நான் காதலிக்க லாயக்கற்றவனாகவும் பட்டிருக்கலாமில்லையா…”
“பெண்ணொருத்தியின் அணுக்கத்தில் அவளது வாசனைக்குள் இருக்கும்போது அடிமனதில் விவரிக்கமுடியாத அற்புதங்கள் நிகழ ஆரம்பித்துவிடும், அவள் வாசத்தோட படுத்தாலே போதுமென்று எத்தனையோ ஆண்கள் தம் தவிப்பை ஏக்கத்தை எனக்குச் சொல்லியிருக்கிறார்கள், அப்படியொன்றும் உனக்கு ஆவதில்லையா………. ராத்திரிகளில, குளிரில, தனிமையிலகூட உனக்கு ஒரு பெண்கூட இருந்தால் நல்லாயிருக்குமேயென்று தோணாதா……… உன் வாசனைகூட என்னை அவ்வப்போ லேசாக அருட்டும் தெரியுமோ………”
“அருட்டும்னு…”
“கிளர்த்துறது…”
“நீ தசை ஆசையைச் சொல்றியா…”
“அது தசையை உரசிறது கவ்வுறது கடிக்கவிடுறது மட்டுமில்லே, அதுக்கு மேலயுமிருக்கு, சரி இப்போதைக்கான அர்த்தப்படுத்தல்ல ‘தசைஆசை’ன்னே வைப்போம்.”
“சராசரி ஆண்கள் வாய்ப்புக்கிடைத்தவுடன் இனப்பெருக்கத்துக்கு, முயங்கலுக்குத் தயாராகிவிடுவார்கள்…… அதெல்லாம் இங்கேயும் தாராளமாகவே உண்டு. இல்லேன்னே…… அது படைப்புத் தவறென்றாகிடும்.”
“அப்போ உன்வாழ்வில் காதல், திருமணம் இவற்றையெல்லாம் எவ்விடத்தில் வைத்திருக்கே”
“உனக்கு எங்களுடைய சமூகம்பற்றிக் குறைவாகத்தான் தெரியும், அங்கே ஒருவன் காதலித்து அதைக்கல்யாணம் வரையில் நகர்த்தி வருவதற்கிடையில் பல தடைகளைத்தாண்டி வரவேண்டும். புரியற மாதிரி மேலோட்டமாய்ச் சொல்றேன், கஷ்டமாயிருந்தால் வேறொரு சமயத்தில வைச்சுக்கலாம்”
“மேலோட்டமாய்த்தான் கொஞ்சம் சொல்லேன், புரிய முயற்சிக்கறேன்.”
“முதல்ல…அங்கே ஜாதியென்று ஒரு பூதமிருக்கு, அதையடுத்து சமூகநிலை, உன் பாஷையில ’வர்க்கம்’ எளிமையா சோஷியல் ஸ்டேடஸ் என்று இப்போதைக்கு வைச்சுப்போம், அழகு கவர்ச்சி கம்பீரம் தாண்டி முன் சொன்னதையெல்லாம் கணித்துத்தான் ஒரு பெண் காதலிக்கவே சம்மதிப்பா, உடன்படுவா. ஒரு பெண்ணோடு Dating செய்த காலத்தில் என் அறைவரைக்கும் சம்மதித்து வந்தாள். அறையில் அவளது இசை ஈடுபாட்டை அறியவேண்டி எனக்குப் பிரியமான ஹிந்துஸ்தானி இசைத்தட்டொன்றை ஓடவிட்டபோது ‘இதை இன்னும் இரண்டு நிமிடங்கள் ஓடவிட்டாயானால் ஜன்னலைத்திறந்து வெளியே குதிப்பேன்’ என்றாள்.”
“சிலர் காதலிப்பதில் காதலிக்கப்படுவதில் சந்தோஷம் கிடைக்கிறது என்கிறார்கள். சிலருக்கு அது ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டாகவும் சமயத்தில் கால்க்கட்டாகவும் படுகிறது
20 வயதில உதைபந்தைத்தூக்கிக்கொண்டு ஓடறவன் 60 வயதிலயும் அப்படியே ஓடிடமுடியுமா…எல்லாம் ஒரு சீசனுக்கேற்ற விளையாட்டுக்கள்போலத்தான் காதலும்.
உடம்பு ஓயும் கட்டத்தில் இருக்கையில “அட இது துடிப்பின் உச்சத்தில் இருக்கும்போதே இதைவைச்சு இன்னுங்கொஞ்சம் விளையாடியிருக்கலாமே சுகிச்சிருக்கலாமே” என்கிற எண்ணம் வருமாம்.”
“நீ சமபால்விரும்பியல்ல…. ஒரு உலோகாயதவாதியுமில்லை என்று தெரியுது, ஆனால் அப்பப்ப ஒரு துறவிமாதிரிப்பேசற, யாருக்காகவோ ஒரு சாதுவின் வாழ்வை வாழுற ஒரு பாவனை உங்கிட்ட இருக்கு…யாருக்கோ அதிர்ச்சி அல்லது வியப்பு மதிப்பீட்டைத் தரவேண்டுமென்று வாழுறமாதிரியும்படுது. உனது தமிழ்ச்சமூகம் மூடுண்டது, கட்டுப்பாடுகள், ஜாதிகளன்ன வரையறைகள் மிகுந்தது என்றெல்லாம் அப்பப்போ பூச்சாண்டியும் காட்டுறே…ஆனால் அவை எதையும் கட்டுடைத்து வெளியேறும் தற்றுணிபில்லாத ‘கோழை’யாகத்தான் நீயும் தெரிகிறாய் ஒரு ‘இடியட்’ டாக இல்லையே. (சமூக Norms) பொதுநிகரநிலைகளை விடுத்துவிலகி நடக்கக்கூடிய கிளர்சிக்காரனாகவும் இல்லை. அப்போ நீ எந்த உயிரினத்தில் சேர்த்தி…” என்றாள்.
“நான் வாழ்க்கையை நேசிக்கிறேன்… ஹன்னா.” அப்படித்தான் எனக்குச்சொல்ல வந்தது.
“நீ சொல்றபடி ஒருவனால 20 வயதிலதான் உதைபந்தைத்தூக்கிக்கொண்டு ஓடலாம், நீ அதீதமாகக் கற்பனை செய்யும் வாழ்க்கையும், பிடிபடாமலே கனவாகக் கடந்துபோய்விடும். ஒரு ஓவியத்தைச் சிலகணங்கள் ரசிக்கலாமே தவிர அதன் பயன்பாட்டுக்கும் எல்லைகள் அமைந்திருக்கு, நீ புனிதமென நம்பும் இந்திரியங்களும் நெறிகளுங்கூட அப்படித்தான், பயன்படுத்தாத எதுவும் ஒருநாள் வீணாகிவிடும். ஒழுக்கம் சார்ந்த உன்னுடைய தத்துவத்தின் அலைவரிசை எனக்கு டியூன் ஆகுதில்லை மெஸ்யூ………”
ஹன்னா உணர்ச்சிவசப்படும்போது அவளது லேசான மாறுகண்கள் (நடிகைகளில் அமலா போல், ரஞ்ஜினிக்கு இருப்பதைப்போல்) துலக்கமாகப் புலப்படும். இப்போதும் அவை அழகாகப்புலப்பட்டன. திடுப்பென இருக்கையைவிட்டு எழுந்தவள் வேண்டுமென்றே மார்புகளை முன்தள்ளி, பிட்டத்தைப் பின்தள்ளி உடம்பைப்பக்கவாட்டில் எஸ்ஸாய் வளைத்து ‘அலாதகம்’ போலொரு சிருங்காரக்கரணம் (செக்ஸிபோஸ்) தந்துவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தாள்.
“வாழ்க்கை முழுவதும் மறந்துபோகாதபடி அத்தனை பிணக்குகளையும் பிரச்சனைகளையும் அவளாகத் தந்துகொண்டிருப்பாள், கவனம்” என்று தத்துவக்கவிஞர் ஷினிசி சூஸூகியின் வரிகள் நினைவில் வந்தன.
நான் போய்த்தூங்கிவிட்டேன். என் அறைக்குள் ஹன்னாவுக்குப் பிரீதியான Black Opium Perfume வாசனாதியின் வாசம் வந்தது, “உனக்கான பெண் நானில்லையென்று நினைக்கிறாய். ராஸ்கல்” என்று அவள் சொல்வதும் கேட்டது. பின் கட்டிலின் விளிம்பில் யாரோ அமர்வதைப்போலொரு மென்னதிர்வலை படர்வதான உணர்வு. திடுக்கிட்டெழுந்து பார்த்தேன், அப்படி எவரது சலனத்தையும் காணேன், அனைத்தும் வெறும் பிரமை.
அதிகாலையில் எனக்கும் ஒரு நெஸ்காஃபேயை நீட்டியபடி கேட்டாள்:
“பொன்ஜோர், மெஸ்யூ…. இந்த மே 06ந்தேதி உனக்குப் பணியில விடுப்பு எடுக்க முடியுமா…?”
“அடடா…உனக்கில்லாத விடுப்பா. அன்று என்ன விஷேசமோ…”
“அன்று எனக்கும் லியோனுக்கும் பதிவுத்திருமணம், என்பக்கக் கல்யாண சாட்சி நீதான். “
ஹன்னா எதற்கும் பொய்பேசமாட்டாள், இருந்தும் நான் லியோனை யாரென்று உசாவவில்லை, அன்று ஹன்னாவை வீட்டின் பக்கக்கதவால் அணைத்தபடி டிராமில் கூட்டிச் சென்றவனாகவோ, இல்லை வேறொருவனாகவோ இருக்கலாம்.
– அம்ருதா ஆகஸ்ட் 2022.