இவர்கள் குற்றவாளிகளா?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 5,169 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு 11 மணி இருக்கும். காய்ச்சிய இனிய பாலைக் கரத்தேந்திய வெள்ளிப் பாத்திரத்திற் கொண்டு, பள்ளியறை நோக்கி மெள்ள மெள்ள நடந்து வந்தாள் கோகிலம். அவள் வரவைக் கண்ட அமுதன், அயர்ந்து நித்திரை செய்பவன் போல் தூக்கங் கொண்டிருந்தான். “இதோ பால் பருகுங்கள்!” என்று நீட்டினாள், அவள். அச்சொல் அவன் காதில் ஏறுமா?

உண்மையில் தூங்குபவனை எழுப்பி விடலாம். வேண்டு மென்றே தூங்குபவனை எப்படி எழுப்ப முடியும்? ஆனால் கோகிலம், அவன் பொய்த் தூக்கத்தை உணர்ந்து கொண்டாள். “சரி தூங்குபவரை எழுப்புதல் கூடாது. நாமும் சென்று நித்திரை கொள்வோம்” என்று சொல்லியபடியே இரண்டடி எடுத்து வைத்தாள். வெடுக்கென்றெழுந்த அமுதன், அவள் சேலையின் முந்தானையைப் பற்றி “எங்கே போகிறாய்?” என்றான். அவள் சிரித்தாள். அச்சிரிப்பில் சொக்கிப் போனான் அமுதன்!

“பால் வேண்டாமோ?” என்றாள் கொஞ்சுமொழியில் அந்தக் கோகிலம்.

“அது எனக்குப் பிடிக்காது; நீ அருந்து” என்றான் குழைந்த மொழியில் அமுதன்!

“பாலும் பிடிக்காது பழமும் பிடிக்கர்து! வேறு என்னதான் பிடிக்கும் உமக்கு?”

“ஒன்றுண்டு எனக்குப் பிடித்தமானது.”

“என்ன அது? சொன்னாலல்லவோ அதையாவது கொண்டு வருவேன்.”

“எதை?”

“என் அருகே உன் முகத்தை!”

“ஏன்?”

“நான் விரும்பும் பொருள் அதில்தான் இருக்கிறது!”

இதைக் கேட்டதும், அவளின் இணைந்த இதழ் சிறிது விலகிற்று. முத்துச் சரம்போன்ற அவள் பற்களின் வரிசை,

பளிச்சென்று தோன்றி! பின்னர், கண்ணொடு கண் இணை நோக்கிற்றுக் காதலின் உணர்வால்! அவள் பாலை அருந்தினாள் அமுதன் அதரபானத்தை அருந்தினான்!

இனித்தது எது? வெண்ணிறப்பாலா? செவ்விதழா? இதற்கு அவர்கள் தாம் பதில் கூறவேண்டும். அவற்றின் சுவை அவர்களுக்குத்தானே தெரியும்!

இந்நிகழ்ச்சிகளைத் தெருச்சன்னலின் வழியாக ஒருவர் கவனித்துக்கெண்டே நின்றிருந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். ஆனால் அவர் உள்ளம் கொதிப்புற்றிருந்தது. கை கால்கள் துடித்துக் கொண்டிருந்தன. எனினும், நேரம் செல்லச் செல்ல, அவர் கோபமும் சென்று கொண்டேயிருந்தது! அதனால் அவரின் முடிவான எண்ணமும் சிதைய ஆரம்பித்தது. சிந்தனா உலகில் அவர் தயங்கிக் கொண்டிருந்தார்! தான் முக்கியமான விஷயம் ஒன்று, அவர் மூளையைக் குழப்பி விட்டது. அதனின்றும் படக் காட்சியில் தோன்றுவது போல், பல பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவர் சிந்தனையில் தோன்றிக் கொண்டேயிருந்தன. அதனால் அவர் மூளை ஒரு பெரும் சூறைக் காற்றால் மோதுற்றுக் கிடந்தது. ஆர். நேரம் சிறிது செல்ல, போராடிய அவர் உள்ளம் புத்துணர்வு பெற்றது! தயங்கிய சிந்தை தெளிவடைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவர் போல் காணப்பட்டார். அவர் முகம் சிறிது மகிழ்ச்சி கொண்டது. ஆனால், அடுத்த வினாடியிலேயே மற்றொரு பெரும் சூறைக்காற்றுக்கு அவர் ஆளானார், அதனின்றும் தப்ப முடியாது என்பதை அவர் அறிந்தார். அயர்ச்சி மேலிட்டது. சோர்ந்தார். அவர் கண்களினின்றும் துளிகள் பல சிந்தின.

இவ்வளவு சிந்தனைக்கும் குழப்பத்திற்கும் அவரை ஆளாக்கிவிட்டது எது? சன்னல் வழியாக அவர் கண்ட ஓர் உருவமே. இதற்குமுன் அது கொண்டிருந்த கோலம் வேறு, இப்போது அது கொண்டிருக்கும் கோலம் வேறு, இவ்வளவு மாறுதல் பெற்ற அக்கோலத்தின் காட்சி, அவர் மூளையைக் கலக்காமல் என்ன செய்யும்?

கலக்கிய மூளைக்குத் தெளிவு ஏற்பட்டும் பயனில்லை. கடுஞ்சூறை மீண்டும் அதைக் கலக்கி விட்டது. அரும்பிய மகிழ்ச்சியுடன் அஸ்தமனமாயிற்று. அதனால் அயர்ச்சி மேலிட்ட அவர் சோர்ந்து சுவரின் மீது சாய்ந்தார், அவரையறியாமலேயே, அவர் கரத்திலிருந்தது கலீரெனக் கீழே விழுந்தது.

அச்சப்தம் அறைக்குள்ளிருந்தவர்களின் காதல் விளையாட் டைக் கலைத்து விட்டது. உடனே அமுதன், சன்னலருகே வந்து வீதியை நோக்கிப் பார்த்தான். பட்டப் பகல் போன்ற நிலா ஒளியில், ஒருவரும் இல்லாதது தெரிந்தது. பிறகு, சன்னலோரமாகப் பார்த்தான். யாரோ ஒருவர் சுவர்மீது சாய்ந்து நிற்பது கண்டான். ‘யாரது’ என்றான். பதிலில்லை. உடனே ஒரு பாட்டரி விளக்கை எடுத்துக் கொண்டு, தெருக்கதவைத் திறந்து வெளியே வந்தான். கோகிலம் உடன் வந்தாள். அமுதன், அந்த விளக்கின் உதவியால் ஆளைப் பார்த்தான். அவன் உள்ளம் நடுக்கம் கொண்டது, கோகிலமும் நடுங்கினாள், இன்னதுதான் செய்வதென்று ஒன்றும் தோன்றாமல், இருவரும் திகைத்து நின்றனர்.

அவர் முகத்தில் கோபமில்லை கொடூரமில்லை. சோர்ந்த உள்ளத்தால் அவர் துன்புறுவதை, அவர்கள் கண்டார்கள். பின்னர் கீழே கொடுவாள் கிடப்பதைக் கண்டதும் அவர்கள் பயம் அதிகரித்தது! உடல் நடுங்கிற்று. ஆயினும் அவர் முகக்குறி, ‘அஞ்சாதே’ என்று அறிவிப்பதுபோல் அவர்கட்குத் தோன்றிற்று. எது நேரினும் நேரட்டும் என்ற முடிவுடன், அமுதன் அவரை வணங்கி, மனித லட்சியத்தையடைய நாங்கள், விரும்பினோம். அது குற்றமானால் எங்கட்குத் தண்டனை அளியுங்கள்” என்றான். கோகிலம் அவர் பாதத்தில் வீழ்ந்து, “தந்தையே, நான் தங்கட்கு துரோகம் செய்தேன். குலப்பெருமையையழித்துக் குடும்பத்திற்கே கேடு சூழ்ந்தேன். அது என் குற்றமல்ல, இயற்கைச் சக்தியின் முன், நான் எம்மாத்திரம்? என்னை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!” என்று தன் கண்ணீரால் அவர் பாதத்தைக் கழுவினாள்.

இந்நிகழ்ச்சி, அவர் நெஞ்சை மேலும் இளக வைத்தது, துக்கம் மேலிட்டது. அவரால் பேச முடியவில்லை, மேற்கொண்டும் அங்கு நிற்க இடங்கொடுக்கவில்லை. விழியில் பெருகிய நீரை விரலால் துடைத்து விட்டு, வீதிநோக்கி வேகமாய்ச் சென்று மறைந்து விட்டார்.

சென்றவர், கோகிலத்தின் தந்தையென்று உங்கட்குத் தெரியும். கோகிலம் ஓர் இளம் விதவை. வயது 17! பளபளக்கும் பருவ எழிலோடு பசுந்தளிர் போன்ற மேனி கொண்ட பாவை! அவள் இச்சிறு வயதில், அகத்தே எழும் இன்ப உணர்வை அடக்கி, அமங்கலை வேடம் தாங்கி, அலங்கோலமாயிருப்பதை ஆறறிவு படைத்த மனிதர்கள் ஒப்பினாலும், இயற்கை ஒப்புமா? அது அவளை, அமுதனிடம் ஒப்படைத்தது. அமுதன், தனக்கே கிடைத்த சம்பத்தை சீரிய சிங்காரியைத் தனியே அழைத்து வந்து, சந்தோஷ வாழ்வில் தானும் களித்து, அவளையும் களிக்கச் செய்தான். அவள் அமுதனோடு சென்று விட்டாள் என்பதையறிந்த பெற்றோர் அலர்மொழி ஊரார் தூற்றுவதைக் கண்டு ஆத்திரமடைந்து, அந்த அவமானத்தைப் போக்கிக் கொள்ள அவசரப்பட்டனர். அதன் விளைவுதான், கையில் கொடுவாளோடு, அவள் இருக்குமிடந் தேடி அவர் வந்தது.

வந்தவர் நோக்கம் வாயாது போனதேன்? கொல்ல வந்த அவர் சன்னல் வழியாகப் பார்த்தபோது, உள்ளிருப்பவள் தன் மகள் கோகிலந்தானா என்பது அவருக்குச் சந்தேகமாகி விட்டது. இருக்குமல்லவா. மெய்யில் புழுதிபடிந்து விசாரமுற்றுக் கிடந்தவள், தலைவிரி கோலமாய்த் தன் கருத்தழிந்து கிடந்தவள், கண்ணீருங் கம்பலையு மாய்க் காணச் சகியாத காட்சி தந்தவள், நல்ல ஆடையாபரணமின்றி, அழகு குன்றிக் கிடந்தவள், இன்று, தேசுமிகுந்த சிங்காரியாக – சீருற்ற சித்திரமாக, வண்ண மயிலாக, மணமிக்க மலராகக் காட்சி தந்தால், யார்தாம் சந்தேகங்கொள்ள மாட்டார்கள்?

பின்னர் உணர்ந்தார் தன் மகள்தான் என்பதை. ஆயினும், தம்மிடத்திலிருக்கும்போது அழகு குன்றிக் கிடந்தவள், இங்கு அழகு மிக்குத் தோன்றுவதேன்? கண்ணீரும் கம்பலையுமாயிருந்தவள், களிப்புமிக்குத் தோன்றுவதேன்? இவ்விஷயந்தான் முதலில் அவரைச் சிறிது சிந்திக்க வைத்தது. இதற்கு நாம்தான் காரணமென்பதை அவர் அறிந்த பிறகு, அவருள்ளத்தில் அலை அலையாகப் பல எண்ணங்கள் தோன்றின. அவற்றின் முடிவையறிய அவரும் விரைந்தார். கடைசியில் முக்கிய பிரச்சினையாக இருந்தது. இதுதான்.

வாழ்வில் எவ்வளவோ துன்பங்கள் சூழ்ந்துள்ளன. அவற்றுள் உள்ளம் ஒன்றாத ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்வது எவ்வளவு பெரிய துன்பம், ஒன்றிய உள்ளத்தின் விளைவு, இன்ப வாழ்வு. அதைத்தானே நாம் இங்குக் காண்கிறோம். அத்தகைய இன்ப வாழ்விற்களிக்கும் இவர்களை நாம் ஆதரிப்பதா? அல்லது சாத்திரத்தை இகழ்ந்து, சமூகக் கட்டுப்பாட்டை மீறி, சாதித் தடையைக் கைவிட்டுக் குலத்திற்கிழுக்குத் தேடிய இவர்களைக் கொல்வதா?

இக்கேள்விக்குப் பதில் தேடும் அவசியம் ஏற்பட்டது, அவரும் சிறிது நேரம் சிந்தித்தார். ஊரார் அபவாதம் ஒரு பக்கம், உள்ளம் ஒன்றிய காதல் மற்றொரு பக்கம், இவ்விரண்டும், அவருள்ளத்தை வாட்டின!

சே! நம் எண்ணம் கொடிது, மனிதப் பிறவியின் பயனை அவர்கள் அடைகிறார்கள். அவர்களை மாளச் செய்வது கொடிதினும் கொடிது.

பெற்றோம் வளர்த்தோம், பின்பு பெருந்துயரில் ஆழ்த்தி னோம். அப்படித் துயரடைவது இயற்கையல்ல என்பதை இப்பொழுது அறிந்தோம். துயரக் கடலில் தத்தளித்த அவள், இன்று இன்பக் கடலில் துள்ளி விளையாடுகிறாள். இதனால் காதலுக்குச் சாதியில்லை என்பதும், சமூகக் கட்டுப்பாடு அதனைத் தடை செய்யாது என்பதும் தெளிவாகிறது. சிறு பெண்களை விதவையாக்கி இவர்கள் வாழ்வைச் சீரழிப்பது மகாபாபம். விதவை நிலை, ஆண்டவனுக்கே ஒப்ப முடிந்ததென்றால் அவர் கட்குக் காதல் உணர்வை ஏன் அளிக்க வேண்டும்? இது சமூகத்தின் அறியாமை. சமூகம் இதை அவமானமாகக் கருதுகிறது. அதைத் தீர்த்துக் கொள்வதற்கு ஈருயிர் பலியா? கூடாது கூடாது! என்ற முடிவிற்கு வந்தார். தம் மகளின் அன்பு நிறைந்த வாழ்வு, ஆசை மிக்க நேசம், அவருக்கு அகமகிழ்ச்சி தந்தது. ஆனால் உண்மையறியாத ஊராரின் இகழ்ச்சி – சாதிக்கட்டுப்பாடு, அவருக்குத் தொல்லை விளைவித்தது போலத் தோன்றிற்று. அதனால் அயர்ச்சி மேலிட்டது. சோர்ந்து சுவரில் சாய்ந்தார், கொடுவாள் வீழ்வதையும் அறியாமல்.

சமூகத்தால் குற்றவாளியாகக் கருதப்படும் அக்காதலர்கள், பின்னர் நேரில் வந்து வணங்கித் தண்டனை கேட்கும்போது, அவர் உள்ளம் துடிதுடித்தது. துக்கம் நெஞ்சை அடைத்தது. இவர்கள் தூய வாழ்வுக்கு நாம் எமனா? சே! அதினிலும் கொடியது வேறென்ன இருக்கிறது? இவர்கள் சந்தோஷ வாழ்வைக் கண்டுகளிக்கச் சமூகம் நம்மைத் தடுத்துவிட்டாலும் நாம் இவர்கள் வாழ்வைத் தடுக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். ஒன்றுஞ் சொல்லாமல், வேகமாக வீடு நோக்கி நடந்தார். அதனை அறிந்தபின் அமுதனும், கோகிலமும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவுண்டோ? அவரின் அருளுள்ளம், இவர்கள் வாழ்வில் அன்பை வளர்த்தது. இன்பத்தை ஓங்கச் செய்தது. குணம் பெற்ற இவர்கள் மணம் பெற்ற வாழ்வு கொண்டதும் எப்படிக் குற்றமாகும்?

– சமதர்மன் என்ற புனை பெயரில் அண்ணா அவர்கள் எழுதிய சிறுகதை.

– 25.07.1943, திராவிடநாடு.

Print Friendly, PDF & Email

1 thought on “இவர்கள் குற்றவாளிகளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *