இறுமாப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 5,603 
 
 

பூந்தோட்டத்தில் நிற்கின்றேன். பூஞ்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டு. இதைப் பூந்தோட்டம் என்று குறிக்கலாமா? என்னும் நினைவு என் மனதில் அடிக்கடி எழுவதுண்டு.

றோட்டுக்கும் வீட்டுக்கும் இடையிலான இந்தச் சிறிய நிலப் பரப்பில், வீட்டுச் சுவரோரங்களைச் சுற்றி, கிளை பரப்பி நிற்கும் ஒரு மாமரம், வேப்பமரத்தினடிகளில் வகை வகையான பூஞ்செடிகள்… பூஞ்செடிகள்… பூஞ்செடிகள்..!

சின்னதான இந்த நிலத்துண்டில் பூஞ்செடிகள் வளர்க்கின்றோம் என்பதற்காக, இதைப் பூந்தோட்டம் என்று கூறலாமா என்னும் சந்தே கம் என்னுள் அடிக்கடி எழுகின்றது.

மாதத்துக்கு இவ்வளவு என்று வாடகையை வாங்கிக் கொண்டு வீட்டுச் சொந்தக்காரன் எங்கோ இருக்கின்றான்.

நானோ இது என் வீடு என்று சொந்தம் கொண்டுகின்றேன்.

இது சிங்களவர்களின் நாடு, பெளத்தர்களின் நாடு என்று முழங்கு கின்றனர் அரசியல் பிழைப்போர்.

ஒரு சிங்களப் பெளத்தன் இல்லாத, நானும் இது எங்கள் நாடு என்னும் உணர்வுடனேயே உலா வருகின்றேன்.

என் பெயர் சுந்தரம், எனக்கும் இந்தப் பெயருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. சௌந்தர்யத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்பது ஒரு புறமிருக்க, என் பெயருக்கும் எனக்குமே தொடர்பு என்ன இருக் கிறது! என் பெற்றோர் இட்ட பெயர் இது. நான் கருவில் இருக்கும் போதே, ஆணாகப் பிறந்தால் அழகன் என்று வைப்போம் என்று அவர்கள் தீர்மானித்துக்கொண்டது. மண்ணில் பிறந்த பின் அழகனைச் சுந்தர மாக்கிக் கொண்டதும் அவர்களே.

ஆனால், நானோ இதுதான் என் பெயர் என்று எத்தனை வித்தை களைப் புரிகின்றேன்!

இப்படியெல்லாம் இருக்கையில் பூஞ்செடிகள் வளரும் இந்தச் சின்ன நிலத்தை ஏன் பூந்தோட்டம் என்று அழைக்கக்கூடாது என்னும் நினைவுகளும் என்னுள் மேலெழுதுவதுண்டு.

விரலழுத்தத்தால் ஹோஸ்பைப்பின் நுனியிலிருந்து விசிறியடிக்கும் நீர்த்திவலைகள் ஒவ்வொரு செடியையும் குதூகலிக்கச் செய்கின்றது.

குனிந்து நிமிர்ந்தும், வளைந்து நெளிந்தும், சிலிர்த்து சிலிர்த்துச் நெகிழ்ந்து மகிழ்கின்றன… நீராடிக் களிக்கின்றன..!

சிரித்துச் சிரித்து தங்கள் மத்தியிலான எனது இருப்பை, எனது உறவை வரவேற்கின்றன… ஸ்திரப்படுத்திக் கொள்ளுகின்றன..!

வேலை முடித்து வீடு திரும்பியதும் எழுத்து, வாசிப்பு என்பவை களுக்குமப்பால் என்னுடைய பெரும் பொழுது கழிவது இவைகளுடன் தான்.

மண்ணைக் கிளறி விடுதல், செடிகளுக்கு மண் அணைத்தல், உரமி டுதல், நீருற்றுதல், மேல்விழுந்து கிடக்கும் மாவிலை, வேப்பிலைகளை அகற்றி விடுதல் போன்ற உடல் வருத்தம் தராத சின்னச் சின்னச் செயற்பாடுகள். ஒன்றுமே செய்யாமலும் இவைகளுடன் நிற்றல், பேசு தல், சுற்றிவரல், சுகம் கேட்டல் என்று பொழுது போவதே தெரிவ தில்லை எனக்கு.

இந்த எழுபத்தைந்து வயதிலும், ஒரு இளைஞனின் மன உணர் வுடன், உற்சாகத்துடன் என்னை உலா வரச்செய்யும் இந்தப் பூஞ் செடிகளின் அன்பு, செவிகளை விரித்து விரித்து என் குரல் கேட்கும் அந்த ரசனை!

இவைகளுக்குக் காதுகள் உண்டா ? காதுகள் இருந்தும் கேளாதோர் எத்தனை பேர். கேட்பதற்கு காது என்ற ஒன்று அவசியமா என்ன?

வெடித்துச் சிரிக்கும் வெள்ளை வெள்ளைப் பூக்களுடன் பந்தல் கொள்ளாமல் படர்ந்து கிடக்கும் மல்லிகை.

அழகழகான வண்ண வண்ண இலைகளுடன் பலவிதமான குறோட்டன் செடிகள், ஸீனியாஸ், பாபடன்டே சீஸ், டேலியா, சிவப்பு வெள்ளை ரோஜாக்கள், வாடாமல்லிகை! அட எஸ்.பொ.வை நினைவு படுத்தும் ஆண்மை வெடிக்கும் அந்தூரியம். அரிசியை அள்ளிக் கொட்டியது போல் சின்னச் சின்னதாய் வெள்ளை வெள்ளையாய் இலை தெரியாமல் பூத்துக் குலுங்கும் பெயர் தெரியாத இந்தப் பூஞ்செடி!

பெயரில் என்ன இருக்கிறது. அழைப்பதற்காக மனிதர்கள் இட்டுக் கொள்வதுதானே பெயர்! பெயர் தெரியவில்லை என்பதற்காக அவை களின் அழகும், அந்தரங்க அன்பும், உறவும் ஊனமுற்றா போய்விடுகின்றது?

அப்படியே பார்த்தாலும் இங்குள்ள செடிகளில் முக்கால்வாசிச் செடிகள் பெயர் தெரியாதவைதான்.

அதோ சுற்றுச் சுவர் ஓரத்தில் பூந்தொட்டியில் அரளிச் செடிப் போல் கம்பு கம்பாய் வளர்ந்து சிறு சிறு கைகள் நீட்டி விரல் நுனிகளில் மாத்திரம் சுண்டினால் பால் வடியும் நாலைந்து நீண்டு தடித்த இலைகளும், இலைகளின் கக்கத்தில் மெல்லிய இளஞ்சிவப்பில் ஆறேழு பெரிய பெரிய பூக்களுமாய் மதிலுயரத்துக்கு மேல் வளர்ந்து றோட்டை எட்டிப்பார்த்துக் கொண்டு ‘ படர்தாம்

கண்ணைப் பறிப்பது போல் மலர்ந்து காற்றிலாடிக் கொண்டி ருக்கும் அந்த அழகான பூஞ்செடிக்கு என்ன பெயர்?

இலைகளுக்கும் பூக்களுக்கும் இடையே கொத்தாய் விழுந்தி ருக்கும் வேப்பிலைச் சருகுகளை விரலால் பவ்வியமாக அப்புறப்படுத் திவிட்டு செடியின் அடியிலிருந்து வளர்நுனி வரை நீரடித்துக் கழுவி விடுகின்றேன்.

இலைகளும் பூக்களும் நீரின் வேகத்துக்கேற்ப ஆடி மகிழ்கின்றன. கட்டை விரல் உயர்த்திக் களிப்பைக் காட்டுகின்றன.

வேப்பிலைச் சருகுகள் இப்போது என் சிரசில் உதிர்கின்றன. தலையை உதறியபடி அண்ணாந்து பார்க்கின்றேன்.

வேப்பமர உச்சியில் இரண்டு அணில்கள் வாலுயர்த்தி…. வாலு – யர்த்தி ஓடிப்பிடிக்கின்றன. தார் றோட்டில் கார் ஓடுவது போல், அவைகள் மரத்தில் ஓடும் அழகே அலாதி.

வேப்பமரத்திலோடி மாமரத்துக்குத் தாவி கிளை வழி இறங்கி சுற்றுச்சுவர் மேல் ஓடிப் பக்கத்து வீட்டுப் பப்பாளி மரத்தில் மஞ்சளிட் டுக் கொண்டிருக்கும் காய்களை முன் பற்களால் ‘நய்நய் ‘ யென்று குதறிவிட்டுக் குதித்தோடி மறைகின்றன.

சுறுசுறுப்பான அந்த அணிலோட்டதின் பின் ஒரு வினாடி எனது பார்வை ஓடியதால் நீரோட்டம் செடியிலிருந்து விலகி வெறுந்தரையில் ஓடுகிறது. ஓடுகிறது.

செடியின் ஏக்கம் தெரிகிறது. ‘சொறி’ என்று மன்னிப்புக் கேட்டபடி இலை இலையாகக் குளிப்பாட்டி எடுத்தேன்.

பரவாயில்லைப் பரவாயில்லை என்று தலையாட்டி தலையாட்டி மகிழ்கிறது செடி.

தோட்டத்தின் ஒரு ஓரத்தில் வீட்டுச் சுவரை அணைத்தபடி எங்கள் ‘சனா’ வின் கூட்டருகே, சுற்றி செங்கல் பதிக்கப்பட்ட குட்டை போன்ற தொரு வட்டமான இடம் இருக்கிறது.

வட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த இடத்தின் தாற்பரியம் ஒன்றும் எனக்குத் தெரியாது. இந்த வீட்டுக்கு நாங்கள் புதிதாகக் குடிவந்த போதே, இது இப்படியே தான் இருந்தது. உள்ளே புல்மண்டிக் கொண்டு.

இப்போது அந்த வட்டத்துக்குள்ளேயும் நிறையப் பூஞ்செடிகள் வைத்திருக்கின்றேன். சுமார் ஒரு எட்டடி குறுக்களவு கொண்ட இந்த வட்டத்தினுள் பூந்தோட்டத்தில் உள்ள அனைத்துப் பூஞ்செடிகளி னதும் ஒவ்வொரு செடி இருக்கின்றது.

நினைத்துச் செய்த காரியம் இல்லை இது என்றாலும், அது அப்படித்தான் நடைபெற்றிருக்கிறது.

ஒரு புத்தகத்தின் பொருளடக்கம் போல், அமைந்துள்ள அந்த வட்டத்துச் செடிகளுக்கு நான் நீரூற்றும்போது, கூட்டுக்குள் அமர்ந்தபடி வாலாட்டி ரசித்துக் கொண்டிருக்கும் எங்கள் ‘சனா’.

பெண் வளர்ச்சி போல், அவசர அவசரமாக வளர்ந்து கொத்துக் கொத்தாய் குருதி நிறத்தில் பூப்பூத்துக் குதூகலித்துக் கிடக்கும் அந்தச் செடிக்கும் பெயர் தெரியவில்லைதான்.

அதன் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது உண்மைதான் என்றாலும், அதன் முரட்டு வளர்ச்சியும், பலாத்காரப் படர்வும் என்னை மிகவும் நோகச் செய்ததுண்டு.

சற்றே அவைகளுடன் பேசிச் சிரித்து உரையாடி வலம் வரும் போது தான், ஒரு பொழுது அதைக் கண்ணுற்றேன்.

முரட்டுத்தனமாகத் தனது கரங்களை நாலாப்பக்கமும் நீட்டி நீட்டி விரல்களை விரித்து விரித்து பரப்பிப் படர்ந்து சுற்றியுள்ள மற்றவைகளை அமுக்கி, அழுத்தி, வெய்யில் படாவிட்டால் தடுத்து வெளுக்கச் செய்து அழித்து விடும் நோக்கில் வியூகம் அமைத்துக் கொண்டு’. எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

சூழ உள்ள மற்றவைகளை அமுக்கிவிடாமல் சுற்றிப் படர்ந்துள்ள அனைத்துக் கரங்களையும் உயர்த்திப் பிடித்துக் கயிறு கொண்டு விலங்கிட்டு வைத்தேன். அடிக்கடி கவனித்து கொண்டேன்.

உரிய நேரத்தில் நான் எச்சரிக்கை அடைந்திராவிட்டால்!

***

ஜாஎலை பஸ்ஸில் பேலியகொடைக்கருகே நிற்கின்றேன். வத்தளை தபாற்கந்தோரடியில் இறங்கி இன்னொரு பஸ் பிடிக்க வேண்டும்.

கால் சட்டைப் பைக்குள் கிடக்கும் கைத்தொலைபேசி கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.

அலுவலகங்கள் மூடுகின்ற ஐந்து மணிக்குப் பிந்திய மாலைகளில் பஸ்களுக்குள் ஒரே திருவிழாக் கூட்டம் தான். ஒருவர் மேல் ஒருவ ராகத்தான் நிற்பார்கள். பின்னிக் கிடக்கும் கால்களினிடையே இடம்

தேடி இடம் தேடிக் காலூன்றுவார்கள்.

விரல் நுழைக்க முடியாமல் கைகளால் மறைந்து கிடக்கும் கைப்பிடிக் கம்பிகளில் கை நுழைத்து கை நுழைத்துப் பற்றிக் கொள்வார்கள்.

வேலைத் தளங்களில் இருந்து விடுதலை பெற்ற மத்தியதர மற்றும் அதற்கும் அடித்தரவர்க்க மக்களனைவரும் தத்தமது வீடு போய் சேர வேண்டுமே.

என்ன செய்வார்கள் பாவம்! எப்படியாவது போயும் ஆக வேண்டும்!

வர்க்க பேதம் மறந்து, பால் பேதம் மறந்து ஒருவருடன் ஒருவராக ஏறி மிதித்துக் கொண்டு!

எனக்கு முன்னால் நிற்கும் பெண்ணின் கூந்தலில் குமிழ்நுனிப் பேனை ஒன்று ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. குனிந்து சட்டைப் பையைப் பார்த்துக் கொள்கின்றேன். என்னுடையதல்ல. பால் இந்த அலங்கோலத்தில் கால் சட்டைப் பைக்குள் தொலைபேசி ஒருபுறம் உயிர் கொண்டசைகின்றது.

ஒரு கையில் கைப்பை. மக்கள் கூட்டத்துக்குள் மாட்டிக் கொண்டி ருக்கிறது. அசைக்கவோ, உயர்த்தவோ முடியாது! மறுகை கைப்பிடிக்குள். ஏழெட்டுக்கைகள் அசைந்தால் தான் என் கை அசையும் என்ன செய்யலாம்?

கை என்னுடையது காற்சட்டைப் பைக்குள் கிடக்கும் தொலை பேசி என்னுடையது! ஆனாலும் எடுத்துப் பேச முடியவில்லை .

சூழலால் பாதிப்படையும் மனித சுதந்திரம் என்னைக் கோபமுறச் செய்கிறது.

கொழும்பு போன்ற பெரு நகருக்கு, எங்கெங்கோ தொலைதூரங்க ளிலிருந்தெல்லாம் தொழில் நிமித்தம் வந்து போகும் ஆயிரக்கணக் கான மனித ஜீவன்களின் பிரயாண வசதிகளை அரசு கவனிக்கும் லட்ணம் இது.

சுகமாகப் பயணியுங்கள் என்று பஸ்களில் சிங்களத்தில் எழுதி வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா? இதையெல்லாம் கவனிக்க யாரிருக்கிறார்கள்? யாருக்கு நேரமிருக்கிறது?

பேயோட்டும் வீடு மாதிரித் தான்.

உடுக்கும் கையுமாகப் பூசாரி ஆட, தலைவிரி கோலமாகப் பேய் பிடித்த பெண் ஆட, உடுக்கோசைக்கும், நெருப்புக்கும், புகைக்கும் மத்தியில் கூடி இருக்கும் அனைவரும் ஆட…!

இதொன்றும் விளங்காமல் அழுகின்ற குழந்தை அனாதையாகி விடுகின்ற நிலமைதான் எங்களுக்கும்.

வத்தளையில் பஸ் நிற்கிறது.

இறங்கினால் ஒரே இருள். மின்சாரம் இல்லாமல் போயிருப்பதை உணர்கின்றேன் . பாதை மாற வேண்டும். இன்னொரு பஸ் ஏற வேண் டும். கால் சட்டைப் பைக்குள் கை நுழைத்து தொலைபேசியை எடுத் துப் பார்க்கின்றேன். விரலழுத்த வெளிச்சம் காட்டும் தொலைபேசி ‘மூன்று மிஸ்கால்’ என்கிறது.

வந்து நின்றுபோன அழைப்பு யாருடையது என்று அறிந்து கொள் ளும் சூட்சுமம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இந்தச் சிறிய தொலைபேசிக்குள் ஏதேதோவெல்லாம் இருக்கின்றன என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஒரு தொலைபேசியை வைத்துக் கொண்டு இந்த வையத்தின் வித்தைகளனைத்தையும் செய்து காட்டும் விண்ணர்களும் இருக்கின்றார்கள் தான்.

ஆனால், எனக்குத் தெரிந்ததெல்லாம் வந்த அழைப்புடன் பேசுவது, அழைப்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற ஒரு சில செயற்பாடுகள் மட்டுமே.

நான் மட்டுமல்ல தொலைபேசியும் கையுமாகத் திரியும் பெரும் பாலானோரும் அப்படியேதான்.

தொலைபேசி மீண்டும் உயிர்க்கிறது. வீட்டிலிருந்துதான் .

“எங்கே இருக்கின்றீர்கள்? இது நான்காவது கால், ஏன் பேசவில்லை ? இருளுக்குள் இருக்கின்றேன். திடீரென்று லைட் போய் விட்டது. எப்போது வருமோ தெரியவில்லை. இவனுகளுக்கு இதே வேலையாகப் போய்விட்டது.”

மறுமுனையில் மனைவியின் அதிகாரப் புலம்பல்.

“நீங்கள் மட்டுமல்ல…! நானும் இருட்டுக்குள் தான் ..! நீங்களும் நானும் மட்டுமல்ல… எல்லாருமே இருட்டுக்குள் தான் ..! யாருக்குத் தெரிகிறது என்ன நடக்கிறதென்று? ஏன் போன் போட்டீங்க..?”

“மெழுகுதிரியும், மொஸ்கிட்டோ கொயிலும் வேண்டும். பக்கத் துக் கடையை லைட் போனதுமே மூடிட்டானுக…! பயந்தான்…! பேன் இல்லாட்டி படுக்கவும் ஏலாது… கொசு புடுங்கித் தின்னுறும்…”

எங்களுக்கென்றே எப்படி எல்லாம் செலவுகள் வருகின்றன.

இருளை விரட்டுவதற்கும் காசு! கொசுவை விரட்டுவதற்கும் காசு! மீண்டும் காற்சட்டைப் பைக்குள் கை நுழைக்கின்றேன், என்னுடைய பொருளாதாரப் பலம் பார்க்க. அதை வைத்துதான் எத்தனை மெழுகு திரி, எத்தனை நுளம்புச்சுருள் என்பதை நிர்ணயிக்க முடியும்!’.

என்னை இருளுக்குள் இறக்கி விட்டு விட்டு பாதைக்கு மட்டும் லைட் அடித்துக் கொண்டு பஸ் போய் விட்டது.

முன் வீட்டில், பக்கத்து விட்டில் கிளை பரப்பி நிற்கும் மரங்கள் இருளை மேலும் கடினமாக்குகின்றன. எங்கள் வீட்டு மாமரமும் வேப் பமரமும் கூடத்தான் .

ஒரு நிதானத்துடன் இருட்டுக்குள் நடந்து கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன் . பூந்தோட்டம் இருளுக்குள் சங்கமமா கிவிட்டிருக்கின்றது. எனது பிரசன்னத்தின் வாசம் அவைகளிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்துகின்றது.

ஒளியின் மகத்துவமும், மகிமையும் இருளுக்குள் தான் புரிகின்றது. திடீரென்று ஒரு ஒளிக்கீற்று பாதையில் வீசி உள்ளேயும் சிதறுகின்றது. பூஞ்செடிகள் சிலிர்த்து நிற்கின்றன. கேட்டுக்கு அருகில் நடந்து எட்டிப் பார்த்தேன்.

மின்சாரப் பகுதி வாகனம் ஒன்று ஏணியும் தானுமாக விசிறிய டிக்கும் ஒளியுடன் மின்சாரத் தூணிற்கு அருகில் நிற்கின்றது.

லைட் வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் வீட்டுக்குள் நுழைந்து, வாசலில் காத்து நின்ற மனைவியிடம் அந்த நம்பிக்கையை ஒரு மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டேன்.

“எத்தனை மணிக்கு லைட் போச்சி… எத்தனை வாட்டி நானே போன் போட்டேன். எடுக்குறானுகளே இல்லை. இப்பத்தான் வந்திருக்காணுக!”

மனைவியின் குரலில் ஒரு எரிச்சலுடனான அவதானம் வெளிவருகின்றது.

“இந்தப் பகுதிக்கே மின்சாரம் இல்லாமல் போயிருக்கிறது! உங்களைப் போல் எத்தனை வீட்டிலிருந்து எத்தனை டெலிபோன் போயி ருக்கும்… எதெதுக்குத்தான் பதில் சொல்வார்கள்… அதான் வந்திருக்கிறார்களே சரி பார்க்க… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்.”

“பார்த்துக்கிட்டே இருங்க பளீருன்னு ஒளி வெள்ளம் பாயப் போகுது. சமாதானம் வந்த மாதிரித்தான் இதுவும். இந்த ஜென்மத்துல வராது” என்றவாறு மெழுகுதிரியை ஏற்றி வைக்கின்றாள்.

வாலிப இருளின் வலிய இருளுக்குள் போராட முனைகின்றது மெழுகுதிரி.

இரவு பத்தாகி விட்டது. லைட்டையும் காணவில்லை. சரிகட்ட வந்த வாகனத்தையும் காணவில்லை.

மனைவியின் வாக்குப் பலிதமாகிக் கொண்டிருக்கிறது.

தூண் தூணாக ஏறிப் பார்க்கின்றார்களோ என்னவோ. தோட் டத்து லயங்களைப் போலத்தான் இந்த மின்சாரம் ஓடும் கம்பிகளும். நூற்றாண்டு பழமை மிக்கவை. எங்காவது ஓரிடத்தில் இற்று அறுந் திருக்கும்! அசைந்து விலகியிருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

காற்றடித்தால், வளர்ந்து கிடக்கும் மரங்களின் கிளை நுனிகள் லைட்கம்பிகளில் உரசினால் கூட சில வேளைகளில் லைட் இல்லாமல் போய்விடும். அத்தனை பழையவை இந்தக் கம்பிகள்.

மெழுகுத்திரியின் மெல்லிய ஒளியில் இரவின் கடமைகள் நிறை வேறுகின்றன. மின்விசிறியை மட்டும் இயக்கத்தில் விட்டு மற்ற ஸ்விட்சு களை அழுத்திவிட்டு மொஸ்கிட்டோ கோயிலைப் பற்றவைத்து விட்டுப் படுக்கத் தயாராகின்றோம்.

இன்னும் லைட்டைக் காணவில்லை. எப்படியோ மனைவியின் வாக்குப்படிதான் நடக்கிறது. ஊர் உலகம் என்று சுற்றி வரும் என்னை விடவும், வீடே உலகமென்று கிடக்கும் மனைவியின் அனுபவசாலித் தனம் என்னை ஆச்சர்யம் கொள்ளச் செய்கின்றது.

“நாளைக்கும் வராது! அயர்ன் பண்ண முடியாது. இருக்குறத மாட்டிக்கிட்டுக் கௌம்பிறுங்க”

நாளைய காலைப் பிரச்சினை பற்றியதான மனைவியின் தீர்க்க தரிசனம்! பாதிக் கண்மூடிய தூக்கத்துடன் வெளி வருகின்றது.

***

பூந்தோட்டத்தில் நிற்கின்றேன். விடிந்து கொண்டிருக்கின்றது.

பறவைகள் ஒலி எழுப்ப, மாந்தளிர்களைக் குளிர்த்தென்றல் ஊஞ் சலாட்ட, அணிற்கூட்டம் அங்குமிங்கும் ஓடித்திரிய வண்ண வண்ண நிறம் காட்டி மலர்கள் சிரசசைக்க இருள் மெல்ல மெல்ல கலைகிறது.

வழமையாக இதுபோன்ற அதிகாலையில் கூட, கார், பஸ், பாட சாலை வேன் என்று அல்லோல கல்லோலப்படும் பாதை இன்று ஊரடங்குச் சட்டம் இடப்பட்டுள்ளது போல், வெறிச்சோடிக் கிடக் கிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள தன் எதிரொலி.

மாவிலை வேப்பிலைச் சருகுகள் தரையிலும் செடிகள் மீதும் தாறு மாறாகச் சிதறிக் கிடக்கின்றன. கைகளுக்கெட்டாத உயரத்தின் செடிக ளில் இலைக் கக்கங்களில் கொத்துக் கொத்தாய் தொற்றிக் கிடக்கும் சருகுகளை குழாய் நீரைப் பீய்ச்சியடித்து வெளியேற்றுகின்றேன்.

நுகம் இறங்கிய சுகம் தென்றலிட தலையாட்டிக் களிக்கின்றது செடி.

எண்பத்து மூன்றின் இனக்கலவரம் போல் பாதையில் திடீரென பலமான பலகுரல்கள்…. கூக்குரல்களாக…!

எட்டிப்பார்க்கின்றேன்…

இடிதடியர்கள் போல் ஒரு ஏழெட்டுப் பேர் கைகளில் கத்திகளுடன் மேலும் கீழுமாக நடக்கின்றனர். வளர்ந்தும் படர்ந்து சடைத்தும் கிடக்கும் பாதையோர மரங்களை முறைத்து முறைத்துப் பார்க்கின்றனர்.

ஏணிகள், தன்னியக்க உயர்த்திகள் சகிதம் இரண்டு மூன்று மின் சாரசபை வாகனங்கள்.

பாதையோர வீடுகளின் பாதுகாப்புக்காக உயர்த்திக் கட்டப்பட்டி ருக்கும் மதில்களின் மேல் தாவி ஏறுகின்றனர். கீழிருக்கும் மற்றவர்கள் ஏணிகளை மரங்களில் சாய்க்கின்றனர். மதிலிலிருந்து ஏணிக்குத்தாவி ஏணியிலிருந்து மரத்துக் தாவி ஏறிய ஒருவன் றோட்டுப் பக்கமாக வளர்ந்து வளைந்திருக்கும் கிளையை படார் படாரென வெட்டுகின்றான்.

வீட்டுக்காரர்களுக்கு எதுவிதமான அறிவுறுத்தலோ அறிவிப்போ இல்லை. அவர்களுடைய மரங்கள் போல் ஏறுகின்றார்கள் வெட்டுகின்றார்கள். அரசாங்கக் கோழி முட்டை ஊர் மக்களின் அம்மிக்கல் லையும் உடைக்கும் என்பது சரியாகத்தான் இருக்கின்றது.

கிளையின் மேல் விழுந்த வெட்டும், கிளை நுனியின் பாரமும் கிளையை உலுப்ப ஒரு ஓங்காரக் கூச்சலுடன் கிளை பிளந்து மரத்தில் பட்டையை உரித்துக் கொண்டு, தலை கீழாகத் தொங்குகிறது. கீழ் நோக்கி விழுந்த மற்றொரு வெட்டுடன் பெரிதாக ஓலமிட்டபடி தரை நோக்கி விரைகின்றது.

கிளை எழுப்பிய ஓசையாலும், “ஓவ்…. ஓவ்” என்று அவர்கள் போட்ட கூச்சலாலும், பாதையில் ஓடிய கார் மருண்டு தடுமாறி மறுபக்கமாக ஓடி விரைகின்றது.

றோட்டோரத்து வீட்டு மரங்களின் கிளைகள், தென்னோலைகள், ஓரிரு திப்பிலி ஓலைகள் என்று பாதையிலும் பாதை ஓர இரு மருங்கு கான்களிலும் சரமாரியாக, தாறுமாறாக விழுகின்றன.

சடசடவென்று சப்தமெழ அமுக்கிக் கொண்டும் நசுக்கிக் கொண்டும் பஸ் ஓடுகின்றன.

கிளைகள் முறிந்து விழும் ஒலியும் வெட்டித் தள்ளுகின்றவர்கள் எழுப்பும் கூச்சலும் தொடர்ந்தும் கேட்கின்றன… போர்க்களம் போல்.

மரம் வளர்ப்பதில் நாமும் எந்தவிதமான ஒழுங்கையும் கடைப் பிடிப்பதில்லை.

நம்முடைய குழந்தை வளர்ப்புப் போலத்தான். கண்டபடி அதன தன் போக்கில் வளர விட்டு விடுகின்றோம். ஒழுங்கு படுத்துதல் கிடையாது. பிறகு இப்படித்தான்.

வீட்டுக்கு அடங்காதது றோட்டுக்கு அடங்கும் என்பது போல.

முன் வீட்டுக்காரர் மதில் ஓரத்தில் வரிசையாக ஒரு ஆறேழு மரங்கள் வளர்த்துள்ளார். பிரமிட் மாதிரி அடியிலிருந்து நுனிவரை அழ காக வாயூறச் செய்யும் வகையில் வானுயர வளர்ந்து நிற்கும் அவை களின் பாதி உயரத்தை ஒரு பச்சாதாபமின்றிக் கொத்தித் தள்ளுகின்றனர்.

ஏணியும் தானுமாக ஒரு நாலைந்து பேர் எங்கள் வீட்டு மரங்களை நோட்டமிடுகின்றனர். எங்கள் வீட்டுக்கு வெளியே மதிலை ஒட்டியபடி ஒரு பெரிய ஜேம் மரம் வளர்ந்து நிற்கின்றது. பிசுபிசுப்பான இலை களும் பச்சை முந்திரி போல் கொத்துக் கொத்தாய் தொங்கும் கனிகளு மாய்! வீட்டு மரமல்ல. றோட்டு மரம்தான்.

சுவையான கனிகளைத் தருவதால் ‘ஜேம் மரம்’ என்னும் பெயர் நிலைத்திருக்கிறது. அதற்கென்று ஒரு பெயர் இருக்குமே! அது தெரிய வில்லை.

மரத்தடியில் நிற்கும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தொத்தித் தொத்திக் கனி பறித்துச் சுவைப்பார்கள்.

ஒரு காட்டு மரம் போல் கண்டபடி வளர்ந்திருக்கும் இந்த ஜேம் மரத்தை ஒரு குழு நோட்டம் விடுகின்றது.

தன்னியக்க உயர்த்தியுடன் ஊர்ந்து வரும் வாகனம் எங்கள் வீட்டின் முன் நிற்கின்றது.

வீட்டுக்காரன் நான் கேட்டுக்கருகில் நிற்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை. மடமடவென்று மதில் மேல் ஏறுகின் றனர். கைக்கெட்டிய வாதுகளை இழுத்து வெட்டுகின்றனர். ஜேம்மரத் தில் ஏறியவன் அரை வாசி மரத்தை வெட்டி வீழ்த்துகின்றான்.

ஆளுயரத்தில் ஏறி நின்று உயரப்போனவன் வேப்பமரத்தின் உச்சிக் கிளைகளை வெட்டுகின்றான்.

மாமரக்கிளை ‘ஓஸ்’ என்ற ஒலியுடன் எனது பூஞ்செடி மீது விழுகிறது.

சுண்டினால் பால் வடியும் அந்த இலைகளும், இளஞ்சிவப்புப் பூக் களும் செய்வதறியாது திகைத்துப் போய்ச் சுருண்டு கிடக்கின்றன.

வெள்ளை வெள்ளையாய் வழிந்தோடும் குருதியுடன் ஒடிந்து கிடக்கும் அந்த அபாக்கிய ஜீவனை அமுக்கிக் கொண்டு கிடக்கிறது மரக்கிளை.

வானத்திலிருந்து குண்டு மாரி பொழிவது போல், ஜேம்மரக் கிளைகள் பெரும் ஓங்கார ஓசையுடன் தோட்டத்து அப்பாவிச் செடிகளின் மீது விழுந்து விழுந்து துவம்சம் செய்கின்றன.

உச்சியிலிருந்து ஒடிந்து விழுந்த வேகத்தில் வேப்ப மரக்கிளையால் தூக்கி வீசப்பட்ட அந்தூரியம் பூவும் தானுமாய் மாமரத்தின் அடிக்கிளையில் தொங்கி ஆடிக் கொண்டிருக்கிறது.

அரைவாசி மரத்துடன் வெட்டப்பட்ட ஜேம்மரம் மல்லிகைக் கொடிமேல் விழுந்து கிடக்கிறது. மல்லிகைப் பந்தலையே காணவில்லை.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெஞ்சை அடைக் கிறது. திக்பிரமை பிடித்தது போல் விக்கித்து நிற்கின்றேன். தலைசுற்று கிறது.

ஒரு சொற்ப வேளையில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. அப்பாவிகள் மேல் நடத்தப்படும் அராஜகம் போல்!

வாகனங்கள் கிளம்புகின்றன.

“கொஞ்சம் பொறுங்கள் கொஞ்சம் பொறுங்கள்” என்று சிங்களத்தில் கூறியபடி, தென்னை மர உச்சியில் ஒருவன் இளநீர் சுவைத்துக் கொண்டிருக்கின்றான்.

ஊரார் வீட்டு இளநீர் தானே!

– மல்லிகை மலர், 2008 – தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *