கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 9,647 
 
 

இருட்டு தன் இருப்பிடத்தை தேடி உலகினுள் புகுந்து கொள்ள எத்தணித்து கொண்டிருக்கிறது… மஞ்சள் விளக்கொளிகள் ஆங்காங்கே தெருவை புதுப்பித்து கொண்டிருந்தது…

நாகரீகமடைந்த இரண்டு கால் மிருகங்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டும், ஏதேதோ பேசிக்கொண்டும் சென்று கொண்டிருந்தன.. தங்களுக்குள் உன்டாண சம்பாஷனைகளின் விளைவாக சத்தம் போட்டு கத்தி கொண்டும், கொக்கரித்து கொண்டும் பல விதமான சேஷ்டைகளை தொடர்ந்து கொண்டிருந்தன…

நடை பயிற்சிக்கு ஏற்ப பல செடிகள் நட்டு வைக்க பட்டிருந்த இடத்தினுள் கை காள்களை ஆட்டி கொண்டும், வினோதாமான ஏதோ ஒன்றை சில ஜந்துக்கள் செய்து கொண்டிருந்தன…

பல, அன்றைய நடப்பு பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து எந்த பெரு மிருகம், எத்தனை கொள்ளை அடித்தது என விலாசி தள்ளி கொண்டிருந்தது…

அனைத்திற்கும் ஏன் தான் படைத்தானோ அந்த வாய் என்னும் துவாரத்தை.. மற்றதெல்லாம் கிடைத்ததை விழுங்கவும், சாதாரண ஓசை எழுப்பவும், அசை போடவும் பயன் படுத்தி கொள்ளும் போது இந்த வினோதமான மிருகம் மட்டும் தன்னை நாகரீகமடைந்த ஒரு உயிரினம் என்ற அடையாளத்தை தக்க வைத்து கொள்ள என்னென்னவோ செய்து கொண்டிருந்தன…

திடீரென்று அனைத்தும் ஒரு வித பொது செயலை கொண்டிருந்தது, வெளி பார்வையில் ஒரு வியூகத்தை எழுப்பியிருக்க கூடும்… தனது இரு கைகளாலும் எதையோ காற்றில் அடித்தவாறு, முன்னே முகத்தின் அருகே வருகின்ற ஓர் சிரிய அப்பிராணியை தட்டி விட்டு கொண்டிருந்தன… விளக்கொளிகளின் அருகில் அந்த சிறிய உயிரினத்தின் எண்ணைக்கை அதிகமாக காணபெற்றது…

அங்கே எண்ணற்ற வகையில் அலைந்து கொண்டிருந்தது “ஈசல்”, அந்த இடத்தில் அன்று ஈசல் தினம்….

ஒவ்வொரு ஈசலும் தத்தம் வகையில் அலைந்து திரிந்த படி ஒரே ஒரு ராத்திரியே கழிக்க போகும் அந்த இரவை ஏகபோகமாக குதூகளத்துடன் கொண்டாடி கொண்டிருந்தது…

பல, தெருக்களில் சுற்றி கொண்டிருந்தன. பல, இரண்டு கால் மிருகங்கள் உருவாக்கி வைத்திருந்த ஒரு பெண்ணினமும் ஆணினமும், அவர்கள் காம இச்சைக்கு பிறந்த, அதன் அடுத்த 50 வருடத்தை கழித்து மட்க போகிற மற்றுமொரு ஜந்துவை(க்களை)யும் வைத்து கொள்ளும் “வீடு” என்னும் அமைப்பில்… அனைத்து ஈசல்களும் மிகவும் வேகமாகவும், சற்றே சோர்வின்றி தன் ஒரு ராத்திரியை மிகவும் ரம்மியமாக கழிக்க தொடங்கியது…

போக முடிகிற அனைத்து இடங்களிலும் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு தங்கள் இரவை ஞாய படுத்த முற்பட்டு கொண்டிருந்தது… விளக்கின் பால் அதற்கு அப்படி என்ன தான் மோகமோ?

மற்ற இரண்டு கால் மிருகங்கள் அனைத்தும் எதற்கு அப்படி வெறித்து வெறித்து அந்த ஈசல்களை கண் கொட்ட பார்க்கின்றன என்று புதிதாக வந்த ஒரு ஈசலுக்கு புரியவில்லை… பல ஈசல்கள் அந்த மிருகங்களின் கைகளில் அக பட்டு மடிந்து கொண்டிருந்தன… துணிகள் பலத்த காற்றில் ஆடி, காற்று நின்ற பிறகு அந்த சிறகடிப்பு நிற்பது போன்று அதன் இறகுகளும் அடங்கி கொண்டிருந்தது தரையை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஈசலும்… புதிதாக வந்த ஈசலுக்கு ஒன்றுமே புரியவில்லை… இவ்வளவு தானா நம் வாழ்க்கை என்பது போன்று புது ஈசல் எல்லாவறற்றையும் பார்த்து கொண்டிருந்தது… அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கும் பொழுதே, அதன் மீது ஒரு மிருகத்தின் கை விழுந்தது… இடையிடையே விரிசல் கொண்ட, மலை போன்ற ஒரு பிரும்மான்டமான அசையும் பொருள் தன் மீது மோத எந்த வித எதிர்ப்பும் இன்றி அது கீழே ஒரு சாக்கடையின் அருகில் விழுந்தது… ஒரு இரண்டு கால் ஜந்துவின் தொடையிலிருந்து தான் விரட்டபட்டிருப்பது அப்போது தான் அதன் பிரக்ஞைக்கு எட்டியது…

ஒரு பலத்த இடியோசையை எழுப்பும் தருணத்தின் மன துடிப்பு அடங்க சிரிது அவகாசம் எடுப்பது போன்று அதற்கும் சற்று அவகாசம் தேவை பட்டது… இருப்பு தெரிந்ததும், சுற்றும் முற்றும் பார்க்க ஒரே இருட்டு… பிற்ந்த இடத்திலேயே மீண்டும் விடபட்டு விட்டோமா? உலகை இன்னும் கொஞ்சம் கூட பார்க்கவில்லையே… மிரட்சியில் அங்கும் இங்கும் ஊர்ந்து கொண்டிருக்க, இன்னதென்று தெரியாத ஒரு உருவம் தன் முன் வந்து ஆடி கொண்டிருப்பதை கவனித்தது… அதை பார்த்தவுடன் அதனுள் அதற்கு முன் இருந்த உயிர் துடிப்பு இன்னும் அதிகரித்தது… அந்த உருவம் அருகே வர வர அதனின் துடிப்பு ஏறிகொண்டே சென்றது… மிக அருகில் வந்தவுடன் அதனிடமிருந்து, மிரட்சியடைந்த ஈசலுக்கு ஒரு உணர்வு கை மாற்றபட்டது…

“வா… நமக்கு நிறைய நேரமில்லை…”, இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை உள்வாங்கிய அடுத்த கனமே அதுவும் தன்னைபோன்ற ஒரு ஈசல் தான் என்று அந்த புது ஈசலுக்கு சற்று தெம்பு கிடைத்தது… ஆனால் ஏன் அதன் இருப்பு ஒரு புகைமூட்டம் போல காணப்படுகிறது என்று அதற்கு புரியவில்லை…

“என்ன யோசனை… கெளம்பு…”. புது ஈசல் ஒன்றும் புரியாதவாறு அதனுடன் பறக்க தொடங்கியது… பறந்து கொண்டிருக்கும் போது ஒரு விஷயத்தை அந்த புது ஈசல் கவனித்தது… தன்னை விரட்டி தட்டி விடும் அனைத்தும் அந்த புகைமூட்ட ஈசலை எதுவும் செய்வதில்லை… அது உண்மையிலேயே இருக்கிறதா என்ற சந்தேகம் வேறு அதற்கு… அந்த புகைமூட்ட ஈசல் வேகம் எடுத்து பறக்கையில் அதன் இறகுகள் முற்றிலும் மங்கி ஒரு புள்ளி, காற்றில் பயணிப்பது போன்ற தோற்றம் கிடைத்தது…. இப்போது பார்த்து கொண்டிருந்த அந்த ஒற்றை புள்ளியும் மறைந்தது… தனித்து விடபட்ட ஒரு பெரு வெளியில் அது தள்ளாடி பறந்து கொண்டிருந்தது… பயத்தில் நடுங்கி கொண்டு பறப்பதை நிறுத்தாமல் காற்றின் திசையில் அடித்து செல்லபட்டது… திரும்பி வந்த அந்த ஒற்றை புள்ளி அந்த புது ஈசலிடம் நெருங்கியபொது அதன் ஈறகுகள் நன்கு தெரிந்தது…

“நான் உன்ன வேகமா வர சொன்னேன், இவ்வளவு மெதுவா போனா… ஒன்னும் தெரிஞ்சுக்க முடியாது….” என்று கட்டளை தொணியில் தன் கோபத்தை தெரிவித்து அந்த புள்ளி உருவாக தொடங்கியது… புது ஈசல் அந்த புள்ளியை பின்தொடர்ந்தது… ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும், அந்த புள்ளியாகி போன ஈசல் போன்ற புகைமூட்ட உருவத்தை தன் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வைத்து கொண்டது… கடைசியில் அந்த கோபக்கார ஈசல் ஒரு இடத்தில் அதன் இறகுகள் அடங்க உட்கார்ந்தது… அதை பார்த்ததும் புது ஈசலுக்கு நிம்மதி… அதுவும் அதன் அருகில் அமர்ந்து கொண்டது….

“பறக்கும் போது என்னென்ன பாத்த?”

“……..”

“ஒன்னுமேவா பாக்கல?”

“உங்கள எப்படியாவது பிடிக்கனும்னு மட்டும் தான் நினச்சுட்டு அவ்வளவு வேகமா பறந்தேன்… மத்தபடி நான் எதையும் பாத்துட்டு வரல….”

“உனக்கு கொஞ்ச நேரம் தரேன், அதுக்குள்ள இப்போ நாம வந்த வழில எல்லாத்தையும் பாத்துடு வா…”

புரியாமல் அந்த புது ஈசலும் கட்டளையை ஒத்து கொண்டு புறபட்டது… “சீக்கிரம் வரனும், நமக்கு அதிக நேரம் இல்ல…”

வந்த வழியே திரும்ப சென்றது… ஒளி மங்கி இருட்டு எல்லா இடங்களிலும் அனுமதியின்றி கொஞ்சம் கொஞ்சமாக புகுந்து கொண்டது…

சிறிது நேரம் கழித்து வந்த புது ஈசலிடம், “எப்படி இருந்தது உலகம்?”

“ரொம்ப விந்தையாக, புரியபடாத ஒன்றாக…”

“என்னென்ன பாத்த?”

“சாக்கடையின் பக்கத்தில் உள்ள டீ கடையில், ஒரு இரண்டு கால் ஜந்து வாயில் எதையோ இழுத்து ஊதி கொண்டிருந்தது…. மிகவும் கலவர பட்ட முகத்துடன்… பிறகு பல செடி கொடிகள் மேலே வானம், தரையில் எண்ணற்ற உயிரினகள், சில ஊர்கின்றன, சில பறக்க எத்தணித்து கொண்டிருந்தன, சில மோன நிலையில், இருக்கிறதா செத்து மடிந்து விட்டதா என்ற ரீதியில் இருந்தன… பறக்கும் போது அடித்த காற்று, எங்கிருந்தோ வந்த தண்ணீர் சிதறல்கள், அதற்கடுத்தாற் போல் உணர்ந்த வெப்பத்தின் வெம்மை, மேலே கருமை நிறைந்த செந்தீற்றள்களுடன் தன்னை அழகாக புதுப்பித்து கொண்டிருக்கும் வானம், மரம் அதன் இலைகளினூடாக எழும் ஓசை மற்றும் அதை தாங்கி நிற்கும் மண்…. பிறகு பல நாலு கால் உயிரினங்கள் என்று என் நினைவில் படிமங்களாக தங்கியவை ஏராளம்…”

“நல்லது முக்கிய புலன்கள் இனி உனக்கு அக பட்டவை…. உலகம் இவ்வளவு தான்… இதுவே தான் திரும்ப திரும்ப ஒன்றோடொன்று கலந்து, ஒன்று சில இடங்களில் கூட இருந்தும் சில இடங்களில் குறைந்து இருந்தும் அமைந்திருக்கும்”

“ஆனால்……..”

“ம்? சொல்…. ஆனால்?”

“நேரம் எடுக்க எடுக்க கண்ணில் தென்பட்ட பல் வேறு காட்சிகள் மனதினுள் குடிபுகுந்து கொண்டே இருக்கின்றன… அவையனைத்தும் ஏதேதோ சொல்ல வருகின்றன…”

“அப்படி தான் இருக்கும்… விடிகாலைக்கு முன் அனைத்தும் துலங்கி ஒரு தெளிவு வந்துவிடும் அப்போது நீயே உன்னை சமர்ப்பித்தி விடுவாய்…”

“எதற்கு?”

“புரியும் போது தெரிய வரும்…”

“இன்ன்னொரு விஷயம் எல்லாவற்றையும் உள்வாங்கி கொள்ள முடிந்தது…. ஒரு ஜந்துவை தவிர….”

“இரண்டு கால் ஜந்துவா?” என்று சிரித்தது அந்த கோபக்கார ஈசல்….

“ஏன் சிரிக்கிரீற்கள்? நான் ஏதாவது தப்பாக கேட்டு விட்டேனா?”

“இல்லையில்லை… அது அவ்வளவு பொருட்படுத்த வேண்டிய ஜந்து அல்ல…. அதுவும் நம் போன்ற…. இல்லை, நம்மை விட சாதாரண உயிரினம்….”

“அப்படி தோன்ற வில்லை எனக்கு… அந்த மிருகங்கள் நம்மை பார்க்கும் தொணியிலேயே நாம் மிகவும் சாதார்ணமானவர்கள், அவர்கள் தான் இந்த உலகத்தின் ஆளப்பிறந்த உயிரினம் போன்ற பார்வை அதன் கண்களில் தெரிந்தது….”

“அதன் பேதமை வாய்ந்த அறிவினால் அப்படி ஆக்கபட்டிருக்கிறது அந்த உயிரினம்… அதன் இயல்புகளை நீ பார்த்த வரையில் கூறு…”

“எதையோ இழுத்து ஊதி கொண்டிருந்ததை தவிர்த்து, பயங்கரமான துர்நாற்றம் அடிக்கும் சாலையின் ஓரத்தில் ஈக்கள் மொய்க்க திறந்த வாயுடன் ஒன்று கிடந்தது… பல் வேறு இடங்களில் காரசாரமாக விவாதிக்கின்றன பல ஜந்துக்கள்… ஒன்று மற்றொன்று பேசுவதை ஏற்று கொள்ள மறுப்பது போல செய்கைகள் செய்கின்றன…. ஒரு ஜந்து ஏதோ ‘பணம்’ என்ற ஒன்றுக்காக இன்னொரு ஜந்துவை தாக்கி கொண்டிருந்தது… மற்றொரு இடத்தில் வேறொரு ஜந்து எதையோ தீவிரமாக பார்த்து கொண்டிருந்தது…. அதன் கண்கள் விடாது அதையே பார்த்து கொண்டிருந்தது… மேலும் கீழும், கீழும் மேலும் ஏறி இறங்கி கொண்டே இருந்தது…. கண்கள் அசைய அசைய அதன் வாய் ஏதோ முணுமுணுத்து கொண்டிருந்தது… திடீரென்று அது பார்த்து கண்களை அசைக்கும் பொருளின் மீது உட்கார முற்பட்ட போது என்னை வழக்கம் போல தட்டி விட்டது… இன்னும் ஏதேதோ…. நிறைய காட்சிகள் தேங்கி கிடக்கின்றன….”

“அந்த ஜந்து ‘படித்து கொண்டிருந்திருக்கும்’ என்று நினைக்கின்றேன்… அவர்கள் பேசியது ஏதாவது புரிந்ததா?…”

“இல்லை… என்ன அது, அவர்கள் வாய் மிகவும் வேகமாக அசைந்து கொண்டே இருந்தது… தனது கையை வேறு ஆட்டி ஆட்டி அசைத்து, வெகுண்ட முக பாவனையுடன் அப்படி என்ன அவர்கள் வாய் எதையோ முணுமுணுத்து கொண்டே இருந்தது?”

“இரண்டு கால் ஜீவன்கள் தங்கள் சம்பாஷணைக்காக உருவாக்கி கொண்டது தான் ‘மொழி’…. அதன் ஊடாக தங்கள் எண்ணங்களை அடுத்த மிருகத்துக்கு சொல்லிக்கொண்டே இருக்கும்…”

“விசித்திரம் தான்… நமக்கு ஏதும் அப்படி பட்ட விஷயம் இருப்பது போல் தோன்றவில்லை… இவ்வளவு விஷயம் உள்ளதா அந்த இரண்டு கால் ஜந்துவுக்கு…”

“நீ ஆச்சரியம் படும் அளவுக்கு அது உச்சிதமானது அல்ல… அது ஒரு சீர்கெட்ட உயிரினம்… உன் மனதிற்கும் என் மனதிற்கும் இடைவெளி கம்மி… ஆனால் அந்த ஜந்துவிற்கு அந்த மொழியினால் அதன் அகத்திற்கும் வெளி நடப்புக்குமே தூரம் அதிகம்… அது தோன்றியது மிக அணமையில் தான்… காலம் மாற மாற அதன் சிந்தனை பெருகியது, கொஞ்சம் கொஞ்சமாக அதன் இருப்புக்கு ஏற்ப தன்னை நாகரீக படுத்தி கொண்டது… உடைகள் அணிந்தது, வீடு கட்டியது, குழுக்களை உருவாக்கியது, குடும்பம் அமைத்தது, நாடு பிரித்தது, மொழிகளை உருவாக்கியது,………… இன்னும் என்னென்ன்னவோ செய்தது… ஆனால் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பொருட்டின் கீழ் தன் இனத்தையும், மற்ற இனத்தையும் பற்றா குறைக்கு இயற்கையையும் சேர்த்து அழித்தது… வரும் வழியில் நீ பார்த்தாயே பல் வேறு கட்டிடங்கள், மண்டபங்கள்,… எல்லாம் அது உருவாக்கிய அசட்டு தனங்கள் தான்…. அது வாழ்வத?!
?்கு எதையாவது கண்டு பிடித்து கொண்டேயிருக்கும்…. அப்படி உருவாக்கிஉருவாக்கி மறுபக்கத்தில் அழிந்தது இயற்கை வளங்கள் தான்… அதை பற்றி ஒரு பிரக்ஞையும் இல்லாமல் உலாவி கொண்டிருக்கும் உயிரினம் இது மட்டும் தான்…. அதன் ஆரம்ப காலத்தில் ஓரளவுக்கு வாழ்க்கை பற்றிய பிரபஞ்சம் பற்றிய புரிதலும் அரிதலும் கொண்டு சிந்தித்து வாழ்வின் முழு அர்த்தத்தை புரிந்து வைத்து கொள்ள முயன்றது… ஆனால் காலம் கடந்த மாற்றத்தால், அறைகுறை சிந்தைனையோடு பல சித்தாந்த்தங்களை உருவாக்கி கொண்டு தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க முயன்றும் முயலாமலும் தவிக்கும் அப்பாவி உயிரினம் இந்த உயிரினம் மட்டும் தான்… இன்னும் கொடுமை என்னவென்றால் தொழில் நுட்பம் என்னும் கருமத்தால் அது சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து வருகிறது… கடைசியில் அந்த ஜந்துக்கள் பூமியில் அழியும் காலத்தில் எஞ்சி நிற்க ?!
??ோவ?!
??ு எதுவும் இல்லை… அது உருவாக்கிய சித்தாந்த்தங்கள் எல்லாம் காற்றில் யாருக்கும் கேட்கபடாத வண்ணம் அலைந்து கொண்டிருக்கும்….”

“பாவமான ஜந்து தான் போலிருக்கிறது… வரும் வழியில் பல, கண்கள் மூடி அமர்ந்திருந்தன, கூட்டமாக ஏதோ ஓர் சிலையை இரு கை கூப்பி கண்ணத்தில் போட்டு கொண்டிருந்தது… எல்லோரும் அந்த ஒற்றை சிலையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தன… என்ன அது?”

“அதுவா…. அறியாமையின் ஒரு துருவம்… இந்த ஜந்துவின் வாழ்க்கையில் எந்த சிந்தனை தளமும், அறிவியக்கமும் கூடிய சீக்கிரம் “மதம்” என்ற சொல்லுக்குள் அடைந்து விடுகிறது… நாகரீகம், சமூகம் போன்ற மூட அமைப்புகளை உருவாக்கியதின் பயனாக அத்தனை ஜந்துக்களாலும் அந்த அறிவியக்க தளத்தில் ஒட்ட முடியாமையினால், “மதம்” என்ற சொல் வழியாக அது பரப்பபட்டு, தற்போது வெறும் குறியீடாக எஞ்சி இருக்கிறது… இந்த ஜந்துக்களின் பரிணாம வளர்ச்சி வெறும் குறியீடு சார்ந்ததே… உணர்ச்சிகளுக்கும் வெரும் குறியீடுகள் தான் இப்போது… அந்த குறியீட்டின் முறைமையை கூட மாற்ற முடியாமல் அந்த அளவுக்கு கட்டு பட்ட உயிரினம் தான் இப்போது நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த ஜந்துக்கள்….. எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொள்ளும் ஜந்து இது… குறைவாக சமரசம் செய்து கொள்ளும் மற்றொரு ஜந்துவை அருகில் வைத்து கொல்ல ஆசைப்படும?!
?? இதன் வாழ்க்கை, சமரசத்திலேயே அடிபட்டு அர்த்தமற்று சென்றுகொண்டிருக்கிறது, சமூகம் என்னும் அமைப்பால்… முன்னரே சொன்னேன் அல்லவா, இந்த ஜந்துக்கு சிந்திக்கும் திறன் தளர்ந்து, வெறும் குறியீடுகளை நம்பி காலத்தை ஓட்டி கழிக்கும் அப்பாவி பிராணி… இதில் முழுக்க அறியாமையில் இருக்கும் வகையராவும், முற்றும் அறிந்த வகையறாவும் தப்பித்து கொள்ளும்… இடையில் இதுவும் அல்லாமல், வந்த வழியே திரும்பவும் போக முடியாமல், சமூகம் என்னும் சங்கிலியில் சிக்கு பட்டு கிழிந்து ரணமாக வேதனைபடும் ஏராளமான ஜந்துக்கள் தான் அதிகம்… இந்த லட்சனத்தில் மதம் என்னும் பேரில் வேறு எக்கசக்க உட்டாலக்கடி அடிக்கின்றன இந்த ஜந்துக்கள்…. உலகையே ஒரு குறிப்பிட்ட வகையறா ஆள நினைக்கிறது… நிலத்தை பிரித்து கொண்டு, மற்ற ஜந்துக்களின் நிலத்தை ஆளும் ஆசையில் தங்கள் உயிரினத்தையே அடித்து நொருக்கி நாசமாக்குக!
ின்!
றன… இயற்கையின் விதி படி தன் உயிரினத்தையே அடித்து கொல்லும் மரபு இருந்து வந்தது… ஆனால் அவை எல்லாம், ஆதார உணர்ச்சிக்காக… ஆனால் இங்கு வாழும் இந்த மிருகங்கள் அரசாங்கம், ஆட்சி என்று இந்த ஜந்துவே உருவாக்கிய வெரும் வெற்று சொற்களுக்காக தங்கள் உயிரினங்களை அழித்து கொண்டிருக்கிறது….”

“ஓ…. அவர்கள் வாழ்வு அவ்வளவு அற்பமானதா?…. அவர்களில் யாருக்காவது வாழ்க்கையின் அர்த்தம் புரிந்திருக்குமா? அந்த அப்பாவி பிராணிகளுக்கு பிரபஞ்ச முழு உண்மையை அரிய வாய்ப்பு இருக்கிறதா?”

“அவ்வபோது தோன்றும் பல ஞானங்களை பெருக்கி சேகரித்தபடி ஒரு ஒட்டுமொத்தமான பார்வை அதற்கு வளர வாய்ப்பு இருந்தது, பல நூறு வருடங்களுக்கு முன்னால்… இப்போது காலம் என்னும் பெருவெளியில் அந்த மிருகம் ஒரு சக்கை…. கசங்கி பிழிந்து எறியபட்ட சக்கை… அதன் வரலாறு அதுக்கே தெரியாது… மொழி வளர்ந்து, சிந்தனைகள் தொடர்ந்து வந்த காலகட்டத்தில், பதிவு செய்யபட வேண்டிய நேரத்தில், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்பட வேண்டிய அவசியமான காலத்தில், பல கீழ் தரமான ஜந்துக்களின் கோணல் புத்தியால் வரலாறு மாற்றியமைக்க பெற்று, பிழையான தவரான சிந்தனை புரிதல்களோடு வெறும் குறியீடுகளுடன் எஞ்சி, வரலாற்றின் உண்மையான தடங்களை தேட நினைக்கின்றது இன்றைய ஜந்துக்கள்… வெட்ட வெளியில் யாருமற்ற மரமாக தான் இப்போது தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கின்றன…”

“இவ்வளவு கேவலமான ஜந்துவா அவ்வளவு எளக்காரத்துடன் என்னை பார்த்து சீண்டியது, உதாசீனபடுத்தியது…”

“ஆம். அந்த ஜந்துவுக்கு ஒரு நாளும் தெரிய போவதில்லை, ஒரு நாள் வாழும் ஈசலின் வாழ்க்கையை விட அதன் வாழ்க்கை மிகவும் இழிவானது, அற்பமானது, அர்த்தமற்றது என்று… ஏன், இப்போது நம்மை பற்றி ஒன்றுமே தெரியாமல் மனதிற்கு தோன்றியதை தாந்தோன்றி தனமாக கிறுக்கி கொண்டிருக்கும் இந்த எழுத்தாள முட்டாள் ஜந்துவுக்கும் தெரியாது… பாவபட்ட ஜென்மங்கள்”

புது ஈசல் அதிர்ச்சியுடன், “ஒரு நாள் தான் நமது வாழ்க்கையா… அப்படியானால் நாளை காலை இந்த அற்ப உயிரினத்தின் கரங்களால் நான் உயிரிழக்க நேருமா?”

“அது தானே இயற்கையின் நியதி… பூனை எலியை, கீறி பாம்பை, புலி மானை என்று தொடரும் சுழற்சியில் இந்த அற்ப ஜந்துவின் கரங்களால் நாம்… இதை நாம் மாற்ற முடியாது… ஒரே நாளில் நமக்கு வாழ்வின் முழு பிரபஞ்ச பிரக்ஞையையும் அளிக்க போகிற அந்த இய்றகை விதியை நாம் என்றும் மீற கூடாது… போ உன் மனதிற்கு ஏற்றவாறு சுற்று… இன்று உன்னுடைய இரவு… உனக்கு முடிவு வர வேண்டிய நேரத்தில் வரும்…”

“இவ்வளவு கூறிவிட்டீர்கள், நீங்கள் யார்? நீங்கள் ஏற்கனவே இந்த உலகத்தில் தோன்றினவரா?”

“பூமியில் மறுஜென்மம் என்பதெல்லாம் அந்த இரண்டு கால் ஜந்துவின் அழுக்கான கற்பனை… அது உருவகித்தது தான் அதெல்லாம்… நான் ஏற்கனவே முக்தி பெற்ற ஆத்மா… என் ஆத்மா புதியவர்களுக்கு வழி காட்டும்… அவர்களை நல்ல பாதையில் ஏற்றி விட, உலகம் பற்றிய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்த அவர்களை பின் தொடரும் ஆத்மா.. எனக்கு அழிவே கிடையாது…”

“அப்படியா சங்கதி…. அப்படி என்றால் உங்களுக்கெல்லாம் முழு முதல் மூத்த ஆத்ம ஒன்று இருந்தாக வேண்டும் அல்லவா… அந்த ஆத்மா எங்கே….?”

“அந்த ஆத்மாவை தான் தேடி கொண்டிருக்கிறேன்…. அது எந்த உயிரின வடிவில் இருக்கிறதோ? இந்த அற்ப இரண்டு கால் ஜந்துக்களின் வடிவாக இல்லாவிட்டால் சரி”

– புதுப்புனல் இதழில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *