இவளும் அவளும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 5,241 
 
 

(1949ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடகப் பாத்திரர்

1. மனோரமா-உத்தமபத்தினி, தேசபக்தை
2. சிகாமணி : அவள் தந்தை, சேவா நிலையத் தலைவர்
3. சட்டநாதன் : மனோரமாகணவன், சட்டப்புலி, டம்பாசாரி.
மல்லப்பன் : இவன் தந்தை, கருமி
பூதகிபாய் : தாய், கொடியள்
ஜிலுஜிலுபாய் : சினிமா நடிகை
தங்கராஜன் : சினிமா டிரக்டர்
வெங்கு : சட்டநாதன் குமாஸ்தா
சேவா நிலையத் தொண்டர் முதலியோர்

பொது வணக்கம்

[இந்து முஸ்லீம் கிறிஸ்து பார் சீக்கிய பௌத்த உடை யணிந்து சிலர் பொதுவணக்கம் செய்தல்]

[பீலு- ரூபகம்]
ஓம் சமரஸ மான ஜோதியே என்றும்
ஒற்றுமையாய் உலகம் வாழ
ஒளிர் குணா நிதியே ஜய (ஓம்)
தீமை நீங்கி நம்மை வருகவே – செல்வத்
திருவும் கலையும் அறிவும் புகழும்
தேசம் பெருகவே-ஜய (ஓம்)
அன்புச் சிகர மான ஞானமே – இந்த
அகில மெல்லாம் பரவி ஆளும்
அருளின் வானமே-ஜய (ஓம்)
இன்ப மோங்கும் கருணை வெள்ளமே – நின்
இச்சை புரிக அச்ச மின்றி
இணைந்தெம் உள்ளமே …-ஜய (ஓம்)

1. ஆடல் பாடல்

[சிகாமணி தோட்டம் : மனோரமாவுக்குத் தோழிகள் பிரிவு உபசாரம் செய்தல். ஆடல் பாடல் நடக்கிறது.]

காபி-ஆதி

தோழிகள் :

மங்கள வசந்தம் போலே-நீ
வாழியவே தோழி –
பொங்கிடும் கடலுக்கு மதிபோல்-அருட்
புலவரின் பாட்டுக்குச் சுதிபோல் (மங்க)
நாட்டுக்குக் கலைதரு நலம்போல்-கலை
ஞானத்திற் காத்தும் பலம்போல்,
வீட்டுக்குத் திருமகள் எனவே-நீ
விரும்பிய பதியுடன் இனிதே (மங்க)

[மங்கள ஹாரதி செய்து, மலர்முடித்துப் பொட்டு வைத்தல்]

எல்லாரும் : ரமாநாதர் வாழ்க! மங்கல மனையறம் வாழ்க!

மனோ : என் அருமைத் தோழிகாள், உங்கள் அன்புக்கு நன்றி. இந்த அன்புப் பாசம் விடாது. என் கணவரை நான் உயிர்போல நேசிக்கிறேன் ; அப்பாவை உள்ளத் துடிப்பைப் போல நேசிக்கிறேன் ; உங்களை அந்த உள்ளத்தில் ஓடும் இரத் தக் கலப்பு போல் நேசிக்கிறேன்.

தோழிகள் : மனோரமா, உன் அன்பு எங்கள் உள்ளத் துடிப் பாகும். உன் இன்பமே எங்கள் இன்பம்….

மனோ : தோழிகாள், இந்த உலகில் இன்பதுன்பங்கள் கலந்தே வரும். அதோ பாருங்கள் பூரணசந்திரன் ; நீலவானில் அமைதி யாகச் செல்லுகிறான். ஆனால் அவனை அந்த மேகங்கள். எப் படி மறைக்கின்றன பாருங்கள்.

மதியினை மறைத்திடும் மேகம் – நம்
மனதினை மறைத்திடும் மோகம்
விதியினை யறிபவர் யாரே- இரு
வினைசுழல் வாழ்வொரு போரே

சிகா : ஆம் அம்மா வாழ்வே போர்தான். உன் தாயார் காலம் சென்றாள். உன்னை வளர்க்க. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்! நான் நாட்டுப்பணியில் ஈடுபட்டபிறகு எத்தனை சோதனைகள்! தாயில்லாக் குழந்தை யென்று கண்கலங்காமல் எல் லாம் செய்தேன். மல்லப்பன் நல்லப்பன் என்று சம்பந்தம் செய்தேன்…

தோழிகள் : மல்லப்பன் கல்லப்பன் என்பதை நாங்கள் கண்டு பிடித்தோம். உங்கள் மாப்பிள்ளை சமர்த்துத்தான் இத்தனை நாள் மூடுமந்திரமா யிருந்தது. மனோரமா எங்களிடம் ஒன்றுமே சொன்னதில்லை.

மனோ : சொல்லி என்னம்மா? அவரவர் வினையை அனுபவித்துத்தானே தீரவேண்டும்.

தோழிகள் : அதற்கும் எல்லையுண்டம்மா. உன் தகப்பனார் பரம சாது, தேசபக்தர். பதினாயிரம் ரூபா தந்து அந்த சுப்ரதீபத்தைக் கொண்டுவந்தார். அந்தச் சட்டப்புலி உன்மேல் பாயும் பாய்ச் சலை இன்றுதான் அறிந்தோம்…

சிகா : அம்மா நாம் செய்வதைச் செய்துவிடுவோம். இன்று தந்தி வந்தது. இதோ மனோரமாவைக் கொண்டு விடுகிறேன். அவன் ஏதாவது முரட்டுத்தனமாக நடந்தால் ……

தோழிகள் : மனோரமா, நீ சும்மா இருக்கக்கூடாது. கண வனைத் திருத்த உனக்கு உரிமையுண்டு.

மனோ : அந்த உணர்ச்சியுடனேதான் இன்று செல்லுகிறேன், குணத்தை மதிப்பேன் ; கொடுமையை எதிர்ப்பேன். ஆனால் அவர் கணவர், நான் மனைவி என்பதை மட்டும் மறக்கமாட்டேன்,

சிகா : கண்ணே ரமா, நீ எப்போதும் நல்லதைச் சொல்லு, சாந்தமாகச் சொல்லு. உன் கற்பும் அன்பும் கணவனைத் திருத்தும்.

தோழிகள் : அது சரிதான். ஆனால் பெண்மைக்குரிய சக்தி யையும் மறக்காதே. நாம் பாடும் பாட்டை மறுபடி பாடுவோம் :

எல்லாரும் : மாண்டு – ரூபகம்

கண்கள் விழித் தெழுந்தோம் -மூடக்
கட்டைப் பிளந்தெறிந்தோம்
பெண்கள் தலை நிமிர்ந்தோம் அஞ்சும்
பேதமையைக் களைந்தோம்.
கற்றுக் கலை வளர்ப்போம் -புதுக்
காதல் உலகமைப்போம்!
ஒற்றுமையை வளர்ப்போம் எங்கள்
உள்ளன்பு வெள்ளத்தினால்
வஞ்சப் பழங் கொடுமை – எங்கள்
வாழ்வை யழிக்காமல்,
மஞ்சளும் குங்குமமும்-மண
மலரும் கொண்டிருப்போம்.
மானிட வாழ்வினுக்கே – பெண்மை
மங்கள சக்தி யன்றோ ?
தேனிசை யாழினுக்கே- பெண்மை
தீவிரத் தந்தியன்றோ ?

மனோ : தோழிகாள், இந்தப் பாட்டு எப்போதும் எனது நெஞ் சிற் சுழலும். பெண்மையின் சக்தியால் அவரைத் திருத்தவே முயல்வேன்…

சிகா : ரமா, கணவனிடம் பெருந்தன்மையாக நடப்பதுடன், உன் மாமனார் மல்லப்பனிடமும் மாமியாரிடமும் கவனமாக நடந்துகொள்.

மனோ : மாமனார் இப்போதே இம்மிக்கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்.

சிகா : அவர் திருவாராதனம் பண்ணிக்கொண்டிருப்பார்…. சரி புறப்படு..

எல்லாரும் : சுபம் சுபம், மங்களமாகப் போய்வா. ரமா.. கடிதம் போடு…

மனோ : ஆஹா! எல்லாரும் வாழ்க! வந்தேமாதரம் ஜய்ஹிந்த்!

[செல்லல்]

2. மல்லப்பன் பூஜை

(கருமி மல்லப்பன் கதவை அடைத்துக்கொண்டு, பெட்டகத் தைத் திறந்து, பணக்குவியலுக்குத் தீபாராதனை செய்கிறான்.)

மல்ல : ஹே பொன்னம்மா, என்னுயிரே, உடலே, என் உலகே, கண்ணே விண்ணே ….. உன்னைப் பார்க்கப்பார்க்க…… ஆஹாஹா ! ஹா ஹா ஹா ஓம் பொன்னம்மா (தீபாராதனை)

என்னுயிருக் குயிரே-பொன்னம்மா
இன்பச் செழும் பயிரே-உன்
புன்னகை கண்டுவிட்டால் என்னுள்ளம்
பொங்கித் ததும்புதடீ …….

[தடதடவென்று கதவை பூதகிபாய் தட்டி]

பூதகி : திறங்கோ கதவை! ஹா பொன்னம்மாளா! யாரது? கெட்டது காரியம்….திறக்கிறீரா…இல்லையா ?

மல்ல : ஹே பொன்னம்மா!

ஒரு கணம் பிரிந்தால் தங்கம்மா
உயிர் துடிக்குதடீ
கருமணிக் கண்ணே உன்மேல்
காதல் வெறிகொண்டேன்- பொன்னம்மா
கட்டி யணைக்கின்றேன்…..

பூத : ஐயையோ, ஐயையோ !.. காதல் வெறியா! நான் இருக்கும்போது..யாரைக் கட்டி யணைவீர்? அந்த முண்டை தலையிலே அபிஷேகம் பண்ணி வெண்சாமரம் அடிக்கிறேன் பார்..உம்மைத்தானே… கதவைத் திறக்கிறீரா? அம்மாளைக் கூப்பிடவா?

மல்ல : எண்டீ! லண்டீ நீ வந்தாயா நல்ல சமயத்தில்…

[பெட்டகத்தை மூடிவிட்டுக் கதைவைத் திறக்கிறான், பூதகி பாய் பசக்கென்று உள்ளே பாய்ந்து]

பூத : எண்டியாம் தோண்டியாம்..எங்கே உங்கள் பொன் னம்மா? எங்கே உம் வைப்பாட்டி?..எங்கே அவள்..ஆத்திரம் கீர அகப்பக்கட்டையால் விளாசுகிறேன்…

மல்ல : அடி சத்தம் போடாதேடீ..வைப்பாட்டியாவது எனக் காவது? அதற்கெல்லாம் நானா பணம் தருவேன்.. காசுக்குக் காசு என்பது என் சுருதிவாக்கியமடீ… கையிலிருந்து ரூபா போனால் பவுனாகத் திரும்பிவந்து, என் மனங்குளிர இந்தப் பெட்டகத்தில் குவிய வேண்டும்.

பூத : அப்படியானால் என்னை என் கட்டிக்கொண்டீர்? பெட் டகத்தைக் கட்டிக்கொண்டு மனங் குளிரலாமே..

மல்ல : எதற்கெடுத்தாலும் என்மேல் பாயாதே..கொஞ்சம் சிரி பார்ப்போம்…

பூத : என் பிழைப்பே சிரிப்புத்தான். பணம் வந்தால், அடி உனக்கு இரண்டுவடம் தங்கச்சங்கிலி போடுகிறேன், ஒரு வைர அட்டிகை போடுகிறேன், ஒரு தோடு ஜிமிக்கி போட்டுக் கண்குளி ரப் பார்க்கிறேன் என்று சொன்னால் என்ன?… என் மனம் குளிரக்கூடாதாக்கும்…

மல்ல : சரி உனக்கு இந்த அடகுச் சங்கிலியைப் போட்டுவிடுகிறேன்…

பூத : அடகுக்காரன் வயிற்றிலே போட்டுக்கொண்டால்.

மல்ல : நானா ; அவன் வாயில் மண்ணைப் போட்டுவிடுகிறேன். வட்டிக்கு வட்டி குட்டி போட்டால், அவன் வீட்டைக்கூட எலத்திற்குக் கொண்டுவருவேன்… சரி காரியத்தைச் சொல்லு..

பூத : அட்ட உங்கள் பொன்னம்மா கூத்தில் வந்த காரியத் தை மறந்தேபோனேனே.. ஒரு முக்கியமான செய்தி.

மல்ல : என்ன, என்ன?

பூத : சம்பந்தி நாட்டுப்பெண்ணைக் கூட்டிவந்திருக்கிறார்…

மல்ல : சிகாமணி எத்தனைநாள் இருப்பானாம்?

பூத : இருக்கட்டுமே நான்குநாள்…

மல்ல : அடி நானல்லவா ரேஷன் கடைக்கு ஓடவேண்டும் : நாட்டுப்பெண் என்ன கொண்டுவந்திருக்கிறாள் ?

பூத : ரொக்கம் பதினாயிரம் உங்கள் பெட்டகத்திற்கு வந்து விட்டதே ; இன்னும் என்ன?

மல்ல : என்னவா? சிகாமணி பொது நல வீரன் ; பத்து ஐந்து சந்தாக் கேட்டால் பொது நலத்திற்குத் தருவார்கள். இந்தக்காலம் ஐயாயிரம் பதினாயிரம் எளிதாகச் சேருமே.இங்கே கொண்டுவந்து தந்தால்….

பூத : பேராசையில் தீவைக்க… இப்படியெல்லாம் அவர் எதிரே பேசாதேயும். அவர் ரோசக்காரர். அந்தப் பெண் இருப் பது எனக்கு நல்லது. காரியத்திலே கப்பல்.

மல்ல : எனக்கும் நல்லதுதானேடீ! அவள் அடுப்பைப் பார்த்துக்கொண்டால், நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருப் பேன். காசில்லாமல் பாட்டுக்கச்சேரியும் கேட்பேன். .

[கதவுச் சத்தம்]

மல்ல : யாரது..?

வெங்கு : அண்ணா திறங்கோ திறங்கோ , அவசரம். மல்ல : அசம்பாவிதம்பிடித்த பயல்.. அடியே நீ போ.. தாம் தூம் ததிங்கிணதோம் என்று செலவு செய்யாதே. சர்க்கார் ரேஷன் பனிரண்டு அவுன்சு ; எனது ரேஷன் ஆறு அவுன்சு. எல்லாம் அதுக்குள்ளே.

பூதகி : எல்லாம் எனக்குள்ளே

[கதவைத் திறந்து செல்கிறாள்.)

வெங்கு : அடடா அண்ணா மன்னிக்கவேண்டும்…

மல்ல : அங்கிருந்தே பேசடா.. என்ன செய்தி? சந்தைவட்டி யெல்லாம் வசூலித்தாயா… கடன் வசூல் ?

வெங்கு : அண்ணா, இப்போதுதான் வயிற்றுக்கடனைத் தீர்த்து வந்தேன்! ஹேவ்!.. முதலில் மேலே எஜமானிடம் போய் சலாம் வைத்தேன்.. உடனே டாம் நான்ஸென்ஸ் என்று ஆசீர் வாதம் கிடைத்தது…

மல்ல : அங்கே வேலையில்லையா… அப்படியானால்..

வெங்கு : வேலையா இதோ..எஜமான் தந்த அவசர பில்கள்; அண்ணா கிட்ட எப்படியாவது பணம்…

மல்ல : என்னடா சொன்னாய் ..ஹ! அந்தச் சண்டாளன் குடிப்பது களிப்பது, அங்கும் இங்கும் போய் யார் யாரையோ கட்டி யழுவது..ஓடலில் கொட்டிக்கொள்வது.. நடனமாடுவது., பில் எனக்கு வருவதோ? சீசீ, உன் முகத்தில் விழிக்கமாட் டேன், போடா, போ..

வெங்கு : அண்ணா, அண்ணா, நான் என்ன செய்வேன்?. எசமானுக்கு ஒருசொல் ; எழைக்குத் தலைச்சுமை. ஒரு விஷயம்; சம்பந்தி நாட்டுப்பெண்ணைக் கூட்டி வந்திருக்கிறார். பிள்ளைக்கு நீங்கள் திருப்பள்ளி எழுச்சி ஒருமண்டலம் பாடினாலே போர்வை திறக்கும்..

மல்ல : இதோ வருகிறேன்.. நீ பேசாமல் இந்தப் பேரேட்டைப் பதிந்து ஐந்தொகைகட்டு .. திண்ணையிலிருந்து காய்கறி போனால் கூப்பிட்டு வழக்கப்படி வாங்கு.. நான் சம்பந்தியைப் பார்த்து விட்டு, அவனை நன்றாக விசாரித்துவிடுகிறேன்.. வரவர் வக்கீல் வரகுவைக்கோலானான்.

வெங்கு : என்னமோ எழை.. இருதலைக்கொள்ளியாய் வயிறு வளர்க்கிறேன்… சொன்னபடி செய்கிறேன்…

மல்ல : எங்கே கையைக் காட்டு, கையில் என்ன?.. வெங்கு : கையில் விரல்கள்… மல்ல : வாயைத்திற… வாயில் என்ன? வெங்கு : வாயிலே நாக்கு, கொஞ்சம் பாக்கு……. ”மல்ல : இடுப்பிலே என்ன?…

வெங்கு : இடுப்பிலே வேட்டி..என்ன அண்ணா நம்மேலே கூடச் சந்தேகமா?…

மல்ல : சரி போ .. அப்படியே .. காரியத்தைப்பாரு. இந்த ஓட் டைக்கப்பல் துரையை நான் பார்க்கிறேன்.

[இந்தச்சமயம் மனோரமா யாழிசைத்துப்பாடுதல்] மல்ல : நாட்டுப்பெண் பாடுகிறாள் ; கேட்க நேரம்? இந்த டம்பாசாரியுடன் இழவு கொடுக்கத்தானே நாள் சரியாயிருக்கிறது!

[செல்லல்]

3. சட்டநாதன்

[சட்டநாதன் மெத்தையில் நீளப்போர்வை போர்த்துக்கொண்டு முகத்தையும் மூடிக்கொண்டு பனிக்கரடிபோல் படுத்திருக்கிறான். கடிகாரம் எழுமணி அலாரம் அடிக்கிறது.. கீழே கீதம் கேட்கிறது

சட்ட : அட சனியனே இந்த அலாரம் இழவு ! [தூக்கி எறி கிறான்.. மறுபடி படுக்கிறான்- பாட்டு கேட்கிறது.] அடசை… நல்ல கனவு ; ஜிலுஜிலு வந்தாள். அதற்குள் கீழே கழுதைக் காம் போதி கேட்கிறது.. (எப்போது வருவாயோ நிரிச நிரிசாசா) இதென்ன பாட்டு ?.. [மறுபடி மூடிப்படுக்கிறான்)

[வருதல் மல்லப்பன்]

மல்ல : இதென்ன பிள்ளை. அட மணி எழு… எழுந்திரு!.

சட்ட : [இன்னும் மூடிக்கொண்டு பெட் காஃபீ! பெட்காஃபீ!

மல்ல : அட அனாசாரப் பிண்டமே ..பல் விளக்காமலா?

சட்ட : டாம் நன்ஸென்ஸ் வெங்கூஉ..பெட் காஃபீ..

மல்ல : கருமம், கருமம்..அட பதிதா,எழுந்திரு..

சட்ட : டே இடியட்..

மல்ல : கத்தாதேடா ; மாமனார் வந்திருக்கிறார்..

சட்ட : டே பூல் பெட் காஃபீ…

[வெங்கு ஓடிவந்து]

வெங்கு : காபி வருகிறது –

சட்ட : [போர்வையை நீக்கி அப்பாவைப் பார்க்கிறான்…. கண்ணை மூடிக்கொண்டு) டாம் மிஸ்டர் மல்லா ! இதெங்கே வந்தது..(சுருட்டுப் பற்றவைக்கிறான்)

மல்ல : கஷ்டகாலம், கஷ்டகாலம்.. உன் சுருட்டின் தலையிலே தீவைக்க…

சட்ட : அப்பா சொன்னபடிதானே செய்கிறேன்…..

மல்ல : அட அது பொல்லாதுடா.. அதைத் தொலை..

சட்ட : ஹல்லோ மிஸ்டர் மல், உன் பிரதிவாதியான சுருட்டைத் தீவைத்துச் சாம்பலாக்கித்தானே தொலைக்கிறேன். [உலாவுகிறான்) கீழே யார் ஊழ் வாழ் என்கிறது?…

மல்ல : அப்பா, உனக்குப் புண்ணியமுண்டு; மாமனார் வந்திருக்கிறார் ; உன் மனைவி மகாலக்ஷ்மிபோல் வந்திருக்கிறாள்.

சட்ட : என்னா கொண்டுவந்தான் மிஸ்டர் சிகாமணி?

மல்ல : முறுக்கு, சீடை, மனோகரம், மைசூர்பாகு, எள்ளு ருண்டை…

சட்ட : திராபை எள்ளுருண்டை ; நான்ஸென்ஸ் ; பட்டிக் காடு ..ஜாம், பெர்நட், சாக்லெட், கோகோ, மாகரோனி சாப் பிடும் நமக்கு, இந்த ஏகோதிஷ்டச் சரக்கைக் கொண்டுவந்தான். நீயே மென்று கொண்டு தூங்கு… பணம் கொண்டுவந்தானா? அல்லது பணம் உன்னிடம் சிக்கியதா?

மல்ல : அவன் எங்கே போவான்?

சட்ட : நான் எங்கே போவேன் ? காலையில் பில் அனுப்பி னேனே..டாம் வெங்கூ ஹும் எங்கே பணம்?

வெங்கு: பணம் அண்ணா பெட்டகத்தில் பத்திரமாயிருக்கிறது.

சட்ட : இடியட், இப்படித்தான் துரைக்குப் பதில் சொல்லு வதோ ..

வெங்கு : இதேதடா வம்பு! ஐயா, நான் இங்கே குமாஸ்தா வேலைதான் பார்க்கமுடியும்… தண்டல் வேலை, பொட்லர் வேலை, தூதுவேலை, ஒற்றுவேலை, நட்சத்திரவேலை, அவளைக் கூட்டி வரும் வேலை, இவரை விரட்டியடிக்கும் வேலை, மாமாவேலை, அண்ணாவேலை யெல்லாம் பார்க்க முடியாது…

சட்ட : நான் சொன்னதைச் செய் ; இந்த வீட்டுக்கு எஜமான் யார் ? டாம் ஃபூல் டன்ஸ் , இடியட்…….

வெங்கு : எல்லாம் சட்டதுரைதான்..

சட்ட : அப்படிச்சொல். நம்மிடம் பயம் இருக்கட்டும்..தெரியுமா..சட்டம்..

[முக்க்ஷவரம் செய்துகொண்டே]

மல்ல : உன்னைப் படிக்கவைத்ததற்கு க்ஷவரந்தான் பலன்.

சட்ட : ஷட் அப்.. நான் சொல்லுகிறபடி செய்..

மல்ல : நீ சொல்லுகிறபடி செய்தால், என் பெட்டகம் காலி யாக வேண்டியது தான்..

சட்ட : மகன் உரிமைச் சட்டம் செஷன் ஐந்து. . கவனம்.. கீழிருக்கும் பெட்டகம் மேலே வரவேண்டும்… இன்றேல்.. நடுத் தெரு நாரவாயன் கதிதான் உனக்கும். வெங்கு சொல்லு..

மல்ல : என்னடா பண்ணினான் நடுத்தெருவில்..?

வெங்கு: எஜமான் மூளையிலே சட்டம் புகுந்திருக்கிறது. பெயரே சட்டம்; என்னதான் நடக்காது? நடுத்தெரு நாராயண தாசர் பெட்டகத்தில் சேர்த்ததெல்லாம் இவரது நண்பர் நட் சத்திரதாசருக்கே உரிமை என்று செக்ஷன் பேசி வென்றார்.. நட்சத்திரதாசர் ஊரில் அடிக்கும் கொட்டம் அண்ணாவுக்குத் தெரியுமே..கதையை வளர்ப்பானேன்..

மல்ல : ஐயையோ! அப்படி என்னையும் செய்துவிடுவாயோ ?.

சட்ட : பகதூர் நான் யாரென்று நினைத்தாய்?.சட்ட மூளையை அப்படி இப்படிப் புரட்டி, கிழவனைக் குமரனாக்குவேன், பவுட ரில்லாமலே கிழவியைக் குமரியாக்குவேன், சாமியைக் காமி யாக்குவேன், காமியைச் சாமியாக்குவேன் ;

மல்ல : போதுமடா உன் சமர்த்து.. பெருமை பேசாதே.

சட்ட : நான் என்ன சாமானியமா? மனுபராசரர், சாணக்கர், வள்ளுவர் முதலிய நீதிமான்கள் என்னிடம் சட்டம் படிக்க வேண்டும்.. நான் கழுதையைக் குதிரையாக்குவேன், முப்பதாம் பசலியை இருபதாம் நூற்றாண்டாக்குவேன் ; எழுதாத பத்தி சத்தைத் தயாரிப்பேன், எழுதிய நோட்டைப் பொய்யாக்குவேன். வெளியே யிருப்பவனை உள்ளே போடுவேன், உள்ளே யிருப்ப வனை வெளியேற்றுவேன். சட்டம்பேசி மண்டையை உடைப்பேன். உன் பெட்டகத்தையும் உடைப்பேன்…..

மல்ல : ஐயையோ, என் பெட்டகம்! என் பெட்டகம் !….!

சட்ட : உன் பணத்தை எடுப்பேன்… நமது பரிவாரங்களுக்குக் கொடுப்பேன்..

மல்ல : ஐயையோ ஐயையோ! என் பணம், பணம் பணம்!! ஐயையோ பணம்! திருடன், திருடன்.. இரும்புப்பெட்டகத்தில் படுத்துக்கொள்ளுகிறேன் ..விடுவேனா..

[ஓடிவருதல் சிகாமணி]

சிகா : என்ன என்ன எங்கே திருடன்.. என் அலறுகிறாய் மல்லப்பா…

வெங்கு : ஒன்றுமில்லை ; அண்ணா எதோ கனவுகண்டார் .. அவர் இப்படி உளறிக்கொள்வது வழக்கம்…

சட்ட : ஹ ஹ ஹ!… பார் வெங்கு! சட்டம் என்றாலே புலிக்கு முன் கிலியாயிருக்கிறது.

வெங்கு : மாமனார் வந்திருக்கிறார்.. சட்ட : [முறுக்காக இங்குமங்கும் நடந்து… பிறகு மூக்குக்கண் ணாடிப் பார்வையுடன்] என்ன கொண்டுவந்தீர்?

சிகா : என் உயிர்போன்ற மனோரமாவை அழைத்து வந் தேன். என் செல்வமெல்லாம் இங்கே பொழிந்து தீர்ந்ததே

சட்ட : பொழிந்த மேகத்திற்கு என்ன வேலை?

சிகா : மீண்டும் ஆவியாகி, மேகமாகிப் பொழிவதே வேலை. உன்னைப்போன்ற வழிதவறிய வாலிபனைத் திருத்தும் வேலை, இருக்கிறது…

சட்ட : என்னையா? நீயா?… திருத்துவாயா? முதலில் அந் தப் பத்தாம் பசலி பத்தினியை நவீன உத்தமியாகத் திருத்து பார்ப்போம்…

மனோ : நாதா நமஸ்காரம். (வருதல் மனோரமா கொத்தமல்லி காபியுடன்]

சட்ட : குட்மார்னிங் ரமா… [கைக்கடிகாரம் பார்த்து] எழு ஐந்திற்குக் கேட்ட காபி, எழு முப்பதுக்கு வருகிறது. இதுதான் பதிவிரதா தருமமோ?

மனோ : நீங்கள் பல் தேய்த்த பிறகுதான் எதையும் சாப்பிட வேண்டும். அதற்காகவே தாமதித்தேன்.

மல்ல : சபாஷ் நாட்டுப்பெண்ணே !.. சட்ட : இந்த இரண்டு முப்பதாம் பசலிகளும் உனக்குப் பின் பாட்டு…சரி உன் காப்பியைப் பார்ப்போம்… தா. இதென்னடீ … காப்பிமணமே இல்லையே … பெரிபெரி கொட்டை யில்லையே. இதென்ன?

மனோ : குடித்துப் பாருங்கள். நல்ல பானம்… சட்ட : சைசைசை! இதென்னடீ கொத்தமல்லி கஷாயம்! இதுதானா உன் காஃபி!

மனோ : இதுதான் நாதா சட்ட : நாதாபாதா போதா தைதா தகதா எல்லாம் வேண் டாம்.. மிஸ்டர் சட்டநாதா என்று சொல்.

சிகா : சட்டத்தை உள்ளடக்கியே நாதா என்கிறாள்.

சட்ட : நாதனுக்கு இப்படித்தான் கஷாயம் தருவதோ? மனோ : இதுதான் நல்ல பானம் ; காஃபி பித்தம் பண்ணும்; நீரிழிவில் கொண்டுவிடும். கொத்துமல்லிவிதையும் சுக்கும் ஆவாரம்பூவும் போட்டுக் கஷாயம் வைத்துப் பனங் கற்கண்டு போட்டுக் குடித்தால் பித்தம் தணியும். இரத்த சுத்தியுண்டாகும்.

சட்ட : நீ மனைவியா, நாட்டுவைத்தியனா ? மனோ : மனைவி வீட்டுவைத்தியமும் செய்ய உரிமையுண்டு.

நவநாகரிக மோகத்தால் உமக்குப் பிடித்த தீமைகளை ஒழிக்க எனக்கு உரிமையுண்டு.

சட்ட : உனது பத்தாம்பசலி மாமூல்களை ஒழிக்கும் உரிமையும் எனக்குண்டு. தெரியுமா? – இன்று இரவு ஒன்பது மணிக்குத் தயாராயிரு; உனக்கு நாகரிகம் சொல்லித் தருகிறேன்; பிறகு உன் அநாகரிக மாமூல்களை விட்டொழிப்பாய் ..

பூதகி : (கீழிருந்து) : அடி நாட்டுப்பெண்ணே ; அங்கென்ன வம்பாடுகிறாய் ..இதென்னடீ இந்தக் காலத்துப் பெண்கள்.. எங்கள் காலத்தில் புருஷாளைக் கண்டால் அடுக்களைக்கு ஓடு வோம்… டீ நாட்டுப்பெண்ணே .. அடுப்பைப் பாரடீ…

சிகா : ரமா, மாமியார் கூப்பிடுகிறாள் போபோ..

மனோ: நாதா, வீட்டுக்காரியம் செய்துமுடித்து, ஒன்பதுக்குத் தயாராக வருவேன்.

(காட்சி முடிவு)

4. மாமி அமுல்

(மனோரமா பாடிக்கொண்டே காரியம் செய்தல்)

[தேஷ்-ஆதி]

சுதந்தர ஹிந்துஸ் தானம்-அதில்
சூழுக மங்கள கானம்
இதந்தரும் புதுயுக வனமே- இதில்
இருப்பவர் யாவரும் ஓர் இனமே

பூதகி: போருமடீ பாட்டு, நாட்டுப்பெண்ணே , பாட்டுப் பெண்ணே … வீட்டுப்பெண்ணா யிரு. கறி திருத்தி சட்டியிலே வேகப்போடு..

மனோ : இதோ வேகப்போடுகிறேன் மாமி..

சாதி மத நிற பேதம் இல்லை
சத்தியமே எங்கள் வேதம்,
ஆதி பகவனும் ஒன்றே-அவன்
அருளினில் யாவரும் வாழுக நன்றே

பூதகி : என்னடீ இன்னும் பாட்டு.. அண்டாவிலே தண்ணீர் கொட்டி வெந்நீர் போட்டீ !

மனோ : வெந்நீர் தயார் மாமீ.. பூதகி : எத்தனை குடம் கொட்டினாய் ? மனோ : பத்து.. பூதகி : பூ இவ்வளவுதானா..எங்கள் நாளையிலே குடத்தை இடுப்பிலே வைத்தால், இருபது நடை வருவோமே. இந்தக் காலத்துப் பெண்டுகள் கொலுவுக்குத்தான் லாயக்கு. சரி நாட் டுப்ண்ெபணே, அப்பளாம் சுடு,

மனோ: சரி மாமி..[அப்பளம் பொரித்துக்கொண்டே)

உடல் பொருள் ஆவியைத் தருவோம்- எங்கள்
உத்தம தேசம் இன் புறவே
கடல்கதிர் மழைந்தி யெனவே இங்கே
கடைமையைச் செய்வது நலமே.

பூதகி : என்னடீ மறுபடி பாட்டு… அப்பளாம் என்ன வானது?

மனோ : பொரித்துவிட்டே னம்மா… பூதகி : ஐயையோ எண்டீ, சுடச்சொன்னேன் ; பொரித்தாயா ; நெய் உன் மஞ்சள்காணியிலிருந்து வந்ததா ?

மனோ : என்மாமி மஞ்சள்காணியை இழுக்கிறீர்? கையில் இருந்ததெல்லாம் அப்பா தந்துவிட்டாரே…இன்னுமென்ன?

பூதகி : இதேதடீ பூனை என்றால் புலி என்கிறாள்.. நன்றா யிருக்கிறது நான் கொண்டுவந்த நாட்டுப்பெண் சவாணை…… மாமியாரென்று மட்டுமரியாதை வணக்கம் ஒடுக்கம் அடக்கம் அமரிக்கையில்லை.. தாழ்ந்துபோனால் வாழ்ந்துபோவார். அடக் கம் அஷ்டலக்ஷணம்..

மனோ : நானும் மாமியாரானால் இப்படித்தான் பேசுவேன்… பூதகி : என்னைப்போல மாமியும், என் பிள்ளையைப்போலக் கணவனும் கோடித் தவம் செய்தாலும் பெறமுடியுமா ? எங்கள் காலத்திலே மாமியார் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டோம்… இந்தக் காலத்துப் பெண்டுகளைச் சொல்லுவேனா. சுப்ரதீபங்கள் தாம்.

மனோ : மாமி, காலம் முன்னேறிவருகிறது. நேற்றுவரையில் பெண்கள் அடுக்குள் படுக்குள் அடிமைகளா யிருந்தார்கள். ஆண்களைக் கண்டால் ஓடி ஒளிந்தார்கள். வெளியே போகாமல் உள்ளே குழிமுயல்போலப் பதுங்கினர். இந்தக்காலம் காந்தி புண்ணியத்தால் பெண்கள் தலை நிமிர்ந்தனர் ; அடிமைவிலங் கை உதறித்தள்ளினார்கள். கலைகள் ஆயிரம் கற்றனர். எந்தத் துறையிலும் முதன்மை பெற்றனர்.

ஆணுடன் பெண்ணும் சமானம் இந்த
அன்பினில் உதித்தது ஞானம்
காணுல காலயந் தன்னில் இவர்
கண்ணுடன் கதிர்மணி போல்வார்.

பூதகி : இது என்ன வீடா, சினிமாவா..சும்மா பாடிக் கொண்டே யிருந்தால், வீட்டுக்காரியம் ஆகவேண்டாமா? அடி உன் பாட்டோ லட்சணமோ? எங்கள் காலத்திலே வாயைத் திறக்கமாட்டோம் ; உண்டு இல்லை என்று தலையாட்டுவோம். இந்தக்காலத்துப் பெண்களை எமன்கூடக் கட்டிக்கொள்ளமாட் டான். அச்சம் நாணம் மடமை, பணிவு, பயிற்பு, அடக்கம், அமைதி எல்லாம் காற்றில் விட்டு……

மனோ : மாமீ!

அச்சமும் நாணமும் இல்லை-இனி
அடிமை விலங்குகள் இல்லை.
உச்ச உரிமையிலே வாழ்வோம் இந்த
உலகுக்கு நல்லதைச் சூழ்வோம்..

பூதகி : சரிசரி கலிகாலம் அம்மா, கலிகாலம். வீட்டைவிட்டு உலகுக்குக் கிளம்பிவிட்டாயா?… உன்னைப்போன்ற ஊதாரிகளாலே தான் மழை பெய்யமாட்டேன் என்கிறது. இடி இடிக்க பயப்படுகிறது.

மனோ : அப்படியில்லை மாமீ; உங்கள் குரலைக் கேட்டுத்தான் இடி பயந்துகொண்டு ஆகாசத்திலேயே அடங்கிப்போயிருக்கிறது. உங்கள் சொல்மாரிமுன் விண்மாரிகூடத் திகைத்து நிற்கிறது மாமீ.. அடடா

[மேலிருந்து டைம் டைம்.. டைம்.. வெங்கூஉ)

பூதகி : அடி அசட்டுப்பெண்ணே , என்னை எதிர்த்துப் பேசி னது போதும்.. அவன் கோர்ட்டுக்குப் போக நாழியானது …… வம்பாடி.. இன்னும் பச்சடி யாகலியா… உம்? –

[வெங்கு ஓடிவருதல்)

வெங்கு : அம்மா, அம்மா ஐயா கீழே வருகிறார். உடனே தட்டுகளை விரியுங்கள்… மேஜைமேல் அழகான பூச்செம்பு வைக்க வேண்டும்.. நான் பென்னெட்லாட்ஜ் சென்று வருகிறேன்..

[ஓடுகிறான்]

[புல்சூட்டுடன் சட்டநாதன் தடபுடலாக இறங்கி, வெகு ஜோராக வருதல்]

மனோ : நாதா நமஸ்தே.. இலை போட்டிருக்கிறேன்…..

சட்ட : இந்த இலையும், கூட்டும், குழம்பும், பச்சடியும், கை யால் சாப்பிடுவதும்… நினைத்தாலே.. உவ்வே..(டெலிபோனில்] ஹல்லோ டிஷ் மூன்று .. வெள்ளைக்குதிரை ஒன்று.. உடனே.. நாகரிகச் சாப்பாடு வருகிறது பார்..

[வருதல் வெங்கு தட்டுகளைத் தூக்கிக்கொண்டு]

சட்ட : நேராக உள்ளே … போ.. விசிறியை முடுக்கு.. மேஜை மேல் தட்டை விரி.. ஆஹா அவளில்லையே. [உள்ளேபோகிறான்]

மனோ : ஹா நான், பத்தினி, அன்புடன் சமைத்ததைத் தொடக்கூட இல்லையே…

பூதகி : உன்னைப் பார்த்தாலே என் துரைக்குப் பிடிக்கவில்லை. உன் வாயும், கையும், நாக்கும், நடையும், பாட்டும், பேச்சும்

என் துரைக்கு வெறுப்பு.

மனோ : என்ன மாமி என்னையே கொத்தியெடுக்கிறீர். அவ ரவர் அழகைக் கண்ணாடியிலே பார்த்துக்கொள்ளலாமே.

பூதகி : அடி என் அழகை நாப்புக்காட்டுகிறாயா?..என் அழ கிருந்தால் உலகமே மோகித்துப்போகுமே .. நீ என் பிள்ளைக்குத் தக்க பெண்ணில்லை..

மனோ : பிள்ளைக்குத்தக்க பெண்ணில்லையோ, பெண்ணுக்குத் தக்க பிள்ளையில்லையோ..என்னமோ என்விதி இப்படிக்கொண்டு தள்ளியது.. ஹ.. கவலை, கவலை…!

பூதகி : அடி அம்மா இங்கிருந்து கவலைப்படுவானேன் !..நீ அப்பனுடன் உன் சுவர்க்கலோகத்திற்கே போயிருக்கலாமே.. என் பிள்ளைக்கு எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள்..

மனோ : மாமி, இதென்ன வார்த்தை? வீட்டுக்குவந்த திரு மகளை இப்படித்தானா காலால் உதறித் தள்ளுவது..?

பூதகி : அடி பழிகாரி, என்ன பொய்… உன்னை நான் பூப் போல் வைத்திருக்கிறேன். பழிசுமத்துகிறாயா ?… நாளையே தலையணைமந்திரம் ஏற்றி, என் குடியைக் கெடுப்பாய் … உன்னைத் தொலைத்துத் தலை முழுகி மறுகாரியம் பார்க்கிறேன்…… நல்ல நாட்டுப்பெண்ணைக் கொண்டுவருகிறேன்..

[மல்லப்பனும் சிகாமணியும் வருதல்]

மல்ல : அடி என்னடீ சத்தம்.. இலை போட்டுப் பறிமாறடீ.. பூதகி : எல்லாம் உங்கள் நாட்டுப்பெண் சத்தமே.. அடி பெண்ணே , மாமனார் சொன்னது தெரிந்ததா ? இவைபோடு..

[மனோரமா, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இலை போடு கிறாள்.. காட்சி முடிவு]

5. அப்பா உபதேசம்

மனோ : அப்பா, நான் என் பிறந்தேன் ? என் அன்பை அவ ரும் அறியவில்லை ; மாமியும் கழுகாய்ப் பிடுங்குகிறாள். உலகில் இன்பமே யில்லையே. அப்பா, இந்த நரகத்தில் எப்படி யிருப் பேன்? என்னை அவருக்குப் பிடிக்கவேயில்லை. வேண்டாவெறுப் பாக நான் இங்கிருந்தென்ன..?

சிகா: அம்மா, இதுவும் ஒரு சோதனை. நாம் செய்யும் கட மையைச் செய்வோம். கடவுள் துணை ; கவலையை மற ; பாடு..

(உசேனி- ரூபகம்]

என்னென்ன வந்தாலும் உலகின்
இன்பம் குறையாமல்
உன்னத வாழ்க்கையருள்-இறைவா
உள்ளப் பரம்பொருளே..

மனோ: அந்தர்யாமிதான் எனக்கு ஆறுதல் தரவேண்டும்..

ஆறு கலந்தாலும் உடனே
ஆவியாய்ப் போனாலும்
மாறு படாக் கடல்போல் எனது
மனம் இருக்க அருள்

சிகா : அம்மா, இருவினை உலகில் இன்பதுன்ப அலைகள் மோதும். இன்பமும் நிலையில்லை ; துன்பமும் நிலையில்லை. வானத்திலே மேகம் கவர்ந்து விலகுவதுபோல் வாழ்க்கையில் கவலைபடரும். எதற்கும் கலங்காதே … காற்றைப்போல் சுதந் தரமாயிரு.. பகவான் வழிவிடுவார் .. இறைவா!

பாரெங்குமே நிறைந்தும் – எதிலும்
பற்றற்ற காற்றினைப்போல்
போர்மிகும் பூமியிலே-சுதந்தரம்
பொலிந்து வாழவருள்

மனோ : அப்பா! நான் குழந்தைபோல் இருக்கிறேன் ; அரு என்னையே துணை.

மாசற்ற சேயினையும் – தாய்
மஞ்சன மாட்டி மிகத்
தேசுறச் செய்வதுபோல்-மனத்
தீமை துடைத்தருள்வாய்..

சிகா : மகளே, இங்கே உள்ள நிலை முன்பே தெரிந்ததுதான். நாம் செய்தவினை இத்துடன் ஒழியட்டும். சீதையும் தமயந்தியும் சந்திரமதியும் நளாயினியும் என்னபாடு பட்டார்கள் ! அதை நினை ; எப்போதும் கீழே பார்க்காதே. அந்த வானத்தைப் பார்…

இருவரும் :

மீனினம் உற்றாலும் கார்மழை
மேகம் கவர்ந்தாலும் –
பால் நில வுற்றலும் – பகலொளி
பாய்ந்து பரந்தாலும்
வானவிரிவினைப்போல் – நிலைபெறும்
வாழ்வை எனக்கருள்வாய்
மோன வெளியினிலே விளங்கும்
முத்தி மணி விளக்கே..

[வருதல் பூதகி]

பூதகி : இந்தப் பாட்டும் உபதேசமும்.. பிடிக்கவேயில்லை.. இவளைத் தொலைத்துத் தலைமுழுகி..

சிகா : அம்மா நான் போய்வருகிறேன். குழந்தையை, குழந் தையை…….. (கண் கலங்கல்)

பூதகி : மனோரமாவை நாங்கள் பூப்போல வைத்திருப்போம் கவலை வேண்டாம். குழந்தைபாட்டுக்குப் பாடிக்கொண்டு சந் தோஷமா யிருக்கட்டும். என் பிள்ளை தங்கக்கம்பி, அவள்மேல் உயிரா யிருப்பான்.

[வருதல் மல்லப்பன்]

மல்ல : என்ன சிகாமணி, நாழியானது. புறப்படு.. சிகா : மல்லப்பா, ரமாவைப் பார்த்துக்கொள்..

மல்ல : பேஷாய்ப் பார்த்துக்கொள்ளுகிறோம் ; கண்போலப் பார்த்துக்கொள்ளுகிறோம். சிகாமணி, அவள் என் பெண். நீ கவலைப்படவே தேவையில்லை..

சிகா : நாம் கவலைப்பட்டென்ன மல்லப்பா… இறைவன் இச் சையை மீறி எது நடக்கும் ?..

(சட்டநாதன் வருதல்)

மாப்பிள்ளை, சென்றுவருகிறேன். ரமாவைக் கவனித்துக் கொள்.. –

சட்ட் : என் கடமை எனக்குத் தெரியும்.. குட்பை ! ஹ..ஜிலு ஜிலு எங்கே! இவளெங்கே!

(ஜம்பமாகப் போகிறான்)

சிகா : ரமா, நன்றாயிரு. சத்தியமும் தர்மமும் உன்னைக் காக்கும்

அறமென் றறிந்ததனை அஞ்சாது செய்மின்;
இறைவனருள் காக்கும் இனிது.

(எல்லாரும் வழியனுப்புகிறார்கள்)

6. ஜிலுஜிலு மோகம்

ஜிலு : வா வா என் ராசா.. உன் காதலால் அப்படியே வாடித் தவிக்கிறேன். என் இத்தனை நேரம்?..

சட்ட : கோர்டில் பெரிய ஆர்குமெண்டு… கேஸ் வென்றது.

ஜிலு : பீசும் வந்தது . . பைக்குள் குலுங்குகிறது.. எங்கே என் சட்டைராஜா..

சட்ட : எல்லாம் உனக்குத்தானடீ மோகனக்கிளியே … இந்தா [கலகலவென்று கொட்டுகிறான்) ரதியே ஒருடான்ஸ் ஆடுவோம்.

ஜிலு : ஆனந்தக் கூத்தாடுவோம்…

[இருவரும் கைகோத்து நடனமாடுதல்]

[குந்தலவராளி-ஜம்பை]

இருவரும் : நாகரிகமாகவே நடனமாடி மகிழுவோம்…

ஜிலு :
தாகங்கொண்டு உள்ளங்கள்
தழுவித் தழுவிக்கொஞ்சியே

இருவரும் : நாகரிக மாகவே…

ஜிலு :
வேக மான மின்னல்போல்
வீசிவீசிக் கால்களை

இருவரும் : நாகரிகமாகவே..

ஜிலு :
மோகங்கொண்ட காதலர்
முத்தமிட்டு முத்தமிட்டு

இருவரும் : நாகரிக மாகவே..

[கதவுச் சத்தம்]

ஜிலு : நடனம் முடிந்தது. சட்டம், உன்னைப் பிரிந்தால், மனம் துடிக்கிறதே.. மணி ஒன்பதானது..

சட்ட : ஆமாம் ; நானும் வீட்டை எட்டிப்பார்த்து இதோ வருகிறேன்.. கண்ணே …

ஜிலு : போய்வா.. நமது ஏற்பாடு நினைவிருக்கட்டும்..

[சட்டம் செல்லல்] ம

ணம் ; பிறகு பணம் ; பிறகு இவன் பிணம். ஹ ஹ ஹ..

7. மனவேதனை

[மனோரமா தன் மனவேதனையை இறைவனிடம் முறையிடுகிறாள்]

[சிந்துபைரவி ஆதி]

ப: வேதனை தீராதோ- என்மன
வேதனை தீராதோ (வேத)

அ : சோதனைக்குமேல் சோதனை வந்ததே
சோர்ந்தென் ஜீவக்கொடி துவண்டு நொந்ததே (வேத)

ச: கவலைப் புயல்மோதும் கர்மசம் சாரத்திலே
கலங்கரை விளக்குநீ காக்கும் படகு நீயே
சவலைக் குழந்தை போலே தஞ்சம் புகுந்தேன்ஐயா
சஞ்சலம் தீரவும் வஞ்சமில் லாதவர்
நெஞ்சினிலே வந்து அஞ்சலென் றுரைத்தருள் (வேத)

பூதகி : இந்தப் பெண்ணின் அழகு அழகுதான்..காது சுளகுதான்…

மனோ : உங்கள் அழகு எனக்கு வராதம்மா, அவரவர் அழகு அவரவருடன்..

பூதகி : என் அழகுக்கு என்னடீ?.. எலுமிச்சம் பழமாவது இப்படித் தங்க நிறமா யிருக்குமா? மானாவது இப்படி ஒற்றை நாடியா யிருக்குமா?..பார் நான் துள்ளி நடப்பதை. என் குரல் குயிலுக்கும் வருமா?.. நீயும் பாடுகிறாயே..

மனோ : எங்கே நீங்கள் ஒரு பாட்டுப் பாடுங்கோ..

பூதகி : (கோழிக் குரலெடுத்து] –
வாரும் நலங்கிடத் தாரும் கைகளை
வந்தனம் மிகச் செய்கிறேன்..

[வருதல் மல்லப்பன்]

மல்ல : அடிஅடி என்ன நலங்குப் பைத்தியம் வந்தது….. உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது. வாடீ..

[இருவரும் செல்லல்]

[மணி ஒன்பது ; வெங்கு சட்டநாதனைத் தள்ளிவருதல்)

வெங்கு: சரி போ உள்ளே ! இனி என் குடும்பத்தேரை இழுக்கப் போகிறேன்..

[செல்லல்]

மனோ : ஐயோ பயமாயிருக்கிறதே.. தெய்வமே..

சட்ட : தடிக்கடா, பட்டிக்காடு, நான் வந்ததும் குட்நைட் என்று குலுக்கடீ.. வா நாகரிகம் சொல்லிவைக்கிறேன்

[இழுத்துச் செல்லுதல்]

8. நாகரிகப் பாடம்

(கிராமபோனில் ஜிலுஜிலு பாடிய திரைகானத்தை வைக்கி றான் சட்டநாதன்]

சட்ட : கேளடீ நாகரிக உபநிஷத்து..

காபி-ஆதி ப : ஜிலுஜிலு எனப்பளிச் சிடுதே- என்

சிந்தையைக் கொள்ளையிடுதே அ : கலகல என்று கனிநகை முகத்தில்

காதலின் காந்தம் கதிரிடுதே

(ஜிலு) முகத்துக்குக்ரீமும்-உதட்டுக்கு ரூழும் நகத்துக்குச் சிகப்பும் நயனத்து மையும்,

தந்தப் பல்லும் தளுக்கு மினுக்கும் (ஜிலு) மனோ : போதுமே தத்தாறிப்பாட்டு .. சட்ட : இதுதானடீ பாட்டு.. ஆஹா என்ன லாகவம், பாவம் நயம் எளிமை..

மனோ : இந்த ஜாப்தா எனக்குப் பிடிக்கவேயில்லை. – சட்ட : கற்றுக்கொள்ளடீ கழுதைக் குட்டி ; பத்தாம்பசலி பாட்டியம்மா பழக்கத்தை விடு..முகத்துக்கு க்ரீமும்..(பாடி ஆடுகிறான்) அடி அசடே மேகப் சாஸ்திரம் தெரியுமா?

மனோ : ஒரேடியாகச் சொல்லித் தீரும்.. கேட்கிறேன். சட்ட : இதோபார் பளபளபளான்னு.. எல்லாம் நாகரிகச் சாமான்கள். முதலில் முகக்ஷவரம் ; அகத்தின் அழகு முகத் தில், முகத்தின் அழகு ஜகத்தில். இந்த ஷேவிங் ஸ்டிக்கைப் போட்டு வழி. பிறகு இந்த லோஷனைப் போடு ; பிறகு தந்தப் பல் வைத்துக்கொள் ; பிறகு கிரீம் அல்லது ஸ்நோ. அப்புறம் லிப்ஸ்டிக்கால் உதட்டில் கனமாகத் தீட்டு ; கன்னத்தில் ரோஸ் அடித்துக்கொள். கைகளில் ரோஸ் தடவிக்கொள். பார் கண்ணாடியை.. ஆஹா ஜிலுஜிலு எனப்பளிச் சிடுதே..

மனோ : முகத்தை இப்படி அவஸ்தைப்படுத்துவானேன்? நன்றாக மஞ்சள் பூசிக் குளித்து, மலரும் குங்குமமும் அணிந்தால்..?

மங்கள மலருடன் மஞ்சளும் இருக்கையில்
மாயங்கள் எதுக்கையா – முகச்
சாயங்கள் எதுக்கையா?
குங்குவத் திருவுடன் பொங்கும் முகத்திற்குக்
குலுக்குகள் எதுக்கையா- பொய்ப்பல்
மினுக்குகள் எதுக்கையா?

இயற்கையான பல்லைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் தந்தப்பல் எதற்கு? இந்த மேகப் நாடகத்திற்குச் செலவு, என்ன வாகும்? நேரம் எவ்வளவு வீணாகும்?

சட்ட : அடி ஜடமே, மடிசஞ்சிப் புத்தியை விடமாட்டேனென் கிறாயே .. கேளடீ..ஒரு பெண் என்றால் கைக்குழந்தைபோல் பைக்குழந்தை யிருக்கவேண்டும். அதில் கண்ணாடி, சீப்பு, முகச் சாயம், லோஷன், உதட்டுச்சாயம், புருவமை, பெப்பர்மெண்ட், பிஸ்கெட், ஒரு நாவல், ரொக்கம் எல்லாம் கச்சிதமா யிருக்க வேண்டும். காலை மதியம், மாலை இரவு மேகப் கணக்கா யிருக்க வேண்டும். நடுத்தெருவில் கூடக் கண்ணாடி பார்த்து, மேகப்பைக் கவனிக்க வேண்டும். அப்போதுதானடீ நாகரிகம் வளரும். அழகு மலரும்..

மனோ : அல்லியும் கிளியும்போல், அருண நகையும்போல்
அழகானதே அழகு-இயற்கை
அழகை நிதம் பழகு
நாதா நல்லது சொல்லுகிறேன்; கேட்கவேண்டும்.

சட்ட : தையல் சொல் கேளேல் என்று ஔவை சொன்னாளே.

மனோ : அதற்குப் பொருள் அப்படியில்லை : தையல் சொல் கேள் ; ஏல்- பெண்மணி சொல்லும் புத்தியை மனமாரக்கேட்டு ஏற்று நட என்பது பொருள். மனைவி வீட்டரசி ; உணவளிக்கும் காமதேனு; அன்புக்கற்பகம். குலசக்தி ; குழந்தைகளை வளர்க்கும் பராசக்தி. பெண்ணின் கற்பே மண்ணின் சிறப்பு.

சட்ட : பெண்ணாம் மண்ணாம், கற்பாம். அதெல்லாம் சரி. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை அல்லவா? நாயகன் சொல்வதை நீ கேட்டு நடக்கவேண்டுமே. நளாயனி என்ன செய்தாள் ?

மனோ : நான் என்ன செய்யவேண்டும்?… எல்லாம் சொல்லித் தீருங்கள் ……..

சட்ட : நீ எனது நவநாகரிக மேம்சாகெபாய் இருக்கவேண்டும். பதினெட்டு முழத்தை ஒழி; புடவை ஜார்ஜெட் காலமெல் லாம் போய்விட்டது. சிக்கனமாக தளுக்காக முழங்கால் சட்டை, மார்பிற்கு அங்கி.. கைக்கெடிகாரம் போட்டுக்கொள் ; காலுக்கு உறையும் பூட்சும் மாட்டு ; ஜோராக என்னுடன் வா; பென்னெட் லாட்ஜ் பளிங்கு மேஜையில் சாப்பிட்டு …

மனோ : வீட்டுணவை விட்டு விலையுணவு எதற்கு? நான் இலை போட்டு அன்புடன் அளிக்கும் தேவாமிருதத்தைக் கையால் உண்டு , நீர் பருகினால்…….?

சட்ட : அடி குஷியறியாத குட்டிச்சுவரே, உனக்கு நாகரிகம் ஏறாது.. இலையாம் கையாம்.. கரண்டிமுள் வைத்துச் சாப்பிட வேண்டுமடீ. கையால் தொடுவது அநாகரிகம். சாப்பிட்டதும் விறுவிறுப்பாக.. இதோ பார் :

புட்டி விட்டுப் பாரடீ பொங்கி வழியும் ஜோரடீ

மனோ : துட்டக் கள்ளுப் பேயினைத் தூரத்தள்ளு நோயினை

சட்ட : நாகரிக பானமே நகைநகைக்கும் தேனடீ

மனோ : மோகப் பேயின் வஞ்சமே மூடப் பித்தர் நஞ்சமே.

சட்ட : இன்பமான ஒயினடீ இனியஷாம் பைனடீ

மனோ : துன்ப நாகச் சாக்கடை துட்டப் பேயின் கட்கடை…

சட்ட : இதோ ஒருகப்.. பார் குடித்து…

மனோ : புட்டிமுழுதும் கொடுங்கள்…

சட்ட : அப்படி வாடீ அசல் மேம்சாகெப்..(தருகிறான்]

மனோ : போ சனியனே… சைத்தானே … மஹாத்மா காந்தி பிறந்த நாட்டில், இனி நீ இருக்கமுடியாது.. ஒழிக கள்ளுச்சனி..

(ஜன்னல் வழியே தூக்கி எறிந்து] ஹ ஹ ஹ ஹ..

சட்ட : அடி அநாகரிக இடியட் – ஹ நீ, எனக்கு லாயக்கில்லை. இரு சொல்லுகிறேன் சுருட்டைக் கடித்து

மனோ : நாதா
பதமான இளநீரும் பாலும் இருக்கையில்,
பாழுங்கள் எதுக்கையா-விஸ்கி
பிராண்டியும் எதுக்கையா ?
புதுமலர் வாசனை புகழுடன் இருக்கையில்
பொடிசுருட் டேதுக்கையா-உக்கா
குடிமயக் கேதுக்கையா?..

சட்ட : சரிசரி உனக்குப் பேய் பிடித்துவிட்டது… நீ என்னுடன் வாழத் தகுதியில்லை. அவளே எனக்கேற்ற ரதி…ஹா ஜில் ஜில்.. நாகரிக நட்சத்திரமே..

மனோ : அது ஏழரை நாட்டான்.. நாதா உமது நாகரிகம் விப’ சாரக்கிடங்கில் இறங்குகிறது. நரகவேதனையே மிச்சம்..

உபசாரம் செய்திட உத்தமி இருக்கையில்
விபசாரம் எதுக்கையா-அந்த
அபசாரம் எதுக்கையா?
சுபமான இல்லறம் சொகுசா யிருக்கையில்
சோரங்கள் எதுக்கையா-ஆர
வாரங்கள் எதுக்கையா?

சட்ட : நான்ஸென்ஸ், உன்னைக் கட்டியழ என்னால் முடியாது. உனக்கு 144 போட்டுவிட்டேன்..என் அறையில் நுழைந்தால், 124ஏ வரும், உஷார்..என் ஜோடி அவளே. . மை லவ்லீ ஜில்.. இதோ வருகிறேன்..

மனோ : நாதா, தாங்கள் கெடவிட மாட்டேன்… நான் இப்படி வேறொருவரிடம் போனால் சும்மா இருப்பீரா?.. கற்பு என்பது இருபாலாருக்கும் வேண்டும்… முடிவாகச் சொல்லுகிறேன்…… மகான்கள் சொன்ன உபதேசத்தைச் சொல்லுகிறேன்:

அடாணா- ரூபகம்

ப: அரிய மனிதப் பிறவி தன்னை அவல மாக்காதே-ஐயா (அரி)

அ : உரிய நல்ல பெரிய முத்தை
உடைத்தெறியாதே-ஐயா (அரி)

ச: குடியிலும் மாதர்-மடியிலும் காமப்
பிடியிலும் சொக்குப் பொடியிலும் சிக்கி
மெய்வழி அன்பு செய்வழியிலே
தெய்வக் கருணை சேர்ந்தி டாமல் (அரி)

சட்ட : நமக்கா உபதேசம் ? பீரோ பீரோவாகச் சட்டபுத்தகம் ‘படித்த பாரிஸ்டர் சிங்கத்திற்கா உபதேசம் செய்கிறாய் ?… அதன் பலன் பார் . . உன் கழுத்தைத் திருகுவேனடீ . . தா தங்கச்சங்கிலியை…

[பலாத்காரமாக இழுத்தல்]

மனோ : ஹா தெய்வமே.. தெய்வமே.. ஐயோ அனாதரக்ஷகா. ஆபத்வாந்தகா.. ஹே ஜகதீசா..

[ஓடிவருதல் பூதகி, மல்லப்பன்)

இருவரும் : என்ன என்ன …!

பூதகி : என்னடீ லண்டீ.. என் பிள்ளை என்ன செய்தான்? எனடீ அலறுகிறாய் ?…

பூதகி : மாமி, இன்னும் செய்ய வேண்டியது பாக்கியிருக் கிறதா?

[அழுகிறாள்)

மல்ல : நீ சும்மா இருடீ.. இந்தப்பயல் பண்ணும் கொடுமை மிதமிஞ்சிவிட்டது. . ஐயையோ இதென்னடா ! சாராயப் புட்டி, அட பாவீ… என் குடியைக் கெடுத்தாயே பஞ்சமா பாதகா..

சட்ட : டாம் ஷட் அப். கெட் ஔட்.. நீயார் என்னைக் கேட்க… நான் மேஜர் ; சுதந்தரச் சட்டம் செக்ஷன் பத்து, கவனம்.. நான் சட்டப்புலி..

மல்ல : சட்டப்புலிதான். என் பணத்திற்குச் சனியன்.. –

சட்ட : உன் பெட்டகத்தை உடைக்கிறேன் பார். பணத்தை என் செலவிற்கு அள்ளிவிடுகிறேன் பார்..

மல்ல : ஐயோ ! என் பெட்டகம் பணம். ஐயையோ… பொன்னம்மா ..(ஓடுகிறான்]

பூதகி : எனடீ பிடாரிமாதிரிக் கத்தினாய் ..என் பிள்ளை என் னடீ செய்தான்?

மல்ல : மாமி உங்கள் பிள்ளை குடிப்பதும் விபசாரம் செய்வதும் நியாயமா?..

பூதகி : பொய்யைப்பாரு பொய்யை … என் பிள்ளை பரமசாது.. கணவன் சொற்படி கேட்டு நட்டீ ..

[போகிறாள்]

சட்ட : அப்படிச் சொல்லம்மா.. கேளடீ பதிவிரதை. நளாயனியை நினை.

மனோ : ஒரேபேச்சு ; நீர் குடிகூத்தி மோகத்தில் கெட்டலையு மட்டும் உம்மை நான் தீண்டேன். என்னை நீர் தொடக்கூடாது..

சட்ட : உன்னை யார் தொடக்காத்திருக்கிறார் ? உன்னைத் தொட்டால் அநாகரிகம் ஒட்டிக்கொள்ளும். போ வெளியே போ உன் அப்பன் கதராண்டியிடம்.

[பிடறி பிடித்துத் தள்ளிவிட்டு, அவள் சங்கிலியை எடுத்துக் கொண்டு ஜிலுஜிலுவிடம் ஓடுகிறான்]

மனோ : இறைவா இறைவா.. நீயே துணை. என் பிறந்தேன்? எங்கே செல்வேன்? இந்த உடல் எதற்கு? உயிர் விடவா? வேண்டாம்… இந்த உயிரை தீனசேவை யாக்குகிறேன். உடலைப் பொதுநலத் தொண்டிற்கே பலிதான மாக்குகிறேன். கள்ளையும் விபசாரத்தையும் ஒழிப்பேன். மஹாத்மா உபதேசப்படி நடப் பேன். தந்தையின் சேவா நிலையமே இனி என் வீடு. சேவையே குடித்தனம். மாமனாருக்கு ஒரு கடிதம் எழுதிப்போட்டுச் செல்லுகிறேன்..

சோதனை இன்னமும் ஆமோ-நான்
துன்பப் பட்டுப்பட்டு நொந்தேன்
மேதினி படைத்தனை தாயே -என்
வேதனை துடைத்தரு ளாயோ!
மனச்சாட்சியே, உன்வழியே மெய்வழி… மனமே செல் செல்.

[செல்கிறாள்)

9. ஜிலு ஜிலு மாயம்

[ஜிலுஜிலு தங்கராஜனுடன் சூழ்ச்சி செய்தல்]

தங்க : கண்ணே அந்த வாலிபன் பணக்காரன். படிப்பு பலம். உனக்குக் காரியதரிசியா யிருக்கத் தகுந்தவன்.

ஜிலு : அதற்கே வலைவிரித்தேன். சிக்கினான். நடத்தும் நாட கம்! – தங்க : நாட்டுப்பெண் என்ற நமது படத்திற்கு அந்தக் காட்சி யனுபவம் அவசியம் வேண்டும். சட்டநாதனிடம் படம்பிடிக்கவும் சம்மதம் கேள்.

[கதவுச்சத்தம்]

ஜிலு : நீங்கள் அடுத்த அறையில் இருங்கள். யார் ?

[தங்கராஜன் செல்லல்]

சட்ட : நான், சட்டநாதன்..

ஜிலு : வட்டநாதனா வரவேண்டும். (கதவைத் திறந்து] உன்னைக் காணாமல் உயிர் துடித்தேன்.

சட்ட : உன்னைக் காண உயிர்துடித்து வந்தேன். இன்றே நமது மோதரம் மாற்றியாக வேண்டும்.

ஜிலு : உனக்கு மனோரமா இருக்கிறாளே.

சட்ட : அந்தப் பத்தாம்பசலி பதிவிரதையை கெல்தாக் கொடுத்து, ஊருக்கு அனுப்பிவிட்டேன். இனி அவள் வரவே மாட்டாள். நீதான் என் துணைவி. இதோ அவள் சங்கிலி உனக்கு..

ஜிலு : என் ராசா சமர்த்து. உன் அம்மா பூதகி என்னைக் கண்டு இடிமுழக்கம் செய்தால்…?

சட்ட : அதற்குத்தானே யுக்தி கண்டுபிடித்து வந்தேன்……. அவளுக்குத் தற்புகழ்ச்சி விருப்பம். அவள் இட்ட வேலையைச் செய். பிறகு சுதந்தர நடனம் தொடங்குவோம்..

ஜிலு: எல்லாம் முன்னே தெரிவிக்கவும். மறந்துபோகாமல் பாடம் செய்து வைக்கிறேன்.

சட்ட : அம்மா, புதிய நாட்டுப்பெண் பரமசாது ; உலகமே தெரி யாது. உன் மனப்படி ஆடுவாள். சூதுவிநயமே தெரியாது. பாரதம் தலைகீழே பாடம் … என்றெல்லாம் சொல்லுவேன். நீ நாணத்துடன் தலையைக் குனிந்துகொண்டு, உண்டு இல்லை என்று தலையாட்டவேண்டும். பே…சா… தே…..

ஜிலு : அம்மாஞ்சி நாடகத்தில் அதிமதுரமாக நடித்தவளுக்கு இதுகூடத் தெரியாதா? ஆனால் ஒன்று. இனி நமது வாழ்க்கை உலகப் பிரசித்தமாக வேண்டும். எனது நண்பர். ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறேன். நமது வாழ்க்கையை உடனுடன் படம் பிடிக்க வேண்டும். – சட்ட : அப்படியே நடக்கட்டும், இப்போதே தொடங்குவோமே.. நாம் காதல் மணம் புரிந்து நடனமாடும் காட்சி முதலில் … எங்கே பார்ப்போம். கண்ணே கண்மணியே…

ஜிலு: கண்ணா, கட்டழகா [எல்லாம் தங்கராஜா படம் பிடிக்கிறான்)

சட்ட: பெண்ணே பெண்மணியே

ஜிலு: பிரிய மதன்மோகனா..

சட்ட: உன்னைக் காதலித்தேன் ; உடனே மணம்புரிவோம்…

ஜிலு: மன்னா மையல் கொண்டேன் ; மாற்றிக்கொள் மோத ரமே.

[மோதரம் மாற்றுதல்)

சட்ட : ஆசைக் கிஞ்சுகமே

ஜிலு : ஆஹா என்ன சுகமே
ஆஹாஹஹஹஹ ஆனந்தம் ஆனந்தம்
ஆசைப்ரவாகம் ஆடலின் வேகம்

ஆஹாஹஹஹஹ….

[செல்லல்]

10. புது நாட்டுப்பெண்ணே

[பூதகி மனோரமாமேல் பழிசுமத்துகிறாள்]

பூதகி : ஓடுகாலிக்கு வீடு பிடிக்குமா? கோட்டையைத் தாண்டு கிறவளுக்குக் குட்டிச்சுவர் எந்தமட்டு? காவலுக்கு மேல் தாவல் போட்டாள். ஒழியட்டும் ; என் பிள்ளைக்கு நல்ல பெண்ணாகக் கொண்டுவருகிறேன்.

[வருதல் மல்லப்பன்]

மல்ல : அடியே, அடியே பூதகி : என்ன அடியே, மிதியே .. யாரை நான் அடிக்கிறேன் மிதிக்கிறேன்..

மல்ல : உன் கொடுமையினாலேதான் அந்த சாதுப் பெண் ஓடிப்போனாள்.

பூதகி : என் கொடுமையாலா ? அவள் கொடுமையாலே தான் வீடு இப்படியானது. எனக்கென்ன குறை? உங்களுக்கு நல்லது செய்தால் நன்றியேது ? இந்தப் பாழும் சம்சாரத்திலே நாற்பது வருஷமாகப் பாடுபட்டுப்பட்டு ஓடானதுதான் லாபம்..என் அம்மா நான் தரையிலே நடக்கக்கூடச் சகிக்கமாட்டாள்..

மல்ல : உன்னை ஆகாசக்கப்பலிலே கொண்டுவந்தாளோ.. உன் அம்மா?

பூதகி : உங்கம்மா படுத்தின பாட்டிலேதான் இப்படிப் போனேன் ? என் அழகு ரதிக்காவது வருமா? என் அடக்கம் அன்னத்திற்காவது வருமா? என் காரியக் கருத்து யாருக்கு உண்டு ? நான் பாடினால் குயில் தோற்றுப்போகுமே..

மல்ல : ஆஹாஹா . . ரதியே, போதும் தற்புகழ்ச்சி.. நீ உன் மாமியாரைப் படுத்தின கதையெல்லாம் இப்போது இழுக்க வேண்டாம். நாட்டுப்பெண் கண்ணீர்விட்டு எழுதிய கடிதத்தைப் படிக்கிறேன் கேள்…..

பூதகி : இந்தக் காலத்துப் பெண்களுக்கு எழுதத் தெரிந்தது தான் பிசகு..அதனாலேதான் போட்டோக்காதல்களும் தபால் கலியாணங்களும் அதிகமாய்விட்டன. அடக்கமே போய்விட்டது. எங்கள் காலத்திலே அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு என்பார்கள். அப்படிப் படித்தாலும் ஏதோ எழுத்துக் கூட்டுவ துடன் நிறுத்திவிடுவார்கள். இந்தக் காலத்துப் பெண்கள் பி.எ. எம். எ. தேறி, கவுன்போட்டு ஆண்களுடன் போட்டி போடுகிறார் கள். .கலிகாலம் ! அதிலும் இவள் திரிசமனும் சரிசமனும் இப் படியானது..

மல்ல : அடியே அந்தப் பெண்மேல் பழிசுமத்தாதே… அவள் எழுதிவைத்ததைப் படிக்கிறேன் கேள். உனக்குத்தான் படிப் பில்லையே

பூதகி : எனக்கா இல்லை. ஆனா முதல் னானாவரையில் தெரிந்த எனக்கா? எல்லாம் அதற்குள்ளேதானே அடக்கம்…

மல்ல : சரி கேள்.. பெண்ணுக்கு இரங்கும் அன்புள்ள அறிவாளிகளுக்கு இந்தக் கடிதம் எழுதுகிறேன் :

நான் தேசபக்தரான சிகாமணி மகள். சட்டத் தொழிலாளி யான சட்டநாதன் மனைவி. அப்பா எனக்குக் கல்வி யறிவும் கலையறிவும் சுதந்தர உணர்ச்சியும் தந்தார். பதினாயிரம் ரூபா வரனுக்குத் தந்து, என்னை மனைவி ஆக்கினார். எனக்காக அவர் தமது ஆஸ்தி பாஸ்தியெல்லாம் தியாகம் செய்தார். இப்போது தமது தோட்டத்தில் சேவா நிலையம் கண்டு எழையெளியவர் களுக்குத் தொண்டு செய்கிறார். பக்தி பஜனை பரோபகாரம் இந்த மூன்றிற்குமே அவர் தமது வாழ்வை நிவேதித்தார். என் கண வரிடம் நான் அளவற்ற அன்பு கொண்டேன் ; கற்பு நெறியை இன்றும் காக்கிறேன். அவரைத் தவிர வேறெவரையும் நினை யேன். ஆனால் என்னை அவர் அறியவில்லை. அவர் ஒரு நடிகை மோகத்தில் விழுந்து, வரும்படியெல்லாம் அவள் மடியில் கொட்டிவிட்டு, அவளுடன் குடித்துக் களித்துத் திரிகிறார். நவ நாகரிகம் என்ற பெயரால், என்னையும் பௌடர் மோகினியாக்க முயன்றார். நானும் புட்டிபோட்டுக் கூத்தாட வேண்டும் என் றார். நான் அவருக்கு என்னால் முடிந்த மட்டும் நல்லது சொன் னேன். அதன் பலன் என் கடிகாரச் சங்கிலியை பலாத்காரமா கப் பறித்துக்கொண்டு, என்னையும் கெல்தா கொடுத்து வெளியே தள்ளி, அந்த வேசையிடம் ஓடியதுதான். இதை நான் பொறுக்கமுடியவில்லை. ஆதலால் அவர் குட்டிபுட்டி மோகங்களை விட்டு, ஒழுங்காகுமட்டும் நான் அவருடன் வாழமுடியாது என் றறிந்தே என் அப்பாவிடம் வந்துசேர்ந்தேன். மேலும் மாமி யார் பூதகிபாய் என் குடல் நடுங்கும்படியாகக் கொடுமை செய் தாள். என்னை அடிமை மாடுபோல் நடத்தினாள். மாமனாரோ கடும் கருமி. நான் போனது கூடக் கால்படி யரிசி லாபம் என்று நினைப்பார். இப்படிப்பட்ட வீட்டில் உத்தமப்பெண் எப்படி வாழ முடியும்? ஆதலால் நான் இனி என் வாழ்க்கையை வீட்டுவிவ காரத்திலிருந்து திருப்பி, நாட்டுப்பணிக்கே செலவிடுவேன். என் அப்பாவின் சேவா நிலையமே எனது வீடு, நாடு. நான் எங்கும் ஓடிப்போய்விடவில்லை. கணவர் திருந்திவர வேண்டும் என்றே இறைவனைத் தொழுகிறேன். உத்தம பத்தினி

மனோரமா –

பூதகி : ஐயையோ அடி பாவி பழிகாரி! நானா கொடுமை செய் தேன்? அவளைப் பூப்போலே வைத்திருந்தேனே.. :

மல்ல : அலறாதேடீ பிடாரி… அவள் பக்கமே நியாயம் இருக் கிறது. அவள் நிம்மதியாக சிகாமணியுடன் நல்ல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறாள். உலகெல்லாம் அவளைப் புகழ்கிறது. நான் கருமி என்பதை உணர்கிறேன். இந்தப் பயல் இருக்கி றானே, இவன் முழு அயோக்கியன். நேற்றுக் கள்ளச் சாவி போட்டு என் பெட்டகத்தில் கையை வைத்திருக்கிறான். இனி நான் போலீஸ் காவலில்லாமல் இங்கிருக்க முடியாது.

பூதகி : என் பிள்ளையைச் சொல்லாவிட்டால் உமக்குப் போது போகாது. ஐகோர்ட்டு பகதூர், தொப்பிதுரைகளெல்லாம் சலாம் போடும் சட்டதுரை… அவனுக்கென்ன, தங்கம்?

மல்ல : சரி உன் பிள்ளையை நீயே மெச்சு. நான் உடனே சிகா மணியைப் பார்த்துச் சமாதானம் சொல்லிவருகிறேன். நாலு நாளுக்கு வேண்டிய ரேஷனை அலமாரியில் வைத்திருக்கிறேன்.

[செல்கிறான்]

பூதகி : உங்களைத்தானே.. நில்லுங்கோ, நில்லுங்கோ’. . போய் விட்டாரே! இந்தத் தோசி தொடகாலி வந்து, என் வீட்டைத் துடைத்தாள்.. என் பிள்ளைக்குக் கண்குளிர ஒரு பெண்ணை இப் போதே தேடுகிறேன்…

[வருதல் சட்டநாதன். மாப்பிள்ளைக் கோலத்துடன்; தங்க ராஜனும் படம் பிடித்து வருதல்) சட்ட : அம்மா சுபம் சுபம்.. பூதகி : என்னடா கண்ணு… மாப்பிள்ளைக்கோலம் ! சட்ட : அம்மா உனக்கேற்ற நாட்டுப்பெண் ஜிலுஜிலு என்று இதோ வருகிறாள் பார்… பார் அழகை..

[ஜிலுஜிலு நடனமாடி வருகிறாள்)

நடைகுலுங்க நகைகுலுங்க
நாட்டுப்பெண் வருகிறாள்
நடனமாடி வருகிறாள்
இடைகுலுங்க இசைகுலுங்க
இன்பக்காட்சி தருகிறாள், தருகிறாள், தருகிறாள்!

பூதகி : கண்குளிர இருக்குடா ; துரையே இந்த ரதி யார்..? சட்ட : யாரா? தேவலோக ரம்பை அம்மா.. பரம சாதுன்னா சாது. என்மேல் உயிர்!

ஜிலு : [தலையை ஆட்டிப் புன்னகைக்கிறாள்]

சட்ட : இவள் அடக்கம் பூமாதேவிக்குக்கூட வராது. இவள் உள்ளே ஓர் ஆனந்தம் பொங்கிக்கொண்டிருக்கும்.. அது பொங் கும்போதெல்லாம் ஆவேச நடனமாடுவாள். தேவாதி தேவர் கூட அதைக்கண்டு மகிழக் காற்றில் மறைந்து நிற்பார்கள்.

பூதகி : சந்தோஷம் .. சந்தோஷம்…எனக்கேற்ற நாட்டுப் பெண்.. அதெல்லாம் சரி, என்னுடன் அடுப்புக் காரியம் செய் வாளா?.. – சட்ட : இதென்னம்மா பிரமாதம்? ஒரு சமயல்காரியைப்போட்டால் அடுப்புக் காரியம் பறக்கிறது.

ஜிலுஜிலு : மாமி, எல்லாக் காரியமும் ஆடலாகச் செய்வேன்.. பாரும்.

பூதகி : சந்தோஷம் அம்மா ; உன் பெயரென்ன? சட்ட : அம்மா அதுவும் தேவரகசியம்: இந்திர சபையிலே தேவலோக ரம்பை நடனமாடும்போது, இந்திரகுமாரன் ஜயந் தன்மேல் மோகம் கொண்டாளாம். அப்போது நாட்டியத்திலே ஒரு ஜதி தவறிவிட்டதாம். அங்கிருந்த நாரதர் சாபம் வைத்து விட்டார். ஜிலுஜிலு தகஜணு என்ற ஜதி தவறியதால், நீ பூலோ கத்தில், ஜிலுஜிலு என்ற பெயருடன் பிறக்க வேண்டியது என்று சாபம் கொடுத்தார். சுவாமீ எனக்கு எப்போது சாபவிமோசனம் என்று கேட்டாள் ரம்பை. ஜயந்தன் உன்னைக் காதலிக்கவே பிறப்பான். அவனைக் கண்டதும் நீ சட் என்று நின்ற தால், சட்ட நாதன் என்ற பெயருடன் வருவான். உடனே உனக்குச் சாப விமோசனமாகி இருவரும் கலாசேவை புரிந்தபிறகு, தேவ லோகத்திற்கு வருவீர்கள் என்று அருளினார் மகான். அதனாலே தான் இப்படி வந்து சேர்ந்து, இப்படிச் செய்தோம்..அம்மா..

பூதகி : ஹா அப்படியா.. நான் அதிட்டசாலிதான்..ஜிலுஜிலு, எனக்கேற்ற நாட்டுப்பெண்ணா யிரம்மா…சமைப்பாளா ? – ஜிலு : (சட்டநாதனிடம் ஜாடை காட்டுதல்)

சட்ட : அம்மா அவள் உற்சாகமாக எல்லாம் செய்வாள். நள பாகமாகச் சமைப்பாள் ; ஊரெல்லாம் மணக்கும். கொஞ்சம் அலுப்பு : இளைப்பாறி வரட்டும்….

பூதகி : சரியம்மா சரி.. நன்றாக இளைப்பாறம்மா……

[ஜிலுஜிலுவும் சட்டமும் நடனமாடிச் செல்லல்]

11. எல்லாம் கூத்து

வெங்கு : நல்ல நாடகம். பசுவை விரட்டியடித்துக் குரங்கை விலைக்கு வாங்கின கதைதான். நல்லது சொன்ன மனைவிக்கு கெல்தா. தைதா போட்டுப் பணத்தைப் பறிக்கும் தாடகக்காரிக் குச் சோடசோபசாரம். புட்டியும் குட்டியும் மூளையில் ஆனந்த நடனமாடும்போது, வினாசகாலத்திற்குக் கேட்கவேண்டுமா? இந்தப் பாபத்தைக் கண்ணால் பார்க்கச் சகிக்கவில்லையே. இதை விட்டொழிப்போமென்றால், எங்கும் வேலையில்லாத் திண்டாட் டம். வீட்டில் அரை டஜன் குழந்தைகள் அரோகண அவரோ கணம் பாடுகின்றன. அவளா, அவள் இடியும் புயலும்போல் வீறிடுகிறாள். சாப்பாடே எலேலப்பாடு… சினிமா பாட்டுக்கச்சேரி என்று எனக்கு முன் பாய்கிறாள். நீ பார்த்து வந்து எனக்குக் கதை சொல்லம்மா என்கிறேன். கதையுடன் காதலன் காதலிக் குத்தந்த பட்டுப்புடவையை வர்ணிக்கிறாள். அந்தமாதிரி என்னை வாங்கித்தரச் சொல்லுகிறாள். நான் எங்கே போவேன்? இந்த இழவுகளை யெல்லாம் விட்டுக் கிளம்புவோம் என்றால், அவள் என்னை உளவுபார்க்கிறாள்.. வாசற்படியைத் தாண்டுவதற்குள், என் குழந்தைப் படைகளைச் சமாதானம் செய்வது பெரும்பாடா யிருக்கிறது ; வியாவியா என்று பின்னே அலறிக்கொண்டுவரு கின்றன. பையன் படிப்பு, பெண் கலியாணம் என்று கவலை. சாமியாராகப் போய்விடுவோம் என்றால், சாமியார்கள் காலம் மலையேறிப்போனது. அப்படிக் காஷாயம் கட்டினாலும், அவள் என்னை அம்பலப்படுத்திவிடுவாள். இங்கே இருப்போம் என் றாலோ, அந்த உத்தமி போனபிறகு, இந்த வீடு சுடுகாடுதான். சட்டப்புலி சாராயப்புலியாய் உருமுகிறான். அவன் காதலி ஜிலுஜிலுவென்று பணம் பறிக்கிறாள். பூதகிபாய் அடுப்பங்கரையில் அலுத்துச் சலுத்து அலறுகிறாள், சாபம் வைக்கிறாள். இவள் ஜாஸ் நடனமாடுகிறாள். அடுப்பைப் பாரடீ என்றால் இடுப்பைக் குலுக்கி ஆடுகிறாள். தமாஷாகத்தான் இருக்கிறது! இந்தக் கூத்தையெல்லாம் அவள் நண்பன் தங்கராஜன் படம் பிடிப்பது தகும். இதைவிட நாடகம் எங்கே பார்க்கப்போகிறோம்! அண்ணாவா இரும்புப் பெட்டகத்தின்மேல் தவம் புரிகிறார். பிள் ளையா கள்ளச்சாவி தயாராக வைத்திருக்கிறான். கருமியும் டம்பா சாரியும் பிடாரியும் நடிகையும் நடத்தும் கேலிக்கூத்தா யிருக் கிறது வீடு..சட்டப்புலிக்கு ஊரெல்லாம் கடன்… பில்களை அப்பா விடம் தரச்சொல்லுகிறான். அப்பா என்மேல் பாய்கிறார்… என் செய்வேன், என் செய்வேன் எழை!..

[வருதல் மல்லப்பன்)

மல்ல : வெங்கு இன்னுமா நிற்கிறாய்..?

வெங்கு : அண்ணா உங்கள் சித்தம் இரங்கவேண்டும் என்று ஜபம் செய்துகொண்டிருக்கிறேன்.

மல்ல : என் பெட்டகத்திற்கு விரோதிகளெல்லாம் ஒழிய வேண்டும் என்று நானும் ஜபம் செய்கிறேன். – வெங்கு: சாபம் போடாதேங்கோ அண்ணா..ஆள் வெட்டினால் வாள் என்ன செய்யும்.? ஆனால் அவரும் தங்கள் மூத்த பிள்ளை. கடன் தொல்லை அதிகமாகிறது. ஐயாயிரம் உதவினால்.. இந்த பில்கள்..

மல்ல : அடசட். என் பணத்தையே மோப்பம் பிடித்து வரும் கழுகுகாள்! அயோக்கியப்பயல்….. மஹாலக்ஷ்மியை விரட்டி யடித்து, ஒரு மூதேவியுடன் குடித்துக் கூத்தாடும் அவனுக்கா பணம் தருவேன்? பெயர் பிள்ளை, அடிப்பது கொள்ளை, இவனால் பெரும் சள்ளை. சரி உள்ளே ரகளை [பின்னால் “ஐயோ ஐயோ அம்மாடீ அம்மாடீ..!” இருவரும் ஓடுதல்]

12. அடி நாட்டியக்காரி

[பூதகி ஜிலுஜிலுவை வேலை எவுகிறாள். அவள் நடனமாடுகிறாள்)

பூதகி : அடி அம்மா புண்ணியமுண்டு ; களைத்துவருகிறது.. ஹா ஹ.. இடுப்புவலி

ஜிலு : சரிகம பதநீசாசா! சநிச நிசா.. – பூதகி : இதென்னடீ நாட்டுப்பெண்ணே, என்னையா திட்டு கிறாய்..சநியனே நீசா என்கிறாயா. அடி நாட்டியச் ச்நியனே நீசா…

ஜிலு : தக்கத் தகதக தகதிமி ததிங்கிணதோம்.. ததிங்கிண தோம்….

பூதகி : அடி என்னடீ பெண்ணே , மாமியார் படும் வேதனை தெரியவில்லையா… இரண்டு நடை தண்ணீர் கொண்டுவாடீ ….

ஜிலு : தகதிமிதி. . ததிங்கிணதோம்.. தரிகிட தகஜம் ஜம் ஜம்

பூதகி : இதேதடீ மிதிமிதி என்கிறாய். என்ன திமிர்பிடித்த பெண்ணடீ !.. வாடீ கொஞ்சம் கறி திருத்திக்கொடு. வலி பொறுக்கமுடியவில்லை.

ஜிலு : ஹஹஹஹ ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்.. பூதகி : அடி உன்’ ஆனந்தத்தில் கொள்ளிக்கட்டையை வைக்க….. கூத்தாடிச்சி. சமையலைக் கவனியடி… ஜிலு : ஹஹஹஹ மையல் சமையல்… பூதகி : ஐயையோ இது பெண்ணில்லை நாட்டியமாடும் பேய்.. அடி எனக்கு முடியவில்லை கொஞ்சம் கூடத்தைப் பெருக்குடீ..

ஜிலு ! சசசச சாசா ஹஹஹஹ சாசா! பூதகி : அடி மூதேவி.. நானேடீ சாவேன் … நீ சா போ. ஒழுங் காகச் சமைக்காவிட்டால் தெரியுமா?… போடீ அடுப்பங்கரைக்கு.. ஜிலு : சமைத்துச் சமைத்துப் போட்டீ ; சாளவாயை மூட்டீ.. பூதகி : நான் சமைத்துச் சமைத்துப்போட்டு வாயை மூடிக் கொண்டிருக்கவேண்டும்.. நீ?

ஜிலு : அமிசயித்துப் பாடுவேன்; அடவு காட்டி ஆடுவேன்.. பூதகி : ஓகோ நீ நாட்டியமாடிக் கொண்டிருப்பாய் ; நான் மாடாய் உழைக்கவேண்டுமோ? போடீ தோசைக்கு அறைக்க..

ஜிலு : தோசைவார்த்துப் போட்டீ, துவையலுடனே கூடவே ஆசையா உண்ணுவேன் ஹாஸ்ய நடனம் பண்ணுவேன்..

பூதகி : உன்னை விறகு கட்டையால் போடுகிறேன் பார்.. (ஜிலு விறகுக் கட்டையைப் பறித்து பூதகி மண்டையில் போடப் போகிறாள்; பூதகி அலறி ஓடுதல்)

பூதகி : ஐயையோ பேய் பேய்! ஊதாரி ! ஊர் சுற்றி வேசை.. ஐயோ அவள் தேவலை ; சாது ; மனோரமா உத்தமி ; காரியத் திற்குக் கப்பல் ; இவள் படுநீலி ; அடி சண்டாளி- என் பிள் ளையைக் கெடுத்த மூதேவி! ஐயையோ!

[ஓடிவருதல் மல்லப்பன்)

மல்ல : என்னடீ என்னடீ…

[ஜிலுஜிலு ஓடிப்போகிறாள்]

பூதகி : இங்கே பாருங்கோ கூத்தை … பேய் பிடித்து இப்படி ஆடுகிறாள். விறகுக்கட்டையால் என் மண்டையில் போடுகிறாள்.

மல்ல : அவள் பேயுமில்லை பிசாசுமில்லை. நமது குடியைக் கெடுக்கவந்த வேசை. அந்தத் தத்தாரி இவள் வலையில் விழுந்து பாபராய்விட்டான்.. மூதேவீ, நீ அந்த மஹாலக்ஷ்மியைப் படாதபாடு படுத்தினாய் ; பலனை அனுபவி..

பூதகி : இதேதடீ எல்லாரும் என்மேல் பாய்கிறார்கள். உங்க ளுக்குத் திறமை யிருந்தால், இந்தத் தட்டுவாணியை விரட்டி யடித்து, அந்தத் திருமகளை அழைத்துவாருமே. அவளே நல்ல. வள் என்றுதான் இப்போது சொல்லுகிறேனே…

மல்ல : அந்த உத்தமி அங்கே சேவா நிலையத்தில் தேசசேவை யும் தீனசேவையும் பாட்டும் தியானமுமா யிருக்கிறாள். அவள் இங்கே வருவாளா- இந்தக் கலக நரகத்திற்கு ?..இந்தச் சண் டாளன் திருந்தினால் வரலாம்.. இவன் புத்திதான் குடிகூத்தியில் மடிந்துபோனதே.. – [வருதல் சட்டம்: ஆத்திரத்துடன், ஜிலுஜிலு நடனமாடி வரு கிறாள்)

சட்ட : யாரை அப்படிச் சொன்னாய்?.. குடி கூத்தி-ஹும் நீ தண்ணீர் குடிக்கவில்லை, பால் குடிக்கவில்லை… நான் எனக் குப் பிடித்ததைக் குடிக்கிறேன். இவளா கூத்தி ?..

பூதகி : போதுமடா ..குடிகேடா . . மடையா தடியா, உன்னைக் கட்டையிலே வைக்க, முட்டையிலே வைக்க…

சட்ட : ஹும் மூடு. வாயை… பேசினால் சுட்டுப்போடுவேன்…. ஹும் நம்மை யாரென்று நினைத்தாய்?..

பூதகி : நினைக்கிறதென்ன ? உன் நாற்றம் ஊரெல்லாம் தெரிந்ததுதானே.. தேவலோக ரம்பையாம், இந்தத் தேவடி யாளைக் கூட்டிவந்து ..இது வீடா நாடகக்கொட்டகையா?…காரி யம் செய் என்றால் காலைக் கிளப்பிக் கூத்தாடுகிறாள். இந்தச் சிரிக்கி..மின்னாமினுக்கி. நாகரிகக் கொள்ளைக்காரி, பூ?

சட்ட : ஹும் ஜாக்ரதை அவள் மானநஷ்டிக்குப் பிராது போடுவாள். அவள் சம்பை ; தேவலோக நினைப்பு வந்தபோ தெல்லாம் அப்படித்தான் ஆடுவாள்.

பூதகி மல்ல : போதுமடா சதுர்க்கச்சேரி, நிறுத்து..

சட்ட : அவளை நிறுத்த பிரம்மாவாலும் முடியாது. அதற்கு ஒரேவழி, இதோ பார்; ஒரு தங்கச் சங்கிலி போட்டு, நானும் கூட ஆடவேண்டியது. ஏனென்றால் நானே ஜயந்தன்..

[இருவரும் கைகோத்துக் கூத்தாடுதல்)

இருவரும் : ஜோடி யாக ஆடுவோம்
–சொக்கும் இன்பந் தேடுவோம்..

மல்ல : ஐயோ போதும்! ஐயையோ போதும்! இது வீடு, குடும்பம், குடித்தனம் ; நாடகக்கொட்டகையில்லை. இங்கே நீங்கள் இருக்க லாயக்கில்லை .. போடீ மூதேவீ ….

இருவரும் : ஜிலுஜிலுஜிலுவென ஆடுவோம். மிஸ்டர் மல் கொடு சன்மானம், திற பெட்டகத்தை. எடு ஆயிரம்

பூதசி : இருங்கோ வெண்சாமா சன்மானம் செய்கிறேன்… அப்போதுதான் பைத்தியம் நிற்கும்..

[துடைப்பத்தைத் தூக்கிவருகிறாள்)

சட்ட : அடி நான்ஸென்ஸ் ! இடியட் புருட்..(ஓடுகிறான்)

[ஜிலு நடனமாடிக்கொண்டே பின்னால் ஓடுகிறாள்]

மல்ல : அடியே, இவன் கள்ளச்சாவி தயாரித்து, என் பெட்ட கத்தைக் கொள்ளையடிக்கச் சூழ்ச்சி செய்கிறான். இவனிடம் பணம் சிக்கினால், குடிகூத்திக்குப் போகும். ஜிலுஜிலு பறித் துக்கொள்வாள். நான் இந்த வீடு ரொக்கம் எல்லாம் அந்த மஹாலக்ஷ்மி நடத்தும் சேவா நிலையத்திற்கே தந்து, அங்கேயே நல்லபோதாகப் போக்கத் தீர்மானித்துவிட்டேன். வீட்டையும் விலைபேசியாயிற்று. நீயும் புறப்படு…

பூதகி : அவ்வளவு கொடுமை செய்த என்னை அவள் மதிப் பாளா?…

மல்ல : அவள் தங்கமான பெண். சிகாமணியும் இதே யோசனை சொன்னான். இந்தப் பிள்ளை திருந்தவும் இதுதான் வழி. காமராக்ஷஸி பணத்தை உறுஞ்சிக்கொண்டு ஓடுவாள் ; பிறகு ஆள் திவாலாகி நம்மைத் தேடிவருவான்..

பூதகி : சரி புறப்படும்…

[வருதல் வெங்கு)

வெங் : அண்ணா அண்ணா, இந்த வீட்டுவேலை எனக்குப் போதும். சட்டதுரை சாராயச்சாக்கடையில் ஜிலுஜிலுவென்று ஜலக்ரீடை யாடுகிறார். இருவரும் கள்ளச்சாவி தயாரித்துவிட்ட னர். இரவில் உம்மைக் கொலை செய்தாவது பூராப் பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு ஓடிப்போகச் சதிசெய்திருக்கிறார்கள். நீங்கள் உடனே சேவா நிலையத்திற்கு ஓடவேண்டும்.. அவசரம், அவசரம்.. நானும் அங்கே வருவேன்…

மல்ல : ஆஹா என்ன காலம், என்ன கோலம்.. பணத்தினைப் படைத்தும் என்ன பையலைப் பெற்றும் என்ன குணத்தினைக் காணாப் பிள்ளை குடியினைக் கெடுத்த பிள்ளை வணக்கமே யில்லா மூடன் மகனெனச் சொல்லலாமோ? மணத்திரு மனைவி யென்று வேசையை மதிக்க லாமோ?

பூதகி : உங்களைத்தானே ; எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறதே. இந்த வேசையின் குட்டை உடைத்துவிட்டுத்தான் நாம் புறப்படவேண்டும்… இவளிடம் எனக்கொரு சந்தேகம்.. – .வாரும் சொல்லுகிறேன்

வெங்கு : அம்மா அவள் சாயப்பெட்டியை ஒளித்துவைத்தால் குட்டு வெளிச்சமாகும்.

[செல்லல்]

13. வேஷம் வெளிப்பட்டது

[ஜிலுஜிலு காலை எழுமணிக்கு எழுந்திருந்து “எங்கேஜ்ட்” என்ற பலகையை வெளியே மாட்டுகிறாள். மீண்டும் உறங்குகிறாள். முகச்சாயம் கலைந்துபோனது. பொய்ப்பல் மேஜைமேல் உள்ளது. பூதகி மெல்ல மல்லப்பாவைக் கூட்டிவருகிறாள்]

பூதகி : பாரும் வடிவழகை ; வாய் கோளை வடிகிறது. ஊத் தைப்பல் நாறுகிறது. பொய்ப்பல் இதோ உள்ளது. சாயம் கலைந்த முகம் திரைத்திருக்கிறது. உதடு வெளுத்திருக்கிறது. அதில் கரும்புள்ளி பாருங்கள்.

மல்ல : ஐயையோ அடி மாயராக்ஷஸி . . சூர்ப்பணகைமாதிரியிருக்கிறாளே.

பூதகி : வயது நாற்பதுக்குமேல்; பதினெட்டு வயது என்று சொல்லி இவனை மயக்கினாள். இந்தப் பைத்தியக்காரன் வந்து பார்க்கட்டும் .. சாயப்பெட்டியையும் பல்லையும் ஒளித்துவைக்கிறேன்.

[வருதல் சட்டநாதன்]

ஜிலுஜிலு : [திடுக்கிட்டெழுந்து] இங்கே வரக்கூடாது..போ வெளியே ..

சட்ட : ஐயையோ என் உயிரே, கிளியே… என்னடீ பிணக்கம். யாருன்னை என்ன பண்ணினார்?

ஜிலு :[முகத்தைக் கையால் மூடிக்கொண்டு) புரூட் ! எங்கேஜ்ட் என்று போட்டிருக்கிறேனே தெரியவில்லை?

சட்ட : அடி மன்னித்துக்கொள்..

முகத்தைக் கொஞ்சம் திருப்படீ முத்துப்பல்லைக் கர்ட்டடீ

[பலாத்காரமாக முகத்தைத் திருப்புகிறான்]

அகங்குளிரப் பார்க்கிறேன் ; ஐயையோ நீ யாரடீ..

ஜிலு : கெட் ஔட்… ஹம்!

சட்ட : பட்டார் என்று சினக்கிறாய்
பார்க்கப் பயமாய் இருக்கிறாய்
குழிந்த கண்ணும் குரங்குச் செகிடும் அழிந்த முகமும் ஐயோ அழகே!
அடி நீ யாரடீ ; ஜிலுஜிலு எங்கே?

ஜிலு : போ வெளியே ; நான் மணி அடிக்கும்போது வா.. ஜிலுஜிலுவைக் காண்பாய். போ!.

சட்ட : ஆ என் மனம் குழம்புகிறதே..

[போகிறான்]

ஜிலுஜிலு : [தாழிட்டுக்கொண்டு இவர்கள் சூழ்ச்சி அறிந்து தானே இன்னொரு மேகப்செட் வைத்திருக்கிறேன்.

[விரைவில் அலங்கரித்துக்கொள்கிறாள். உடனே டெலிபோன் பேசுகிறாள்]

ஹல்லோ தங்கராஜ்! காத்திருக்கிறேன். உடனே வா!

[வருதல் தங்கராஜன்]

தங்க : கண்ணே! தீர்மானம் என்ன? (கைகுலுக்குகிறான்] இவன் செய்தி?

ஜிலு : தயார் ; இவன் வெங்கம் ; இங்கே ஷூடிங் தீர்ந்தது. பணமில்லாத பிணத்திடம் என்ன வேலை? ஆள் திவால்; உடம்பு தேவாங்கு ; ஊரெல்லாம் கடன் ; அப்பன் கருமி. அம்மா காட்டேரி. முதல் மனைவி நினைவு அடிக்கடி வருகிறது…

தங்க : அவனைக் காரியதரிசியாக..

ஜிலு: இவன் காரியதரிசியானால் காரியம் நடக்காது ; காப்பிக் கடைக்குப் போய் பலகாரம் வாங்கிவரக்கூட இவனால் முடியாது. சொத்தை . . நத்தை.

தங்க : அப்படியானால் மோடார் தயார்..

ஜிலு : சரி இதோ ஒரு வேடிக்கை

[திரை விழுந்து மறுபடி ஏறுகிறது ; தலையணைமேல் போர் வை மூடியிருக்கிறது ; ஜிலுஜிலு மறைந்தாள்]

[வருதல் சட்டநாதன்)

சட்ட : ஹா மோசம், வஞ்சம். வேசையின் ஆசை காசின் அளவே. இவள் எனக்கு நாகரிகம் சொல்லுகிறாள் ! இந்த எங்கேஜ்ட் ஒழிக. (எடுத்தெறிகிறான்) ; உள்ளே போகிறேன்.. இதோ படுத்திருக்கிறாள். அடியே ஜிலுஜிலு..(அசையவில்லை) எனது தருமபத்தினியானால் இப்படிப்படுத்திருப்பாளா? நாதா நமஸ்தே என்று எழுந்து கும்பிடுவாளே.. ஒரு திருப்பள்ளி எழுச்சி பாடுகிறேன்..

பணத்தைப் பறித்திடப் பல்லை இளித்திடும்
பவுடர் மினுக்கியே எழுந்திறாய்
கணத்தினில் மாறிக் கவலை யளித்திடும்
காமக் குரங்கே எழுந்திராய்…

என்ன இன்னுமா உறக்கம்?..அல்லது இதுவும் நடிப்பா?.. ஒரு மிதி கொடு ! போர்வையை எடு ! ..ஐயையோ தலையணை! ஐயையோ மோசம், மோசம்!… ஏமாற்றம்! எமாற்றம்! கட வுளே என் மனமாற்றத்திற்கு இந்த எமாற்றமும் வேண்டியது தான். உன் இச்சையை யார் அறிவார்? என் பணத்தையும் பலத்தையும் உறுஞ்சிக்கொண்டு கம்பி நீட்டினாளே வேசை.. ஆ இதென்ன சீட்டு?.. உபதேசமா, சரித்திரமா… படிப்போம்..

“சட்டா! நீ முட்டாள், முரடன், அசடன், ஏமாளி. (இந்த ஆசீர்வாதம் வேண்டியதுதான்.. பிறகு? நீ பெண்ணை அறியாப் பேதை. (பெண்ணைப் பேதை என்பர். இந்தப் பெண் ஆணைப் பேதை என்கிறாள். பிறகு?) நாகரிகம் அறியாத மடயன்.. ஆண் அடிமை! அவள் வந்தால் இவன் எழுந்து நிற்கவேண் டும்.. தடித்தீவட்டி மாதிரி வருகிறாய். பெண் உத்தரவிட்டாலே வரவேண்டும்.. எங்கேஜ்ட் ஓய்வு என்று போட்டிருந்தால், ஓடிப் போகவேண்டும். .(ஹஹஹ.. நீதான் எங்கேஜ்ட் போட்டுவிட்டு ஓடிப்போனாயே. வேசைநாயே. பிறகு ?] உன்னை என் குமாஸ்தா வாக வைத்துக்கொள்ள நினைத்தேன்.. ஆனால் நீ எனக்குப் பின்னே காப்பிகூஜா சுமந்துவரக்கூட லாயக்கில்லை. (நல்ல உத்யோகம்) ஆள் ஓடிசல். தேவாங்கு.. நான் உன்னைக் காத லிக்கவில்லை. நாட்டுப்பெண் என்ற படத்தில் வரும் சில காட்சி களைப் படம்பிடிக்கவே வந்தேன். காரியம் ஆனது. டிரக்டருடன் செல்கிறேன். இனி எமாறாதே. முட்டாள்…”

ஹ! என்ன மோசடி.. என்ன காசடி!

பத்தினி பரிதவிக்கப் பரத்தையைக் காதலித்தேன் ;
பித்தினிற் குடித்துக் காமப் பேயெனத் திரிந்தேன் பாவி.
சத்தியம் தவறிக் கெட்டேன் தருமதேவதையே என்னை
இத்ததி மன்னிப் பாயோ இரக்கமே இரங்குவாயோ ?

இனி என்ன ! பையிளைத்தேன்! கையிளைத்தேன்! தனமிளைத் தேன் மனமிளைத்தேன், எல்லாம் பறிகொடுத்தேன். பஞ்சை யானேன். ஒரேபுகல் உண்டு. அந்த உத்தம பத்தினி. என் மனோரமா ! அவளைத் தேடிச் செல்கிறேன். அவள் அன்பு என் னைக் காத்தால் வாழ்வேன் ; இன்றேல் செத்தபிணமாக வீழ்வேன்..

வருந்தினேன் வஞ்சப் பாவி வாழ்வெலாம் பாழ்படுத்தி
அருந்தினேன் கள்ளை, வேசை ஆசையால் அவல மானேன்
திருந்தினேன் எனது கற்புத் தெய்வமே, உய்வளிக்கும்
மருந்தென உன்னைத் தேடி வருகிறேன், வருகிறேனே!

[செல்லல்]

14, நல்ல மகராசி

[சேவாசிரமத் தொண்டர் பாடி.. வருதல்]

புன்னாகவராளி- ரூபகம்
நல்ல மகராசி இந்த நாட்டுக் குபகாரி
அல்லலுறும் எழை – மகிழ – அன்பு செய் அன்னையவள்..

1: அடடா என்ன குணம், என்ன அன்பு, என்ன வாஞ்சை.. அம்மான்னா அம்மாதான்.. முகத்தைப் பார்த்தாலே பாபம் போகுமடா..

2: ஐயா தங்கம் ; அம்மா மாணிக்கமடா.. இந்தச் சேவா நிலை யம் சுவர்க்கலோக மானது ; அம்மா புண்ணியத்தாலே ஆயிரக் கணக்கான எழைகள் கவலையில்லாமல் பிழைக்கிறாங்க. பஞ் சம் தெளிந்தது.

பஞ்சம் பறந்ததம்மா-எங்கள்- பட்டினி தீர்ந்ததம்மா
நெஞ்சம் குளிர்ந்ததம்மா- தெய்வம் நேரே யிருக்குதம்மா

1: ஆமாடா தெய்வமே இப்படி வந்து நம்மைக் காத்ததடா.. இந்தக் கிராமம் போனவருசம் நரகமாயிருந்ததடா. நம்ம ஆட்க ளெல்லாம் உழைத்த காசைக் குடித்துவிட்டு, கஞ்சிக்கித் திண் பாடினது பரிதாபம்! கள்ளுக்குடியை ஒழித்து கள்ளுக்கிடங்கை பஜனைமடமாக்கிய இந்த அம்மா கருணையே கருணை..

2: நாமெல்லாம் அடிமைவேலை செய்து, பிழைப்புக்கே திண் டாடினோமே. இந்த அம்மா நமக்குக் கைத்தொழில் தந்தாங்க. இராட்டை சுழன்றது. பஞ்சடித்து நூற்றோம். தறி ஓட்டுகிறோம். பாய் பின்னுகிறோம், கூடை முடைகிறோம், சீப்பு, தந்தச் சாமான், சட்டி பானை, கத்தி, கத்திரிக்கோல், ஊசி, காகிதம் இன்னும் எத்தனையோ சாமான்கள் செய்து, மானமாகப் பிழைக் கிறோம்..

1: அதுமட்டுமா ; தற்குறியா யிருந்த நமக்கெல்லாம் இந்த அம்மா எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுத்த அருமைதான் என்ன!..இப்போது நாமும் நல்ல நல்ல புத்தகமெல்லாம் படிக் கிறோம். அறிவை வளர்க்கிறோம்…

எல்லாரும் : உத்தமக் கற்பரசி இந்த ஊருக்குக் கற்பகமே சித்தம் மகிழுதம்மா- வளால் – சேமம் பிறந்ததம்மா..

2: உண்மையப்பா உண்மை. கற்பாசின்னா இந்த அம்மா தான். அந்தக்காலம் கண்ணகி, சீதை, சாவித்திரி இருந்தது போல், இந்தக்காலம் இந்த அம்மா விளங்குறாங்க.

1: இந்த அம்மா புருசன் பட்டணத்து வக்கீல் சட்ட துரையாமே.

2: அவன் வக்கீல் பண்ணி அறுத்தான். ஒரு நாடகக்காரி அவனை வலையிலே பிடித்து ஆட்டுறாளாம். அவளுடனே குடிக் கிறானாம் குதிக்கிறானாம். நீ குடிகூத்தின்னு பாழாகுமட்டும் என் னைத் தொடக்கூடாதின்னு அம்மா பத்தினி இங்கே வந்துட்டா. எத்தனையோ பேர் இந்த அம்மாளை மறுமணம் புரியச் சொன் னாங்க… இணங்கவில்லை. கணவன் திருந்திவருவான் என்கிறாங்க. கடவுளைப் பாடுவது, நமக்கெல்லாம் நன்மை செய்வது இரண்டு தான் அந்த அம்மா வாழ்வு.

1: கடவுள் புண்ணியத்தால் அம்மா புருசனும் வந்து, இரண்டு பேரும் சந்தோசமா யிருந்தா, நம் உள்ளம் குளிருமப்பா…

[வருதல் சட்டநாதன் தளர்ந்து மெலிந்து] .

சட்ட : ஐயா, களைத்து வருகிறது. எங்காவது ஒருபிடி அன்னம் கிடைக்குமா?…

ஏழைகள் : அம்மாளிருக்குமிடம் – இங்கே
அன்னத்திற் கென்னகுறை?
தம்மாலே நல்லதெல்லாம் இங்கே- தாவி வருமையா

1 : ஐயா, நீங்கள் யார் ?..விவரமாச் சொல்லுங்கள் ; அம்மா விடம் தெரிவிக்கணும்.

சட்ட: (தேஷ்-ஆதி)

ஐயா யானொரு பாவி உலகில்
யாருமில்லாப்பா தேசி ;
பொய்த்தொழில் புரிந்த நிர் மூடன் காம
போகத்தால் கண்கெட்ட குருடன்

(ஐயா )

கற்புள்ள மணியினை இழந்தேன் கொடுங்
கட்குடி தன்னிலே மகிழ்ந்தேன்
அற்ப விலைமகளைப் புணர்ந்தேன்- என்
ஆவியும் யாக்கையும் தளர்ந்தேன்

(ஐயா)

சகம் எனக் களித்தது கண்ணீர் – என்
சரித்திரம் எல்லாம் புண்ணீர்.
இகபர சுகமொன்றும் அறியேன்-நான்
எட்டைத் துளைத்ததற் குறியேன்

(ஐயா)

சோக நாடகமிவ் வுலகம்- இதில்
தொட்ட பக்கமெல்லாம் கலகம்
போக நாடகமும் பொய்யே – தெய்வம்
புகலளித்தால் இனி உய்வேன்

(ஐயா) –

ஆ – நிற்கவும் முடியவில்லையே.. பசி, நோய், தளர்வு..ஹா மனோரமா..மனோரமா..[சோர்ந்து விழுதல்]

1: அடடா..விழுந்துவிட்டாரே ; அம்மா பேரைச் சொல்லுகிறாரே..ஒருவேளை…

2: எப்படி யிருந்தாலும் அம்மாளிடம் தூக்கிச் செல்வோ மடா..
எல்..எல..ஏலேல
நல்ல மகராசி-இந்த
நாட்டுக் குபகாரி
எல்லாரும் அன்னையென்றே- போற்றும்
எங்கள் திருமகளே

[செல்லல்]

15. சேவா நிலையம்

[சேவா நிலையத் தொண்டுகளைக் காட்டுக : நூற்றல், நெய்தல், படித்தல் முதலியன. மனோரமா குழந்தைகளுக்கு ஆடல்பாடல் கற்பித்தல்..)

நவரோஜ்-ஆதி

உலகக் கோயிலிலே – எங்கும்
உலவும் உயிர்த்தொகுதி
நலமோங் கிடவே நாம் – எந்த
நாளும் தொண்டு செய்வோம்.
எறும்பும் தேனீயும் போலே
இயல்பாய், சுறுசுறுப்பாய்
அரும்பும் வேர்வை சொட்ட-நாம்
ஆருயிர்த் தொண்டு செய்வோம் வாரீர் –
ஆனந்தமாய் உழைப்போம்….
உடலின் உறுப்புகள்போல் -நாம்
ஒற்றுமை யன்புடனே
கடவுளைக் கருதி நிதம் தேசக்
கடமையைக் காத்திடுவோம்..
நூற்போம் நெய்வோம் உழுவோம்
நூறுவிதத் தொழில் செய்வோம்
ஆர்ப்போம் ஜயஹிந்த் தெனவே-வான்
அரசுநம் பேரின்பக் கனவே.

[வருதல் தொண்டர் சட்டநாதனைத் தூக்கிக்கொண்டு]

தொண்டர் : அம்மா அம்மா, இந்த மனிதர் சாலையில் மயங்கி விழுந்தார். பாவம் பசிக்கிரக்கம், எழை! –

மனோ : ஆ அவரே..அப்பா அப்பா, தெய்வம் காத்தது.. வாருங்கோ. எண்ணியது நண்ணியது. [சிகாமணி ஓடிவருதல்

சிகா : ஆ மாப்பிள்ளை.. எப்படி யிருந்தவர் எப்படிப்போனார்.. சரி ; உடனே பால் புகட்டவேண்டும்.

மனோ : [உள்ளேசென்று பால் கொண்டுவருகிறாள்] அப்பா, பத்தினி கடமையைச் செய்கிறேன். பகவானே அவருக்கு ஆயு ளைத்தா. எனக்கு மாங்கல்ய பலனைத் தா.

[நாயகனை மடிமேல் சார்த்திக்கொண்டு, சங்கினால் பால் புகட்டுதல். அவள் கண்ணீர் அவன் கண்களில் விழுகிறது)

உலக மாயம் போனதோ உள்ளம் தூய தானதோ
கலக வேசை ஆசையும் கள்மயக்கும் போனதோ..
பத்தினி விரதமும் பலித்ததோ மணாளனே
சித்தமுந் திரும்பிற்றோ ? திருந்தியதோ ஜீவனே..

சட்ட : [கண்விழித்து] ஹா, நான் காண்பதென்னே …?

மனோ : நாதா நமஸ்காரம். நிம்மதியாயிரும்; இனிக் கவலையில்லை.

சட்ட : பத்தினித் தெய்வமே, உனக்கு நஞ்சுவார்த்த எனக் கோ பால் வார்த்தாய்! கள்ளுண்ட கயவன், என்னையும் மதித் தாயோ !..தேவீ!

மனோ : நாதா காந்தி புண்ணியத்தால் நாடு முழுதும் கள் ஒழிந்தது. இனி யாரும் குடியைக் கெடுக்கும் மதுவை அருந்த முடியாது.

சட்ட : பத்தினியை விலக்கிப் பரத்தையை விரும்பினேன். அவள் என்னை அம்பலமாக்கி ஓடினாள். உன் பனிமொழிகளை வெறுத்தேன். பலனை அனுபவித்தேன். உடல் இளைத்தேன் உயிர் துடித்தேன். மனம் நொந்தேன். ஒருநாள் என் கண் திறந்தது.

மனோ : சென்றதை மறப்போம். இனி நடக்கவேண்டியதை நினைப்போம்…

சட்ட : மனோரமா, நீ என் ரக்ஷகி, நீ என் குருதேவீ!

சுருட்டி-ஆதி

ப: நீயே கதி க்ருபா வதி –
நிகரில் லாத பெண் சக்தியே

அ : தாயே அனைய தயை காட்டினை
தர்மபத் தினியே சாந்த உத்தமியே (நீ)

ச: பாவி நான் உன்னைப் பரிதவிக்க விட்டேன்
பண்ணாத செயல் பண்ணிமதி கெட்டேன்;
தேவியுன் கற்புத் திறத்தாலே உய்தேன்
திருந்து வாழ்வையுன் சேவையாகச் செய்தேன் (நீ)

மனோ: நாதா, இன்று புதுப்பிறவி வந்தது. இந்தப் பிறவி யை தெய்வபக்தியிலும் ஜனோபகாரத்திலும் செலவிடுவோம்.

[வருதல் மல்லப்பன், பூதகி]

மல்ல : அதுதானம்மா ஜன்ம சாபல்யம், சிகாமணி… –

சிகா : வரவேண்டும்… வரவேண்டும் … சௌக்கியமா?

மல்ல : இந்த சேவா நிலையத்தை அடைந்த பிறகுதான் சாந்த மும் சௌக்கியமும் வந்தன. சிகாமணி, கதையை வளர்ப்பா னேன் ; நரகத்தை ஒழித்தோம். சுவர்க்கத்தை அடைந்தோம்.

பூதகி : நாட்டுப்பெண்ணே, நீயே வீட்டுப்பெண், பாட்டுப்பெண் எனக்கு வழிகாட்டும் பெண்..

மனோ: மாமி வாருங்கோ .. நமஸ்காரம்.

பூதகி : அம்மா உன்னைப் படாதபாடும் படுத்தினேன். அதற் குப் பலன் கைமேல் கிடைத்தது. ஒரு நாட்டியராக்ஷஸி வந்து..

சிகா : பழைய கதையெல்லாம் மறப்போம் அம்மா.

(வருதல் வெங்கு)

வெங்கு : பழைய கதையும் சுபமாகவே முடிந்தது ; ஜிலு ஜிலுவும் தங்கராஜனை மணந்துகொண்டாள் ; இருவரும் சேவா நிலையத்திற்கே வருகிறார்கள்.

சட்ட : பத்தினித் தெய்வமே, உன் கருணை கடலினும் பெரிது. இந்தமட்டும் என் வாழ்வு திருந்தி சேவாசாதனமானதே …பகவான் கருணை

சிகா : ஆம் அவன் சித்தமில்லாமல் என்ன நடக்கும். அவ னருளால் எல்லாரும் நலமோங்குக!

16. மங்களம்

[மனோரமா சட்டநாதர் திருமணக்கோலத்துடன் அலங்கார மகா வீற்றிருத்தல். தங்கராஜன் ஜிலுஜிலுவை மணம்புரிந்து அங்கே விளங்குதல், மற்றவர்களெல்லாரும் தம்பதிகளுக்கு மலர்தூவி ஆலாத்தி எடுத்து ஆசீர்வதித்தல்]

எல்லாரும் : சுபமஸ்து சுபமஸ்து..ரமாநாதர் நீடு வாழ்க! இல்லறம் தழைத்தோங்குக! எல்லாரும் இன்புறுக!:3

[மலர் தூவுதல்]

சிகாமணி : அன்பர்காள், ஆண்டவன் அருளால் நமது ஜீவ நாடகம் இனிது முடிந்தது. தீமை அகன்றது, நன்மை வென் றது. சேவா நிலையம் இன்று புதிய பொலிவெய்தியது. மனோ ரமாவின் மனோரதம் நிறைவேறியது. அவளது கற்பு: சட்ட நாதனைத் திருத்தியது. சட்டநாதன் மதிமயக்கம் ஒழிந்தது. சோதனைகளும் வேதனைகளும் தீர்ந்தன. ஜிலுஜிலுபாயும் திருந்தி தங்கராஜனை மணந்து இல்லறம் புகுந்தாள். இருவரும் இதோ சேவா நிலையத் தொண்டிற்கே ஆவலாக வந்திருக்கின்ற னர். பூதகி மல்லப்பரும் புதிய விழிப்படைந்தனர். மல்லப்பன் இரும்புப்பெட்டகமும் திறந்து, பொது நலத்திற்குப் பணம் சுரந் தது….

அன்பர்காள், உலகமே இல்லறம் ; வீட்டின் விரிவே நாடு; நல்ல இல்லறமே நல்ல நாட்டின் இயலறமாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை – பண்பும் பயனும். அது என்பது பொய்யாமொழி. அத்தகைய இல்லறவாழ்வின் வேர் அறம்; கிளை பொருள், மலர் இன்பம், கனி வீடு. இல்லறத்திற்குக் கற்புள்ள பெண் உடல், கற்புள்ள ஆண் உயிர்போல்வர். மனோ ரமாவின் கற்புத்திறன் இன்று விளங்கியது. சட்டநாதன் வாழ் வில் அன்பு ததும்புகிறது. பொது நல உணர்ச்சி பொங்குகிறது. இருவர். வாழ்வும் மறுமலர்ச்சி பெற்றது. இவர்கள் இல்லறம் கற்பகம்போலத் தழைத்தோங்குக. தமிழும் தமிழரும் தமிழ் நாடும் செழித்தோங்குக! இவர் வாழ்வு பொதுநல வேள்வியாகுக! சேவாநிலையத் தொண்டர் அனைவரும் இல்லறப்பயிரை வளர்த்து இன்புறக் கருணைப்பெருமானாகிய கடவுளை வணங்குவோம் :

எல்லாரும் :

(காமாஸ்-ரூபகம்)

கருணை யான கடவுளைக்
கருதி யன்பு செய்குவோம்
பெருமையான தொண்டுசெய்து
பிறர்க்கெனவே வாழுவோம்
எந்தச் சாதி சமயமும்
எங்களைப் பிரிக்குமோ?
இந்தியாவில் இந்தியர்கள்
இந்தியராய் வாழுவோம் (கரு)
சுற்றுலகம் இன்புறச்
சுறுசுறுப்பாய் வாழுவோம்
வெற்றி யுண்டு சக்தியுண்டு
வீர தீர நேயரே…

ஓம் சுத்த சக்தி

– இவளும் அவளும் (சீர்திருத்த நாடகம்), ஜனவரி 1949, புதுயுக நிலையம், புதுச்சேரி.

Print Friendly, PDF & Email

1 thought on “இவளும் அவளும்

  1. “SiRu KathaiGaLaaga moththam 16 kathaGaL veLiyittuLLaGaL. Anaiththu siRu kathaiGaLaiyum padiththa pin en Otto moththa karuththaith therikkinREn. Anaiththu ezhuththaaLarGaLukkum en paNivaana VaazhththukkaL uriththaaguga.

    “M.K. Subramanian.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *