கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 3,277 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

காட்டிற்குக் காடாகவும், மலைக்கு மலையாகவும் தோன்றிய காட்டு மலை அல்லது மலைக்காடு. கர்நாடக மாநிலத்தில் மலெநாடு என்று அழைக்கப்படும் வளம் கொழிக்கும் தபோவனம் போன்ற நிசப்தப் பகுதி. நாட்டியப் பெண்கள்போல், பாக்கு மரங்களும், நட்டுவாங்கனார்போல் தென்னை மரங்களும் இடைவெளி கொடுக்காமல் இணைந்து நிற்க-முக்காடு போட்ட பெண்கள்போல், தென்னை ஒலைகளால் மூடப்பட்ட தென்னங்கன்றுகள், தாவர மான்போல் தாளலயத்தோடு நிற்க, இயற்கைச் சிற்பி, தன் மேலான படைப்பாற்றலில் பூரித்துப் போனது போன்ற விதவிதமான மரங்களாலும் செடிகளாலும் வியாபிக்கப்பட்ட ஊர் –

நாற்பது நாற்பத்தைந்து கல் கட்டிட வீடுகள் – ப வடிவத்தில் அமைக்கப்பட்டு, ஒரே தொடர்ச்சியாக வியாபித்திருந்த மேளா கட்டு. கட்டிட முற்றத்தின் மையத்தில், மிகப் பெரிய அடுப்பு: அதன்மேல் ஒரு குண்டாப்பானை சவாரி செய்து கொண்டிருந்தது. மல்லிகார்ஜுன சுவாமிக்கு விழா நெருங்குவதால், இங்குள்ள ‘குருவி ஜாதி மலை மக்கள் கூட்டாஞ்சோறுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள் அத்தனை பேரும் விழா மயக்கத்தில் இருப்பதுபோல், புதுத்துணி வாங்குவது பற்றியும், கூட்டாக முயல் வேட்டைக்குப் போவது பற்றியும் பேசிக் கொண்டிருந்த காலை நேரத்தில் –

அந்த மேளாக் கட்டில், தென் மேற்கு மூலை வீட்டில் இருந்த பெல்லிபாய்க்கு, ஒரு கவலை. நேற்று மாலையில் இருந்து, இந்தக் காலை வரைக்கும் யோசிக்கிறாள் யோசிக்கிறாள், அப்படி யோசிக்கிறாள். ஆனாலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. வீணை மாதிரியான மரப்பெட்டிமேல் கிடந்த அந்தப் புடவையையும், ஜாக்கெட்டையும் எடுக்கிறாள். இடுப்பில் கற்றப் போகிறாள். பிறகு கற்றப்போனதை தலையைச் சுற்றிக் கீழே போடுகிறாள். தாழை மட்டையில் செய்யப்பட்ட தொப்பியை, தலையில் இருந்து எடுக்கிறாள். பிறகு தலையையே எடுத்ததுபோல் துடிக்கிறாள். மார்புக்கு மேல் ஒன்றுமில்லாத நிர்வாணப் பகுதிக்கு நிவாரணமாக, ஜாக்கெட்டிை எடுக்கிறாள். அதைப் போட்டே ஆகவேண்டும் என்பதுபோல், கழுத்தில் மார்பகங்களை மறைத்துக் கிடக்கும் பச்சைப் பாசி, நீலப்பாசி முதலிய பாசி மணிகளைக் கழற்றுகிறாள். பின் தலையை மறைக்கும் செம்பருத்திப் பூக்களை எடுக்கிறாள். பிறகு, தலைக்குள் நுழையப்போன ஜாக்கெட்டை வீசியடிக்கிறாள். வீசிப்போட்ட பாசி மணிகளைக் கழுத்திற்கு, சுருக்குகளாக்கிக் கொள்கிறாள்.

மரப் பெட்டியில் கலைந்து கிடந்த புடவையையும், இரண்டு கைப் பகுதிகளும் கருட்டி நிற்கக் கையில்லாத பொம்மைபோல் கிடந்த ஜாக்கெட்டையும் பார்க்கப் பார்க்க, அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. திட்டுப் பகுதியில் வாயில் கொசு மொய்க்கத் துரங்கும் ஒரு வயதுப் பயல் மேல் அந்தப் புடவையை எடுத்து மூடப் போனாள்.

அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஒரு முடிவுக்கு வரும்படி சொன்ன சிக்கையா மேல், மனதுக்குள் சிறுகிறாள். அவன், நேற்று மெல்லச் சொன்ன வார்த்தைகள், காதுகளில் இப்போதோ துள்ளத் துடிக்கக் கேட்கின்றன.

“பெல்லிபாய், இந்தக் காட்டுப் பகுதியில் சர்க்கார் பள்ளிக்கூடம் கட்டுறதுக்கு, ஆட்களோட ஆட்களா வந்த என் கூட, மூணு மாசமாய்ப் பேசறே. என்னைப் பற்றிப் புரிஞ்சிட்டிருப்பே. நாம ஒருவரை ஒருவர் தொட்டதில்லே. கெட்டதில்லே. ஆனாலும் ஒருத்தர் மேல் ஒருத்தர் ஆசைப் படாமலும் இல்லை. நாளையோட கட்டிட வேலை முடியுது. நாளை சாயங்காலமாக எல்லோரும் போகப் போறோம். நீயும் வர்ரதாக இருந்தால் என் கூட வா. காலமெல்லாம் உன்னை ராசாத்தி மாதிரி காப்பாத்துறேன். ஹேமாவதி அணைக்கட்டு இருக்கிற கோளுர்ல எனக்கு வேலை கிடைச்சிருக்கு ரெண்டு பேரும் அங்கே போயிடலாம். என்ன சொல்றே சரி, உடனே ஒன்னால சொல்ல முடியாது. இதோ புடவை, இதோ ஜாக்கெட் உனக்கு என்கட வரச் சம்மதமுன்னா, நாளைக் காலையிலேயே, எங்க கெனடா பொண்ணுங்க மாதிரி, ஒங்க ருக்மணிபாய் மாதிரி, கொசுவம் வச்சுப் புடவை கட்டி ஜாக்கெட் போட்டு வா. அப்படி வந்தால் ஒனக்கு, என்கட வாழ இஷ்டமுன்னு அர்த்தம். இல்லைன்னா, மூகாம்பிகா விட்ட வழின்னு எடுத்துக்கிறேன். சரி, இப்போ உன் வீட்டுக்கு புறப்படு.”

அப்போது அருகில் நின்றாலும் தொலைவில் நின்று பேசுவதுபோல் தென்பட்ட சிக்கய்யா, இப்போது அவள் அருகே நிற்பதுபோல் தோன்றினான். ‘என்னோட வா. வா என்று பல்லவி பாடினான். பிறகு, பெல்லி, கல்யாணமான ஆறு மாதத்திலேயே உன் வீட்டுக்காரன் குடிச்சுக் குடிச்சு இறந்துட்டான்னு சொல்றே. அப்புறம் உன் பெரிய மச்சான், சின்ன மச்சான், அவன்க சம்சாரங்கள், பிள்ளைக் குட்டிகளோட கூட்டாய் வாழ்ந்துவாரே… ஒன் புருசன் நிலமும் அவங்க பராமரிப்பிலேயே இருக்குதுன்னு சொன்னே. ஆனாலும், ஒன் மச்சான் பெண்டாட்டிங்க ஒனக்கு சரியா சோறு போடல. ஒன் பச்சைக் குழந்தை பாலில்லாம சாகுற நிலைக்குப் போயிட்டுது. மேளாவுல சொன்னேன். எவனாவது தட்டிக் கேட்டானா? என் சொத்தைப் பிரிச்சுக் கொடுக்கச் சொல்லுங்கன்னு சொன்னப்போ, மேளா எஜமானன் என்னா சொன்னான்னே. ‘ஒழுங்கா, கொடுக்கிறதை தின்னுட்டு இரு இல்லன்னா…’ என்று மிரட்டுற இப்படிப்பட்ட இவங்களோட நீ எதுக்காக சாகாமச் சாசுனும் இந்த இருபத்திரண்டு வயகல, கிராமத்துப் பெண்கள்கூட ரெண்டாம் கல்யாணம் செய்துக்கிற இந்தக் காலத்திலே, நீ எதுக்காக வாடி வதங்கனும் மேனாக் கட்டத்துல தனியாய் தவித்து வாழ்ந்த நீ என்னோட என் கூட்டாய் வாழப்பிடாது? இப்பவே சொல்ல வேண்டாம். நாளைக்குச் சொல்லு. இந்தப் புடவை மூலம் சொல்லாமல் சொல்லு: ஜாக்கெட் மூலம் பேசாமல் பேசு.”

டெல்லிபாய், வீரியப்பட்டாள்.கதவைச் சாத்திக் கொண்டாள். மார்பு வரை கட்டியிருந்த மலைஜாதிப் புடவையை வீசியடித்தாள். சிக்கையாவின் புடவையை இடுப்பில் சுற்றினாள். அவனே புடவையைக் கட்டிவிடுவதுபோல் ஒரு பிரமை, பாசி மாலைகளை வீசியெறிந்துவிட்டு, ஜாக்கெட்டை எடுத்தாள். தலை தட்டியது. இ. தொப்பியா. தாழை மட்டைத் தொப்பியை எடுத்து, மூன்று தடவை தலையைச் சுற்றி வட்டமடித்துத் துரக்கி எறிந்தாள். ஜாக்கெட்டைப் போட்டாள். சரியாய் இருக்கே நல்லாத்தான் அளவு எடுத்திருக்கான்!

பெல்லிபாய், புதிதாய்ப் பெண்ணுருவம் கொண்டவள்போல் மின்னினாள். உடம்பில் பட்ட ஆடைபோல், மனதுக்கு உறுதி உடையாகியது. கைக் கண்ணாடியை எடுத்து, அதை உடம்பில் பல்வேறு இடங்களுக்கு எதிராகக் காட்டிப் பிடித்தாள். சற்று முன்புவரை, மார்புக்கு மேல் ஒன்றுமில்லாமல் இருந்தவள். இப்போது லேசாய் தெரிந்த வயிற்றை புடவையால் மறைத்தாள். இறுகப் பற்றிய ஜாக்கெட், அவளுள் ஒரு கிளுகிளுப்பையும், மார்பை மறைத்த முந்தானை ஒரு மதமதப்பையும் கொடுத்திருக்க வேண்டும்.

திண்ணையில் ஈச்சம் பாயில் தூங்கும் மகனை,.கண்ணால் ரசித்தபடியே, மேளா முற்றத்துக்கு வந்தாள். திருவலில்’ கேழ்வரகைமாவாக்கிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்தாள். தாழை மட்டைத் தொப்பியில் புத்த பிட்சுகள் மாதிரி தெரிந்த கிழவிகளைக் கண்ணால் ஒரம் காட்டினாள். மேளா எஜமானரு பாபன் நாயக்கனைப் பார்த்தாள். என்னடி புதுமாதிரியான புடவை என்று ஒருத்தனாவது, ஒருத்தியாவது கேட்கட்டுமே? இல்லன்னா திட்டவாவது செய்யட்டுமே. எல்லோருமே அவள் அங்கே இல்லாததுபோல் ‘பாவலா செய்தார்கள். கூலி வாங்கிட்டு வாரேன்’ என்று பொதுப்படையாய் வலியச் சொன்னாள். ஒருத்தராவது அவளைத் திரும்பிப் பார்க்கட்டுமே?

பெல்லிபாய், அலட்சியப்படுத்துபவர்களை லட்சியம் செய்தபடியே மெல்ல நடந்தாள். பூசி முடித்த பள்ளிக் கட்டிடத்தின் படிக்கட்டில் சாய்ந்தபடி கிடந்த சிக்கையாவைப் பார்த்துவிட்டாள். மேனாக்கட்டோ அங்கே பார்த்த முகங்களின் பாரா முகமோ அவள் மனத்தில் இருந்து தூள் தூளாயின. ஒட்டமும் நடையுமாய்ப் பாய்ந்து, சிக்கையாவின் முன்னால் நானத்தோடு நின்றாள். அவனோ, வாயும் ஒரு கண்ணாவதுபோல், அகலமாக அவளைப் பார்த்தான். பாக்கு மரத்தின் பாளை நிறத்தில் – காட்டுக் கற்றாழையின் ஒற்றைச் சூலம் போன்ற கம்பீரத்தில், அசல் கெளடா பெண்ணாய் மாறிய அந்த மலைமகளை, அவன் மலைத்துப் பார்த்தான். அவள் மேனியை மானசீகமாகக் கலைத்துப் பார்த்தான். பிறகு, தன்னம்பிக்கையோடு சொன்னான்.

“நீ வருவேன்னு தெரியும். என்னோடு வாழ்வேன்னு புரியும்”.

“எனக்குப் பயமாய் இருக்குதுய்யா. துக்கம் வருது”.

“இன்றைய துக்கம் நாளைய சந்தோஷம்”.

“அப்புறம் இந்தச் சிக்க சம்சாரா சொக்க சமசாரா விஷயம்”.

“என்ன சொல்றே?”

“என்னால உனக்குப் பிரயோஜனம் இருக்காதுன்னு சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருய்யா. குழந்தை பிறந்தவுடனேயே, மேளா ஆட்கள் எனக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்துட்டாங்க. அதனால எனக்கு”.

“அடி பைத்தியம்! நீ அந்த விஷயத்தை சொன்ன பிறகுதான், உன்னைக் கல்யாணம் செய்துக்கிறதுன்னே முடிவுக்கு வந்தேன். ஏற்கனவே நமக்குத்தான் ஒரு குழந்தை இருக்கே, பயல் இன்னும் ஈச்சம் பாயிலிருந்து எழுந்திரிக்கலியா? அவனை ஒரு அப்பன் வீட்டுக்குக் கூட்டிப் போறது மாதிரி கூட்டிவா. சரி. இனிமேல் பேச வேண்டிய விவகாரங்களை அப்புறமாய்ப் பேசிக்கலாம். காண்டிராக்டரோட லாரி, சாயங்காலத்துக்குப் பதிலா இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே வரப் போகுது. நீ மேளாவுக்குப் போய்க் குழந்தையை உன் அப்பா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறது மாதிரி கூட்டிட்டு வந்துடு, நீ வருகிற விஷயம் எங்க ஆட்களுக்கும் தெரியும். அதனால பிரச்சினை இருக்காது. உம், புறப்படு”.

பெல்லிபாய், அவனைப் பார்த்துப் பார்த்து கால்களை நகர்த்தினாள். முகம் பூரித்துப் போய் கண்கள் மின்னின. கூடவே குறும்புச் சிரிப்பு. அவனை நாணத்தோடு, ஏறிட்டு நோக்கி, நளினத்தோடு நடை போட்டாள். கடந்த காலத்திலேயே வாழ்ந்தவள், அதைக் கடப்பதுபோல், கிழக்குப் பாறை மேட்டில் இருந்து, இன்னொரு பாறை மேட்டிற்குத் தாவி நடந்தாள். ரோஜாப்பூக்களைத் தடவி விட்டபடி, வாழைக் குலைகளை வருடியபடி, ஆலம் விழுதுகளை ஆட்டியபடியே நடந்து மேளா சுற்றத்திற்கு வந்தவள், தன் வீட்டிற்குள் சுகபோக நினைவுப் போதையுடன் திரும்பப் போனபோது –

“ஏய், பெல்லிபாய். இங்கே வா.”

மேளா எஜமானரு பாபன் நாய்க்கரும், இன்னும் நாலைந்து கிழடு கட்டைகளும் பாறை மேட்டில் உட்கார்ந்திருக்க, கேட்டம் பொதுக் கூட்டம்போல் கீழே வியாபித்திருந்தது. பெல்லிபாய், சத்தம் கேட்டுத் தடுமாறியபோது, இரண்டு பெண்கள், அவளை வலுக்கட்டாயமாக இழுத்து, மேளாத் தலைவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். திடீரென்று அம்மா என்ற அலறல் சத்தம் – பிள்ளைச் சத்தம். பெல்லி ஆவலோடு திரும்பியபோது, அவள் மகன், மச்சான் பெண்டாட்டியின் கைச் சிறைக்குள் துடித்துக் கொண்டிருந்தான்.

மேளா எஜமானரு பாபன் நாய்க்கன், அதட்டலோடு பேசினார்.

“பெல்லிபாய், நீ எதுக்காகப் புடவை கட்டுனே, எதுக்காக அங்கே போயிட்டு இங்கே வரேன்னு எல்லோருக்கும் தெரியும். நீ அந்தக் கல்வெட்டுக்காரனோட பேசற பேச்சும், குழையுற குழையலும் நல்லாவே தெரியும். காலம் மாறிட்டதால், உன்னையோ, அவனையோ நாங்க முயல வெட்டறது மாதிரி வெட்டல. போகனுமுன்னால் போ. மத்த மேளாக்காரங்க முன்னால நம்மோட சுறால்மேளா அவமானப்படும் என்றாலும், உன்னை நாங்க போகவிடாமல் தடுக்கப் போறதாய் இல்லே. ஆனால் போயிட்டால், திரும்பி வரப்படாது. உன்னை மாதிரியே ஒருத்தனோட ஒடிப் போயிட்டு அப்புறம் இங்கே திரும்ப வந்து பிள்ளையைப் பார்க்கறதுக்குத் துடிச்சாளே, லட்சுமிபாய். அவளை மாதிரிதான் நீ ஆகவேண்டியது வரும். அப்போ இந்த லட்சுமிபாய்க்குப் பிடிச்ச பைத்தியம், ஒனக்கும் பிடிச்சால், நாங்க பொறுப்பில்லே, போகனுமுன்னால் போயிடு. ஆனால் குழந்தை உன்னது இல்லே. இது சுறால் மேளாவோட பிள்ளை. இந்த மேளாவோட பெருமையை வருங்காலத்துலேயும் நிலைநாட்டப் போகிற ஆம்பிளை, நீ பொம்பிளை. போகனுமுன்னால் போ.”

பெல்லிபாயின் காதில் எங்கிருந்தோ அவள் குழந்தையின் அழுகைக்குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். குரல் கேட்கிறது. குரலுக்குரிய பிள்ளையைக் காணவில்லை. தாய்மையில் தவித்தாள்: பலாமரக் கிளைகள் வழியாய்ப் பள்ளிக் கட்டிடத்தைப் பார்த்துக் காதலியாய் துடித்தாள். கட்டிடம் முழுவதையும் கண்களால் வட்டமடித்து, தனிமை உணர்வில் அல்லாடினாள். குழந்தையின் அழுகை அடங்கி, ஏதோ ஓர் ஈன முனகல் இறங்குமுகமாய்க் கேட்டது.

மேளாத் தலைவன் அதட்டினான்.

“உம். போகனுமுன்னால் இப்பவே போ எக்கேடு கெட்டுப் போ. இங்கே இருந்து எங்க மானத்தை வாங்குறதைவிட, ஒரேயடியாய்ப் போயிடு.”

பெல்லிபாய், சிறிது நேரம், தலையைப் பெருவிரலால் கீறினாள். முகத்தை முந்தானையால் மூடினாள். சிக்கையா இருக்கும் திக்கைப் பார்த்தாள். புருஷன் புதைக்கப்பட்ட திசையைப் பார்த்தாள். பிறகு, மடமடவென்று நடந்தாள். அவளுக்கு எல்லோரும் வழி விட்டார்கள். அவளை வழிமறித்துப் புத்திமதி சொல்லப்போன சில கிழவிகளை மேளாப் பிரமுகர்கள் அதட்டினார்கள்.

பெல்லிபாய், காட்டிற்குள் காடாகி, மலைக்குள் குகையான நேரம், சத்தமாகத் துவங்கிய மேளாக்கட்டு, நிசப்தமாக முடியப்போன சமயம். அவளைத் தலைமுழுகிவிட்ட நிதர்சனத்துடன், கூட்டம் கலையப்போன வேளை.

பெல்லிபாய், திரும்பி வந்தாள். அவசர அவசரமாய் வீட்டிற்குள் ஒடினாள். கால்மணி நேரம் அவளின் தடயம் தெரியவில்லை. கூட்டம் அப்படியே திரண்டு நின்றது. மீண்டும் அவள் கோலத்தைப் பார்த்ததும் முதலில் திகைத்தது. பிறகு சிரித்துக் கொண்டது.

பெல்லிபாய், மார்புவரை புடவைகட்டி, காதுகளில் லொண்டான் லொடுக்கு வளையங்களைப் போட்டு – மார்பில் சாவிக் கொத்துகள் தொங்கிய பாசி மாலைகளுடன், முன் தலையில் தாழைமட்டை தொப்பி போட்டு, பின் தலையில் ஊமத்தம் பூக்குவியல்களை சுமைபோல் வைத்து, வந்தாள். மறுபடி பிழைத்த அல்லது செத்த மலைஜாதிப் பெண்ணாய் வந்தாள். கூட்டம், இப்போது அவளை அங்கீகரித்துப் பார்த்த போது –

மேளாக் கட்டு எஜமானர் பாபன் நாய்க்கர் காலில், பெல்லி பாய் தன் தலைபடும்படி நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாள். இனிமேல் தலையெடுக்கப் போவதில்லை என்பதுபோல் அப்படியே கிடந்தாள். எவளோ – எவனோ அவளைத் துரக்கி விட்டபோது –

பெல்லிபாய், மேளாத் தலைவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். பள்ளிக் கட்டிடத்தின் முன்னால், லாரியில் சாய்ந்தபடி, அவசரக் கோலமாய் நின்ற சிக்கையாவை நோக்கி, மேளாத் தலைமைக்கு கும்பிடு போடுவதுபோல் போட்டாள். மாறி மாறிக் கும்பிடு போட்டாள். மன்னிச்சுடனும், என்று சிக்கையாவுக்கும் கேட்கும்படி அலறலோடு கம்பிட்டாள்.

அப்போது –

லாரியின் ஒடல் சத்தம் எல்லோருக்கும் கேட்டது. ஆனால் பெல்லிபாய்க்கு மட்டும் அவள் குழந்தையின் சத்தமே கேட்டது.

– குமுதம், 2-3-1985

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *