கோபம் கோபமாக வந்த்து கோபாலுக்கு, காலையில் எழுந்து காலைக்கடன் கழிக்க வேண்டும் என்றாலும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும், அதன் பின் குளிக்க வேண்டுமென்றால் பக்கத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து குளிக்க வேண்டும், இதற்கு இடையில் தானே சமைத்து சாப்பிட்டு மதியத்துக்கும் எடுத்து செல்ல வேண்டும். ஒரே ஒரு அனுகூலம் மட்டுமே உண்டு அதாவது அவன் பணிக்கு செல்லும் பள்ளி பக்கத்திலேயே இருந்தது.பத்து நிமிடத்தில் சென்றுவிடலாம்.
என்ன பிரயோசனம்?என்னை பழி வாங்கவே இந்த ஊர் பள்ளிக்கு மாற்றலாக்கி உள்ளார்கள் என்று நினைத்தான் கோபால்.
கோபால் நகரத்தில் வளர்ந்து படித்து ஆசிரியர் பயிற்சி முடித்து பக்கத்திலுள்ள ஊரில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துவிட்டான்.
அதன் பின் அவனுக்கு வந்த மாற்றல்கள் தொடர்ந்து நகர்ப்புறத்திலேயே இருந்ததால் இந்த பத்து வருடங்களாக பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்பொழுது திடீரென்று இந்த குக்கிராமத்துக்கு மாற்றலாகி வந்தது அவனுக்கு மிகப்பெரிய அசெளகரியமாகிவிட்டது.சொந்த ஊரிலேயே வீடு உள்ளதால் அங்கேயே குடும்பத்தை வைத்துவிட்டு இவன் மட்டும் இங்கு வந்துவிட்டான். இத்தனை நாட்களாக இது ஒரு பிரச்சனையாக இவனுக்கு இருந்ததில்லை. காரணம் இவன் சென்ற இடமெல்லாம் ஓரளவு வசதியுடனே வீடு கிடைத்து கடைகளும் அருகில் இருந்ததால் அடிப்படை தேவைகளுக்கு கவலைப்பட்டதே இல்லை.இந்த முறை இவன் வந்து சேர்ந்த ஊர் ஒரு குக் கிராமம். இங்கிருந்து டவுனுக்கு போக வேண்டுமென்றாலும் இருபது கிலோ மீட்டர் செல்ல வேண்டும். நாளொன்றுக்கு மூன்று முறை மட்டுமே பேருந்து அங்கு வந்து செல்லும்.அந்த ஊருக்கு ஒரே ஒரு டீக்கடையும் ஒரு மளிகை கடை மட்டுமே உண்டு.இவன் சமைப்பதற்கு பொருட்கள் கூட ஊரிலிருந்தே அவன் மனைவி கட்டிக்கொடுத்து விடுவாள்.அதை வைத்து மாதம் முழுதும் ஓட்டுவான்.
அது இரு ஆசிரியர் பள்ளி.இன்னொருவர் பெண் ஆசிரியர். அவர் பக்கத்து கிராமத்திலிருந்து வருவதால் அவருக்கு இது செளகர்யமாகத்தான் இருந்தது.இவனுக்குத்தான் முள் மேல் இருப்பது போல் இருந்தது. மாற்றலுக்கு முயற்சித்து பார்த்தான். அதிக தொகை செலவாகும்போல் இருந்த்தால் சத்தமில்லாமல் இருந்து விட்டான்.
கோபால் மாணவர்களிடம் சொல்லிவிட்டான், நாளை எல்லோரும் குளித்து சுத்தமாக யூனிபார்ம் போட்டு வரவேண்டும். நாளை காலை கல்வி அதிகாரி வர்றாரு, என்றவனுக்கு மாணவர்கள் தலையை மட்டும் ஆட்டினர்.
ஐந்தாவது வரை உள்ள பள்ளி அது. இவர்கள் இரு ஆசிரியர் போக சத்துணவுக்கு ஒரு ஆசிரியர்,மற்றும் சமைக்க ஒரு ஆயா இருந்தனர். அனைவா¢டமும் எல்லாம் சரியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான்.
மறு நாள் வழக்கமான சோதனைகள் எல்லாம் முடிந்து கொஞ்சம் ஆசுவாசமான பின் இவனைப்பற்றி விசாரித்தார் கல்வி அலுவலர். இவனுக்கு இது போதாதா? ஆதியில் இருந்து பட்ட கஷ்டங்களை எல்லாம் அவரிடம் புலம்பி தீர்த்துவிட்டான். எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அலுவலர், இந்த பள்ளியோட கழிவறை எங்கிருக்கு? கழிவறையா? இவன் ஒரு பெரிய சுவர் மட்டும் மறைத்த ஒரு இடத்தை கூட்டிச்சென்று காட்டினான்.அதை பார்த்த அதிகாரி எதுவும் பேசாமல் யோசனையாக மீண்டும் அலுவல் அறைக்கு வந்தார். இவரின் வருத்தமான முகத்தை பார்த்த கோபாலுக்கு ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து மெல்ல கனைத்தவர்”கோபால்” உங்களுக்கு இன்னும் எத்தனை வருசம் சர்வீஸ் இருக்கு என்று கேட்டவரிடம் எதுவும் புரியாமல் இன்னும் இருபத்தி ஐந்து வருசம் இருக்கு சார் என்றான்.உங்களுக்கு இளமை இருக்கு, இன்னும் ஏராளமான வருசம் சர்வீஸ் இருக்கு, ஆனா இப்படியே உங்க சர்வீசை முடிச்சுட்டு போயிடலாமுன்னு நினைக்கிறீங்களா? இவன் எதுவும் புரியாமல் அவரை பார்த்தான்.கோபால் உங்களை மாதிரி இளைஞர்களை அரசாங்கம் இந்த மாதிரி இடங்களுக்கு மாற்றலாக்கிவிடுதுன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு, உங்களை மாதிரி இளைஞர்கள் இந்த மாதிரி கிராம பள்ளிக்கூடங்களுக்கு போகும்போது அங்கு அவங்களால முடிஞ்ச வரைக்கும் வசதிகளை அந்த பள்ளிக்கு செஞ்சு கொடுப்பாங்க, மாணவர்களை கட்டுக்கோப்பா கொண்டு வர்றதுக்கு முயற்சி எடுப்பாங்க. அது மட்டுமில்லாம அந்த ஊருக்கும் அவங்களால ஒரு நல்லது நடக்கும் அப்படீங்கற ஒரு எண்ணத்துலதான் செய்யுது.
இதுனால ஒரு ஆசிரியனுக்கு ஏராளமான அனுபவங்களும் கிடைக்குது.அதனாலதான் அந்தக்காலத்துல ஊருல எது நடந்தாலும் வாத்தியாருக்கு தெரியாம இருக்ககூடாது அப்படீன்னு வச்சிருந்தாங்க. அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா? மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது கோபாலுக்கு. வந்த நான்கு மாதத்திலேயே தன்னுடைய அடிப்படை வசதிகளுக்கு ஏற்பட்ட துனபங்களை தன்னால் பொறுக்க முடியாத போது இந்த ஏழை கிராம மக்கள் அதுவும் பெண்கள் இத்தனை காலமாக இந்த கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். நாம் இந்த பள்ளியில் இருக்கும் வரை முதலில் பள்ளிக்கு, அடுத்து இந்த ஊருக்கு நல்ல கழிப்பறை கட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கத்தை மட்டும் நம்பாமல் ஊர் மக்கள் அனைவரையும் கலந்து இந்த வேலைகளை செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான்.